இன்று தமிழிலும், ஆங்கிலத்திலும் 24 மணிநேர தொலைக்காட்சிச் செய்தி அலைவரிசைகள் மாநிலங்கள் அளவிலும், தேசிய அளவிலும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால், இவை இயங்கும் விதம், இவற்றின் செயல்பாடுகள் ஆகியவை அத்தனை திருப்திகரமாக இருக்கிறது என்று சொல்லமுடியாத நிலை. 24 மணிநேரச் செய்திகள் என்கிறார்களே தவிர பெரும்பாலும் திரும்பத்திரும்ப நான்கு செய்திகளைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய ‘சுடச்சுடச் செய்திகளுக்குப் பழைய புகைப்படங்களை சகட்டுமேனிக்கு வெளியிடு கிறார்கள். தலைவர்களின் படங்கள் போன்றவையென்றால் பரவாயில்லை. ஆனால், இன்றைய வெள்ள அபாய நிலைமை குறித்த செய்திக்குக் கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கைக் காட்டினால்...? இன்றைய ரயில்விபத்தில் இறந்தவர் குறித்த செய்தியின்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களைக் காட்டினால்...? தற்போதைய பேரிடர் குறித்து ஒரு தலைவர் அக்கறையோடு கருத்துரைத்திருக்கும் செய்திக்கு அவர் என்றோ வாயெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் காண்பிக்கப்படுகிறது. இவை ஒன்றிரண்டு உதாரணங்கள் மட்டுமே.
முன்பு ஒரு தடவை காலையில் ஏற்பட்ட மழைப்பெருக்கும், வெள்ளப்பெருக்கும் ஒரு வாரம் வரை அதேயளவாய் திரும்பத் திரும்பக் காண்பிக்கபடுகின்றன. முன்பு ஒரு தடவை வெள்ளப் பெருக்கில் மூழ்கியிருந்த வயலில் முழங்காலளவு நீரில் நின்றுகொண்டிருந்த கிராமப்பெண்ணொருத்தியை செய்தித் தொலைக்காட்சி நபர் கழுத்துவரை நீரிருக்குமாறு நீரில் அமிழ்ந்த நிலையில் காட்சிதரச் சொல்லி சைகைசெய்வதும் யதேச்சையாக எல்லோரும் பார்க்கும்வண்ணம் காட்சியில் இடம்பெற்றி ருந்தது. பரபரப்புக்காக வெளியிடப்படும் இத்தகைய புகைப்படங்கள் செய்தி அலை வரிசைகளின், ஒளி-ஒலி ஊடகங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்க வல்லவை.
தமிழகத்தைப் பொறுத்தவரை தொலைக்காட்சி அலைவரிசைகள் பெரும்பாலும் அரசியல்கட்சிகள் சார்ந்ததாகவே இருப்பதால் அவை மிகப் பெரும்பாலான நேரங்களில் பாரபட்சமாகவே செய்திகளைத் தருவது வெளிப்படை. தேசிய அலைவரிசைகளில் இந்தத் தன்மை இத்தனை நேரிடையாகப் புலப்பட வில்லை யென்றாலும் அதனால் அவை மிக சுதந்திரமாக, நடுநிலையோடு இயங்குவதாகச் சொல்ல முடியாது. தேசியத் தொலைக்காட்சி செய்தி அலைவரிசைகள் கார்ப்பரேட் கைகளிலிருப் பதாகவும் அறியக்கிடைக்கிறது. தவிர, தேசியத் தொலைக்காட்சிச் செய்தி அலைவரிசைகள் தென்னிந்தியா சார்ந்த நிலவரங்களில் குறைவாகவே கவனம் செலுத்துகின்றன; தென்னிந்தியா குறித்த செய்திகளை ஒப்பீட்டளவில் குறைவாகவே வெளியிட்டுவருகின்றன. உதாரணமாக, இலங்கையில் தமிழர்கள் கொத்து கொத்தாகக் கொலைசெய்யப்பட்டபோது தேசியத் தொலைக் காட்சிச் செய்தி அலைவரிசைகள் ஏனோதானோவென்றுதான் செய்திகளை வெளியிட்டன. அதேபோல், சமீபத்திய ஜல் புயல் குறித்த செய்தியும். ஒரு புறம் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்துப் பரபரப்பாகப் பேசிக்கொண்டே மறுபுறம் பெண்ணை நுகர்பொருளாகப் பயன்படுத்தும் போக்கை மாநில அளவிலான தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்ச்சிகளிலும் சரி – செய்தி யாகட்டும், சீரியலாகட்டும் – தேசிய அலைவரிசைகளிலும் சரி வெளிப்படையாகவே காணமுடிகிறது. இவையெல்லாம் சமூகத்தின் நான்காவது தூணின் நமபகத்தன்மைக்கு நல்லதல்ல.
