அதுவரை பக்கத்திலிருந்த நண்பன் முருகவேல் சிறிதுநேரத்திற்கு முன்னர்தான் டான் தொலைக்காட்சியில் செய்தி பார்க்கவென உள்ளே எழுந்துபோனான். அவனுக்குமே அந்த உந்துதல் எழுந்தது. பின் ஏதோவொரு சலிப்பில் பேசாமல் இருந்துகொண்டான்.
பகலிலே அந்த இடத்தில் தோன்றியிருக்கக்கூடிய அவசங்கள், வெளிச்சம் படராது இருள் விழுந்த முற்றத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்த அவனிடத்தில் அப்போது எழுந்திருக்கவில்லை. உருவத்தை இருட்டில் கரைத்துவிட்டு இருப்பதுபோல் ஓர் நிறைவு.
அவன் வானெறிந்த நட்சத்திரங்களும், அதன் மேலலைந்த மேகங்களும் கவனமின்றிக் கண்டபடி இருந்தான். திடீரென கோவில் வளவு மரக்கூடலிலிருந்து ஒரு சாக்குருவி அலறியடித்துப் பறந்தது. அவனது உடம்பு அந்தத் திடீர் சத்தத்தில் லேசாக ஆடியது. கடந்த சில தினங்களாக அவ்வாறுதான் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு இருக்கின்ற ஒரு ஆத்துமம் அந்தமாதிரித்தான் எந்தவொரு திடீர்ச் சத்தத்திலும் சந்தடியிலும் திடுக்காட்டம் அடையுமோ?
கீழ் வான் மூலையிருளினுள் சாக்குருவியின் கதறல் போய் மறைய, சூழல் அவதானத்துக்கு வந்தது. சிறிதுநேரத்தில் தெருவில் நிலந்தீற்றிய காலடிச் சத்தம் அவன் கேட்டான். அது மெலிந்து மெலிந்து வந்து வேலிக்கு வெளியே ஓரிடத்தில் சடுதியாய் நின்றதும் தெரிந்தது.
வேலியின் கீழ்ப் பகுதியிலுள்ள முட்கம்பி வரிகளுக்கு மேலாக பக்கப்பாட்டில் தகரங்கள் அடித்திருந்தன. போன மாரியின் கடும் காற்றுக்கு அதில் நட்டிருந்த காட்டுக்கட்டை சரிந்து தகர இணைப்பு ஊடு விட்டிருந்த இடத்தில்தான் காலடி அரவம் அடங்கியிருந்தது. அவனுக்கு எழுந்து உள்ளே போய்விடுகிற அவதி. ஆனாலும் இருளில் இன்னும் நம்பிக்கைவைத்து அவன் விநாடிகளை விழுங்கிக்கொண்டிருந்தான்.
அந்த அரவம் மறுபடி சத்தமாய் விரிந்தெழாததைக்கொண்டு ஆகிருதி இன்னுமே அந்த இடத்தில் நிலைத்திருப்பதாக அவன் நினைத்தான். அந்த உருவத்தின் கண்கள்கூட அந்த நீக்கலினூடே தன்மேல் நிலைத்திருப்பதாக ஒரு கணம் தோன்றிற்று. கடந்த சில நாள்களின் பகல்கள் கவனத்தில் விழுத்தியிருந்த சில முகங்களை அவன் நினைவுக்குக் கொண்டுவர முயன்றபோது சில முகங்கள் கலவரத்துடன், சில முகங்கள் எரிச்சலுடன், இன்னும் சில எந்த உணர்வுமற்ற வெறுமையுடனென வரச் செய்தன. ஆனால் எந்த முகத்தை அந்த உருவத்தில் பொருத்தி அவன் அடையாளம் காண்பது? இல்லை, கண்டுதான் என்ன செய்துவிடப் போகிறான்? தன்னிருப்பை அங்கே ஒழித்து வைத்திருப்பவனால், ‘ஆரங்க நிக்கிற’தென உறுக்கிவிடவா முடியும்?
ஒரு எட்டு மணியின் முன்னிரவுக் காலடிச் சத்தமும் பின் அதுகொண்ட மௌனமும் ஒருவரில் அந்தளவு அச்சத்தைக் கிளர்த்துவது சாதாரண சூழ்நிலைமைகளில் எங்கேயும் சாத்தியமில்லை. முன்பு யுத்த காலத்தில் அதிலொரு திகில் இருந்திருக்கலாம். அவ்வாறு இருந்ததை அந்யோன்யமாய் அந்த வீடு வந்துசெல்லும் அக்கம்பக்கத்தவர் அவனுக்குச் சொல்லியிருக்கிறார்கள். சந்திராகூட சொல்லியிருக்கிறாள். அவளது அனுபவங்கள் அவர்களதைவிட இன்னும் பயங்கரமானவை.
அவ்வூர்க்காரனாக இல்லாததால் அவனுக்கு அந்த அனுபவங்களில்லை. அப்போது அந்த நாட்டவனாகக்கூட அவன் இல்லை. என்ன பாதகம் அதனால் நேர்ந்துவிடக்கூடும்? அவன் பாஸ்போர்ட் வைத்திருக்கிறான்; மூன்று மாதங்களில் ஒரு மாதம் கழிந்த விசா அதில் இருக்கிறது. ஆனாலும் அவை எதுவுமே இப்போது முக்கியமில்லையென நிலைமை மாறியிருக்கிறது. பிரச்னை அங்கே அவனது இருப்புப்பற்றியதாக மட்டுமே இருக்கிறது.
தன் பயணத்தில் இலங்கையின் வடபகுதியிலுள்ள அந்த சின்னக் கிராமத்திற்கு வருவதான எந்தத் திட்டமும் அவனிடத்தில் இருந்திருக்கவில்லை. அவன் மிகவும் வசதியாக யாழ் நகர எல்லைக்குள் ஒரு சிறிய வாடகை வீட்டில் தங்கி, திறமான கடையொன்றிலே சாப்பிட்டுக்கொண்டு கொழும்பென்றும் திருகோணமலையென்றும் மட்டக்கிளப்பென்றும் கிளிநொச்சியென்றும் அலைந்தபடி வசதியாகவும் சந்தோஷமாகவும்தான் கடந்த ஒரு மாதத்தைக் கடத்தினான். அரியாலையில் அண்ணன் வீட்டின் புதுப்பித்தல் வேலைகள் முடிந்துவிட்டால் திட்டமிட்டபடி ஏப்ரல் 19இல் அவன் நாடு திரும்பிவிடுவான்.
ஆனால் எதிர்பார்த்திராத நிலைமையொன்று நாட்டிலே சடுதியில் வந்து விழுந்துவிட்டது. அவன் கனடாவிலிருந்து ஜனவரி 2020இல் புறப்பட்டபோது தொற்று நோய் டிசம்பர் 2019 அளவில் சீனாவிலேதான் பரவத் துவங்கியிருந்தது. மரணங்கள் அங்கேதான் விழுந்துகொண்டிருந்தன. ஆனால் அப்போது ஆசியாவே ஒரு பதகளிப்பில் இருந்தது. எல்லாமும் எல்லாரும் ஒரு முடக்கத்தில் ஒடுங்கிக் கிடக்கும்படியான அவதியாக நிலைமை மாறிவிட்டது. அது அவனது சகல இயக்கங்களையும் குலைத்துப்போட்டது. ஒரு திட்டமின்றி தீவடங்கப் பரந்து திரிந்தவன் ஒரேயடியாக முடங்கிப்போனான். அத்தனை மனிதர்களைக் கொண்டிருந்த நல்லூர் பூமி உற்றம் சுற்றமென யாருமில்லாததால் அவனுக்கு தரிசு பூமியாய் மாறிவிட்டது. அறிந்தவர் தெரிந்தவர் இல்லாத இடத்தில் அந்தப் புதிய நிலைமை தன்னை திசையறியாப் பாலைவனத்தில் தூக்கி வீசிவிட்டிருந்ததாய் உணர்ந்தான்.
உடனேயே கொழும்பு போய் அடுத்த விமானத்தைப் பிடித்து அவன் கனடா சென்றுவிடலாம். ஆனால் அண்ணன் சொல்லிவிட்ட வேலையை முடிக்க இன்னும் குறைந்தது ஒரு மாதமாவது ஆகும்போலிருந்தது. அண்ணன் தந்த காசில் ரிக்கற் போட்டு வந்தவனுக்கு அது அவசியமானது. அவன் அண்ணனிடம் பட்டுள்ள வேறு கடப்பாடுகளும்கூட இருந்தன. அவன் அண்ணனிடம் அபிப்பிராயம் கேட்டாவது மேல்நடவடிக்கை எடுக்கவேண்டும்.
உடனடியாக கனடாவுக்கு போனெடுத்தான். அண்ணிதான் பதிலளித்தாள். ‘ஒரு கிழமை முந்தி வந்திருக்கலாம். இப்ப இஞ்சயும் அது பரவத் துவங்கியிட்டுது, மூர்த்தி. ரொறன்ரோவில முதல் சாவும் விழுந்திட்டுது. இலங்கை தீவாயிருக்கிறதால அங்க பாதுகாப்பாய் இருக்குமெண்டு எல்லாரும் கதைக்கினம்’ என்றாள் அண்ணி.
‘தீவாயிருக்கிற பாதுகாப்பு இனி இஞ்சயில்லை, அண்ணி. இத்தாலியிலயிருந்து வந்த ரூறிஸ்ரால இஞ்சயும் நோய் பரவத் துவங்கியிட்டுது.’
‘எதுக்கும் கவனமாயிரு. அண்ணை இப்பதான் கடைக்குப் போயிருக்கு, வந்தோடன எடுக்கச் சொல்லுறன்…’
அண்ணனும் போனெடுத்து அந்தப் பதிலையே சொன்னான். ‘அவசரப்படாத. எப்பிடியும் இஞ்ச இருக்கிறதவிட அங்க பாதகாப்பாய்த்தான் இருக்குமெண்டு நினைக்கிறன். இஞ்ச பள்ளிக்குடமெல்லாம் லீவு விட்டிட்டாங்கள்; பக்டரியெல்லாம் பூட்டு. நான் இப்ப ஒரு கிழமையாய் வீட்டிலதான் நிக்கிறன். அண்ணி வீட்டிலயிருந்து வேலைசெய்யிறா. கொஞ்சம் பொறுத்துக்கொள், பாத்துச் செய்யலாம்.’
‘பாத்துச் செய்யலாமெண்டு அண்ணன் சொல்லியிட்டா, பாத்துத்தான் செய்யவேணும்.’ அவன் காத்திருக்கத் தீர்மானித்து அன்றைய இரவைக் கழித்துவிட்டு காலையில் எழும்ப தகவல் தெரிந்தது, அங்கே பள்ளிகளுக்கு மறு அறிவித்தல்வரை விடுமுறை விட்டிருப்பதாக. பல்கலைக் கழகங்களும் இரண்டு வாரங்களுக்குப் பூட்டப்படுவதாக யாரோ சொன்னார்கள். பலசரக்குக் கடைகளில் கூடிய கூட்டமே ஓரவதியின் முன்னறிவிப்பாய் கண்களில் விழத் துவங்கிவிட்டது. சிலர் அது கண்டு கேலியாய்ச் சிரித்தார்கள்; பின்னர் அவர்களுமே கையுறை முகக் கவசங்கள் இல்லாமல் ஒரு வெக்கறைச் சிரிப்போடு கடை வாசல்களில் மாவும் சீனியும் அரிசியும் பருப்பும் வாங்க கியூவில் நின்றார்கள்.
அந்தப் பரபரப்பில் ஆழ்ந்துபோயிருக்கையில் அதை அதிகரிக்கிறமாதிரி அன்று மாலை தகவல் படர்ந்தது, மறுநாளிலிருந்து இரண்டு நாட்களுக்கு அரச பஸ்கள் ஓடாவென. நிலைமை மெல்ல மெல்ல இறுகுவதாக அவனுக்குத் தெரிந்தது.
அன்று சரியாக மார்ச் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை. அன்றைய காலையில் செய்தி பரவியது, மாலை ஆறு மணியிலிருந்து திங்கள் காலைவரை நாடளாவிய பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக.
அவன் கதிகலங்கிப்போனான். அவன் வாடகைக்கெடுத்த வீட்டிலேயே தங்கிக்கொள்ளலாம்தான். ஆளரவம் ஒடுங்கப்போகும் ஊரில் தனிமைக் குகையாக வீடு மாறிவிடுமென்றாலும் சமாளித்துக்கொள்ளலாம். சாப்பாட்டிற்குத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. அக்கம் பக்கத்தில் கண்ட பழக்கத்தில் இரண்டு வேளைச் சாப்பாட்டிற்கு அருள் சுரக்கும் முகங்களேதாவது தென்படுகின்றனவாவென கணேஷானந்தமூர்த்தி அலையாத தெருவில்லை. விபூதி நிறைந்த நெற்றியும் அருள் சுரந்த முகமுமாயிருந்த இருவரைக் கேட்டபோது அவர்கள் பதிலைச் சத்தமாய்ச் சிரித்தார்கள். இல்லையென்ற மறுதலிப்பையும் விட மிகக் கொடுமையாகவிருந்தது அந்தச் சிரிப்புகள்.
