1. என் காதலி ஒரு கண்ணகி

நயாகரா நீர் வீழ்ச்சியின் நீர்த் துளிகள் காற்றோடு கலந்து எங்கள் உடம்பைக் குளிரூட்ட, ‘மிஸ்ற் ஒவ்த மெயிட்டில்’ வானவில்லின் வர்ண ஜாலங்கள் என்னை ஒரு கணம் திகைக்க வைத்தன. இவ்வளவு அருகில், மிக அருகில் வானவில்லை நான் ஒரு போதும் பார்த்ததில்லை. அற்புதம்! இல்லை அதிசயம்! மாலை நேரத்து வெயிலில் நீர்த் துளிகள் பொன்மயமாக, சொர்க்க வாசலில் நுளைவது போல படகு மெல்ல மெல்ல ஆடி அசைந்தது. இயற்கையின் அதிசயத்தில் என்னை மறந்து என்னை அறியாமலே எழுந்து நின்று கண்களை மூடி, இரண்டு கைகளையும் முன்னே நீட்டி, ‘ஆகா..!’ என்று மெய்மறந்தேன்.

மறுகணம் படகு போட்ட ஆட்டத்தில், நான் தடுமாற எனக்கு முன்னால் நின்ற அவளும் தடுமாறி என் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தாள். கண்ணை மூடிக் கற்பனையில் இருந்த நான் என்ன நடந்தது என்று அறியாமலே, விழுந்திடுவேனோ என்ற பயத்தில் கைக்குள் அகப்பட்ட அவளை இறுக அணைத்துக் கொண்டேன். வெண்மேகப் பொதியோ? அந்த இதமான சுகத்தில் ஒருகணம் என்னை மறந்தேன். ‘ஸ்ருப்பிட்..!’ என்றாள் தன்னை விடுவித்துக் கொண்டு.

சற்றும் எதிர்பாராத வார்த்தை, தானே வந்து என் கைக்குள் விழுந்து விட்டு என்னைத் திட்டினாள்;. யாரென்றே தெரியாமல் கட்டி அணைத்தது என் தப்புத்தான், சமாளித்துக் கொண்டு,‘சொறி’ என்றேன், கோபத்திலும் அவள் ஆழகாய் இருந்தாள். கத்தும் குயிலோ இல்லை எழில் தோற்றத்தில் மயிலோ?

டெனிம் பான்ஸ்சில் மேகவர்ண போலோ சேட்டை இன் பண்ணியிருந்தாள். நைக்கி ஷ_வில் லேற்ரஸ் நாகரீகம் தெரிந்தது.

முன்னே தொங்கிய கூந்தலை விரல்களால் கோதிவிட்டு என் நெஞ்சை ஒரு கணம் தவிக்க வைத்தாள். அவளின் ‘இன்ரிமேற்’ மணத்தது என் கையில்!
ஏச்சு வாங்கியும் சூடு சொரணை இல்லாமல், ஏதோ ஒரு சக்தி எனக்குள் புகுந்து இன்னும் ஒரு முறை, ஒரே ஒரு தடவையாவது அவளைத் திரும்பிப் பார் என்று மனசு ஏங்கிற்று.

ஆனால் பல இனமும், மதமும், மொழியும் உள்ள இந்த நாட்டில் ‘மனதைக் கண்டபடி அலைய விடாதே’ என்று போராடிய மனசு மறுபுறம் எச்சரிக்கை செய்தது. ஏனோ இந்த நாட்டுப் பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் என்னால் மூழ்கிப் போக முடியவில்லை!

உடை மாற்றிக் கொண்டு, பிற்ஸ்பேர்க்கில் உள்ள வெங்கடேஸ்வரர் ஆலயத்திற்குப் போகும் அவசரத்தில் அவள் நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, வண்டி ஓட்டும் போது ஹைவேயில் கவனம் செலுத்தினேன். அவளை மீண்டும் பார்ப்பேனா என்று மனதில் ஏக்கம் தெரிந்தது?, எதையோ பறிகொடுத்து விட்டுச் செல்வது போன்ற உணர்வு எனையாட்கொண்டது. அந்தத் தேவதையின் தரிசனம் மீண்டும் கிடைக்குமா என்ற ஏக்கம் என்னோடு தொடர்ந்தது.

வெங்கடடேஸ்வர தீப ஆராதனையின் போது கண்களை மூடிப் பிரார்த்தித்தேன். மனதில் சஞ்சலம். எதையோ பறிகொடுத்த ஏக்கம். மனசு குரங்காய் அங்குமிங்கும் தாவியது.

