வணக்கம் நண்பர்களே!, தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரில் "லெனின் விருதை" வழங்கி வருகிறது. இவ்விருது தமிழ் குறும்பட / ஆவணப்பட துறையில் இவ்வூடகங்கள் மூலம் மக்கள் எழுச்சி மற்றும் மறுமலர்ச்சிக்கான படைப்பை படைக்கும் கலைஞருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2010 ஆண்டிற்கான லெனின் விருது ஆவணப்பட இயக்குனர் திரு. ஆர். ஆர். சீனிவாசன் அவர்களுக்கு வழங்கப்பட விருக்கிறது. காஞ்சனை சீனிவாசன் என்று பரவலாக இத்துறை சார்ந்த மத்தியில் அறியப்படும் திரு. சீனிவாசன் ‘நதியின் மரணம்’ என்ற தன் முதல் ஆவணப்படத்தின் மூலமாக திரை ஊடகத்தை வெறும் பார்வையாளர் தளத்திலிருந்து, சிந்தனை மற்றும் போராட்டம் என்ற தளத்திற்குக் கொண்டு சென்றவர். காட்சி ஊடகத்தை, தன் தொடர்ச் செயல்பாடுகளின் வழியாக, ‘சமூக ஊடகம்‘ என்ற களப்பணிக்கான ஊடகமாக மாற்றியதில் முதன்மையானவர்.
அரசியலைப் பிண்ணனியாகக் கொண்டு சமூகக் குரலை முன்வைத்து இயங்குகின்றன அவரது ஆவணப்படங்கள். தொடர்ந்து சாதி ஒழிப்பு என்பது அவரது எல்லா ஆவணப்பட ஆக்கங்களிலும் மையமான சிந்தனையாக இருக்கிறது. சமூக, அதிகாரச் சமரசங்களுக்கு ஆளாகாமல் அடுத்தடுத்த சிந்தனைக் கட்டத்தை நோக்கித் தன்னையும் தன் ஆவணப்படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களையும் அழைத்துச் செல்லும் ஆற்றல் உடைய காட்சிகளை உடையவை அவரது கேமரா கண்கள். காட்சிகளின் வழியாகப் புதிய சிந்தனையை அளிப்பதில் வல்லவர்.
எதையும் வலிந்து சொல்லாமல் இயல்பான, உயிரோட்டமான மொழியிலும் நீதியின் குரலிலும் வழங்கக்கூடிய அவரின் ஆவணப்படங்கள் தற்காலச் சமூகத்தின் முத்திரைகளாகின்றன. அதன் பொருட்டு, சமூகத்தின் எல்லா அன்றாடச் சிரமங்களை எதிர்கொண்டுவரும் சீனிவாசன் தற்கால இளைஞர்களுக்கு பெரிய உந்து சக்தியுடையவர்!
மேலும், கடந்த 15 வருடங்களாக தமிழகத்தின் ஆவணப்படச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் ஆர். ஆர். சீனிவாசன். பிறந்து வளர்ந்த ஊரான திருநெல்வேலியில், காஞ்சனை என்ற திரைப்பட இயக்கத்தை நடத்தி வந்தவர், அதன் தொடர்ச் செயல்பாடாகத்தான் ஆவணப்படங்கள் எடுப்பதில் ஈடுபட்டார். காடு, மலை, நதிகளுடன் இவற்றுடன் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தவர், மாஞ்சோலைத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது அதை அதன் இரத்தம் உலரும் முன்பு பதிவு செய்து, ஓர் எதிர்ப்பாக மாற்ற, சென்னை நகர்ந்தார். ‘நதியின் மரணம்’ என்ற ஆவணப்பட மாக்கினார்!
அடிப்படையில், திருநெல்வேலியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பும், நாட்டார் வழக்காற்றில் பட்ட மேற்படிப்பும் பெற்றவர். இவ்விரண்டு அடிப்படையான கல்வியறிவின் வெளிப்பாடுகளையும் இவரது எல்லா ஆவணப்படங்களிலும் காணமுடியும். ’காணாமல் போவது’, ‘முகமூடிய முகம்’ என்ற இரண்டு ஆவணப்படங்களிலுமே இத்தகைய இலக்கிய நுகர்ச்சியையும் நாட்டார் வழக்காற்று அணுகுமுறையையும் காணமுடியும். ‘சிதிலங்கள்’, ‘சுழற்புதிர்’, ’தெருவின் பாடல்’ போன்ற படங்களும் அம்மாதிரியானவையே.
பிற படங்களான, ’தீண்டாத்தகாத தேசம்’, ’என் பெயர் பாலாறு’, ‘கடலும் மனிதனும்’ மற்றும் பேரறிஞர் அண்ணாதுரை பற்றிய அண்ணா 100 ஆகிய படங்கள் மனிதனின் வேறுபட்ட நிலைகளில் கூடத் தொடர்ந்து இயங்கும் சாதிய ஒடுக்குமுறையை வெறும் தர அளவில் இல்லாமல் நிகழ்வுகள், தாக்கஙக்ள் அடிப்படையில் அணுகுபவை. இப்படங்கள், அரசியல் பார்வையுடயவை என்றாலும், அவை அரசியல் வாதியினுடையவை அன்று. மக்களுடையவை, அந்த முறையில் தான், ’நதியின் மரணம்’ என்ற ஆவணப்படம் முதற்கொண்டு இன்றைய அவரது அத்தனை ஆவணப்படங்களும் அமைந்திருக்கின்றன.
