- - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -தூங்கிக் கொண்டிருந்த அவரது பருத்த வயிற்றின் மேல் யாரோ ஏறி அமர்ந்துகொண்டார்கள். இரு கைகளையும் மாற்றி மாற்றி நெஞ்சில் ஓங்கிக் குத்தினார்கள். கனவில் வந்திருந்த குதிரைப்படைகள் அடி தாங்காது அலறித் திசைக்கொன்றாகத் தெறித்தோடின. புலனுணர்ந்து பதறித் துடித்து விழித்துப் பார்த்தபொழுது மகன் வயிற்றுப்பேரன் அவர் வயிற்றிலமர்ந்து தன் இரண்டரை வயதுப் பிஞ்சுக் கைகளால் அவரது நெஞ்சில் குத்திக் கொண்டிருந்தான். 'அச்சு அச்சு' எனத் தன் அக்காவைப் பற்றி ஏதோ குற்றம் சொல்லவிழைந்தான்.

அவசரமாக விழித்ததில் பரபரத்து அவர் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினார். தூக்கத்தில் சிவந்த கண்களை அப்படியும் இப்படியுமாக உருட்டினார். குழந்தை பயந்துபோனது. அவரது தொப்பை வயிற்றை நனைத்தபடி அழத் தொடங்கியது. குழந்தையின் அழுகை கேட்டு எட்டிப் பார்த்த அதன் அம்மா திண்ணைக்கு ஓடிவந்து பாயில் காற்றாடப் படுத்திருந்த மாமனாரின் வயிற்றில் அமர்ந்திருந்த குழந்தையைக் கடிந்தவாறே அள்ளித் தூக்கிக் கொண்டாள். சமையலறையில் வேலையாக இருந்திருக்கவேண்டும். உடுத்திருந்த புடவை இழுத்துச் செருகப்பட்டிருக்க, உடலிலும் துணியிலும் அரிசி மாவு வெள்ளை படிந்திருந்தது.

குழந்தையைப் பார்த்துக் கொள்ளாமல் என்ன செய்கிறாயென்பது போன்ற ஏதோவொரு வசவு வெளியே ஊஞ்சலாடிக் கொண்டிருந்த சிறுமியை நோக்கி ஏவப்படுவது மெலிதாகக் கேட்டது. மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு தினமும் இப்படி திண்ணையில் காற்றாடச் சாய்ந்துகொள்வது அவரது வழமைதான். இன்று சற்று நேரத்துடன் விழித்துக் கொண்டுவிட்டார். குழந்தை வந்து குழப்பாமல் விட்டிருந்தால் இன்னும் நன்றாகத் தூங்கியிருக்கலாம். மூத்திர வீச்சம் நாசிக்கு எட்டத் தொடங்கியது. எழுந்து ஒரு கை ஊன்றி பாயிலேயே அமர்ந்து கொண்டார். துவைத்துக் காய்த்தெடுத்த வெள்ளை சாரமொன்றை மருமகள் கொண்டு வந்து அருகிலிருந்த சாய்வு நாற்காலியில் வைத்து உடை மாற்றிக் கொள்ளச் சொல்லி நகர்ந்தாள்.

முத்துராசு தூரத்தே இருந்த படலையை விலக்கிக் கொண்டு உள்ளே வருவதைக் கண்டார். அவனுக்கும் இப்பொழுது ஐம்பது வயது கடந்திருக்கும். கல்யாணமாகியிருந்தால் தன்னைப் போலவே பேரன் பேத்திகளைப் பார்த்திருப்பானென எண்ணிக் கொண்டார். பெருமூச்சு விட்டார். காலம் காலமாகக் குற்றவுணர்ச்சியில் சிக்கிச் சுழன்ற நெடுமூச்சு. இருவருடைய வாழ்க்கைகளைச் சீரழித்த பெரும்பாவத்தின் உஷ்ணமூச்சு.