கண்ணுக்குள் அவள் தொலைக் காட்சியானாள். அழகிய கூந்தல் முகத்தை இதமாய் வருடிச் செல்ல, காதுக்குள் மெல்லப் புதுக் கவிதை சொன்னாள். காதல் வசப்பட்டவர்களுக்கு எல்லாமே கவிதையாத்தான் தோன்றுமோ? கோயிற் பிரகாரம் என்பதால் வேண்டாத நினைவுகளை ஒதுக்கிவிட முயன்றேன்.

‘என் ஆருயிராய் நின்றானே, இன்பமும் துன்பமும் இல்லானே, உள்ளானே அன்பருக்கன்பனே....!’. வார்த்தைகள் காதுக்குள் தேனாய்ப்பாய, செந்தமிழ்த் தேன்மொழியாள் யாரென்று கண்திறந்து பார்த்தேன்.

‘ஸ்ருப்பிட்’ அதே குரல் தமிழில்! வெங்கடேஸ்வரா என்னைச் சோதிக்கிறாயா?
எங்க இனமா? நம்பமுடியாமல் என்னையே கிள்ளிப் பார்த்தேன். சாட்சாத் அவளே தான்! சேலை கட்டி வந்த நிலவோ? கண்களை மூடிக் கைகளைக் கூப்பி பக்திப் பரவசமாய் சிவபுராணம் படித்தாள். நீல வர்ணத்தில் அந்தச் சேலை அவளுக்கு மிகவும் எடுப்பாக இருந்தது.

வண்ணநிலவே நீ விண்ணை விட்டு வந்ததெப்போ? என்னிதயத்தில் வைத்து உன்னை நான் ஆராதிக்க எனக்கொரு சந்தர்ப்பம் தருவாயா?

வெங்கடேஸ்வரர் அந்த சந்தர்ப்பத்தை எனக்காக ஏற்படுத்தித் தந்ததாகவே நான் நினைத்தேன். இல்லாவிட்டால் மீண்டும் தரிசனம் தருவாளா? கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிடலாமா?

ஆலயத்தின் உணவகத்தில் தயிர்ச்சாதமும், புளிச்சாதமும் பிரபலமானது. உணவு மண்டபத்தில் தயிர்ச்சாதத்தையும் புளிச்சாதத்தையும் அவள் ருசித்துச் சாப்பிட்ட போது அவளுக்கு விக்கல் எடுத்தது. கண்ணிலே நீர் முட்ட நெஞ்சிலே கைவைத்துக் கொண்டு விக்கினாள். எதிரே சாப்பிட்டுக் கொண்டிருந்த என் கவனம் முழுவதும் அவளிடம் போனது. உதவி செய்யலாமா என்று என் மனம் முடிவெடுக்கு முன்பே என் கைகள் தண்ணீர் டம்ளரை எதிரே இருந்த அவளிடம் அவசரமாய் நீட்டின. மனசு படபடத்தது, அவள் ஒரு நிமிடம் தயங்கினாலும் பின் அதை வாங்கி அருந்தி விட்டு நன்றி சொன்னாள். அவள் நினைவாக டம்ளரை மறக்காமல் எடுத்துக் கொண்டேன். அவள் கை பட்ட இடத்தில் என் உதட்டால் கவிதை வரைந்தேன். மீண்டும் என்னை மறந்தேன்! எதிலும் நாட்டமில்லாமல் குழம்பிப்போனேன்.

நயாக்கராவில் பார்த்தேன், பார்த்தாள், பிற்ஸ்பேர்க்கில் கதைத்தேன், கதைத்தாள், ரொரன்ரோவில் வளர்த்தேன், வளர்த்தாள். வளர்ந்தது எங்கள் காதல்.

தமிழ்ப் பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும் ஊறிப் போனதாலோ அல்லது அவள் மீது நான் வைத்திருந்த அதீத காதலாலோ அவளது ஒவ்வோர் அசைவும் என்னைப் பெரிதாகப் பாதித்தது. அன்று வேலன்டைன்ஸ்டே. அவள் பிறந்தது கூட பெப்ரவரி 14ம் திகதிதான். மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் எனக்காகப் பூங்காவில் காத்திருந்தாள்.
‘மதுமிதா.....மெனி ஹப்பி றிட்டேன்ஸ்.....’ கையிலே கொண்டு வந்திருந்த மலர்க் கொத்தோடு வேலன்டைன், பார்த்டே கார்ட்டுகளையும் கொடுத்தேன்.

