அமீரா தூக்கத்தில் வீரிட்டபடி எழுந்தாள்.
‘என்னம்மா என்னாச்சு கனவு கண்டியா?’ அருகே படுத்திருந்த தாய் அவளை அணைத்து ஆறதல் சொன்னாள்.
‘டாட் சொன்ன சொல்லைக் காப்பாற்ற இல்லையேம்மா’ என்று சொல்லி விம்மி விம்மி அழுதாள். அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளைத் தூங்க வைத்தாலும் மெலோடியால் தூங்க முடியவில்லை. மகளை மட்டுமல்ல, தன்னையும் ஏமாற்றி விட்ட துயரத்தில் குலுங்கிக் குலுங்கி அழுதாள். வேகமாக நடந்து முடிந்த எல்லாமே ஒரு கனவு போல அவளது கண்ணுக்குள் நிழலாடியது.
19-3-2020 – நியூயோர்க் நகரம்.
வேலைக்கு வரும்போதே அவன் இருமிக்கொண்டுதான் வந்தான். இவனுடன் ஒன்றாக வேலை செய்பவன் நேற்றும் இருமிக்கொண்டு இருந்ததை இவனால் சகிக்க முடியவில்லை. இன்று அவனுக்குச் சாதுவான ஜுரமும் இருந்தது. ‘இந்தா பார் வேலை வேலை என்று அலையாதே, சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டலாம், புரியுதா..? பேசாமல் இரண்டு நாள் ஓய்வெடுத்துக் கொள், நான் சமாளிக்கிறேன்’ என்று சொல்லி அவனைக் கட்டாயப் படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.
சாதாரண புளு ஜுரம் என்று நினைத்துதான் அவனை ஓய்வெடுக்கச் சொல்லியிருந்தான். அவசரமாகச் செய்து முடிக்க வேண்டிய வேலை என்று முதலாளி ஏற்கனவே சொல்லி அனுப்பி இருந்ததால், இவன் கட்டாயம் வேலைக்குப் போகவேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தன்னை ஆளாகிக் கொண்டான். 25 வருட தொழில் அனுபவம் இவனுக்கு இருந்தது. தொழில் நிமிர்த்தம் ரொலாண்டோ சிலநாட்களாக அரேன்ஞ்கவுண்டியில் இருந்து நியூயோர்க் மான்ஹற்ரன் நகரத்தில் உள்ள மருத்துவமனைக்குத் தொலைதொடர்பு சாதனங்களை பழுதுபார்ப்பதற்காகச் சென்று வந்தான்.
20-3-2020
வீட்டுக்குத் திரும்பி வரும்போது ரொலாண்டோ உடம்பு சோர்வாக இருப்பதை உணர்ந்தான். அவன் வந்து குளித்து உடைமாற்றியதும் குடும்பமாக இருந்து உணவருந்தினார்கள். சோர்வாக இருந்ததால் படுக்கப் போவதாகச் சொல்லி எல்லோருக்கும் குட்நைட் சொல்லிவிட்டுப் படுக்கைக்குப் போனான். ஏற்கனவே அட்வில் மாத்திரை இரண்டு எடுத்திருந்தான்.
‘காபி போட்டுத்தரட்டா, சுடச்சுட அருந்தினால் நல்லாயிருக்கும்’ என்றாள் மனைவி மெலோடி.
‘வேண்டாம் ஹணி, தூக்கம் வருது, நான் தூங்கப் போறேன்’ என்றான். ‘பத்தாவது பார்த்டே வருது, பிரன்ட்ஸ{க்கும் சொல்லிக் கொண்டாட ஒலீவியாவும், அமீராவும் ஆசைப்படுறாங்க, இந்த பார்த்டே மட்டும் அப்படிச் செய்வோமா..?’ படுக்கையில் மனைவி மெலோடி அவனிடம் கேட்டாள்.
‘நம்ம செல்லங்களுக்கு இல்லாததா, செஞ்சிட்டாப் போச்சு’ என்று சொல்லி, வழமைபோலவே ஒரு புன்சிரிப்புடன் அவளின் தலையை வருடியபடியே அயர்ந்து தூங்கிவிட்டான். அதன் பின் மனைவி சொன்ன எதுவுமே அவன் காதில் விழவில்லை. மெலோடிக்கு அவனிடம் பிடித்ததே இதுதான், எந்தச் சந்தர்ப்பத்திலும் மனம் நோகக்கூடியதாக எதுவுமே சொல்லமாட்டான்.
