எழுத்தாளர் ஐ.ரா.சுந்தரேசன் அவர்கள் மறைந்த செய்தியினை முகநூலில் எழுத்தாளர் இரா முருகன் பதிவு செய்திருந்தார். ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்பது இவரது இயற்பெயர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைப்பகிர்ந்துகொள்கின்றோம். எங்களது காலகட்டத்தில் நகைச்சுவை எழுத்தென்றால் முதலில் ஞாபகத்துக்கு வருபவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி படைத்த அப்புசாமி - சீதாப்பாட்டி கதைகள்தாம். ஓவியர் ஜெயராஜின் கை வண்ணத்தில் வெளியான அப்புசாமி - சீதாப்பாட்டி ஓவியங்களை அவ்வளவு இலகுவாக மறந்துவிட முடியுமா என்ன? ஐ.ரா.,சுந்தரேசனின் புனைபெயர்களிலொன்றுதான் பாக்கியம் ராமசாமி என்பதும். ஐ.ரா.சுந்தரேசன் என்னும் பெயரிலும் இவரது தொடர்கள் எழுபதுகளில் குமுதம் இதழில் தொடராக வெளிவந்துள்ளன. அவற்றில் 'கதம்பாவின் எதிர்' அப்பருவத்தில் நாம் விரும்பிப்படித்த நாவல்களிலொன்று. தமிழ் இலக்கிய உலகில் தேவனின் 'துப்பறியும் சாம்பு' போல் பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி, சீதாப்பாட்டியும் நிலைத்து நிற்பார்கள். இவர் அப்புசாமி.காம் என்னும் புகழ்பெற்ற வலைப்பதிவொன்றினையும் நடாத்தி வந்தார். அதன் இணையத்தள முகவரி: http://www.appusami.com/nagaichuvaimenu.asp அத்தளத்தில் அப்புசாமி - சீதாப்பாட்டி நாவல்கள் பலவற்றை வாசிக்கலாம்: http://www.appusami.com/nagaichuvaimenu.asp
மேலும் சில அப்புசாமி, சீதாப்பாட்டிச் சித்திரங்கள்..