கலை, இலக்கிய நுகர்ச்சியில் தொடர்ந்து நவீனத்தைக் கண்டடையும் முயற்சிகளை இவரது செயல்பாடுகளும் தொடர்ந்து வெளிப்படுவதை இவரது மற்ற படங்களிலிருந்தும், தனது அடுத்தடுத்த செயல்பாடுகளை வடிவமைத்துக்கொள்வதிலிருந்தும் நாம் உணரக்கூடும்.
தமிழகத்தின் தன்காலத்தில், இயங்கும் இரண்டு மனிதர்களை இவர் முக்கியமான கலை அரசியல் ஆளுமைகள் என்கிறார். ஒன்று கவிஞர் தேவதேவன். இரண்டு, ஓவியர் சந்ரூ. இவர்கள் நேரடியாக அரசியல் வெளிப்பாடுகளை முன்வைப்பவர்கள் இல்லை. ஆனால், தன் மீது சமகாலம் சுமத்தும் அரசியலை தூக்கியெறியும் கலைக் கூறுகளை தம் படைப்புகளில் அயராது வைத்துக்கொண்டே இருப்பவர்கள். இது தான் இன்றைய எல்லா படைப்பாளிகளும் செய்யவேண்டியது என்பதை அவர் தன் சாதி ஒழிப்பு அரசியலை செயல்படுத்துவதற்கான வழித்தடமாகவும் வைத்திருக்கிறார்.
அவரின் மனோபாவம் ஒரு பத்திரிகையாளர் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான ஒட்டுமொத்த கட்புலன் மற்றும் நுண்ணாய்வு பார்வையைக் கொண்டது. இவர், இதழியல், திரைப்படங்கள் பற்றிய வகுப்புகளை எடுக்கும் போது உணரமுடியும். புகைப்பட வரலாறு, சினிமா வரலாறு இரண்டிலும் நாம் இன்று எங்கு நிற்கிறோம் என்ற பார்வையை தயக்கமில்லாத விமர்சனங்களால் எப்பொழுதும் முன் வைத்துக்கொண்டே இருக்கிறார். தன்னுடைய புகைப்படக்கண்காட்சியையும், நூல்களையும், பயிற்சிப்பட்டறையையும் இப்பார்வையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் எதிர்ப்பாகவும் கொண்டிருப்பவர்.
தன்னைக்கவர்ந்த ஆளுமையான திரைப்பட இயக்குநர் ஜான் ஆபிரஹாம் பற்றிய கட்டுரைகள் மற்றும் நேர்காணல்கள் நிறைந்த ஒரு நூலை தொகுத்து அளித்திருக்கிறார். அந்நூல், சமூகப்பார்வையுடன் திரைப்படங்களை அணுகும் எவருக்கும் ஒரு கையேடாக இருக்கக்கூடியது.
இன்று, ’பூவுலகின் நண்பர்கள்’ என்ற சுற்றுச்சூழல் இதழின் ஆசிரியராகவும் சுற்றுப்புற ஆர்வலராகவும் இயங்கி வரும் இவர், ஏற்கெனவே குறிப்பிட்ட படி காடு, மலை, நதியுடன் தன் வாழ்க்கையை இணைத்துக்கொண்டவர். கூந்தன் குளம் பால் பாண்டியனுடன் கொண்ட தன் பழைய நட்பால் பறவைகளையும் உயிரினங்களையும் தன் கலைச்செயல்பாட்டின் உள்ளடக்கமாகக் கொண்டிருப்பவர். இவ்வாறு ஒரு மனிதன் தன் பல்வகை பரிமாணங்களையும் இணைத்துச் செயல்படும்போது தான் முழு மனிதனாக இயங்க இயலும் என்ற நம்பிக்கையைக் கொண்டவர்.
இந்நிலையில், இந்த, ‘லெனின் விருது’ நிச்சயமாய், ஆர். ஆர். சீனிவாசனை ஊக்கப்படுத்துவதற்கான விருதே! அவர் இன்னும் இன்னும் கலை வெளிப்பாட்டை விசாலமான உலகமாகக் கண்டறியும் பயணத்திற்கான துணையாகவும் இருக்கும்! அதுமட்டுமின்றி தற்காலச் சூழலில், ‘லெனின் விருதுக்கான’ முழுமையான தகுதியையும் பெருமையையும் உடையவராக ஆர். ஆர். சீனிவாசனை அடையாளம் காண்பதிலும் இவ்விருதினை அவருக்கு வழங்குவதிலும் தமிழ் ஸ்டுடியோ பெருமைப்படுகிறது. தொடர்ந்து அவர் இப்பாதையில் பயணிப்பதற்கான ஊக்கத்தையும் தளத்தையும் அமைத்துக்கொடுப்பதுடன் தமிழ் ஸ்டுடியோ. காம் என்றென்றும் அவருடன் பயணிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்!
லெனின் விருது வழங்கும் விழா
இந்த லெனின் விருது வழங்கும் விழா எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சென்னை அண்ணா சாலையிலுள்ள மாவட்ட மைய நூலக அறையில் (தேவநேயப் பாவாணர் நூலகம்) LLA Building, மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளவிருப்பர்வர்கள்:
இயக்குனர் பாலு மகேந்திரா,
தயாரிப்பாளர் தனஞ்செயன்
எழுத்தாளர் பவா செல்லத்துரை
கவிஞர் தேவன் தேவன்
மருத்துவர் புகழேந்தி.
நிகழ்வில் செல்வி ஹம்சவேனியின் வீணைக் கச்சேரி நடைபெறும். இவர் வீணை வாசிக்கும்போது இடையில் ராகங்கள் பற்றியும், திருக்குறளின் அதிகாரங்கள் பற்றியும் கேள்விகள் கேட்டால் மிக துல்லியமாக பதிலளிப்பார்.
அனைவரும் வருக..
அன்புடன்
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.