ஜன்னல் கண்ணாடிக்கூடாக வெளியே வெறிச்சுப் பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர். மேப்பிள் மரத்தில் ஒரு சில அரும்புகள் துளிர்விட்டுக்கொண்டிருந்தன. அங்கும் இங்குமா சில பறவைகள் பாடிக்கொண்டிருந்தன. ஆனால் தெரு மட்டும் வெறிச்சோடிப் போயிருந்தது. தேடிப்பிடித்தால் காணக்கூடியளவில் மிகச் சிலர் ஆளுக்கு ஆள் வெகுதொலைவில் முகமூடிகளுடன் வேகமாக நடந்துகொண்டிருந்தனர். பக்கத்திலிருந்த பூங்காவில் அணில்கள் மட்டும் ஓடிவிளையாடிக் கொண்டிருந்தன. குளிரோ, வெய்யிலோ எதுவானாலும் ரிம் ஹோட்டன்ஸ் கோப்பி வாங்குவதற்காகக் காத்திருக்கும் கார்களையும் மனிதர்களையும் அவன் பார்த்து நீண்ட நாட்களாகியிருந்தது.
மேசைமேல் ஏற்றப்பட்டிருந்த கதிரைகளும், கலகலத்திருக்கும் அந்தவிடத்தில் இருந்த மயான அமைதியும் அவனுக்குப் பூதாகரமாகத் தெரிந்தன. இந்த அமைதி, இந்த வேலை, கனடாவுக்கு மனைவி சாந்தியின் வரவு … என அவன் வாழ்வுடன் தொடர்பான அனைத்துமே பதிலற்ற கேள்விகளாக மெதுமெதுவாக விசுவரூபமெடுத்துக் கொண்டிருந்தன.
‘கெதியிலை புரோமோசனுக்கு அப்பிளை பண்ணோணும். அப்பத்தான் சாந்தி வரேக்கே சிலவுக்குக் கட்டுபடியாகுமெண்டு நினைச்சுக்கொண்டிருக்க, ம்ம், சத்தமில்லாமல் நான் யுத்தம்செய்வன் எண்டு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிற இந்தக் கொரோனா வந்து நிலைமையை அடியோடு மாத்திப்போட்டுது, சீ…’
அவன் மனசுக்குள் பொங்கிய விரக்தியை, தொற்று வராமல் இருக்கிறதே பெரியவிஷயமென்ற அறிவு சமாதானப்படுத்த முயன்றபோது, மாற்றக்கூடியவற்றை மாற்றக்கூடிய வல்லமையையும் மாற்றமுடியாதவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனவலிமையையும் வளர்த்துக்கொள் என எங்கோ வாசித்த ஒரு வாசகம் அவன் நினைவுக்கு வந்து அவன் இதயத்தை ஆதரவுடன் தடவிக்கொடுத்தது.
“சனியன் பிடிச்ச கொரோனா எண்டு திட்டுறதாலை எனக்கு நானே மனவுளைச்சலை உண்டாக்கிறதைத்தவிர வேறு என்னத்தைச் சாதிக்கப்போறன்,” என்ற அவனின் சிந்தனையை வேலையைப் பொறுப்பேற்க வந்திருந்த டொமினிக்கின் குரல் குலைத்தது.
“சரி, நாளைக்குச் சந்திப்பம்.” என பேப்பருக்குள் மூழ்கிப்போயிருந்த மனேஜருக்கு ஆங்கிலத்தில் சொல்லிப்போட்டு வெளியே வந்த சுந்தர் கதவைத் திறக்கவும் பானு உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
“ஓ, பானு! உங்களைச் சந்திப்பன் எண்டு நான் எதிர்பார்க்கவேயில்லை. என்ன இண்டைக்கு நீங்க வெள்ளனத் தொடங்கிறியளா?”
வேலைநேரங்கள் மாற்றப்பட்டிருந்ததால் மூன்று கிழமையாக அவனுக்கு அவளைச் சந்திக்கக்கிடைக்கவில்லை. அவனின் முகம் அவனையறியாமலே மலர்ந்தது.
ரிம் ஹோட்டன்ஸில் அவனுக்கு அவள்தான் வேலைபழக்கினாள். அப்படி ஆரம்பித்த அறிமுகம் நல்லதொரு நட்பாக அவர்களிடையே மலர்ந்திருந்தது.
பானு அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். அந்தப் புன்னகையை மேவியதொரு கலக்கம் அவளின் கண்களில் அவனுக்குத் தெரிந்தது.
“இல்லை, சுந்தர். மனேஜர் வந்து சந்திக்கச் சொன்னார். கையும் ஓடேல்லை, காலும் ஓடேல்லை. அதாலை வெள்ளனவே வந்திட்டன்,” சொல்லிக்கொண்டே ஜக்கற்றைக் கழற்றினாள், அவள்.
‘ஓ!”
