- அவுஸ்திரேலியா, மெல்பனில் நடந்த 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் இலங்கை ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் " ஈழத்து இலக்கியத்தின் இன்றைய நிலை" என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் முழுவடிவம். 'பதிவுகள்' இணைய இதழுககு அனுப்பியவர் எழுத்தாளர் முருகபூபதி-
ஈழத்தில் இடம்பெற்ற போர்காரணமாக, ஈழத்து இலக்கியத்தின் இயங்குநிலை இருவேறு தளங்களில் இயங்கிவருவதை அவதானிக்க முடிகிறது. ஒன்று, ஈழத்தின் தேசிய புவியியல் மற்றும் வாழ்வியல் அமைவுகளுக்கு ஏற்ப படைக்கப்படும் இலக்கியம். இது ஈழத்தின் உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியவாதிகளால் படைக்கப்படுவது. மற்றது, போர்காரணமாக ஈழத்தில் இருப்பது பாதுகாப்பில்லை என்று அஞ்சி பல்வேறு நாடுகளுக்கும் சென்ற ஈழத்தவர்கள் படைக்கும் இலக்கியம். இது புலம்பெயர் இலக்கியம் என அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு ஈழத்து இலக்கிய இயங்குதளங்கள் பற்றியும் இவற்றின் இன்றைய நிலை பற்றியும் விளக்குவதே இந்த உரையின் நோக்கமாகும். முதலில் புலம்பெயர் இலக்கியத்தின் இன்றைய நிலைபற்றிக் கூறுவது இந்த உரையின் ஒட்டுமொத்தமான உட்பொருளை விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என நம்புகிறேன்.
புலம்பெயர் இலக்கியமானது ஈழத்து இலக்கியத்தின் நீட்சி எனக்கொள்ளப்படுகிறது. அதாவது ஈழத்து இலக்கியம் ஈழத்து இலக்கியமாக மட்டுமில்லாமல் புலம்பெயர் இலக்கியமாகவும் உள்ளது. இது ஈழத்தமிழர்கள் படைக்கும் இலக்கியமாக இருக்கிறதேயொழிய இந்தியத் தமிழர்களின் இலக்கியமாக இருப்பதில்லை. ஆரம்பகாலத்தில் புலம்பெயர் எழுத்தாளர்கள் தமது நாட்டினைப்பிரிந்த ஏக்கத்தினையும் சென்றடைந்த நாடுகளில் தமக்கு ஏற்பட்ட துன்ப அனுபவங்களையும் பதிவு செய்த இலக்கியமாக புலம்பெயர் இலக்கியம் இருந்தது. புலம்பெயர் இலக்கியம் என்ற அடையாளப்படுத்தல் உருவான காலப்பகுதியில் இருந்த சூழல் இன்று இல்லை. பலநாடுகளிலும் புகலடைந்தவர்கள் அங்கு காலூன்றி நிலைத்துவிட்டார்கள். இவர்களுக்கு அறிவு விருத்தி, அனுபவ விசாலம், தொழில் நுட்பத்தோர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி, கலாசாரப்புரிந்துணர்வு முதலியன ஏற்பட்டுள்ளன. இவற்றிற்கேற்ப படைப்புகளின் உள்ளடக்க அம்சங்கள் மாற்றம் பெறத் தொடங்கிவிட்டன. ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பலர் இன்று தமிழ்ப் படைப்புலகில் முன்னணி வகிக்கிறார்கள். இவர்கள் படைக்கும் இலக்கியங்களுக்கு தமிழ்மக்களிடையே உலகளாவிய ரீதியில் மதிப்பு இருக்கிறது. தமிழகப் பத்திரிகைகள் இந்தப் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கின்றன.
நடேசன், ஆசி கந்தராஜா, கே. எஸ். சுதாகர், முருகபூபதி, பார்த்திபன், ஷோபாசக்தி, அ. முத்துலிங்கம், தேவகாந்தன், இ. தியாகலிங்கம், கருணாகரமூர்த்தி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், விமல் குழந்தைவேல், வி.ஜீவகுமாரன், மாத்தளை சோமு, அகில், குரு அரவிந்தன், வ.ந.கிரிதரன், இரா உதயணன், ஸ்ரீரஞ்சினி , இப்படியாக ஒரு நீண்ட பட்டியலே தயாரிக்கலாம். ஈழத்தவர்களாகிய நாம் இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களையிட்டு பெருமை அடைகிறோம். இவை எம்மவர்களின் எழுத்துக்கள் எனக் கொண்டாடுகிறோம்.
