Sidebar

பதிவுகளில் தேடுக!

பதிவுகள் -Off Canavas

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்இது எமது தபால்பெட்டிக்கு வந்திருந்த நாலாவது அநாமதேயக் கடிதம். கடந்த இரண்டு வாரங்களில் இதேமாதிரியான மூன்று கடிதங்கள் வந்திருந்தன.  "I buy houses, gas or no gas, call Tim." - கடிதத்தில் இருந்தது இவ்வளவுந்தான். இதுபோன்ற கடிதங்கள் இனிமேலும் வரலாம். யார் இந்த ரிம்? இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அந்தக்கடிதங்களை எடுத்துக் கொண்டு ரவுனிற்குப் போனேன். ரவுன் எனது வீட்டிலிருந்து பத்துநிமிடங்கள் கார் ஓடும் தூரத்தில் உள்ளது. றியல் எஸ்டேட் (Real Estate) திறந்திருக்கக்கூடும். நகரம் கேளிக்கையில் நிரம்பி வழிகின்றது. மேர்க்கியூரி ஹோட்டலின் கோலாகலமான வெளிச்சத்தில் மனிதர்களின் நடமாட்டம் தெரிகிறது. சாப்பாட்டுக் கடைகளிற்குள் மக்கள் நிதானமாகவிருந்து சாப்பிட்டுக் கொண்டும் மது அருந்திக் கொண்டும் இருக்கின்றார்கள். கிளப்பிலிருந்து ஜாஸ் மிதந்து வருகிறது. மூடப்பட்டிருந்த றியல் எஸ்டேட் கடையின் கண்ணாடிக்குள்ளால் தெரியும் விளம்பரங்களைப் பார்த்து சத்தமிட்டுக் கதைத்தபடி சிலர் நிற்கின்றார்கள். அவர்கள் சண்டையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக நான் திரும்பிக் கொண்டேன். இந்த விஷயத்தை அப்பா ஒருமாதத்திற்கு முன்பாகவே அறிந்து கொண்டார் என்றுதான் நினைக்கின்றேன். அன்று...

கோடைகாலத்து வெக்கை தாங்க முடியாமல் ஹோலிற்குள் வந்து படுத்திருந்தேன். 'சமர்' காலங்களில் வெப்பநிலை நாற்பதுக்கும் மேல் போய்விடுவதால் இரவில் உறக்கம் கொள்ள முடிவதில்லை. நடு இரவு. அப்பா சிறுநீர் கழிப்பதற்காக என்னைக் கடந்து போனார். ரொயிலற்றுக்குப் போனவர் நெடுநேரமாகத் திரும்பி வரவில்லை. எங்காவது தவறி விழுந்து விடக்கூடும். அப்பாவைப் பார்ப்பதற்காக எழுந்தேன். அப்பா பின்புறத்தேயுள்ள பல்கனியூடாக எதையோ வெறித்துப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்.

'கிரேன்போண்' அதி அற்புதமான புதிய நகரம். சொர்க்கபுரி. இருள்கூட ஒளி வீசும் அந்த நகரத்தில் இரண்டு பாடசாலைகள், பெரியதொரு ஷொப்பிங் சென்ரர், மேர்க்கியூரி ஹோட்டல், லைபிரரி, சிற்றிக்கவுன்சில், ஸ்விம்மிங் பூல், கோல்ஃ மைதானம், பார்க், கிளப், தடாகங்கள், நீரோடைகள் என எல்லாமே இருந்தன. மலை அடிவாரம் ஒன்றில் எங்கள் 'டபுள் ஸ்ரோரி' வீடு இருந்தது. வீட்டின் முன்னால் உள்ள பல்கனியில் இருந்து பார்த்தால் நகரம் பளிச்சென்ற வெளிச்சத்தில் ஜொலிப்பாகத் தெரியும்; பின்புறமுள்ள பல்கனியில் இருந்து பார்க்கும்போது மலையும் மலை சார்ந்த காடுகளும் தெரியும். தனக்குப் பின்னாலே நின்றிருந்த என்னை அப்பா கண்டுகொண்டார்.

"தம்பி இஞ்சை ஒருக்கா வா. இதை ஒருக்காப் பார்!" அடிவாரத்திலுள்ள அடர்ந்த காட்டுப்பிரதேசத்தை நோக்கிக் கையைக் காட்டினார் அப்பா. அங்கே சிறுசிறு தீப்பந்தங்கள் போல ஏதோ காற்றில் மிதந்து கொண்டிருந்தன.