‘ஹணி, உன்னைக் காதலிக்கும்போது கூட வாழ்க்கை இவ்வளவு இனிமையாக இருக்கும் என்று நான் நினைத்ததில்லை’ என்று ஒருநாள் அவன், மெலோடியின் இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டு கண்கலங்க உணர்வுபூர்வமாய்க் குறிப்பிட்டதை அவளும் நினைவில் வைத்து அவன் மனம் நோகாமல் இதுவரை நடந்து கொண்டாள்.
ரொலாண்டோ காலையில் எழுந்து வேலைக்குக் கிளம்பினான். குடும்பத் தலைவன் படுத்தால் எல்லாமே குலைந்துவிடும் என்பதால் தென்பாக இருப்பது போல காட்டிக் கொண்டான். நியூபேர்க்கில் உள்ள கூடைப்பந்தாட்ட கிளப்பில் பயிற்றுனராகவும் இவன் இருந்தான். தொண்டை சாதுவாகக் கரகரத்து இரண்டு தடவை இருமியது. சூட்டிருமலாக இருக்கும் என்று ஸாம்பு தேய்த்துத் தலையில் முழுகினான். கிளம்பும் போது இரண்டு பெண்களும் ஓடிவந்து அவனை கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.
‘என்னம்மா, செல்லக்குட்டீங்க ஓடிவந்து கட்டிப்பிடிக்கிறதைப் பார்த்தால் ஏதோ பெரிசாய் கேட்கப்போறீங்க என்று தோணுது, கரெக்டா..?’
‘கரெக்ட் டடி..!’ என்றார்கள் ஒலிவியாவும் அமீராவும் ஒரே நேரத்தில். ‘சரி என்னென்று சீக்கிரம் சொல்லுங்கம்மா, டடி வேலைக்குக் கிளம்பணும்’
‘எங்க பத்தாவது பார்த்டே வருது டடி, அவசர வேலைன்ணு சொல்லி எங்களை ஏமாற்றக்கூடாது. எங்களுக்காக அன்னிக்கு லீவு எடுத்திடுங்க டடி.. பிளீஸ்..!’ இரட்டைப் பிறவிகளான அவர்கள் கேட்டதும் அவன் உருகிப்போனான். ‘நிச்சயமாய், வேலையை விட்டிட்டாவது இந்தமுறை நானும் உங்ககூட ரென்ந் பார்த்டே கொண்டாடுவேன்’
‘அப்புறம் இன்னுமொரு கண்டிஷன், உங்களால முடியும் டாட்..!’ என்றனர் இருவரும் சொல்லி வைத்தது போல..!
‘என்னது..?’ என்றான்.
‘நீங்க பாட்டியில எங்க பிரெட்ஸ்ஸ{க்கு ஸல்ஸா டான்ஸ் ஆடிக்காட்டணும், தாத்தா சொன்னார் நீங்க ரொம்ப நல்லாய் டான்ஸ் ஆடுவீங்களாமே.’
‘டான்ஸ்தானே ஆடிட்டாப் போச்சு, ஆனா ஒரு கண்டிஷன்’
‘சொல்லுங்க டாட்’ என்றாள் ஒலிவியா.
‘என்னோட செல்லங்களும் என்னோட சேர்ந்து ஆடணும்?’
‘டீ..ல்..!’ கையை நீட்டினாள் அமீரா.
பிள்ளைகளுக்கு இரண்டு கைகளாலும் தட்டிப் புறமிஸ் பண்ணிவிட்டுப் புறப்பட்டான். பெண்கள் இருவரும் ஸல்ஸா டான்சுக்கு எப்படி அடி எடுத்து வைப்பது என்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தாயிடம் கேட்பதற்காக ஓடிப்போயினர்.