இன்று புலம்பெயர் எழுத்தாளர்கள் தமிழகத்திலே புத்தகம் போடுகிறார்கள். தமிழக பிரபல்ய எழுத்தாளர்களிடம் முன்னுரைகள் வாங்குகிறார்கள். தமிழகத்திலே எம்மவர் பலருடைய நூல்கள் பரிசைப் பெறுகின்றன. இந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் திருப்பூர் தமிழ்ச்சங்கம் இரண்டு புலம்பெயர் எழுத்தாளர்களின் நூல்களுக்கு பரிசு வழங்கியிருக்கிறது.
ஆசி கந்தராஜாவின் கீதையடி நீயெனக்கு குறுநாவல் தொகுதி வவுனியூர் உதயணனின் வலியின் சுமைகள் நூல் ஆகியவை பரிசு பெற்றுள்ளன. அதேபோன்று முன்னர் டென்மார்க ஜீவகுமாரனின் கடவுச்சீட்டு நாவல் பரிசு பெற்றது. கனடா அகில் எழுதிய கூடுகள் சிதைந்தபோது சிறுகதைத்தொகுதி தமிழக அரசின் பரிசு பெற்றது. அ. முத்துலிங்கத்தின் எழுத்துக்களுக்குப் பரிசு கிடைத்திருக்கிறது. முருகபூபதியின் பறவைகள் நாவலுக்கு சாகித்திய பரிசு கிடைத்திருக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது எமக்குப் பெருமையாக இருக்கிறது.
ஒருகாலத்தில் ஈழத்து எழுத்துக்களை இளக்காரமாகப் பேசியவர்கள் தமிழக எழுத்தாளர்கள். 1960 இல் இலங்கை வந்திருந்த பகீரதன் என்ற எழுத்தாளர் ஈழத்து இலக்கியம் தமிழக இலக்கியத்தை விட 20 வருடங்கள் பின்தங்கியுள்ளது என்றார். தொடர்ந்து வந்த காலப்பகுதியில் கலைமகள் ஆசிரியர் கி. வ. ஜகந்நாதன் ஈழத்துப் படைப்புகளில் வரும் மண்வளச் சொற்களுக்கு அடிக்குறிப்பு தேவை என்றார். கி. ராஜநாராயணன் ஈழத்து மண்வளச் சொற்களைப் புரிந்து கொள்ள அகராதி தயாரித்தல் நல்லது என்றார். ஜெயகாந்தன் புலம்பெயர் எழுத்துக்களை புலம்பல் இலக்கியம் என்று கேலிசெய்த காலமும் இருந்தது. இந்த நிலையை மாற்றியமைத்தவர்கள் புலம்பெயர் எழுத்தாளர்கள். இன்று ஈழத்தமிழர்களின் எழுத்துக்களை விரும்பி வாங்கி பிரசுரிக்கும் நிலைமை தமிழகத்திலே ஏற்பட்டிருப்பதை எண்ணி நாம் பெருமை அடைகிறோம்.
இந்த எழுத்தாளர்கள் யாபேரும் ஈழத்திலே தமிழைக்கற்றவர்கள் பலர் முதலில் ஈழத்துப்பத்திரிகைகளில் எழுதியவர்கள். ஈழத்துப்பத்திரிகைகளில் எழுதிப்பழகி எழுத்தாளர் ஆனவர்கள். ஈழத்திலே இவர்கள் இருந்த காலத்தில் இவர்களுடைய எழுத்துக்களுக்கு பெரிதாகப் பிரபல்யம் கிடைக்கவில்லை. ஆனால், புலம்பெயர்ந்து எழுதத் தொடங்கிய பின்னர் இவர்களுடைய எழுத்துகளுக்குப் பிரபல்யம் கிடைத்திருக்கிறது
இதற்கான காரணத்தை நாம் முதலில் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
அதற்கான முதற்காரணம் ஈழத்தில் இருந்த காலத்தில் போர்ச்சூழலில் இவர்களுக்கு எழுத்துச் சுதந்திரம் இருக்கவில்லை.