"அது அப்பா... காடு எரியுது. மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் தீ பற்றியிருக்க வேணும். அல்லாட்டி.... ஆராவது புகைத்துவிட்டு போதையில் சென்றவர்கள் சிகரெட்துண்டை காட்டிற்குள் எறிந்துவிட்டுப் போயிருக்கலாம்." எனது பதிலில் அவருக்கு திருப்தி இல்லை. திருப்பவும் அதையே பார்த்தபடி நின்றார்.

அதிகாலை வீட்டு முன்கதவின் 'செக்யூரிட்டி டோர்' இரும்புக்கம்பிகள் சடசடத்தன. கதவை நீக்கிப் பார்த்தபோது அயல்வீட்டு மைக்கல் நின்றுகொண்டிருந்தான். அவன் 'சமர்' காலங்களில் மாத்திரம் ஃபாம் (farm) ஒன்றிற்கு வேலைக்குப் போவான். ஐம்பத்தைந்து வயதிலேயே வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்ட ஒரு தனிக்கட்டை அவன். அதிகாலை ஐந்துமணியளவில் எழுந்து விடுவான். காரை ஸ்ராட் செய்து சிறிதுநேரம் காரை ஸ்ராட்டில் வைத்திருந்துவிட்டுத்தான் வேலைக்குப் புறப்படுவான். அந்தச் சத்தம் எங்களை உறக்கத்திலிருந்து எழுப்பிவிடும். வேர்த்து விறுவிறுத்து நிற்கும் அவனது கோலம் ஏதோ ஒரு அவசர செய்தியைச் சொல்லியது.

நகரத்து குளம் மீது முகில் கூட்டங்கள் போல நெருப்புப்பந்துகள் எரிந்து கொண்டு மிதந்து செல்வதாகவும், அதிகாலை வேலைக்குச் சென்ற மக்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பதாகவும் பதட்டமாகச் சொன்னான். சொல்லிவிட்டு எனது பதிலுக்காகக் காத்திருக்கவில்லை. தனது வீட்டை நோக்கி எட்டுக்கால் பாய்ச்சலில் நடந்தான். அதிகாலை ஐந்து மணியளவில் எழுந்து சாமி கும்பிடும் அப்பா வழமைக்கு மாறாக ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். நேற்று இரவு நேரம் கழித்துப் படுத்திருக்க வேண்டும். மகள் சுருதி அப்பப்பாவை செல்லமாகக் கட்டிக்கொண்டு படுத்திருந்தாள்.
"அப்பா சுருதியைப் பார்த்துக் கொள்ளுங்கோ. நாங்கள் கடையடிக்குப் போய்விட்டு வருகின்றோம். பாண் வாங்க வேண்டும்" சொல்லிவிட்டு மனைவி திலகாவைக் கூட்டிக் கொண்டு 'லேக்' சென்றேன்.

குளத்தைச் சுற்றி கூட்டமாக மனிதர்கள் நின்றார்கள். "உது கொள்ளிவால் பேய்தான்" என்று திலகா என் காதிற்குள் முடிச்சுப் போட்டாள். எமக்கு நாலு வீடுகள் தள்ளி இருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த லொறன்ஷோவும் அஞ்சலினாவும் எங்களை நோக்கி விரைந்து வந்தார்கள். லொறன்ஷோ பார்வைக்கு தத்துவஞானி பிளேற்றோ போல இருப்பார். அவரது நடை பார்ப்பதற்கு சிரிப்பாக இருக்கும். 'தண்டு வலித்து நீரிற்குள் விரையும் படகு போல' காற்றிற்குள் கைகளை விசுக்கி அதன் உந்துசக்தியில் நடப்பார். ஒடிந்துவிழும் தோற்றம் கொண்ட அஞ்சலினா அவரது நடைக்கு ஈடு கொடுக்கும் வகையில் அவர் பின்னாலே பாய்ந்து பாய்ந்து ஓடி வந்தார்.

தனது நரைத்துப்போன தாடியை நீவிவிட்டபடியே வந்த லொறன்ஷோ, மூக்கின் நுனியில் தொங்கிய வட்டக்கண்ணாடியைக் கழற்றி தனது சட்டையின்மீது வைத்து அழுத்தித் துடைத்தார். பெரிய மண்டைக்குழியில் ஆழ அமைந்த அவரது கண்கள் எதையோ சொல்ல முற்பட்டன. 
"குளத்திற்கு அருகாமையில் உள்ள 'லாண்ட்பில்' சைற்றிலிருந்து (Landfill site) மெதேன் வாயு கசிந்து வருகின்றது. வெடிக்கக்கூடிய ஆபத்து இருக்கின்றது" லொறன்ஷோ பயத்துடன் சொற்களை அளந்து வெளியே விட்டார். அவர் சொல்வது சரியாக இருக்கக்கூடும். லொறன்ஷோ மெல்பேர்ண் சிற்றியில் உள்ள 'லப்றொப் யூனிவர்சிட்டியில்' கெமிஸ்ரி லெக்‌ஷரராக வேலை செய்கின்றார். அவரது மனைவி நகரத்துப் பாடசாலையில் ஆசிரியையாக வேலை செய்கின்றாள்.