ஆசையோடு வாங்கிக் கொண்டு ‘தாங்யூ’ சொன்னவள்,
‘அவ்வளவுதானா?’ என்றாள்.
‘தெரியுமே.....கேட்பாய் என்று! இதோ உனக்காக வாங்கினேன்....பிரித்துப் பாரேன்’.
அவள் பிரித்துப் பார்த்தாள். அவளுக்குப் பிடித்தமான ‘இன்ரிமேற்’.
‘தாங்யூ சோ மச்’ என்றாள் மீண்டும், மனசு குளிர்ந்தது.
‘முட்டாள் காதலனே...மலர்ச் செண்டைத் தரும்போதாவது என்னை அணைத்து ஒரே ஒரு முத்தமாவது தந்திருக்கக் கூடாதா? என் மனம் ஏங்குதே’ என்று நினைத்துக் கொண்டாளோ தெரியவில்லை, ஏனோ பெண்மை வெட்கப்பட முகம் சிவந்து மௌனமானாள்.

‘மதுமிதா....எப்படி பிறந்த நாள் கொண்டாட்டம்’

‘ஓ...அதுவா...காலையிலே ஆபிசுக்குப் போனேனா....ரீட்டா, ஜெனட், ஜெனீபா...எல்லோரும் அணைத்து கன்னத்திலே முத்தம் தந்து விஷ் பண்ணினாங்க. சிவா அப்புறம் பாரேன் பக்கத்திலே இதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு நின்ற பீற்றர், ‘ஹெவ் எபவுட் மீ’ என்று சொல்லி திடீர் என என்னை அணைத்து கன்னத்திலே ஒரு முத்தம் கொடுத்திட்டான்.

அது மட்டுமா கன்னத்திலே முத்தம் கொடுத்து விட்டு வெகுளிபோல ‘சோ....சொ..வ்ற்’ என்று சொன்னானா, எல்லோரும் ‘கொல்’ என்று சிரித்து விட்டார்கள்.’
அவள் தனது கன்னத்தைத் தடவிப் பார்க்க, சிவா முகம் கறுத்துச் சங்கடப் பட்டான். பெரிய சாதனை செய்தது போல இதை என்னிடம் வந்து சொல்கிறாளே! எங்கே போய் முடியுமோ?

‘அவன் முத்தம் கொடுக்க நீ அனுமதிச்சியா?’

‘நான் என்ன செய்யட்டும் சிவா? இது அவர்களின் கலாச்சாரம். இதை அவர்கள் பெரிய விடயமாக எடுப்பதில்லை’.

‘அதற்காக இன்றைக்கு முத்தம் என்பான்......நாளைக்கு கட்டி அணைப்பான்....எல்லாவற்றுக்கும் ஒத்துப் போவியா?’
‘சிவா...ஏன்.....இந்த விடயத்தைப் பெரிது படுத்துகின்றாய் நான் அதை உடனேயே மறந்துவிட்டேன். உன்கிட்டே எதையும் மறைக்கக் கூடாது என்று தான் சொன்னேன். அவ்வளவுதான்,’

‘நீ செய்தது சரி என்று நியாயப் படுத்துகின்றாயா?’
‘ஏன் இப்போது வேண்டாத விவாதம். இந்த நாட்டில் இப்படியான தினங்களில் ஆணும் சரி பெண்ணும் சரி கன்னத்தில் முத்தம் கொடுப்பது சகஜம். எயர்போட்டில் யாராவது நண்பர்கள், உறவினர்கள் வந்தால் நாங்கள் கட்டி அணைப்பதில்லையா? அதே போலத் தான் இதுவும். இதில் எந்த விகல்பமும் இருப்பதாக அவர்கள் நினைப்பதில்லை. மனசு சுத்தமாய் இருந்தால் போதும். இங்கே பெண்கள் வேலைக்கு என்று வீட்டை விட்டு வெளியே வந்தால் இதை எல்லாம் சமாளித்து பொறுத்துத் தான் போகணும்.’

‘அதற்காக.....எங்கள் பண்பாடு என்னவாவது?’
‘எது....பண்பாடு? அவன் என்னுடைய விருப்பமில்லாமல் என்னை அணைத்தது உண்மைதான். அதற்காக என்னுடைய கற்புப் போயிடிச்சு என்று சொல்ல வருகிறாயா? அப்படி என்றால் ஊரிலே தினமும் எத்தனையோ ஆண்களுக்கிடையே பஸ்சிலே நெரிந்து போகும் போது எத்தனை தடவை என்னோட கற்பு பறி போயிருக்கும்?’

‘கற்பைப் பற்றிச் சொல்ல நீ என்ன கண்ணகியா?’
அவளுக்கு முகத்தில் ஓங்கி அறைந்தாற் போல் இருந்தது. இந்த நாட்டிலே இருந்து கொண்டா இவன் இப்படிக் கதைக்கிறான்?
‘சிவா நீயா இப்படிச் சொல்கிறாய்? என்னாச்சு உனக்கு?’
யாரோடு அவள் மனதால் வாழ்ந்து கொண்டிருந்தாளோ, யாரிடம் தன்னை அர்ப்பணிக்க நினைத்தாளோ அவனா இப்படிச் சொல்கிறான்? காதலியாய் இருக்கும் போதே இப்படிச் சந்தேகப் படுபவன் நாளை மனைவியானால் எப்படிச் சந்தேகப்படுவான்?

