கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடமொன்றின் தலைவராக இருந்தவரும், கூத்துக்கலைகளில் ஆர்வம் மிகுந்தவருமான திரு. பாலசிங்கம் சுகுமார் அவர்கள் தன் மகளைப்பற்றி அவ்வப்போது முகநூலில் பதிவுகளிடுவார். இப்பதிவுகளுக்குப் பின்னாலுள்ள வலி, சோகம், துயரம் வாசிப்பவர் நெஞ்சங்களைப் பாதிப்பவை. ஆனால் அவற்றையும் மீறி அவர் தன் மகளுக்குச் சொற்களாலான கவிமாலை புனைந்து இலக்கியத்தில் நிலையாத இடத்தை ஏற்படுத்தி விட்டார். 2004இல் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாப்பிரதேசங்களைப் பாதித்த ஆழிப்பேரலைக்குப் பலியான அவரது மகள் பற்றிய அவரது உணர்வுகளில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றோம்.
அவர் தன் மகளைப் பற்றி அண்மையில் எழுதிய பதிவொன்று கீழே:
கூத்தில் நிமிர்ந்து ஈழ நாட்டிய கனவை விதைத்த மகள்!
200ம் ஆம் ஆன்டு பேராசிரியர் மெளனகுரு இராவணேசன் தயாரிப்புக்காக கிட்டத்தட்ட ஒரு வருட பயிற்சியயை ஆரம்பித்தார்.அந்த பயிற்சியில் நான் உட்பட பல விரிவுரையாளர்களும் இணைந்து கொண்டனர் மகள் அனாமிகாவும் இணைந்து கொண்டாள் பெரும்பாலும் மாலை நேரங்களிலும் சனி ஞாயிற்றுக் கிழமைகளிலும் பயிற்சிகள் நடை பெறும் மிகக் கடுமையான பயிற்சிகள் நான் வேலைகள் காரணமாக பயிற்சிகளை தவற விட்டாலும் அவள் நாட் தப்பாமல் நேரம் தவறாமல் கலந்து கொள்வாள் .
பயிற்சியில் அவளது திறன் அசாத்தியமானதாக இருந்தது.அதனால் பல வேளைகளில் அவளை முன்னுக்கு விட்டு மற்றவர்களுக்கு பயிற்சியயை வழி நடத்துவார்.அவள் பரதமும் படித்தாள் என்பதால் அவள் ஆட்டத்தில் அடவுகள் அற்புதமான காட்சிகளாக விரிந்து வியப்பை தரும். வீட்டில் அவளை ஆடச் சொல்லி பார்த்து பார்த்து மகிழ்வேன். அவழின் ஆடல் திறனை நானும் பேராசிரியர் மெளனகுரு அவர்களும் அடிக்கடி பேசிக்கொள்வோம் அப்போது உருவானதுதான் என் ஈழ நாட்டியக் கனவு. 2002ஆம் ஆண்டு நடை பெற்ற கூத்து பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் மெளனகுருவின் கூத்து விளக்க செயல் முறை விளக்கத்துக்கு அனாமிகா ஆடிக் காட்டி விளக்கி நின்றாள். எப்படி பரத நாட்டியத்துக்கு தனியொருவரைக் கொண்டு அரங்கேற்றம் செய்யப் படுகிறதோ அதே போல மட்டக் களப்பு வடமோடிக் கூத்துக்கு அனாமிகாவை வைத்து ஒரு அரங்கேற்றம் செய்வது அதனை 2005 ஆம் ஆண்டு செய்வது எனவும் தீர்மானித்தோம். ஆனால் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 சுனாமி எல்லாக் கனவுகளையும் கழுவிக் கொண்டு நிர் மூலமாக்கிக் கொண்டு சென்றது
மகளைப்பற்றி அவர் முகநூலில் பதிவிட்டிருந்த கவித்துளிகள் சில கீழே:
1.
எனக்கு
எல்லாமாய் இருந்தவள்
நீ....
சொல்லாமல் வந்த
சுனாமியில்
கரைந்த
அந்த நாளோடு
நான்
இல்லாமல் போனேன்
2.
சில்லென்று பூக்கும்
உன் சிரிப்பு
எங்கெங்கு காணினும்
உன் நினைவு
சில்லென்று பூக்கும்
உன் சிரிப்பு
நில்லென்று சொல்லும்
உன் கனவு
மெல்லென்ற காற்றில்
சொல்லொன்றிலிருந்து
சுகம் காட்டும்
உன் கவிதை
3.
என்னில் பூத்த
பொன் மலரே
என்னில் பூத்த
பொன் மலரே
எண்ணம் எங்கும்
இனிக்க இனிக்க
நீ நிறைக்க
வண்ணம் காட்டி
மகிழ்வின் இருப்பை
நீ சொல்வாய்
வையம் முழுதும்
நீ நிறைவாய்
4.
விழி மூட முடியாமல்
நான் தூங்க வழி தேட
காதோரம் நீ வந்து
கதை சொல்கிறாய்
கண்மூடி நான் தூங்க
என்னோடு நீ வந்து
இசையாகி மொழியாகி
நீ வாழ்கிறாய்
செல்லாத இடமெல்லாம்
நான் செல்லும் போதெல்லாம்
விழியாகி வழியாகி
நீ வாழ்கிறாய்
4.
தேனென இனிப்பாய் நீ
வான் மழை மகிழ்வாய் நீ
செந்தமிழ் அமுதாய் நீ
சேர்ந்திடும் அழகே நீ
உன் அன்பிடை
தோயும் நான்
அழகினை பாடும் நான்
என்பிடை உயிரோடு
உணர்விலே
கலந்திடும்
சொல்லிட சொல்லிட
சுவைத்திடும்
'செல்லமாய் நீ
5.
