அவள் அப்படிக் கேட்டுவிட்டாள் என்பதற்காக மனைவியிடம் சொல்லியிருக்கக்கூடாது.அதனை எப்படி எடுத்துக்கொள்வாளோ?ஒருபெண் கேட்டதை இவளிடம் சொல்லி என்னைப் பற்றிய அபிப்பிராயத்தைப் புரட்டிவிடப்போகிறதோ தெரியவில்லை.'
மனதுள் புழுங்கினான்.
மணியமென்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சுதந்திரபுரத்தில் பலசரக்குக் கடை வைத்திருப்பவன்..அவனின் மனைவி சுகந்தியைத் திருமணம் செய்து ஐந்துவருடங்கள் ஆகிவிட்டது.எனினும் குழந்தைகளில்லை.ஆனாலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்துவந்தனர். ஊரிலும் அவர்களுக்கு நல்லபெயர்.
கடைக்கு பலரும் வந்து போவார்கள்.
சிறுசிறு பொருட்களைவாங்க வருபவர்கள்..உதவி கேட்டு வருபவர்கள்..ஒசிப்பேப்பர் வாசிக்கவருபவர்கள்...சுகத்தியுடன் அரட்டை அடைக்க வருபவர்கள்..எப்போதும் கடை கலகலப்பாகவே இருக்கும். கடையை மூடியபின்பே வீட்டிற்குப் போவதால் கடைக்குப் பின் புறமாகவே மதிய உணவை சமைத்துச் சாப்பிடுவார்கள்.
'எதற்கு வீடு..?அதை விற்றுவிட்டு கடையைக் கொஞ்சம் பெருப்பிக்கலாமே' சுப்பையா அண்ணரின் ஆலோசனையை முற்றாக இருவரும் மறுதலித்தனர்.
'இன்றைக்கு கடை நல்ல வருமானம் தருகிறது. அதற்காக வீட்டை விற்று கடையைப் பெருப்பிக்கும் எண்ணத்தால் ஒருவேளை கடை நடத்தமுடியாமல் போனால் வீடாவது மிஞ்சுமே? கடைசிக் காலத்திலாதாவது எங்களுக்கு இருக்கட்டுமே.. வீடு என்ற ஒன்று குடும்பத்திற்கு வேMகாணும்'
சுப்பையா அண்ணர் மறு பேச்சு பேசவேயில்லை. தலையை ஆட்டினார்..
'இந்தக் கடையை ஆரம்பிக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம்..சிறியதாய் ஆரம்பித்து இப்படி ஆகிவிட்டது..மனதிற்குத் திருப்தியாய் இருக்கிறது..'
கடையின் இருமருங்கும் குளிர்ச்சி தரும் மரங்கள்.பின்னால் தென்னை மரங்கள்.ஒன்றிரண்டு பனைமரங்கள்.
'குத்தகைக்குத் தான் எடுத்தது..பிறகு காணிச் சொந்தக்காரர் வெளிநாடு போட்டினம்..காசை மாதம் வங்கியில போட்டுவிடுவம்'
சுகந்தி தேநீருடன் வந்தாள்.
அவள் அழகு என்று சொல்லமுடியாவிட்டாலும் மனதுக்குப் பிடித்தமாகவே தெரிவாள்.தெத்திப்பல் துருத்திக்கொண்டே இருக்க அதுவே தனி அழகென சொல்வான்.
கறுப்பில்லை...வெள்ளைஎன்றும் சொல்லமுடியாது.இரண்டும் கலந்தவளென்று வேண்டுமானால் சொல்லலாம்.அவன் மாநிறமானவன்..
இருவரையும் இணைந்தே பார்ப்பவர்கள் நல்ல தம்பதிகள் என்றே சொல்லிக்கொள்வார்கள். தன் உழைப்பேயே நம்பி வாழ்கிற மணியம் திடகாத்திரமானவன் என்றில்லை. எனினும் கொஞ்சம் இருக்கிற உடம்பு வசீகரத்தை பார்ப்பவர்களிடம் தோற்றுவிக்கும்..
யாவருடனும் நட்பாய் இருப்பாதாலும், அந்த ஊரின் நன்மை தீமைகளில் பங்கேற்பவனாய் இருப்பதாலும் மணியத்திடம் யாவரும் நெருங்கிப் பழகியே வந்தனர். கூடவே அவனிடமிருந்து வெளிவரும் நகைச்சுவைப் பேச்சுகளையும் ரசிப்பார்கள்...இதுவும் அவனது கடையை நிறைத்திருக்கும்.
அதனால் தானோ ராகினியும் நெருங்கி வரத்தொடங்கினாளோ? ராகினியும் தில்லையம்பலத்தின் பேர்த்தி..கட்டான உடலுடனும்,திமிரான பார்வையுடனும் வந்து தேவையானதை வாங்கிச் செல்பவள்.
அவளுக்குள் ஏன் இப்படியான உணர்வு வந்தது?
மனதுள் எழுந்த உணர்வினை எப்படித் துணிவுடன் மணியத்திடம் கேட்கமுடிந்தது.
துணிச்சல்காரிதான்.
'ஏற்கனவே திருமணமாகியிருந்த என்னிடமே கேட்கிறாளே?'
அதிர்ச்சியாகவும் இருந்தது...இதையே சுகந்தியிடம் சொன்னபோதும் அதிர்ச்சியில் உறைந்தாள். எனினும் எப்படியோ சுதாகரித்துக் கொண்டாள்.
'நாளைக்கு அவளிடம்பேசுகிறேன்.'என்று பதில் தந்தாள்.
'கேட்பாளா?..இவள் கேட்பாள்...அவளின் பதில் எவ்வாறு இருக்கும்?ஒன்று இல்லை ஆமென்று இருக்கத்தான் செய்யும்.இதனால் ஏற்படப்போகும் சாதாரண அல்லது அசாராண நிலையில் தொடருகின்ற சுமுகமான வாழ்க்கையில் அசௌகரியங்கள் ஏற்படாமலிருக்கவேண்டுமே..அதற்கான சூழலை பேசுபொருளின் சாதுர்யம் சாந்தப்படுத்தலாம்...சமாதானமடையலாம்..மனைவியின் மீதான அதீத நம்பிக்கை அதனை ஏற்படுத்துமெனினும் அனுபவ முதிர்ச்சியற்ற அந்தப்பெண்ணிடமிருந்து எதனை எதிர்பார்க்கப்போகிறோமோ?கடவுளே! நல்லதொரு சூழலை உருவாகித்தா.. எனக்கும்,மனைவிக்குமான காதலைச் சின்னாபின்னமாக்கிவிடாதே!!'
அன்றிரவு முழுவதும் தூக்கம் வரவில்லை..சுகந்தி தன் கணவனின் நிலையைப் புரிந்து கொண்டு அருகில்நெருங்கிப் படுத்தாள்.அந்தச் சின்னப்பெண்ணின் மனதை மாற்றிவிடுவாள் தன்னிடமிருக்கும் உடல்கவர்ச்சி வேண்டாமெனச் சொல்லி தூரமாக்கிவிடுவாளென்று கற்பனை செய்து ஓரளவு ஆறுதலுமடைந்தான்..மனைவியின் மனதில் ஆயிரம் கேள்விகளும்,அதற்கான விடைகளையும் தேடிக்கொண்டிருந்ததைஅறியாமலவளை வழமைக்கு மாறாக இறுக்கினான்.
சுவர்ப் பல்லி ஏதோ 'ச்சு' கொட்டியது ஏதோ சொல்வது போலிருந்தது.
வாழ்க்கையை ரசித்து அனுபவிக்கும் கைங்கரியத்தினை மனைவியிடம் கற்றுத்தேர்ந்தவனால் உடல்,ஆன்மா எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு எல்லாம் நீயே என்று மார்பில் வாஞ்சையுடன் புதைந்துகொள்வது என்பது அனுபவத்தால் வரவேண்டும்.அப்படித்தான் அவன் தூங்கினான்.
ஒவ்வொருவரின் வாழ்வியல் அனுபவங்களும் மாறுபாடானவை.எனினும் கணவன் மனைவியாக ஆகியவர்களும் வெவ்வேறு சூழலுக்குள் பழகிக்கொண்டாலும் ஏதோ ஒரு மையப்புள்ளியில் ஒன்றிய மனதுடையவர்களாகிவிடும்போது அங்கு பிரகாசம் பெறும் காதலும் ஒளிவிடும்..இங்கும் இவனும்,இவளும் அப்படியே காதலைப் பகிர்ந்துகொண்ண்டே வாழ்வது பலருக்கும் வியப்பைத் தந்தததில் வியப்பில்லை.
&&
அவளின் நினைவுமரம் துளிர்த்தது.
'சனியன்..சனியன்..' அம்மா புறுபுறுத்துக்கொண்டிருந்தாள்.
வழமையான நிகழ்வுதான்.
.மாமாவிற்குத் தான் பேச்சு விழுகுதுபோல..இண்டைக்கும் ஏதாவது சில்மிசம் செய்திருப்பார்..
மாமா பாவம்..அம்மாவின் கூடப்பிறந்த தம்பி.
பெயர் பாலசுப்பிரமணியம். பாலு என்றே யாவரும் அழைப்பார்கள்.
அவ்வளவாகப் படிக்கவில்லை.
