ஜானகி பாலகிருஷ்ணன்- - ஜானகி கார்த்திகேசன் பாலகிருஷ்ணன் - அவர்கள் கனடியத்தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்களிலொருவர். மின்பொறியியலாளராகப் பல வருடங்கள் பணியாற்றிய இவர் தற்போது கனடாவின் மாநிலங்களிலொன்றான 'நோர்த்வெஸ்ட் டெரிடொரி'ஸிலுள்ள 'யெல்லோ நைஃப்' என்னுமிடத்தில் சமூக அபிவிருத்தி மற்றும் அதற்கான நிபுணத்துவ சேவையினை வழங்கும் நிறுவனமொன்றின் முதல்வராகப் பணிபுரிந்து வருகின்றார். இவர் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் டொராண்டோவின் 'டொன்வலிப்பகுதியில் ஒண்டாரியோ மாநிலச் சட்டசபைக்கான தேர்தலிலும் நின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் மார்க்சிய அறிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரினதும் பெருமதிப்புக்குரியவராக விளங்கியவரும், யாழ் இந்துக்கல்லூரியின் அதிபர்களிலொருவராக விளங்கியவருமான அமரர் கார்த்திகேசு 'மாஸ்ட்'டர் அவர்களின் புதல்விகளிலொருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் முகநூலில் ஐபிசி தமிழ் தொலைக்காட்சியினரால் ஒளிபரப்பப்பட்ட யாழ் நகரம் பற்றிய ஆவணப்படமொன்றில் விபரிக்கப்பட்டிருந்த யாழ் முஸ்லீம் மக்கள் வாழ்ந்த பகுதிகள் பற்றிய விபரங்கள் என்னை யாழ் முஸ்லீம் மக்கள் பற்றிய முகநூற் பதிவொன்றினை எழுதத்தூண்டின. அதில் என் மாணவப்பருவத்தில் அங்கு நான் சென்ற உணவகங்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். அம்முகநூற் பதிவின் விளைவு திருமதி ஜானகி பாலகிருஷ்ணனை யாழ் முஸ்லீம் மக்கள் பற்றிய அவரது அனுபவங்களின் அடிப்படையில் நல்லதொரு கட்டுரையினை எழுதத்தூண்டியுள்ளது. முகநூலில் சாதாரணமாக நான் எழுதிய பதிவொன்று இவ்விதமான நல்லதொரு கட்டுரையை எழுதத்தூண்டியுள்ளது உண்மையில் மகிழ்ச்சியினைத் தருகின்றது. சுவையாகத் தன் எண்ணங்களை, கருத்துகளை அவர் இக்கட்டுரையில் விபரித்திருக்கின்றார். - வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள் -


கடந்த பல வருடங்களுக்கு முன்பு “பதிவுகள்” இணைய இதழின்  பிரதம ஆசிரியர் கிரிதரன் நவரத்தினம் அவர்களும் நானும் சிறீலங்கா மொறட்டுவப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் என்ற வகையிலும், ஒன்ராறியோ, கனடாவில் ஆரம்ப வாழ்கையை 'ரொரன்ரோ' மாநகரிலுள்ள  தோன்கிலிஃப் பார்க் எனும் இடத்தில் தொடங்கியவர்கள் என்ற வகையிலும் பரிச்சயமானவர்கள். அதன் பின் அவரது சகோதரிகள் எனக்குப் பரிச்சயமானார்கள். இருப்பினும் யாழ் வண்ணார்பண்ணைவாசிகளான கிரிதரனின் தந்தையாரும் எனது தந்தையாரும் அக்காலத்தில் சகஜமான நண்பர்கள் என்பதை கிரிதரன் மூலம் அறிந்துள்ளேன். கிரிதரன் கட்டடக் கலையைப் பயின்றும், தனது கவித்துவம், எழுத்தாற்றல் என்பவற்றை முன்னெடுத்துச் சென்று முனைப்பாக, ஆனால் அமைதியாக, காத்திரமான செயற்பாடுகளுடன் அந்நாளிலிருந்தே சேவையாற்றுபவரெனவும், தனது தாய்நாட்டில் மிகவும் பற்றுள்ளவரெனவும் அவர் மேல் ஒரு தனிமரியாதை எனக்கு என்றுமுண்டு. கடந்த காலத்தில் சிறீ லங்காவில் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, மேலும் உள்நாட்டு, புலம் பெயர்ந்தோர், மற்றும் அகில உலக சேவை நிறுவனங்கள் ஆகியோரின் தம்மிடங்களை தக்க வைக்கும் முயற்சிகள், அரசியல் பொருளாதர இலாப நவடிக்கைகள் முன்னெடுக்குமென அறியாது, கிரிதரன் தனது ஆராய்ச்சி மூலம் சிறீ லங்கா போன்ற வளர்முக நாடுகளுக்குப் பொருத்தமான இயற்கையோடு சார்ந்த கட்டட முறையொன்றினைத் தனது இதழில் பதிவு செய்ததைப் படித்துப் பாராட்டியதுடன், அவ்வாறான திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டுமென முயன்றுள்ளேன். விளைவு என்னவென நான் கூறத் தேவையில்லை. அதன் பின்பாக 2003ம் ஆண்டு எனது தந்தையாரின் 25வது ஆண்டு ஞாபகார்த்த நூல் வெளியிடும் வேளையில், அவ்வறிவித்தலை தனது பதிவு இதழில் பிரசுரித்தார். இந்நாள் வரை தொடர்பு எதுவுமின்றி, எனது காலங்கடந்த ஒரு மாதத்திற்கு முன்பான முகநூல் நுழைவின் மூலம் கிரிதரனை மீண்டும் முகநூல் வாயிலாக மிக மகிழ்வுடன் சந்தித்துள்ளேன்.

இந் நீண்ட காலத்திற்குப் பின்பான சந்திப்பு, ஒரு கட்டுரையாக உருப்பெறுவதற்குக் காரணம், முகநூலில் வாசித்த கிரிதரனின் யாழ் ஐந்து சந்தி பற்றிய மனந்தொட்ட கட்டுரையே. கிரிதரன் அதுபற்றி தனது இளமைக்கால அனுபவங்களை அதிகமானோருக்குத் தெரியாத சில நுண்ணிய விபரங்களுடன் வரைந்திருந்தது, எனது மூளை உள்மனதைத் தட்டியெழுப்பி மேலும் சிலவற்றையும் தெரியப்படுத்தலாமே என்றது. அவற்றைத் தெரிவித்து அவரை விபரமான கட்டுரையை வரையுமாறு கேட்டதற்கு, கிரிதரன் ஐபீசீ காணொளித் தொடர்பினையும் அறிவித்து, ஆங்கிலத்திலானாலும் பரவாயில்லை என்னையே எழுதுமாறு கேட்டார். மிக நேர்மையான பதில், எனது மொழிப்புலமை மட்டானது. குறிப்பாக பத்திரிகை கட்டுரைக்கு ஏற்ப தரமானதல்ல. காரணம் நானொரு பொறியியலாளர், அதிகம் மொழிவளம் அவசியமில்லாத துறையில் கடமையாற்றுபவர். தமிழ் மொழயில் ஆரம்ப கல்வியினைக் கற்று, பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் கற்று, கனடாவில் நிர்ப்பந்தமாக ஆங்கிலத்தில் கடமையாற்றவது மட்டுமே.

எனது இளைய சகோதரி ஒரு தடவை நான் எழுதுவது ஒரு 'ரிப்போட்', அதாவது உத்தியோக பூர்வமான கட்டுரை போன்றது அதை வாசிப்பதில் சுவாரஸ்யமாக இருக்காது என்றார். அவர் கூறியதில் உண்மையுண்டு. எனது வாழ்நாளில் பெரும்பகுதியை தொழிலின் அவசிய நிமித்தம், அவ்வாறான நீண்ட 'ரிப்போட்டுகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், குழூஉக்குறிகள் (Codes), தராதரம் (Standards), ஆக்க விபரக்குறிப்புகள் (Specifications) என்பனவற்றை வாசிப்பதிலும், நானே அவை போன்று எழுதுவதிலும் கழித்துள்ளேன். அதைவிடப்பொதுச்சேவையில், கனேடிய அரசியலுட்பட, ஈடுபட்ட போது  அரசியலமைப்புச் சட்ட விதிகள் (Constitution), சட்ட விதிகள் (By Laws), கூட்டச்செயற்பாட்டுக் குறிப்புகள் (Minutes), நிதி அறிக்கைகள் (Financial Statements),  திட்டம் (Policy), மசோதாக்கள் (Bills), சட்டவிதிகள் (Legislations), ஒழுங்கு விதிகள் (Regulations) என ஏராளமான  ஆவணங்கள் வாசித்ததும் தயார் செய்ததும் என கட்டுக்கட்டாக கடதாசிகளுடன் எனது வாழ்நாளின் அடுத்த பகுதியில் அதிக நேரத்தை கழித்தேன். இவையெல்லாம் கருத்தை, விபரத்தை விளம்புவனவே  அல்லாது, வாசகர்களை ஈர்த்தெடுக்க வேண்டுமெனும் விற்பனை நோக்கற்றன. சுருக்கமாக அலுப்பேற்படுத்தும், அதிகமானோர் செய்ய விரும்பாத காரியங்கள் எனலாம். அது மட்டுமல்லாது, எனது தந்தையாரின் 25வது ஆண்டு ஞாபகார்த்த நூல் வெளியீட்டைத் தொடர்ந்து தமிழ் தட்டெழுத்திலிருந்து நீண்ட காலம் இளைப்பாறிவிட்டேன். இருப்பினும் வரையப்பட வேண்டியது எனதும் மனந்தொட்ட விடயமாதலாலும், ஒரு முக்கிய வரலாற்றைக் கூறுவதாலும், வாசிப்போர் சிலவேளை சலிப்புக்குள்ளாகினாலும், நானே எழுதுவதென்றும், அதிலும் தமிழிலேயே என முன்வந்துள்ளேன். சுவாரசியத்துக்காக உண்மையைத் (Truth) தவறவிடுவதிலும் பார்க்க, உண்மைக்காகச்  சுவாரசியத்தைத் தவறவிடுவதில் எனக்கு உடன்பாடு. கிரிதரன் ஏற்கனவே முகநூலில் தொட்ட விபரங்களும், அது பற்றித் தெரிவிக்கப்பட்ட கருத்துகளும், ஐபீசீ காணொளி அறிவித்தவையும் இக்கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளன.