மெதுவாக எழுந்துகொண்டார். முத்துராசு அதற்குள் திண்ணைக்கே வந்துவிட்டிருந்தார். வெள்ளைச் சாரம், வெள்ளைச் சட்டை. எண்ணைய் தேய்த்து இடப்புற வகிடெடுத்து ஒரு பக்கமாக அழுத்தி வாரப்பட்ட தலைமயிரில் வெள்ளிக்கம்பிகள் கலந்திருந்தன. வயதானாலும் ஆளின் கம்பீரமும் மிடுக்கும் இன்னும் குறையவில்லை என்பதைப் போல நின்றிருந்தார். நேரில் பார்க்கும் யாரும் அவரை சித்தம் பிசகியிருந்து, முப்பது வருடங்களாக மனநல மருத்துவமனையிலிருந்து கடந்த வருடம்தான் விடுவிக்கப்பட்டவரென உடனே அனுமானிக்க முடியாது. மாதத்தில் ஓரிரு நாட்கள் ஏதோ பேய் பிடித்தாட்டுவதைப் போல நடந்துகொள்ளுமவர் மற்ற நாட்களில் மிகவும் சாதாரணமாகவும் இயல்பாகவுமிருந்தார்.

" அண்ணா.. தூங்கிட்டிருந்தீங்களோ ? "

" ஓமடாப்பா..சின்னவன் என்ர மேல ஒண்ணுக்கடிச்சிட்டான். இரு..மேல் கழுவிக் கொண்டு வாரன் "

அவர் வெளியே இறங்கி திண்ணைப்பக்கமாகவே சுற்றிக் கொண்டு கொல்லைப்புறக் கிணற்றடிக்கு நடந்தார். முத்துராசுவும் அவரைப் பின் தொடர்ந்தார். முற்றத்து மாமரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் பேத்தி, சின்னவனை மடியிலமர்த்தி ஆடிக் கொண்டிருந்தவள், முத்துராசுவைக்கண்டதும் கால்களை ஊன்றி ஊஞ்சலை நிறுத்தி பயந்த கண்களால் அவரைப் பார்த்திருந்தாள். குழந்தையைக் கண்டதும் முத்துராசு அருகில் சென்று குனிந்து அதன் கன்னத்திலொரு முத்தம் கொடுத்தார். அது தன் கையைப் பொத்தி முத்தமிடப்பட்ட கன்னத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு தன் அக்காவைப் பார்த்தது. எட்டு வயதுச் சிறுமி பயத்துடனேயே புன்னகைத்து வைத்தாள். முத்துராசு அகன்றதும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவசர அவசரமாக வீட்டுக்குள் ஓடினாள். சில நாட்களுக்கு முன் அவருக்குப் பேய்பிடித்து தன் வீட்டார் பட்டபாடு அவளுக்குத் தெரியும்.

அந்த வீட்டில் முத்துராசுவுக்கு மதிப்பு அவரது அண்ணனிடம் மட்டும்தான். அண்ணியோ, அவர்களின் மகனோ, மருமகளோ அவரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. முத்துராசு வீட்டுக்கு வந்து நின்றால், தோலில் ஒட்டிக் கொண்ட அட்டையை அது இரத்தமுறிஞ்ச முன் அகற்றத் தவிப்பதுபோல அகற்றிடவும் அவ்வுறவை துடைத்து வழித்தெறிந்திடவும் அவர்கள் துடித்தார்கள். அதுவும் முத்துராசு வந்து தனது அண்ணாவிடம் ஏதும் வாங்கிப்போகும் நாளில் அவரது அண்ணியின் முணுமுணுப்புக்கள் நாள்முழுதும் அவ்வீட்டினுள் எதிரொலித்தபடி அலையும்.

முத்துராசு கிணற்றடியிலிருந்த புளித்தோடை மரத்தடியில் அண்ணா உடல்கழுவி முடியும்வரை காத்திருந்தார். தெள்ளிய நீர் கொண்ட அகன்ற கிணறு. அண்ணாவும் முத்துராசுவும் பிறக்கும் முன்னரே அவர்களது அப்பாவால் தோண்டப்பட்ட கிணறு. இருவருக்கும் சொந்தமான, பல அறைகளைக் கொண்ட அந்தப் பெரிய வீட்டைக் கட்டும் பொழுது நீர்த்தேவைக்கெனத் தோண்டப்பட்ட கிணறு, இன்றுவரையும் அள்ள அள்ள ஊறி நிறைந்துகொண்டே இருக்கிறது. குளிக்கவும் துவைக்கவும் பயன்படும் நீர் வழிந்து கொல்லைப்புறமிருந்த கீரைப்பாத்திக்கு ஓடிற்று. பின்னரும் அதன் வழியே போய் அவர்களுடைய பரந்த வயலின் வாய்க்காலில் கலந்தது. ஐந்தாறு ஏக்கர்களுக்கும் அதிகமான அந்த வயல்காணியை ஒரு காலத்தில் பராமரிக்கவென வந்து வயல் காணியின் மத்தியிலே குடிசை போட்டுக் குடியிருந்த சின்னமணிதான் அந்தக் கிணற்றை வெட்டிக் கொடுத்தவர்.

