1.கைவசமாகும் நட்சத்திரங்கள்!
காலடியில் அப்படி ஒளிர்ந்துகொண்டிருந்தது
ஒரு துண்டு ஜிகினாத்தாள்!
பரவசத்தோடு குனிந்து கையிலெடுத்த சிறுமியின் வயது
சில நூறாண்டுகள் இருக்கலாம்!
சிறு வளையலைக்கொண்டு ஒரு வட்டம் வரைந்து
தனக்கான நிலவை உருவாக்கிக்கொண்டவள்
அதைச் சுற்றி அதனினும் சிறிய சில பல அரைவட்டங்களைத்
தீட்டி மேகங்களாக்கி
அவற்றிலிருந்து கீழ்நோக்கி சில
சின்னச் சின்னக்கோடுகளைத் தாளின் அடிப்பகுதிவரை வரைய
நிறைய நிறைய மழைபொழிந்தது!
கொட்டும் மழையில் முழுவதுமாக நனைந்தவள்
கையிலிருந்த துண்டு ஜிகினாத்தாளை துணுக்குகளாய்க் கிழித்து
நாக்கில் ஒட்டிப் பின் தாளின் மேற்பக்கத்தில் பதித்து
’நட்சத்திரங்கள்’ என்றாள்!
’மழை பெய்யும்போது நட்சத்திரங்கள் வானில் ஒளிருமா’
என்ற கேள்வியைக் கேட்கநினைத்து
அவளை ஏறிட்டுப்பார்த்தபோது
கண்சிமிட்டியபடி ‘கேட்காதே’ என்று சைகை காட்டின
சிறுமியின் கண்களில் ஒளிர்ந்துகொண்டிருந்த நட்சத்திரங்கள்!
2. தொடுவானின் விரிபரிமாணங்கள்
‘சிறுமியாய் இருந்தபோது வரைந்ததெல்லாம் சரிதான்
வளர்ந்தபின்பும் இப்படியே செய்தால் எப்படி?
மழைபொழியும் வானில் நிலவும் நட்சத்திரமும் எப்படியிருக்கும்?’
என்று எரிச்சலும் எகத்தாளமுமாய் கேட்ட பெரியவர்களிடம்
சிரித்துக்கொண்டே சொல்வாள்
சில நூறாண்டுகள் வயதான சிறுமி:
‘நமக்குத் தெரிவதில்லை யென்பதால் நிலவும் நட்சத்திரங்களும்
அங்கேயில்லாமல் போய்விடுமா?’
அல்லது
”நான் வரைந்துள்ள வானம் உலகெங்கும் விரிந்திருக்கும்.
ஓரிடத்தில் மழைபொழிய வேறிடத்தில் நிலா காயும் தெரியுமா!”
அதைக் கேட்டுப் புன்னகைக்கும் பூனைக்குட்டியின் கண்களில்
மின்னிக்கொண்டிருப்பது விண்மீன்களா?
வீனஸா ஜூபிட்டரா மார்ஸா ப்ளூட்டோவா?
3. சிறுமியும் சின்ன விண்மீனும்!
தன்னைப்போல் குட்டியாக இருப்பதால்தான்
நட்சத்திரங்களை நேசிக்கிறாளோ சிறுமி?
வாமனாவதாரம் விசுவரூபம் இருவருக்குமே உண்டுதானே!
ஒற்றை நிலவை நேசிக்க ஓராயிரம்பேர்.
மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு துணுக்குதான் கைவசமாகும்.
நட்சத்திரமெனில் வேண்டுமட்டும் கைகளால் அள்ளிக்கொள்ளலாம்!
சின்ன விண்மீன் அவளுடைய செல்லப்பிராணி பப்பிக்குட்டியா?
சிஷ்யையா?
சமவயதுச் சினேகிதியா?
சீராட்டவொரு பாப்பாபொம்மையா?
அம்மையப்பனா?
அதியமான் நெல்லிக்கனியா?
அதிசயங்கள் நிகழ்த்தும் மந்திரக்கோலா?
அந்தர வீடு போலா?
ஒண்ணொண்ணாய் தெரிந்த ‘ரைம்’களைச் சொல்லிச்சொல்லி
அழைத்துப்பார்த்தாயிற்று.....
இன்னும் என்ன செய்தால் அவளிடம் வந்துசேரும் நட்சத்திரங்கள்?
