1. பல்திறன் கொண்ட படைப்பாளி இலங்கையர்கோன்..!!
ஈழத்தில் 1930 முதல் சிறுகதைகள் புதிய வடிவமும் சமூக சீர்திருத்தப் பார்வை கொண்டனவாகவும் வெளிவரத்; தொடங்கின. முன்னோடிப் படைப்பாளிகளாகத் திகழ்ந்தவர்களின் ஆங்கில மொழிப் பயிற்சியும், தமிழக இதழ்களில் வெளியான சிறுகதைகள் மீதான பார்வையும் அவர்கள் சிறந்த கதைகளைப் படைக்க ஏதுவாகவிருந்தன. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மூலவர்களில் ஒருவராகவும் அன்றுதொட்டு இன்றுவரை இலக்கிய வரலாற்றில் முக்கியமானவராகவும் பலராலும் குறிப்பிடப்படுபவர் இலங்கையர்கோன. இவரது இயற்பெயர் த. சிவஞானசுந்தரம். ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆங்கில மொழிமூலம் கல்விகற்று நிர்வாக சேவைக்குத் தெரிவுசெய்யப்பட்டுக் காரியாதிகாரியாக (னு.சு.ழு.) கடமையாற்றியவர். சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞராகவும் திகழ்ந்தவர்.
இவர் ஆங்கிலப் படைப்புகளின் நோக்குகளை நன்கு புரிந்துகொண்டு முதலில் மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டார். வெளிநாட்டுச் சிறந்த கதைகள், நாடகங்கள் சிலவற்றை மொழிபெயர்த்துத் தமிழ் வாசகர்களுக்கு வழங்கியுள்ளார்.18 வயதுக் காலத்திலேயே இவர் எழுதத் தொடங்கிவிட்டார். புராண, இதிகாச, வரலாற்றுக் கதைக் கருக்களைக்கொண்டு சிறுகதைகளை முதலில் எழுதினார்.
முதல் கதையான மரியமதலேனா 1938 -ல் தமிழகச் சஞ்சிகையான கலைமகளில் வெளியானது. சிகிரியா, அனுலா, யாழ்பாடி, கடற்கோட்டை, மணப்பரிசு முதலிய சில கதைகள் கலைமகளில் தொடர்ந்து பிரசுரமாகின. தொடர்ந்து யாழ்குடா நாட்டின் வாழ்க்கை நிலைப்பாடுகளைப் பிரதிபலிக்கும் சமூகக் கதைகளை வரவாக்கினார். வெள்ளிப் பாதசரம், நாடோடி, மனிதக்குரங்கு, சக்கரவாகம், மச்சாள், கடற்கரைக் கிளிஞ்சல், தாழைமர நிழலிலே, வஞ்சம் போன்ற அவரது கதைகள் குறிப்பிடத்தக்கன. தந்தை மனம், கடற்கரைக் கிளிஞ்சல் என்னும் சிறுகதைகள் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் வெளியான சிறுகதைத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன.
இவரது 'வெள்ளிப் பாதசரம்” சிறுகதை ஈழத்தின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றாக விமர்சகர்களால் கணிக்கப்படுகிறது. இவர் எழுதிய 'வஞ்சம்" என்ற கதையும் சிறந்த கதையெனக் குறிப்பிட்டுள்ளனர. கலைமகள், கிராமஊழியன், சக்தி, பாரததேவி, சு10றாவளி, கலாமோகினி, சரஸ்வதி, மணிக்கொடி போன்ற தமிழக இதழ்களில் இவரது கதைகள் வெளியாகின. ஈழகேசரி, மறுமலர்ச்;சி, வீரகேசரி, தினகரன், ஈழநாடு, கலைச்செல்வி முதலான ஈழத்து ஏடுகளிலும் தொடர்ந்து எழுதியுள்ளார். இவர் சமூகக் கதைகளில் மக்கள் பேசும் இயல்பான தமிழைக் கையாண்டுள்ளதாகவும் சரித்திர புராணக் கதைகளில் அழகு தமிழைச் சிறப்பாகக் கையாண்டுள்ளதாகவும் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையர்கோன் பல நாடகங்களையும் எழுதிப் புகழ் பெற்றவர். சரித்திர நாடகங்கள்;, சமூக நாடகங்கள் பலவற்றை எழுதியுள்ளார். வானொலிக்கெனத் தொடர்ந்து நாடகங்களை எழுதி வழங்கியுள்ளார். விதானையார் வீட்டில், இலண்டன் கந்தையா, கொழும்பிலே கந்தையா, மிஸ்டர் குகதாசன், மாதவி மடந்தை போன்ற இவரது நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியும் மேடைகளில் நடிக்கப்பெற்றும் பெரிதும் வரவேற்பைப் பெற்றன. இந்நாடகங்கள் பின்னர் நூலுருவிலும் வெளியிடப்பட்டன. இந்நாடகங்களில் நடித்தவர்களும் பிரபலமாகினர். இந்நாடகங்களில் விதானையார் வீட்டில், இலண்டன் கந்தையா என்பன இலங்கை வானொலி நேயர்களிடம் அன்று பெரும் வரவேற்பைப் பெற்று அவருக்குப் புகழ் கொடுத்தன. முதற்காதல் என்ற இவரது மொழிபெயர்ப்பு நாவலும் நூலுருப் பெற்றது.