அவள் ஒன்றுமே புரியாமல் கோபமாக அவனை முறைத்துப் பார்த்தாள். பெண்மை பலவீனப்படும் போதுதான் ஆண்களின் உண்மை ரூபம் வெளிவருவதுண்டு. பெண் என்றால் ஏன் சந்தேகப் படுகின்றார்கள். இந்த ஆண்கள் எல்லோருமே சந்தேகப் பிராணிகளாய்தான் இருப்பார்களோ?

‘என்ன முறைத்துப் பார்க்கிறாய்? நீ என்ன பத்தினியா நான் எரிந்து போவதற்கு?’ இந்த வார்த்தையைக் கேட்டதும் அவளது முகம் சிவந்து கண்கள் கலங்கின.

வார்த்தையால் என்னமாய்ச் சுடுகிறான்.

அவளுக்கு அவன் மேல் வெறுப்புத் தான் வந்தது. இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப வாழ நினைக்காதவன். பெண்களின் மனதைப் புரிந்து கொள்ள முடியாதவன். பெண்மையை மதிக்கத் தெரியாதவன். இவனுக் கெல்லாம் காதல் ஒரு கேடா?

‘ஆமாம்....நான் பத்தினி தான். மனதாலும் உடலாலும் நான் பத்தினி தான். உன்னை எரிக்க முடிகிறதோ இல்லையோ ஒன்றை மட்டும் என்னால் எரிக்க முடியும். எப்போ நீ என்மேல் சந்தேகப் பட்டாயோ அந்த வினாடியே காதல் என்கிற அந்தப் புனிதமான தொடர்பை நான் எரித்து விட்டேன். இதை மட்டும் தான் என்னாலே எரிக்க முடியும். உன்னைப் பார்த்து நீ கற்போடு இருக்கிறாயா என்று என்னாற் திருப்பிக் கேட்க முடியும்! அப்படி ஒரு கேள்வியைக் கேட்டு உன்னை சங்கடப்படுத்த நான் விரும்பவில்லை! அது எனக்குத் தேவையுமில்லை! இனி எந்த ஜென்மத்திலும் உனக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நீயாரோ, நான் யாரோ. ஒரு பெண்ணோட மனசைப் புரிஞ்சு கொள்ள முடியாத உங்களுக் கெல்லாம் எதுக்கப்பா காதல்?’

அவன் கொடுத்த மலர்க் கொத்தை வீசி எறிந்து விட்டு அவள் வேகமாக நடந்தாள். தான் பேசியது வினையாகி விட்டதோ என்று பயந்தான் சிவா. எப்படியாவது அவளைச் சமாதானப் படுத்த வேண்டும் என்று நினைத்தான். காலடியில் விழுந்த அந்த மலர்க் கொத்தை எடுத்துக் கொண்டு அவளுக்கு முன்னால் ஓடிவந்து வழி மறித்தான்.
‘மதுமிதா...ஒரு நிமிஷம்’
‘என்ன?’ என்பது போலக் கோபத்தோடு முறைத்தாள்.
‘உன்கிட்ட கொடுத்த வெலன்டைன் கார்ட்டைப் பார்த்தியா?’
‘ஏன்?....எனக்கு வேணாம்...நீயே வெச்சுக்கோ’ அவள் வெறுப்போடு நீட்டினாள்.
‘ப்ளீஸ்...எனக்காக...ஒரு தடவை வாசித்துப் பாரேன்.’
உதடுகள் துடிக்க, அவள் பிரித்து வாசித்தாள்.

‘மதுமிதா நான் என்ன சொன்னாலும் நீ சிரித்துக் கொண்டே சமாளிக்கிறாய். உனக்குக் கோபமே வராதா என்று நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. கோபம் வந்தால் நீ எப்படி இருப்பாய் என்று உன்னைச் சீண்டிப் பார்க்க வேண்டும் போல ஆசையாக இருக்கிறது. இன்று முயற்சி செய்து பார்க்கப் போகிறேன். அந்த முயற்சியில் நான் தப்பாக எதாவது சொல்லியிருந்தால் என்னை மன்னித்துவிடு.’

கார்ட்டை வாசித்து விட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். இப்போ அவளின் கோபம் கொஞ்சம் தீர்ந்தது போலத் தெரிந்தது. ஆனாலும் அவளது மௌனம் அவனைப் பாதித்தது.