மாலை வேலை முடித்து பல்கணியில் இருந்தபடி நகரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். 'சமர்' காலங்களில் வேலை முடித்து வந்ததும் பெரும்பாலும் இந்த பல்கணியிலேதான் எனது மாலை நேரம் கழியும். மகளிற்கு பாடங்கள் சொல்லிக் கொடுப்பது, 'லப்ரொப்பில்' ஏதாவது பார்ப்பது என்று நேரம் இரவு பத்துமணிவரை செல்லும். சிலவேளைகளில் திலகாவும் வந்து என்னுடன் சேர்ந்து கொள்வாள். இந்த இடம் ஒரு அற்புதமான இடம். இங்கிருந்தபடியே தூரத்தில் தெரியும் நகரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதில் ஒரு அலாதி சுகம். அன்று முன்னிரவில் வீசும் இதமான காற்றில் முதன் முதலாக ஒரு மணம் கிழம்பியதை நாங்கள் உணர்ந்தோம். இரவு, நாய்கள் நடுச்சாம வேளைகளில் திடீர் திடீரெனக் குரைத்தன. பறவைகளின் கிரீச்சிட்ட அவல ஓசை மலைகளிலே மோதி எதிரொலித்தன.

காற்றில் ஏதோ சகிக்க முடியாத நச்சுக்காற்று பரவியிருப்பதாக ஊரில் உள்ளவர்களும் சொன்னார்கள். அவர்கள் பயத்தினால் நாள் பூராக வீட்டைப்பூட்டி கதவுகளைத் திறக்காமல் வைத்திருந்தார்கள். விஷயம் கவுன்சில் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. எங்கிருந்து அந்த வாயு கசிகின்றது என்பதைக் கண்டறிய விஞ்ஞானிகள் கொண்ட ஒரு குழு வந்திறங்கியது. குளத்தின் மேலே வாயு முதன்முதலாகத்  தோன்றியதால், குளத்தை சந்தேகப்பட்டார்கள். குளத்தைச் சுற்றிப் படம் எடுத்தார்கள். குளத்தைக் கலக்கி 'சாம்பிள்' எடுத்தார்கள். அதன் மேலே இருக்கும் காற்றை பலூன் போன்ற ஒன்றிற்குள் நிரப்பினார்கள். மண்ணைத் தோண்டி அதிலும் 'சாம்பிள்' எடுத்தார்கள். இவற்றையெல்லாம் பார்த்து குளம் மிரண்டு போகாததால், அவர்கள்  போய்விட்டார்கள்.

கங்காருக்களின் சுவாசத்தில் இருந்து வெளிக்கிழம்பும் ஒரு வாயுதான் இந்த மணத்திற்கும் வெளிச்சத்துக்கும் காரணம் என அடுத்தவாரம் வெளிவந்த 'லோக்கல்' பேப்பரின் தலைப்புச்செய்தி சொல்லியது. அந்த விளக்கத்தைக் கேட்ட மக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். கங்காரு தேசிய விலங்கு என்பதால் அரசியல்வாதிகள் எதையும் வெளிப்படையாகச் சொல்வதற்கு தயங்கினார்கள். முன்பு இந்தப்பிரதேசத்தில் இருந்த ஏராளமான கங்காருக்களையும் (Kangaroo) கோலாக்களையும் (Kola) கலைத்துவிட்டுத்தான் இந்த நகரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இப்பொழுதும்கூட கங்காருக்கள் ரிசேவ் பகுதியிலிருந்து அடிக்கடி இங்கு வந்து செல்வதைக் காணலாம். எனது செக்யூரிட்டிக்கமராவில் கூட அடிக்கடி கங்காருக்களினதும் கோலாக்களினதும் நடமாட்டத்தைக் கண்டிருக்கின்றேன்.