இரண்டாவது காரணம் புலம்பெயர்ந்த நாடுகளில் இவர்களுக்கு கிடைக்கும் புதுவகையான வாழ்க்கை அனுபவங்கள் , புதுவகைக் கலாசாரச் சூழல், புவியியல் சூழல், புதுவகைத் தொழில்கள் இவற்றை வைத்து இவர்கள் படைக்கும் இலக்கியப் படைப்புகள் தமிழுக்கு புதியதும் வித்தியாசமானதுமான பொருட் பரப்பையும் சுவையையும் தருகின்றன.
நான் மேலே குறிப்பிட்ட எழுத்துச் சுதந்திரமும் புதிய சூழமைவும் ஈழத்தில் இருந்து எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு இல்லை.
இதனை இன்னுமொரு விதமாகக் கூறுவதானால், நடேசன் ஈழத்தில் இருந்து கொண்டு அசோகனின் வைத்தியசாலை நாவலை எழுதியிருக்க முடியாது. ஆசி கந்தராஜா தலைமுறை தாண்டிய காயங்கள் சிறுகதையைப் படைத்திருக்க முடியாது. கே. எஸ். சுதாகர் கற்றுக்கொள்வதற்கு என்ற கதையைப் படைத்திருக்க முடியாது. ஏனென்றால் இந்தப்படைப்புகளின் உள்ளடக்க அம்சங்களும் பகைப்புலமும் அவுஸ்திரேலியாவுக்கு உரியவை.
இலக்கியங்கள் தேசிய புவியியல் பண்பாடு மற்றும் வாழ்வியல் அமைவுகளுக்கு ஏற்ப பெயர்கொண்டு சுட்டும் மரபே வழக்காக இருந்து வருகிறது. எனவே நான்மேலே குறிப்பிட்ட படைப்புகள் யாவும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியம்.
இதேபோன்றுதான் புலம்பெயர்ந்தோர் இலக்கியங்களை கனடியத் தமிழ் இலக்கியம் வட அமெரிக்கத்தமிழ் இலக்கியம் ஐரோப்பியத்தமிழ் இலக்கியம் என்று பெயர்சுட்டும் அளவுக்கு தற்கால புலம்பெயர் இலக்கியங்கள் பெயர்சுட்டி வகைப்படுத்தவேண்டிய பொருட்பரப்பைக் கொண்டுள்ளன. தற்போது அடுத்தகட்டமாக தமிழ் இலக்கியப்பரப்பானது ஒரு நாட்டின் தேசிய புவியியல் பண்பாடு மற்றும் அங்குள்ள வாழ்வியல் அமைவுகளையும் தாண்டி இலக்கியங்கள் புலம்பெயர்நாடுகளில் படைக்கப்படுவதைக் காண்கிறோம். இது உலகத்தமிழ் இலக்கியம் என்ற பொது அடையாளத்தைப் பெற்று விடுவதற்கான சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளமையைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் உலகத்தரமான இலக்கியங்களைப் படைப்பதையிட்டு நாம் மகிழ்வடைகிறோம்
இன்றைய சூழ்நிலையில் தமிழக வணிகப்பத்திரிகைகள் புலம்பெயர்படைப்பாளிகளின் எழுத்துக்களை ஆராதிக்கின்றன. அது நல்லது. எம்மவரின் எழுத்துக்கள் பிரபல்யம் பெறுவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். பெருமை கொள்கிறோம். என்னால் வெளியிடப்படும் ஞானம் கலை இலக்கிய சஞ்சிகையிலேகூட ஒவ்வொரு இதழிலும் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்பைச் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால், இந்த புலம்பெயர் எழுத்துக்களின் நிலைமை தற்காலிகமானது. இந்த நிலை ஒன்று அல்லது இரண்டு தசாப்தங்களில் மறைந்துவிடும். அதற்குப்பிறகு நிலைமை என்ன?