*வலியின் வலியுணர்வோரே உண்மைக் கலைஞர்கள்!
சந்தனக்காடு வீரப்பன் கடத்திய சந்தனமும் தந்தமும் என்னாயிற்று? என்றைக்குமான எத்தனையோ ‘மில்லியன் டாலர்’ கேள்விகளில் இதுவும் ஒன்று என்பது நமக்கெல்லாம் நன்றாகவே தெரிகிறது! கடத்திச் சென்ற கன்னட நடிகர் ராஜ்குமாரை காட்டில் வீரப்பன் பல காததூரங்கள் நடக்கச் செய்வ தாகவும், காட்டில் மூன்று மாதங்களுக்கு மேலாகத் தங்கியிருக்கச் செய்ததாகவும் செய்திகளைப் படித்தபோது வன்முறையை அத்தனை அகல்விரிவாக, சிறு கீறலைக்கூடப் பெறாதவர்களாய், வலியென்றால் என்னவென்றே அறியாமல் படத்துககுப் படம் ‘வண்ணமயமான கற்பனாதீதக் காட்சிச்சித்தரிப்புகளாய்’ கொட்டிக் குவித்துக்கொண்டிருக்கும் நம் சின்னத்திரை, பெரியதிரைக் கதாசிரியர்கள், கதாநாயகர்களுக்கு இப்படிப்பட்ட உண்மைஅனுபவம் கிடைத்தால் நன்றாயிருக்கும் என்றுகூட எண்ணத்தோன்றியது.
காற்சட்டைப்பையிலிருந்து தலைவாரிக்கொள்ள சீப்பு எடுப்பதுபோல் பட்டாக்கத்தியை எடுக்கிறார்கள். பெண்ணைத் துரத்தித்துரத்தி கேலிசெய்பவரைத்தான் பெண் காதலிப்பாள் என்று திரும்பத்திரும்பச் சித்தரித்து வளரிளம்பருவப் பெண்கள் ஆண்கள் இருபாலரையும் மூளைச்சலவை செய்யும் படைப்புகளே அதிகம். ஒரு நேர்மையான, சமூகப்பிரக்ஞை வாய்ந்த கலைஞர் சக மனிதரின் வலியையும், வேதனையையும் முதலில் தானே உணர்வார். உள்வாங்கிக்கொள்வார். தனது படைப்பு சமூகத்தில் ஏற்படுத்தட்க்கூடிய தாக்கங்கள் குறித்த அக்கறையும் அவரிடம் இயல்பாகவே இடம்பெற்றிருக்கும். அவர் ஒருபோதும் எதையும் ‘ரொமாண்டிஸைஸ்’ செய்ய முற்பட மாட்டார்.
‘நாங்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறோம் என்றும் வாழ்க்கையில் நடக்காததையா நாங்கள் காட்சிப்படுத்துகிறோம் என்றும் மறுதரப்பில் நியாயம் பேசமுடியும்; எதிர்வாதம் செய்ய முடியும். ஆனால், சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுபவரை, வன்முறையைக் கைக்கொள்பவர்களை முதன்மைக் கதாபாத் திரங்களாகத் தொடர்ந்து சித்தரித்துவருவதன் மூலம் வளரும் தலைமுறை யினர் மனங்களில் வாழ்வுகுறித்த என்னவிதமான பார்வைகள் வேரூன்றப்படுகின்றன என்பது குறித்த சுய பரிசீலனை செய்யும்போக்கு சின்னத்திரை, பெரியதிரைக் கலைஞர்களிடம் இனியேனும் உருவாக வேண்டும்.
கோவையில் பதினோரு வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானது, அவளும் அவளுடைய தம்பியும் கடத்திச் சென்று கொலைசெய்யப்பட்டது தொடங்கி சமூகத்தில் நடந்தேறிவரும் எத்தனையோ அவலங்களுக்கு சின்னத்திரை, பெரிய திரையின் பங்களிப்பு என்ன என்பது குறித்து பொதுமக்கள் இனியேனும் தொடர்ந்தரீதியில் கண்காணித்து வரவேண்டியதும், குரலெழுப்ப வேண்டியதும் இன்றைய இன்றியமையாத்தேவையாகும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>