அந்த நிலைமையில்தான் தனியார் பஸ்கள் கிளம்புவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவும், ஊரடங்கு விழுவதற்கு இரண்டு மணத்தியாலங்களுக்கு முன்னருமாக பழைய நண்பனொருவனை நல்லூர் கந்தசாமி கோவிலெதிரில் சந்திக்கிற அதிர்ஷ்டம் அவனுக்கு நேர்ந்தது. அவன் அந்தவூர்க்காரனில்லை. அவனும் பஸ்ஸெடுத்துத்தான் வீடு போகவேண்டியவனாய் இருந்தான். அந்த அவசரத்துள்ளும் நண்பன் நின்றான்.
கணேஷானந்தமூர்த்திக்கு கண்கலங்கி வந்தது. அவன் தன் அவலம் சொல்லி நண்பனிடமாயினும் அபயம் கேட்கிறான். அப்படியொரு நிலைமை அவனுக்கு எப்போது வாய்த்திருந்தது? நண்பன் இதழ்களால் சிரித்தான். பிறகு அவனைத் தன் வீட்டில் தங்கலாமெனக் கூறி சூட்கோஸை எடுத்துவரச் சொன்னான்.
மனிதர்களைவிட்டு மனிதர்களை விலகியிருக்கச் சொன்ன காலமாயிருந்தது அது. யுத்தகாலத்தைவிடவுமே கொடுமையான காலம். இருந்தும் தம் பழைய நட்பைப் பாராட்டி ஒருவரை வீட்டில் வைத்து யாராவது ஆதரிப்பாரென அவனால் நம்பக்கூட முடியவில்லை. வீட்டில் அவனை தன் மனைவிக்கு நண்பன் அறிமுகப்படுத்தியபோது அவளும் அவன்போலவே இன்முறுவல் காட்டினாள்.
ஆயினும் அங்கேயும் அவதியும் பயமும் நேர்வது சூழ்நிலைக் கனதியின் விளைவாகிவிட்டது.
அந்தளவு அவலம் படாமல் அவற்றையெல்லாம் தாண்டிச்செல்ல அவனால் முடிந்திருக்கும். கொஞ்சம் சூட்சுமமாக அந்த நிலைமையை அவன் அணுகியிருக்கவேண்டும். அண்ணனின் பதிலுக்கு காத்திராமல் பயணத் திகதியை மாற்றிக்கொண்டு அவன் கொழும்பு சென்று விமானம் எடுத்திருந்தால் அவன் இப்போது கனடாவில் இருந்துகொண்டிருப்பான். அயலவன் எட்டிப்பார்ப்பானென அஞ்சவேண்டி இருந்திராது. காலடிச் சத்தம் கேட்கிறதென கலங்கவேண்டி நேர்ந்திராது.
இனி அனுபவிக்க வேண்டியதுதான்; ஓடிவிட முடியாது. படுக்க பாய் இருக்கிறது; இரண்டு வேளைச் சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் போகாது; சமாளிக்க வேண்டியதுதான் என எண்ணிக்கொண்டான். இருந்தும் மேலே பிரச்னை இருந்தது. ஓடிவிட முடியாது என்கிறபோதுதானே தரித்திருப்பதில் அந்தரம் பிறக்கிறது! ஆயினும் தரித்திருக்கும் அந்தரம் மட்டுமெனில் அவன் தாங்குவான். இது அதுவல்ல. அதுபோன்ற எதுவும்கூட அல்ல. அது அவனது அடையாளம் சார்ந்தது. அது முதலாம் நாளில் இரண்டாம் நாளிலென மெல்லமெல்லமாகத்தான் விஸ்வரூபமெடுத்தது. ஆனாலும் எடுத்துவிட்டது.
யுத்த காலத்தின் பின் அங்கே வந்த ஒவ்வொரு சமயத்திலும் அந்த நாட்டில் அவன் வெளிநாட்டுப் பிரஜையென்கிற அத்தனை பெருமிதங்களையும் சுமந்தபடி அலைந்து திரிந்தவன். கனடிய பாஸ்போர்ட் அவனது அடையாளம் மட்டுமில்லை, அது அங்கே எழுதப்படாத ஓர் அதிகாரமும் தந்தது. ஆனால் இன்று ஊரவனுக்குள்ள மதிப்பு அந்த கனடிய பாஸ்போர்ட்காரனுக்கு இருக்கவில்லை. அவன் அங்கே ஏன் வந்தானென்று சிலராவது நினைக்கும், எரிச்சல்படும் நிலைமையிலேயே இருந்துகொண்டிருக்கிறான். அது அவனுக்கு பயத்தை அளித்தது. திடீர்ச் சத்தங்களில், சலனங்களில் அவனுக்கு திடுக்காட்டம் பிறந்தது. ‘நான் சுவிஸிலிருந்து வந்த மதபோதகரின் அரியாலைக் கூட்டத்திற்குப் போகவில்லை; நோய்த் தொற்றுக் கொண்டவனில்லை’யென அலறிவிடுகிற அந்தரம் சிலவேளை கொண்டுவிடுகிறான். நித்திரையில் அவன் வாய்பிதற்றுவதாக அவனது நண்பன் சொன்னான். ஒருவேளை அந்த வார்த்தைகளைக்கூட அவன் பிதற்றியிருக்க முடியும். அவன் தானாக இல்லாத சீணம் அடைந்தாகிவிட்டது.
அதனால்தான் தெருவிலெழுந்த அந்த தீற்றல் சத்தமும், அது சடுதியில் ஓரிடத்திலே தங்கிக்கொண்டதும் அவனை அந்தரித்துப்போக வைத்தன. அவனை இருட்டை ஊடுருவி நோக்கியதாய்த் தோன்றிய அந்தக் கண்களினுள்ளே திகைந்து திகைந்து வெளிக் கிளம்பிக்கொண்டிருந்த ஒற்றை உணர்வான வெறுப்பினையும் அவன் கண்டான். அந்த வெறுப்பில், நீயேன் என்னூரில் தங்கியுள்ளாய் என்பதான ஒரு கேள்வியும்கூட தொக்கிநிற்பதாய்த் தெரிந்தது. இனி அதுவே மெல்ல மெல்ல ஒரு கோபத்தின் உக்கிரமாய் மாறி அனல் பிறப்பிக்கும். பொறி சிதறிய அந்த அனலில் அவன் தேகம் வெந்தழியும்.
அதுவொரு அபூர்வமான, மொத்த ஊருமே அவதி கொண்டிருக்கிற தருணம். அதுபோல் அந்த நாடும் ஒரு அவலத்தை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறது. உலகமே அவ்வனுபவத்தில் திணறிக்கொண்டு இருக்கிறது. அவனறிந்து உலக வரலாற்றில் அதுபோல் பதினான்காம் நூற்றாண்டிலே ‘பிளாக் டெத்’ என்ற பற்றீரியாத் தாக்குதல் நோய் இத்தாலியில் பரந்தது. பல லட்சம் மக்களைக் காவு கொண்டது. ‘சில்க் றூட்’ எனவழைக்கப்பட்ட கிழக்கின் பழைய வர்த்தக வழி ஒன்றினூடாக அது மொங்கோலியாவிலிருந்து பரந்ததாக வரலாறு சொல்கிறது. இதுவோ சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்து பரவியது. ஆனால் அதிவேகமாகப் பரவியது. பரவப்போகிறது என எண்ணுவதன் முன்னால் பல தேசங்களின் வாசல் கடந்துவிட்டிருந்த வைரஸ் நோயது.
ஆரம்பத்தில் சீனாவில் நோய் பரவிக்கொண்டிருக்கிறது என்றார்கள். அப்போதுதான் அவன் கனடாவிலிருந்து இந்தியாவுக்கு விமானமேறினான். இந்தியாவில் அந்த நோயை முதன்முதலில் சந்தித்த மாநிலம் கேரளாவாக இருந்தது. ஸ்பெயினிலே சாவுகள் விழுகின்றதாய்த் தகவல்கள் வெளிவந்தபோதே கேரளாவிலும் மரணம் தொடங்கிவிட்டதை சன் தொலைக்காட்சிச் செய்தி அறிவித்தது. கேரளா எங்கே, சென்னை எங்கே? அவனுக்கு அச்சம்கொள்ளவேண்டி இருக்கவில்லை. அவன் அங்கிருந்து திட்டப்பிரகாரமே சென்னையிலிருந்து கொழும்புக்கு விமானமேறினான்.
தடுப்பு மருந்து மட்டுமில்லை, அந்த நோயைக் குணமாக்கும் மருந்துமே இருக்கவில்லையென்ற பீதி மக்களை ஒரு புகாராய் மூடியிருந்தது. யாரையும் அணுகாதே, யார் தொட்ட எதையுமே தொடாதே, அவ்வப்போது இருபது விநாடிகளுக்கு கைகளை சவர்க்காரம்கொண்டு கழுவிக்கொள், மொத்தத்தில் வீட்டைவிட்டு வெளியே வராதிருப்பதே பாதுகாப்பென தகவலூடகங்கள் மணிக்கு மணி அறிவிப்புகளை உதிர்த்துக்கொண்டிருந்தன. பயங்களின் கதைகள் நிஜங்களென சம்பவங்கள் ருசுப்பித்துக்கொண்டிருந்தன. அந்தளவில் உலகின் சில லட்சம் மக்களை அந்நோய் காவுகொண்டிருந்தது.
இலங்கையின் தீவான நிலைமையின் பாதுகாப்புக் கவசம் எப்படிச் சிதறியது? எல்லோருக்கும் ஆச்சரியம். இத்தாலிய உல்லாசப் பயணிகள் காரணமென சில அவதானங்கள் தெரிவித்தன. சுவிஸ் மதபோதகரின் பொதுமக்களுடனான அரியாலைச் சந்திப்பு இன்னொரு காரணமென வேறுசில அவதானிப்புகள் அறிவித்தன. மொத்தத்தில் தீவடங்கலும் நோய்த் தொற்றின் அடையாளங்கள். ஆஸ்பத்திரிகள் நிறைந்தன. நோய்த் தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தல் முகாங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். வீடுகள் அடங்கிக் கிடக்க, நாட்டின் வெளியில் ஒரே அல்லோலகல்லோலம். அதனால் ஒற்றை முடிவாக ‘வெளியிலிருந்து வந்திருக்கும் உல்லாசப் பயணிகள் நோய்க் காவிகள்’ என்ற வெகுஜன அபிப்பிராயம் உருவாயிற்று. அது ஒரு பூதத்தினைப்போல திரிந்துகொண்டிருந்தது.
அந்த அந்தரம் ஒருவரிலிருந்து ஒருவரை ஒதுங்கிப்போகச் செய்துகொண்டிருந்தது. ஒதுங்குவது எரிச்சலைத் தந்தது. அது இறுகியிறுகி கோபமாக வெடித்தது. என்றாற்போல் என்ன செய்துவிட முடியும்? அது உள்ளடங்கி கொதிநிலையடைந்தது. அந்த அவதிக்குள் அவனடங்கியது துரதிர்ஷ்டம். அவனுக்கு அது வடிவங்கொண்ட விதம் தெரியும். அதனால்தான் ஆமையைப்போல ஐம்பொறிகளும் அடக்கி அந்த வீட்டுக்குள் தன்னிருப்பை அவன் மறைத்திருந்தான்.
செய்தி அறிக்கை முடிந்திருக்கவேண்டும். திறந்திருந்த கதவினூடு கதிரையில் அமர்ந்திருந்த தன் மனைவியோடு நண்பன் குசுகுசுத்துக்கொண்டு நின்றிருப்பது தெரிந்தது. அந்தக் காட்சியும் மனத்தை அதைத்தபடி உள்ளிறங்கிப் பாரமாகியது.
அவன் அங்கு வந்த அந்த மார்ச் 20ஆம் திகதியிலிருந்து அன்றைய மார்ச் 26ஆம் தேதிவரை தன்மேலான அவர்களின் அன்பு, நட்பு, அபிமானம் அனைத்தையும் கடந்த ஓர் இரகசியத்தின் திருகல் அங்கே எழுந்துகொண்டிருந்ததை அவன் கண்டான்.