எனினும் அவர் ஒரு தலையாகக் காதலித்த துளசி என்கிற பெண் தன்னை ஏமாற்றிவிட்டாள் என்று நினைத்தபடி குடித்துவிட்டு அவளின் வீட்டுக்கு முன் போய் நின்று சத்தமிட்டிருக்கிறார்.அவளால்தான் எல்லாம் என்று துளசியும் அவளது பெற்றோரால் தாக்கப்பட்டிருந்தாள்.
அவமானத்தால் அவளால் வெளியே வரவும் இல்லை..ஊர் கூடிய அவமானத்தில் துளசியின் பெற்றோர் ஊரை விட்டே போய்விடத் தீர்மானித்தார்கள்.எனினும் பாலு மாமாவின் மீதான கோபம் அதிகரிக்க ஒருநாள் இரவு தனியே குடித்துவிட்டு வரும் போது இரும்புக்கம்பியால் தாக்கியிருக்கிறார்கள்.
மயங்கி விழுந்த மாமாவை யாரோ பிரதான வைத்தியசாலையில் அனுமதித்திருக்கிறார்கள்.மக்கம் தெளிந்த மாமாவினால் சுயமாக சிந்திக்க முடியாதபடி ஆயிற்று.மருந்துகளை மருத்துவர்கள் அதிகமாகவே தந்திருந்தார்கள்.மாமாவினால் துளசியின் வீட்டிற்கு முன்னால் போகும்போது ஞாபகம் வர கூச்சலிடுவார்.உள்ளுக்குள் நிறையவே பாதிக்கப்பட்டிருந்தார்.
கேட்டால் பதில் தருவார்..
ஆடச் சொன்னால் ஆடுவார்.
பாடச் சொன்னால் பாடுவார்.
சந்தைக்கு போய்வருவார்..கள்ளுக்குக் காசு கொடுத்தால் சைக்கிளில் டபிள் ஏத்தி அம்மாவை அழைத்துச் செல்வார்.
‘பாவம் மாமா..’
அவர் தனித்துவிடப்பட்டதாகவே உணர்ந்தேன்.மாமா என்னை கோயிலுக்கு அழைத்துப்போங்கோ என்றால் மறு பேச்சின்றி அழைத்துச் செல்வார்.
செல்லமாக பகிடி விட்டால் சிரித்துக் கொள்வார்..அம்மா மட்டும் அடிக்கடி கரிச்சுக் கொட்டிக்கொண்டிருப்பார்.
'விசரா..பொம்பிளைப்பிள்ளைகள் இருக்கிற வீட்டில சாரத்தைக் கட்டிக்கொண்டு குளிக்காமல்..இப்படி..சனியன்..சனியன்..'
கிணற்றைச் சுற்றி உயரமாக கிடுகுகளால் மறைக்கப்பட்டிருந்தாலும் மாமாவைத் திட்டுவார்..மதிலும் மறைக்கும் தானே..
'விடுங்கோ அம்மா..பாவம் மாமா..சுகமில்லாத மனுசனிட்ட..'
'ஓமடி..ஓமடி..நீதான் அவனுக்குச் செல்லம் கொடுத்துக்கொண்டு...'
மாமாவிற்குப் பிடித்த ஆட்டிறைச்சிக்கறி மணத்தது.
அம்மாவிற்குத் தம்பிப்..பாசம் இல்லாமலா இருக்கும்?
'மாமா வாங்கோ..குளிச்சது காணும்..'
'வாறன் பிள்ளை'
அம்மாவிற்குக் குசினியால் எட்டிப்பார்த்தால் மாமாவை வடிவாய்த் தெரியும்..பத்மா அக்கா தண்ணி எடுக்க அடிக்கடி வாறது..உவன் கிணற்றடியால் வந்தால்தானே?'
படுக்கை அறையின் சன்னலில் நின்று பார்த்தால் வீதியால் போவோர் வருவோரைத் தெரியும்..
காலையில் பாடசலைக்கும் போகும் மாணவர்கள்..ஆசிரியர்கள். கச்சேரிக்கு வேலைக்குப் போகும் தில்லை அண்ணர்.. சந்தைக்கு வாழைக்குலையை கொண்டு போகும் சித்தம்பலம் மாமா..பத்து மணி போல வரும் மீன்காரர் ...பதினொரு மணி போல வரும் தபால்கார தேவன் அங்கிள்..
அப்படியே கண்ணைத் திருப்பினால் கிணற்றடியில் யார் யார் நிற்கினம் என்று பார்க்கலாம்.
அன்றும் மாமாவை பார்த்ததும் வெட்கமாகவும் இருந்தது..மாமா மீதான கரிசனையும் அதிகரிக்கவே செய்தது.
‘பாவம் மாமா...துளசியின் மீதான காதல் நிறைவேறியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்..’
நிராகரிப்புக்கள் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துமோ அந்தளவிற்கு அவரவர் வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிடும்..மாமாவின் ஏமாற்றம்..?
'ஏன் அம்மா.மாமாவிற்கு கலியாணம் செய்துவைத்தால் நல்லதெல்லே?'
தண்ணீர் அள்ள வந்த பத்மா அக்கா பேசாமல் போயிருக்கலாம்.இப்படி அடிக்கடி அம்மாவிடம் கேட்பாள்.
'ஓம்..ஓம்..அவனை யார் பொறுப்போடு கவனிப்பார்கள்...அவனை நம்பி யார் பெண் தருவார்கள்.எந்தப் பெண்ணும் விரும்பமாட்டாள்.அப்படி யாராவது வந்தால் தியாகிகள் தான்..'
'ஏன் உங்கடை தம்பிதானே..உங்கட மகளில் ஒருத்தியைக் கட்டிக் கொடுத்திருக்கலாம் தானே?'
அம்மா முறைத்தாள்.அதில் அவளுக்கு உடன்பாடு இருக்கவில்லை என்பது முகத்தில் தெரிந்தது.
'மாமா!இந்தப்பாட்டைப்பாடுங்கோ.'
சொன்னவுடன் சிவாஜியாகிவிடுவார்.
'பாலூட்டி வளர்த்த கிளி.
பழம் கொடுத்து பார்த்த கிளி..
நான் வளர்த்த பச்சைக்கிளி நாளை வரும் கச்சேரிக்கு..
செல்லம்மா...'
மீசையை நீவிவிடும் அழகு தனி அழகு...
மாமா..இந்தப்பாட்டு... கெஞ்சினால்,
'கேட்டுக்கோடி உருமி மேளம்.'
போட்டுக்கோடீ கோப தாளம்
பாத்துக்கோடீ உன் மாமன்கிட்ட
பாட்டிக்காட்டு ராகம் பாவம்’
விசிலத்து ஆடிப் பாடுவார்..
பத்மா அக்கா வேலியால் எட்டிப்பார்ப்பார்..
அம்மா மீண்டும் திட்டிக்கொண்டிருப்பார்..
'மாமா!'
'ம்' என்ன என்பது போல பார்த்தார்.
துளசியும் உங்களைக் காதலித்திருந்தால்'
அவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..அவர் சிரிப்பில் பூரிப்புத் தெரிந்தது.
விழியோரத்தில் கண்ணீர் அரும்ப...எங்கோ வலித்தது..
'அவளை மறந்துவிட்டு வேற கலியாணம் கட்டியிருக்கலாம் தானே?'
'போடியம்மா..நடக்கிற கதையைச் சொல்லு..'
'இந்த விசரனை ஆர் கட்டுவினம்?'
'நான் கட்டட்டே..'
மாமாவிடமிருந்து எந்தவித பிரதிபலிப்பும் இல்லை..அவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்.
அம்மா மட்டும் கோபத்தில் பொங்கினால்..
'அம்மா..சும்மா பகிடிக்குக் கதைக்கிறதை ஏன் தூக்கிப்பிடிக்கிறீர்கள்?மாமாவின்ரை வயசென்ன? அவரின் நிலையென்ன?அவரை நாங்கள் தான் அன்பாக நடத்தவேண்டும்..நீங்கள் இப்படி பொரிஞ்சுகொண்டிருந்தால் பாவம் மாமா..எங்கு போவார்?'
சில வருடங்களுக்கு முன் லண்டனிலிருந்து வந்து தந்த மச்சான் தந்த சாரத்தை தோய்ச்சுச் தோய்ச்சு கட்டியே கிழிஞ்சுபோயும் தைய்ச்சுக் கட்டியதால் ஆங்காங்கே கிழிசல்கள் தெரியும். புதுச்சாரங்கள் இருந்தும் ஏனோ பழசையே கட்டுவார்.சொன்னாலும் கேட்கார்.
உடலில் ஏற்பட்ட காயங்கள் தழும்புகளாகிய இடங்கள் போல அவரின் சாரம் பார்க்கத்தோன்றும். கழன்று விழாமல் இருக்க இடுப்பில் ஒரு கயிற்றால் கட்டியிருப்பார்.பிறகு சண்டியன்காட்டு கட்டியிருப்பார்.மெல்லிய கால்கள்..முழங்காலில் விழுந்த சிராய்ச்ச அடையாளம்.