ஏனெனில் புலம்பெயர் எழுத்தாளர்களது எதிர்காலத் தலைமுறைகள் தமிழில் இலக்கியம் படைக்கப்போவதில்லை. அதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. அவர்கள் யாரும் தமிழகப் பத்திரிகையில் எழுதுவதாகத் தெரியவில்லை. புலம் பெயர்ந்த நாடுகள் சிலவற்றில் அடுத்த தலைமுறையினரும் தமிழ்கற்றுத் தேறியிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஒருவேளை ஒருசிலர் எழுதினாலும் அவர்களின் அடுத்த தலைமுறை தமிழில் எழுதுமா? தமிழ் தெரிந்துவிட்டால் மட்டும் எழுத்தாளர்களாகிவிட முடியாது.
ஈழத்திலே இருந்து இலக்கியம் படைப்போரின் நிலைமை இதுவல்ல.
உலகத்தின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ்ச்சமூகத்தினினரிடமிருந்து வேறுபட்டு, நிலத்தால், வரலாற்றால், வாழ்க்கை முறைகளால், பண்பாட்டால் தனித்தன்மை கொண்டவர்களாக ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். ஈழத்தமிழரின் பேச்சு மொழி, வாழ்க்கைச்சூழல், சமூகக்கட்டமைப்பு, சமூக இயக்கமுறைமை, சமுகப்பிரச்சினைகள், இனவிடுதலைப்போராட்டம் போன்றவையெல்லாம் ஈழத்து இலக்கியத்தை தனித்துவமானதாக ஆக்கியிருக்கிறது. ஈழத்தில் இருந்து இலக்கியம் படைப்போர் ஈழத்துக்கேயுரிய தனித்துவத்துடன் இலக்கியம் படைக்கிறார்கள்.
ஆனால், புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களுக்கு ஈழத்து இலக்கியம் என்ற பிரக்ஞையுடன் இலக்கியம் படைக்க வேண்டும் என்ற கடப்பாடு இல்லை. ஈழத்துத் தமிழ் இலக்கியம் தனித்துவமானது, வேறானது அதற்கான சிறப்பியல்பைக்கொண்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் புலம்பெயர்நாடுகளில் போலல்லாது ஈழத்தில் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் தோன்றி எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் திறமைகளை எங்களால் கணிக்க முடிகிறது. இங்கே உங்களுக்குத் தெரிந்த ஓர் உதாரணத்தை முன்வைக்கிறேன். அவுஸ்திரேலிய மெல்பேண் விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தின் ஆதரவில் வானமுதம் தமிழ் வானொலி உலகளாவிய ரீதியில் கவிதை சிறுகதைப் போட்டிகளை நடத்தியது.
கவிதைப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுமே இலங்கையைச் சேர்ந்தவர்கள். இந்தியத் தமிழர் ஒருவர் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். முதல் இரண்டு இடங்களையும் முறையே மூதூர் முகைதீன், முகம்மது ஹனீபா ஆதம்பாவா ஆகிய முஸ்லிம் கவிஞர்கள் பெற்றிருக்கிறார்கள் சிறுகதைப் போட்டியில் முதல் இரண்டு இடங்களையும் ஈழத்தில் வாழும் இலக்கியவாதிகளே பெற்றிருக்கிறார்கள். மூன்றாவது இடத்தை ஓர் இந்திய எழுத்தாளர் பெற்றிருக்கிறார்.
அக்கினிக்குஞ்சு இணையத்தளம் நடத்திய அருண்விஜயராணி ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டியில் முதல் இரண்டு இடங்களையும் பெற்றவர்கள் ஈழத்து எழுத்தாளர்கள். இதில் இரண்டாவது இடத்தை ஒரு தமிழக எழுத்தாளரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மூன்றாவது இடத்தை ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் பெற்றிருக்கிறார்.
இந்த இரண்டு போட்டிகளிலும் ஒட்டுமொத்தமாக ஈழத்தில்வாழும் எழுத்தாளர்களே அதிக பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள். இந்த ஈழத்து எழுத்தாளர்கள் ஞானம் சஞ்சிகை நடத்திவரும் சிறுகதைப்போட்டிகளில் பரிசுகள் பெற்றவர்கள்.