மொழிபெயர்ப்பிலும் நாடகம் எழுதுவதிலும் சிறுகதை படைப்பதிலும் புகழ்பெற்றவராகவே அன்று திகழ்ந்தார். இவர் 46 வயதில் 1961 –ம் ஆண்டு மரணமாகியமை கலை இலக்கிய உலகத்தினருக்கு அதிர்ச்சியளித்தது. இறக்கும்வரை எழுதிக்கொண்டேயிருந்த பெருமைக்குரியவர். இவரது பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பாக “வெள்ளிப் பாதசரம்” தொகுதி இவரது மரணத்தின் பின் 1962 -ம் ஆண்டு கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன் முன்னுரையுடன் வெளிவந்து புகழ் பெற்றது. இத்தொகுப்பின் மூன்றாவது பதிப்பும் வெளியாகியுள்ளது. சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு, விமர்சனம் எனப் பல்திறன் கொண்ட முன்னோடி இலங்கையர்கோனின் நாமம் ஈழத்து இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாதது என்றால் மிகையல்ல..!
2. ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர்! 'சாகித்திய இரத்தினா" பண்டிதர் க. சச்சிதானந்தன்!!
ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரும் சிறந்த கவிஞருமான பண்டிதர் க. சச்சிதானந்தன் (ஆனந்தன்) ஈழத்து இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க அறிஞராவார்.
'சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் - எந்தன்
சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்" -
என்ற உணர்ச்சிகரமான கவிதையை எழுதியவர்.
மாவிட்டபுரத்தில் கணபதிப்பிள்ளை - தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மகனாக 1921 -ம் ஆண்டு சச்சிதானந்தன் பிறந்தார். இவர் மகாவித்துவான் நவநீதகிருஷ்ண பாரதியிடம் தமிழை முறையாகக் கற்றுத் தேர்ந்தார். சமஸ்கிருதமும் நன்கு கற்றுக்கொண்டார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் பட்டம் பெற்றார். முதுகலைமாணிப் பட்டமும் (இலண்டன்) பெற்றார். நீர்கொழும்பு புனிதமேரி கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, யாழ் பரமேஸ்வராக் கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி ஆகியவற்றில் கணித - தமிழ் ஆசிரியராகக் கடமையாற்றினார். பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகவும் உப அதிபராகவும் பணியாற்றினார். அரசினர் பாடநூற் சபையிலும் பணியாற்றியுள்ளார். சுவாமி விபுலானந்தரின் ஆய்வுப்பணிகளின்போது மாணவராக உடனிருந்தும் உதவியுள்ளார். 'ஆனந்தன்" என்ற புனைபெயரில் சிறந்த சிறுகதைகளை எழுதியுள்ளார். பண்டிதர், சச்சி ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.
இவர் 1938 - 1944 வரையிலான காலப்பகுதியில் பத்துச் சிறுகதைகள்வரை எழுதியுள்ளார். பின்னர் கவிதைத்துறையிலும், காவியம் படைப்பதிலும் தொடர்ந்து ஈடுபட்டார். 'ஈழகேசரி"யில் இவர் எழுதிய அவிந்த தீபம், கண்ணீர், நான் அரசனா.., சாந்தியடையுமா..?, தண்ணீர்த்தாகம் ஆகிய கதைகள் குறிப்பிடத்தக்கன.
