நியூசிலாந்திற்குப் புதிதாக வந்த நேரம். ஓக்லாந்தில் மெடோபாங் என்னுமிடத்தில் இருந்தோம். குளிர் காலம். எங்குமே பனிப்புகாரும் மழைத்தூறலுமாக இயற்கை. வெய்யில் தெறிக்கும் போதெல்லாம் வீதியிலே பொற்காசுகள் கொட்டிக் கிடப்பது போல் மினுங்கி மினுங்கி மயக்கும். வேலை வில்லட்டியில்லாமல், சென்ரர்லிங் தந்த காசை செலவழித்துக்கொண்டு, வேலைகளுக்கு மனுப் போடுவதும், புதிதாக ‘எதைப் படிக்கலாம்’ என ஆராய்ச்சியில் ஈடுபடுவதுமாகப் பொழுதுகள் கரைந்தன.
காலை உணவருந்திவிட்டு, பிள்ளைகளை பிறாமிற்குள் தள்ளிக்கொண்டு அருகே உள்ள பூங்காவில் சந்திப்போம். குளிருக்கு உடுப்பு மாத்துவது என்பது ஒரு ஓரங்க நாடகம். பூங்காவில் குறைஞ்சது ஒவ்வொருநாளும் ஆறேழு குடும்பத்தினரைச் சந்திக்கலாம். சூரியன் மதியம் என்று சொல்லும் வரைக்கும் பலதும் பத்தும் கதைப்போம். பிள்ளைகள் ஊஞ்சல் சறுக்கீஸ் என்று விளையாடுவார்கள். மகிழ்ச்சியான பொழுதுகள்.
அங்கேதான் முதன்முதலில் முரளிதரன் குடும்பத்தினரையும் சந்தித்தோம். அவர்களின் மகனும், எங்களின் மகனும் அங்கே ஒன்றாய் விளையாடுவார்கள். ஜனனி---முரளியின் மனைவி---அப்போது கர்ப்பிணி. ஏழு மாதங்கள் எனச் சொன்ன ஞாபகம். அவர்கள் வெலிங்டன் என்னுமிடத்தில் இரண்டு வருடங்கள் இருந்துவிட்டு, முரளிதரனுக்கு அங்கு வேலை கிடைக்காததால் ஓக்லாந்திற்கு வந்திருந்தார்கள். ஜனனி ஏதோ ஒரு ஐ.ரி கொம்பனியில் பகுதி நேர வேலை செய்ததாகச் சொன்னாள். எனது மனைவிக்கு ஜனனியை மிகவும் பிடித்துப் போனது. அப்புறம் தினமும் அவர்களுடன் சந்திப்பு, போதாக்குறைக்கு தொலைபேசி உரையாடல்கள். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாக்கள், விருந்துபசாரங்கள்.
ஜனனி குழந்தை பெறுவதற்காக கிறீன்லேன் என்னுமிடத்திலுள்ள வைத்தியசாலைக்குச் சென்றிருந்தாள். அப்போது உச்சக்கட்ட குளிர்காலம் என்பதால் சிறிது நேரம் அவர்களுடன் நின்றுவிட்டுத் திரும்பிவிட்டோம். முரளி மகனையும் வைத்துக் கொண்டு வைத்தியசாலையில் தங்கிவிட்டான். முரளி தனது அம்மா வெலிங்டனில் தனது தங்கையுடன் இருப்பதாகவும், இன்னும் சில தினங்களில் ஓக்லாந்து வந்துவிடுவார் எனவும் சொன்னான்.
இரவு பத்துமணி இருக்கும். தொலைபேசி அடித்தது.
“ஒரு அழகான பெண்குழந்தை. ஜனனி கொஞ்சம் கஸ்டப் பட்டுவிட்டாள். ஜனனியையும் குழந்தையையும் ஐ.சி.யு வில் வைத்திருக்கின்றார்கள். நீங்கள் ஆறுதலாக வந்து பாருங்கள்” முரளி கவலையுடன் சொன்னான். நாங்கள் அன்று இரவு முழுவதும் அவர்களைப் பற்றிக் கதைத்து நினைவுகளை மீட்டிக் கொண்டோம்.
