(மீள்பிரசுரம்) இமாலயப் பிரகடனம்: ஒரு பார்வை - சிவதாசன் -
நான்கு நாட்களுக்கு முன் அதிரடியாக ஒரு செய்தி மின்னஞ்சல் பெட்டிக்குள் விழுந்திருந்தது. வாசிப்பதற்கு முன்னரே படங்கள் உள்ளடக்கத்தின் பெரும்பாகத்தை வெளிப்படுத்தி விட்டன. தலைப்பு அசத்தலாக இருந்தாலும் தலைக் கதிரையில் இருந்தவரைக் கண்டதும் சப்பென்று போய்விட்டது. ஆனாலும் முயற்சிகளின் நோக்கம் நல்லதாயின் அவை ஆராயப்பட வேண்டும் என்பதில் சம்மதம் உண்டென்ற படியால் உள்ளே சென்றேன்.
அது என்னவோ உலகத்தின் பல பிரகடனங்கள் இமாலய ‘உச்சி’ முகர்ந்துதான் செய்யப்படவேண்டுமென்ற விதியோ தெரியாது. ‘இமாலயப் பிரகடனம்’ என்ற பெயருடன் வந்தவற்றில் இது முதலும் கடைசியுமல்ல. திம்பு வும் பிரகடனப் பிரசித்தி பெற்றதுதான். இவற்றில் எப்பிரகடனமாவது வெற்றி பெற்றுள்ளவையா என்பதை அறிய சாத்திரி ஒருவர் அமர்த்தப்பட்டுள்ளார்.
அறிக்கை உலகத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டு கனடிய தமிழர் பேரவையினால் அஞ்சல் செய்யப்பட்டிருந்தது. அறிக்கை நீட்டி விசாலித்து எழுதப்பட்டிருந்தது. அதில் ஆச்சரியம் கொள்ளத் தேவையில்லை. அதன் சாராம்சம் இதுதான்.
உலகத் தமிழர் பேரவையும் சிறந்த இலங்கைக்கான சங்கங்கள் (Sangha for Better Sri Lanka) என்ற அமைப்பும் கூட்டாக எடுத்த முயற்சியின் பலனாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு உரையாடல் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்தது என்றும் அதன் பலனாக ஏப்ரல் 2023 அன்று நேபாளத்திலிருக்கும் நாகர்கோட் என்னுமிடத்தில் இரு தரப்புகளும் சந்தித்திருந்தார்கள் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதன் பலனாக உருவாகியதே ‘இமாலயப் பிரகடனம்’. இவ்வேளையில் ஜூலை -ஆகஸ்ட் 1985 இல் பூட்டானில் இருந்து வெளியிடப்பட்ட ‘திம்பு பிரகடனம்’ உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். அது பற்றிப் பின்னே பார்க்கலாம்.