கிரிதரன் தனது ஆகஸ்ட் 10, 2017 முகநூல் பதிவில் ஐபீசீ தொலைக்காட்சியினரின் ‘வணக்கம் தாய்நாடு’ நிகழ்ச்சியில் வெளியான யாழ் சந்திகள் பற்றிய  காணொளிகளிலொன்று ஐந்து சந்தியையும் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அவ்விடம் பற்றிய தனது நினைவுகளை மிக மன வருத்தத்துடன் மீட்டி எழுதியுள்ளார். அத்துடன் ஆகஸ்ட் 11, 2017 முகநூல் பதிவில், அந்த ஐந்து சந்தியின் பெயர் பற்றிய ஏனைய சிலரின் கருத்துக்களையும், சந்தியில் அமைந்த ஒரு உணவகம் பற்றியும் அதன் பெயர் பற்றிய சில வரலாற்றுரீதியிலான ஏனைய சிலர் தெரிவித்த ஆய்வு விடயங்களையும் பகிர்ந்திருந்தார்.

ஐபிசி காணொளி: யாழ் முஸ்லீம்கள் பகுதிநானும் ஐபீசீ காணொளியைப் பார்த்த போது அவரது மனவலியைப் புரிந்து கொள்ள முடிந்தது. அத்தோடு அவருடையது போன்று வேறு சில விடயங்களும் மனத்தில் தோன்றின. அதன் காரணம் கிரிதரனும் நானும் யாழ் வண்ணார்பண்ணை வாசிகளாக இருந்தமையும், சில பொதுவான அனுபவங்களை பெற்றிருந்ததுமாகும். யாழ் ஐந்து சந்தி என்பது ஐந்து முச்சந்தி என்றும் கூட அல்ல, “அஞ்சுமுச்சந்தி” என்றே, பெரிய கல்விமான்களையும், தமிழ்ப்பண்டிதர்களையும் தவிர்த்து, ஏனைய பொதுமக்களால் அழைக்கப்பட்டு வந்தது. பொதுவாக யாழ்ப்பாணத்தில் நான்கு வீதிகள் சந்திப்பதை சந்தி எனவும், வெகு அரிதாக நாற்சந்தி எனவும், மூன்று வீதிகள் சந்திப்பதை முச்சந்தி எனவும் கூறிப் பழக்கப்பட்டதால், ஐந்து வீதிப்பகுதிகள் சந்திக்கும் இவ்விடத்தை ஐந்து முச்சந்தி என்று பெயரிட்டார்கள் போலும்.  “அஞ்சுமுச்சந்தி” என்பதே பொதுமக்களின் வழக்கத்திலிருந்த பெயராதலாலும், பரதேசி என்பவர் பெப்ரவரி 3, 2015 யாழ் இணையத்தளக் கருத்துக்களத்தில் தெரிவித்ததையொட்டி, புங்கையூரன் அதை ஆமோதித்துக் கூறியதை, கிரிதரன் ஆகஸ்ட் 11, 2017 முகநூல் பதிவில் பகிர்ந்ததாலும், இக்கட்டுரையில் அப்பெயரே பயன்படுத்தப்படும். புங்கையூரன் அஞ்சு லாம்படிச் சந்தி என்ற பெயரையும் பயன்படுத்தியள்ளார் என அதே பதிவிலிருந்து தெரிவாகிறது. அந்த சந்தியின் கூகுள் (Google) வரைபைப் பார்த்த போது, தெருவிளக்குகள் காணப்படாவிட்டாலும், ஐந்து மின்சாரக் கம்பங்கள் ஒவ்வொரு தெரு முனையிலும் இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இத்தனை ஆண்டுகள் கடந்தபின் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், அந்த அடிப்படைத் தடயங்கள் அங்கு இருப்பதையும், பொதுமக்கள் தத்தமக்கு எவை முக்கியமோ அவற்றையொட்டியே இடங்களுக்கு பெயர்களும் வைத்திருக்கிறார்கள் என்பதையும் அவதானத்திலெடுக்க வேண்டும். 

2016ம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் 10 இருவழிப்பாதைகளையும் 2 ஒருவழிப்பாதைகளையும் உள்ளடக்கும் வட்டச்சுற்றுப்பாதை (Round about) முறையிலமைந்த Place Charles-de-Gulle சந்தியையும், வேறுசில நாடுகளில் 4க்கு மேற்பட்ட பாதைகள் போக்குவரத்து விதிமுறைகளுடன் அமைந்த சந்திகளையும் நான் காண முன்பாகவும், அநேக வருடங்களுக்கும் முன்பே ஒழுங்குபடுத்தப்பட்ட போக்குவரத்து விதிமுறைகளுடன் இல்லாமல் 5 இருவழிப் பாதைகளை உள்ளடக்கியதாக் கண்டது இந்த 'அஞ்சுமுச்சந்தியே' தான்.

கனடாவின் ரொரன்ரோ நகரில் வாழும்போது நகர் திறம்பட போக்குவரத்து விதிமுறைகளுடன் அமைந்திருந்தாலும் 4 இருவழிப்பாதைகள் அமைந்த சந்தியில் இடப்புறம் திரும்பும் போது, அதை முற்றாக முடிக்கும் வரை மனம் திக்குத் திக்கென்று அடிக்கும். ஏனென்றால் ரொரன்ரோ நகரில்  இடப்புறம் திரும்பும் போது ஏற்படும் விபத்துக்கள் அடிக்கடி இடம்பெறும். இது போக்குவரத்து அதிகம் என்பதால் ஏற்படும் நிகழ்வு என்று சாக்குப்போக்கு சொல்லிவிட முடியாது. அதிகமாக வாகன சாரதிகளின் அவசரமும் கவனக் குறைவுமேயாகும். இந்த அஞ்சுமுச்சந்தியைத் தாண்டி பஸ், கார், லாரி, வான், சைக்கிள், தள்ளு வண்டி, மாட்டு வண்டி, றிக்க்ஷோ வண்டி என்று இதர பல வாகனங்களும், அதனிடையே கால்நடையாகச் செல்லும் பொதுமக்களும் என்று சந்தி மிகவும் பரபரப்பாக இருக்கும். கனடாவில் 'ஹார்ன்' அடித்தால் ஏனைய வாகன சாரதிகளின் கவனத்திற்கு இடையூறு என, ஹார்னை எப்போது எப்படி பாவனை செய்யவேண்டும் எனும் விதிமுறைகளுண்டு. அங்கு அவ்வேளை ஹார்ன் உள்ள வாகனங்களின் அவரவர் ஹார்ன் மட்டுமே போக்குவரத்துக் கட்டுப்பாடாக இருந்தது. மற்றவர் செவிப்பறை கிழிந்தாலும் பரவாயில்லை என ஹார்ன் அடிப்பவரும் இருந்திருக்கிறார்கள். இவ்வளவிற்கும் அந்த சந்தியில் ஏற்பட்டிருக்கக் கூடிய விபத்துக்களின் எண்ணிக்கை, ரொரன்ரோ நகரில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கையின் துளி அளவு கூட இருந்திருக்காது.

இவ்வாறு பெருமை வாய்ந்த 'அஞ்சுமுச்சந்தி' அயலில் எதற்கும் அஞ்சாமல் செறிவாக வாழ்ந்தும் வியாபாரம் நடாத்தியும் வந்தவர்கள்தான் சிறீ லங்காவின் யாழ் முஸ்லிம் மக்கள். இவர்கள் இந்தக் கட்டுரையின் தலைப்பான “அழிக்கப்பட்ட யாழ் பல்லினக் பல்கலாச்சார கட்டமைப்பின்” ஒரு பெரும் பங்கினை வகிப்பவர்கள். சிறீ லங்காவில் முஸ்லிம் மக்களின் சரித்திர பூர்வமான வரலாற்றை நான் முழுமையாகக் கற்கவில்லை. இக்கட்டுரையின் நோக்கம் எனது வாழ்வின் போது பார்த்தது, அறிந்தது, அனுபவித்தது என்பதனைப் பகிர்ந்து கொள்வதேயாகும். நான் பார்த்தும் அறிந்ததும் முஸ்லிம் மக்கள் சில இடங்களில் செறிவாக வாழ்ந்தாலும், சிறீ லங்காவின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்ந்திருக்கிறார்கள். சிறீ லங்காவின் எந்தப் பகுதியிலும், எந்தக் காலத்திலும், எந்த நேரத்திலும் துணிந்து தமிழ் மொழியில் உரக்கப் பேசுபவர்களும் முஸ்லிம் மக்களே. இவர்களது இருக்கை நிரந்தரமானதும் நீண்டகால வரலாறு கண்டதுமென நானறிவதுடன், பேச்சு மொழியில் சிறிது வேறுபட்டாலும், இவர்களது தாய்மொழி தமிழ்மொழிதான் என்பதனையும் அறிவேன். அஞ்சுமுச்சந்தி சார்ந்த யாழ் முஸ்லிம் மக்களைப் பற்றியும் தொடர்ந்த சரித்திரத்தையும் பற்றிப் பேச முன்பாக, யாழ் பிரதேசத்தின் முந்நாள் பல்லின பல்கலாச்சார கட்டமைப்பு பற்றிக் கூறியாக வேண்டும்.

தமிழ்ப் பிரதேசங்களில், வடக்கு, கிழக்கு இருபகுதிகளிலும், சிறீ லங்காவிலிருந்து பிரிவினை கோரிய அல்லது அதற்கு ஆதரவான பாரம்பரியத் தமிழ் மக்கள் மட்டும் வாழவில்லை. பிரிவினைக்கு மாறான கருத்துடன் வாழ்ந்தவர்கட்கும் வாழ்பவர்கட்கும் இக்கட்டுரை அக்கருத்தினை வலியுறுத்துவதாக அமையுமெனக் கருதுகிறேன். தமிழ்ப் பிரதேசங்களில், வடக்கு, கிழக்கு இருபகுதிகளிலும் முக்கிய நகரங்கள், உதாரணமாக வட பகுதியில், யாழ் நகர், வண்ணார்பண்ணை போன்ற இடங்கள் பல்வேறு மக்கள் வாழுமிடமாக இருந்திருக்கிறது. எவ்வாறு கனடாவில் ரொரன்ரோ நகர் பல்லின, பல்கலாச்சார நகராகத் திகழ்கிறதோ, அத்தனை தகுதிகளும் மேற்குறிப்பிட்ட தமிழ்ப் பிரதேச நகர்களுக்கும் இருந்திருக்கிறது. பலர், குறிப்பாக இந்நகர்களில் வாழ்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதவர்களும், இளைய சந்ததியினரும்  பாரம்பரியத் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் மட்டுமே தமிழ்ப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்ததாக கருதுகின்றனர். நானறிந்தவரை இற்றைக்கு 55 ஆண்டுகளுக்கு முன்பாக, எமது சிறுபிராயத்தில், எம்மோடு கல்வி கற்றோர், விளையாடித் திரிந்தோர், எமக்கு வியாபாரம் செய்தோர் பல்லின, பல்கலாச்சார மக்களே. ஒரு முக்கியமான விடயம், அவர்களில் ஒரு சிலருக்கு தாய்மொழி பிறமொழியாக இருப்பினும், அனைவரும் பேசியது தமிழ் மொழியே.