அம்மா சந்தைக்குப் போய் மரக்கறி,இறைச்சி என வாங்கிவருவார்.படலைக்கை நின்று மீன்காறர் போகேக்கை வேலியில இருக்கிற பூவரசம் இலையைப் பிடுங்கி அதிலை மீனை வைச்சுக் கொண்டுவந்து அப்படியெ கிணற்றடிக்குப் போய் கழுவிக்குண்டுவந்து காய்ச்சுவார்.சிலநேரம் மச்சங்களை குசினிக்குள்ளோ,கிணற்றடிப்பக்கம் இருக்கிற பத்திக்குள்ளேயோ சமைப்பாள்.அம்மாவின் சமையல் மூக்கைத் துளைக்கும்..மாமாவும் ஆசை தீர உறிஞ்சி உறிஞ்சி சாப்பிட எல்லோரும் சிரிப்போம்.பிறங்கையில் ஒழுகுவதையும் நக்கி உறிஞ்சேக்கை அம்மா சத்தம் போடுவார்.
'சாப்பிடேக்கை சத்தம் போடாமல் சாப்பிடவேணும். உள்ளங்கையில படாமல் சாப்பிடோணும் எண்டதும் தெரியேல்லை..எத்தனை தரம் சொல்லிப்போட்டன்.ஆரும் கேட்கிறேல்ல'
அம்மா.பெருமூச்சொன்றை விட்டது கேட்டது,
மனிதனை இலகுவில் எடைபோட்டு விடமுடியாது.மனிதரைப் புரிந்துகொள்ளும் மனநிலையும் யாரும் புரிந்து கொள்வதிலும் அக்கறையில்லை.மாமாவுடன் கூடப்பிறந்த அம்மாவினால் புரிந்துகொள்ளமுடிந்திருக்கிறதா?தான்,தனது குடும்பம் என்றானபின் உடன்பிறபெல்லாம் பிறத்தியாகிவிடுமா?
'அம்மா கொஞ்சமாவது மாமாவைப் புரிந்துகொள்ளேன்'
'எல்லா அழுக்குகளையும் உடலில் ஏற்றி மனிதனாக வலம் வருபவர்களிடையே மாமா நிர்வாணியாக நிற்பது இவர்களுக்கு ஏன் அருவருப்பாக இருக்கிறது?
'மாமாவைப் பைத்தியம்,விசர் என்றெல்லாம் அழைப்பார்கள்.அப்படிச் சொல்வதில் நிறையச் சங்கடங்கள்.மனிதனை,அவனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் அவனை ஒதுக்கிவிடுவததென்பது எவ்வளவு கொடுமை.அவருக்குள்ளும் எவ்வாளவோ ஆசா பாசங்கள்.அவர் பேசுவதெல்லாம் அர்த்தம் நிறைந்திருந்தாலும் அவரை யாரும் கணக்கிலெடுத்ததில்லை..அம்மாவும் தன் தம்பி தானே என்றில்லாமல் ஏசுவது அல்லது திட்டிக்கொண்டிருப்பது மனதை வலிக்கச் செய்யும்'
இரக்கமில்லாமல் இல்லை..இரத்த உறவுதானே.திருமணமாகி கணவன்,பிள்ளைகள் ,அவர்களின் குடும்பம் என உறவுகள் விரிவுபட உடன்பிறப்புக்களுக்கிடையேயான பாசம்,அன்பு அடர்த்தியாக இல்லாவிட்டாலும் உறவை மறுத்துவிடமுடியாது.
மனிதனின் வாழ்வில் காதலும்,காமமும் வந்துபோகவே செய்யும்.விதிவிலக்க் என்பதில்லை.மாமாவின் உள்ளுக்குள் அவை நிச்சயம் இருக்கும்.துளசியின் மீதான காதல்,அவளின் நிராகரிப்பு,அந்த ஏமாற்றம் தந்த வலிகள்,அக் காதலுக்காகவே தன்நிலை இழந்து இப்படியான வாழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்.அவருக்கென உறவுகள் இருந்தும் எல்லோரும் வெளிநாடு சென்றுவிட,எங்களுடன் தங்கிவிட்டார்.இப்போது நம்மைவிட்டால் வேறெங்கும் போகும் நிலையிலும் இல்லை.
வீட்டில் யாரும் இருக்கவில்லை.
புத்தகத்துள் மூழ்கிப்போன நிலையில் மாமா குளித்துவிட்டு வந்து சாமிப்படத்திற்கு முன் நின்று கும்பிட்டுவிட்டு போகையில் தான் கண்ணில்பட்டார்.
எல்லாம் நிதானமாக,சாவகாசமாக ஒழுங்கு முறைப்படி செய்பவரை எப்படி பைத்தியம் என்று சொல்லமுடியும்?
மாமா!
கூப்பிட்டவுடன் வந்துவிட்டார்.
'என்ன பிள்ளை? ஏதாவது வேணுமே?'
இடுப்பில் கட்டியிருந்த துவாயின் முனையை வெட்கத்துடன் பிடித்திருந்தமை சிரிப்பைத் தந்தது.சாரத்தைக் காயவிட்டிருப்பார்.காய்ந்துவிடும் நேரத்திற்கும் சாமி கும்பிடுவது,சாப்பிடுவது...யாவருக்கும் இது பழகிவிட்டிருந்தது.
பல நாட்களின் பின் முகச்சவரம் செய்திருந்தார்.கன்னம் பளிச்சென்றிருந்தது.சிறுவயதில் அவரின் கன்னத்தை ஆசையாய் கிள்ளிவிடுவோம்.இப்போது வளர்ந்துவிட்டதால் இடைவெளியும் அதிகமாகிவிட்டது.
கிள்ளவேண்டும் போலிருந்தது.மாமா எதிர்பாக்கவேயில்லை..
'பிள்ளை சும்மா விடு..கொம்மா கண்டால்?'
'கன்னத்தை தொட்டுப்பார்க்க ஆசையாயிருந்தது.அதுதான்..'
தன் இரு கைகளாலும் தன் கன்னத்தைப் பொத்திக்கொண்டார்.
எழுந்து நெருங்கிப்போய் 'கையை விடுங்கோ' என்று சொல்லியும் மாமா கேட்கவில்லை.அப்படியே மாமாவின் உதட்டில் முத்தத்தைப் பதிக்கையில் மாமா தடுமாறிவிட்டார்.
அவரைப் பேசவே விடவில்லை.
நெற்றியில் அப்பியது போலவே வீபூதியை பூசியிருப்பார்.சந்தனத்தைக்கூட கண்டபடி உடம்பில் பூசிக்கொள்வார்.அவரின் உடம்பின் வியர்வைநாற்றத்தை ஓரளவிற்குப் போக்கிவிடும்.இன்றும் அப்படித்தான்..
மாமா தன் தாபத்தை இத்தனை நாள் அடக்கிவைத்திருந்த உணர்வுகளை கொட்டித்தீர்த்துக்கொண்டிருந்தார்.அவரின் மூச்சுக்காற்று கழுத்தின் வழி இறங்குகையில் அவரின் அற்றாமை,பிறர் மீதான கோபம் எல்லாம் வெக்கையாவதை உணர்க்கூடியதாக இருந்தது.
‘மாமா பாவம்'
மாமாவின் கைகளில் நடுக்கம் தெரிந்தது.அவரின் கைகளை இறுக்கிப் பற்றிய போது அவரால் மறுப்பேதும் செய்யமுடியாது போயிற்று..மாமாவின் உடலை இறுக்கமாக்கியபோது அவரால் ஒன்றும் செய்யமுடியாதுபோயிற்று.
அவரால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத தருணம்.வெளியில் மழை வருமாப் போல் இருந்தாலும் வெய்யிலும் அவ்வப்போது வெளிச்சம் காட்டியது.
'கொம்மா வந்திடுவாவோ?'
'ம்'
'கொம்மா வந்தா கொடுவாக்கத்தியால வெட்டிப்போடுவா'
மாமா கேட்டுக்கொண்டிருந்தாலும் அவரால் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திவிடமுடியவில்லை.
கண்ணிலிருந்து கண்ணீர் கன்னம் வழி வடிந்தது.
உடல்கள் வேறு வேறாக களைத்துப் போய் கிடந்தன.
அறையின் நிசபத்தை பூனையின் சத்தம் குழப்பியது போலிருந்தது.
உடல் முழுக்க காயங்களின் வடுக்கள் துல்லியமாகத் தெரிந்தன..குடித்துவிட்டு சண்டைபிடித்த காயங்களாயிருக்கலாம்.சைக்கிளில் விழுந்தெழும்பியிருக்கலாம்.தழுவும் போதே தட்டுப்பட்டது..அந்த நிலையில் கேட்கும் நிலையிலோ சொல்லும் மனநிலையிலோ இருவருக்கும் இல்லையே..
'இன்னொருக்காத் தருவியா?'
'ம்' என்ற போது அவரின் முகத்தில் ஏற்பட்ட பிரகாசம்....
உடல் மெல்ல வலி எடுத்தாலும் மாமா கண்ணில் தெரிய கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.
எல்லாம் ஆயிற்று.
ஆனால் யாருக்கும் தெரியாதிருக்கவேண்டும்.என்னைக்கொடுத்ததில் ஏதோ திருப்தி என்றாலும் பிரச்சினை எதுவும் வந்துவிடக்கூடாது.மாமா குடிப்பவர்..குடிபோதையில் உளறிவிட்டால்..குடித்துவிட்டு தொந்தரவு செய்தால்...பிரச்சினை பெரிதாகிவிடுமே..