21-3-2020
மெலோடி நன்றாக சமையல் செய்வாள். உயர்வகுப்பில் ஹோம்சயன்ஸை ஒரு பாடமாக எடுத்திருந்தாள். பிள்ளைகளின் பார்த்தே பார்ட்டிக்குத் தானே கேக்செய்வதாக தீர்மானித்துக் கொண்டாள். அதற்கான பண்டங்களை வாங்கி வைத்திருந்தாள். இரண்டு கேக் தனித்தனியே செய்யாமல் நீள்சதுரமான ஒரே கேக்கில் இரண்டு பெண்களின் பெயர்களையும் எழுதினால் நன்றாக இருக்கும் என் நினைத்தாள்.
வேலையால் திரும்பி வந்த ரொலாண்டோவுக்கு இருமலும் ஜுரமும் இருந்தது. மெலோடி ஓடிப்போய் அவனுக்கு சூப் தயாரித்துக் கொண்டு வந்து கொடுத்தாள். சூப் குடித்தபோது, ‘நாக்கு மரத்துப் போச்சு பெரிதாக ருசி தெரியவில்லை’ என்றான்.
ஒலீவியாவும், அமிராவும் ஓடி வந்தார்கள்.
‘டடி ஸல்ஸா டான்சுக்கு ஸ்ரெப்ஸ் சொல்லித்தாங்க’ என்றார்கள்.
‘டடிக்கு சுகமில்லை, நாளைக்கு..!’ என்றாள் மெலோடி.
‘குழந்தைங்களுக்கு இல்லாததா, வாங்க’ என்று சொல்லி ஒரு பாடலுக்கு எப்படி நடனமாட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தான். அமிராவை பார்த்துக் கொண்டிரு என்று சொல்லிவிட்டு ஒலீவியாவோடு நடனமாடிக் காட்டினான்.
‘அடிபப்படை நகர்வுகள் இரண்டுதான். முன்னுக்கும் பின்னுக்கும் எப்படி அடி எடுத்து வைப்பது என்பதுதான். நடனமாடும்போது மூன்று அடி முன்னும் பின்னும் வைக்க வேண்டும் நாலாவதில் நிற்பாட்ட வேண்டும், அப்புறம் மூன்று அடி முன்னும் பின்னும் எட்டாவதில் நிற்பாட்ட வேண்டும். இப்படித்தான் தொடரவேண்டும்’
அவனுக்கு மூச்சிரைக்கவே ‘போதும் நிறுத்துங்க’ என்று சொல்லி அத்துடன் அதை நிறுத்தினாள் மெலோடி. ‘பெண்ணுங்க கேட்டவுடனே ஜுரம் எங்கே போச்சுதென்றே தெரியலை. எனக்கும் சொல்லித் தந்தால் என்னவாம்..?’
‘நீ என்னோட ஜீன் இல்லையே, அவங்கிட்ட டான்ஸிங் இருக்கு..! என்றான் வேடிக்கையாக. அவனுக்குக் களைப்பாக இருக்கவே, அப்படியே படுக்கையில் சரிந்தான்.
‘மருத்துவமனைக்குச் சென்று ஒருக்கால் காட்டுவோமா?’ என்றாள் மெலோடி.
‘ஐயாம் ஓகே.. எல்லாம் காலையில் எழுந்ததும் சரியாயிடும் பயப்படாதே!’ என்று அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு படுத்துத் தூங்கிப்போனான்.
இப்படி ஒரு நாளும் இருமல், ஜுரம் என்று ரொலாண்டோ படுத்ததில்லையே, என்னாச்சு? ரொலாண்டோ அயர்ந்து தூங்கியதும் தனது சினேகிதியோடு செல்போனில் பேசினாள்.
‘எல்லா இடமும் கொரோனா என்றொரு புதியவைரஸ் பரவுதாம் மெலோ. அதுக்குத் தடுப்பூசியோ, மருந்தோ இன்னும் கண்டுபிடிக்கலையாம். பார்த்துக் கொண்டிருக்க வேண்;டாம். எமெர்ஜன்ஸிக்கு கொண்டு போறது நல்லது’ என்று அதிர்ச்சிக் குண்டொன்றைத் தூக்கிப் போட்டாள் சினேகிதி. அவள் சொன்ன தகவல் இவளை பயம் கொள்ள வைத்தது. ஒருவேளை அந்த வைரஸ் தொற்றாக இருக்குமோ?