யாழ்ப்பாண முஸ்லீம் பகுதிஅக்காலத்தில் யாழ் நகரில் பாரசீகத்திலிருந்து வியாபாரத்திற்கு வந்து குடியேறி குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் தம்மை ஃபார்சி அல்லது சிந்தீஸ் என்று அறிமுகப்படுத்துவர். ஃபார்சி என்பது முந்நாள் பாரசீகம் (பேர்சியா – Persia) என்பதிலிருந்து வந்ததாகும். “சிந்த்” என்பது “சிந்து” எனும் “ஆறு” என்று அர்த்தப்படும் இந்துஸ் அல்லது சிந்துஸ் ஆற்றைக் கருதும்  சமஸ்கிருத வார்த்தையிலிருந்து தோன்றியது எனக் கூறப்படுகிறது.  சிந்தீஸ் எனும் இனத்தவர் இன்றைய பாகிஸ்தான் அமைந்த இடத்தினைச் சேர்ந்தவர்களெனவும் கூறப்படுகிறது. சிந்த் எனப்படும் இடம் முதலில் இந்து ராஜ்யமாகவிருந்து, பின்பு அரேபியரினால் 8ம் நூற்றாண்டளவில் கைப்பற்றப்பட்டதாகவும் அறியப்படுகிறது. அக்காலத்தில் வாழ்ந்த இந்துக்களாக இருந்த சிந்தீஸ் இன்றைய இந்தியா அமைந்த இடத்திற்கும் வேறுபல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தாகக் கூறப்படுகிறது. பாரசீகமும், அதாவது இந்நாள் ஈரானும், பாகிஸ்தானும் ஒரு பொதுவான எல்லையுடன் இருப்பதால் இந்த ஃபார்சி அல்லது சிந்தீஸ் எனும் இரு அறிமுகமும் அவரவர் வம்சாவழிப்படி ஏற்றுக் கொள்ளக் கூடியது எனலாம். உலக வரைபடங்களில் கோடுகளிட்டு எல்லைகள் காண்பிக்கப்பட்டாலும் அதையும் தாண்டி மனித இனமும், மொழியும், கலாச்சாரமும் பரஸ்பரம் பரிமாறப்பட்டு வந்தவையே. பறவைகளே காலத்துக்குக் காலம் தம் இரு சிறகுகைள நம்பி கண்டம் விட்டுக் கண்டம் அலை அலையாகப் பறந்து செல்வதாக அறிந்திருக்கிறோம். மனிதர்களிடம் அத்திறமையின் சிறிதளவையாவது காணமுடியாதா என்ன?

ஃபார்சி அல்லது சிந்தீஸ் என அறிமுகமானவர்கள் மிகவும் அழகான சரும நிறமும், தோற்றமும் கொண்டவர்கள். இஸ்லாமிய மதத்தவர் போன்று நோன்பு கடை பிடிப்பது, பெண்கள் மருதாணி அணிவது போன்ற கலாச்சாரம் அவரிடையே  இருந்தது. அந்நாள் பேர்சியா இந்நாள் ஈரான் ஆகியதால், இவர்களைத்தான் நாம் கனடாவில் ஈரானியர் என்று அறிந்து கொள்கிறோம் என நினைக்கிறேன். இப் ஃபார்சி அல்லது சிந்தீஸ் மக்கள் அதிகமாக வட இந்திய நாகரீகப் புடவை மற்றும் அழகுசாதனைப் பொருள்களை, டயறம்ஸ், ரொலரம்ஸ் போன்ற பெயருள்ள கடைகளில், வியாபாரம் செய்து வந்தனர். அக்கடைகள், ஏனைய யாழ் வியாபாரங்கள் அல்லாத இடத்தில் அமைக்கப்பெற்று, ஒரு சிறிய, கனடாவில் அமைந்துள்ள The Bay போல் காட்சியளிப்பன என எனது நண்பி கூறியிருந்தார். இவர்கள் வட இந்தியாவுடனான தொடர்புள்ளவர்கள். டயறம்ஸ், ரொலரம்ஸ் கடை உரிமையாளரினதும், அவரது உறவினரதும் பிள்ளைகள் நான் கல்வி கற்ற கல்லூரியான வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் கல்வி கற்றனர். இம்மாணவியர் வேறுசில முஸ்லிம் மாணவியர் அணிவது போல பாடசாலை வெண்சீருடையுடன் வெண் பஜாமாவும் மேலே போர்த்திக் கொள்ளும் பர்தாவும் பாடசாலைக்கு அணிந்ததில்லை. எம்மைப் போலவே உடை உடுத்திவருவர். இவர்கள் யாழ் நகரில் வசதியாக வாழ்ந்து வந்தனர்.

யாழ் பஸ் நிலையத்திற்கு அருகில், ராணி தியேட்டருக்கு வலப்புறமாக முஹமத் அலி அப்துல் அலி ஸ்ரோர் என்று ஒரு பலசரக்கு வியாபாரம் நடாத்தப்பட்டது. பெயர்ப் பலகை அவ்வாறாயினும் பொது மக்கள் அதனை இஸ்மயிலி (Ismailee) ஸ்ரோர்  அல்லது E.A.பாய் கடை என்றே குறிப்பிடுவர். அக்கடை நடாத்தியவர்களையும் அவரோடு இணைந்தவர்களையும் இஸ்மயிலிஸ் அல்லது பாய்ஸ் எனக் குறிப்பிடுவது வழமையாயிற்று. கடை சிறியதாக இருந்தாலும் அங்கு இல்லாத பொருள் எதுவும் இல்லையென்றே கூறலாம். பொது மக்களுடன், உள்ளூர் கடை வியாபாரிகளும் இங்குதான் தமது கொள்வனவைச் செய்வார்கள். முனீர்ஸ் என்றழைக்கப்பட்ட புடவை வியாபாரம் போன்றன, பாய்ஸினால் நடாத்தப்பட்டது. அச்சில வியாபார நிறுவனங்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சைக்கிளில் கட்டிய புதிய துணி, புடவை மூட்டைகளுடன் தமது வியாபாரப் பிரதிநிதிகளை வீடு வீடாக அனுப்பி வைப்பனர். இந்த முறை இந்தியாவில் இன்னும் நடைமுறையில் உள்ளதாக அறிகிறேன். ஆண்கள் வெண்ணிற பஜாமாவும் நீண்ட மேலங்கியும், எப்போதும் தடித்த நூலினால் பின்னப்பட்ட அல்லது துணியினாலான தலையோடொட்டிய தொப்பியும் அணிந்திருப்பர். பஜாமாவென்பது காலோடு ஒட்டியிராது, தொள தொளவென்று இருக்கும். இவர்களில் அநேக சிறுவர், யாழ்ப்பாணத்தின் பெரிய பாடசாலைகளில் கல்வி கற்றனர். இவர்கள் ஆஸ்பத்திரி வீதியில் வேம்படி பாடசாலைக்குப் பின்பாக இருந்த அழகான வெண்ணிற மசூதிக்கு தொழுகைக்குச் செல்வர். இம்மசூதி இஸ்மயிலிஸ் அல்லது பாய்ஸ்க்குப் பிரத்தியேகமானது என அறியப்பட்டது. மதிய நேர தொழுகையின் போது மசூதியிலிருந்து வரும் ஒலியிலிருந்து, இவர்களில் கணிசமான தொகை வாழ்ந்திருப்பாரென ஊகிக்கலாம். இவர்களுக்கு கனடாவில் வாழும் முஸ்லிம் அல்லாத இருபிரிவினருடன் தொடர்பு இருக்குமோ என எண்ணி, சில விடயங்களைப் பகிர முன்வந்துள்ளேன்.

கனடாவில் ப(b)ஹாய் எனும் மதம் (Religion) என்று கூறுவதைவிட நம்பிக்கை (Faith)குழுவைச் சேர்ந்தவர்கள் உளர்.  ப(b)ஹாய் நம்பிக்கை உலகெங்கும் பரவலாய் கடைப்பிடிக்கப் படுகிறது. நான் அறிந்தவரை இந்நம்பிக்கை உள்ளவர்கள் ஒரு கடவுளை முதன்மைப்படுத்தி வணங்குவதை விடுத்து, நல்ல வாழ்க்கை முறையைக் கைக்கொள்வதை மையமாக வைத்து இயங்கி வருகிறார்கள். ப(b)ஹாய் என்பது  பாய்ஸ் கடை என அழைக்கக் காரணமானதோ எனத் தோன்றுகிறது. ஆனால் ப(b)ஹாய் நம்பிக்கை குழுவினர்  தொழுகையில் ஈடுபடுவதைவிட கூட்டங்கள் நடாத்தி, நல்ல விடயங்களைப் பேசி, சிறிது நேர ஜெபத்தில் ஈடுபட்டு, உணவருந்திக் கொண்டாடுபவர். இவரது வழிபாட்டு ஸ்தலங்களில் கிறிஸ்தவ தேவாலயம் போல் உட்காருவதற்கு வாங்கில்கள் அமைந்து இருக்கும். இஸ்வாமியரின் நோன்பு நாட்களல்லாது வேறு சில நாட்களில் நோன்பிருப்பவர்கள். முக்கியமாக தமது கூட்டங்களையும் வழிபாட்டு ஸ்தலங்களையும் எந்த நாட்டவரும், மதத்தினரும் வரலாம் பங்கு பற்றலாமென திறந்த கதவுடன் வரவேற்பவர்கள். நான் இன்றுவரை ப(b)ஹாய் நம்பிக்கை குழுவினராகச் சந்தித்தவர்கள் கட்டிடக்கலை நிபுணர், பொறியியலாளர், சட்டத்தரணி, வைத்தியத்துறையில் வேலை பார்ப்பவரென ஏதோவொரு தொழில்துறையில் ஈடுபட்டவரே தவிர, சிறீ லங்காவில் வாணிபத்தில் ஈடுபட்டவர் போல் எவரையும் சந்திக்கவில்லை. சாதாரணமாக எவ்வேளையும் அணியும் உடையைத்தான் அணிந்திருப்பதையும் கண்டேன். அதற்கு நான் தற்போது வாழும் இடமும் காரணமாக இருக்கலாம். சந்தித்தவர்களில் ஈரானிய நாட்டுத் தொடர்புடையோரின் எண்ணிக்கை அதிகம். சிறீ லங்காவில் பிறந்து வளர்ந்து, இந்து மதத்தைக் கடைப்பிடித்துப் பெரியவராகி ப(b)ஹாய் நம்பிக்கை குழுவில் இணைந்து கொண்ட தமிழர் ஒருவரையும் சந்தித்துள்ளேன்.