கொஞ்சம் கொஞ்சமாக பயமும் குடிவரத்தொடங்கியது.
.அதற்குப்பிறகு மாமாவில் நிறைய மாற்றங்கள் தென்பட்டன.அம்மா கவனித்தாளோ தெரியவில்லை.அவர் இப்போது நிர்வாணமாக குளிப்பதில்லை..
பூவரசம்பூக்களின் நிறத்தை ரசிப்பது போலிருக்கும்.
கிணற்றடி வாழைக்குத் தண்ணீர் போகட்டும் என்று மண்வெட்டியால் மண்ணைவெட்டி திருப்பிவிடுவார்.வீதியால் போகும் இளசுகள் பாட்டுப்பாடிக்கொண்டிருந்தார்கள்.
அறை ஜன்னலால் பார்க்கையில் அவரிடம் ஒரு வெட்கம் அதன் நிமித்தம் ஒரு நாகரீகம்,,,இங்கிதம்...உணரமுடிந்தது.மனிசனாக அவரை யாவரும் மதித்தாலே போதும்.துளசி இல்லையென்றானபின் வேறொரு மாலாவோ,சங்கரியோ கிடைக்கலாம்.ஒருத்திக்கு கணவன்..நாலு பேருக்கு ஒரு மனுசன்..மாமாவை விசரன்,,பைத்தியம் என்று சொல்லிவிடக்கூடாது...ஆனாலும் காரியக்காரன் என்று சொல்லிக்கொள்ளலாம்.அந்த நிகழ்விற்குப்பிறகு மாதம் ஒருக்கா சலூனுக்குப் போவார்..அடிக்கடி சேவ் பண்ணுவார்..பெட்டியில் இருக்கும் சாரங்களை மாறி மாறி கட்டுவார். கிழிஞ்சதைக் கட்டியதை காணமுடியவில்லை.கள்ளன்..காமத்தை ஒழிச்சுவைச்சுக் கொண்டு...நான் மட்டும் என்னவாம்?....பயமும் கூடவே எழுந்தது... மாமா உளறிவிட்டால்..?
நினைவு அறுபட்டது..
மாலை ஆறுமணிக்கே தயாரானாள் சுகந்தி.அன்று ஞாயிற்றுக்கிழமை கடையில் கூட்டமில்லை.ஆதலினால் நேரத்திற்கே கடையை அடைத்துவிட்டு வீட்டிற்குப் போனார்கள்.
குளித்துவிட்டு வந்த போது சுடச்சுட தேநீர் தந்தாள்.சுவைத்துக்கொண்டே ஜன்னல் ஊடே வெளியே பார்த்தான்.வெளிச்சம் இலேசாக மங்கிக்கொண்டுவந்தது.குளிராக காற்று வந்து முகத்தை வருடிச் சென்றது.
வாசலில் யாரோ வருவது தெரிய சுகந்திதான் முந்திக்கொண்டு கதவைத் திறந்தாள்.
வந்தவள் ரோகினி.
அவளை எதிர்பார்க்கவில்லை....சுகந்தியைப் பார்க்க அவள் எந்த அசுமாத்தமும் இன்றி இயங்கினாள்.
''அவள் வறுவாள் என்றோ அவளைச் சமாதானப்படுத்தி அவளின் மனதை மாற்றியது பற்றியோ இவள் சொல்லவில்லையே?இப்போது இவள் வந்திருக்கிறாள்.அவளுக்கு ஆறுதல் சொல்லியோ..அவளின் மனதை மாற்றவோ வரச்சொல்லியிருக்கலாமோ?
மௌனமாக இருந்தான்.
சாப்பிட உட்கார்ந்தோம்.
சுகந்தியே பரிமாறினாள்.
ராகினி மௌனமாக எதுவித பதட்டமுமின்றி சாப்பிடத் தொடங்கினாள்.
மயான அமைதி..
அமைதியைக் குலைப்போமா? இல்லை...வேண்டாம்..சுகந்தியே எல்லாம் பார்த்துக்கொள்வாள்..
அவளுடன் பேசி ஆலோசனையை சொல்லி அனுப்பிவைப்பாள் என்றே எதிர்பார்த்தான்.இத்தனை காலங்கள் இவளுடன் வாழ்கின்ற வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் புரிந்கொண்டு வாழ்கின்ற நிலையில் சந்தேகமோ,இறுக்கமான கோபமோ காட்டியதில்லை.திருமணம் என்கிற பந்தத்திற்குள் இணைந்த பின்னர் எதுவித அசௌகரியங்களும் ஏற்பட்டதேயில்லை.எப்போதும் குதூகலமும்,நகைச்சுவையும் பிறருடன் நட்புடன் பழகுவதும்..அவர்களின் குடும்பத்தில் ஒருவராக நம்மைக் கணிக்கும்படியும் வாழ்கின்றோம்.
யாருடனும் கோபித்ததில்லை..யாரையும் பகைத்துக் கொண்டதில்லை.
சுகந்தியும் தன்னளவில் நல்ல பெண்ணாகவே யாவருக்கும் தென்பட்டாள்.அவளும் மனிதர்களிடம் போல அனைத்து உயிர்களிடத்தும் கருணை காட்டினாள் என்றே சொல்லவேண்டும்.மாடு,ஆடு,பூனை,நாய்,கிளி மைனா என எல்லாவற்றின் மீதும் அதீத பிரியம் வைத்திருப்பாள்.வீட்டைச் சுற்றி மாமரங்கள்,வாழைமரங்கள் என்பவற்றுக்கப்பால் பூங்கன்றுகளையும் அளவுக்கதிகமாக பராமரித்தாள்.கடவுள் மீதான நம்பிக்கை கொஞ்சம் அதிகம் தான்..
அப்படியானவளிடம் ரோகினியின் கேள்வியும்,அவளுக்கான பதிலையும் சாதூரியமாக கையாளுவாள் என்று எதிர்பார்த்தான்.அதனால் இப்போது மௌனம் காத்தான்.
மாறாக,
சுகந்தி இப்படியொரு தீர்மானம் எடுத்திருப்பாள் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
ரோகினியை அறைக்குள் அழைத்துப்போனாள்.
அரை மணி நேரம் கழித்து தனியே வந்தாள்.ரோகினியை தூங்கச் சொல்லியிருப்பாள்..நாங்கள் இன்னொரு அறையில் தூங்கலாம் என்று அவலைப் பார்த்தான்.விருந்தினர்கென்று ஒரு அறை தனியே இருக்கும்.ரோகினிக்கு வழங்கப்பட்டிருந்த அறைக்குப் போகச் சொன்னாள்.
'எல்லாம் அவளுடன் பேசிவிட்டேன்..போங்கள்' என்றாள்
வார்த்தையில் எதுவித பதட்டமும் இருந்ததாகத் தெரியவில்லை.
நிதானமாகவே சொன்னாள்.
அவனுக்குள் வியப்பு ஏற்பட்டது.
'என்ன?' என்றான்
'ஒன்றுமில்லை.பதட்டப்படாமல் போங்கள்..'
அவனின் கைகளைப் பிடித்து அறைக்குள் போகத் தள்ளினாள்.
வியப்பாய் இருந்தது அவளின் செய்கை..அறைக்குள் நுழைந்ததும் ரோகினி அமைதியாக இரவு உடையுடன் நின்றிருந்தாள்.சுகந்தியின் இரவு உடையல்லவா?..
'சுகந்தி..என்ன காரியம் செய்துவிட்டாய்..?'கத்தவேண்டும் போலிருந்தது.
ரோகினி எதுவித பதட்டமுமின்றி நெருங்கி வந்தாள்.
சின்னப்பெண்ணை சமாதானப்படுத்தி அவளை நல்லதொரு சூழலுக்குள் கொண்டுவந்திருப்பாள் என்று நினைத்தவனுக்கு சுகந்தியின் செய்கை கோபத்தை வரவழைத்தது.
'உன்னுடன் தானே எல்லாவற்ரையும் பகிர்ந்துகொண்டேன்..யாருடனும் படுக்கையைக்கூட பகிர்ந்துகொண்டதில்லையே..அப்படியிருக்க..இந்தப் பெண்ணுடன்..அதுவும் மனைவியே..'
நெஞ்சுள் ஏதோ கூராக இறங்கியது போன்றிருந்தது.
ரோகினி மிக மிக அருகில் நெருங்கிட்டாள்.உஷ்ணமாய் மூச்சுக்காற்று அவனின் நெஞ்சில் பட்டதும் சிலிர்த்துக்கொண்டான்.
திகைத்து நின்றவனை இறுக அணைத்தாள்.உடல் வியர்த்துக் கொட்டியது அவனுக்கு..
'வேண்டாம்..வேண்டாம்..என்னை விட்டுவிடு..என் மனைவியைத்தவிர யாருடனும் இப்படி..'
முடிக்கவில்லை
ரோகினி 'அக்கா எல்லாம் சொன்னாள்'
அவனால் தொடர்ந்து பேசமுடியாதவாறு அவனின் உதட்டை தன் உதட்டால் இறுக்கிக்கொண்டாள்.