பிறிதொருநாள் வெப்பநிலை 44 செல்ஸியசிற்குப் போய்விட்டது. இரவுபகலாக எல்லாவீடுகளிலும் 'ஏயர்கொண்டிஷன்' உறுமியது. அந்த உறுமலிற்குள்ளும் எங்கோ ஒருபெண்ணின் ஓலமிடும் சத்தம் கேட்டது. நள்ளிரவைக் கடந்துவிட்ட நேரத்திலும் வீதியில் மக்களின் ஆரவாரம் கேட்டது. இத்தாலிக் குடும்பம் இருக்கும் வீட்டிற்கு முன்னால் சிலர் கதைத்துக் கொண்டு நின்றார்கள். அவர்களின் நடுவே நின்ற அந்த வீட்டுப்பெண் கைகளை எறிந்து தனது பாஷையில் ஏதோ திட்டியபடி நின்றாள். பாஷை தெரியாதபடியால், அவளைப் பார்க்க ஒரு நாடக நடிகை போல எனக்குத் தோன்றினாள். அவளின் கணவன் தமது வீட்டுவளவிற்குள் எங்களைக் கூட்டிச் சென்றான். வளவின் மூலையில் புகை கிழம்பிக் கொண்டிருந்தது. அடுத்தநாள் மீண்டும் எல்லோருமாக நகரசபை அலுவலகத்திற்குச் சென்றோம்.

மெதேன் வாயு மண்ணுக்குக் கீழிருந்து ஏன் வரவேண்டும்? நாங்கள் இருக்கும் நிலப்பிரதேசத்திற்குக் கீழே இரசாயனக்கழிவுகள் புதையுண்டு இருக்கலாம். நிலத்திற்குக்கீழே இலத்திரனியல் கழிவுகள் உள்ளது என்றால் அது ஏன் அரசுக்குத் தெரிந்திருக்கவில்லை?

தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, கணினி, கையடக்கத் தொலைபேசி போன்ற மின்னணு உபகரணங்கள் பாவனையற்றுப் போகும் போது மின்னணுக்கழிவுகள் ஆகின்றன. புவியை மாசாக்குவதில் இவை பெரும் பங்கு வகிக்கின்றன. தொழில் நுட்பம் முன்னேறி வருகையில், சந்தையில் போட்டி போட்டுக் கொண்டு புதிது புதிதாக பொருட்கள் வருவதால் இந்தக்கழிவுகள் கூடுகின்றன. உபகரணங்களின் ஆயுள்காலம் குறைவதாலும், திருத்துவதை விட புதிதாக வாங்குவது சிறந்தது என்பதாலும் மக்கள் அவற்றை எறிந்துவிட்டு புதிதை வாங்குகின்றார்கள். இந்த இரசாயணக்கழிவுகள் நச்சு வாயுக்களை வெளிவிடுகின்றன. இவை வளிமண்டலத்தை மாசாக்கி சுவாசத்திற்கு கேடாகிறது, மண்ணின் இயல்பைப் பாதிக்கிறது, சுற்றுச்சூழல் பாதிப்படைகின்றது. மின்னணுப் பாவனை தவிர்க்க முடியாததுதான். மீள்சுழற்சி, மீள் பயன்பாடு பற்றிய சிந்தனையும் தொழில்நுட்பவியலாளர்களுக்கு இருக்க வேண்டும்.

எதற்கும் ஒரு வரலாறு உண்டு. அதை நாம் பின்னோக்கிப் பார்த்தல் வேண்டும். இந்த நிலத்திற்கும் ஒரு வரலாறு இருந்தது. ஆதி இனமக்களை விரட்டி விரட்டி அவர்கள் இருந்த இடங்களையெல்லாம் அபகரித்து எப்போதோ நகரங்கள் எழுப்பிவிட்டார்கள். இவை புதிய நிலங்கள். இந்த நிலம் பற்றிய தகவல்கள் ஒருவரிடமும் தெளிவாக இல்லை. முன்னொரு காலத்தில் கழிவுகளால் மூடப்பட்ட இந்த நிலம் செப்பம் செய்யப்பட்டு சமதரையாக்கப்பட்டுள்ளது. இயற்கையைச் சீர்குலைத்து எங்கள் நகரம் கட்டப்பட்டிருந்ததை அறிந்தபோது எல்லாரும் கொதித்துப் போனோம். மலையும் மலை சார்ந்ததுமான இந்த இடத்தில் இருப்பதற்கு அனேகமானவர்கள் விரும்பியது என்னவோ உண்மைதான். இங்குள்ள ஒவ்வொரு கட்டடமுமே பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டது. இந்த வீடு எமக்கொரு Dream House. காணியின் தற்போதைய பெறுமதியே அரைக்கோடி பெறும். அந்தக் காணித்துண்டை வாங்க ஒருவருடத்திற்கு முன்பு நாங்கள் எடுத்த முஸ்தீபுகளை எண்ணிப் பார்க்கின்றேன். அன்று அதிகாலை மூன்றுமணிக்கு எழுந்து பனிப்புகாரில் காரை வேகமாகச் செலுத்தி காணியைப் பதிவு செய்யும் இடத்திற்குப் போய், நீண்ட வரிசையில் காத்திருந்து இந்தக்காணியை வாங்கியிருந்தோம். மலையில் அந்தரத்தில் வீடு கட்டி அழகு பார்க்க எத்தனை பேருக்குத்தான் ஆசை? அந்தரத்தில் வாழ்வதென்றால் வெள்ளைக்காரனுக்கு அலாதிப் பிரியம். அவர்களுடன் போட்டி போட்டு வாங்கிய நிலம் இது.