சின்னமணி அவர்களிருவரும் பிறக்கும் முன்பே அங்கு தங்கியிருந்து அந்தக் குடும்பத்துக்கெனவே உழைத்து வந்தவர். வயல்வேலை நடக்கும் காலங்களில் அதற்கென ஆள் சேர்ப்பது, கண்காணிப்பது, விதைப்பது, விளைந்தவற்றைப் பத்திரமாகக் களஞ்சியத்தில் சேர்ப்பதென மிகவும் நேர்மையோடு உழைத்தவர். தோட்டத்தில் தேங்காய் பறிப்பது, விறகு பிளந்து போடுவது எல்லாம் அவர் பொறுப்புத்தான். அவரது மனைவியும் இப் பெரிய வீட்டிலேயே சமையல், வீட்டு வேலைகளைச் செய்து வந்தாள். முத்துராசுவைப் பெற்ற அன்னை, பிரசவம் கண்ட சில நாட்களிலேயே ஜன்னி கண்டு பினாத்திக் கிடந்தநாட்களில் அவரை முழுமையாகப் பராமரித்துப் பார்த்துக்கொண்டது அவள்தான். ஜன்னி குணமாகாமலேயே அவர் செத்துப் போனார்.

முத்துராசு இப்பொழுது என்ன நோக்கத்துக்காக வந்திருக்கிறாரென யோசித்துக் கொண்டே கிணற்றிலிருந்து நீரை அள்ளி உடம்பில் வார்க்கத் துவங்கினார். குளிர்ந்த நீர் படப்பட மேனி சிலிர்த்தது. துண்டை எடுத்துக்கொண்டு ஓடி வந்த சிறுமி வந்த வேகத்திலேயே கிணற்றுக்கட்டில் அதை வைத்துவிட்டு ஓடிப் போனாள். சலனமுற்றவர் திரும்பிப்பார்த்தார். சமையலறை யன்னலினூடாகத் தன் மனைவி இருவரையும் கண்காணித்தவாறிருப்பதைக் கண்டார். அவர் பார்ப்பதறிந்ததும் அவளது பார்வை கிணற்றடியிலிருந்த அகத்தி மரத்துக்குத் தாவியது.

போன முறை வாக்குவாதம் இப்படித்தான் ஆரம்பித்தது. அப்போது அவர் அங்கிருக்கவில்லை. அண்ணாவைப் பார்த்துப் போகவென வந்த முத்துராசு, அந்த வீட்டுத் தோட்டத்தில் நன்கு காய்த்து மரத்திலேயே பழுத்திருந்த பப்பாளிப்பழமொன்றை முனையில் சிறு கத்தி கட்டிய நீண்ட கம்பால் பறித்தெடுத்து, தனது வீட்டுக்குக் கொண்டு போவதற்காக எடுத்துவைத்தார். உண்மையில் அது வீடு அல்ல. குடிசை. சின்னமணியின் குடும்பம் தாங்கள் வாழ்வதற்கென்று ஓலையும், களிமண்ணும் கொண்டு கட்டி வைத்திருந்த குடிசை. முப்பது வருடங்களுக்கும் முன்பொரு நாள் எல்லோருமாகக் குடும்பத்தோடு விரட்டியடிக்கப்பட்ட அந் நாளில், எரிந்தது பாதியும் எரியாதது மீதியுமாகத் தீ தின்ற குடிசை. எல்லா அநீதங்களையும் தீக் கண்களால் பார்த்திருந்த குடிசை. எல்லாவற்றையும் மறைத்துப் பூசி மெழுகப்பட்ட அதன் ஒரு அறைக்குள்தான் முத்துராசு தன் ஆடைகளோடும் சமையல் பாத்திரங்களோடும்  முடங்கிப்போயிருந்தார்.

பப்பாளிப்பழத்தைப் பறித்து அவர் தன்னோடு வைத்துக் கொண்டதைக் கண்ட அவரது அண்ணி, தனது பருத்த உடம்பைச் சுற்றியிருந்த புடவையை வரிந்து கட்டிக் கொண்டு முற்றத்துக்கு வந்தாள். பின்னாலேயே மருமகளும் குழந்தையை இடுப்பில் செருகிக் கொண்டு வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவள்தான் அவர் பழம் பறிப்பதைக் காட்டிக் கொடுத்தவள். நீண்ட நாட்களின் பின்னர் நகரத்திலிருந்து வரப்போகும் தன் கணவனுக்காக மரத்திலேயே பழுக்கட்டுமெனப் பழத்தினை விட்டு வைத்தவள் அவள்தான்.