அவனின் அந்த ‘ஓ’ அவனுக்கே குழப்பத்துடன் ஒலித்தது. நாளைக்குச் சந்திப்பம் என அவன் மனேஜருக்குச் சொல்வதே அடுத்த நாள் வேலை இருக்கிறதென அவனுக்கு அவனே உறுதிப்படுத்திக்கொள்ளத்தான். பானு ஒரு மேற்பார்வையாளர் என்பதால் … அதிகம் பேர் வேலைசெய்யத் தேவையில்லாத நேரத்தில் மேற்பார்வையாளர் ஏனென வேலையை விட்டு அவளை நிற்பாட்டப் போறாரோ … அவனின் மனம் பானுவுக்காகக் கலங்கியது.
ஓடிக்கொண்டிருந்த மெசின் ஒன்றுக்குள் சிக்கிக்கொண்டதால், ஆறு மாதத்துக்கு முன்பாக வலது கையின் இரண்டு விரல்களை அவளின் கணவன் இழந்திருந்தான். காலம் அவனின் உடல் காயத்தை ஒருவாறாகத் தேற்றிவிட்டிருந்தாலும்கூட, அவனின் மனக் காயம் நாள் ஆக ஆக கூடிக் கொண்டிருந்ததை சுந்தர் அறிவான். அது பானுவை மிக அதிகமாகப் பாதிப்பதும் சுந்தருக்குத் தெரிந்ததே.
கடைசியாக அவன் அவளைச் சந்தித்தபோது, பிளாஸ்ரர் போடப்பட்டிருந்த அவளின் நெற்றியின் வலது பகுதியில், தழும்பு ஒன்று முன்தள்ளிக்கொண்டு நிற்பது அவளின் முகத்தில் அசைந்தாடிக்கொண்டிருந்த அந்தச் சுருட்டை முடிக்கிடையிலும் தெளிவாகத் தெரிந்தது.
அன்று அந்தக் காயம் பற்றி விசாரித்த அனைவருக்கும் குளியலறையில் விழுந்துபோனேன் என்றே அவள் சொல்லிக்கொண்டிருந்தாள். தேநீர் இடைவேளையின்போது, அவள் அருகில் சென்று, “பானு, ஆ யூ ஓகே, என்ன நடந்தது?” என மெல்லிய குரலில் அவன் கேட்டபோது அவள் கண்களைக் கண்ணீர் நிறைத்தது. தலையை இடமும் வலமுமாக ஆட்டியவள், பிறகு சொல்கிறேன் என்பது போல வாயை அசைத்தாள். பின்னர் வேலை முடிந்துபோகும்போது அவள் அவனைப் போனில் அழைத்தாள்.
“பானு,” என அவன் சொல்லும்முன்பாக ஓங்கி ஒலித்த அவளின் கேவல் அவன் மனதைக் குடைந்தது. “சனிக்கிழமை களைப்பாயிருக்கு எண்டு இவர் சோபாவிலை படுத்திருந்தவர். இந்தச் சின்னன் ரண்டும் ஒண்டை ஒண்டு கலைச்சுக் கொண்டு ஓடித் திரிஞ்சுதுகள். அந்தச் சத்தத்திலை அவற்ரை நித்திரை போட்டுது. கோவத்திலை அவர் பெரிசாக் கத்தினார், பத்தாததுக்கு சுமிக்கு அடிச்சும்போட்டார்… தேத்தண்ணியோடை போன நான் ஏனப்பா அடிச்சனியள், அதுகள் சின்னப் பிள்ளையள் விளையாடமல் என்ன செய்யுங்கள், நீங்க உள்ளுக்குப்போய்ப் படுக்கிறதுதானே எண்டு சொன்னன். அவ்வளவுதான் … என்னடி நீ எனக்குப் படிப்பிக்கிறியோ எண்டு தேத்தண்ணிக் கோப்பையைப் பறிச்சு எனக்கு வீசினார். வலியிலை நான் கத்த பிள்ளையள் அதை மிஞ்சி அலறிச்சுதுகள்…” கண்ணீரினூடு வந்த அவள் குரலில் இயலாமை ஒலித்தது.
“ஓ, ஐ ஆம் வெரி சொறி பானு, வெரி சொறி எனக்கென்ன சொல்லுறது எண்டே தெரியேல்லை…” என்று மட்டும்தான் அவனால் சொல்லமுடிந்தது.
அன்றிரவு சாப்பிடவோ, நித்திரைகொள்ளவோ அவனால் முடியவில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு உருண்டபடியிருந்தான். அவனின் சிறுபிள்ளைப் பராய நினைவுகள் மாறிமாறி அவனின் நினைவுக்கு வந்து அவனைக் கஷ்டப்படுத்திக்கொண்டிருந்தது.
இந்தத் தனிப்படுத்தல் காலத்தில், பிள்ளைகளின் மேலான, பெண்களின் மேலான வன்முறை அதிகரித்திருக்கிறது என்பதை ஊடகங்கள் சொல்லிக்கொள்ளும் பொழுதுகளிலெல்லாம் பானுவின் முகமே அவன் கண் முன் நிழலாடும். மனதில் அச்சமேற்படும். கூடவே, வலியிலேயே வாழ்க்கையை முடித்துக்கொண்ட அவன் அம்மாவின் அழுகைச் சத்தம் அவனுக்குள் பரிதாபமாய் ஒலிக்கும்.