வீட்டு வளவிற்குள்ளும் வாயு கசியத் தொடங்கியதன் பிற்பாடு எல்லாமே வேகமாக நடக்கத் தொடங்கின. இந்தமாதிரிக் கடிதங்களும் வரத்தொடங்கின. "I buy houses, gas or no gas, call Tim." தினம் தினம் எல்லோருக்கும் இதுமாதிரிக் கடிதங்கள்.

எங்கே என்று இலையான்கள் ஓட்டிக் கொண்டிருந்த றியல் எஸ்ரேற் நிறுவனங்கள் மேலும் புரளியைக் கிழப்பி சங்கை ஊதின. அவர்கள் குறைந்த விலையில் வீடுகளை வாங்கி வாடகைக்கு விடத்தொடங்கினார்கள். வருங்காலத்தில் 'அறா' விலைக்கு விற்கலாம் என்பது அவர்கள் திட்டம். Country Fire Authority இந்த வாயுவின் வெடிக்கும் தன்மை பற்றி எச்சரிக்கை செய்திருந்த நிலையில், வீட்டை ஒருவருக்கும் விற்கவோ அல்லது வாடகைக்கு விடவோ முடியாது என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் றியல் எஸ்ரேற்காரர்களின் இந்தச்செயல் எங்களுக்கு பீதியை உருவாக்கின.
இந்த வாயுக்கசிவு இன்னும் ஒருவருடந்தான் நீடிக்கும் என்று Environment  Protection Authortity இல் உள்ளவர்கள் சொன்னார்கள். 12 குடும்பங்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டனர். லான்ட் ஃபில் சைற்றின் ஒருபுறத்தில் வெடிக்கும் அபாயம் இருந்ததால் 200 வீடுகள் சீல் வைக்கப்பட்டுவிட்டன. உடல்நலத்திற்கும் பாதிப்பு ஏற்படலாம் என சுகாதாரத்திணைக்களம் சொல்லியது. எமக்குத் தெரிந்த சிலரும் வீட்டை விற்கத் தொடங்கியிருந்தார்கள். அடுத்துவந்த சனிக்கிழமை காலை லாண்ட் ஃபில் சைற்றுக்கு அண்மையாகவுள்ள வீதிகளில் நடந்து பார்த்தோம். ஐந்து வீடுகள் வாடகைக்கு விளம்பரபடுத்தப்பட்டிருந்தன. வேடிக்கை என்னவென்றால் விளம்பரங்களில் 'close to parks' என்றும் 'a great family home' என்றும் புகழ்ச்சியாக எழுதப்பட்டிருந்ததுதான். ஒருவர்தன்னும் மெதேன்வாயு பற்றிக் குறிப்பிடவில்லை. றியல் எஸ்ரேற் ஏஜென்ற் இப்பொழுதும் ஆக்களைக் கூட்டிக்கொண்டு வந்து வீடுகளைக் காட்டியபடி இருந்தார்கள். அவர்கள் Investment property ஆக வாங்குபவர்களாக இருக்க வேண்டும்.

Methane வாயுக் கசிவினால் வீட்டு விலையில் நிட்சயம் வீழ்ச்சி ஏற்படும் என்றான் மைக்கல். அவன் தனது 400,000 டொலர் பெறுமதியான வீடு 300,000 டொலருக்கு தாழ்ந்து விட்டதாக அழுதான். அவன் அந்த வீட்டை தனது retirement money இல் கட்டியதாக வேறு புலம்பினான். ஒவ்வொருநாள் மாலைப்பொழுதிலும் வீட்டிற்கு வந்து உரையாடிவிட்டுப் போவான்.

கிராமத்தில் இருந்த அனைவரையும் அப்புறப்படுத்தும் முயற்சியில் அரசு கவனம் செலுத்துவதாகவும், அதற்கு நஷ்ட ஈடாக றீலொக்கேஷன் கிராண்ட்(Relocation grant) வழங்கப்படும் என்றும் பேச்சு அடிபட்டது. வீடு கட்டுவது என்பது ஒரு 'ஆயுட்கால கனவு'. பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு மாதிரி இன்னொரு வீட்டைக் கட்ட முடியுமா? வீடு கட்டும் வரைக்கும் என்ன செய்வது? Mortgage கட்டிக் கொண்டு வாடகைக்கு வீடு எடுத்துக் கொண்டு போவது இயலாத காரியம்.