அதன்பின்னர் பல தடவைகள் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தும், முரளி தொலைபேசியை எடுக்கவில்லை. அவர்களைப் போய்ப் பார்ப்போம் என நச்சரித்தபடி மனைவி இருந்தாள். மூன்றாம் நாள் காலை. முரளி வீட்டிற்கு வந்திருந்தான்.
“இன்னும் மூண்டு நாட்கள், ஜனனியும் பிள்ளையும் ஐ.சி.யு வில் இருக்கவேண்டி வரும்போல கிடக்கு. வீட்டிற்கு வந்தாப்பிறகு ஆறுதலாகப் பாக்க வாங்கோ” சொல்லிவிட்டு அவசரமாகக் கிழம்பிவிட்டான்.
எந்த ஒரு சிறு விடயமானாலும் முரளி எம்முடன் கலந்தாலோசித்துத்தான் செய்வான். பல்கலைக்கழகம் போகும்போது கூட ஒருநாள் இரவு முழுவதும் எதைப் படிப்பது என்று கலந்தாலோசித்தான். அப்படிப்பட்ட முரளி தன் குழந்தையின் பிறப்பை ஏன் ஒளிக்க வேண்டும்? பெண் குழந்தைகள் விடயத்தில் ஆசியநாட்டவர்கள் கூடிய கரிசனம் கொள்வது இயல்புதான். சிலவேளைகளில் ஏதாவது வருத்தங்களுடன் பிறந்து பின்னர் அதுவே அவர்களின் திருமண விடயங்களில் தடங்கல்களாக இருந்துவிடுவதுண்டு.
“ஒருத்தர் வரவேண்டாம் எண்டு திருப்பித் திருப்பி சொன்னாப்பிறகும் போறது சரியில்லை” என்றேன் நான்.
“எங்களுக்குக் கரைச்சல் தரக்கூடாது எண்டும் அவை நினைச்சிருக்கலாம் இல்லையா? நீங்கள் மாத்திரமாவது போய் வாருங்கள்” தொடர்ந்தும் மனைவி வற்புறுத்தவே, பார்வையாளர் நேரத்தில் வைத்தியசாலைக்குப் புறப்பட்டேன்.
வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் ஜனனி இருக்கும் உவார்ட் இலக்கத்தைப் பெற்றுக் கொண்டு, அவர்கள் இருக்கும் இடத்தைத் தேடிப் புறப்பட்டேன். ஐ.சி.யு வில் (ICU) அவர்கள் ஒருபோதும் இருந்ததில்லை என நிர்வாகத்தினர் சொன்னார்கள். அவர்களின் அறையில் இரண்டு கட்டில்கள் போடப்பட்டு இருந்தன. அறையின் முகப்பில் போட்டிருந்த இரண்டு பெயர்களில் ஜனனியின் பெயர் இருந்தது. கதவு மெல்லத் திறந்து இருந்தது. முரளியைக் காணவில்லை. ஜனனி கடும் உறக்கத்தில் இருந்தாள். அவளை எழுப்பலாமா? அருகே தொட்டிலில் குழந்தை விளையாடும் சத்தம் கேட்டது. குழந்தையைப் பார்த்தேன். அதிர்ச்சியுற்றேன். வெள்ளை வெளேரென்ற உடல். தலைமுடி பழுப்பு நிறத்தில் சுருண்டு கிடந்தது. கண்கள் பூனையின் கண்கள் போலப் பளிங்கு காட்டின.
வந்த சுவடு தெரியாமல் திரும்பி, அவசர அவசரமாக வைத்தியசாலையின் நுழைவாயில் வரை சென்றேன். அங்கேயே காத்திருந்தேன். பத்து நிமிடங்கள் கழிந்திருக்கலாம். முரளி ஒரு ஷொப்பிங் பாக்கை ஆட்டியபடி வந்துகொண்டிருந்தான். என்னைக் கண்டதும் அதிர்ச்சியுற்றான்.