விடயத்தைச் சொல்லித் தன்மையாகக் கேட்டிருந்தால் முத்துராசு தானாகவே பழத்தினைக் கொடுத்திருக்கக் கூடும். பெரும் எரிச்சலோடு வந்த அண்ணி காரசாரமாக 'இப்படிக் கேட்காமல் பார்க்காமல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுபோனால் நாங்கள் குடும்பத்தோடு வீதிக்கிறங்கிப் பிச்சைதான் எடுக்கவேண்டும்' எனச் சத்தமிடத் தொடங்கியதில்தான் அவரது உள்ளிருந்த ஆற்றாமையும் கோபமும் கலந்த பேய் விழித்துக் கொண்டது.

பழத்தினைத் தூக்கி அப்படியே நிலத்தில் அடித்து, அதன் மேல் ஏறி நின்று மிதித்து சத்தம் போட்டுக் கத்தத் துவங்கினார். தனக்கும் இந்த வீட்டில், தோட்டத்தில், வயல்காணியில் பாதிப் பங்கிருப்பதாகச் சத்தமிட்டுக் கொண்டிருந்தார். இரு பக்கமும் வார்த்தையாடல்கள் தடித்தன. கொம்பு சீவப்பட்ட, வீரமிக்கவொரு எருமைமாட்டினைப் போலக் கோபத்தோடு, பெரிதாய்ச் சப்தமெழ மூச்சுவிட்டபடி முத்துராசு அங்குமிங்குமாக நடந்து அண்ணியைத் தாக்கவென ஆயுதமொன்றைத் தேடினார். வேலிக்கு மேலால் எட்டி எட்டி அயலவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன விபரீதம் நடக்கப்போகிறதோவென அறியும் ஆவல் அல்லது தாம் பார்க்க விபரீதம் நடக்கவேண்டுமென்ற ஆவல் அவர்கள் கண்களில் மிதந்தது. மருமகள் குழந்தையை சிறுமியிடம் கொடுத்துவிட்டு மல்லுக்கு நிற்கும் மாமியாரின் கைப்பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டிருந்தாள்.

நல்லவேளையாக வெளியே போயிருந்த அண்ணா ஆட்டோவில் வந்திறங்கினார். அண்ணாவைக் கண்டதும் 'இப்பவே என்ர பங்கைப் பிரிச்சுக் கொடு' என முத்துராசு, அண்ணனை நோக்கிச் சப்தமிடத் தொடங்கினார். அண்ணாவுக்கு அவரை அடக்கத் தெரியும். அவ்விடம் வந்து தன் மனைவியை, சப்தம் போடாமல் உள்ளே போகும்படி ஏசினார். தம்பியைத் தோளோடு சேர்த்தணைத்து ஆட்டோவுக்கு அழைத்துப் போய் பின்னர் அதிலேயே வயல்காணிக் குடிசைக்கு அழைத்துப் போனார். அவன் அமைதியாகும்வரை அங்கேயே இருந்து பேசிவிட்டு கிளம்பிவந்தார்.

இன்று என்ன பிரச்சினை எழப்போகிறதோ எனத் தெரியவில்லை. துண்டை எடுத்து உடல் துடைத்துக் கொண்டவர் புதுச் சாரத்தை அணிந்துகொண்டார். வந்த வழியே திண்ணைக்கு வந்து சாய்மனைக் கதிரையில் அமர்ந்துகொண்டார். அது பழங்காலக் கதிரை. அவர்களது தந்தையார் வழி வந்தது. அவர் அவ்வூர்ப் பெரிய மனிதர். நாலெழுத்துப் படித்தவர் என்பதால் மட்டுமல்ல. வழிவழியாக வந்த உயர் வம்சத்தைச் சேர்ந்தவர். முன்னொரு காலத்தில் அந்த முழுக் கிராமமே அவர்களது மூதாதையருக்குச் சொந்தமாக இருந்தது. அவர்கள் குடும்பத்துக்குச் சேவை செய்ய வந்தவர்களெல்லாம் சேர்ந்துதான் அது ஒரு கிராமமென ஆகியிருந்தது. அந்த பரம்பரை மரியாதையும் கௌரவமும் நன்றி விசுவாசமும் ஊரில் இன்னும் அந்தக் குடும்பத்துக்கு இருந்து வருகிறது. வீதியில் இறங்கி அவர் நடந்தால் எதிர்ப்படுபவர்கள் தலைதாழ்த்தி, வணக்கம் சொன்னார்கள்.