நண்பனின் மனைவி மருதிக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல். வேலைசெய்ய முடியாமல், நடக்கவும் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தாள். சட்டி பானை கழுவி, வீடு முற்றம் கூட்டி, காய் கறி நறுக்கி, தேங்காய் துருவியென நண்பன் முருகவேல் கல்யாணமான நாளிலிருந்து தனக்கு அப்படி நேர்ந்ததில்லையென சொல்லிக்கொண்டு எல்லாம் செய்தான். பிறகு மருதி பிரயாசையோடு எழுந்துவந்து கறியை மட்டும் சமைத்து வைத்துவிட்டு சாப்பிடக்கூடச் செய்யாமல் போய்ப் படுத்துக்கொண்டாள். பிள்ளைகளை முற்றத்தில் போய்நின்று விளையாடும்படி அடிக்கடி கத்தினாள். எதிர்பாராதவிதமாக அவனை பார்வையில் எதிர்ப்படுகிற சமயங்களில் வெறுப்பாய் உமிழ்ந்து தள்ளினாள். அது தன்னில் விழுந்திருந்த நோயின் மேலா அல்லது அவனின் மேலாவென யாருக்கும் சந்தேகம் வரலாம். ஆனால் கணேஷானந்தமூர்த்திக்கு வரவில்லை.
மார்ச் இருபதாம் தேதி மாலையில் சொல்லாமல் கொள்ளாமல் அவனை முருகவேல் கூட்டிச் சென்றவேளையில் அங்குள்ள வசதியீனங்களின் சிறிய சிந்தனையுமின்றி சிரித்தபடி தன்னை வரவேற்றவளை கடந்த இரண்டு நாள் காய்ச்சலா அந்த வெறுமையுள் விழுத்தியது? இல்லை. அந்தக் காய்ச்சலுக்கு அவளுக்கு ஒரு காரணத்தின் அனுமானமுண்டு. அவள் கேட்கிற பேச்சுக்களும் செய்திகளும் அதைத்தவிர வேறொரு காரணத்தை நினைக்க அவளைச் செய்வனவாயில்லை. அது அவளை அச்சப்படுத்தியது; கலவரப்படுத்தியது; அவசரப்பட்டு வீட்டில் ஒரு வெளிநாட்டாளுக்கு இடம் கொடுத்துவிட்ட வருத்தத்தை எழவைத்தது. அவளது நிலைமை அவளைவிடவுமே அவனை அதிகம் பாதித்ததென்பது அவளுக்குத் தெரியுமா?
அப்படித்தான் அவன் வந்த மூன்றாம் நாள் அந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்த எதிர்வீட்டு சுந்தரத்திற்கு காய்ச்சல் பிடித்தபோதும் அவனே ஏங்கினான். மறுநாள் படுக்கையில் அவன் விழுந்தபோது துடித்துப்போனான். ‘என்னிலிருந்தா…? இருக்குமா…? கடவுளே….!’யென அவனது அந்தராத்மா கூவியது. தனக்கு என்பதைவிட தன்னாலென்ற தாக்குதல் அதிகம் கொண்டான் அவன்.
நல்லவேளையாக மூன்றாம் நாள் காய்ச்சல் சுகமாகி மாலையில் குளித்துவிட்டு சுந்தரம் கோயிலுக்கு போய்விட்டு வந்தான். பின்னர்தான் கணேஷானந்தமூர்த்திக்கு தன் உயிரவலம் தணிந்தது.
அன்று மாலை சுந்தரம் அங்கே வருவதன் முன்னால் அவன் சிதறிப்போய் இருந்தவேளை நண்பன் ரகசியம்போல் காதின் கிட்டக் குனிந்து சொன்னான்: ‘நீ என்னத்துக்காண்டி உப்பிடி இருக்கிறாயெண்டு எனக்குத் தெரியும். அதுதான் வேணுமெண்டா சொல்லு எடுத்துத் தாறன். இஞ்ச ரண்டொரு வீட்டில அது விக்கினம்.’
அதுவே காரணமில்லாதபோதும் அவன் சொன்னான்: ‘வீட்டில விக்கிறதெண்டா எனக்கு வேண்டாம். என்னென்ன கலந்திருப்பாங்களோ? அதுவேற பிரச்சினையாய் வந்திடப்போகுது இந்த நேரத்தில.’
‘அப்ப… தெளிவாயிரு. எல்லாருக்கும் பொதுவில வந்த கஷ்ரம்தான. உப்பிடி யோசிச்சுக்கொண்டிருந்து என்ன செய்யிறது?’
‘யோசிக்காமல் என்ன செய்யிறது? சிறீலங்காவுக்கு வாற பிளைட் எல்லாம் நிப்பாட்டியாச்சு. லண்டன், கனடா, துபாயெண்டு சில இடங்களுக்குத்தான் இப்ப இஞ்சயிருந்து பிளைற் ஓடுது. அதையும் கெதியாய் நிப்பாட்டியிடுவாங்கள்…’
‘வாற வெள்ளியிலயிருந்து அதுவும் ஓடாது… ரீவியில சொல்லிச்சுது’ என்றாள் எதிரிலிருந்த மருதி. பிறகு, ‘இஞ்ச இருக்கிறது உங்களுக்கு கொஞ்சம் வசதிக்குறைவாய்த்தான் இருக்குமெண்டு எங்களுக்குத் தெரியும்….’ என்று அவள் இழுக்க, அவன் இடைமறித்தான். ‘ஐயோ… வசதி ஒரு பிரச்சினையே இல்லை. நிர்ப்பந்தமாய் ஒரு இடத்தில இருக்கிறதுதான் கஷ்ரமாயிருக்கு. எண்டாலும் சமாளிக்கத்தான வேணும். சமாளிப்பம்.’
‘நீங்கள் ஒதுங்கியொதுங்கி இராமல் வாற ஆக்களோட கதைச்சு சிரிச்சுப் பேசிக்கொண்டிருந்தா நேரம் போறது தெரியா. எல்லாச் சனலிலயும் இப்ப படம் போடுறான்; படம் பாருங்கோ. எப்பிடியும் மார்ச் முடியிற அளவிலயெண்டாலும் ஊரடங்கை எடுப்பானெண்டுதான் சனம் கதைக்கிது.’
அவன் ஒதுங்கியொதுங்கிப் போவதின் காரணம் அவளுக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது? நண்பன் சொன்னது சரிதான். இடரென்னவோ எல்லார்க்கும் பொதுவில் வந்ததுபோல்தான் தோன்றுகிறது. ஆனால் அவனுக்கு மட்டும் வந்ததுமாதிரியல்லவா அவனை ஆடிப்போக வைத்துக்கொண்டிருக்கிறது! இன்ன காரணத்தால்தான் தனக்கு அந்த அவதியென்று நண்பனுக்குக்கூட அவனால் சொல்லமுடியாமலிருக்கிறதே! அது எவ்வளவு பெரிய அவதி? எனக்கு வந்துவிடுமென்று அல்ல, உனக்கு வந்துவிடும், உன் மனைவி பிள்ளைகளுக்கு வந்துவிடும், இங்கே வந்துபோய்க்கொண்டு இருக்கிறவர்களுக்கு வந்துவிடுமென்றுதானே நான் கலங்கிக்கொண்டிருக்கிறேன் என்றால் நண்பனே அப்போது என்ன நினைப்பானோ?
அவனுக்கு வேலிக்கு வெளியில் ஆள் நிற்பதான சிந்தனையே மறந்துபோயிற்று. நண்பனதும் அவனது குடும்பத்தினதும் பாதுகாப்பு என்கிற எண்ணம் மனத்துள் மேலோங்கியது. அதற்கு என்ன செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் நினைவுகளை வேறு திசையில் திருப்பத் தீர்மானித்தான். தீர்மானிக்க மட்டும்தான் அவனால் முடியும்; மற்றும்படி நினைவைத் திருப்புவது வேறு யாரோ என்பதுபோல் நினைவு திரும்ப பெரும் சிரமம்பட்டது.
வந்த புதிதில் அவ்வப்போது தலைகாட்டிய சந்திராவின் நினைவுகூட அப்போது தூரமாகிப் போயிருந்தது. முதல்நாளில் கண்டு, இரண்டாம் நாளில் பேசி, மூன்றாம் நாளில் கதையின்றிச் சிரித்த சிரிப்பில் இதயம் திறந்தவள் அவள். ஒரு தொடர்பு, காலமெல்லாம் நீளுமென்ற எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையிலும் மானசீகமாக தன்னைக் கொடுக்க அவள் விரும்பியிருந்ததை அவன் கண்டிருந்தான். அவனது வெளிநாட்டு பாஸ்போர்ட் கண்டல்ல, அவனைக் கண்டதில் தன் உள்ளம் கிறங்கியவள் அவள். அந்த முதல்நாளில் அவள் கண்களிலிருந்து அந்த முறுவல் கொட்டுப்படவே இல்லை; ஆச்சரியங்களையே கொட்டினாள். அவளது அந்த விருப்பத்தில் எந்த எதிர்பார்ப்பும் இருந்திருக்கவில்லை. அது காதலில்லைதான். ஆனாலும் பரிபூரணமான சமர்ப்பணம். நீண்டகாலமாய் அவனது மனம் சுமக்கும் வெற்றிடத்தை அவளால் நிறைக்க முடியுமெனில், அந்தச் சமர்ப்பணமே அதற்கான அவளது முதல் தகுதியாகவிருக்கும். அவனுக்கு அது தெரிந்திருந்தது. ஆனாலும் நெருங்காதிருந்தான். எந்தவிதமான ஒழுக்கம் சார்ந்த, அறம் சார்ந்த இடறலுமில்லை. நிகழ்விலிருந்த காலமே நினைவின் சுவட்டை பிரயாசையின்றி அழித்துக்கொண்டிருந்தது. டான் மற்றும் வசந்தம் தொலைக்காட்சிச் செய்திகள் அதற்குக் கூடுதலான ஒத்தாசை புரிந்தன. அவன் விழிக்கும் ஒவ்வொரு விடியலிலும் அவளது நினைவு சாணாக, முழமாக, பாகமாக எட்டவாய்ச் சென்றுகொண்டிருந்தது.
தெருவிலே மோட்டார் சைக்கிளொன்று உறுமிக் கேட்டது. கணேஷானந்தமூர்த்தி அவசரமாக எழுந்து வேலியைச் சமீபித்தான். சைக்கிளின் வெளிச்சம் தெருவெங்கும் விளாசியடித்தது. வேலி மேலால் எட்டிப்பார்த்தான். யார் நின்ற தடயமுமில்லை.
மறுபடி கதிரையில் வந்தமர்ந்தவன் நண்பன் சமையலறையில் ஏதோ செய்துகொண்டிருப்பது கண்டான். அவன் வர இனி நேரமெடுக்கும். கணேஷானந்தமூர்த்தி சந்திரா அங்கு வந்த அந்த இரண்டாம் நாளை அவதியின்றி நினைத்துப் பார்த்தான்.
ஊரடங்கின் இரண்டாம் நாளின் அந்தப் பொழுது மாலையாகயிருந்தது. அது மெல்ல முதிர்ந்து வானிலிருந்து இருள் இறங்கிக்கொண்டு இருந்தது. ‘மாடிழுத்து விழுத்திப்போட்டுதக்கா’ வென றோட்டிலே யாரோவின் குரலெழுந்த உடனடிப் பின்னால் படலை திறந்த சத்தம் கேட்டது.
அப்போது நுளம்பின் படையெடுப்பைத் தடுக்க நிலைக் கதவு, ஜன்னல் கதவுகளைச் சாத்தி நேரத்தோடேயே லைற் போட்டாகிவிட்டிருந்தது. கணேஷானந்தமூர்த்தியும் ஹோலுக்குள்ளேதான் இருந்திருந்தான். அந்தநேரத்தில் வீட்டினுள்ளே ஒதுங்கிவிடுவதுதான் நுளம்புக் கடியிலிருந்து தப்புவதற்கான எல்லாரின் உபாயமாகவும் இருந்தது. எதுவும் புதிதில்லையென்றாலும் அந்த நடைமுறைகள் அவனுக்கு பழக்கத்தில் இல்லாதவை. மற்றவர்களின் ஆலோசனையில் அவனும் உள்ளே வந்து ஒடுங்கிக்கொண்டான். முருகவேலின் பிள்ளைகள் மூன்றும் அறைக்குள்ளிருந்து படுக்கைக்கு முன்னான விளையாட்டில் நாளின் சோர்வுடன் ஈடுபட்டிருந்தன. பெரியவர்கள் எல்லாரும் தொடங்கப்போகும் ரோஜா சீரியலை எதிர்பார்த்தபடி. சீரியல் ஆர்வம் அவனுக்கில்லாவிட்டாலும் அவர்களுக்கு இருந்ததில் எள்ளோடு சேர்ந்த எலிப் புழுக்கையாக அவனும் கூட இருந்திருந்தான். அவன் திட்டமிட்டபடி அமையாது குலைந்துபோன தன் பயணம் இனி எப்போதோவென்ற கவலைமட்டுமே அப்போது கொண்டிருந்தான்.
சந்திரா காலைத் தாங்கித் தாங்கி வருவதைக் கண்டு மருதி நடந்தது கேட்க, மாடு இழுத்து விழுத்திவிட்டதை சந்திரா சொல்கிறாள். சொல்லியவள் கேளாமலே முழங்காலளவு கவுணை சற்று மேலே தூக்கி சிராய்ப்புக் காயத்தைக் காட்டுகிறாள். ‘லேசான காயம்தானக்கா.’