நெடுநேரத்தின் பின் ரோகினி சென்றுவிட்டாள்,
வெளியே வரக் கூச்சமாக இருந்தது அவனுக்கு..சுகந்தியே அறைக்குள் வந்தாள். மூலையில் ஒதுங்கி நின்றவன் சுகந்தியின் காலில் தொப்பென்று விழுந்தான்.
'சுகந்தி..சுகந்தி' கேவிக் கேவி அழத்தொடங்கிவிட்டான்.அவனை அப்படியே ஒரு குழந்தையை அணைத்துத் தூக்குவதுபோல தூக்கிநிறுத்தினாள்.
அவளுக்குள் சிரிப்பு,அழுகை,கோபம்,ஆதங்கம்,ஏமாற்றம் எல்லாம் எழுந்து அடங்கியது.
'தவறிவிட்டேனே'
'இல்லை..இல்லை..அவள் நமது வாழ்வில் எனி வரமாட்டாள்.கெட்ட கனவு தான்..வேறெந்த முடிவும் என்னால் எடுக்கத் தோன்றவில்லை.அதுதான் இந்த முடிவெடுத்தேன்..'இது அவள்.
'எப்படியாயினும் நீ செய்தது பிழைதான்'
'இருக்கட்டுமே.அவளின் தாபம் சில சமயம் எங்கள் வாழ்க்கையைச் சிதைத்துவிடும் என்கிற நினைப்பில் இப்படியொரு முடிவுக்கு வந்தேன்..மன்னித்துவிடுங்கள்'
'அந்தப் பிள்ளையை சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கலாம்..இப்படி..என்னை...'
அவனின் கண்ணீரைத்துடைத்தாள்.
'நீயே சொல்லு ..மனைவியைத் தவிர நான் எங்காவது போனேனா?'
அவளுக்குத் அவனைப் பற்றித் தெரியும்.கல்லூரியில் கூடப் படிக்கும் சக மாணவிகளிடமும் அதிகம் பேசாதவன்..காதல் என்றவுடன் தூரமாகிவிடும் நல்ல பிள்ளை...
திருமணமான புதிதில் எவ்வளவு சங்கோஜத்துடன் தான் அணுகினான்.முதலிரவிற் கூட அதிகமாகவே வெட்கப்பட்டவன் அவனல்லவா?
அழைத்துச் சென்று குளியலறைக்குள் போய் அவனைக் குளிக்க்ச் சொல்லிவிட்டு வெளியில் வந்தாள்.
மீண்டும் அழுகை பீறிட்டுக்கொண்டது அவளுள்..
தானே தீர்மானம் எடுக்கிறாள். எனினும் அவளுக்குள்ளும் ஆயிரமாயிரம் கேள்விகள்...எப்படிச் சமாளிப்பது? சமாளிக்கத்தானே வேண்டும்.
மாமாவின் ஞாபகம் வந்தது..
அந்த நிகழ்விற்குப்பின் மாமா நெஞ்சை நிமிர்த்தி நடந்தமாதிரி இருக்கும்..அந்த வயதிலும் கையை காற்றில் பறக்கவிடுவது மாதிரி வைத்துக்கொண்டு சைக்கிள் ஒடுவார்.விழுந்துவிடாத கவனம் இருக்கும்.ஆனாலும் மாமாவின் துணிச்சல் பலவாறாக யோசிக்கவும் வைத்தது.அந்த நிகழ்வைக் காரணம் காட்டி தனக்கான சாதகமான சூழலை ஏற்படுத்திவிடுவாரோ என்கிற பயம் எழுந்து அதிகமாகிக்கொண்டே வந்தது..பத்மா அக்கா அதிகமாக பேசுவதில்லை..தபால்காரன் முன்போல சுகம் விசாரிப்பதில்லை.மீன் கொண்டுவருபவரும் அம்மாவிடம் மகள் எப்படி இருக்கிறாள்?சம்பந்தம் ஏதாவது வந்திருக்கா? என்கிற அன்பான பேச்சு ஏனோ இல்லையோ என்பது போலிருக்கும்.பிரமையா?மாமா அடிக்கடி நெருங்கிவந்து பேசவரும் போதெல்லாம் பயம் வந்துவிடுகிறது..ஏதோ ஒரு உணர்வுவந்து உடலுள் ஒருவித வெக்கை சூடாக்குவதுபோல இருக்கும்...ஏதோ ஒன்று விலகுவது போலவும்...ஏதோ ஒன்று நெருக்கமாக வந்தது போலவும் உணர்வது ஏன்?அம்மாவுடன் மாமா நெருங்கிவந்துவிடக்கூடாது என்பதில் ஏன் கவனம் செல்கிறது..அயலவர்களிடம்..கள்ளுக்கொட்டிலில் வெறியில் உளறிவிட்டால்....என்கிற நினைப்பே பதற்றம் தருகிறதே...அந்தக் கணப்பொழுது ஏன் புரியாமல் போய்விட்டது?
நாட்கள் மாதங்களாயின.
மாமா வீடு திரும்பவேயில்லை..காரணம் தெரியவில்லை.எல்லா இடமும் தேடியாயிற்று..'எல்லாம் உன்னால் தான்' இலகுவாக அம்மாவிடமே பழியைப் போட்டு தப்பிக்கொண்டாலும்..யாரும் சமாதானம் அடைந்ததாகத் தெரியவில்லை..வெளிநாட்டிலிருந்து வந்து கேட்கும் உறவுகள்...இந்த உலகம்...அம்மாவும் பொலிஸில் சொல்லியாயிற்று..அவர்களும் தேடுவதாக சொன்னார்கள்.
பொறுப்பு கொஞ்சம் இறங்கியது போலிருந்தாலும் மனது தொடர்ந்து படபடத்தபடியே இருந்தது.
வருடங்களாக எல்லாம் கடந்துவிட..மாமாவைத் தேடுவதின் ஆர்வம் யாவர்க்கும் குறைந்துவிட்டது..
பொலிசாரும் தாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம் என காலங்களைக் கடத்தினார்.
எல்லாம் ஆறின கஞ்சியாயிற்று
மாமா உலவிய இடங்கள்..கிணற்றடி... வாழைமரம்.. பூங்கன்றுகள்..லொடலொட சைக்கிள்... காற்றில் கரைந்து மறைந்தது போன்ற கால நகர்வுகள்.
அழுகை தொடர பூமி சுட்டது..
குசினியில் ஏதோ எரிந்து மணத்தது.
வெளியே நாய்கள் குரைத்த வண்ணம் இருந்தன..
குளித்துவிட்டுவந்தவன் சாப்பிட உட்கார்ந்தான்..
மாமாவின் ஞாபகம் ஏன் இப்போது வந்து தொலைக்கிறது?அதற்கும் இதற்கும் ஏன் முடிச்சுவந்து விழுந்துவிடுகிறது?
ஒருவாரமாக சகந்திக்கும் அவனுக்கும் இடைவெளி அதிகமாக இருந்தது.விரிசல் வந்துவிடக்கூடாது என்று நினைத்தவள் அந்த மௌனத்தை உடைத்தேயாகவேண்டும்..இல்லையெனில் குடும்பக் கட்டமைப்பு சிதறிவிடும்.
அன்றைய தினசரியை எடுத்துப் புரட்டினாலும் மனது அதில் கவனம் கொள்ள மறுத்தது.
கோயிலுக்குப் போவோமா'
'நீயே போயிற்று வாயேன்' அமைதியாக சுரத்தின்றி சொன்னான்.
'இல்லை..இல்லை..நாங்கள் போகிறோம்..பூசைக்குக் கொடுத்திருக்கிறேன்.வரத்தான் வேண்டும்..வாருங்கள்'
மௌனமாக எழுத்தான்.கோயிலுக்குப் போகவெனக் குளித்தவனிடம் புன்னகைத்தபடி..
'ம்...இந்தாங்கோ..வேட்டி'
அழகாக ஸ்திரிக்கை போட்டு மடித்து வைத்திருந்த வேட்டியைக் கட்டிக்கொண்டான்.
நாட்கள் நகர்ந்து மாதங்களுமாயின.சுமுகமான நிலைமை இருவருக்குமிடையிலான மௌனம் உடைந்தும் நாட்களாயின.
கடையில் வழமையாக வருவோர் போவோருக்குகிடையில் நகைச்சுவைக்கதைகளுக்கிடையிலும் ..பெண்களிடம் கவனமாக ஒற்றைச் சொற்களுடன்,கேட்பதற்குமட்டும் பதில்தருபவனாக 'ஏய்..பெண்களே! பொருள் வாங்கவந்தால் வாங்கிக்கொண்டு போய்விடுங்கள்.அநாவசிய பேச்சு வேண்டாமே' சொல்லவில்லை.சொல்லவேண்டும் என நினைப்பான்..சொன்னால் அவர்களும் மன உளைச்சலுக்காளாகி வருவதை நிறுத்திக்கொண்டால் கடையின் வருமானம் குறைந்துவிடுமே என மனைவி சொல்வதையும் ஆமோதித்தான்.கடையை மூடிவிட்டு வேறெங்காவது போய்விடுவோமா என்று கூட கேட்டான்.
அவள் முற்றாக மறுத்துவிட்டாள்.