அதேவேளை கனடாவில் ஆகாகான் என்பவரைத் தலைவராக ஏற்று வாழ்ந்து வருபவர்கள், தம்மைச் சீர்திருத்தமடைந்த (Reformed) முஸ்லிம்கள் என்று வகைப்படுத்துபவர்கள். அதிகமாக கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து இடி அமீன் காலத்தில் வந்தவர்களும் இஸ்மயிலிஸ் என்றே அழைக்கப்படுகின்றனர். இவர்களில் அனேகர் தற்போதைய கனேடியப் பிரதமரின் தந்தை பியர் எலியட் ட்ருடோ  பிரதமராக  இருந்த காலத்தே இடி அமீன் ஆட்சியிலிருந்து விடுதலை பெற வரவழைக்கப்பட்டோர். இவர்கள் இந்திய குஜராத் மரபைச் சார்ந்தவர்கள். ஆனால் இவர்களில் வெகுசிலருக்குத் தமிழ் புரியும். ஆகவேதான் எம் நாட்டில் வாழ்ந்த இஸ்மயிலி ஸ்ரோர் எனக் குறிப்பட்டவர்க்கும் கனடாவில் வாழும் இஸ்மயிலிஸ் என்பவர்க்கும் ஏதோ தொடர்பு இருக்கலாமெனவும் எண்ணத் தோன்றுகிறது. இவர்களில் பலர் எனது ஆரம்ப காலத் தோன்கிலிஃப் பார்க் எனும் இடத்து வாழ்க்கையின் போது அங்கு செறிவாக வாழ்ந்தவர்கள். இவர்களது வழிபாட்டு முறைகள் அதிகம் தெரிய வராவிட்டாலும் ஆண், பெண் இருபாலாரும் தமது வழிபாட்டு அல்லது தொழுகை ஸ்தலங்களுக்கு அடிக்கடி செல்வர் என அறிவேன். சில ஆண்கள் நமது நாட்டில் பாய்ஸ் உடுத்தியது போல  வெண்ணிற பஜாமாவும் நீண்ட மேலங்கியும் அணிந்து வழிபாட்டிற்குச் செல்வர். மதிய நேர வழிபாடு, மாலை நேர வழிபாடு எனச் செல்வதுடன் ஒவ்வொருவரும் தம்முடன் ஒரு சிறு தட்டிலே உணவெடுத்துச் சென்று, அங்கே அனைவருடனும் பரிமாற்றம் செய்து உண்பவர் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அத்துடன் வருமானம் பெறும் எவரும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஆகாகான் அமைப்பிற்குப் அளிப்பதனால், தமது சமூக நலன் திட்டங்களுக்கும், ஒரு புதியவர் வாழ்க்கையையோ அல்லது வியாபாரத்தையோ ஆரம்பிக்க உதவியாகவிருக்குமெனும் நடைமுறை ஒழுங்கில் இம்மதத்தையோ கொள்கையையோ கடைப்பிடிப்பவர்கள். தமது வயோதிபரை முடிந்தவரை அன்றாடம் தம் வழிபாட்டு ஸ்தலத்திற்கோ அல்லது வேறெங்கேனும் வெளியே செல்வதற்கு ஒழுங்குகள் செய்வதால், வயோதிபரின் வாழ்க்தைத் தரம் குன்றாதென நம்பிக்கை கொண்டு சமூகநல செயற் திட்டங்களை அமுல்படுத்துவோர்.

மேலே குறிப்பிட்டவற்றைப் பார்க்கும் போது, ஃபார்சி மக்கள் ப(b)ஹாய் நம்பிக்கை குழுவினருடன் தொடர்புடையவராகவும், இஸ்மயிலிஸ் அல்லது பாய்ஸ் எனக் குறிப்பிடப்பட்டவர் ஆகாகான் என்பவரைத் தலைவராக ஏற்ற  கனடாவாழ் இஸ்மயிலிஸ் உடன் தொடர்புடையவராகவும் இருப்பர் எனக் கருதத் தோன்றுகிறது.

மேற்குறிப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களில் பல்லின பல்கலாச்சார கட்டமைப்பில் சிங்கள மக்களும்  முக்கிய பங்கேற்றனர். முந்நாள் யாழ்நகர் பெரியகடை என்றால், பஸ் நிலையமும் அதனைச் சுற்றியிருந்த பல வியாபார ஸ்தலங்கள், சந்தை உட்பட அனைத்தும் அமையும். அவற்றல் சிற்றி பேக்கரி (City Bakery), இன்றைய நற்றமிழில் நகர் வெதுப்பகம், மிகவும் குறிப்பிடத்தக்கது. அது போன்ற பேக்கரியை தலைநகரான கொழும்பு அல்லது பெரிய நகரமான கண்டி போன்ற இடங்களிலே காணமுடியும்.  இதை நடாத்தியவர் சிங்களவர். இங்கே எனது தந்தைவழிப் பேத்தியார், சலரோக வியாதிக்கு உகந்ததென தவிட்டுப்பாண் வாங்குவார். இது நாம் கனடாவில் வாங்கும் Dark Rye Bread போல இருக்கும். சிறு சிறு பேக்கரிகள் யாழ்குடா நாட்டின் வேறு பகுதிகளில், சங்கானை, பண்டத்தரிப்பு போன்ற இடங்களில் ஊருக்கு ஒன்று மட்டுமே என இருந்தன. இந்த பேக்கரி வியாபாரத்தை திறம்பட நடாத்த, அந்த சிங்கள மக்கள் சிறிய அளவில் தமிழைக்கற்று உரையாடி வியாபாரம் செய்து வந்தனர். சிற்றி பேக்கரி வியாபாரமும் குறிப்பிட்ட தினங்களில் சைக்கிளில் வீடு வீடாகச் சென்று வியாபாரம் செய்வர். அதிகமாக பொலிஸ் உத்தியோகத்தில் அல்லது வேறு காவல் துறையில் சேவையாற்றியோர் பிள்ளைகளுக்காக சிங்களப் பாடசாலையும் அமைக்கப்பட்டது. ஆனைப்பந்திச் சந்தியிலே அமைந்த புத்தவிகாரை யாழ் நகரில் ஒரு முக்கிய ஸ்தானமாக இருந்தது. தமிழ் அரசியல் சிறிசிறிதாக மாற்றடைந்து எதிர்க்கட்சியாக மாறியதைத் தொடர்ந்தோ அல்லது வேறுகாரணங்கள் நிமித்தமோ அக்கால கட்டத்தில் சிற்றி பேக்கரியின் இருக்கையும் ஏனைய பேக்கரிகளின் இருக்கையும் இல்லாமல் அல்லது உரிமை கைமாறிப்  போயின.  

அடுத்து நாம் யாழ் பல்லின பல்கலாச்சார கட்டமைப்பில் முஸ்லிம்களின் பெரும் பங்கினை விவரிக்க முன்பாக சிறீ லங்காவின் மலேய் என்ற இனத்தினரின் வருகையையும் இருக்கையையும் பற்றி அவதானிக்க வேண்டியது அவசியம். அண்மையில் நண்பர்களுக்கிடையே பரிமாறப்பட்ட மின்னஞ்சலொன்று சிறீலங்காவின் மலேய் இனம் பற்றி சில முக்கிய தகவல்களை அளித்தது. தென்கிழக்காசியாவின் அனைத்து மலேய் தீவுகளின் (Malay Archipelago) வம்சாவழியினராக வாழ்பவர்கள் சிறீ லங்கா மலேய் என சிங்களத்திலும் இலங்கை (Ceylon) மலேய் என தமிழிலும் அறியப்படுகின்றனர். இவர்கள் ஜாவா மக்கள் (Javanese) என்றும் அறியப்பட்டுள்ளனர். ஜாவா என்பது இந்தோனேஷியாவிலுள்ள ஒரு முக்கியமான தீவும், இங்குதான் இந்தோனேஷியாவின் அதிகப்படியான சரித்திர நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன எனக் கூறப்படுகின்றது. இந்து-புத்த இராஜ்யங்கள், இஸ்லாமிய சுல்தான்களின் ஆட்சி, ஒல்லாந்தரின் (Dutch East Indies) காலனித்துவம் ஆகியனவற்றின் மத்திய இடம் இந்தத் தீவே என அறியப்படுகிறது. இந்தக் தீவில்தான் இந்தோனேஷியாவின் அதிகப்படியான மக்கள் வாழ்வதுடன், தலைநகரான ஜகாற்றாவும் (Jakarta) அமைந்துள்ளது.

இம் மலேய் இனத்தவர் ஒட்டுமொத்தமாக 40,000 வரையும், அவர்கள் சிறீ லங்காவின் சனத்தொகையின் 0.2 சதவீதமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது வம்சாவழியினர் முதலில் சிறீ லங்காவும், அதாவது முந்நாள் இலங்கையும், இந்தோனேஷியாவும் ஒல்லாந்தர் (Dutch) காலனித்துவத்தின் கீழ் இருந்தபோது வந்தவர்களென்று கூறுகின்றது. அதன்பின் இரண்டாவது முறை மலேய் வளைகுடாவிலிருத்து 1796 – 1948 இடைக்காலத்தில் மலேயா, இலங்கை இருநாடுகளும் பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழ் இருக்கும்போது வந்திறங்கினார்கள் எனவும் கூறுகின்றது. மலேய் இனத்தவரின் முக்கியமான இருக்கை 13ம் நூற்றாண்டிலிருந்தே, 1247ம் ஆண்டில் இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றிய காலமுதல், இருந்ததாகக் கூறப்படுகிறது. இம் மலேய் இனத்தவர் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து இருந்தாகவும் கூறப்படுகிறது.