அப்படியென்றால் இந்தப் பிரதேசம் மனித சஞ்சாரமற்ற சூனியப் பிரதேசமாக மாறிவிடுமா?

விடயம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. Environment  Protection Authortity யிடமும் விஞ்ஞானிகளிடமும் அதைப்பற்றி ஆராய்ந்து அறிக்கை தருமாறு அரசு கேட்டிருந்தது. புதிதாக வரும் தண்டனைக்குரிய குற்றங்கள் புரிந்த ஆயுள் கைதிகளை இங்கே குடியமர்த்தலாம் என்றும் இதனால் குற்றம் செய்பவர்கள் உருவாகும் வீதத்தைக் குறைக்கலாம் என்றும் அவர்கள் ஆலோசனை சொன்னார்கள். இதன் மூலம் மனிதர்கள் மீது அந்த வாயுக்கசிவின் இரசாயனத்தாக்கத்தை அறியலாம் என்பது விஞ்ஞானிகளின் எண்ணம். 'கினிப் பிக்'குகளிலும் குரங்குகளிலும் செய்த ஆராய்ச்சியை மனிதரில் தொடர அவர்களுக்கு அது ஒரு வாய்ப்பாக இருந்தது.

ஒருநாள் அதிகாலை பாரிய இயந்திரங்கள் நகரிற்குள் நுழைந்தன. தொபுக்குத் தொபுக்கென மஞ்சள்நிற ஆடை அணிந்த பென்னாம்பெரிய மனிதர்கள் லாண்ட் ஃபில்  செய்த இடங்களில் உலாவினார்கள். நிலத்திற்கடியில் குழாய்களை உட்செலுத்தி வாயுக்களை உறிஞ்சினார்கள். நிலத்திற்குக் கீழே இரசாயனத்தாக்கத்தை செயலிழக்கச் செய்யும் தகடுகளை தாட்டார்கள். அன்றையநாள் முழுவதும் கனரகவாகனங்களின் இரைச்சல் சத்தம் கேட்டவண்ணமிருந்தன.

பாரிய இயந்திரங்கள் வந்துபோன மறுவாரத்தில் எல்லோருக்கும் கடிதங்கள் வந்தன. கடிதம் சொன்னது இதுதான்; "மனிதர்களும் விலங்குகளும் வசிப்பதற்கு உரிய பிரதேசமாக  ‘கிரேன்போண்'  உறுதி செய்யப்பட்டுள்ளது."

இருப்பினும் ஒருவரும் வீட்டை வாங்க முன்வராததால் வீட்டின் விலை மேலும் சரிந்தது. அதற்கடுத்துவந்த நாட்களில் மைக்கல் தனது வீட்டை ரியல் எஸ்ரேற்காரர்களுக்கு விற்றுவிட்டுப் போய் விட்டான். தெரிவு செய்யப்பட்ட சில வீடுகளில் கதிர்வீச்சுத்திறனை அறியும் கருவிகளை வைத்திருந்தார்கள். ஒவ்வொரு புதன்கிழமையும் ஒரு பெண் வந்து வளிமண்டலத்திலுள்ள மெதேன்வாயுவின் அளவைக் குறித்துச் செல்வாள். எதிர் வீட்டிலிருந்த செவற்லனா என்ற யூகோஸ்லாவியப் பெண் தனது மெதேன்வாயுவை அளவிடும்கருவி ஒருபோதும் பூச்சியத்தைக் காட்டவில்லை என்றாள். யார் என்ன சொன்னாலும் தான் தனது வீட்டை விற்கப் போவதில்லை என்று உறுதியாகச் சொன்னாள்.

லொறன்ஷோவுடன் கதைத்தால் மனதுக்கு அமைதியாக இருக்கும். எல்லாவறையும் அறிவுபூர்வமாக விஞ்ஞான விளக்கங்களுடன் சொல்லுவார். அதைவிட ஊரில் எல்லாரும் மெச்சுகின்ற, நாலும் தெரிந்த ஒரு மனிதர் என்பது பலரது அபிப்பிராயம். அதனால் அவரிடம் பலரும் ஆலோசனை கேட்கின்றார்கள். அவனது வீட்டிற்கு நானும் மகளுமாக அன்று மாலை சென்றோம். நாங்கள் சென்றவேளை அவர் தனது வீட்டுத்தோட்டத்திற்குள் நின்றார். வேலை - வேலை முடிந்தால் வீடு - வீட்டுத்தோட்டம் அவர் ஒரு கெமிஸ்ரி லெக்‌ஷரர் என்பதைச் சொல்லாமல் சொல்லியது. தாவரங்களில் உள்ள காய்கள் வழமைக்கு மாறாக பெருத்திருந்தன.