தன்னை மறந்து அண்ணாந்திருந்த
சிறுமியின் கண்வெளியில் சுழன்றவாறிருக்கும் சில
அண்டங்கள்……
4. கண்ணில் தெரிவது வானம் மட்டுமல்ல
ஆரம்பத்தில் சிறுமியின் பிரார்த்தனை
யொரேயொரு மனன உச்சாடனமாய்த்தான் இருந்தது.
பள்ளிக்குச் செல்லும் வழியில் தெருவோரப் பிள்ளையார் கோயிலின் முன்
கைகூப்பி கண்மூடுவாள் கணநேரம்
வழியில் தேவாலயத்தைக் கடக்கும்போது
சின்ன விரல்களால் சிலுவைக்குறியிட்டுக்கொள்வாள்
இறைமை இன்னமும் முறையற்ற வழிகளில்
அறிமுகமாகியிராத பருவத்தில்
அந்தச் சிறுமியின் பிரார்த்தனையெல்லாம்
யொரேயொரு மனன உச்சாடனமாய்த்தான் இருந்தது:
வட்ட சதுர வடிவ நாணயங்களெல்லாம் நட்சத்திர வடிவம் பெறவேண்டும்.
முழுநம்பிக்கையோடு உள்ளங்கையை முகர்ந்து பார்த்தால் ஆப்பிள் மணக்கும் தானே!
அவளுக்கும் அப்படி ஆப்பிள் மணத்ததுண்டு.
ஆனால் சில்லறைநாணயங்கள் ஏனோ நட்சத்திரவடிவமாகவேயில்லை.
சிறுமிக்கு வருத்தமாயிருந்தது
தெருவோரம் எலும்பெல்லாம் தெரிய சுருண்டுகிடக்கும்
முதியவரின் கந்தல் விரிப்பில் ஒன்றிரண்டு நாணயங்கள் மட்டுமே
இருந்ததைக் கண்டபோது
அவள் துக்கம் இன்னும் அதிகமாகியது.
நாணயங்கள் நட்சத்திரங்களாவதைவிட
அந்தத் தாத்தாவால் வாங்கவியலாத ’ரொட்டி’ ’பன்’ இட்லியானால் எத்தனை நன்றாயிருக்கும்
என்று அனிச்சையாக அவள் மனதில் தோன்றிய நினைப்பில்
தன் பிரார்த்தனையில் சிறிது மாற்றம் செய்துகொண்டாள் சிறுமி.
5. சிறுமியிடம் நட்சத்திரம் சொன்ன ரகசியம்!
பட்டாம்பூச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கப்
பிடிக்கும் சிறுமிக்கு;
பிடிக்காது பிடிக்க.
வீட்டுப்பக்கமிருந்த சிறிய பூங்காவில்
சில பல கொத்துமலர்ச்செடிகள் கொடிகளைச்
சுற்றிச்சுற்றிப் பறக்கும் பட்டாம்பூச்சிகளுக்கு
A Z M T என்று
வாயாரப் பெயரிட்டு அழைப்பாள்!
’வரிசையாய்ச் சொல்லேன் சனியனே’ என்று
அம்மா வசைபாட
வாய்கொள்ளாமல் சிரிப்பு பெருகும்!
அனா ஆவன்னா கற்றுத்தரப்பட்ட நாட்களில்
அவளுக்கு மிகவும் பிடித்த நிறத்திலிருந்த பட்டாம்பூச்சிகளில்
ஒன்றை ’ஃ’ என்றும்
மற்றதை ’ழ’ என்றும் அழைத்து
அகமகிழ்ந்துபோனாள்!
’செடிகளையும் மலர்களையும் சுற்றிச்சுற்றிவந்து அவற்றிடம் என்ன சொல்லிக்கொண்டிருக்கின்றன பட்டாம்பூச்சிகள்
என்று அறிய ஆசைதான்’ என்றாலும்
அது முடியவில்லை.
அந்த ஏமாற்றத்தில் சிறுமியின் மலர்முகம் வாடுவதைக் கண்ட நட்சத்திரம்
’பட்டாம்பூச்சிகள் சொல்வதெல்லாம் இதுதான்’
என்று
அவள் காதுகளுக்கு் ரகசியமாக
இரு வாசகங்களைக் கற்றுத் தந்தது:
‘அத்திரி பாச்சா கொழுக்கட்டை’
‘திறந்திடு ஸிஸேம்’
அவள் அவற்றைச் சொல்லச்சொல்ல
பட்டாம்பூச்சிகள் மட்டுமல்ல,
அந்தக் கொத்துமலர்ச்செடிகளும்
அவளை நோக்கி மெல்ல மெல்ல
வர ஆரம்பிக்க _
அந்தப் பூங்கா ஒரு மாய அரங்காக மாறி
அதிலிருந்த மனிதர்களெல்லாம்
நட்சத்திரங்களாக மாறிவிட்டார்கள்!