அநேகமான இன்றைய  மலேய் இனத்தவரின் வம்சாவழியினர் ஒல்லாந்தரினால் போர்வீராக நியமனம் பெற்று வந்தவரெனவும், அதைத் தொடர்ந்து அவர்கள் சிறீ லங்காவில் பிரித்தானிய காலனித்துவ நிர்வாகத்திற்குப் பயன்படுத்தப்பட்டனர் எனவும், பின்பு அவர்கள் இங்கே தங்கிவிட்டனர் எனவும் கூறப்படுகின்றது. ஏனைய மலேய் குடிவரவாளர் குற்றவாளிகளாக அல்லது உயர்குடி மக்களாக இந்தோனேஷியாவிலிருந்து (former Dutch East Indies) சிறீ லங்காவிற்கு நாடு கடத்தப்பட்டவரெனவும், அவர்கள் இங்கிருந்து வெளியே செல்லவில்லை எனவும்  கூறப்படுகிறது. ஒரு சிறீ லங்கா மலேய் என்பவரது அறிமுகம், அவரது மலேய் மொழி, கடைப்பிடிக்கும் இஸ்வாமிய மதம், மற்றும் மலேய் தீவுகளின் பூர்வீகம் என்பவற்றை அடிப்படையானதானதாகும் எனவும் கூறப்படுகிறது.

இவர்கள் நோன்பு கடைபிடிப்பவர்கள். அநேக சிறீ லங்கா மலேய் இனத்தவர் போர்வீரர், அரசியல்வாதி, விளையாட்டு வீரர், சட்டத்தரணி, கணக்காளர், வைத்தியர் என்று பல தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. எனக்குத் தெரிந்தவரை இன்றைய சிறீ லங்கா மலேய் இனத்தவர் அநேகமாக தலைநகரான கொழும்பு, அதைச்சுற்றிய ஏனைய நகரங்களில் செறிவாக வாழ்வதுடன், வசதியாகவும் வாழ்பவர்கள். இவர்களுடைய பல்லின பல்கலாச்சார தற்போதைய அல்லது கடந்த 50-60 ஆண்டுகளுக்குள்ளான நேரடியான பாதிப்பு (influence – தாக்கம்) யாழ் பிரதேசத்தில் இல்லையென்றே கூறலாம். இருப்பினும் கடந்த காலங்களில் ஏற்பட்டவை இக்காலகட்டத்திலும் வழிவந்திருக்கின்றது என்றே கூறலாம். மேலே குறிப்பிடப்பட்ட மின்னஞ்சல், இந்த மலேய் மக்கள் எவ்வாறு முந்நாள் இலங்கை வரலாற்றில் உடை, உணவு, கலாச்சாரம்  என்பவற்றில் மாற்றங்களையும் நல்ல தாக்கங்களையும் ஏற்படுத்தினர் என்று அறியத்தரும் வீடியோ ஒன்றையும் இணைத்திருந்தது.

கிரிதரனின் ஆகஸ்ட் 11, 2017 பகிர்வில் கருத்துத் தெரிவிக்கையில் கலை மாக்ஸ் என்பவர் இந்தோனேஷிய மொழியும் மலேய் மொழியும் சிறிய வித்தியாசத்துடன் அமைந்தவை எனக் கூறியதுடன், இந்தோனேஷிய வம்சாவழியிரனது ஒருபகுதி தமிழராய் மாறிவிட்டதாகவும் கூறியிருந்தார். மேல் கூறியது போல் முந்நாளில் இந்து-புத்த ராஜ்யங்கள் இருந்ததுமல்லாமல், இன்றும் இந்து, புத்த சமய வழிபாடுகளின் அடையாளங்கள் இந்தோனேஷியாவில் வெளிப்படையாகத் தென்படுவதால், இந்து சமயத்தை சார்ந்த மலேய் இனத்தவர், மலேய் மொழியை விடுத்து தமிழ் மொழியை தம் முதன் (Primary) மொழியாக ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்பது நம்பத்தகுந்தது. இந்தோனேஷியாவில் மட்டுமே சமய வழிபாட்டுடன் அமைந்த படத்துடன், அதுவும் பிள்ளையார் படத்துடன், ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் உள்ளதென, இந்தோனேஷிய 20,000 ரூபாய் நோட்டுப் படத்துடன் மின்னஞ்சல்களும், முகநூல் பகிர்வுகளும் உலாவி வருகின்றன.

அடுத்து வருவது, சிறீ லங்காவின் முஸ்லிம் மக்களின் பல்லின பல்கலாச்சார பங்களிப்பு.  இவர்கள் ஆங்கிலத்தில் சிறீ லங்கா மோர்ஸ் (Sri Lankan Moors) என அறியத்தரப்படுவர். முந்நாளில் சிலோன் மோர்ஸ் (Ceylon Moors) எனவும், தமிழில் இலங்கைச் சோனகர் எனவும் அறியத்தரப்பட்டனர். மோர்ஸ் எனும் ஆங்கில வார்த்தை சிலேடையாக முஸ்லிம் எனக் கூறப்பட்டது என்கின்றனர். இதன் உண்மையை ஆராய முன்பாக, உலகளவில் இஸ்லாமிய மதத்தோரை இனம் கண்டு கொள்ளப்  பிரயோகிக்கப்படும் “முஸ்லிம்” எனும் அறிமுகத்தையே இக்கட்டுரையில் பயன்படுத்துகிறேன். இவர்கள் சிறீ லங்காவின் சனத்தொகையில் மூன்றாவது இடத்திலிருக்கும் இனத்தைச் சார்ந்தவர். பல சரித்திர வரலாறுகள் வாணிப நிமித்தம் அரபு நாடுகளிலிருந்து 8ம் - 15ம் நூற்றாண்டு கால இடைப்பகுதியில் வந்தவரெனக் கூறுகின்றன. இந்த சிறீ லங்கா முஸ்லிம் இனத்தவர் தமிழை முதன் மொழியாக, அரேபிய மொழியின் influence உடன் பயன்படுத்துகின்றனர். அவரது மொழிப் பாவனை பற்றி இவ்வாறு கூறும் விக்கிபீடியா (Wikipedia), முஸ்லிம்களின் அதிகப்படியான இருக்கை அம்பாறை, கொழும்பு, கண்டி, மாத்தறை மாவட்டங்கள் எனத் தெரிவித்துள்ளது. அது இன்றைய கணக்கீடு சார்ந்ததாக இருக்கும் என்பது வவெளிப்படை. தமிழைப் பிரதான மொழியாகக் கொண்ட ஒரு இனம் சிறீ லங்காவின் முக்கிய தமிழ்ப் பிரதேசமாகிய யாழ் வளைகுடாவில் செறிவாக இல்லையென வரலாறு கூறுமானால், ஒரு பேரளவிலான இனச்சுத்திகரிப்பு நடந்திருக்கிறதென தயங்காமல் கூறலாம். அதைவிட புத்தளம் மாவட்டத்தை குறிப்பிடாதது, தமிழ்-முஸ்லிம் வரலாற்றில் இன்னோர் முக்கிய கேள்வியையும் எழுப்புகிறது. அதுபற்றிய விபரங்கள் கட்டுரையின் பிற்பகுதிகளில் ஆராயப்படும்.

இக்கட்டுரையில் முன்பு கூறியது போல, வாணிப நிமித்தமோ அல்லது வேறு நிகழ்வுகள் காரணமாகவோ பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்நாளில் முஸ்லிம் என அழைக்கப்படும் இனத்தவர், முந்நாள் இலங்கைக்கும், அதைச் சூழவிருந்த பல நாடுகளுக்கும் பிரயாணம் செய்தும், ஆங்காங்கே ஸ்திரமாக வாழ்ந்தும் இருக்கிறார்கள் என்பது மறுக்கப்பட முடியாதது. முந்நாள் இலங்கையைப் பொறுத்தவரை, ஒல்லாந்தரினால் கொண்டுவரப்பட்ட மலேய் இனத்தவரின் நிரந்தர தங்கலுக்கு ஏற்கனவே இங்கு வாழ்ந்த முஸ்லிம்களும் காரணமாக இருந்திருக்கலாம். அதிலும்  மலேய் இனத்தவர் 1247ம் ஆண்டில் வடபகுதியைக் கைப்பற்றினர் எனவும், பின் தொடர்ந்தும் அங்கு வாழ்ந்தனர் எனவும் கூறப்பட்டது. ஆகவே வட பிரதேசம், குறிப்பாக யாழ் நகரும் அதன் சுற்று வட்டாரங்களும்  சிறீ லங்காவில் முஸ்லிம் மக்கள் அதிகப்படியாக வாழ்ந்த இடங்களே.  ஒரு காலகட்டத்தல் ஏற்பட்ட மிக மனக்கிலேசமான, மனக்கசப்பான, மனவருத்தத்தைத் தரும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்ட மறக்கமுடியாத பேரளவிலான இனச்சுத்திகரிப்பு, முஸ்லிம் மக்களின் அவ்விடங்களிலான வாழ்க்கைத்தடங்கள் சிலவற்றை மட்டும் விட்டுச் சென்றதுடன், பெருமளவிலான சிதைக்கப்பட்ட அடையாளங்களைக் காட்டுகின்றது. இவற்றைத்தான் ஐபீசீ காணொளி அஞ்சுமுச்சந்தியில் காண்பித்ததுடன், கிரிதரனும் தான் அனுபவித்ததையும், இழப்புகளினால் ஏற்பட்ட ஆதங்கத்தையும், மனவெதும்பலையும் தெரிவித்தார்.
ஐபீசீ காணொளி காண்பித்த சந்தியின் பெயர் எதுவாகும் என்பதும், அந்த சந்தியில் அமைந்த ஒரு உணவகத்தின் சரியான பெயர் எதுவென்பதும் கிரிதரன் பகிர்ந்து கொண்ட அனுபவங்களைத் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றங்களில் ஏற்பட்ட கேள்விகளாகும். சந்தியின் பெயர் முன்கூறியது போல அதன் அமைப்பை சார்ந்து ஏற்பட்டாலும், பொது மக்களின் சிலேடைப் பிரயோகம், அச்சந்தியின் பெயர் “அஞ்சுமுச்சந்தி” என நிலைநிறுத்திவிட்டது. கிரிதரனின் குறிப்பட்ட உணவகத்தின் பெயர்தான் என்ன “மொக்கன்” கடையா? “மொக்கங்” கடையா? ஹமீதியா கபேயா? என்பதே கேள்வியாக இருந்தது. சிறீ லங்கா ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன வானொலியின் பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் கூறும் பாணியில் “மொக்கொங் (Mokong)” கடை என்பதே சரியான பதில்.