"ஏன் எதற்காக இப்படிப் பயப்படுகின்றீர்கள்? நீங்கள் ஒரு பொறியியலாளர்தானே! நீங்களே பயப்பட்டால்? இன்னும் ஒரு வருடத்திற்குள் எல்லாம் சரிவந்துவிடும்" என்றார் லொறன்ஷோ.

"மனித மனங்களைப் பக்குவப்படுத்தி சீரான வாழ்வுக்கு நெறிப்படுத்துவதுதான் அறிவியல். ஆனால் இஞ்சையென்னண்டா 10 வருடங்களுக்கு முன்னர் இரசாயனக்கழிவுகள் கொட்டப்பட்ட ஒரு இடத்தை நகரமாக்கியிருக்கின்றார்கள். இது நகரமா அல்லது நரகமா? எவ்வளவோ நிலம் இருக்க - இங்கே போய் ஏன் வீடு கட்டுவதற்கு தெரிந்தெடுத்தார்கள்?" கோபமாகச் சொல்லிக்கொண்டுவந்த அஞ்சலினா லொறன்ஷோவுடன் ஒட்டி அமர்ந்து கொண்டாள். "நீங்கள் எப்பவாவது 'பலறாற்' தங்கச்சுரங்கத்திற்குப் (Ballarat Goldmine) போயிருக்கின்றீர்களா?" லொறன்ஷோ கேட்கும்போது மகள் சுருதி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். பாடசாலையில் அவளைக் கூட்டிச் சென்றிருந்தார்கள். நானும் ஒருதடவை போயிருக்கின்றேன்.

"நிலத்திற்குக் கீழே ஒரு கிலோமீற்றர் ஆழத்தில் தங்கம் அகழ்ந்தெடுத்த இடத்தை நிட்சயமாக நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த இடத்தைபோல, முன்பு தங்கம் அகழ்ந்தெடுத்த எத்தனையோ சுரங்கங்கள் பலறாற் நகரத்திற்குக் கீழே இருக்கின்றன. அதற்கு மேலே அழகாக பலறாற் நகரம் உள்ளது. எத்தனை ஆயிரம் மக்கள் மகிழ்ச்சியாக அங்கே வாழ்கின்றார்கள் தெரியுமா? ஒரு சின்ன நிலநடுக்கம் போதும், பலறாற் என்ற நகரமே புதையுண்டு போகும்" என்று பலறாற் பற்றியதொரு குட்டி விவரணம் செய்தார் லொறன்ஷோ.

முன்பு இலங்கையில் அஸ்பெஸ்ரஷ் சீற் (Asbestos sheet) போட்ட வீடுகளில் வசித்தவர்களுக்கு கான்சர் வந்ததால் அஸ்பெஸ்ரஷிற்கு அரசு தடை விதித்தது பற்றி அவருக்குச் சொன்னேன்.

"அஸ்பெஸ்ரஷ் சும்மா வெறுமனே இருக்கும்போது தீங்கு தராது. அதை உடைக்கும்போது அதிலிருந்து வெளியேறும் தூசுகள்தான் கான்சர் போன்ற வருத்தங்கள் வருவதற்குக் காரணமாகின்றன. அதைப்போலத்தான் இந்த இலத்திரனியல் கழிவுகளும் நிலத்திற்குக் கீழே சும்மா இருந்தபோது ஒன்றுமே செய்யவில்லை. நிலத்தை சீராக்கி நகரமாக்கும்போது அவை ஒன்றுடன் ஒன்று அமுங்குவதால் தாக்கமுறுகின்றன" என்று விளக்கம் தந்தார் லொறன்ஷோ.

"இது எல்லாருக்குமுள்ள பொதுப்பிரச்சினைதான், என்றாலும் இதை சும்மா மேம்போக்காக விட்டுவிட முடியாது" ஒரு கையில் சுருதியைப் பிடித்தபடி தேநீர் தட்டுடன் வந்து கொண்டிருந்தார் அஞ்சலினா. லொறன்ஷோவுடன் சுவாரஷ்யமாக உரையாடிக்கொண்டிருந்ததில் அவர்கள் இருவரும் எப்பொழுது எழுந்து உள்ளே போனார்கள் என்பதை நான் கவனிக்கவில்லை.

குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. சமரின் கடைசிப் பார்ட்டி இந்த வருடம் கிறீக்நாட்டு ஜானியின் வீட்டில் நடந்துகொண்டிருந்தது. ஜானியின் வீடு பூங்காவை ஒட்டியிருந்தது. பூங்காவில் இன்னமும் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மது அருந்திக்கொண்டே கார்ட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தோம். அரசியல், பொருளாதாரம், சினிமா என்று உரையாடல் தொடர்ந்தது.