‘என்மேலே கோபம்னா நடந்ததுக்காக என்னை மன்னிச்சுடு. அதற்காக இப்படி மௌனமாய் இருந்து என் மனசை நோகடிக்காதே...ப்ளீஸ்!’
அவள் உதட்டைக் கடித்துக்கொண்டு அவன் சொல்வது தனக்குக் கேட்காதது போலப் பார்வையை எங்கேயோ செலுத்தினாள்.

‘ப்ளீஸ்......என்னைத் திட்டணும் என்றால் திட்டிக்கோ’ நடந்ததுக்காக அவளிடம் மன்னிப்புக் கேட்டாலும் பரவாயில்லை என்று நினைத்தான்.
‘நீங்க மட்டும் என்னவாம்...வேடிக்கைக்கும் ஒரு அளவிருக்கு. ‘தெயர்ரிஸ் ஏ லிமிட் ஃபோர் எவ்றித்திங்’. பொய்யாய்க் கோபம் காட்டினாள்.

‘மன்னிச்சுடு....மதுமிதா..இந்த நாட்டிலே எப்படி வாழணும், எப்படிப் பழகணும் என்றெல்லாம் எனக்குத் தெரியாதா? நீ சொன்னது அத்தனையையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் கூட ஒரு உண்மையை உங்கிட்ட மறைச்சிட்டேன். சொன்னால்; நீ கோபப்படுவாயோன்னு......?’அவன் வார்த்தையை முடிக்காமல் அவளைப் பார்த்தான்.
‘என்னவாம்?’என்றாள் அவசரமாக.
‘என்னோட பார்த்டேயன்று எங்க ஆபீசிலே என்கூட வேலைசெய்யும் மாரியா இதேபோல என்னை அணைச்சு முத்தம் கொடு.........!’
அவன் சொல்லி முடிக்கு முன்பே,
‘யூ,..யூ,,,..பாஸ்ட.......!’ அவள் அவனது கையில் இருந்த பூங்கொத்தைப் பறித்து அதனை ஓங்கிக் கொண்டு பொய்க் கோபத்தோடு அவனைத் துரத்த அவன் எங்கே ஓடுவது என்று தெரியாமல் ஒரு கணம் திகைத்துப் போக, ‘ஓடாதே’ என்று காதல்மனசு அவனது காலைக் கட்டிப்போட,

அவன் அவளது கைகளுக்குள் சரணடைந்தான்.


2. காதல் ஒரு விபத்து

அவனை நேரே சந்தித்து, அவனோடு பழகிப் பார்க்க வேண்டும், அவன் தனக்கு ஏற்றவன் தானா என்பதை உறுதிப் படுத்த வேண்டும் என்ற ஆவலோடு தான் அவள் இந்தப் பயணத்தை மேற்கொண்டாள்.)

நியூயோர்க் லாகாடியா விமான நிலையத்தில் பயணிகள் ஏறும் இடத்தில் எயர்பஸ் ஏ-320 நோர்த் கரோலினாவில் உள்ள சாலொட்டிக்குச் செல்வதற்குத் தயாராக நின்று கொண்டிருந்தது.

நோர்த் கரோலினாவிற்குச் செல்லும் பிளைட் இலக்கம் 1549-ல் பயணம் செய்பவர்களை செக் இன் செய்யும்படி கணனித் திரையில் சிகப்பு நிறத்தில் எழுத்துக்கள் மின்னிக் கொண்டிருந்தன. அதைவிட ஒலி பெருக்கியிலும் அவ்வப்போது அழைப்பு வந்து கொண்டிருந்தது.

பிரயாணிகள் தங்குமிடத்தில் உட்கார்ந்து, நாவல் படித்துக் கொண்டிருந்த கொலின்ஸ் இந்த அழைப்பைக் கேட்டதும், விகாஷ் சுவாரப்பின் ‘கியூ அன்ட் ஏ’ என்ற அந்த நாவலை மூடி, படித்த பக்கத்திற்கு அடையாளம் வைத்து விட்டு நிமிர்ந்தாள்.

‘கியூ அன்ட் ஏ’ என்ற அந்த நாவலின் மூலக்கதையே ‘டானி பொய்லியின்’ நெறியாள்கையில் ‘ஸ்சிலம்டோக் மில்லியனார’; என்ற பெயரில் திரைப் படமாக்கப்பட்டு சிறந்த நெறியாளருக்கான அக்கடமிப் பரிசையும், தமிழ் நாட்டைச் சேர்ந்த ஏ.ஆர். ரகுமானுக்கு சிறந்த இசை அமைப்புக்கான பரிசையும் பெற்றுத் தந்தது. தமிழ்ப் பெண்ணான மியா என்று அழைக்கப்படும் ‘பேப்பர்பிளேன்’ பாடல் புகழ் மாதங்கியும் இந்தப் படத்தில் பாடியிருக்கின்றார். ஒஸ்கார் பரிசும் இந்தப் படத்திற்குக் கிடைக்கலாம் என்பதால் படத்தைப் பார்ப்பதற்கு முன் நாவலை வாசித்து முடித்து விடவேண்டும் என்று அவள் ஆர்வம் காட்டினாள்.