கிரிதரனின் தனது கூகுள் தேடலில் பெற்ற விடயங்களை ஆகஸ்ட் 11, 2017 பகிர்வின் மூலம் தெரிவித்த சில விடயங்கள் இந்தக் கடையின் பெயரை நிலைநிறுத்தும் விடயங்களைக் கொணர்ந்தது. தேனீ இணையத்தளத்தில், தாயகம் (கனடா) ஆசிரியர் குருஷ்ஷேவ் “மொக்கங்” எனப் பாவித்தார் எனக் கூறப்பட்டது.  அதேவேளை புங்கையூரன் “ஹமீதியா கபே” என ஒரு கடை இருந்தது என்றாலும், அப்பெயரைச் சொன்னால் எவருக்கும் தெரியாது, “மொக்கன்” கடையென்றால் தெரியாத இளம் தலைமுறையே கிடையாது என்று அடித்துச் சொல்லியிருந்தார். அவர் மேலும் சில கருத்துக்களைத் தொடர்ந்து கூறியிருந்தார். அதையிட்டு அந்தக் கடையிலே ஆட்டு மூளை ஓடர் பண்ணி உண்பவர்கள் செல்வதால் மொக்கன் கடை எனப் பெயர் வந்திருக்கலாம், அங்கு மொக்கன்கள் சென்று மூளை வாங்கி உண்டு தம்மை புத்திசாலி ஆக்கியிருக்கலாம் என்றெல்லாம் விளையாட்டான கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்பட்டன. சுவி என்பவர் யாழ் இணையத்தளக் கருத்துக்களத்தில், அஞ்சுமுச்சந்தியில் ரொட்டி ரோஸ் என்றால் பிளவ்ஸ், பிட்டும் ஆனமும் என்றால் மொக்கங் கடை என்று கூறியிருந்தாராம். அந்த உணவகத்தின் பெயர் மொக்கன் கடை அல்ல என உடன்பட்ட வேளையில், பெயர் “மொக்கிங்” இல்லை “மொக்கங்” என்றெல்லாம் கருத்துப் பரிமாறப்பட்டது. “மொக்கங்” என்பதை அந்தக் கடையின் கொத்து ரொட்டிக்காகச் சென்ற கிரிதரன், பெயர்ப் பலகையில் பார்த்ததாக நினைவில் இருக்கறதென தனது பகிர்வில் கூறியிருந்தார். இருந்த போதும் கலை மாக்ஸ் (Kalai Marx) எனும் புத்திசாலி, பல நம்பத் தகுந்த விபரங்களைப் பரிமாறியிருந்தார். அவரது புத்திசாலித்தனம் அவர் பெயரிலிருந்துதான் வந்திருக்குமெனப் புரிந்து கொண்டேன். அவரது கருத்துப் பரிமாற்றத்தை வாசித்ததும், சந்தியின் பெயர் அஞ்சுமுச்சந்தி என நிலைநிறுத்திக் கொண்ட எனக்கு, “மொக்கங்” என்ற பெயருடன் அப்படியே நிலைநிறுத்திக் கொள்ள உடன்பாடில்லை. நான் வேறோர் நண்பர் மூலம் சிறீ லங்காவின் மலேய் இனத்தவர் பற்றி பெற்றுக் கொண்ட மின்னஞ்சலில் அறிந்த தகவல்களுக்கு ஒப்பீடான சில தகவல்களை கலை மாக்ஸ் பகிர்ந்திருந்தார். இத்தகவல்கள் சில சிறீ லங்காவின் மலேய் இனத்தவர் பற்றிய விபரங்களுடன் குறிப்பிடப்பட்டதுடன் சிறீ லங்காவின் முஸ்லிம்களுக்கும் மலேய் இனத்தவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்குமெனத் தோற்றியது. ஆனால் கலை மாக்ஸ் அந்தக் குறிப்பிட்ட கடையின் பெயர் இந்தோனேஷியாவில் ஒரு இடத்தைச் சார்ந்தது எனக் கூறியது, என்னை கூகுள் தேடலுக்கு உந்தியது. அதன் விளைவு இந்தோனேஷியாவில் ஜகற்றா (Jakarta) எனும் அதன் தலைநகரிலிருந்து 1197 கிலோமீட்டர் கிழக்கே “மொக்கொங் (Mokong)” என்றோர் இடமுள்ளது என அறிய உதவியது. “மொக்கொங்” எனும் பெயர் தமிழ் மொழிபெயர்ப்பில் “மொக்கங்” என்று மருவியிருக்கிறது எனத் திடமாகக் கூறலாம்.

இந்த ஒரு சிறிய உணவகத்தின் பெயர்ப் பின்னணியில் இருந்த வரலாற்றுச் சரித்திரமே இம்மாத்திரமென்றால், சிறீ லங்காவின் முஸ்லிம் மக்களின் வரலாற்றுச் சரித்திரமும், அவரது யாழ் மாவட்டத்தில் இருக்கையின் சரித்திரமும் அடையாளங்களும் எவ்வளவு பெரிதாக இருந்திருக்குமெனக் கூற வேண்டியதில்லை.

இந்த அஞ்சுமுச்சந்திக்கும் எமது குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. எனது தந்தையாரின் கம்யூனிஸ, சோஷலிச அரசியல் ஈடுபாடுகள் அஞ்சுமுச்சந்தியில் இருக்கும் அதிகமான முஸ்லிம் மக்களுடன் தொடர்புடன் வைத்திருந்தது. எனது தந்தையார் அந்த இடத்தை தேர்தல் ரீதியாக முஸ்லிம் தொகுதி (Muslim Ward) எனவே குறிப்பிடுவர். பிளவ்ஸ் எனும் உணவகத்தின் உரிமையாளர் ஒரு முற்போக்காளர்.  அந்நாட்களில் எனது தந்தை யாழ் இந்துக்கல்லூரியில் தனது கல்வித் தொழில் முடிந்ததும், ஒவ்வொரு நாளும் பாடசாலையிலிருந்து நேராகச் சென்று கட்சி வேலைகளும், அரசியல் வகுப்புகளும் பல இடங்களிலும் நடாத்துவது வழக்கம். அதில் ஓரங்கம் தான் இந்த அஞ்சுமுச்சந்தி செயற்பாடுகள். சுபைர் என்று அழைக்கப்பட்டு, இளங்கீரன் எனும் புனைபெயரில் வாழ்ந்த,  பிரபல எழுத்தாளரும், பேச்சாளரும், அக்காலத்தில், கம்யூனிஸ்ட் கட்சி பிரிவதற்கு முன்பாக, கட்சியில் ஒன்றாக இயங்கியவர். பிளவ்ஸ் எனும் உணவகத்தில் இச் செயற்பாடுகள் நடந்தன என அறியப்படுகிறது. சிலவேளைகளில்  எனது தந்தையாரும் வாழையிலையில் மடித்து 'சரை' செய்த உணவுப்பதார்த்தம் ஒன்றினைக் கொண்டு வந்திருப்பார். அவர் நேரங்கழித்து வருவதால் நாம் காலையில்தான் பார்ப்போம். அச் 'சரை' கறித்தூள்களும் வாசனைத்தூள்களும் போட்டு நன்கு பதனிடப்பட்டு  சிறு குத்தி குத்திகளாக வெட்டி றோஸ்ட் பண்ணிய மாட்டிறைச்சித் துண்டுகள். அது மேலே சுவி என்பவர் சுவையை அனுபவித்துக் கூறிய பிளவ்ஸ் ரொட்டி ரோஸ் மெனுவில் (Menu) அடங்குமோவெனத் தோன்றுகிறது. ஏனெனில் நான் கூறிய உணவை வேறு சிலர் ரோஸ் பிவ்  (Roast Beef) எனக் கூறக் கேள்விப்பட்டுள்ளேன். எமது தாயார் குடும்பம் பெரியதென்பதால் பல வேளைகளில் அதைச் சிறிய துண்டுகளாக வெட்டிக் கறி சமைப்பார். அக்காலத்தில் மாட்டிறைச்சி முஸ்லிம்கள் உண்பது என்றும், இந்துக்கள் உண்டால் அவர்களை ஏளனமாக அவமரியாதை செய்வதும் வழமையாகவிருந்தது. ஆகவே எனது தாயார் அன்றைய உணவு பற்றி அயலவரிடம் எதுவும் கூறவேண்டாம் என எச்சரிப்பார். ஏளனம் செய்வார்கள் எனப் பயந்த அயலவரின் ஆண்பிள்ளைகள் வளர்ந்த பின் தாமாக அஞ்சுமுச்சந்திக்கு சென்று இவ் உணவு வகைகளை ரசித்து ருசித்து புசித்து வந்ததை எம்மிடம் கூறினர்.

இதைவிட எமது பெற்றோரின் மூதாதையினரின் சொந்த  ஊர் வட்டுக்கோட்டை என்பதால், அங்கு எமது உறவினரிடம் பஸ் பிரயாணம் செல்லும் போது, நவாலியூடாகச் சென்றாலும் கல்லுண்டாய் வெளி தாண்டி அராலியூடாகச் சென்றாலும் இந்த  அஞ்சுமுச்சந்தியைத் தாண்டிச் சென்றேயாக வேண்டும். அவ்வேளைதான் இந்தச் சந்தியின் பரபரப்பையும், தன்னிச்சையான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நடைமுறைகளையும் காணக்கூடிதாயிற்று.

யாழ் நகர், வண்ணார்பண்ணைப் பகுதிகளிலிருந்த முஸ்லிம் மக்களில் அரபு நாட்டு மக்கள் போலல்லாது, ஆண்கள் சாரமும், ஷேர்ட் அல்லது ஷேர்ட் போன்ற மேலங்கியும், தொப்பியும் அணிவர். இந்த தமிழில் “சாரம்” என்பது “சறங் (sarong)” என மலேய் இனத்தவரால் அறிமுகப்படுத்தப்பட்டு, “சறம” என அழைக்கப்பட்டு சிங்களவரில் ஆண், பெண் இருபாலாராலும் அணியப்படுகிறது. சில முஸ்லிம் ஆண்கள் பாய்ஸ் அணிந்தது போல் பஜாமா, நீண்ட மேலங்கி என்பவற்றையும் அணிந்தனர். சிலர் வைபவ நாட்களில் அவ்வாறு அணிந்ததாகத் தென்பட்டது. தொப்பியெனக் கூறப்படுவது, பாய்ஸ் அணிந்தது போல தடித்த நூலினால் பின்னப்பட்ட அல்லது துணியினாலான தலையோடொட்டியது அநேகரால் அணியப்பட்டது. அவ்வாறு தொப்பி அணியாதோர் அவசியமேற்பட்ட வேளையில், குறிப்பாக தொழுகைக்குச் செல்லும் போதும், மரணச்சடங்குகளிலும் கைக்குட்டையை தலையில் தொப்பி போல் கட்டிக் கொள்வர். இந்தக் கலாச்சாரம் கனடா வாழ் முஸ்லிம் மக்களிடம் மட்டுமல்ல, சீக்கிய வம்சாவழியினரிடமும் இருப்பதை அனைவரும் கண்டிருப்பர். இருப்பினும் சில  வடபிரதேச முஸ்லிம் ஆண்கள் மலேய் மரபில் வந்த “குல்லாய்” எனப்படும் தொப்பியை அணிவர். காலஓட்டத்தில் குல்லாய் அணிபவரின் எண்ணிக்கை குறைந்து வந்திருக்கறது. சிறீ லங்கா மோர்ஸ் என்பவர்கள் பாடப்புத்தகங்களிலும் வேறு  ஆவணங்களிலும் இக் குல்லாய்களுடனேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த இருவகைத் தொப்பிகளும், உடை முறைகளும் வடபிரதேச முஸ்லிம் மக்களுக்கு மலேய் இனத்தவருடனும் பாய்ஸ் இனத்தவருடனும் நெருக்கமான உறவு இருந்தது என்பதை உணர்த்துகிறது. இந்திய சீக்கிய வழக்கங்களும் அவற்றில் நுழைந்துள்ளன என அவதானிக்கலாம்.