கணேஷானந்தமூர்த்தியும் பார்க்கிறான்.
கவுண் அணிவது அங்குள்ள பெண்கள் பலருக்கும் அப்போது பழக்கமாகிவிட்டிருந்தது. யுத்த கால உபயம். சைக்கிள் ஓடலாம், காலாலும் ஓடலாம், வயல்வேலை தோட்டவேலை எதுவும் செய்யலாமென்று பெரும்பாலான பெண்கள் இப்போது கவுண்தான் அணிகிறார்கள் பெருநகரங்கள் தவிர்ந்த கிராமங்களிலும்.
சந்திராவினது மெலிந்த வெள்ளைக் கால். முழங்கால் சில்லுக்கு மேலே தார் றோட்டு தோலைச் சிராய்த்திருந்தது. உடனடியாக ரத்தம் கசிந்திருக்கலாம். அப்போது உரஞ்சுப்பட்ட இடம் வெளாரித்துக் கிடந்தது. அந்தக் காலில் இன்னும் நிறைய பழைய காயங்களின் தழும்புகள் இருந்தன. காலில் பதிந்திருந்த பார்வை நிமிர்த்தி கணேஷானந்தமூர்த்தி சந்திராவின் முகத்தில் பதித்தான். சந்திராவின் கண்கள் பின்வாங்குதலின்றி அதை நேரெதிர்கொண்டன. இன்னும் முழங்காலைக் காட்டியபடியிருப்பதும் மறந்து சந்திரா மெல்லச் சிரித்தாள். அவளது அந்நியோன்யம் அவனுக்கு சிறிது அசௌகரியமாகவே இருந்தது. அதன் ஈர்ப்பு விசையும் அவன் தெரிந்தான். இருந்தும் அந்தக் கண்களின் ஆழத்திற்குள் தான் இழுபட்டுப் போவதைத் தடுக்க முடியதவனாயிருந்தான்.
அவன் வெளியே சிகரெட் பத்த எழுந்துவந்தான். தொலைக்காட்சிச் செய்தி முடிந்து ரோஜா சீரியல் தொடங்கிருந்தது சத்தத்தில் தெரிந்தது. சிறிதுநேரத்தில் சந்திரா வெளியே வந்தாள். வீடு செல்கிறாள்போலும். தன்னைக் கடந்து செல்கையில் கணேஷானந்தமூர்த்தி கேட்டான்: ‘சந்திரா, நீ வெத்திலை சப்புவியா?’
அவள் நின்றாள். ‘சப்புவன். கனக்க இல்லை’ என்றவள், ‘ஏன்?’ என்றபடி அண்ணாந்து பார்த்துக்கொண்டே தன் கண்கள் பளீரிட அவனை நெருங்கினாள்.
‘கடையெல்லாம் பூட்டியிருக்கு. எப்பிடி வாங்குவாய்?’
‘திறந்திருக்கிற கடையில வாங்குவன்.’
‘வெத்திலையோட பொயிலையும் தருவினமோ? இல்லாட்டி பொயிலை தனியா வாங்குவியோ?’
‘தனியாயும் வாங்கலாம்.’
‘நீ பொயிலை வாங்கிற கடையில சிகரெட் இருந்தா சிகரெட்… இல்லாட்டி, பொயிலை வாங்கித் தாறியா?’
‘அங்க சீக்கிறெட் விக்கிறேல்ல, வீடி விப்பினம். வீடி இருந்தா வீடி வாங்கட்டா?’
‘வீடி பொயிலையைவிட நல்லம்தான்.’
‘நாளைக்கு பின்னேரம்தான் போவன். வாங்கியாறன்.’
‘கால்ல பெரிய காயம்போல. பிளாஸ்ரர் இருக்கு, தரட்டே?’
‘அதொண்டும் வேண்டாம். இப்பவே பாதி மாறியிட்டுது.’
‘உன்ர மனிசன் மாடு கட்டுற அவுக்கிற வேலையள் செய்யமாட்டாரோ…?’
‘அந்தாள் பாதி ராத்திரியில வந்து படுத்திட்டு, விடிஞ்சு விடியிறதுக்குள்ள எழும்பி ஓடுற மனிசன். மாட்டை நான் பாத்திடுவன். சாந்தமான மாடுதான். இப்ப… சினைப்படுறதுக்கு கத்திக்கொண்டு நிக்குது. அதிலதான் அந்த மூர்க்கம்.’
‘நாளைக்கு வீடி விஷயம் என்னமாதிரியெண்டு சொல்லு.’
‘செய்தி நேரத்துக்கு வருவன்.’
வீட்டுக்கு முன்னால் ஒத்தாப்பிலிருந்த பல்ப் சுட்டுப்போயிருந்தது. அதனால் இருட்டிலே நின்று பேசியபோதும் அவள் கண்கள் அத்தனை நேரமும் இரண்டு நட்சத்திரங்கள்போல் மின்னிக்கொண்டே இருந்ததை அவன் கவனிக்கத் தவறவில்லை. போகும்போது மின்னலைப்போல் ஒரு பளீர்! அதுபோதும் அதன் உள்ளோடிய அர்த்தம் புரிய. ஆனாலும் அவ்வளவு வெளிப்படையே அப்படித்தானா என்றோரு சந்தேகத்தையும் படவைத்தது. அது தெளிய அடுத்தநாள் வரவேண்டியிருந்தது.
அடுத்த நாள் எட்டு மணி ஆகிறவரையில் வீடியை இல்லாட்டி புகையிலையை எதிர்பார்த்து கணேஷானந்தமூர்த்தி சந்திராவுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். முதல்நாளைய அவளது கண்களின் ஒளித் தெறிப்பும் பளீரிட்ட மின்னல் பிரகாசமும் ஒரு ஞாபகமாய் வந்து போயின. உணர்வெழுச்சி இல்லாமலேயில்லை; அதை புத்தளம் மாவட்டம் நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டு கொழும்பு கம்பஹா மாவட்டங்களிலும் அது பரவிவிட்டதான அன்றைய நாளின் தகவல்கள் மூடிவிட்டுக்கொண்டிருந்தன.
எட்டு மணி டான் தொலைக்காட்சிச் செய்தி தொடங்கி சிறிதுநேரத்தில் சந்திரா வந்தாள். வாசலில் கதவோரம் நின்றபடியே அவனைப் பார்த்தாள். அவன் யார் வந்ததெனப் பார்க்கத் திரும்ப, எழுந்து வருமாறு சைகை காட்டினாள். படிகளிலிருந்து கீழே இறங்கி நின்றிருந்தவளை அவன் அணுக, அவனது கையினைப்பற்றி ஒரு கட்டு பீடியையும் ஒரு கடதாசிச் சரையையும் திணித்தாள். அவன் சரையைப் பிரித்து ஐந்து சிகரெட்டுகள் இருப்பது கண்டான். ‘இன்னும் கொஞ்ச சிகரெட் இருக்கு. எத்தினை வாங்கிறதெண்டு தெரியாததால அஞ்சைமட்டும் வாங்கிக்கொண்டு வந்தன்’ என்றாள். பெரிய உபகாரம் செய்தவள்போல் அவளது முகம் அப்போது பொலிந்து கிடந்தது.
உள்ளே போய் வாலற்றிலிருந்து ஆயிரம் ரூபாவை எடுத்துவந்து கொடுத்தான். ‘இதுகளுக்கு எவ்வளவு வந்துதோ அதை எடுத்துக்கொண்டு மிச்சத்துக்கும் நாளைக்கு சிகரெட் வாங்கி வா. கரச்சலொண்டுமில்லையே?’
‘சிச்சீ… இதிலயென்ன கரச்சல்.’
மதியத்திலிருந்து புகைக்காத தவனத்தைத் தணிக்க உடனடியாகவே ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு அங்கிருந்த நீள வாங்கிலே அமர்ந்தபடி, ‘இரன் இப்பிடி’ என்று சம்பிரதாயத்திற்குச் சொன்னான்.
அருகிலே அமர்ந்தவள், ‘நாளைக்குக் காலமை ஊரடங்கு தளருது. தேவையான சீக்கிறெட்டை வாங்கி வைச்சிடுங்கோ. தட்டுப்பாடாய்த்தான் இருக்கும். விலையும் கூடினாக் கூடும். பாத்துச் செய்யுங்கோ’ என்றாள். பிறகு, ‘என்ர மனிசனும் முந்தி வீடி குடிக்கும். எனக்கு அந்த நாத்தத்தை தாங்கேலாது’ என்றாள்.
‘இப்ப குடிக்கிறேல்லையோ? நல்லதுதான.’
‘குடிக்காட்டி நல்லம்தான். ஆனா இது வேற கதை’ என்றவள் அவன் பக்கமாய்ச் சாய்ந்து, ‘உள்ளுக்கயே வைச்சிருங்கோ. இப்ப… குடிக்கிறதுக்கு ஆளே இல்லை’ என ரகசியத்தைப்போல் கிணுகிணுத்தாள்.
அவன் ஆச்சரியமாகி, ‘விளங்கேல்ல ’ என்றான். ‘நீதான நேற்றுச் சொன்னாய், பாதி ராத்திரியில வந்து, விடியிறதுக்கு முந்தி எழும்பிப் போறவரெண்டு.’
‘ம். உங்களுக்கு மட்டுமில்லை, எல்லாருக்கும் அப்பிடித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறன். மருதியக்காவுக்கு மட்டும் அப்பிடியிப்பிடி கொஞ்சம் தெரியுமெண்டு நினைக்கிறன். எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத்தான்.’
‘ஒருக்காலும் வாறதில்லையோ…?’
‘பிள்ளையளைப் பாக்கவெண்டு எப்பாலும் இருந்திட்டு வரும்.’
‘எவ்வளவு காலமாய் இது…?’
‘இப்ப… ரண்டு வரியமாகுது.’ அவள் சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தாள்: ‘ரண்டு பிள்ளையள் இருக்கு. அம்மாவை என்ர வீட்டிலதான் வைச்சிருக்கிறன். தண்டுதரமாய்த்தான் இருக்கிறா. அவ பிள்ளையளைப் பாத்துக்கொள்ளுவா. வீட்டுக்குப் பின்னால ரண்டு பரப்பு தோட்டக் காணியொண்டிருக்கு, தோட்டம் போடுறன், ஆடு மாடு வளக்கிறன்… எனக்கென்ன குறை? என்னால தனிய வாழேலும்.’
‘நான் இதுகளைக் கேக்கக்குடாது. எண்டாலும்… ஒரு பேச்சுக்கு கேக்கிறன்… அப்பிடியென்ன உங்களுக்குள்ள…?’
‘இதெல்லாம் உடனயே சொல்லியிடேலா. வாய்விட்டுச் சொல்லுறதும் கஷ்ரம். ஒருநாளைக்கு தனியாய்க் காணுற நேரத்தில சொல்லுறன்.’
‘இப்ப தனியத்தான இருக்கிறன்… மருதி ஆக்கள் ரீவி பாத்துக்கொண்டிருக்கினம்.’
சந்திரா எதுவும் சொல்லவில்லை. தொடர்ந்த அவளின் மௌனமுடைக்க, ‘எங்க வேலை ஆளுக்கு? என்ன வேலை?’ என்று கேள்வியின் திசைகளைத் திருப்பினான் அவன்.
‘கிளிநொச்சியில ஒரு கொட்டல்ல வேலை. சமையல்வேலைதான். அந்தாளின்ர பழக்கமொண்டும் சரியில்லை. அப்பவே அந்த எழிய பழக்கம் இருந்திருக்கு. எனக்குத்தான் விவரம் காணாமல்ப் போச்சு இதெல்லாம் தெரிய. ஒருநாள் ஊரிலயே கையும்மெய்யுமாய்ப் பிடிபட்டு…. பெரிய அவமானமாய்ப் போச்சு… அதைத் தவிர என்னால வேற என்ன செய்திருக்கேலும்?’