சுவாரஸ்யமாக அந்த நாவல் இருந்ததாலும், இந்தியப் பின்னணியில் இருந்த கதாபாத்திரங்கள் அவள் மனதைக் கவர்ந்திருந்ததாலும் விமானப் பிரயாணத்தின் போது மிகுதியையும் வாசித்து முடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

அவள் பிரயாணிகள் விரிசையில் தன்னை இணைத்துக் கொண்டபோது, வலது குறைந்தோரையும், குழந்தைகளோடு கூடிய பெற்றோரையும் முதலில் உள்ளே செல்லும்படி அழைத்தார்கள். அவள் அமைதியாக வரிசையில் நின்று தனது இருக்கை இலக்கத்தை அழைத்த போது, கைப்பையோடு உள்ளே சென்றாள்.

விமானத்தின் வாசலில் அவளை வரவேற்று, பிரயாணச் சீட்டை உறுதி செய்த விமானப் பணிப் பெண்மணி அவள் அமரவேண்டிய இருக்கையின் திசையைக் காட்டி விட்டாள்.

இப்போதெல்லாம் முன்புபோல விரும்பிய பொருட்களை எல்லாம் கையில் கொண்டு செல்லும் பையில் கொண்டு செல்ல முடியாதாகையால் அவள் தெரிந்தெடுத்த சில பொருட்களையே அதில் வைத்திருந்தாள். கூரான பொருட்கள், குறித்த அளவிற்கு மேற்பட்ட திரவப் பெருட்கள் எதுவும் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. பற்பசைகூட சிறியதைத் தான் அனுமதிப்பார்கள். எனவே மிகவும் கவனமாக கையோடு கொண்டு செல்லும் பொருட்களைத் தெரிந்தெடுத்திருந்தாள்.


ஆறு மாதங்களுக்கு முன் வேலை விடையமாக நோர்த் கரோலினாவில் உள்ள தலைமையகத்திற்குச் சென்றபோது தான் அங்கே மைக்கேலை முதன் முதலாகச் சந்தித்தாள்.

அவளுடைய உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து மரியாதையோடு அவன் பழகி இருந்தான்.

அதன்பின் தொலைபேசி, செல்பேசி, மின்னஞ்சல், ரெக்ஸ், சாற்றிங், வீடியோ கொன்பிறன்ஸ் என்று அவர்களது தொடர்புகள் தொடர்பு சாதனைங்களை நம்பியே இருந்தன. இப்போதெல்லாம் காதல் தொடர்பு சாதனங்களையே நம்பி ஆரம்பித்து விட்டாலும் இளமைத் துள்ளலின் தாக்கத்தால் அவை சந்தோஷமாகவே நீடிக்கின்றன.

திருமண பந்தத்தில் நுழைய வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு வந்த போது, அவன் நல்லவனா, அன்பானவனா, அவனை நம்பித் தன்னை ஒப்படைக்கலாமா என்றெல்லாம் அவள் சிந்தித்து அதிகம் கவலைப்பட்டாள். இந்தியப் பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை அவள் நேசித்ததால், தப்பானவனைக் கணவனாக அடைந்தால் காலமெல்லாம் வாழ்க்கை நரகம்தான் என்பது அவளுக்குத் தெரியும். எப்படியாவது அவனை நேரே சந்தித்து, அவனோடு பழகிப் பார்க்க வேண்டும், அவன் தனக்கு ஏற்றவன் தானா என்பதை உறுதிப் படுத்த வேண்டும் என்ற ஆவலோடு தான் அரைமனதோடு இருந்த அவள் இந்தப் பயணத்தை மேற்கொண்டாள்.

அவளது விருப்பத்தை ஏற்று, மைக்கேலும் அவள் வருகைக்காகக் காத்திருப்பதாக அறிவித்திருந்தான். சுருங்கச் சொன்னால் அவள் அவனுடனான ‘டேற்ரிங்குக்கு’ நாட்குறித்து விட்டு, அவனைச் சந்திக்கச் சென்று கொண்டிருந்தாள்.

இருக்கைப் பட்டியை மாட்டிக் கொண்டு, பாதியில் விட்ட நாவலை ஆர்வம் காரணமாக மீண்டும் தொடர நினைத்தாள்.