ஈழத்து உன்னத சிறுகதைகளில் ஒன்றாக இவர் எழுதிய 'தண்ணீர்த்தாகம்" இடம்பெறுமென விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய காலகட்டத்தில் (1939) இத்தகைய முற்போக்கான சிறுகதையை எழுதிய ஆனந்தன் பாராட்டுக்குரியவராகக் கணிக்கப்படுகிறார். ஈழத்தில், முதன்முதலில் யாழ்குடாநாட்டுச் சமூகத்தின் சாதியக் கொடுமையைக் கருப்பொருளாக்கித் 'தண்ணீர்த்தாகம்" கதையை இவர் படைத்துள்ளார். சாதி அடக்குமுறைக் கொடுமையையும், அவலத்தையும், மானிடநேயத்தையும் சிறப்பாக அக்கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். சாதி ரீதியான அடக்குமுறை மேலோங்கியிருந்த அக்காலகட்டத்தில் முற்போக்குச் சிந்தனையுடன் சிறந்த இச்சிறுகதையைத் துணிவுடன் இவர் படைத்துள்ளார்.
'ஆனந்தன்" (பண்டிதர் க. சச்சிதானந்தன்) கவிதைகள் உணர்ச்சியைத் தூண்டிச் சிந்திக்கவைப்பவையாகும். 'ஆனந்தத்தேன்" இவரது கவிதைத் தொகுதியாகும்.
'சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் - எந்தன்
சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்" -
என்ற உணர்ச்சிகரமான வரிகள் இவரது கவிதையில் வருவதாகும். இந்த வரிகளைத் தமிழகத்திலும் மலேசியாவிலும் சிலர் பாரதிதாசனின் கவிதை வரிகளெனப் பிழைபடக் கூறிவருகின்றனர். ஈழகேசரியில் 'அன்னபூரணி" என்ற நாவலைத் தொடராக எழுதியுள்ளார் தமிழரசுக் கட்சித் தலைவர் 'கோப்பாய்க் கோமான்" கு. வன்னியசிங்கம் குறித்து 'தியாகமாமலை" என்ற நூலையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் தோற்றத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் வன்னியசிங்கத்தின் பங்களிப்பு எத்தகையது என்பதனை எடுத்துரைக்கும் வகையில் இந்நூல் விளங்குகிறது.
இவர் எமது மூத்த சகோதரர் நாவேந்தனின் முதல் சிறுகதைத் தொகுதியான 'வாழ்வு" தொகுதிக்கு (சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது – 1964) அணிந்துரை வழங்கியுள்ளமை ஞாபகத்திலுண்டு. ஆய்வுத்துறையிலும் ஆர்வமாக ஈடுபட்ட பண்டிதர் சச்சிதானந்தன் 'தமிழர் யாழியல்" என்னும் சிறந்த ஆய்வு நூலைப் படைத்தார். 'பருவப் பாலியர் படும்பாடு" என்னும் காவியத்தையும் 'மஞ்சுகாசினியம் - இயங்கு தமிழியல்" என்றொரு இலக்கண நூலையும் இறுதிக் காலத்தில் எழுதியுள்ளார்.
இவரது 'யாழ்ப்பாண காவியம்" இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு மற்றும் வடக்கு - கிழக்கு மாகாண இலக்கியப் பரிசு, சம்பந்தர் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் நன்கு தேர்ச்சிபெற்ற பண்டிதர் சச்சிதானந்தன் சிறுகதை, கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், நாவல், இலக்கணம், வானியல் ஆதியாம் துறைகளில் படைப்புகளைத் தந்துள்ளார். ஆங்கிலத்திலும் தமிழிலும் உளவியல் கட்டுரைகளையும், வானியல் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது இலக்கியப் பணிகளுக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 'இலக்கிய கலாநிதி" பட்டமளித்துக் கௌரவித்துள்ளது. கலாகீர்த்தி தேசிய விருதும் பெற்றார். இலங்கை அரசு வழங்கும் இலக்கியப் பணிக்கான உயர்விருதான 'சாகித்திய இரத்தினா" விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. முதுமையடைந்த போதிலும் ஓயாது எழுதிவந்த இவர் 2008 -ம் ஆண்டு இயற்கை எய்தினார். ஈழத்தின் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர்;, சிறந்த கவிஞர், தமிழ் அறிஞர்;, ஆய்வாளர் எனத் திகழ்ந்த பண்டிதர் சச்சிதானந்தன் நாமம் ஈழத்து இலக்கிய வரலாற்றில் நீடித்து நிலைத்து வாழும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.