அவன் அவளை அந்த மெல்லிய இருளுக்குள் ஏறிட்டான். அந்த ‘எழிய’ பழக்கம் எதுவென்று அவளும் சொல்லவில்லை ; அவனும் கேட்கவில்லை. அவளின் சிரிப்பழிந்த முகத்திலிருந்து, அவள் சொன்னது மெய்யென்பதைமட்டும் அவன் ஓர்ந்தான். ஆயினும் அதை தான் திட்டமிடாதிருந்தாலும் திடத்துடன் நல்லபடியாய் முடித்திருப்பதை சலனமறுத்திருந்த அவளின் நிலை அவனுக்குக் காட்டியது. மேலும் மருதியக்காவிடம்கூட சொல்லாத அந்த ரகசியத்தை தன்னிடம் ஏன் சொன்னாளென்றும் அவனுக்குப் புரியவில்லை. அது அவளின் தன்னிலை வெளிப்பாடு மட்டுமல்ல, தன் இதயத்தைக் கைகளில் வைத்து அவனைநோக்கி ஏந்தியபடி நிற்கும் சமர்ப்பணமும். ஆனால் அந்த இரண்டு மூன்று நாட்களில் அவளின் அந்தளவு இணக்கப்பாட்டை அவனால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
அப்போது கதவைத் திறந்துவிட்ட மருதி வாசல்படியில் களைப்போடு அமர்ந்தாள். மருதியின் முகம் கறுத்துப்போய் இருந்தது. ஏனென்று அவனொன்றும் எண்ணவில்லை. அவனேன் எண்ணவேண்டும்? சிறிதுநேரத்தில் பேக்கரி வான் பாட்டிரைச்சலோடு தெரு வாசலுக்கு வந்தது. முருகவேல் மனைவியைக் கேட்டு பாண், பணிஷ் என வாங்கிவந்தான். அந்த ஊட்டில் தன் கண்களை ஒளிக் காடாக்கி அவனுக்குக் காட்டிவிட்டு சந்திரா படலை திறந்து போய்விட்டாள். அப்போது அவனது அண்ணன் போனெடுத்து அவன் அங்கே நிற்கிற விபரத்தை கனடாத் தூதுவராலயத்திற்கு அறிவித்தானா எனக் கேட்டு, அதுவரை செய்திராவிட்டால் காலையில் அதை கண்டிப்பாகச் செய்ய அறிவுறுத்தினான். வார்த்தைக்கு வார்த்தை கவனமாக இருக்கச் சொன்னான்.
அதில் மெல்லிய ஒரு பதற்றம் இருந்ததை கணேஷானந்தமூர்த்தி கவனிக்கத் தவறவில்லை. அது அவனது பயணம்குறித்த சஞ்சலத்தை மேலும் அதிகப்படுத்தியது.
மறுநாள் திங்கள் காலையில் ஆறு மணிக்குத் தளர்வாகிய ஊரடங்கு மீண்டும் அமுலுக்கு வருவதற்கிருந்த பத்து மணி நேர இடைவெளியில் கடையெங்கும் வீதியெங்கும் மக்கள் வெள்ளம். பலபேர் கையுறை முகக் கவசம்கூட அணியவில்லை. சிலர் மூக்கை மறைத்து லேஞ்சி கட்டிக்கொண்டிருந்தார்கள். பத்து மணியளவில் முருகவேலுடன் வெளியே சென்ற சமயத்தில் அவனே நேரில் கண்டான். ஊரடங்குத் தளர்வு ஒரு கொண்டாட்ட மனநிலையையே மக்களிடத்தில் ஏற்படுத்தியிருந்ததாய்ப் பட்டது. நல்லது. அடுத்த ஊரடங்குத் தளர்வு அடுத்த இரண்டு நாட்களில் வருமென்று பேச்சிருந்தது. அவனுக்கது சந்தேகமாகிப் போனது. அதை அன்று மாலையில் வெளியாகிய செய்தி ஊர்ஜிதப்படுத்தியது. மக்கள் தம்மை அக் கொடிய நோய்க்கு விருப்பபூர்வமாக ஒப்புக்கொடுத்ததுபோல் அன்றைய பகல் ஆகியிருந்ததென யாழ் மாவட்ட சுகாதார அத்தியட்சகர் தெளிவாகத் தெரிவித்து, தொடரும் ஊரடங்கை மிகுந்த இறுக்கமாக செயற்படுத்த அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிவித்தார். அந்நோய்க்கான தடுப்பூசி அதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதோடு, கண்டுபிடிக்கும் சாத்தியமும் விரைவில் நிகழ்ந்துவிடாதெனவும் தெரிவித்த துறையியல் வல்லுநர்களின் நேர்காணல்கள் இ-பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிச் செய்திகளிலும் வெளியாயின. தொற்றாமல் காப்பதே சிறப்பு, நோய் அறிகுறியுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து தம் குடும்பத்தாரையும் சமூகத்தையும் காக்க முன்வரவேண்டுமென்றும், நோய் ஏற்பட்டிருந்தாலும் குணமாகும் வாய்ப்புக்கள் நிறைய இருப்பதால் மக்கள் அஞ்சத் தேவையில்லையென்றும், தனிமைப்படுத்தல் முகாம்கள் திறமாகச் செயற்படுத்தப்படுவதாகவும் மிகச் சிறப்பாக அந்நேர்காணல்களில் அவர்கள் பொதுமக்களுக்கு எடுத்து விளக்கியிருந்தார்கள். நோயைவிட பதின்னான்கு நாள் தனிமைப்படுத்தலென்பதே மிக்க கொடூரமானதாய் அவர்களை விலகியோடச் செய்ததென்பதை பலரின் பேச்சில் கண்டிருந்தான் கணேஷானந்தமூர்த்தி.
மறுநாள் மாலை இருட்டுவதற்கு முன்பாக எல்லாரும் வீட்டின் முன்னாலுள்ள ஒத்தாப்பிலிருந்து தேநீர் அருந்திக்கொண்டிருந்தவேளை எதற்கோ சந்திராவின் பேச்சு நுழைந்தது. மருதியின் வாய் மொழியிலிருந்துதான் அவள்பற்றிய விபரங்கள் சிலவற்றை அவன் தெரிந்தான். ‘நெல்லியடி மகாவித்தியாலத்திலதான் படிச்சவள்; சரியான கெட்டிக்காறி; ஓ.எல்.லிலயும் நல்ல றிசல்ற். என்னெண்டு பேந்து அது குழம்பிச்சுதெண்டு தெரியேல்லை. ஏ.எல். படிச்சுக்கொண்டிருக்கேக்க தேப்பன்காறன் ஒராளைக் கொண்டுவந்து கலியாணமெண்டு செய்துவைச்சிது. அப்பவும் நல்லாய் வாசிக்கிற பழக்கத்தோடதான் இருந்தாள். அவளுக்கு புத்தகமெடுத்துக் குடுத்தே நான் களைச்சுப் போனன். பிறகெப்பிடியோ அதுவும் இல்லாமப்போச்சு. இப்ப பேப்பரைக்கூட அவள் கையால தொட்டு நான் காணுறேல்லை. எதுவோ அவளைப் பாதிச்சிருக்கு. அவளே சொல்லாமல் இதெல்லாம் என்னெண்டு எங்களுக்குத் தெரியவரும்? பாவம்! அக்கா… அக்காவெண்டு என்னில சரியான வாரப்பாடு. நானெண்டா… புத்தகம் எடுத்துக் குடுத்ததைத் தவிர, அவளுக்கு வேறயென்னத்தைச் செய்தனெண்டு எனக்கெண்டாத் தெரியேல்லை.’
தொடர்ந்த நாட்கள் முந்தியவைபோல் அவனுக்கு இருக்கவில்லை. சூழ்ந்த சமூகமும், உலகமும்கூட, முந்தியனபோல் இருக்கவில்லை. இத்தாலி ஸ்பெயின் இங்கிலாந்து தென்கொரியா இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் மரணங்கள் வெகுத்துக்கொண்டிருந்தன. இவ்வாறான நிலையில் இந்தியா இலங்கை ஆகிய நாடுகளில் மரண விகிதாசாரம் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததை வெகுஜனம் பெருவிடுப்பாய்ப் பேசிக்கொண்டிருந்தது. எங்கிருந்து அந்த கொடிய வைரஸ் பரவ ஆரம்பித்ததோ அந்த சீனாவில் அது கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்ததை பல நாடுகளும் ஆச்சரியத்தோடு கண்டுகொண்டிருந்தன. கனடா தன் அமெரிக்க எல்லையை மூடிவிட்டதை தெரிவித்த செய்தியூடகமொன்று பிரதமர் ஜஸ்ரின் ரூடோவின் முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் அமெரிக்காவில் எந்த நாட்டையும்விட கனடாவை பாதுகாப்பான நிலையில் வைத்திருப்பதான வல்லுநர்களின் மதிப்புரையைத் தெரிவித்தது.
அவனது நாடு என்பதால் மட்டுமன்றி, அவன் செல்லவேண்டிய நாடு என்பதனாலும் அந்த அபிப்பிராயத்தை அவன் விரும்பினான். ஒருவரின் வீடுபோல அவரின் நாடு. சுயாதீனமும் சுதந்திரமும் சொந்த வீட்டில் எவ்வாறு திளைக்கின்றதோ, அதுபோலத்தான் நாட்டிலும். அதனாலேயே நல்லதோ கெட்டதோ, வளமானதோ வளமற்றதோ ஒருவரின் நாடு என்பது மிகமுக்கியமானதாக ஆகின்றது. நல்லவர்களுள்ளதே சிறந்த நாடு என்பது பாணனுடைய வாழ்வனுபவமாக இருக்கலாம். நிலைபெறுதல் என்ற அம்சத்திலிருந்து வீடும் நாடும் ஒருவற்கு முதன்மையாகின்றதை தன்னுணர்வுபூர்வமாய் அன்று கண்டான் அவன். எனில்… அது அவன் வீடாகவும், அது அவன் நாடாகவும் இல்லாதிருக்கையில் அவனது பேரவலம் புரியப்படக் கூடியது.
மருதி எழும்பி படுக்கப்போக தயாரானாள். அப்போது அவள் கண்களைக் காணநேரும் அச்சத்தில் அவன் வேறுபுறம் திரும்பிக்கொண்டான். அவள் எழுந்து சென்ற பின்னால் அந்த உணர்கை அவனை நடுங்கவைத்தது. அவன் வெளிமனிதருக்குமட்டுமன்றி, அந்த வீட்டிலுள்ள அவளுக்குமே ஒளிய நேர்ந்திருக்கிறது.
அப்போது முருகவேல் வந்து அவனருகேயிருந்த கதிரையில் பழையபடி அமர்ந்தான். ‘மேயில நடக்கிறதெண்டிருந்த பார்ளிமென்ற் எலக்ஷனையும் ஒத்திவைச்சாச்சு. நிலைமை இப்போதைக்குச் சரிவருமெண்டமாதிரித் தெரியேல்லை’ என்றான்.
கணேஷானந்தமூர்த்திக்கு நெஞ்சு பதைக்கத் துவங்கியது. மூச்சு முட்டுவதுபோல் விரைந்து வந்தது. இப்போதைக்கு நிலைமை சரிவராதென்றால் அவன் என்ன செய்யப்போகிறானென்று கேட்கிறானா நண்பன்? அந்தப் பெரிய சூட்கேஸையும் இழுத்துக்கொண்டு றோட்டில் இறங்கி எங்கே போவான் அவன்?
கணேஷானந்தமூர்த்தியின் அவதியை முருகவேல் கவனித்திருப்பான்போல. ‘என்ன, எப்ப வெளிக்கிடப்போறாயெண்டு கேப்பனெண்டு பயந்திட்டியோ? இந்த விஷயத்தில நீயாய் வெளிக்கிட்டாச் சரி, நாங்களாய் ஒண்டும் சொல்லமாட்டம்.’
‘உன்னை எனக்குத் தெரியும், முருகு. அதால எனக்கு அந்தப் பயமில்லை. எண்டாலும்… நிலமை வர வர மோசமாகிக்கொண்டு வருகுதெல்லோ. ஊர்ச் சனத்தின்ர பார்வையும் கடுகடுப்பாயிட்டுது. அத நினைச்சன்’ என்று சொன்னான்.
‘ஊர் சனத்தைப்பற்றி நீயேன் யோசிக்கிறாய்? நாட்டில நிக்கிற வெளிநாட்டுக்காறரை பொலிஸில பதியச் சொன்ன காலத்துக்கு ரண்டு மூண்டு கிழமைக்கு முந்தியே நீ வந்திட்டாய். உன்னை ஏன் இஞ்ச வைச்சிருக்கிறமெண்டு கேட்ட ஆக்களுக்கு விளங்கிறமாதிரி நானும் பதில் சொல்லியிட்டன். அதால அதைப்பற்றி நீ ஒண்டும் யோசிக்கத் தேவையில்லை.’
‘கனடா போறதுக்கு மட்டுமில்லை, கொழும்புக்குப் போறதே இப்ப கஷ்டமாய்ப் போச்சே, முருகு. எத்தினை பாஸ் எடுக்கவேண்டியிருக்கு? ஜி.எஸ்.ஸிட்ட பாஸ்… பொலிஸில பாஸ்… சுகாதாரக் கந்தோரில பாஸ்… கச்சேரியில பாஸ்… ஏலுமா ஒராளால? ‘
‘அதுதான் நான் அண்டைக்கே சொன்னன், இந்தக் கரச்சலொண்டும் இப்பிடியே தொடர்ந்து இருந்திடாது… நிலமை கொஞ்சம் மாறுற மட்டும் ஒண்டையும் யோசிக்காம சந்தோஷமாய் இரு எண்டு. அதுக்கு… அதுதான் சரியான மருந்து. நானும் நல்லா விசாரிச்சிட்டன். மூடி திறக்காம கடையில வாங்கினபடியே வைச்சிருக்காம். விலைதான் கொஞ்சம் கூடச் சொல்லுறாங்கள். ஆயிரத்தெண்ணூறு ரூவா. நீ விரும்பினா எடுத்துத் தாறன். கொஞ்சம் எடுத்தியெண்டா யோசினையை விட்டிட்டு உஷாராய் இருப்பாய்.’