“என்ன கன நேரமா நிக்கிறாய் போல…. இன்னும் இரண்டு பேரும் ஐ.சி.யுவிலைதான். ஜனனிக்கும் கர்ப்பப்பையை எடுத்துவிட்டார்கள். அனேகமா இன்னும் இரண்டுநாளிலை விட்டுவிடுவினம்.” அவன் எதையோ மறைக்கின்றான் என்பதைப் புரிந்துகொண்டேன். சிறிது நேரம் கதைத்தோம். “ஏதாவது உதவி தேவை என்றால் கேள்” சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டேன். வீட்டிற்கு வந்ததும் மனைவிக்கு ஒன்றும் சொல்லவில்லை. முரளி சொன்னதை அப்படியே திருப்பி அவளிற்குச் சொல்லிக் கொண்டேன்.
இரண்டுநாட்கள் கழிந்த நிலையில், முரளி அவசர அவசரமாக வீட்டிற்கு வந்திருந்தான். வெலிங்டனில் இருந்து வந்த அவனது அம்மாவும் கூடவே வந்திருந்தார்.
“நண்பா! குழந்தை படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும்போதே இறந்துவிட்டாள்” முரளியின் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென்று உதிர்ந்தது.
“எப்படி?”
”டொக்ரஸ் cot death எண்டு சொல்லுகின்றார்கள். வெலிங்டனிலை நிறையச் சொந்தக்காரர்கள் இருக்கிறதாலை செத்தவீட்டை நாங்கள் அங்கை செய்ய யோசிக்கிறம். அம்மாவும் அதைத்தான் விரும்புகின்றார்” பதட்டத்துடன் சொன்னான் முரளி.
”நீர் எனக்கொரு உதவி செய்யவேணும். நாங்கள் வரும்வரைக்கும் வீட்டைப் பார்த்துக் கொள்ள வேணும். நண்பர்களுக்கும் சொல்லிவிடு” வீட்டுத்திறப்பை என்னிடம் நீட்டினான். போய் விட்டான். மனைவி தேநீர் போட்டுக்கொண்டு வரும்போது முரளியும் அம்மாவும் அங்கிருக்கவில்லை.
இருவாரங்களின் பின்னர் முரளியும் ஜனனியும் ஆக்லாந்து திரும்பினார்கள். மகன் வரவில்லை. அவர்களிடையேயான கலகலப்பும் பேச்சுவார்த்தையும் குறைந்திருந்தன. ஜனனி இரண்டுநாட்களின் பின்னர் வெலிங்டன் திருப்பிவிட்டாள். முரளி தன் படிப்பைக் குழப்பிவிட்டு, மேலும் இருவாரங்கள் கழித்து வெலிங்டன் போய்விட்டான். வாடகை வீடு என்பதால் அதை ஒப்படைப்பதில் பிரச்சினை இருக்கவில்லை. போவதற்கு முதல்நாள் வீட்டிற்கு வந்து, எங்களுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போனான்.
அதன் பின்னர் எங்களுடன் இருந்த தொடர்பைக் குறைத்துக் கொண்டார்கள். எப்போதாவது முரளி தொலைபேசியில் கதைத்துக் கொள்வான். ஜனனி அதுவும் இல்லை. அவர்கள் இருவருக்குமிடையே விரிசல் விழுந்தது போல இருந்தது. நாங்களும் ஒவ்வொருவராக வேலை எடுத்துக் கொண்டு வெவ்வேறு திசைகளில் பயணித்தோம்.
வருடத்தில் ஒருமுறை கதைப்பதே அபூர்வம் என்றாகிவிட்ட நிலையில், திடீரென ஒருநாள் முரளி தொலைபேசியில் அழைத்தான்.
“என்ன விஷேசம்? இண்டைக்கு புதன்கிழமை எடுக்கின்றாய்?”
“இரு… இரு..சொல்லுறன். அவசரப்படாதை. நாங்கள் ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்கின்றோம். மகன் தனக்கொரு தங்கை வேண்டும் என்று ஆசைப்பட்டான்.”
“ஓ… நல்ல விஷயமாயிறே!” என்றேன் நான்.