பழகிய இடம்..பழகிய மனிதர்கள்...உறவுகளாகிவிட்ட மனிதநேயங்கள்..இதைவிட வேறென்ன வேண்டும்?இவர்களை விட்டு விட்டு போய்விட மனது வருமா?
தன் கணவனுக்கு பிடித்த மீன்கறியை கம கமவென மணக்க சமைத்தாள்.வழமை போல குத்தரிசியை நனறாக குழையவிட்டு இறக்கினாள். முருங்கை இலையை கொய்து வறை செய்துவைத்தாள்.
சாப்பாடு தாயாரானது.அவன் வந்து சப்பாணிகட்டி உட்கார புன்முறுவலுடன் பரிமாறினாள்.குடிக்கத் தண்ணிர் எடுத்துவைத்தாள்.
வாங்கிவைத்த பீடாவைக் கொடுத்துத் தானும் வாய்க்குள் அடைந்தாள்.
தூக்கம் கண்ணைச் செருகியது..வெறும் நிலத்தில் படுத்துக்கொண்டாள்.வெறும் நிலத்தில் தூங்குவதென்பது சுகமே தனி..
வெளியில் காகம் கத்தியது.
பக்கத்துவீட்டு மாமியின் வீட்டு ஆடு கத்தியது.பறவைகளின் கீச்சொலி தூக்கத்தை மேலும் அவளுக்குச் சுகமாக .தூங்கியே போனாள்.
இப்படி அதிக நேரம் தூங்கியவளில்லை.ஏனோ அசதி அதிகமாக தூங்கிவிட்டிருந்தாள்.கண்விழித்துப் பார்க்கையில் கணவன் சுவருடன் தன்னைச் சார்த்தி உட்கார்ந்திருந்தான்.
அவன் தூங்கவில்லையோ?
கால்களை தன் இருகைகளாலும் இறுகக்கடியபடி உட்கார்ந்திருந்தவனை தூக்கக்கலக்கத்திலும் வியப்புடன் பார்த்தாள்.
'என்ன அப்படிப் பார்க்கிறீயள்?'கேட்டாள்.
அவன் அமைதியாக 'ஒன்றுமில்லை' என்று சொன்னான்.
'இரவுக்கு ஏதாவது வாங்கிவரட்டுமா அல்லது கடையிலேயே ஏதாவது எடுப்போமா?'
'வேண்டாம்..இரவுக்கு ஏதாவது சமைக்கிறன்..'
'ஏன் கஷ்டப்படுகிறாய்? பாலைக் காய்ச்சிக்குடித்துவிட்டு படுக்கலாமே.'
'வாங்கவோ,சமைக்கவோ முடியாத காலம் எண்டால் சும்மா விடலாம்..இப்ப..இருக்கிறதைச் சாப்பிடுவோம்'
அவளுக்குத் தெரியும்..அவன் பசி இருக்கமாட்டான்.சின்ன வயதில் கொஞ்சம் சாப்பாட்டுக் கஷ்டம் வரும்போது மரவள்ளிக்கிழங்கும் சம்பலும் தான் கனநாள் சாப்பாடு..வீட்டில் கஷ்டம் என்றாலும் அவனின் தாய் ஏதாவது சமைச்சுப்போடுவாள்.சில நாட்கள் பாணும் பழைய கறியும் தான்..அல்லது தேநீருடன்... கோதுமைமாவை குழைச்சு கொஞ்சம் வெங்காயத்தையும்,பச்சைமிளகாயையும் நறுக்கிப்போட்டுப் பிசைந்து இறுக்கமாக றொட்டியாகவோ,தண்ணீர் கொஞ்சம் ஊற்றி தோசையாகவோ சுட்டுத் தருவாள் அம்மா.
அவன் முன்பொருமுறை சொல்லியிருந்தான்.
இப்ப அவனுக்கு பசியிருக்கும் நிலைக்குள் காலம் தள்ளவில்லை..
எழுந்துகொண்டாள்.
முகத்தை அலம்பிவிட்டு சீலைத்தலைப்பால் துடைத்தபடி அடுக்களைக்குள் நுழைந்தாள்.அவனும் அவளைப் பின் தொடர்ந்தான்.
சமையலுக்கு ஒத்தாசை புரிந்தான்.
அவனே கேட்டான்.
'நமக்கென்றொரு குழந்தை வந்தால் பின்னடிக்கு உதவியாக இருக்குமே'
'எனக்கு மட்டும் ஆசையில்லையா?' -இது அவள்
'இவ்வளவு காலம் பொறுத்திருந்தோம்..கடவுளின் மீதே பொறுப்பைப்போட்டுவிட்டு வாழ்ந்துகொண்டாலும் மனதுள் சின்னதாய் துளிர்க்கிற ஆசை ..மற்றக் குழந்தைகளைப் பார்க்கிறபோது வருகிற மகிழ்ச்சி கூடவே..நமக்கான குழந்தைகள்பற்றியும் சிந்திக்கவேண்டும் என்கிற நினைப்பு..'
அவள் எதுவும் பேசவில்லை.
அவனே மௌனத்தைக் கலைத்தான்.
'நாளைக்கு ஆஸ்பத்திரிக்குப் போய்வருவோமா?'
'ம்..'
'என்ன..ம் கொட்டுகிறாய்..இப்படிக் கேட்டது பிடிக்கேல்லையா?'
'இல்லை..போவோம்' என்றாள்.
குசினி சன்னல் வழி குளிர்ந்த காற்றுவந்து முகத்தில் அடித்தது..
அவன் சிரித்துக்கொண்டான்.
நீண்ட நாளைக்குபிறகு மனம் விட்டு சிரித்தது அன்றைக்குத்தான்..
ரோகினியுடனான சம்பவத்திற்குப் பிறகுஒரு இறுக்கம் இருந்தது.அது கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்தது.
கண்ணாடி முன் வெகுநேரம் அவன் நிற்பதைக் கவனித்தாள்.
'அதிசயமாயிருக்கே'
இப்படி நிற்கமாட்டாரே.திருமணமான புதிதில் இப்படி நின்றது ஞாபகம்.
'என்ன ஆயிற்று இந்த மனுஷனுக்கு?'
உற்றுக் கவனித்தாள்.
பரந்த நெற்றி..குளித்துவிட்டு வந்தவுடன் சாமி கும்பிட்டுவிட்டு வீபூதியை அப்பியவாறே அன்றைய நாள் முழுக்க திரிவது தெரியும்..மேவி இழுத்த தலைமயிரை
அவ்வப்போது கோதிவிடும்போது அதன் அடர்த்தி புரியும்..ஆங்காங்கே தன்னை மறைத்தபடி ஒற்றைக்கம்பியாய் வெள்ளை மயிர்..மீசை நானும் வைத்திருக்கிறேன் என்பது போல அடிக்கடி நீவிவிட்டபடி தனக்குத் தானே அழகுபார்க்கும் கம்பீரம்...எதனையோ சொல்லத்துடிப்பதுபோல அல்லது எதனையோ கவ்வித் தின்ன துடிப்பது போல உதடுகள்..
சிரிப்பாய் வந்தது...
'தலைவருக்கு இளமை திரும்புதோ?' எனக் கேட்கவேண்டும் போலிருந்தது.கேட்கவில்லை.
மனிதனுக்கு காதலுடன் கூடிய காமம் இருப்பின் அவனிடம் எப்போதும் கம்பீரம் இருக்குமாம்..எங்கோ வாசித்தது ஞாபகம் வந்தது அவளுக்கு.
மறுநாள் ஆஸ்பத்திரிக்குப்போக தயாரானார்கள்.
கடைகளைத் திரும்பிப்பார்த்தான் மணியம்..வரிசையாய்க் கடைகள்..தேநீர்க்கடை,மருந்துக்கடை,புத்தகசாலை,சவாரிக்காகக் காத்திருக்கும் ஆட்டோக்கள், வங்கி
கடந்துவிட்டான்..தேநீர்க்கடையிலிருந்து வந்த பழைய பாடல்.
வழியில் தெரிந்தவர்களுக்கெல்லாம் புன்னகை ஒன்றை பரிசளித்துவிட்டு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தார்கள்.வழமையாகப் போகும் ஆஸ்பத்திரியை திருத்தவேலை என்று மூடியதாலும்,போகும் காரியத்தை யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகவே ஊருக்கு வெளியே அமைந்த ஆஸ்பத்திரிக்குப் போனார்கள்.
கொஞ்சம் சங்கடம் தான்..என்ன செய்வது?
நர்ஸ் வந்து அழைக்கும் வரை காத்திருந்தார்கள்.
அப்போது யாரோ கடந்து போனது கவனத்தில் பட்டதும் அதிர்ச்சியாக இருந்தது..
மாமா...மாமா... அவர் இங்கே...காணாமல் போயிருந்த மாமா இங்கு எப்படி?
வயிற்றில் ஏதோ புரண்டது..
மகிழ்ச்சி ஒருபுறம்..அதிர்ச்சியாகவும் இருந்தது.
அடிவயிற்றைத் தடவிக்கொண்டாள்.
வாழ்வில் சந்தித்துவிடக்கூடாது என்ற நினைப்புடன் அசிரத்தையாக இருந்துவிடும்போது அந்த நிகழ்வு,அந்த ஞாபகம்,அந்த மனிதர் ஏதோ ஒரு கணத்தில் வாழ்வில் மீளக்குறுக்கிடும் போது ஏற்படும் அதிர்ச்சி அனுபவித்தால்தான் தெரியும்..