கணேஷானந்தமூர்த்திக்கும் தேவைபோலத்தான் இருந்தது. முருகவேலுக்குக்கூட, அவன் திரும்பத் திரும்பக் கேட்கிறமாதிரியில், உள்ளே புறியமிருக்கின்றதெனத் தெரிந்து மறுநாளைக்கு எடுக்கலாமென்றான்.
முருகவேலின் முகம் பொலிந்தது.
மறுநாள் மாலையில் ஆறு மணிக்கு முன்னராகவே முருகவேல் ரகசியமாய் போத்தலைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டான். சிறிதுநேரத்தில் சந்திரா வந்தாள். இன்றைக்கு பார்டிதான் என்பதுபோல் சைகையில் நக்கலடித்தாள். போத்தல் எடுத்த விஷயம் அவளுக்கு எப்படித் தெரிந்ததென எண்ணியபடி அவனும் சிரித்தான்.
அன்று மருதி கொஞ்சம் தேறியிருந்தாள். காய்ச்சல் விட்டிருந்ததுபோல. முகமும் கொஞ்சம் களைகட்டியிருந்தது. அது அவனிலும் பெரும் நிம்மதியைச் சேர்த்தது.
சாராயம் வாங்கிய விஷயம் அவளுக்கும் தெரிந்திருக்கலாம். முருகவேல் அவளையே சுற்றிச் சுற்றி வந்து அவளோடு பேசி சிரிக்கச் செய்துகொண்டிருந்தான். காரணம் விளங்கியது.
‘மேலெல்லாம் புளுங்குது, குளிக்கப் போறனக்கா’ என்று பதிலை எதிர்பாராமலே காற்றில் கூவிவிட்டு சந்திரா போய்விட்டாள்.
இருளத் துவங்க இமெயிலைத் திறந்து கனடாத் தூதுவராலய பதிலைக் கண்டு மேலும் அமைதிகொண்டது கணேஷானந்தமூர்த்தியின் நெஞ்சு. அவன் தங்கியிருக்கும் வீட்டு முகவரி, போன் நம்பர் எல்லாம் கேட்டதோடு, கனடாப் பிரஜைகளை நாட்டுக்கழைக்கும் திட்டத்தில் கல்ஃப் ஏர் லைன், சிறிலங்கா ஏர் லைன் மற்றும் ஏர் கனடா மூலம் ரொறன்ரோவுக்கு பயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செய்தியிருந்தது. அவன் விமானநிலையம்வரை பயணம் செய்ய விசேஷ பாஸ் எதுவும் தேவையில்லையென்றும், இருபத்தினான்கு மணி நேர செல்லுபடியுள்ள விமானச் சீட்டு, கனடாப் பாஸ்போர்ட் இரண்டையுமே ஊரடங்கு நேரத்தில் பயணிப்பதற்கான அனுமதியாக கொள்ளலாமென்றுமான குறிப்பும் அதிலிருந்தது. கணேஷானந்தமூர்த்திக்கு போன உயிரில் பாதி மீண்டதுபோல் ஆயிற்று. உடனடியாக முருகவேலை அழைத்து விபரம் கூறினான். அவனுக்கும் மகிழ்ச்சிதான்.
அதற்குமேல் போத்தில் உடைத்தாயிற்று. துக்கத்தை மறக்க எடுத்த சாராயம், சந்தோஷத்தைக் கொண்டாடுவதற்காய் கிளாஸ்களில் வார்பட்டது.
சந்திரா அப்போது வந்தாள். நேரே மருதி நின்றிருந்த குசினிப் பக்கம் போனாள். ஏதோ பேசியபடி இரவுணவு தயாரிக்க ஆரம்பித்த மருதிக்கு கையுதவி செய்தாள். ஹோலுக்குள் முருகவேல் இல்லாதிருந்த ஒரு வேளை சந்திரா வந்தாள். அவனது முகப் பூரிப்பைப் பார்த்து, ‘என்ன விசேஷம், மூஞ்சை இப்பிடிச் சிரிப்பாய்க் கிடக்கு? சாராயத்தைக் கண்ட புளுகமோ?’ என்றாள்.
‘சாராயத்தைக் கண்டதுக்கு இந்தளவு புளுகம் வராது. இது நான் கனடா போறதுக்கு வழி கிடைச்ச புளுகம்.’
‘ஓ..! எப்ப வெளிக்கிடுறியள்?’
‘கெதியில.’
‘கெதியிலயெண்டா…?’
‘ரிக்கற் புக் செய்ய கனடாவில ஏஜன்ரோட கதைச்சிருக்கிறன். ரிக்கற் புக்கிங்குக்கு ஏத்தமாதிரி வெளிக்கிடுவன். ரண்டு மூண்டு நாளிலயெண்டு வையன்.’
‘அவ்வளவு கெதியிலயோ? போறதுக்குள்ள ஒருநாளைக்கு வீட்டை உங்களை சாப்பிடக் கூப்பிடவேணுமெண்டிருந்தன்…’ என்றாள். முகம் மட்டுமில்லை, முழுக் கோலமே துவண்டுபோனதுபோல் தோன்றினாள்.
‘சொல்லு எப்பவெண்டு. கட்டாயம் வாறன்’ என்றான் அவன்.
அதற்குள் முருகவேல் அவனுடன் எதுவோ பேசுவதற்கு வெளியே வர, சந்திரா அங்கிருந்து மாறினாள்.
சிறிதுநேரத்தில் தானும் சாப்பிட்டு பிள்ளைகளுக்கும் ஒரு கிண்ணத்தில் கறி எடுத்துக்கொண்டு சந்திரா புறப்பட்டாள். ஒத்தாப்பில் இன்னும் அவள் தாமதிப்பதாய்த் தோன்ற கணேஷானந்தமூர்த்தி சிகரெட்டுடன் வெளியே வந்தான். சந்திரா நின்றிருந்தாள்.
அவள் கதைக்கக் காத்திருப்பவள். அவன் கதைப்பதற்கு உற்சாகமேறி இருப்பவன். அவர்களுக்குள் நிறைய பேசவுமிருந்தது. ‘போயிட்டியோவெண்டு நினைச்சன்’ என்றான் சிரித்தபடி.
‘என்னண்டு போவன், பேச்சு இன்னும் முடியேல்லையே’ என்று அவள் முறுவலித்தாள்.
'துவங்கவேயில்லையே' என்றான்.
அவனிடம் அவள் எதிர்பார்க்காத நெருக்கமது. அவள் விரும்பியது. அவளுக்கு முன்னதாய் அவனே பேச்சைத் தொடக்கினான். ‘நானாய் கதைக்க இந்தளவு நாளில ஒருநாள்கூட ட்றை பண்ணேல்ல. ஏனோ இப்ப… வெளிக்கிடுற இந்தநேரத்தில… கதைக்கவேணும்போல கிடக்கு. பாத்தோடனயே விருப்பம் வந்ததுதான். நீ தனியா இருக்கிறது தெரிஞ்சோடன… அந்த விருப்பம் இன்னும் வளந்திட்டுது. எண்டாலும் சொல்ல வாய் வரேல்லை. நானும் கனடா போற வழி தெரியாம முழுசிக்கொண்டு நிண்டதில, இதொண்டையும் பெரிசுபடுத்தேல்லை. இப்பவெண்டாலும் நான் சொல்லவேணும். உனக்கு விளங்குதா, சந்திரா?’
‘விளங்கிது. எனக்கும் இண்டைவரையில ஆரைப் பாத்தும் இந்தளவு புறியம் வரேல்லை. ஏன் வந்திது, எப்பிடி வந்திதெண்டு தெரியாமலே வந்திட்டுது. இதுக்கு முந்தி கண்ணாலகூட உங்கள நான் கண்டிருக்கேல்லை. ஆனா முதல்நாள் கண்டோடன முந்தியே கண்டமாதிரித்தான் மனசில பட்டுது. அண்டு ரா முழுக்கக் கிடந்து நானும் நல்லா இதைப்பற்றி யோசிச்சுப் பாத்தன். அப்பதான் எனக்கு ஒரு விஷயம் வெளிச்சிது. சொன்னா… விசரியெண்டு நெப்பியள்…’
‘இல்லை, சொல்லு…’
‘எனக்கு ரண்டு பொம்பிளப் பிள்ளையளிருக்கு…’
‘ம்… சொல்லியிருக்கிறாய்.’
‘அதில மூத்ததுக்கு எட்டு வயசாகுது… அது சரியா… அச்சடிச்சமாதிரி உங்களப்போல.’
அவன் அதிசயத்தோடு அவளைநோக்கித் திரும்பினானன். ‘என்னைப்போலயோ…?’
‘உங்களைப்போலயேதான்.’
‘நரைக்கத் துவங்கின தலைமயிரோட… தாடி மீசையோட…?’
அவள்சிரித்தாள். ‘உங்களப்போலயெண்டா… பாக்கிறது… பேசுறது… நடக்கிறது… இதுகளைச் சொல்லுறன்.’
‘புதினமாயிருக்கு.’
‘புதினம்தான். எப்பிடியெண்டு எனக்கு இண்டைவரையில விளங்கேல்லை. அதாலதானாக்கும் இப்பிடி கண்டோடன ஒரு ஆசை… ஒரு விருப்பம்…. அது விருப்பம்கூட இல்லை ; ஒரு வெறி. ஒருநாளைக்காண்டியும் வாழ்ந்திட்டு சாகலாமெண்ட வெறி. நீங்கள் என்ன நெக்கிறியள்? நான் சொல்லுறத நம்பேல்லை, இல்லையே?’
‘எனக்கு என்ன சொல்லறதெண்டு தெரியேல்லை. ஆனா நீ விளங்காமச் சொல்லியிருந்தாலும், பொய் சொல்லேல்லையெண்டு தெரியுது. உனக்கு கடவுள் நம்பிக்கையிருக்கோ? கோயிலுக்கெல்லாம் போவியோ? போனா… அந்தக் கடவுளையே கேட்டுப் பார். அங்கயிருந்துதான் இந்தமாதிரி அதிசயத்துக்குப் பதில் வரவேணும்.’
‘கோயிலுக்குப் போறனான்தான். நம்பிக்கையும் இருக்கு. ஆனா இண்டைவரைக்கும் எனக்கெண்டு ஒண்டை நான் அந்தப் பிள்ளையாரிட்ட கேட்டதில்லை. அப்ப ஏன் கோயிலுக்குப் போறாயெண்டு கேப்பியள். என்ர கஷ்ரங்களை… துன்பங்களை…. சொல்லுறதுக்குப் போறன். அவரும் நல்லாய்க் கதை கேக்கிற கடவுள்போல. நான் சொல்லுறதெல்லாம் சிரிச்சபடியிருந்து கேப்பார். அதுதான் எனக்கும் வேணும்.’
‘உன்ர மனத்தில இருந்த விருப்பத்தை முதல்ல நீ காட்டேக்க, நான் பிழையாய் விளங்கியிடுவனெண்டு ஒண்டும் யோசிக்கேல்லையோ?’
‘யோசிக்கேல்லை. உங்கட கண்ணுக்குள்ள அந்த விருப்பத்தை நான் பாத்தன். கனடா ஆள்தான, சகசமாய் எடுத்துக்கொள்ளுவியள் எண்ட நம்பிக்கையும் இருந்திது. அதோட…. விட்ட குறை தொட்ட குறையெண்டு சொல்லுவினமே, அப்பிடியொரு தொடர்பு இருக்கெண்டும் நம்பினன். இல்லாட்டி முகச் சாங்கல் துவக்கம், பேசுறது சிரிக்கிறது நடக்கிறதெல்லாம் என்ர பிள்ளைக்கு உங்களமாதிரியே வாறதெப்பிடி? இன்னுமொண்டு, இதை நானாய்த் தெரியப்படுத்தாட்டி விருப்பமிருந்தாலும் நீங்களாய் ஒண்டும் சொல்லமாட்டியளெண்டும் எனக்குத் தெரிஞ்சிது. இந்த விஷயத்தை ஆக்களைப் பிடிச்சு சொல்லியனுப்ப ஏலுமே? நானாய்த்தான் துவக்கவேணும். சரிவந்தா வெற்றி; வராட்டித் துக்கம்தான்.’
முருகவேலுக்கு கொஞ்சம் வெறி அதிகம்போல. மனைவியோடு பினாத்திக்கொண்டு ஹோலுக்குள் இருந்தான். அவர்கள் மேலும் பேசினார்கள். அன்றைக்கில்லாவிட்டால் இனி என்றைக்குமில்லைப்போல் பேசினார்கள். சந்திரா சொல்லிக்கொண்டு போனபோது மணி பதினொன்று.