“இன்னுமொன்று…. என்னுடைய மகன் ஒரு பெரிய விஷயம் செய்ய வெளிக்கிட்டிருக்கிறான். எங்கடை ஃபமிலி றீ பற்றி ஒரு புறயெற் செய்யுறான். என்னுடையதும் மனைவியினதும் இரண்டாவது பரம்பரைக்கு அங்காலை நகரமாட்டேன் எண்டு சொல்லுது. சில பெயர்கள் தெரியுது. சிலதுகளைப் பிடிக்கேலாமல் கிடக்கு… முந்தியொருக்கா உன்னுடைய மாமா, ஜனனியின்ரை அம்மம்மாவின்ரை சொந்தக்காரர்களைத் தனக்குத் தெரியும் எண்டு சொன்னவராம். அவரிட்டைக் கேட்டால் அம்மம்மாவின்ரை பரம்பரையைப் பற்றி அறிஞ்சு கொள்ளலாம் எண்டு ஜனனி நினைக்கிறாள்…” சொல்லிக்கொண்டே போனான் முரளி.
மாமனாரிடம் தொலைபேசியைக் கொடுத்தேன். ஜனனியும் மாமாவும் நெடுநேரம் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அதன் பின்னர் ரெலிபோன் என் மனைவியின் கைகளுக்கு மாறியது. ஜனனியும் என் மனைவியும் நெடுநேரம் கதைத்தபடி இருந்தார்கள். எனது மனைவியின் சிரிப்பொலியும் உற்சாகமும் இரவு நேரத்தையும் மீறிக் கரைபுரண்டோடியது. அந்த நேரம் பார்த்து மாமா என்னிடம் வந்தார்.
“முரளியும் ஜனனியும் இப்போது சந்தோஷமாக இருக்கினம் போலத் தெரியுது!” பீடிகை போட்டார் மாமா.
“ஓம்… ஒம். ஒரு கொஞ்சக் காலம் தான் அவர்களுக்கிடையே ஏதோ பிரச்சினை இருந்திருக்க வேணும். இப்பெல்லாம் சரி.”
“ஒரு விஷயம் தம்பி… இரகசியமாக வைச்சிருக்க வேணும். மனிசிக்கும் சொல்லிப் போடாதையும். அவள் கொஞ்சம் உளறுவாய்.
ஜனனியின்ரை அம்மம்மா எங்கடை அயல் ஊரைச் சேர்ந்தவர். பறங்கி பமிலி. அம்மம்மாவின்ரை அடியிலை ஒரு பறங்கிக் கலப்பு இருக்க வேணும். எப்போதோ வந்த பறங்கியள் நாட்டிலை எல்லாத்தையும் விதைச்சுப் போட்டுப் போட்டான்கள். அவவின்ரை இரண்டு தம்பிமார் நான் படிச்ச பள்ளிக்கூடத்திலைதான் படிச்சவங்கள். எனக்கு மேல் வகுப்பு. இரண்டு பேருமே அசல் பறங்கியள் மாதிரி… பூனைக் கண்ணன்கள்.”
“இதை நீங்கள் ஜனனியிட்டைச் சொன்னனியளா?” வியப்புடன் நான்.
“எனக்கென்ன விசரே தம்பி… உதுகளைப் பற்றிச் சொல்ல! விடுத்து விடுத்து ஜனனி கேட்டதைப் பாத்தா, அவளுக்கும் இது பற்றிக் கொஞ்சம் தெரிஞ்சிருக்கு எண்டுதான் நினைக்கிறன். அவள் எனக்குத் தெரிந்திருக்கின்றதா என உரசிப் பாத்தவள்.”