பிள்ளைகளின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதில் அவள் கவனம் இதுவரை இருந்ததால், வேறு எதையும் அவள் யோசிக்கவில்லை. சினேகிதி தகவல் சொன்னதும் உடனே இன்டநெட்டில் போய்த் தேடினாள். சீனாவில் ஆரம்பித்த வைரஸ் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் என்று ஒவ்வொரு நாடாக வேகமாகப் பரவுவதாகவும் அமெரிக்காவிலும் சிலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிந்து கொண்டாள். ஒருத்தருமே இந்த கொரோனா வைரஸ் நோயைப் பெரிதாக எடுத்ததாகத் தெரியவில்லை. ஆட்டங்களும் பாட்டங்களும் தொடர்ந்து கொண்டிருப்பதை முகநூல் எடுத்துக் காட்டியது.
22-3-2020
அவசர முதலுதவிப் பிரிவுக்கு ரொலாண்டோவைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றாள் மெலோடி. அவர்கள் பார்த்துவிட்டு சாதாரண ஜுரம்தான் என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டனர். அன்று இரவு முழுவதும் அவனால் தூங்க முடியவில்லை, அனுங்கிக் கொண்டே இருந்தான். தொண்டை காய்ந்திருப்பது போல உணர்ந்தான். அவர்கள் சொன்ன மாத்திரையை மருந்தகத்தில் வாங்கி வந்து அவனுக்குக் கொடுத்தாள் மெலோடி. கொரோனா தொற்று நோய் பரவுவதால் வெளியே திரியவேண்டாம் என்றும், வீட்டிலே இருக்கும்படியும் அறிவுறுத்தி அனுப்பியிருந்தனர். இந்த வைரசுக்கு இன்னும் மருந்தே கண்டு பிடிக்கவில்லை என்றும் சொல்லி அனுப்பியதால் இரண்டு நாட்களாக வெளியே செல்ல முடியாமல் தவித்தாள் மெலோடி.
24-3-2020
இனியும் பொறுத்திருப்பதில் அர்த்தமில்லை என்று முடிவெடுத்தவள் ஆம்புலன்சை அழைத்து அவசர சிகிட்சைப்பிரிவுக்கு அவனைக் கொண்டு சென்றாள். நீண்ட நேரம் காத்திருந்து அவனை உள்ளே எடுத்தார்கள். அவசரமாக பரிசோதனை செய்தனர். சாதாரண ஜுரம்தான் பயப்படத் தேவையில்லை, வீட்டிலே இருந்து ஓய்வெடுத்தாலே போதுமானது என்று சொல்லி அனுப்பினார்கள். மனைவியும், பிள்ளைகளும் பயந்து போய்விடுவார்கள் என்பதால், ரொலாண்டோ தனது வேதனையை வெளியே காட்டாது சமாளிக்க முற்பட்டான். அவன் சுவாசிக்கக் கஷ்டப்படுகிறான் என்பதை மெலோடி அவதானித்தாள்.
26-3-2020
மீண்டும் அவசர சிகிட்சைப் பிரிவுக்கு அவனைக் கொண்டு சென்றாள். பலர் வரிசையில் காத்திருந்தனர். உள்ளே எடுத்து சோதனை செய்தனர். பிராணவாயுவின் நிலை குறைவாக 89 என்று காட்டியது. 94க்குக் கீழே இருந்திருந்தால் கட்டாயம் செயற்கைச் சுவாசம் கொடுத்திருக்க வேண்டும். மருத்துவமனை அதைச் செய்யவில்லை. ஆனாலும் நோயாளிகளை அனுமதிக்க இடம் இல்லை என்பதால் காற்றை உள்ளிழுக்கும் கருவியைப் பாவிக்கும்படியும், வீட்டைவிட்டு வெளிக்கிடக்கூடாது என்றும் அறிவுறுத்தி மீண்டும் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். வேறு வழியில்லாமல் அவர்கள் திரும்பவும் வீட்டிற்கு வந்தார்கள்.