அடுத்த நாள் காலையில் தன் பயண முகவருடன் கதைத்து முடிந்த இருக்க முருகவேல் படுக்கையிலிருந்து எழுந்து வந்தான். அவனது முதல் கேள்வியே, ‘நேற்றைச் சாமான் எப்பிடி?’ என்பதாகவே இருந்தது. இவனும் பதிலை நல்லதென்ற அர்த்தம் வரச் சிரித்துவைத்தான். ‘இன்னும் கால் போத்திலளவு சரக்கு இருக்கு. அரைப் போத்தில் எடுத்தா இண்டைக்கும் கொண்டாடியிடலாம்’ என்று முருகவேல் சொல்ல, ‘அரை எடுக்கிற கதை வேண்டாம். எடுக்கிறதாயிருந்தா முழுசாய் எடுப்பம்’ என்றான் இவன். ‘மிச்சத்தை வைச்சு நாளைக்கும் கொண்டாடலாம்’ என முருகவேல் அதற்கும் சிரித்தான். ‘வீட்டில ஒண்டும் சொல்லமாட்டினமே?’ என்ற இவனது கேள்விக்கு ஒரு எள்ளல் தொனியுடன் அவன் சொன்னான், ‘உள்நாட்டுக்காறர் குடிச்சாலும், வெளிநாட்டுக்காறர் குடிக்காட்டிலும்தான் இஞ்ச எதுவெண்டாலும் நினைக்குங்கள். அதுசரி, பிஃளைற் புக் ஆயிட்டுதோ?’ என்றுவிட்டு மருதி அழைக்க குளியலறைப் பக்கம் சென்றான். இவன், 'நாளையிண்டைக்கு காலமை இஞ்சயிருந்து வெளிக்கிடுவன்' என்றான். ‘அப்ப... அதைச் சாட்டாய்ச் சொல்லியிடலாம்.’
அன்று இருள் விழுவதற்குள் சந்திராவை அடிக்கடி நினைத்துவிட்டான் கணேஷானந்தமூர்த்தி. ‘கொண்டாட்டம்’ தொடங்கியபோது அவளைக் காணவில்லையேயென்ற ஏக்கமே பிடித்துவிட்டான். சந்திரா எட்டு மணி செய்தி நேரத்திற்கு வந்தாள். ‘கடையில அறுநூறு ரூபா குடுக்கவேணும்’ என்றபடி ஒரு சிறிய கோல்ட் லீஃப் பைக்கற்றை அவன் முன்னால் போட்டாள். முதல்நாளைய கலகலப்பு இல்லாவிட்டாலும், உற்சாகமாகவே இருந்தாள். அடிக்கடி யாரும் காணாமல் அவனைப் பார்த்து கண்களில் நட்சத்திரங்களாய், மின்னல்களாய்ப் பறத்திக்கொண்டிருந்தாள். தன் மனக் காயத்தில் படும் மெல்லிய இறகின் வருடல்களாய் உணர்ந்தான் கணேஷானந்தமூர்த்தி. தன் வாழ்க்கை, குடும்பம்பற்றி அதுவரை அவள் எதுவும் தெரிய முயற்சித்திருக்காவிட்டாலும், அன்றைக்கு அதைச் சொல்லிவிடும் எண்ணம் அவனுள் இருந்தது. அவள் அவனால் இழக்கப்பட முடியாதவளென்ற உறுதிப்பாடு அவளது மனத்துக்கு அவனளிக்கும் வெகுமதியாகவும் இருக்கும்.
அன்றைக்கு எதிர்வீட்டு சுந்தரத்தையும் முருகவேல் அழைத்திருந்தான். ‘தெரியாமச் செய்யிறது தெரிய வந்திட்டா பரகசியமாயிடும். சாராயக் கடையெல்லாம் பூட்டியிருக்கிற நேரத்தில அது வேண்டாமெண்டு நெக்கிறன். கூப்பிட்டு கொஞ்சத்தை வாத்து விட்டிட்டா, ரகசியத்தை அவையே காப்பாத்தியிடுவின’ என்று காரணத்தை விளக்கினான். கணேஷானந்தமூர்த்திக்கு அதில் ஆட்சேபணையில்லை.
இடையிலே இவன் சிகரெட் புகைக்க வெளியே வந்தான். அப்போது அண்ணனிடமிருந்து தொலைபேசி வந்தது.
உற்சாகமற்ற குரலில் அண்ணன் சொன்னான்: ‘உன்ர வீட்டில றென்ருக்கு இருக்கிற ஆக்கள் அடுத்த மாசம் எழும்பிறதாய்ச் சொல்லியிட்டினம். நீ இப்ப அவசரப்பட்டு வந்தாலும் செல்ஃப் ஐசலேஷனுக்கு ஹோட்டல் ஒண்டுக்குத்தான் போகவேணும். அது வெளியிலயிருந்து வாற எல்லாருக்கும் இப்ப கட்டாயம். எல்லாம் பாக்க… நீ இன்னும் கொஞ்ச நாளைக்கு அங்கயே நிண்டு வரலாமெண்டுதான் எனக்குப் படுகிது. ஆனா இனி செய்ய ஒண்டுமில்லை. எதோ நடக்கிறபடி நடக்கட்டும். எயாப் போர்ட்டுக்கு நாங்கள் வரமாட்டம். எல்லாம் பாதுகாப்புக் காரணம்தான். நீ ஊபரொண்டிலதான் ஹோட்டலுக்குப் போகவேணும். பிறகொரு நாளைக்கு ஆறுதலாய் வந்து நான் பாப்பன். ஹோட்டல் நீ இஞ்ச வாற நாளையிலயிருந்து பதின்னாலு நாளுக்கு புக் பண்ணி வைக்கிறன். வந்தோடன போன் அடி. அட்ரஸ் தாறன்.’
அவனும் அவர் சஞ்சலம் தணிகிறமாதிரி விஷயங்களைச் சொன்னான்தான். அவருடைய குரலின் விரக்தி அப்போதும் தணியவில்லை. வீட்டை நவீனப்படுத்தும் வேலைகள் இடையில் நிற்பது காரணமோவென அவனுக்கு ஒரு யோசனை வந்தது. அதை பின்னர் நிலைமை திருந்தியதும் தானே வந்து முடித்துத் தருவதாக அவன் உறுதிசொன்னான். ‘நான் அதுக்காகச் சொல்லேல்லை. இஞ்ச சின்னப் பிள்ளையள் இருக்கெண்டு மோகனா பயப்பிடுகுது. சொந்தமாய் றியல் எஸ்ரேற் பிஸினஸ் செய்யிற உனக்கு வேலைக் கெடுபிடியுமில்லை, இந்தநேரத்தில போய் ஆர் வீடு விக்கவோ வாங்கவோ வரப்போகினம், கொஞ்ச நாள் கூடுதலாய் நிண்டு வரலாமேயெண்டு அவ நினைக்கிறாபோல. அவன் விரும்பியிட்டா, இனி செய்யிறதுக்கு ஒண்டுமில்லையெண்டு நான் சொல்லியிருக்கிறன். அப்பிடி இப்பிடி அண்ணி எதெண்டாலும் சொன்னா, முந்தினமாதிரி வாய் காட்டியிடாத. அண்ணியின்ர மனநிலையும் சரியில்லை. அவவின்ர சின்னம்மா வீட்டில நோய்த் தொற்று விழுந்திட்டுது. தூரத்துச் சொந்தத்தில ஆரோ செத்தும் போச்சினம். நாங்கள் செத்தவீட்டுக்கும் போகேல்லை. நிலமை உனக்கு விளங்குதுதான’ என்றுவிட்டு அண்ணன் போனை வைத்துவிட்டான்.
ல் விழுந்த அன்றைய காலகட்டத்தின் கடினங்கள் விமானம் ஏறிய பின்னால்கூட தீரப்போவதில்லையென்ற எண்ணம் அவனுள் விசனத்தைச் செய்தது. ஆயினும் மனத்துள் கிளர்ந்துகொண்டிருந்த விடுதலை உணர்வு அதை மூடிப்போக வைத்தது. அவன் அடுத்த சிகரெட்டை மூட்டினான்.
புகைத்துக்கொண்டு நிற்கையில் அருகே அரவமெழுந்தது. திரும்பினான். சந்திரா நின்றுகொண்டிருந்தாள். வெகு சமீபமாக. மூச்சு நெஞ்சில் சுட்டது. ‘எப்ப பிளைற்?’ என்று அவள் அண்ணாந்து கேட்டபோது அவள் குதப்பியிருந்த தாம்பூலத்தின் வாசம் அவனது முகத்தில் அடித்தது.
அண்ணனுடனான உரையாடலின் இறுக்கம் அவனுக்கு அக்கணமே மறந்தது. மறுநாள் இரவுக்கு அவள் வீட்டில் தான் சாப்பிட வருவதாய் அவன் சொன்னான். கேட்டு அவள் மனம் களிநடம் புரிந்தது. ‘சாப்பாடு மட்டும் போதா’தென்று அவன் சொன்னபோது அவள் கிலுங்கினாள். அந்தப் பூரிப்போடேயே அவள் உள்ளே சென்றாள்.
மறுநாள் வழக்கமான நேரத்தில் விடிந்தது. அவனும் வழக்கம்போல எழுந்து முற்றத்துக்கு வந்தான். எல்லாம் இயல்பிலிருந்தும் ஏதோ சஞ்சலம் அவனறியாமல் உள்ளே புகுந்ததுபோல் அவன் முகம் யோசனையில் கனத்துப்போயிருந்தது. நேற்றைய போதையில் நடந்தவோ, கேட்டவோ ஒன்று அவனது அவதானத்தில் தவறியிருக்கிறதா? என்ன அது?
வெளியே வந்த முருகவேல் இன்னுமென்ன பிரச்னையிருக்கிறது பயணத்துக்கு என்ற அதிசயத்தோடு விடுத்து விடுத்து அவன் நிலைக்கு காரணத்தைக் கேட்டான். கணேஷானந்தமூர்த்தி ஒண்டுமில்லை… ஒண்டுமில்லையென்று தவிர வேறு சொல்லத் தெரியவில்லை. அவனுள்ளுமே இருந்த அந்த வினாவுக்கு அவனே பதில் தேடிக்கொண்டிருக்கிறான். பதில்தான் கிடைக்காமலிருக்கிறது. அவனுக்குள் நூறு நூறாய் உள்ளிருந்து சம்பவங்கள் சுழியிட்டுக் கிளம்பின. அவற்றுள் அவன் நினைவை அலைக்கழிக்கும் சம்பவம் எதுவாயிருக்கக்கூடும்? அண்ணன், மோகனா, சந்திராவென எல்லாரும் மாறிமாறி மனத்தில் வரிசை கட்டினர். அவர்களின் மனங்களை வெளிப்படுத்திய பேச்சுக்களும், நடத்தைகளும் ஒவ்வொன்றாய் ஞாபகமாயின.
அண்ணன் என்றும்போல் அண்ணியின் குரலில் பேசிய ஞாபகம் துக்கமாய்ப் பெருகியது. மோகனாவின் மனம் ஒரு கடலோரப் பாறையைப்போல் இறுகிக் கிடப்பது துலக்கமாய்த் தெரிந்தது. அந்தப் பாறையினை நெருங்கமுடியாது ரொறன்ரோவுக்குத் தொலைதூரம் சென்றுவிட்ட தன் சகோதரியின் ஏக்குற்ற முகம் கண்ணில் நிழலாடியது. சந்திராவின் முதல் நாளிரவின் நெருங்குகைகள் நினைவுக்கு வந்தன. அவளின் மெல்லிய உடம்புக்கு நெஞ்சின் நிமிர்வு போதுமானதாயில்லையென்ற குறையை நீக்கிய அவளின் இறுகி அடங்கிக் கிடந்த முலையுறுத்தலின் சுகம் ஞாபகம் வந்தது. கடைசியில் நினைவின் சகலதும் ஒதுக்கி சந்திரா மேனி தகதகக்க அவன் மனத்தில் விடையாக எழுந்தாள்.
அவளது நெருங்குகை, வெற்றிலைச் சதும்பலின் வாசத் தெறிப்பு, மூச்சுக் காற்றின் உஷ்ணமெல்லாம் அவனில் இனிமையே செய்திருந்தன. ஆனால் அப்போது…? அன்றைய இரவு விருந்துக்குச் செல்லவிருப்பவனின் விருப்பத்தில் அது இடராய்க் கவிழ்கிறது.
மதியத்துக்கு சற்று முன்னராக அண்ணன் முருகானந்தமூர்த்தி அவனுக்கு மறுபடி போன் எடுத்தான். இரவில் வாகனப் பயணம் வேண்டாமென்று நண்பகலில் புறப்பட்டு முன்னிரவில் விமானநிலையத்தை அடையும்படி சொன்னான். கொழும்பிலிருந்து புறப்பட்ட இரவுப் பயணக்காரர் சிலர் இடைவழியில் தாக்கப்பட்ட இரகசிய சம்பவங்களைக் கூறினான். இவன் அநாயாசமாக அதெல்லாம் பிரச்னையில்லை, தான் பார்த்துக்கொள்வதாகச் சொன்னான். முகக் கவசம், கையுறை தவறவேண்டாமென்று அவன் சொல்ல, அண்ணனின் கரிசனையில் ஏற்கனவே அவன்மேலிருந்த கடுப்பு கொஞ்சம் இவனுக்கு இளகியது. இவனும் தவறமாட்டேனென அவன் மனம் சாந்திசெய்தான்.