அன்றொருநாள் நான் கண்ட அந்தக் காட்சி என் மனதைக் குடைந்தது. தொட்டிலில் கிடந்த அந்தக் குழந்தை, என் மனதில் ஊஞ்சல் கட்டி குறுக்கும் மறுக்கும் ஆடினாள். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவங்களின் எச்சங்கள் இப்படி யுகம் யுகமாகக் கடத்தப்படுமா? விழுந்து விழுந்து தனது அடி வேரைத் தேட முயற்சிக்கும் ஜனனிக்கு, அந்த அடி வேரை ஒரு புழு அரித்திருக்கின்றது என்பது தெரிந்துதான் இருக்கின்றதா? முரளிக்கும் ஜனனிக்கும் இது தெரிந்ததன் பின்னர் தான் அவர்களுக்கிடையேயான புரிதல்கள் நெருக்கமாக்கப்பட்டிருக்க வேண்டும்.
மனைவிக்கு இத்தனை வருடங்களாக நான் அதை மறைத்துவிட்ட குற்றவுணர்வில் அன்று முழுவதும் தூக்கம் வர மறுத்தது.
எனது மாமாவும் இறந்து சில வருடங்களாகிவிட்டன. இன்று முரளி குடும்பத்தவர்கள் விடுமுறைக்காக ஓக்லாந்து வருகின்றார்கள். எங்கள் வீட்டில் தான் தங்கப் போகின்றார்கள். ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. எயாப்போட்டிற்கு நாங்கள் இரண்டு கார்களில் போயிருந்தோம். இன்னும் சில நிமிடங்களில் அவர்கள் வந்துவிடுவார்கள். ஆவலுடன் மகனும் காத்துக் கொண்டு நின்றான்.
பொதிகளைத் தள்ளிக் கொண்டு வருகின்றார்கள். முரளியும் ஜனனியும் எங்களைக் கண்டு கொண்டார்கள். அவர்களின் மூத்த மகனுக்கும் அரும்பு மீசை துளிர் விட்டிருந்தது. அவர்களின் பின்னால் ஒரு வெள்ளையினத்துச் சிறுமி விரைந்து வருகின்றாள்.
“என்னப்பா…. பிள்ளை ஒண்டு தத்தெடுத்து வளக்கினம் எண்டு சொல்லிச்சினம். ஆனா வெள்ளைக்காரப்பிள்ளை எண்டு சொல்லேல்லையே!” மனைவி என் காதிற்குள் கிசுகிசுத்தாள். நான் அவளது கையைப் பிடித்து அழுத்தினேன். மகனிற்கும் அது ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கும்.
இரவு நானும் முரளியும் சிறிது வைன் அருந்தியபடி முற்றத்தில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தோம். மனைவியும் ஜனனியும் குசினிக்குள். பிள்ளைகள் `பிளே ஸ்ரேசன்’ விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
“நண்பா… எனது இரண்டாவது பெண் குழந்தைபற்றி என்ன நினைக்கின்றாய்?” திடீரென முரளி கேட்டான். நான் மெளனமாக இருந்தேன்.
“அவள் உண்மையில் எங்கள் குழந்தைதான்.”
இத்தனை வருடங்கள் கழிந்தும், என்னைத் தன் நண்பனாகவே வைத்திருக்கும் முரளி என் கண்முன்னே சிகரம் போல் உயர்ந்து நிற்கின்றான். எனக்கு எப்போதோ தெரிந்திருந்தும் நான் அதனைக் காட்டிக் கொள்ளாமல் ஒடுங்கிப் போய் இருந்தேன்.
“நம் இனத்தில் எத்தனையோ பெண்கள் சிங்களக் காடையர்களுக்கும், இராணுவத்தினர்களுக்கும் பலியாகிப் போய்விட்டார்கள். ஏன், நூற்றாண்டு காலங்களுக்கு முன்னர் வந்த ஐரோப்பியர்களும் இதைத்தானே செய்தார்கள். உலகம் முழுவதும் இப்படியான செயல்கள் மலிந்தே இருக்கின்றன. எதுவும் நம் கையில் இல்லை.
இவை எல்லாம் தெரிந்திருந்தும், நமது சமுதாயம் இப்படிப் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கும் பார்வை எவ்வளவு கேவலமாக இருக்கிறது. சில உண்மைகள் உறங்கிக் கிடப்பதுதான் எமக்கு நல்லது.” முரளி சொல்லிக்கொண்டே போனான். நான் அவனது முகத்தைப் பார்த்தபடி இருந்தேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.