மறுபக்கத்தில் ஒரு தாயும் இரண்டு பெண் குழந்தைகளும் அமர்ந்திருந்தார்கள். முன் இருக்கையில் இளம் பெற்றோர் அமர்ந்திருந்தார்கள். யன்னல் கரையில் அவர்களின் மகன் அமர்ந்திருந்தான். மகனைக் கொஞ்சுவதும், பின் கணவனை அணைப்பதுமாக அந்தப் பெண் நடந்து கொண்டாள். நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்று மனதிற்குள் நினைத்தவள், தனக்கும் இப்படி கணவன், குழந்தை என்று ஒரு அன்பான குடும்பம் அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டாள்.

விமானக் கதவுகள் மூடப்பட்டு, விமானி ‘சுள் எம்பேக்கர்’ என்று தனது பெயரை அறிமுகம் செய்து பயணிகளை வரவேற்க, விமானம் ஓடு பாதை நோக்கி மெல்ல நகர்ந்தது. ஆபத்து நேரத்தில் பிரயாணிகள் என்ன செய்ய வேண்டும் என்று ஒலி பரப்பு செய்ய, இரண்டு விமானப் பணிப் பெண்கள் அதற்கு விளக்கம் கொடுத்தக் கொண்டிருந்தார்கள்.

சிலர் அதைக் கவனிக்காது அசட்டை செய்தார்கள். விமானம் இப்போது வேகமாக ஓடுபாதையில் ஓடி மெல்ல மெல்ல மேலெழுந்தது. கொலின்ஸ் நேரத்தைப் பார்த்தாள் 3:26 என்று காட்டியது. மேகக்கூட்டங்களை நோக்கி விமானம் மேலெழுந்து செல்வது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. கெலின்ஸ் அந்த அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்.

பறவைகள் கூட்டமொன்று எதிர் பக்கம் பறந்து வந்து விமானத்தைக் கடந்து செல்வது இன்னும் அழகாக இருந்தது. 3200 அடி உயரத்தை விமானம் தொட்டபோது, திடீரென இடதுபக்க இயந்திரத்தில் புகை கிளம்புவதை அவள் அவதானித்தாள். தொடர்ந்து ஏதோ எரிந்து கருகும் மணம் வந்தது. உள்ளே சிகப்பு விளக்குகள் மின்னத் தொடங்கின.

பறவைகள் தாக்கியதில், இரண்டு பக்க இயந்திரங்களும் செயல் இழந்து விட்டதால், அவசரமாகத் தரை இறக்கவேண்டிய சூழ்நிலையில் விமானம் இருப்பதாக விமான ஓட்டியின் அறிவிப்பு வந்தது. கைக்கடிகாரத்தைப் பார்த்தாள் 3:27 என்று காட்டியது.

எல்லாமே சட்டென்று முடிந்து விட்ட உணர்வில் ஒரு கணம் உறைந்துபோன அவள், பிளாக் பெரியை எடுத்து மைக்கேலுக்கு ‘ஐ லவ் யூ’ என்ற ரெக்ஸ் செய்தியை அவசரமாக அனுப்பினாள்.

விமானத்தை அருகே உள்ள ‘ரெற்றபோறோ’ விமான நிலையத்தில் தரை இறக்கும்படி தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து அறிவிப்பு வந்தது. மேற்கொண்டு தொடர்பு கொள்ளமுடியாமல் தொடர்பு துண்டிக்கப்படவே விமானி தானாகவே முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

விமானத்தில் இருந்த 155 பிரயாணிகளையும் காப்பாற்ற வேண்டிய நிலையில், வேறு வழியில்லாமல் அருகே இருந்த கட்சன் நதியில் விமானத்தை இறக்கினார். விமானம் 150 மைல் வேகத்தில் பாதுகாப்பாக நதியில் இறக்கப்பட்டது. கொலின்ஸ் நேரத்தைப் பார்த்தாள் 3:.31 என்று நேரம் காட்டியது.

நதியில் மூழ்காமல் எவ்வளவு நேரத்திற்குத் தாக்குப் பிடிக்க முடியும்.

காலடியில் தண்ணிர் தேங்குவதைத் திடீரென கொலின்ஸ் உணர்ந்தாள். மளமளவென்று தண்ணீர் இடுப்பளவிற்கு வந்தது. இந்தக் குளிர் நீருக்குள் அரை மணிநேரத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்பதால் கொலின்ஸ் வெளியேற ஏதாவது வழி இருக்கிறதா என்று நிமிர்ந்து பாரத்தாள். முன்பக்கக் கதவு திறக்கப்பட்டு பிரயாணிகள் வெளியேறிக் கொண்டிருப்பது தெரிந்தது. தண்ணீர் மட்டம் உயரவே, அருகே உட்காரந்திருந்த குழந்தைகள் மூச்சுத் திணறத் தொடங்கினர்.