பல முஸ்லிம் பெண்கள் சேலையணிந்து, தாவணியைத் தலையை மறைத்து மொட்டாக்காக அணிந்திருப்பர். சில பெண்கள் ஷல்வார் கம்மீஸ் (Shalwar Kameez) எனும் நீண்ட சட்டையும், பஜாமாவும் அணிந்து, ஒரு சால்வையை இரு தோள்களையும், தலையையும் மறைத்து அணிவர். இந்த உடை அந்நாளில் பஞ்சாபி உடையென்றும் குறிப்பிடப்பட்டது. அதாவது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெண்கள் அம்மாதிரியான உடையையே அதிகம் அணிவர். மீண்டும் சீக்கியர்கள் செறிவாக வாழும் பஞ்சாப் மாநிலத்துடன் முஸ்லிம் மக்களுக்கு ஒரு ஒருமைப்பாடு தோன்றுகின்றது. பாகிஸ்தானிலும் ஒரு பஞ்சாப் மாநிலம் இருப்பதாக அறிகிறேன். ஆண்கள் போலவே தொள தொள என்று காலுடன் ஒட்டாத பஜாமா, அதிகவேளைகளில் தரையிலேயே உட்கார்ந்து காரியமாற்றுவதற்கு உதவியாகவிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. அதே போன்று ஆண்களும் தொழுகையின் போது முழங்காலில் மண்டியிட்டுத் தொழுவதற்கு வசதியாயிருக்கமென எண்ணத் தோன்றுகிறது. இருப்பினும் இந்த உடைமுறை தற்போது அதன் வசதி கருதியும் வேறு காரணங்களுக்காகவும், வெவ்வேறு வடிவங்களிலும் நாகரீகத்துடனும் இந்திய பிராந்தியங்களில் மட்டுமல்லாது, யாழ் பிரதேசத்தில் தமிழ்ப்பெண்கள் மத்தியில் பரவலாக உள்ளது. அதற்கேற்ப வேறு பெயர்களிலும் குறிக்கப்படுகிறது.

யாழ். பிரதேச முஸ்லிம்கள் வியாபாரத்தை விட, வேறு பலவகையிலும் அப்பிராந்திய செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும் அந்நாளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அவ்வாறு ஈடுபட்டனர். மர்கூ(h)ம் எம். எம். சுல்தான் என்பவர் 1955ம்  ஆண்டு யாழ்  மாநகரசபை மேயராகத் (முதல்வராகத்) தெரிவு செய்யப்பட்டுக் கடமையாற்றியவர். அவ்வேளை எனது தந்தையாரும் யாழ் மாநகரசபை கவுன்சில் அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டார். மர்கூ(h)ம் எம். எம். சுல்தான் என்பவர் மேற்கூறப்பட்ட குல்லாய் அணிபவர். அவரது பெயர் சுல்தான் என்று இருப்பது, இவர் இந்தோனேஷியாவின் சுல்தான் ஆட்சியாளரின் வம்சாவழியினரெனத் தோன்றுகிறது. ஆகவேதான் யாழ் பிரதேச முஸ்லிம்கள் பல வழிகளிலான வம்சாவழித் தொடர்புடையவர்கள் என்பது வெளிப்படையாகிறது. சுல்தான் என்பவரின் புதல்வன் ஒருவர் தற்போது கனடாவில் வாழ்கிறார்.

முஸ்லிம் மக்களிடையேயும் வசதி படைத்தோர், வசதி குறைந்தோர் என பலவிதமான வாழ்வாதாரங்களுடன் இருந்தனர். அஞ்சுமுச்சந்தியில் வாழ்ந்தவர் அதிகம் வசதி குறைந்தோர் என்றுதான் கூறலாம். மருதூர்க்கனி எனும் ஆசிரியர் கிழக்கு மாகாணத்தில் மருதமுனை எனும் இடத்தில் வாழ்ந்தவர். கம்யூனிஸ்ட் கட்சியில் ஒன்றாக இயங்கிய முஸ்லிம்களில் ஒருவர். 1970களில் அரசியல்  வகுப்புகளுக்காக மருதமுனையிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர். தொழிற்சங்கப் போராட்டங்கள், தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் எனக்  கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக செயற்பட்ட வேளையில், யாழ்ப்பாணம் சோனகதெருவிலும் கட்சி கால்பதித்து வளர்ந்து இருந்தது என்றார். அதை மருதூர்க்கனி அவர்கள் தடுக்கி விழுந்தால் ஒரு முஸ்லிம் தோழரின் காலில் விழக்கூடியதாக அன்று நிலைமை காணப்பட்டது என்று எனது தந்தையாரின் நினைவுமலரில் கூறியிருந்தார். யாழ் முஸ்லிம் தோழர்கள் தமிழ் - முஸ்லிம் ஒற்றுமைக்கு ஆற்றிய பணியை மறக்க இயலாது எனவும் கூறியிருந்தார். ஆயினும் அரசியல் வழிகாட்டலில் ஆயுதம் வழி காட்டிய  இனவாதத்  தலைமைத்துவம் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இனச்சுத்திகரிப்புச் செய்த கறைபடிந்த வரலாற்றையும்  முஸ்லிம்கள் மறக்கவில்லை எனக்கூறியிருந்தார். ஏ. இக்பால் எனும் ஆசிரியர் கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்றில் வாழ்ந்தவர் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒன்றாக இயங்கிய யாழ் முஸ்லிம் ஒருவர் என்றும்,  முஸ்தாபா(f)எனும் முஸ்லிம் ஆசிரியர் முஸ்லிம் ஒருவர் ஆசிரிய சங்கத்தில் இயங்கியவர் என்றும் ஒரு தமிழ் வயது முதிர்ந்த கட்சியாளர் கூறியிருந்தார்.

நான் கல்வி கற்ற வேம்படிப் பாடசாலையில் ஓரிரு முஸ்லிம் ஆசிரியைகளே கடமையாற்றினோர். அநேகமாக யாழ் பிரதேசத்தில் கல்வி கற்ற முஸ்லிம் மக்கள் பின்தங்கிய இடங்களிலிருந்த முஸ்லிம் மாணவர் அதிகமாக இருந்த பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக அனுப்பி வைக்கப்பட்டனர்.  கல்வியென்பது முஸ்லிம் மக்களிடையே பின்தங்கியிருந்தது, அவர்களுக்குத் தேவையான பாடசாலை வசதிகளும், ஆசிரியர் வசதிகளும் மிகவும் அருமை பெருமையாக இருந்ததே காரணம் . இருப்பினும் நான் 35  வருடங்களுக்கு முன்பாக கனடாவில்  வான்கூவரில்  வந்திறங்கிய  போது  எனது  வைத்தியர் Junaid எனும் சிறீ லங்கா முஸ்லிம் ஒருவர்தான்.  கனடாவில்  முதன் முதலாக அரசியல் தேர்தலில் இறங்கிய சிறீ லங்கா நாட்டவர்  அலவி  மொகிடின் (Alawi Mohideen) எனும்  முஸ்லிம் ஒருவர்தான்.  இவர் 1990 ஆண்டளவில்  ஒன்ராறியேர மாநிலத்தில்  என். டி.பி. கட்சியில் கனேடியத் தேர்தலில்  நின்றவர்.  சிறீ லங்காவில் சில அரசியல் மாற்றங்கள் படிப்படியாக முஸ்லிம்களினதும், வேறு சிங்கள-தமிழ்ப் பகுதிகளினதும் கல்வியில் பின்தங்கிய நிலையினை மாற்ற எடுத்த முயற்சியே தரப்படுத்தல் என்று தலையெடுத்து, சிங்களவரும் தமிழரும் மாறி மாறித் தலைகளை எடுக்கும் போராட்டமாக வெடித்து மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்தது. இவற்றின் நடுவே முஸ்லிம் மக்களும் காலத்துக்குக் காலம் போரினாலும் இயற்கை அழிவினாலும் ஏற்பட்ட உள்ளூர் இடம்பெயர்வு, அகதி முகாம்களில் வாழ்வென காலம் கடத்தியுள்ளனர்.