இந்த இரண்டு போட்டிகளிலும் முதல்பரிசு பெற்றவர்கள் பெண் எழுத்தாளர்கள். ஒருவர் புசல்லாவையைச் சேர்ந்த கனகா கந்தசாமி. மற்றவர் கெக்கிறாவை சஹானா. இவர்கள் ஈழத்து எழுத்தாளர்களின் ஆறாம் தலைமுறை எழுத்தாளர்கள். ஈழத்திலே தலைமுறை தலைமுறையாக எழுத்தாளர்கள் தோன்றிய வண்ணம் இருக்கிறார்கள்
அவுஸ்திரேலியா அக்கினிக்குஞ்சு இணையம் நடத்திய எஸ்.பொ. நினைவு குறுநாவல் போட்டியில் கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஆர். எம். நௌஸாத் மூன்றாம் பரிசைப்பெற்றுள்ளார். இவர் ஞானம் நடத்திய சிறுகதைப்போட்டிகளில் நான்கு தடவை பரிசு பெற்றவர் தமிழ்நாடு எழுத்தாளர் சுஜாதா ஞாபகார்த்தப் போட்டியில் இவரது சாகும்தலம் என்ற சிறுகதை பரிசு பெற்றது. காலச்சுவடு நிறுவனர் "சுந்தரராமசாமி 75 " போட்டியில் இவரது நட்டுமை என்னற நாவல் முதல் பரிசு பெற்றது.
இப்படியாக தலைமுறை தலைமுறையாக புலம்பெயர் நாடுகளில் எழுத்தாளர்கள் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை. புலம்பெயர் எழுத்துக்கள் என்பது ஒரு அலை. அந்த அலை அடித்து ஓய்ந்துபோகும்.
இந்த 2017 ஆண்டில் நான்கே நான்கு மாதங்கள்தான் நிறைவாகியுள்ளன. இந்தக்குறுகிய காலத்தில் ஈழத்து எழுத்தாளர் இருவர் சர்வதேச ரீதியில் பரிசு பெற்றிருக்கிறார்கள. தமிழகத்தின் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகதின்கீழ் இயங்கும் தமிழ்ப்பேராயம் நடத்திய போட்டியில் சிறந்த சிறுவர் இலக்கியத்துக்கான விருதினையும் நான்கு இலட்ச ரூபா பணப்பரிசினையும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஓ. கே. குணநாதன் பெற்றிருக்கிறார்.
தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவியுள்ள 'கரிகாற்சோழன்' விருதும் பணப்பரிசு ரூபா ஐந்து லட்சமும் இம்முறை இலங்கைத் தமிழ் எழுத்தாளர் மு. சிவலிங்கம் எழுதிய 'பஞ்சம் பிழைக்க வந்த சீமை' என்ற நாவலுக்கு கிடைத்துள்ளது. இவை யாவும் இன்றைய ஈழத்து இலக்கியத்தின் தரத்துக்கான சான்றுகள்.
ஈழத்து இலக்கியம் பற்றிப்பேசும்போது ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பங்காற்றிய சஞ்சிகைகள் பற்றிப் பேசுவதும் முக்கியமானது. ஏனெனில் ஒரு நாட்டின் இலக்கிய வளர்ச்சிப்போக்கை திசைப்படுத்தி முன்னெடுத்துச் செல்பவை இந்த சஞ்சிகைகள்தான்.
சமீபத்தில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் கனடாவில் இருந்து வருகை தந்த நவம், அவருடைய பாரியார் திருமதி நவம் ஆகியோரது உரைகள் இடம்பெற்றன. அந்தக்கூட்டத்துக்குத் தலைமைவகித்த கலநிதி ந. இரவீந்திரன் தனது தலைமையுரையில் புலம்பெயர்நாடுகளில் வெளிவரும் சஞ்சிகைகள் ஈழத்து சஞ்சிகைகளைவிடத் தரமானவை எனத் தன்னிடம் யாரோ புலம்பெயர்ந்த ஒருவர் கூறியதாகச் சொன்னார். இந்தக்கருத்தை நான் கொழும்புக் கூட்டத்தில் மறுத்துரைத்தேன்.
ஈழத்துச் சிறுசஞ்சிகைள் ஈழத்து இலக்கியம் என்ற பிரக்ஞையுடன் இயங்குகின்றன. ஆனால், புலம்பெயர் சஞ்சிகைகள் ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு நோக்குடன் இயங்குகின்றன. ஈழத்துச் சஞ்சிகைகளை புலம்பெயர் சஞ்சிகைகளுடன் ஒப்பிட முடியாது. புலம்பெயர் நாடுகளிலிருந்து ஆரம்காலங்களில் 70 இற்கும் மேற்பட்ட சஞ்சிகைகள் வெளிவந்தன இன்று நிலைமை என்ன...? புலம்பெயர்நாடுகளிலிருந்து இன்று ஐந்து சஞ்சிகைகள் கூட வருவதில்லை.
