1. புலியாரும் , புள்ளி மானும்!
அழகிய பச்சைக் காடாம்
அருகே பெரிய குளமாம்
தண்ணீர் குடிக்க மிருகங்கள்
தேடி அங்கே வருமாம்..
ஒட்டகம் எருமை யானை
ஓநாய் கரடி எனவே
காட்டில் மிருகம் பலவாம்
குயிலும் மயிலும் உண்டாம்..
சிவப்புக் கண்ணை உருட்டி
சீறிப் பாயும் புலியாம்
காட்டில் ராஜா என்றே
கர்ச்சனை செய்யும் சிங்கமாம்..
தண்ணீர் குடிக்கும் மானை
தாவிப் பிடிக்கப் புலியாரும
பதுங்கிப் பதுங்கி வந்தாராம்
பார்த்து விட்டது மான்தானே..
என்ன புலி அண்ணாவே
எதற்கு நீரும் பதுங்குகிறீர்
எவரைப் பிடிக்கப் பார்க்கின்றீர்
அந்த மானும் கேட்டதுவே..
அப்படி ஒன்றும் இல்லையே
அழகிய குட்டி உன்னிடம்
பேசிப் பார்க்க வந்தேனே
புள்ளி மானே நம்பிடுவாய்..
பாரும் இங்கே புலியாரே
புள்ளி மான் குட்டிதனை
எப்படி வந்தது குளத்திற்குள்
இறங்கி நீரும் பிடித்திடுவீர்..
பாய்ந்து குளத்தில் குதித்திட்டார்
புலியார் சேற்றில் புதைந்திட்டார்
தப்பிப் பிழைத்தேன் நானென்று
தூர மறைந்தது மான்குட்டி..
அபாயம் வந்த போதினிலே
உபாயம் ஒன்று தேடித்தான்
புலியிடம் இருந்து தப்பியதே
புத்தி உள்ள மான்குட்டி..!
2. காகக் கூட்டில் குயில்க் குஞ்சுகள்!
வைகாசி மாதம் பிறந்தது
வசந்த காலமும் மலர்ந்ததே
பூக்கள் பழங்கள் சொரிந்தன
பறவைகள் பாடிக் களித்தன..
தென்றல் காற்றும் வீசியது
தோப்பில் குயில்கள் கூவின
காக்கைகள் அழகாய்க் கூடுகள்
கட்டியே முட்டைகள் இட்டன..
கூடு கட்டத் தெரியாத
குயிலும் பார்த்தே இருந்தது
தன்னைப் போன்ற காக்கையென
தானும் நினைத்துக் கொண்டது..
காக்கை வெளியே பறக்கையிலே
கள்ளத் தனமாய்க் கூட்டினிலே
குயிலும் முட்டை இட்டதுவே
காக்கையும் அடை காத்ததுவே..
குஞ்சுகள் பொரித்து வந்திடவே
காக்கையும் இரை ஊட்டியதே
எல்லாக் குஞ்சும் தனதெனவே
எண்ணிக் காக்கை வளர்த்ததுவே..
காக்கைக் குஞ்சுகள் கரைந்திடவே
குயிலின் குஞ்சுகள் கூவினவே
காக்கையும் அறிந்து கொண்டது
குயிலின் செயலைப் புரிந்தது..
வளர்ந்த குயில்க் குஞ்சுகளை
வெளியே காகம் துரத்திடவே
இறக்கை விரித்துப் பறந்தனவே
இரையைத் தேடி மகிழ்ந்தனவே..
கீதம் பாடும் குயிலுக்கு
குஞ்சை வளர்க்கத் தெரியவில்லை
இயலாதோர்க்கு உதவி செய்தால்
எல்லோர் வாழ்வும் சிறந்திடுமே..!
3. ஔவைக்குத் தமிழ் சொன்ன அழகன் முருகன்
அழகிய தமிழ்ப் பாட்டி
எங்கள் ஔவைப் பாட்டி
இனிய தமிழில் பாடல்கள்
எமக்குத் தந்த பாட்டி..
பாலர் பாடி மகிழ
பாடல் பலவும் தந்தார்
நலமாய் மக்கள் வாழ
நீதி நெறிகள் சொன்னார்..
நெல்லிக் கனியை உண்டு
நீண்ட காலம் வாழ்ந்தார்
வாழும் வரைக்கும் தமிழை
வாழ்த்தி வளர்த்தே வந்தார்..
ஊர் ஊராய் நடந்தே
அழகு தமிழில் பாடினார்
அரச சபைக்கும் சென்றே
அறிவு உரைகள் சொன்னார்..
வயதால் தளர்ந்த போதும்
வாடிப் போக வில்லை
தமிழைப் பாடும் ஆவல்
துளியும் குறைய வில்லை..
வெயில் காலம் ஒன்றில்
வழியால் நடந்த போது
மிகவும் களைத்துப் போயே
மரத்தின் நிழலில் அமர்ந்தார்..
பாட்டி என்ன களைப்போ
பழங்கள் உமக்கு வேண்டுமோ..
சிறுவன் நாவல் மரத்தில்
சிரித்துக் கொண்டே கேட்டான்..
ஆமாம் அப்பனே போடு..
என்றே பாட்டி சொன்னார்
சுட்ட பழம் வேண்டுமோ
சுடாத பழம் வேண்டுமோ..?
என்றே சிறுவன் கேட்டான்
என்ன சுட்ட பழமோ..
ஒன்றும் விளங்க வில்லையே
என்று எண்ணிய பாட்டி..
சுவைத்துப் பார்ப்போம் என்றே
சுட்ட பழமே கேட்டார்
பழங்கள் நிறைய விழுந்தன
பாட்டி எடுத்து ஊதினார்..
பழங்கள் மிகவும் சூடோ..
பார்த்தே சிறுவன் கேட்டான்
தமிழை வென்ற ஔவை
தானும் சிரித்துக் கொண்டார்..
பழங்கள் மிகவும் சூடே
பார்த்தேன் அழகை முருகா
என்றே ஔவை பாட
அழகன் வாழ்த்தி நின்றான்..!
அழகன் முருகனே உருகிவிட்ட
ஔவையின் இனிய தமிழினையே
கற்றே உயர்வோம் வாழ்வினிலே
காலம் எல்லாம் மகிழ்ந்திடுவோம்..!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.