ஆனாலும் 1990ம் ஆண்டு ஒக்ரோபர் 30ம்  திகதி தமிழீழ விடுதலைப் புலிகளினால் யாழ் பிரதேசத்திலிருந்து, அஞ்சுமுச்சந்தியில் வாழ்ந்த 70,000 வரையான முஸ்லிம் மக்கள், காரணம் ஏதும் கூறப்படாமல், வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு,  அவர்களைப் புத்தளம் மாவட்டத்தில் தஞ்சம் கோர வைத்தது, மனிதாபினம் உள்ள எவருக்கும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இது உலக அரங்கிலே பகிரங்கப்படுத்தப்பட்ட நிகழ்வாக முடிந்தது. தம்மை வெளியேற்றியதற்குக் காரணம் என்ன என்று மாத்திரம் கூறும்படி இடம் பெயர்ந்த முஸ்லிம் பெண்  ஒருவர் கேட்டதைத்  தொலைக்காட்சியில்  பார்த்தது  இன்று  போலுள்ளது. அதைத் தொடர்ந்து  சரியாக இருபத்தியேழு  ஆண்டுகள்  கடந்து விட்டன. முன்பு இலங்கை அரசு எவ்வாறு பல்லின பல்கலாச்சார மக்களை இருந்த இடம் தெரியாது அப்புறப்படுத்தியதோ, அந்தத் பின்னணி அளித்த தைரியமோ என்னவோ, அதே போன்ற முயற்ச்சி துப்பாக்கி முனையில் உள்நாட்டுக்குள் நிறைவேற்றப்பட்டது. இது எவ்வாறு நடந்திருக்கும் என்பதை தற்போது மியன்மார் (Myanmar) நாட்டவரான ரொகின்கியா (Rohingya) மக்களின் அனுபவத்திற்கு ஒப்பிடலாம். எம். ஏ. சி. இக்பால் எனும் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒன்றாக இயங்கிய யாழ் முஸ்லிம் ஒருவர், எனது தந்தையாரின் நினைவுமலரில் யாழ் முஸ்லிம்களையும் இதரபகுதி முஸ்லிம்களையும் யாழ் மாவட்டத்தை விட்டு  அவர்களின் சகல உடமைகளையும் பறித்துக்கொண்டு  வெளியேற்றிய நிகழ்ச்சி  இடம்  பெற்ற போதும், தமிழ்  மக்கள் மேல் யாழ் முஸ்லிம்களுக்கு வெறுப்புணர்வு  ஏற்படாது தடுத்துவிட்டவற்றில் மிக முக்கியமான விடயம்,  மர்கூ(h)ம் எம். எம். சுல்தான் அவர்களை முதல்வராக்கியது என்றால்  மிகையாது என எழுதியிருந்தார். இக்பால் என்பவர் கூறியது தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எல்லாம் முடிந்த பின் வெகுகாலம் தாழ்த்தி தமிழீழ விடுதலைப் புலிகள் மன்னிப்புக் கோருவதாக விட்ட  அறிக்கையினை விட  பல மடங்கு  பெருந்தன்மையானது. எது எவ்வாறானும் சிலவற்றை  மன்னிக்க முடியும், ஆனால் மறக்க முடியாது. இந்தக் குடிபெயர்ப்பினால்தான் அண்மைக்காலக் கணக்கெடுப்பின்படி, சிறீ லங்காவில் முஸ்லிம் மக்களின் அதிகப்படியான இருக்கை யாழ் மாவட்டத்தில் பதியப்படவில்லை. புத்தளம் மாவட்டத்தில் பதியப்படாதது ஏன் என்பது புரியவில்லை. இடம் பெயர்க்கப்பட்ட முஸ்லிம் மக்கள், பின்பு இடம் மாறி வேறு இடங்களுக்கு அல்லது புலம் பெயர்ந்து வேறு நாடுகளுக்குச் சென்றார்களா என்பது தெரியவில்லை. அஞ்சுமுச்சந்தி சுற்று வட்டாரத்தில் பல சிதைக்கப்பட்ட அல்லது சிதைந்து போன வீடுகளை ஐபீசீ காணொளியில் பார்க்க முடிந்தது.  காணொளி அறிவிப்பாளர் பெண்மணி இடம்பெயர்ந்து சென்றவர்களின் பிள்ளைகள் வளர்ந்து பெரியவராகி வேறு இடங்களில் நிரந்தரமாகத் தங்கிவிட்டதால், இங்கு திரும்பி வரவிரும்பாமலும், இங்குள்ள நிர்ப்பந்தமாக விட்டுச் சென்ற சொத்துக்களில் ஆர்வம் காட்டாமலும் இருக்கலாம் என அறிவித்தார். இது ஒரு நியாயமான காரணமென என்று ஏற்று இவ்விடயத்தைத் தட்டிக் கழிக்க முடியாது. சிறீ லங்காவின் போர்ச்சூழல் காரணமாக பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து நிரந்தரவாசிகளான தமிழர், பிரிவினைக்கு ஆதரவாக தமிழீழ விடுதப் புலிகளின் கூட்டங்களில் பங்கு பற்றியோர் உட்பட, போர் நிறுத்தம் ஏற்பட்டதும் சிறீ லங்காவில் தத்தம் முந்நாள் வாழ்விடங்களுக்குச் சென்று, தமது வீடுவாசல்களைத் தூசு தட்டிச் சுத்தப்படுத்தியும், அதைச்சுற்றி வேலிகள் கட்டி எல்லைகளைப் பாதுகாத்தும் வந்துள்ளனர். இவ்வாறான பயணத்தோடு  சிறீ லங்கா நாட்டில் சுற்றுலாச் சென்று வந்தவர்களும் உளர். நிலைமை இவ்வாறிருக்கும் போது, உள்நாட்டில் போரினால் இடம் பெயர்ந்தோர் மட்டும், தமிழர் உட்பட, தாம் இழந்தவற்றைக் கோர முடியாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கும். முதலாவதாக நிர்ப்பந்தமான இடப்பெயர்வினால் ஏற்பட்ட ஆறாத மனவலியும், அதைத் தொடர்ந்த மனநிலை பாதிப்புகளும் அக்குடும்பத்தினரை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் தடுத்திருக்கும். சிறீ லங்கா அரசின் சட்டதிட்டங்களும், இன்னும் ஆங்காங்கே தொடரும் உள்ளூர் கெடுபிடிகளும், அதைவிட போர்க்காலச் சலுகைகளைப் பயன்படுத்தியோரும் இந்நாளில் வெளிநாட்டிலிருந்து தாயகத்தில் Real Estate வியாபாரம் நடாத்துவோரும் என பல காரணங்கள் தடுத்து வைத்திருக்கும். கிரிதரனும் நானும் திட்டமிட்டு இக்கட்டுரையை ஆரம்பிக்காத போதும் எதேச்சையாக ஒக்ரோபர் மாதம் வந்தமைந்துள்ளது. வாசகர்கள் தயவு செய்து இம்மாதம் ஒக்ரோபர் 31ம்  நாள் உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், அயலவர்கள், நண்பர்களுடன் Halloween தினத்தைக் கழிக்க முன்பாகத் தமிழர் யாழ் முஸ்லிம் மக்களின் வாழ்விடங்களை பேய் குடி கொள்ளும் பாழிடங்கள் போலாக்கியதை ஐபீசீ காணொளியிலும்,  ஒக்ரோபர் 30ம்  திகதி யாழ் முஸ்லிம் மக்கள் எவ்வாறு பெருந்துயருடன் பயணித்திருப்பார்கள் என்பதை மியன்மார் நாட்டவரான ரொகின்கியா மக்களின் நாடுகடந்த இடப்பெயர்வினைக் காட்டும் காணொளிகளிலும் பாருங்கள்.

கனடாவில் பல ஆண்டுகளுக்கு முன்பாக நிர்ப்பந்தமாக குடும்பங்களிலிருந்து பிரித்து தங்குமிட பாடசாலைகளுக்கும் (Residential Schools),வளர்ப்புப் பெற்றோர் (Foster Parents) வீடுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்ட ஆதிகுடிவாசிகளின் (Indigenous) பிள்ளைகளின், குழந்தைகளின் சரித்திரங்களும் கதைகளும் இன்றுதான் பேசப்படுகின்றன. ஆதிகுடிவாசிகள் அக்கால தாமதத்திற்காகக் கூறும் காரணம் தமது மனவலியினை இந்நாள்வரை ஆறப்போட (let to heal)வேண்டியதாக இருந்தது என்பதாகும். அதில் எவ்வளவோ உண்மையுள்ளது. அன்று சிறுவராயிருந்தவர் சிலர் இன்று வயோதிபராயும் கிட்டத்தட்ட 60 வயதிற்கு மேற்பட்டவராயும் இருப்பதைக் காணலாம். இந்த இடைக்காலத்தில் அவரது வாழ்வின் இழப்புகளும் அதிகம்தான்.

அதேபோல்  ஆதிகுடிவாசிகள் வாழ்ந்த பிரதேசங்களைச் சுவீகரித்துத் தமதாக்கிக் கொண்ட வெள்ளையர்கள் அதை நடாத்தும் முறையினைக் கண்டு மனம்வெதும்புவர். வாசகர்கள் முக்கியமாக நோக்க வேண்டியது என்னவெனில் “ஆதிகுடிவாசிகள் வாழ்ந்த இடங்கள்” என்றுதான் குறிப்பிட்டேன் “ஆதிகுடிவாசிகளுக்கு உரிமையான பிரதேசங்கள்” என்று கூறவில்லை. அதன் காரணம் ஆதிகுடிவாசிகளின் மதிக்கக்கூடிய வாழ்வியல் நம்பிக்கையே. அவர்கள் நம்புவது அதில் வாழும் உயிரினங்கள், மனிதர் உட்பட, இந்த நிலத்திற்கு உரிமையானவர்கள் (we belong to the land). இந்த நிலமும் நீரும் ஆகாயமும் உயிர் வாழ்வனவற்றை வாழ வைக்கின்றன. ஆகவே தமது கடமை இந்த நிலத்தையும் நீரையும் ஆகாயத்தையும் பாதுகாப்பதேயல்லாது, உரிமை கோருவதல்ல என்று கூறுவர். தமக்கும் ஏனைய நீர்-நிலம் வாழ் உயிரினங்களுக்கும் கூட நட்பான உறவு நிலவும் நம்பிக்கையுடன் வாழ்பவர்கள். இந்த நிலப்பரப்புகளும் அதிலுள்ள நீர்வளங்களும் அவற்றைச் சுற்றியிருக்கும் ஆகாயமும் மாசு படுத்தப்படாமல் இயற்கையோடு வாழ்ந்தவர்கள். அதனால்தான் பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தல் இவற்றை மாசு படுத்துமெனக் கண்டால் எதிர்ப்புத் தெரிவிப்பதில் முன்னோடியாக இருப்பர். தற்காலத்தில் ஆதிகுடிவாசிகள் செறிவாக வாழுமிடங்களில், தனித்தனியே வீடுகள் இருந்தாலும் அவற்றிற்கிடையே வேலிகளில்லை. அவர்களிடம் நாம் மனிதர்களாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம்.    

உசாத்துணை விபரப்பட்டியல்:

1. https://www.instantstreetview.com/@9.674489,80.008338,260.91h,4.06p,0z
2. https://www.youtube.com/watch?v=JsLcJPWZEw4
3. https://www.google.ca/search?q=sindhi+people&oq=sindhi&aqs=chrome.2.69i57j0l5.8264j0j4&sourceid=chrome&ie=UTF-8
4. https://en.wikipedia.org/wiki/Sindhis
5. https://en.wikipedia.org/wiki/Java
6. https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Malays
7. Video from Ayvun
8. https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Moors
9. http://trip-suggest.com/indonesia/nusa-tenggara-barat/mokong/
10. https://en.wikipedia.org/wiki/Shalwar_kameez
11.https://en.wikipedia.org/wiki/Expulsion_of_Muslims_from_the_Northern_province_by_LTTE

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

வ.ந.கிரிதரனின் பாடல்கள்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here