முத்துராசுவும் பின்னாலேயே வந்து திண்ணைக் கட்டில் அமர்ந்து கொண்டார். மழை வரும்போல இருந்தது. அந்தி வெயிலற்று மப்பும் மந்தாரமாகவும் இருந்தது. கொஞ்ச நாளாக அந்திசாயும் பொழுது மழை பெரிதாய், இடி மின்னலோடு அடித்துப் பிடித்து வருகிறது. பருவம் தப்பிய மழை.

" தம்பி, ஏதாச்சும் குடிக்கிறியோ? "

தன் கை விரல்நகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர் ஒருவிதப் பணிவோடு தலைநிமிர்ந்து புன்னகைத்தார். வாசற்கதவுக்குப் பின்னால் மறைந்திருந்து அண்ணி பார்த்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார்..

" வேண்டாமண்ணே..நான் வந்தது...மழை பெய்றதால கூரையெல்லாம் நைந்துபோய் கடுமையா ஒழுகுது. தண்ணியெல்லாம் வீட்டுக்குள்ள வருகுது. யாரையாவது அனுப்பி ஓலை மாத்தித் தந்தால் புண்ணியமாப் போகும்" என்றார்.

" சோதர பாசத்தால பார்க்க வந்திருப்பாரெண்டு நெனச்சால், இப்பவும் வாங்கிப் போகத்தான் வந்திருக்கிறார் " அண்ணி உள்ளே இருந்து ஒரு விதக் கிண்டல் தொனியோடு குரல் கொடுத்தார்.

அண்ணா, அவரைச் சத்தம் போடாமல் உள்ளே போகும்படி மிரட்டினார். 'இதற்கொன்றும் குறைச்சலில்ல' என்பது போன்ற முணுமுணுப்போடு அண்ணியின் குரல் அடங்கியது.

" தம்பி, நான் அன்றைக்கு அங்க வந்தபோதே கவனிச்சேன். கட்டாயம் நாளைக்கே ஆளனுப்புறேன். நானும் வருவேன். அரிசி,பருப்பெல்லாம் இருக்குதா, முடிஞ்சு போச்சுதா? நாளைக்கு அதையும் எடுத்துக் கொண்டுவரலாம். தனியாச் சமைச்சுச் சாப்பிடறத விட்டுட்டு எங்களோடு வந்து இரு எண்டாலும் கேக்குறாயில்ல "

"அப்ப நாளைக்கு வாங்கோ அண்ணே..பார்த்துக் கொண்டிருப்பேன்" முத்துராசு புன்னகையோடு எழுந்து நடக்கத் தொடங்கினார். அண்ணா பார்த்துக்கொண்டே இருந்தார். அவசரமானதாகவும் அதேவேளை சீரானதாகவும் ஒரு நடை. மழை பெய்யுமுன்பு வீட்டுக்குப் போய்விடும் அவசரமாக இருக்கக் கூடும். அண்ணி முன்னால் வந்தார். பின்னாலேயே மருமகளும் வந்து மாமியாரின் பின்னால் மறைந்து, எட்டிப் பார்த்தாள்.

"அப்ப நாளைக்கு மகாராஜாவோட வீட்டுக்குப் போகப் போறீங்களோ?" மனைவியின் குரலில் எகத்தாளம் வழிந்தது.

" இப்படி ஒழுக்கம் கெட்டதுக்கெல்லாம் வாரி இரைச்சிக் கொண்டிருந்தால் எங்கட பிள்ள குட்டிகளுக்கு நாங்க என்னத்தக் கொடுக்கிறது?"