எல்லாம் கண்டிருந்த முருகவேல், ‘இப்பதான் உன்னை பழைய ஆளாய் என்னால பாக்கமுடியுது’ என்றான் முகம் மலர்ந்து. இவன் முனைந்தது சிரிப்பாயில்லையென்று தோன்றிப்போலும், ‘எண்டாலும் எதோவொண்டு உன்னை கொஞ்சம் கலவரப்படுத்திற மாதிரித்தான் கிடக்கு’ என்றான்.
‘இல்லாமலெப்பிடி இருக்கும்? எயாப் போர்ட் போய்ச் சேர்ந்தாப்பிறகுதான் முழு நிம்மதி வரும். இடையில எத்தினையோ றோட் ப்ளொக்குகள் இருக்காம். எல்லாம் ஆமியின்ர கொன்றோல்ல இப்ப’ என்றான் இவன்.
‘கனடாப் பாஸ்போர்ட் வைச்சிருக்கிறாய், உனக்கென்ன பிரச்சினை வரேலும்? ஒண்டையும் யோசியாத.’
நேர நகர்ச்சி அன்றைக்கு இயல்பில்போல் இல்லையாக அவனுக்குத் தோன்றியது. விடிந்து அவ்வளவு நேரமாகியும் அப்போதுதான் பன்னிரண்டு மணியாகியிருந்தது.
மருதி குளித்து வெளிக்கிட்டுக்கொண்டு அந்த கட்டங்கடு மத்தியானத்திலும் குடையை எடுத்துக்கொண்டு அம்மன் கோயிலுக்குப் போய்க்கொண்டிருந்தாள். முதல்நாள் நடந்து திரிந்ததைவிட அவளுடைய நடை திடமாகவிருக்கிறது. கணேஷானந்தமூர்த்தி பார்த்துக்கொண்டே இருக்கிறான். மருதி தெருமுனையில் திரும்பி மறைய, அந்த இடத்தில் நிலைபெற்றெழுகிறது சந்திராவின் உருவம். அவ்வளவு தூரத்தின் அந்த மாயக் காட்சியிலும் அவளின் மேனியிலிருந்து முதல்நாள் பொங்கியெழுந்த வெப்ப அலைகளை உணர்கிறான் அவன். சந்திராவின் மேனியிலிருந்து வீசிய அந்த உஷ்ணம் அவள் அதுவரை அடக்கி வைத்திருந்த தேகத்தின் தவிப்பாகவும் இருக்கலாமென வலிந்து நம்ப முயல்கிறான். கடந்த மூன்று நாட்களாக மருதியின் உடம்பில் கிடந்த காய்ச்சல் கதிர் வீச்சை, சந்திராவினது மேனியில் அடித்த வெப்ப அலையுடன் ஒப்பீடு செய்கிறான்.
முதல்நாள் நடந்தவை பாதி அவனது நினைவில் இல்லை. ஆனாலும் அக் காலத்தில் தேவைப்பட்ட அவதானங்கள் தன்னிடத்தில் இருந்ததாயே அவனுக்குத் தோன்றுகிறது. ஆனால் அன்றைய இரவையும் அவன் துணிந்துவிட முடியுமா? அது தன்னை அபாயத்துக்கு தெரிந்தே வெளிப்படுத்தும் செய்கையாகிவிடவும் கூடும். அந்த எச்சரிக்கையைத்தானே காலம் எவருக்கும் அறிவுறுத்திக்கொண்டு இருக்கிறது அப்போது?
ஆம்; அதை அவனால் காதலுக்காகக்கூட, மீறிவிட முடியாது.
விளையப்போகும் ஏமாற்றம் அவளைச் சிதைத்துவிடும். ஒருநாள் வாழ்ந்துவிட்டு சாங்காலம்வரை அந்த நினைப்பிலேயே வாழ திடம்கொண்டிருந்தவளை எதுவெல்லாமோகூட அது செய்யவைத்துவிடும்.
அவனெண்ணங்கள் வேறுமாதிரி இருந்தன. இரண்டு பிள்ளைகளுடன் தன் உறவை வெட்டிக்கொண்ட தன் முந்திய மனைவியின் மறுதிருமணத் தழும்பு இன்னும் ஊறல்புண்ணாய் அவனுள் இருந்துகொண்டிருக்கிறது. அதை ஒரு பெருங்கற்பனையுடன் தன்னை நெருங்கியவளைக்கொண்டு ஈடுசெய்ய அவனுள் இருந்தது தீர்மானம். இனி…? திரும்ப வருவதாய்த் திண்ணமிருந்தாலும் ஒரு ஏமாற்றத்தில் அவளைவிட்டுப் போவது எவ்வாறான உடைப்பை அவளில் செய்யுமோ?
அது அவன் வாழ்வின் முக்கியமானவொரு தருணம். வாழ்வு-மரணம் என்ற இரண்டிலொன்றை அவன் தேர்வு செய்யவேண்டியிருக்கிறான்.
அவன் யோசித்தான்.
சிறிதுநேரத்தில் எதையோ திண்ணமாகியவன், ‘முருகு…!’ என்று கொஞ்சம் சத்தமாகவே கூப்பிட்டான்.
‘என்ன, மூர்த்தி?’
‘போத்திலை எடு. இப்பவே துவங்குவம்.’
ஆறு மணியளவில் புறாசல் முடிந்து சாப்பிட்டதும் ஹோலுக்குள் பாயைப் போட்டுக்கொண்டு படுத்துவிட்டான் கணேஷானந்தமூர்த்தி.
ஏழு மணியானது; ஏழரை மணியானது; எட்டு மணிச் செய்தி துவங்கு முன்னம் சந்திரா வந்தாள். சேலை அணிந்திருந்தாள். கோயிலுக்குப் போய் வருவதாய் மருதிக்குச் சொன்னாள். கணேஷானந்தமூர்த்தி ஒரு சுவரோரமும் முருகவேல் மறுபக்கத்திலுமாய்ப் படுத்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டவள், ‘பின்னேரம் தண்ணி போட்டவையோ, அக்கா?’ என்று மருதியைக் கேட்டாள்.
‘நாளைக்கு காலமை கொழும்பு பயணமெல்லே, கொண்டாடிச்சினம்போல’ என்றாள் மருதி.
எல்லாம் கேட்டபடி கண்களை மூடிப் படுத்திருந்தான் அவன். சரிந்து கிடந்த ஸ்திதியில் அவளறியாமல் அவ்வப்போது அவளைக் காணவும் அவனால் இயன்றிருந்தது.
‘ராவைக்கு வீட்டை சாப்பாட்டுக்கு வாறமெண்டவர்’ என்றாள் சந்திரா. குரல் தழுதழுத்திருந்தது.
அவனுக்கு நெஞ்சை முட்டிக்கொண்டு வந்தது.
‘மறந்திருக்கமாட்டார், சந்திரா, தண்ணி கூடிப்போச்சுப்போல. என்ன செய்யிறது? சாப்பாடுதான, இன்னொரு நாளைக்கு வராமலே போகும், அப்ப குடு.’
மருதியின் பேச்சு எவ்வளவுக்கு அவளை ஆறுதல் படுத்தியிருக்க முடியும்? ஜன்னல் கம்பியினை ஒரு கையால் பற்றியபடி தஞ்சக்கேடடைந்தவள்போல் துவண்டு நின்றிருந்தாள் சந்திரா. இடியப்பம், பிட்டு, தோசை, தேங்காய்ச் சம்பல், கோழியிறைச்சி, மீன் குழம்பு, முட்டைப் பொரியலென தன் வசதிக்கு மீறி அவள் செய்துவைத்த உணவு அவ்வளவற்றையும் கொண்டுபோய்க் கொட்டவேண்டி அவளுக்கு நிச்சயமாய் நேர்ந்திடாது. ஆனால் அவளது எதிர்பார்ப்பு…? கனவின் திசுமங்களால் அவள் கட்டியெழுப்பிய கோட்டை…? அந்த மெல்லிய உடம்புக்குள் கிடந்த இதயத்தின் மீதுயர்த் துடிப்பு இனி எப்படி அடங்கும்? இன்னொரு முறை வரும் என்கிறாள் மருதியக்கா. அது இன்னொரு வாழ்விலல்லவா வரமுடியும்? அந்த வாழ்வு அன்றுடன் அவளுக்கு முடிவெய்துகிறதே.
அவன் ஒருபோது பார்க்கையில் இன்னும் அந்த நிலைப்பிலேயே அவள் நின்றிருந்தாள். கண்களிலிருந்து நீர் பெருகாமல் இருந்திருக்க முடியாது. நொருங்கிக் கொட்டுண்டு போகாவிட்டாலும் சிதறித்தான் போயிருந்தாள்.
பின் என்ன நினைத்தாளோ, ஒரு விசையில்போல், ‘நான் போறனக்கா’ என்றுவிட்டு கதவை ஓங்கிச் சாத்தியபடி படியிறங்கினாள். ‘எழும்பினாச் சொல்லுங்கோக்கா நான் வந்திட்டுப் போனனெண்டு.’ படலையடியில் அவள் குரல் கேட்டது.
கதவடித்த சடார் சத்தத்தில் அப்போதுதான் எழும்புவதுபோல் அவன் எழும்பி நிமிர்ந்தான்.
‘சந்திரா உங்கள சாப்பாட்டுக்கு கூப்பிட வந்திருந்தாள். பாவம்… அந்த நோய்ஞ்சான் உடம்பைப்போலதான், நொய்ஞ்ச மனம் அவளுக்கு. என்னெண்டு தாங்கப்போறாளோ? கோயிலுக்குப் போட்டு வந்திருந்தாள். என்னத்தை வேணுமெண்டு கும்பிட்டாளோ?’ என்றாள் மருதி சற்றே எரிச்சலுடன்.
‘இப்பிடி நடக்குமெண்டு நினைக்கேல்லை’ என்று அவன் மெய்போல தன் பொய்யைச் சொல்லத் துவங்கினான்.
மருதி நம்பியிருப்பாள். ‘சரி, விடுங்கோ, இதென்ன வேணுமெண்டு செய்ததே, நாளைக்குச் சொன்னா அவள் விளங்கப்போறாள்.’
அவளுக்கு விளங்குமென்கிறாள் மருதி. அவளுக்கு விளங்குமா? சாப்பாட்டு விஷயத்தை வைத்து அன்றைய நிகழ்வை மட்டுக்கட்டுபவளுக்கு, அவள் விளங்குவாள்போல் தெரியலாம்; நாளைக்கு எல்லாம் சகஜமாகிவிடுமெனத் தோன்றலாம். அதுவரையில் எழுந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த முருகவேலும் அவளுக்கு விளங்குமென்று மருதி சொன்னதை ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டுகிறான். ஆனால்… அவனுக்கு…?
எல்லா ஒழுகலாற்று மரபுகளையும் உடைத்தெறிந்துகொண்டு அவள் தன்னை நெருங்கியபோதே அவனுக்குத் தெரிந்திருந்தது, அவள் சாதாரணத்தியல்லளென்று. அவளுக்கு ஒரு அறமிருந்தது; ஆனால் மற்றவர்கள் கொண்ட அறமல்ல அது. பிறப்புக்கும் இறப்புக்குமிடையிலான காலத்தின் நகர்வில் உயிர்த்தலென்பது வாழ்தலல்லவென்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. அவனைவிடவுமே அவள் அதை நன்றாக உணர்ந்திருந்தாள். அது அவளை உடைக்கும். சிதறவைக்கும். மற்றவர்களுக்கு நாளையுண்டு. அவர்கள் வாழ்வார்கள். அக் கொடூர காலம் எந்தளவு அழிவோடும் ஒரு முடிவுக்கு மீளும். ஆனால் சந்திராவுக்கு? ஒப்பந்த உறவுகள்பொறுத்து அவ்வாறான தருணங்களில் மீட்சிக்கு வாய்ப்பு வருவதுண்டு. ஆனால் மனங்களின்மேல் கட்டப்படும் உறவுகளுக்கு அது அரிதாகவே நிகழ்கிறது.
எல்லாவற்றிற்குமாய் காலப் பெரும்பரப்பில் நிஷ்டூரம் ஆடிக்கொண்டிருக்கும் அவ்வூழியின்மேல் ஒரு பழியைப் போடலாம்தான். ஆனால் மனங்களின் சாட்சியாய் உருவாகும் உறவுகள் சிதைவதில் அது எந்தப் பயனையும் செய்வதில்லை. அந்தக் குறிப்பிட்ட காலத்தில் அது நடந்ததென்பது மட்டுமே அடையாளமாய் எஞ்சுகிறது.
(முற்றும்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.