29-3-2020
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். 10வது பிறந்தநாள் கொண்டாட்டம் என்பதால் மாலை நேரம் வரும்படி நண்பர்களையும் அழைத்திருந்தனர்.
காலையில் ரொலாண்டோ மூச்சு விடுவதற்குச் சிரமப்பட்டான். மருத்துவமனையில் காட்டி ஏதாவது மருந்து எடுத்து வருவோம் என்றுதான் கிளம்பினார்கள். இம்முறை அவனது நிலைமையைப் பார்த்ததும் அவனை அங்கே அனுமதித்து செயற்கைச் சுவாசம் கொடுத்தார்கள். உறவுகள் யாரும் நிற்கக்கூடாது, இது ஒரு தொற்று நோய் என்று சொல்லி மெலோடியை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.
‘மம், டடி இன்னும் வரல்லையா, பிரெண்ட்ஸ் எல்லோரும் காத்திருக்கிறாங்க’ என்று ஆவலோடு கேட்டாள் அமீரா.
‘டடிக்கு ஜுரம் கடுமையாய் இருக்குண்ணு மருத்துவமனையில இருக்கச் சொல்லிட்டாங்க. ஜுரம் விட்டதும் வந்திடுவார், இவங்க வீட்டுக்குப் போகணுமில்லையா, நீங்க கேக்கை வெட்டுங்க.’ என்றாள் மெலோடி.
‘மம், டடி இல்லாமலா..?, எப்படியும் கட்டாயம் வருவேன்னு எனக்கு புறமிஸ் பண்ணிணாரம்மா’ என்றாள் அமீரா.
‘புரியுதம்மா, நம்ம டடியால இப்ப எழுந்து நடக்க முடியாதுதானே, அப்புறம் நாங்களே சேப்பிரைஸ்ஸா கேக்கைக் கொண்டுபோய் டடிக்கு ஊட்டிவிடுவோம், சரியா..?’
மெலோடி செல்போனில் டாக்டரோடு தொடர்பு கொண்டாள்.
‘எனக்காக ஒரு உதவி செய்விங்களா டாக்டர்?’
‘சொல்லுங்கம்மா’
‘இன்னிக்கு அவரோட பெண்களோட பார்த்டே, கலந்து கொள்வதாகப் புறமிஸ் பண்ணியிருந்தார், ஆனால் இந்த சூழ்நிலையில் அவரால வீட்டுக்கு வரத்தான் முடியலை, இந்த போனையாவது அவரிட்ட கொடுக்கிறீங்களா?’
மூச்சு விடமுடியாமல் அவஸ்தைப்பட்டு மயங்கிய நிலையில் இருந்த ரொலாண்டோவுக்கு ஆக்ஸிஜன் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். டாக்டர் செல்போனை அவரது காதுக்கருகில் வைத்தார். ‘ஹப்பிபார்த்டே’ பாடி முடித்ததும் ஸல்ஸா நடனத்திற்கான பாடல் ஆரம்பமாகிய சத்தம் கேட்டது.
மயக்க நிலையில் இருந்த ரொலாண்டோவின் கால்விரல்கள் அடுத்த வினாடி மெல்ல அசைந்தன. அப்புறம் இசைக்கேற்பப் பாதங்கள் படுக்கையில் இருந்தபடியே மெல்ல ஆடத் தொடங்கின. வண்.. ரூ.. திறி.. ஸ்ரொப், வண்.. ரூ.. திறி.. ஸ்ரொப் உதடு மெதுவாக அசைந்தது. கண்கள் மூடியபடியே இருந்தாலும், இமைகளில் அசைவுகள் தெரிந்தன. டாக்டரும், தாதிகளும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். உச்சக்கட்டத்திற்குச் சென்ற இசை மெல்ல மெல்லக் குறைந்து ஓய்ந்தது, மறுகணம் அந்தக் கால்களின் அசைவும் மெல்லமெல்ல நின்று போனது. எல்லாமே அடங்கிப்போனதற்கான அறிகுறியாய் நிசப்தம் அவனைச் சூழ்ந்து கொண்டது.
அவனது மரணம் எதையோ எடுத்துச் சொன்னது, மனிதனின் அசட்டையீனத்தால் பேரழிவு ஒன்று காத்திருக்கிறது என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.