“என்ன யோசனை சுந்தர், எல்லாம் ஓகேயா?” அவர்களுக்குள் இருந்த அந்த மௌனத்தைப் பானு உடைத்தாள்.
“வாழ்க்கையின் வினோதங்களை நினைச்சுப்பாத்தன் பானு…. எங்கடை நாட்டிலை இருந்தது ஆக ரண்டே ரண்டு மொழியள்தான், இருந்தும் மற்ற மொழியிலை இரண்டு சொல்லுக்கூட எங்களுக்குத் தெரியாது. இப்ப இங்கை இன்னொரு மொழியை அரைகுறையாய்ப் பேசி வாழுறம். அங்கேயே ஒருத்தரின்ரை மொழியை ஒருத்தர் படித்து, ஒருத்தரை ஒருத்தர் விளங்கிக்கொண்டிருந்தால் இனப்பிரச்சினை இப்பிடி உச்சத்துக்குப் போய் இவ்வளவு அழிவு நிகழாமல் தடுத்திருக்கலாமோ, எங்கடை வேலையளைப் பாத்துக்கொண்டு நாங்களும் அங்கேயே நிம்மதியாக இருந்திருக்கலாமோ எண்டெல்லாம் இப்ப என்ரை மனம் தத்துவவிசாரணை செய்யுது, பானு,” என்றான் சுந்தர்.
“ம்ம், சரி, அதை விடுங்கோ, குடும்பத்துக்குள்ளை ஒருத்தரை ஒருத்தர் விளங்கி, ஆளுக்கு ஆள் மதிப்புக் கொடுத்து நடக்கிறதே சிலருக்குப் பெரும் பிரச்சினையாயிருக்கு! இப்ப பஸ்சிலை வரேக்கை மனுஷபுத்திரனின்ரை ஒரு கவிதை படிச்சன், கேளுங்கோ…”
ஒருமை– பன்மை
‘எந்தக் கணத்தில்
என்னை அழைப்பதில்
பன்மையிலிருந்து
ஒருமைக்கு மாறினாய்?
பன்மையிலிருந்து
ஒருமைக்கு மாறும்போது
ஆட்டத்தின் ஒரு விதி மாற்றப்படுகிறது
சீட்டுக்கட்டில் ஒரு சீட்டு
ரகசியமாக இடம் மாறுகிறது
ஓசையில்லாமல் ஒரு பூனை
அறைக்குள் நுழைகிறது
கிணற்றுத் தண்ணீரின் சுவை
திடீரென மாற்றமடைகிறது
ஒரு அனுமதிச் சீட்டின்
ஓரத்தில் கிழிக்கப்படுகிறது‘
“உண்மைதான் பானு, உறவு ஒண்டு நெருக்கமா வரேக்கே எவ்வளவு சந்தோஷப்படுறம். மரியாதையை, உரிமையை விட்டுக் கொடுக்கிறதிலைகூட ஒரு மகிழ்ச்சியை அனுபவிக்கிறம் … ஆனால் பிறகு மற்ற ஆள் அதைத் துஷ்பிரயோகம் செய்யேக்கைதானே ….,” அவனால் தொடரமுடியவில்லை.
வீட்டுக்குள் 24 மணி நேரமும் பானு அடைந்து கிடக்கவேண்டியிருந்தால் … அவன் கண்கள் கலங்கின, இதயம் வலித்தது. அவனது உள்மனம் அம்மா என ஓலமிட்டது.
அவள் மனேஜரிடம் போய்வரும்வரை அங்கேயே காத்திருந்தவனுக்கு அவள் சொன்ன செய்தி ஆச்சரியம் தருவதாக இருக்கவில்லை.
“பானு, நான் சொல்லிமுடிக்கும் வரைக்கும் குறுக்கிடாமல் கேட்பீங்களா?” கேட்டவன் பானுவின் கண்களைப் பார்த்தபடி அவன் தீர்மானத்தை உறுதியுடன் கூறினான்.
“கொரோனாப் பிரச்சினை இருக்கும்வரைக்கும், இந்த வேலையிலை எனக்குக் கிடைக்கிற காசை அரசாங்கம் தாற காசு ஈடுசெய்யும். இந்தப் பிரச்சினை ஓய்ஞ்சாப் பிறகு திரும்ப இங்கை நான் வரலாம், அல்லது வேறையொரு வேலையைத் தேடலாம். ஆனா… இந்த வேலை உங்களுக்கு எவ்வளவு முக்கியமெண்டது, உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். ஒரு சுப்பவைசராக இருந்திட்டு சும்மா பணியாளராக இருக்கிறது, உங்களுக்குப் பரவாயில்லையா, பானு? நீங்கள் சரியெண்டு சொன்னால் மனேஜரோடை நான் கதைக்கிறன் …”
அவனுக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியாத பானு கண்ணீர் மல்க அவனைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.
“ரண்டு மீற்றர் இடைவெளியைப் பேணவேணுமெண்டதாலை உங்கடை இந்தக் கும்பீட்டை மன்னிச்சுவிடுறன்,” எனச் சிரித்தபடி மனேஜரிடம் சென்றான் சுந்தர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.