நேரக்கட்டுப்பாடு கருதி ஓர் உதாரணத்தை மட்டும் இங்கு தருகிறேன். ஈழத்தில் அதிககாலம் சஞ்சிகை நடத்தியவர் டொமினிக் ஜீவா. 1966 இல் இருந்து மல்லிகை வெளியானது. 1990 கள் வரை அச்சஞ்சிகை சிறப்பாக யாழ்ப்பாணத்தில் இயங்கியது. ஆனால் , போர்க்கால நெருக்கடிகாரணமாக அவரால் தொடர்ந்து சஞ்சிகையை யாழ்ப்பாணத்தில் நடத்த முடியவில்லை. கொழும்புக்கு வந்து மல்லிகையைத் தொடர்ந்தார். போர்காரணமாக பெரும் மனித அழிவுகள் ஏற்பட்டபோதுகூட அவர் அடக்கிவாசிக்க வேண்டிய நிலைமை இருந்தது. அவர் யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்திலேதான் ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் எரிக்கப்பட்டது. ஈழமுரசு காரியாலயம் எரிக்கப்பட்டது. இந்தப்பத்திகைகள் விற்பனை செய்யும் பூபாலசிங்கம் புத்தகசாலை எரிக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் சிவராம், நிமலராஜன், நெல்லை நடேஸ் போன்றவர்கள் கொல்லப்பட்டார்கள். புலம்பெயர் எழுத்தாளர் சிலர் தொடர்ந்து அங்கே இருந்திருந்தால் அவர்களுக்கும் அந்தக்கதிதான் ஏற்பட்டிருக்கும். இத்தகைய சூழலில்தான் அங்கு சஞ்சிகை நடத்தவேண்டியுள்ளது.
ஈழத்துச் சஞ்சிகையில் பத்திரிகையில் எழுதிப்பழகியவர்கள்தான் வெளியே இருந்து கொண்டு ஈழத்துச் சஞ்சிகைகள் தரமில்லை என்று பேசுகிறார்கள். இன்று மல்லிகை நின்றுபோய்விட்டது. ஏன் நின்றுபோனது...? அதற்குக்காரணம் தொடர்ந்து மல்லிகையை நடத்துவதற்கான பொருளாதாரத்தை அவரால் தேடமுடியவில்லை. வழக்கமாக மல்லிகை வெளிவந்ததும் அவர் அவற்றைத் தூக்கிக்கொண்டு வாசகர்களைச் சந்தித்து நேரடியாக விநியோகம் செய்வார். அடுத்த மல்லிகை வெளிவருவதற்கான பணம் சேகரிக்கப்பட்டுவிடும். இப்படித்தான் மல்லிகை வெளியிடுவதற்கான பணத்தை ஜீவா சேகரித்தார். இன்று வயோதிப நிலையில் அவரால் எங்கும் பயணம் செய்ய முடியாது. அடுத்துவரும் மல்லிகைக்கான பணத்தைச் சேகரிக்க முடியாது. அதனால் மல்லிகை நின்றுவிட்டது. பொருளாதார பலம் இருந்தால் அவர் இருந்த இடத்திலேயே மல்லிகையை நடத்துவார். மல்லிகை தயாரிப்பில் அவருக்கு உதவ ஆட்கள் இருக்கிறார்கள். மல்லிகை ஏன் நின்று போனது என பலர் இன்று வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
புலம்பெயர்ந்தவர்கள் 50 பேர் தொடர்ந்தும் சந்தாதாரராக இருந்திருந்தால் மல்லிகை நின்றிருக்காது. 