6. நட்சத்திர நூலேணியில் சிறுமியின் நகர்வலம் !
பிள்ளையார் கதையைக் கேட்டதிலிருந்தே
தானும் பூமியை வலம் வர விரும்பினாள் சிறுமி.
பழத்திற்காக அல்ல என்று
அழுத்தமாகச் சொல்லிவிட்டாள்.
’பின் வேறெதற்கு”’ என்று கேட்டதற்கு
பித்துக்குளியைப் பார்ப்பதுபோல்
ஒரு பார்வை பார்த்தாள்.
மூஞ்சூறின் மேலல்லாமல்
ஒரு நட்சத்திரத்திலிருந்து தொங்கியபடி
மேலிருந்து கீழே பார்த்தபடியே
பயணமாகவேண்டும் என்றும்
அவள் தன் விருப்பத்தைத் தெரிவித்தபோது
என்ன செய்வது என்று புரியாமல்
ஒருகணம் திகைத்த நட்சத்திரம்
பின்
அவளறியாமல்
அவளுடைய கதைப்புத்தகத்திலிருந்த
சக நட்சத்திரத்திலிருந்து நூலேணியைக்
கடன்வாங்கிவந்து
ஒரு முனையைத் தன்னைச் சுற்றியும்
மறுமுனையை
அவளுடைய குட்டி இடுப்பைச் சுற்றியும்
கட்டிவிட்ட கனவில்
கீழே எங்கும் பார்க்காமல்
தன்னைத் தொங்கவிட்டுத்
தாங்கிப்பிடித்திருக்கும் நட்சத்திரத்தையே
பிரியத்தோடு பார்த்தவாறிருந்தாள்
சிறுமி!
7. சுத்தமான கழிப்பறையும் சிறுமியின் நட்சத்திரமும்
வகுப்பில் அமர்ந்துகொண்டிருந்தாள் சிறுமி
வெகுநேரமாக சிறுநீரை யடக்கிக்கொண்டிருப்பதால்
அடிவயிறு கனத்து
ஒரு கையறுநிலையில் கண்ணில் நீர் உறுத்துகிறது.
ஆசிரியையிடம் கேட்டால் அனுப்பமாட்டார் என்பதோடு
’பள்ளிக்கு வருவதற்கே இதற்குத்தானே’ என்று பரிகாசமாய்க் கூறுவார்.
பட்டென்று குட்டினாலும் குட்டுவார்.
பெருங்குரலெடுத்துச் சிரிப்பார்கள் மற்ற பிள்ளைக ளெல்லாம்.
அவமானம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத அந்த வயதில்
அதுவேயொரு பாரமாகி சிறுமியின் கழுத்தில் இறங்கி
அதைத் துவண்டு கீழ்நோக்கிக் குனியச்செய்யும்
அவரவருக்கு வரும்போது அவர்களும் அழுவார்கள்தான்.
ஆனால் ஆசிரியர் மட்டும் வேண்டும்போதெல்லாம்
கழிப்பறை என்று எழுதப்பட்டிருக்கும் அந்த அறைக்கு
விறுவிறுவெனப் போய்விடுவார் _
அவர்களுக்கு என்றிருக்கும் கழிப்பறைக்கு.
குழந்தைகளுடைய கழிப்பறையில் பரவியிருக்கும் துர்வாடை
அங்கே இருக்காது.
அங்கங்கே சிதறியிருக்காது கழிவுகளும்.
கையிலுள்ள கழியை வீசி வீசி ஆட்டிக்கொண்டே
'வேகமாய்ப் போய்விட்டு ஓட்டமாய்த் திரும்பிவரணும் சரியா'
என்று விரட்டும் ஆசிரியைக்கு பயந்து
தளர்கால்களால் ஓடிப்போய்
அங்கே சிந்தியிருக்கும் அழுக்குநீரில்
வழுக்கிவிழுந்து
அதற்கும் அடிவிழுந்து அழவேண்டியதில்லை…..