ஒருவித தவிப்பும் எழுந்துகொண்டது..மாமா ஏன் இங்கு வந்தார்?அவர் வந்திருக்கக்கூடாது.
உடலின் எங்கோ ஒரு பகுதியில் சொட்டுச் சொட்டாய் குருதி ஒழுகுவது போன உணர்ந்தாள்.
கணவனைப் பார்த்தாள்.அவன் வேறெங்கோ பார்த்தபடி இருந்தான்.கவனித்திருப்பானோ?
ச்சீ .கவனித்திருக்க வாய்ப்பில்லை..
'அமைதியாகப் போகும் வாழ்வில் பூகம்பம் வந்துவிடக்கூடாது..எடக்கு முடக்காய் கதைக்கப்போய் உளறிவிட்டால் சந்தேகம் வந்துவிடும். ஆண்கள் பலபேருடன் பழகுவார்கள்...நண்பர்களாக இருப்பார்கள்.படுக்கைவரை செல்லும் தோழமையும் இருக்கும்..ஆனால் பெண்கள் நட்பைத் தேடுவதிலும், தோழமையாக இருப்பதிலும் நிறைய சங்கடங்கள் உண்டு.காதல்,காமம் இருவருக்கும் பொதுவானதுவே.எனினும் பெண்களுக்கென சமூகக்கட்டமைப்புக்களை இறுக்கமாக வைத்துள்ளதனால் அதனை மீறவும் முடிவதில்லை..குடும்ப உறவு பாதித்துவிடும் என்கிற பயம் என்னிடமும் உண்டு தானே .அதுதான் பயத்திற்கான காரணம்..மாமா வந்துவிடக்கூடாது..மாமாவைச் சந்தித்துவிடக்கூடாது..ஆண்கள் ஒன்றும் இந்த விடயத்தில் புரட்சியாளர்களில்லை..'
ஏன் இப்படி மனம் பதைபதைக்கிறது?
ஒரு பெண்ணின் மனநிலையை புரிந்துகொண்டு ரோகினிக்காக தன் கணவனை விட்டுக்கொடுத்தவள் தன் கடந்தகால நிகழ்வை நினைத்து ஏன் பயப்படவேண்டும்..அது வேறு..இது வேறா?
உடல் பயத்தினால் பதறியது..மாமா..மாம்.ஆ
'நான் திருமணம் செய்துவிட்டேன்..கணவனுடன் வந்திருக்கிறேன்...மாமா நாகரிகமாக நடந்துகொள்வாரா?
உறவு பாராட்டி வீட்டுவர முயல...தனிமையில்..பழையதைக் கிளற... இன்னொருக்காத் தருவியா?'
வியர்த்துக்கொட்டியது.
கணப்பொழுது இன்பத்தைத் தியாகம் என்ற வட்டத்துள்ளும் அடக்கிவிடப்பார்க்கிறோம்.அது இன்னொரு கணத்தில் சாடிக்குள்ளிருந்தெழும் பூதம் போல வந்துவிடவும் செய்கிறது.திருமணம் என்கிற பந்ததத்திற்குள் நுழைந்த பிறகு கடலின் அலையுடன் கரை வந்து சேர்கிற குவளையை வீணாக எடுத்து பிரித்துப்பார்க்கிற நேரங்கள் திருமண பந்தத்தையே குலைத்துவிடும் போதுநில தடுமாறி விடுகிறதும் உண்டு.இப்போது மாமா வடிவில் பூதம் வந்திருக்கிறதோ..அச்சம் மேலீட்டால் உடம்பு மேலும் பதறியது.'இப்படி உடகார்ந்து கொள்..பார்மசியில மருந்தை எடுத்துவாறன்'
நீளமான சீமென்ட் தரைகாட்டிய பாதையினால்மணியம் நடந்தான்.அவன் மறையும் பார்த்ததும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
'என் பதட்டத்தை கண்டுபிடித்துவிட்டால்?'
'கடவுளே'
கண்களை இறுக மூடித் திறந்தாள்.
மாமா நின்றிருந்தார்.
விழி பிதுங்கியது.
மாமா தொடர்ந்தார்.
'எனக்கு 'அந்த' நிகழ்வுக்குப்பிறகு உன்னைப் பார்க்க சங்கடமாக இருந்தது.வெட்கமாகவும் இருந்தது.பைத்தியம்,விசர் என்று சனம் பேசேக்கை என்னை மனுசனாய் மதித்தனி..நீ..கொம்மா என்ர அக்காதான்.அவவும் கடிஞ்சுகொட்டுவா..விசரன் என.சின்னனிலிருந்தே பேசுற படியால பழகிப்போச்சு.எங்க என்னால் உன்ரை வாழ்க்கை பழுதாய்ப்போயிடுமே என்ற பயம் வந்தது..இந்த வயசில நான் உன்னோட பழகுறதும் அதுக்குப்பிறகு ஏனோ சங்கடமாய் இருந்துது.படிச்சனி.நல்லா இருக்கவேணும்.நாலு பேரோட பழகுறனி..பிறகு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில பிழையான முடிவெடுக்கவேண்டியும் வரலாம்.அப்ப அது இப்பத்தையதைவிட ஆபத்தானதாய் இருக்கும்..அக்காவின்ர குடும்பம் எனக்கு அடைக்கலம் தந்த மாதிரித்தான் நான் நினைக்கிறன்..குடும்பம்..காலம் பூரா அவை பாப்பினம் எண்டு நினைச்சும் அவையளும் அக்காவிட்ட விட்டிட்டுப் போனாப் பிறகு நான் சரியா நடந்திருக்கமாட்டன்..ஒருதலையா துளசியை நினைச்சிட்டன்..பிறகு விசரன் என்Dஉ ஒதுக்கிப்போட்டினம் இந்தச்சனம்..என்னால தனக்குப் பிரச்சினை வந்தாலும் எண்டு துளசியும் தூரமாய்ப் போட்டாள்.பிறகு சந்திக்கேல்ல..வீட்டுக்கு வரப் பிடிக்காமல் ஓடிப்போட்டன்..நீங்களும் தேடியிருப்பியள்.எத்தனை நாள் அழுதிருப்பன்.
எனக்கோஉனக்கோ அது தேவைப்படும் சாத்தியங்களும் ஏற்படலாம்.பிறகு பூதாகரமாய் வெடிக்கும்...குடும்பம் குலைஞ்சுப்போகும்.இதெல்லாம்நடக்கக்கூடாது எண்டால்நான் இருக்கக்கூடாது எண்டு நினச்சுத்தான் வரேல்ல..கனகாலமா தேடிப்போட்டு ஓய்ஞ்சிருக்கேக்க பொலிசில போய் விசயத்தைச் சொல்லிப்போட்டு போய்விட்டன்..இந்த ஆஸ்பத்திரியில இந்த வேலைதான் கிடைச்சுது..பரவாயில்லை எண்டு செய்யுறன்..அப்பத்தான் துளசியக் கண்டனான்.நல்லா நொடிஞ்சுப்போய் நிண்டது.பார்க்கப் பாவமாய் இருந்தது..வருத்தக்காற மனுசன்.அவளுக்கு உதவேண்டும் போலிருந்தது..முதலில வேண்டாம் எண்டு சொன்னவள்.எந்தக் காரணம் கொண்டும் உன்ர வாழ்க்கைக்க வரமாட்டன்..என்னா முடிஞ்சத உதவுறன்..அவளுக்கு எல்லாதையும் சொல்லிப்போட்டன்..ஊருக்குப் போறதில்லை என்றும் சொன்னனான்.உனக்கும் கலியாணம் முடிஞ்சுது எண்டு கேள்விப்பட்டன்.. இப்பிடித்தான் கொஞ்ச நாளைக்கு முன்னம் காரில அடிப்பட்ட பேஷண்டை கொண்டுவந்தவையாம்.பிள்ளைத்தாச்சி வேற..பெறுமாதம் எண்டவை.பிள்ளையை சுகாய் எடுத்தவி..ஆனால் அந்தப்பொம்பிளை செத்துப்போடுதெண்டு இங்க மோச்சறிக்கை கொண்டுவந்தவ.கொண்டுவரேக்கை நான் தான் வேலையில நிண்டனான்.பாக்கப் பாவமாய் கிடந்தது..வாழ்வேண்டிய வயசு..எப்படியோ பிள்ளையை பெத்துப்போட்டுது.ஆரும் வரேல்ல.பிள்ளையைப் போய்ப்பாத்தன்..முதலில மாட்டோம் எண்டு மறுத்தும் பல காரணங்களைச் சொல்லி குழந்தையை வளர்க்கவென வாங்கிப்போட்டன்..பிறகுத்தான் உறைச்சுது.எப்படி வளக்கப்போறன் எண்டு..அப்பத்தான் துளசி ஞாபகம் வந்தது.அதுக்கும் பிள்ளைகளில்ல..பேசிப்பாத்தன்..கடைசியில ஓமெண்டுட்டுது.பிரசவம் பாத்த டாக்குத்தரும் பாவம் நல்லவர்.இல்லாட்டி ஓமெண்டு சொல்லியிருக்கமாட்டார்.பிள்ளைய ஆச்சிரமத்துக்குக் கொடுத்திருப்பினம்..பிள்ளையைப் பார்க்கேக்க அதின்ர தாய்தான் கண்னுக்குள்ள வருகுது..பாவம்..ஆர் பெத்த பிள்ளையோ..எப்படியோ தப்புப்பண்ணி தாயாகி அநாதையாய் செத்துப்போட்டுது.இப்ப ரோகினி எண்டு பேர்வைச்சிருக்கினம் பிள்ளைக்கு..'