அவற்றில் ஒன்றைத் தூக்கிக் கொண்டு அவளும் முன்நோக்கி நகர்ந்தாள். வெளியே அவசரமாக வந்த உதவிப் படகுகள் அவர்களுக்காகக் காத்திருந்தன. பயணிகள் ஒவ்வொருவராக அவர்களின் உதவியோடு படகில் ஏற்றப்பட்டார்கள்.

நல்ல நிகழ்விற்குப் போகும்போது அபசகுணம் மாதிரி இந்த விபத்து ஏற்பட்டதில் அவள் மனம் கலங்கிப் போயிருந்தாள். இந்திய கலாச்சாரத்தில் மட்டுமல்ல, சோதிடத்திலும் அவள் நம்பிக்கை வைத்திருந்தாள். அவளது எதிர் காலம் குறித்த கவலை அவளை வாட்டத் தொடங்கியது.

தொடக்கமே இப்படி என்றால், முதற் சந்திப்பே தடைப்படுவதென்றால், ஒன்றாக இணைந்து இன்னும் எவ்வளவு காலம் இந்த வாழ்க்கையைத் தொடரமுடியும் என்ற கேள்வியும் அவளைச் சஞ்சலப்பட வைத்தது.

உதவிப் படகில் இருந்து அவள் வெளியே வருவதற்கு முயற்சி செய்த போது கைலாகு கொடுத்து அவளை வெளியே கொண்டு வந்தவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளால் இது கனவா நினைவா என்று நம்பமுடியாமல் இருந்தது.

‘மைக்கேல் நீயா?’ என்றவள், ஆச்சரியத்தில் மூழ்கினாள்.

‘நானேதான் மைடியர்!’ என்றான் மைக்கேல்.

‘இங்கே எப்படி?’ என்றாள் வியப்போடு.

‘உனக்கு ஒரு சந்தோஷ அதிர்ச்சி தரவேண்டும், உன்னோடு சேர்ந்து நானும் இந்த விமானத்தில் பயணிக்கவேண்டும் என்று தான் நான் திட்டம் போட்டு நியூயோர்க் வந்தேன். ஆனால் சற்றுத் தாமதமானதால் விமானம் புறப்பட்டுச் சென்று விட்டது. ஏமாற்றத்தோடு விமான நிலையத்தில் நின்றபோது எதிர்பாராத இந்த அதிர்ச்சியான செய்தி வந்தது.

நான் துடித்துப் போய்விட்டேன். என்ன செய்வது என்று தெரியாமல் நான் வேண்டாத கடவுளே இல்லை. அதனால்தான் எப்படியோ கெஞ்சி மன்றாடி இங்கே உதவி செய்ய வந்த இவர்களோடு படகில் ஏறி வந்துவிட்டேன்.’ என்று அவன் விளக்கம் தந்தான்.

‘நான் துடித்துப் போய்விட்டேன்’ என்று அவன் கண் கலங்கியபோது அவனது உண்மையான அன்பின் வெளிப்பாட்டை அவனது விழிகளில் அவள் கண்டாள். அடுத்த கணம் அதற்காகவே காத்திருந்தது போல,

‘மைக்கேல்..!’ என்று உணர்ச்சி வசப்பட்வளாய் அவனை இறுக அணைத்து அவனது பரந்த மார்பிலே முகம் புதைத்துக் கொண்டாள்.

வார்த்தைகள் இல்லாத அந்த அணைப்பில் காதலைச் சொல்ல காதலர் தினம்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லாமற் போயிற்று. அவனோ அவளை இதமாய் அரவணைத்து அவளது தலையை வருடியபடி ‘மீ ரூ லவ் யூ’ என்று அன்பாய் ஆறுதல் சொன்ன போது ஒரு தாய்ப்பறவையின் அரவணைப்பை அவள் உணர்ந்து கொண்டாள்.

இப்படியான ஒருவனின் அன்பிற்காக, அரவணைப்பிற்காகத்தான் அவள் இதுவரை காலமும் ஏங்கிக் கொண்டிருந்தாள் என்பதையும் அந்தக் கணமே புரிந்து கொண்டாள்.

இந்த விபத்தில் அவள் உயிர் தப்பிப் பிழைத்தாலும், அதன் பாதிப்பு அவள் மனதில் நிலைத்து நின்றாலும், காலமெல்லாம் தன்னை அன்போடு அரவணைத்துப் பாதுகாக்கக் கூடிய ஒருவனின் அன்பைப் புரிந்து கொள்ளத் தனக்கு இப்படி சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைந்தாள்.

அதனால் தான் காதல் ஒரு விபத்து என்று எங்கள் முன்னோர்கள் சொன்னார்களோ தெரியவில்லை, ஆனாலும் அதை அடைவதற்கு அவள் பெரியதொரு விலை கொடுத்திருந்தாள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R