எப்படிக் கேட்பது என்று தெரியாமல் இருந்தவிடமே அமர்ந்திருந்த சிறுமியின் அரைப்பாவாடை
அடக்கமாட்டாமல் வெளியேற ஆரம்பித்த சிறுநீரில் நனைய
அச்சத்தில் உயிர்ச்சவமாகிவிடும் சிறுமி
உதடு பிதுங்க அழத்தொடங்கும் நேரம்
அவளையும் மீறி வந்து சேரும் _
நட்சத்திரம் தன்னையொத்த சிறுமியெனில்
அவளுக்கும் சிறுநீர் வருமா என்ற நினைப்பும்
அன்றி அப்பா சொன்னதுபோல்
அஃதொரு இடமெனில் அங்கே
சுத்தமான கழிப்பறை இருக்குமா
என்றறியும் முனைப்பும்.
8. சிறுமியின் சுயநலம்!
ஒவ்வொரு வியாழக்கிழமையும்
சாய்பாபா கோயில் வீதியில் அப்படியொரு கூட்டம்!.
ஆலயத்தினுள்ளும் வெளியும் அலைமோதும் மனிதர்களின்
கால்களெல்லாம் மனங்களாகக் காத்திருக்கும் என்றுமே தெளிவாகாத எதிர்பார்ப்பில்.
ஊரிலிருந்து வந்திருந்த உறவினர்களோடு போயிருந்த சிறுமிக்கு
தன்னைச் சுற்றிப் பரபரவென்று போய்க்கொண்டிருந்த மனிதர்களெல்லாம்
ஒரு பார்வைக்கு மிகத்தனியாய்ப் போய்க்கொண்டிருப்பது போலவும்
இன்னொரு தரம் பார்க்கையில் கைகளைப் பிணைத்துத் தட்டாமாலை சுற்றிக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது.
எந்தக் கோயிலானாலும் சரி செல்ஃபி எடுப்பதற்கென்று வருவோர் இருப்பார்கள்தான்.
அவர்களைத் தவிர்த்துப்பார்த்தால் மற்றவர்களின் முகங்கள் ஒவ்வொன்றும்
ஒரு மர்மக்குகைபோல் இருள்கவிந்து காணப்படும்.
சிறு நம்பிக்கையொளியேற்றத் தேவைப்படும் தீக்குச்சிதான் கடவுளோ?
தீப்பெட்டி என்று கடவுளுக்குச் செல்லப்பெயரிட்டிருந் தாள் சிறுமி.
’அந்தக் கால்களைத் தொட்டுப் பணிந்து பரிட்சையில் நல்ல மார்க் எடுக்கவேண்டுமென்று பிரார்த்தித்துக்கொள்’, என்றார்கள் கூட வந்தவர்கள்.
கண்களை இறுக மூடி கூப்பிய கரங்களோடு வாய்விட்டுப் பிரார்த்தித்தாள் சிறுமி:
”சாய்பாபா சாமீ – உன் கோயில் வாசலில் பிச்சைக்காரர்கள், கைகால் இல்லாதவர்கள் என்று யாருமே இருக்கக்கூடாது சாமீ”
அதிர்ந்து போனார்கள் அருகிலிருந்த சிலர்;
அதிசயமாய்ச் சிறுமியைப் பார்த்தார்கள் சிலர்.
”இப்படி பிறருக்காகப் பிரார்த்திக்கப் பெரிய மனது வேண்டும்” என்றார் ஒரு பெரியவர்.
”இனி உனக்காக வேண்டிக்கொள்” என்றவரைப் புரியாமல் பார்த்தாள் சிறுமி.
”இதுவரை எனக்காகத்தானே வேண்டிக்கொண்டேன் –
அவர்களையெல்லாம் பார்த்தால் எனக்கு அழுகை யழுகையாக வருகிறதே
அவர்கள் நினைவு வந்து அரிசிப்பொரி, ஐஸ்க்ரீமை சாப்பிடமுடியாமல் செய்துவிடுகிறதே –
அவர்களெல்லாம் நன்றாக இருந்தால்தானே நான் நிம்மதியாக இருக்கமுடியும்” என்ற சிறுமியின் சொற்கள் ஓர் அசரீரியாக ஒலிக்க_
ஆகாயத்திலிருந்து சட்டென இறங்கிவந்த
குட்டி நட்சத்திரங்கள்
அவள் தலையைச் சுற்றி ஒளிவட்டமிட்டன!
9. அன்பளிப்பாய் சில நட்சத்திரங்கள்!
”அம்மா, உடனடியாக எனக்கு ஒரு ‘ஐடெக்ஸ் மை’ வாங்கித்தா” என்று அடம்பிடித்தாள் சிறுமி.
”அதுதான் இருக்கிறதே” என்றாள் தாய்.