"அவன் எண்ட உடன்பிறப்பு. நாந்தான் கொடுக்கவேணும். அவனுக்கும் இந்த வீட்டில, வயலில, தோட்டத்துல எல்லாத்திலயும் சமபங்கு இருக்குது. அவனுக்குக் கேட்கவும் உரிமை இருக்கு "

" ஓஹ்.. அப்படியே இருக்குறதையெல்லாம் முழுசாக் கொடுத்தாலும் பைத்தியக்காரனுக்கு அதை வச்சிக் கொண்டு என்ன செய்யத் தெரியும்? "
புருவத்துக்கு மேலால் நெற்றி சுருங்கக் கோபத்தோடு விழிகள் தெறிக்க மனைவியைப் பார்த்தார். அவரது கோபம் பற்றி மனைவிக்குத் தெரியும். அப்படியே திரும்பி முணுமுணுத்தபடி உள்ளே போனாள். மருமகளும் பின்னாலே போனாள். அடுத்த அறைக்குள் பெண்கள் இருவரும் கிசுகிசுப்பாகக் கதைத்துக் கொள்வது கேட்டது. பெண்களின் கதைகளுக்கு முடிவுகளில்லை. அது வாலாக நீளும். ஒன்றின் முனையைப் பற்றி இன்னொன்று. அதன் முனையைப் பற்றி இன்னொன்று எனப் பழைய காலங்களுக்குள் மீளச் சுழலும்.

கதிரையில் சாய்ந்திருந்து விழ ஆரம்பித்திருந்த தூறலைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு சுந்தரி நினைவு வந்தது. அவள் மேல் காதலும் மோகமும்  கொண்டு திரிந்த அவரது இளமைக்காலம் கண் முன் வந்தது . சுந்தரி சின்னமணியின் மகள். அவர் வீட்டுக்கு அவளது அம்மாவுடன் சமையல் வேலைக்கு உதவிக்கென வரும் அழகி. ஏதேனுமொரு நாட்டுப்புறப் பாடலைத் தன் எழில் குரலில் வழியவிட்டபடியே சமைப்பவள் அவரது கண்களில் பட்டுத் தொடர்ந்த காதல் வார்த்தைகளில் மயங்கிப் போனாள். கோபுரத்தில் வாழ்பவனுக்கும் குடிசையில் சீவிப்பவளுக்கும் வரும் காதல் இணையும் வழியற்றதென அவள் சிறிதும் யோசிக்கவில்லை. அல்லது காதல் அவளை மயக்கியிருந்தது. காதலின் பொய்கள் சொல்லி அவளை வீழ்த்தினார்.

அந்தக் குடும்பத்தின் வாரிசு அவ் ஏழைப்பெண்ணில் வளரத் துவங்கியபொழுது அவளால் எதையும் மறைக்க முடியவில்லை. ஆனால் அவரால் எல்லாவற்றையும் மறுக்க முடிந்தது. முடியாப் பட்சமொன்றில் எல்லாப் பழிகளையும் தம்பி மேல் போட்டார். மூத்தவன் சொல்லும் எதையும் நம்பும் அப்பா, அம்மாவை விழுங்கிப் பிறந்த இளையவனிடம் என்னவென்றே விசாரிக்காது மிகவும் வன்மமாகவும் குரூரமாகவும் அடித்து உதைத்து வீட்டை விட்டே விரட்டிவிட்டார். அதே இரவில் சின்னமணி குடிசையையும் எரித்து, ஊரை விட்டே குடும்பத்தோடு ஓடச் செய்தார். அன்றைய இரவில் துரோகமும், வீண்பழியும், ஒரு பேருண்மையும் தீயோடு தாண்டவமாடியது. ஊர் முழுதும் பார்த்திருக்கப் பட்ட அவமானமும், இழைக்கப்பட்ட அநீதியும் முத்துராசுவை மனநிலை தவறச் செய்தது. சொந்த வீட்டுக்கே கல்லெறிந்தபடி, ஊர் எல்லைக்குள்ளேயே வீதியோரங்களில் புரண்டலைந்தவரை அண்ணன்தான் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அந்தக் குற்ற உணர்ச்சி இன்னும் மனதிற்குள் அலையடித்தது. விரட்டி விரட்டித் தொடரும் அலை. ஆழங்களுக்குள் இழுத்துப்போகவெனப் பின்னாலேயே துரத்தும் உக்கிர அலை. அறைக்குள் இன்னும் பெண்களின் கிசுகிசுப்புக் கேட்டது. இவர் எழுந்து கொண்டார். அவர்களிருந்த அறை வாசலில் போய் நின்றார்.

" என்னோட உசுருள்ளவரைக்கும் தம்பிக்கு என்னால முடிஞ்சதைச் செய்யத்தான் போறேன். இதைப் பத்தி இனிமே இந்த வீட்டுல யாராவது ஏதாச்சும் பேசினீங்களெண்டால் கொலைதான் விழும்" என்றார் ஊருக்கெல்லாம் கேட்கப் போல மிகச் சத்தமாக.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்