மாமாசொல்லி முடிக்கவில்லை...ரோகினி என்னும் பெயர்.உறைத்தது..அதே பெயர்...
'எழுந்து கொண்டாள்.
'மாமா..அந்த பிள்ளையின்ர தாயின்ர பேர் தெரியுமே?'
மாமாவின் ஞாபகத்திற்கு வரத் தாமதமாகியது.
ஞாபகப்படுத்தியபடி இழுத்தார்.. ரோகினியோ..ராகினியோ..அ..ஆ..ராகினி...'
அப்படியே இடிந்துபோய் உட்கார்ந்துகொண்டாள்.
அவளா இவள்?
ஆயிரம் கேள்விகள் அவளுள் எழுந்து மடிந்தது..
கால்களை நிலத்தில் அழுத்தினாள்..காலமே ஏன் இப்படி சுற்றுகிறாய்.
வாழ்க்கை ஒரே வட்டத்திற்குள்தான் சுற்றும்.எவ்வளவுதான் விரிந்து பரந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டாலும் நம்மை அறியாமலேயே காலம் நம் வாழ்க்கைக்குள் வட்டத்தைப் போட்டுவிடுகிறது..
மேலும் வியர்த்தது,,
கணவன் இன்னும் வந்துவிடவில்லை..
தலை சுற்றுவது போலிருந்தது.விழுந்துவிடுவாள் என்கிற நிலையை சுதாகரித்துக் கொண்டவளாய் 'மாமா.அந்தக் குழந்தையைப் பார்க்கோணும்' என்றாள். அக்குழந்தையின் அம்மா அவளாக இருந்துவிடக்கூடாது.'கடவுளே!என்ன சோதனை?'
'அன்றைக்கு மாமாவிற்கான சந்தர்ப்பத்தை நான் ஏற்படுத்தியிருந்தேன்..கணப்பொழுதில் ஏற்படுத்திக்கொண்ட தீர்மானம்.உள்ளுணர்வும் சரியென்றே சொன்னது.மாமா என்கிற உரிமை பாதுகாப்புணர்வையும் தந்திருக்கலாம்.பெண் என்பவள் கவனமாக இருந்திருக்கவேணும்...கற்பொழுக்கம் பிசகிவிடக்கூடாது..என்று கூட நினைக்கத் தோன்றவில்லை.வயது கூட காரணமோ தெரியவில்லை..ஆனாலும் மாமாவிற்கு என்னைத் தந்திருக்கக்கூடாது..மாதச் சுகயீனம் தள்ளிப்போனபோதே மனதுக்குள் ஆயிரம் கேள்விகளை யாரோ அள்ளிவீசியது போலிருந்ததே..உடம்பெல்லாம் திராவகத்தால் குளிப்பாட்டியதான உணர்வைத் தந்ததே.ஒரு வேளை கர்ப்பமாகியிருந்தால்..?ரோகினியைப்போல..?அம்மா அடிக்கடி முகத்தைக் கூர்ந்து பார்க்கத்தொடங்கினாளே?ஏதாவது நடந்துவிடக்கூடாது என்று நினைத்தாளோ அவசரமாக திருமணத்தை நடத்த அம்மா முனைந்தாளோ.'
பிள்ளை..பிள்ளை'
மாமாவின் குரல் வெகு அருகாமையில் கேட்டது.
ஒன்றும் நடக்கவில்லையே..யாரோ கடைக்கு வருகிற பெண்ணுக்கு இரங்கி அந்தச் சூழலை ஏன் ஏற்படுத்திக்கொடுத்தேன்?தன்னுள் முடங்கிக்கிடந்த உணர்வு மாமா மீதான ஈர்ப்பை என்றே ஏற்படுத்தியதுவோ..பெண்ணுள் இழையோடுகிற உணர்வை சரியாகத் தன் புரிந்துகொண்டேனா?ரோகினியின் ஆர்வத்தை பிழையாக கணிப்பிட்டுவிட்டேனா?ஆணுக்கும் கற்பு வேண்டும்.ஆனால் நான்...கேவலமாக நடந்துகொண்டுவிட்டேனா?
உனக்கு மட்டுமே தெரியும்...ரோகினி வந்தால்தான் உண்டு..அவள் இறந்துவிட்டாள்.அவளின் குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது.கணவனுக்கு தெரியக்கூடாது..மாமாவிற்கும் உண்மை தெரியாது.அந்தக் குழந்தையை நான் மட்டும் பார்க்கவேண்டும்..உதவிகள் செய்யவேண்டும்.ஒரு நப்பாசை..அந்த ரோகினியின் குழந்தையாய் இருக்ககூடாது.
கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
'ஏதோ நான் தான் தியாகி என்பது போல மாமா மீதுகரிசனை கொண்டது...ரோகினியின் மீதான கரிசனையே கணவனையே கொடுத்தது..உலகத்தில் எங்காவது இப்படி நடக்குமா? நடந்திருக்குமோ?
தீர்மானமில்லாத வாழ்க்கை சிலருக்கு அமைந்துவிடுகிறது.யார் மீது யார் பழி போடுவது?
மாமா கம்பீரமாக நிற்பது போலிருந்தது.
தனக்கு எதுவித பதட்டமோ இல்லை என்பது போல் மாமா நின்றிருந்தார்..
'இண்டைக்கு வழமைக்கு மாறாக சவங்கள் வந்ததால வேலை கொஞ்சம் கூட..குளிக்க வேணும்..நாளைக்கு வா பிள்ளை..நான் கூட்டிக்கொண்டு போறன்..ம்'
மாமாவை நினைக்க இப்பவும் பாவமாய் இருந்தது..கஷ்டப்படுகுது..சாரத்துடன் வீடு முழுக்க வலம் வருபவர்...இப்ப வேலை எண்டு ..காக்கி நிற உடுப்பு..நிர்வாணமாய் கிணற்றடியில சறம் காயுமட்டும் குளிக்கிறதும்,நினைத்த மாத்திரத்தில் துவாயை இடுப்பில் சுற்றியபடி சாமி அறைக்குள் நுழைகிற மாமா..எதுவித சலனத்தையும் யாருக்கும் தந்துவிடாத மனிதனாய் மாமா..ஒருநாள் முழு நிர்வாணமாய் ஒன்றாய் கிடந்த மாமா...இப்போது காக்கி உடையில்..பிணங்கள் அடுக்கப்பட்டிருக்கும் சவ அறையில் வேலை பார்ப்பவராய்..மாமா எவ்வளவு மாறிவிட்டார்.?
அவசரப்படுத்தியபடியே பதிலுக்குக் காத்திராமல் நகர்ந்தார்..யார் யாரோ கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொன்னபடியே அவர் மறைந்தார்.
நன்றாக வாழவேண்டும் என்று நினைக்கிற கணப்பொழுதில் ஏதாவதொரு தருணத்துத் தவறுகள் முன்னின்று நினைவுகளைக் கிளறமுற்படும்போது வாள்கொண்டறுப்பது போலிருக்கும்.தவறென்று தீர்மானமாகிற மனநிலையில் முன்னைய தியாகங்கள் கூட குற்றமாக்கப்பட்டுவிடும்.தூரமாக நின்றோ,அருகில் வந்து நேருக்கு நேராகவோ வீசப்படும் கத்தியை லாவகமாக தடுக்காவிடில் எல்லாம் முடிந்துவிடும்.சாம்பல் கூட மிஞ்சாத வாழ்வை நம் குற்றங்கள் ஒருநாள் வழங்கும் என்பது கூட தெரியாத நமக்கு நாமே கற்பிதப்படுத்தும் மனநிலையில் நாமாகவே சத்தியமாய் உண்மையாய் ஊழியம் செய்யமுனைந்துவிடுகிறோம்.
பிறகு பிரபஞ்சமே தோற்றதாய் முடிவெடுக்கும். அலைக்கழிக்கும்..
அவளும் அப்படித்தான் ஆகிப்போனாள்.
'நான், மாமா, மணியம்,ரோகினி. கடைசியில் நானே குற்றவாளியாகிபோனேனோ? மாமாவிற்கு என்னை ஒப்படைத்திருக்கக் கூடாது..ரோகினிக்கு தன் கணவனை கொடுத்திருக்கக்கூடாது. என்னுள் ஒளிந்திருந்த காமமா மாமாவிடம் மண்டியிட்டது...? அப்ப ஏன் ரோகினியை கணவனைப் போகச்சொன்னேன். இரண்டும் பொருந்திவரவில்லையே. குற்றவாளிதான். தண்டிக்கப்படவேண்டும்தான்..'
கூனிக்குறுகிப்போனாள்..
நடந்தாள்..எதுவுமறியாதவன் போல மருந்துப்பையுடன் அவள் பின்னே சென்றுக்கொண்டிருந்தான்.
- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
20/06/2020