”அதை நீயும் போட்டுக்கொள்கிறாயே –
எனக்கே எனக்கென்று ஒரு மை வேண்டும்”.
”ஏன்?”
”உன் மை தான் உலகத்திலேயே உயர்ந்தது என்றார் எங்கள் டீச்சர்
என் மை என்று எதுவுமில்லையே"
என ஏமாற்றத்துடன் கூறினாள் சிறுமி.
புன்னகையுடன் கூறினாள் தாய்:
அது ’உன் மை’ இல்லை. உண்மை.”
“அப்படியென்றால்?”
என்ன சொல்ல என்று புரியாமல் கணநேரம் திகைத்துநின்றாள் தாய்.
ஹா! ‘வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும் தீமை இலாத சொலல்!’
என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே – அதுவா!
நான் தினமும் போகும் பஸ்ஸில் எழுதப்பட்டிருக்கும்.
கண்டக்டர் அண்ணா எங்களுக்கெல்லாம் அதற்கு அர்த்தம் சொல்லியிருக்கிறார்,
அருமையான கதைகள் சொல்லியிருக்கிறார் தெரியுமா!” என்ற சிறுமியை
அரவணைத்துக்கொண்ட தாய்
”இரண்டு மூன்று நட்சத்திரங்களைப் பறித்து என் அன்பளிப்பாய் அவருக்குத் தந்துவிடேன்!’ என்று இறைஞ்சும் குரலில் கூற_
வியப்போடு தலையசைத்தவாறு விளையாட ஓடிவிட்டாள் சிறுமி!
10. கவிஞர்கள் நட்சத்திரங்களைப் பரிசளிக்கப் பிறந்தவர்கள்!
இத்தனை காலைவேளையில் யார் கதவைத் தட்டுவது என்று
கவிஞர் யூமா வாசுகி தூக்கக்கலக்கத்துடன் எழுந்துவந்து
கதவைத் திறந்தார்.
அன்று பூத்த மலராய் அதிகாலைச் சூரியக் கதிராய்
ஒரு சிறுமி நின்றுகொண்டிருந்தாள்.
”என் அப்பா ஒரு பள்ளிக்கூடம் திறந்திருக்கிறார்.
பிள்ளைகளை அடிக்காத, அவமானப்படுத்தாத நல்ல பள்ளிக்கூடம்.
அதை நீங்கள்தான் திறந்துவைக்கவேண்டுமென்று சொல்லிக்கொண்டேயிருந்தார்.
அதனால்தான் அவருக்குத் தெரியாமல் உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறேன் – உங்களைக்
கையோடு கூட்டிச்செல்ல” என்று விவரம் தெரிவித்தாள்.
”இதோ இறக்கைகள் – சீக்கிரம் மாட்டிக்கொள்ளுங்கள்” என்று சின்னவாயால்
சிறுமி இட்ட அன்புக்கட்டளையைத் தட்டமுடியுமா என்ன?
இருவருமாக இறங்கக்கண்ட அந்தத் தந்தை முகம் தழுதழுத்துப்போனது.
”என்னைத் தெரிகிறதா? உங்கள் ’சாத்தானும் சிறுமியும்’ கவிதைத்தொகுப்பில்
மதுக்கடையில் வேலைபார்த்த சிறுவன் நான் –
என் சட்டைப்பையிலிருந்து உருண்ட கோலிகுண்டுகள் பற்றி
அத்தனை கரிசனத்தோடு எழுதியிருப்பீர்களே – நினைவிருக்கிறதா?
’இந்தத் தரமான இலவசப்பள்ளியை நீங்களே திறந்துவைக்கத் தகுதியானவர்!”
என்று தன் சின்ன மகளை நன்றியுடன் பார்த்தார் தந்தை.
ஏழைக் கவிஞனிடம் மாத முதலிலேயேகூட
அப்படி என்ன பணமிருக்கப்போகிறது?
’ஆனாலும் இந்த நல்ல காரியத்தைப் பாராட்டி
ஏதேனும் பரிசளிக்காவிட்டால் எப்படி?’
என்று கவி மனதிலோடிய எண்ணத்தைப் படித்தவளாய் சிறுமி
யாருமறியாமல் ரகசியமாய்
கவிஞரின் சட்டைப்பைக்குள் போட்டாள் _
முதல்நாள் பின்னிரவில்
ஆகாயத்தை நோக்கி நீட்டிய கை
நீண்டுகொண்டேபோய் திரட்டியெடுத்துவந்த
நட்சத்திரங்களை!
- லதா ராமகிருஷ்ணன் -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.