உன்னிலிருந்தே
உயிர் பெறுகிறேன்
ஒவ்வோர் நாளும்
உந்தன் சிரிப்பில்
மகிழ்ந்து களிக்கிறேன்
ஒவ்வோஈர் நாளும்
உந்தன் நினைவே
சந்தோசப் பொழுதாய்
ஒவ்வோர் நாளும்
6.
செல்லம்
என்ற சொல்லின்
வல்லமை
கல்லில் எழுத்தாய்
காலம் முழுவதும்
சொல்லிச் சென்றது
உன்
சுகந்த நினைவுகள்
நினைக்க நினைக்க
நீ..
இனிக்கிறாய்
என்னுள்
பனிக்க பனிக்க
கண்ணில்
வருகிறாய்
வா வா
என் தேவதையே
7.
சின்ன மகள்
சிரிக்கையில்
சித்திரமும் பேச
நா துடிக்கும்
வண்ணமகள்
புன்னகையில்
வானமும் சேர்ந்து
பூச் சொரியும்
8.
சொல்லத் துடிக்கும்
என் மனது
சோகம் தவிர்க்கும்
உன் நினைவு
மெல்ல நீ வந்து
என் மேனி தொட்டு
சின்ன முத்தம் தந்து
சிரித்து சீண்டிச்
செல்கிறாய்....
கனவில்
9.
பொங்கும் அழகுடையாகி
பொலியும் தமிழுடையாகி
எங்கும் அவளுடையாகி
எதிலும் அவளுடயாகி
இங்கும் அவளுடயாகி
தங்கும் அவள் எழில் கண்டேன்
தங்கப் பொழில் முகம் என்னில்
எங்கள் அழகுக் குயில் அவள்
10.
நீ
நடந்த பாதையெல்லாம்
நெருஞ்சி முள்ளு
பூக்கலம்மா
தேன் சொரியும்
பொன்னாவரை
சிரித்து பூத்திருக்கு
வான் மகள்
விழி திறந்து
மழைப் பூவை
சொரிந்திருக்க
நீ சென்ற வழியெல்லாம்
நெஞ்சோடு இனித்திருக்கு
இன்றைய நாள் 26.12.2004
எல்லா நாட்களையும் போலவே இன்றும் விடிந்தது வாழ் நாள் முழுவதும் பெரும் துயரத்தை சுமந்த நாள் என யாரும் அறிந்திருக்கவில்லை.
ஞாயிற்றுக் கிழமையானதால் தேவாலையங்கள் நிறைந்திருந்தன கோயில்களில் காலை வழிபாடு களை கட்டியிருந்தன .மசூதிகளில் பலர் தொழுகையில் இருந்தனர்,பன்சலைகளில் பிரித் ஒலி முழங்கிக் கொண்டிருந்தது.எந்த கடவுளர்களும் கண்டு கொள்ளாத வகையில் சுனாமி சுழன்றெழுந்து ஈழக் கரையெங்கும் இடறி குடைந்து கொள்ளையிட்டது இன மத மொழி வேறு பாடின்றி லட்சக் கணக்கானோர் கடல் மடியில் மான்டு போயினர்.
மட்டக் களப்பு தன் முகமிழந்து அழுது மாண்டது எல்லோர் வீடுகளிலும் ஓலம் தெருவெங்கும் பிணங்கள் தீர்த்தக் கரை புனிதத்தை இழந்து பிணங்களை சுமந்து மாறாத சோகத்தை தன் மடியில் சுமந்தது.
என் செல்ல மகளும் பல லட்சம் பேர்களில் ஒருத்தியாய் என் ஒரே மகள்
பலர் குடும்பம் குடும்பமாய் மாண்டு போயினர்
தீர்த்தக் கரையில்
துவண்டு கிடந்த
என் மகளை
ஏந்தி தூக்கிய அந்த கணத்தில்
நானும் தொலைந்து போனேன்
என் கண் முன்னால்
பிரபஞ்சமே சுருங்கிப் போனது
கடவுளர்கள் எல்லோரும்
என் காலடியில்
மண்டியிட்டுக் கிடந்தனர்
என் மகளின் மரணத்தை ஈழத்தின் தலை சிறந்த கவிஞர்களில் ஒருவனான என் தோழமை சு.வில்வரெத்தினம் இப்படிப் பாடியிருக்கிறான்
''தீர்த்தக் கரை கிடக்கிறது
வெறுமனே ஒன்றும் நிகழாதது போல
வெண்ணிலவு
காய்ந்து கிடக்கிறது வெறுமனே
நீ புகுந்த பொங்கு மடு
மாமாங்கத் தீர்த்தக் கேணியருகே
உனைப் பார்த்திருந்தோம்
பூத்திகழும் பொன் மேனிப்
புனித மலரே
பூ
எறியும் உனது
மென் சொற்களின்
தேனுண்டவர் நாம்
நீ
உமிழ்ந்த இறுதிச் சொல்
எந்த அலையில்
மிதந்து கிடக்கிறது
சொல்
வாழ்வின் உட் பொருள் தேடி
முகக்கும் உனதறிவின்
வாயுண்டு உமிழ்ந்த சொல்லின்
பொருள் என்ன
தெற்கு மூலையில்
யமன் திசையில்
காத்திருக்கும் எங்களுக்கு
சேதியினை சொல்லி விடு"
சு.வில்வரெத்தினம்
.
சுனாமியில் மரணித்த எல்லோர் நினைவாகவும்