"அடுத்த சமருக்கு திரும்பவும் பூதம் கிழம்பும்" என்றான் பிஜி நண்பன் சுரேஷ். மற்றவர்களுக்கு அவன் சொன்னது விளங்கவில்லை.

"ஆயுள்கைதிகளை இங்கே குடியிருத்துவது பற்றி முன்பு கதைத்தார்களே என்னவாயிற்று?" என்றான் ஜானி.

சுரேஷ் கையைத்தூக்கி ஜோக்கரை ஆட்டிக் காட்டிவிட்டு "நாங்கள்தான் அந்த ஆயுள் கைதிகள்!" என்றான்.

"ஆர் கண்டது? ஒருகாலத்தில் இந்த வாயுக்கசிவின் இரசாயனத்தாக்கத்தை அறியும் காரணிகளில் எங்கள் உடல்களும் முக்கியத்துவம் பெறலாம்" என்றேன் நான்.

பார்ட்டியில் வழமையாகக் கலந்து கொள்ளும் லொறன்ஷோவும் அஞ்சலினாவும் வரவில்லை. ஒருதடவை அவர்களை எட்டிப் பார்த்துவரலாம் என்ற நினைப்பில் நானும் சுரேஷும் புறப்பட்டோம். அவர்களின் வீடு பூட்டிக் கிடந்தது. ஜானியின் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருக்கையில் இடையில் செவற்லனா இடை மறித்தாள்.

"பார்டிக்கு வரவில்லையா?" என்றான் சுரேஷ்.

"மனசு சரியில்லை" என்றபடி confidential என்று எழுதப்பட்டிருந்த முத்திரை ஒட்டப்படாத கடிதமொன்றைக் காட்டினாள் அவள். அதில் 'ஓடி விடுங்கள். ஒருகணமேனும் இங்கே இருக்காதீர்கள்!' என்று எழுதப்பட்டிருந்தது.

அந்தக் கையெழுத்து பேராசிரியர் லொறன்ஷோவினுடையது போல் இருந்தது. சுரேஷ் தனக்கும் இதுபோல ஒரு 'குப்பை' வந்திருந்ததாகச் சொன்னான். நான் ஒன்றும் சொல்லவில்லை. எனது லெட்டர் பொக்சைத் திறந்து பார்த்தேன். எனக்கும் அதே கடிதம்.

"உது ரியல் எஸ்டேட்காரன்களின்ரை வேலை. எப்பவுமே எதையுமே கூடாததாகக் காட்டி வளைச்சுப் போடுறதுதான் அவங்கட வேலை. அவங்களிட்டை எக்கச்சக்கமான பணத்தை வாங்கிச் சுருட்டிக்கொண்டு ஓடித் தப்பிவிட்டார் பேராசிரியர்" என்றான் சுரேஷ்.

"சும்மா போப்பா... நல்ல மனிசனை ஏன் உப்பிடி கூடாதபடி கதைக்கிறாய்! லொறன்ஷோ ஒரு பேராசிரியர். அரசாங்கப் பல்கலைக்கழகத்திலை வேலை செய்பவர். வெளிப்படையாக இந்த இடத்திலை ஒருத்தரும் இருக்க முடியாது எண்டு சொன்னா, அரசாங்கம் அவரை என்ன செய்யும் எண்டு யோசிச்சுப் பார். பிறகு பல்கலைக்கழகத்திலை அவரை வேலை செய்ய விடுமா?"

என்ன இருந்தாலும் பேராசிரியரும் மனைவியும் போய்விட்டார்கள். அவர்களுக்கென்ன? இன்னும் சிலமணி நேரத்தில் பேராசிரியர் போய்விட்ட விஷயம் வீடு வீடாய் கசிந்து விடும். அதன்பிறகு இன்னும் சிலர் ஓடக்கூடும். தெருவிளக்குகள் ஒளியை உமிழ்ந்தவண்ணம் உள்ளன. அவற்றின் கீழே படர்ந்திருந்த இருளை நான் உற்று நோக்கியபடி இருக்கின்றேன். கங்காருக்கள் பூங்காவிற்குள்ளால் பாய்ந்து செல்கின்றன. அந்தப்பாய்ச்சல் 'ஓடி விடுங்கள். ஒருகணமேனும் இங்கே இருக்காதீர்கள்!' என்று சொல்லாமல் சொல்லியது.

’ஆஸ்திரேலியா – பல கதைகள்’ சிறுகதைப் போட்டி (2013, முதல் பரிசு), தாய்த் தமிழ்ப் பள்ளி.

kssutha@hotmail.com


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்