மனக்குறள் 16: வேந்தரும் விளங்கும் பாடநூலும்
எண்ணங் கருகி இதயம் மடிசோர்ந்து
கண்ணில் உதிக்கும் கவி!
வேந்தனார் தன்னின் மிகுதமிழ் வண்ணமே
காந்தளாய்ப் பூக்கும் கழல் !
பிறந்த பொழுதிலே பெற்றவள் விட்டு
மடிந்தனள் வேந்தன் மகர்க்கு !
பேணி வளர்த்திட்ட பேரனார் நன்றியைக்
காணிக்கை யிட்டநூல் காழ் !
[ காழ்-வைரம், முத்துவடம், விதை ]
தெய்வத் தமிழை தினம்வேந்தன் கற்றஇடம்
ஐயனார் கோவிலடி ஆல்!
பண்டிதர் வித்துவான் பாடமும் சித்தாந்தங்;
கண்டு மகிழ்ந்தார் கனதி!
இராமாய ணத்தும் இதிகாசங் கண்டார்
புராணங்க ளோடும் பொழிப்பு!
நூற்றாண்டு இந்நாள் நிகழ்வாக வேந்தனார்
போற்றும் இளஞ்சேயான் பிள்ளை!
ஈழத்தே கற்ற இயலும் கவியோடும்
மேழியென நின்றார் மொழி!
தாமோ தரம்பிள்;ளை சோமசுந் தரனாரும்
ஈழப் பெருங்கவிஞர் என்ப!
மனக்குறள்-17: சி.வை.யாரும் விபுலானந்தரும்
அதியுயர் தாமோ தரம்பிள்ளை யாரே
நிதியென நூல்காத்தார் நேர்!
தமிழின் அருநூல்கள் தற்காத்த முதல்வர்
அமிழ்தே சிவையார் அறி!
மீட்டெடுத்துக் காத்து வேரோடு ஒப்பிட்டுக்
கோர்த்தாரே தொல்நூல்கள் கொள்!
சட்டம் பயின்றார் தகுவாய் வழக்குரைத்து
எட்டினார் நீதிபதி என்க!
ஒன்பது நூலெழுதி நோற்றார் எனநின்றார்
அன்பர்தா மோதரனார் ஆர்!
தமிழ்நாடு கண்ட தகையாரே ஈழ
விபுலானந் தப்பெரி யார்!
பாரதியார் பாடல்கள் பார்த்துத் தெளியவைத்து
ஊரவர்க் கிட்டார் உவந்து!
தொல்காப் பியமின்;று நோற்பார் விபுலாரின்
சொல்லேர் இளங்கோவ னார்!
ஆவணத் தோடான ஆக்கம் பதிவாக்கி
காவியம் செய்தாரே காண்!
தாமோ தரனார் தகைவிபு லானந்தர்
கோமே தகமீழக் கோவில்!
மனக்குறள் 18: யானும் கனடா இலக்கியமும்
தம்மைப் புகழும் தமிழ்போல் எனையேநான்
இம்மை யுரைத்தேன் இவை!
நாற்பத்தி யேழுமாசி நாளாம் இருபதொன்று
சாற்றும் பிறந்தநாள் சாற்று!
கல்லைப் பொருத்திக் கவியில் எறிந்தாற்போல்
தில்லைச் சிவன்செய்தான் சீர்!
திருக்குறள் மாநாடு தேர்ந்துகவி யார்க்க
இருபதில் தந்தான் இடம்!
பேரார் அறிஞரொடும் பூக்கும் எழுத்தரொடும்
கார்போல் அசைந்தேன் கனடா!
மொன்றியால் மேற்தொரன்றோ முத்து விழாக்;களென
வென்றேன் பதிவுதளம் மேவ!
பேரா சிரியர், பெருங்கவி நாயகரும்
ஆனந்தன் கோதையென ஆக!
பால சிவகடாட்சம் பண்பார் சிவநேசன்
சாலும் திருஎன்கச் சார்வர் !
நான்கு இலட்சம் நனிதமிழர் நாயகமும்
மேன்மையுறக் கண்டேன் விருட்சம் !
இலக்கியத்தும் ஏரெழுத்தும் இன்பப் பெருக்காய்
மலர்ந்தவரைக் கண்டேன் மடை!
Rajalingam Velauthar <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Aug. 2 at 10:08 p.m.