50 வருட நிறைவு மலரையாவது வெளிக்கொண்டு வந்திருக்கலாம். இவர்கள் யாருமே ஈழத்துச் சஞ்சிகைகளின் வளர்ச்சிக்கு உதவ முன்வருவதில்லை. கடந்து வந்த பாதையை மறந்து போகிறார்கள். புலம்பெயர்சஞ்சிகைகளுக்கு பொருளாதார பலம் இருக்கிறது. ஈழத்துச்சஞ்சிகைகள் பொருளாதாரபலமின்றி மடிந்து போகின்றன. புலம்பெயர் எழுத்தாளர்கள் புலம்பெயர் சஞ்சிகைகளையும் வளர்த்துவிடவில்லை. ஈழத்துச் சஞ்சிகைகளையும் வளர்த்துவிடவில்லை. தமிழக வணிக சஞ்சிகைகள் ஈழத்துப் போரை வணிகப்பொருளாக்கிய ஒரு காலமும் இருந்தது. ஈழப்போருக்கு ஆதரவான எழுத்துக்களைக் கொண்ட பக்கங்கள் கிழித்து எடுக்கப்பட்ட பின்னரே அவை இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டன. புலம்பெயர் எழுத்தாளர்கள் சிலர் எழுதிய ஈழப்போருக்கு எதிரான விடயங்கள் கிழித்தெடுக்கப்டாமல் அனுமதிக்கப்பட்டன. ஒரு முறை ஆனந்தவிகடனில் போருக்கு ஆதரவான விடயம் வந்தவேளையில் அந்தப்பகுதி தவறுதலாக கிழித்தெடுக்கப்படாத நிலையில் இறக்குமதியானபோது அதனை இறக்குமதி செய்த பூபாலசிங்கம் அதிபர் ஸ்ரீதரசிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அரசுக்கு எதிராகவோ அல்லது இயக்கங்களுக்கு எதிராகவோ சஞ்சிகையில் எழுதுவது மட்டுமல்ல அவற்றை விற்பதுகூட ஆபத்தானதாக இருந்தது உண்மையில் சஞ்சிகையின் தரம் சரியில்லை என்று கூறுபவர்கள் யார்...? தமது கருத்தியலுக்கு அமைய அல்லது தமது அரசியலுக்கு அமைய ஒரு பத்திரிகை அல்லது சஞ்சிகை வரவில்லை என்றால் அதனை தரமில்லை என்கிறார்கள்.
இதற்கு அடிப்படையாக இருப்பது கருத்து நிலை. தமது கருத்து நிலைக்கு ஏற்றதாக இல்லாவிட்டால் சஞ்சிகையின் தரம் சரியில்லை என்பார்கள். இன்னொரு சாரார்; தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்ளவும் சஞ்சிகைகளின் தரம் சரியில்லை என்கிறார்கள்.
எது எப்படி இருந்தபோதிலும் ஈழத்திலே காலத்துக்குக்காலம் சஞ்சிகைகள் வெளிவந்து தத்தம் நிலையில் சிறந்த பணியாற்றியிருக்கின்றன. ஈழத்தின் முதலாவது சஞ்சிகை பாரதி 1946 தைமாதத்தில் வெளிவந்தது. முதலாவது இலக்கிய சஞ்சிகை மறுமலர்ச்சி அதே ஆண்டு பங்குனியில் வெளிவந்தது. தொடர்ந்து கலைச்செல்வி, மரகதம், சிரித்திரன், விவேகி, மல்லிகை, குமரன், இளம்பிறை, மலர், பூரணி, சுடர், அலை, புதிசு, தீர்த்தக்கரை, பெருவெளி, வெளிச்சம், மூன்றாவது மனிதன், செங்கதிர் இப்படி இன்னும் பல சஞ்சிகைகள் சங்கிலித்தொடர்போல காலத்துக்குக் காலம் தோன்றி தத்தம் நிலையில் இலக்கியப்பணி புரிந்து வந்துள்ளன. இன்று ஞானம், ஜீவநதி, படிகள், மகுடம், கலைமுகம் என சஞ்சிகைகள் வருகின்றன. சஞ்சிகைகள் எதிர்கொள்ளும் சகல பிரச்சினைகளுக்கும் இவை முகம்கொடுத்து கஷ்டத்தின் மத்தியில் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.
இவை வணிகப்பத்திரிகைகள் அல்ல. இலக்கிய தாகம்கொண்டவர்களால் பெரும்நட்டத்துடன் நடத்தப்படும் பத்திரிகைகள். ஈழத்து இலக்கிய சஞ்சிகைகளுக்கு 71 வருட வரலாறு இருக்கிறது. அது தொடர்கிறது. இன்று 40 இற்கும் குறையாத புதிய தலைமுறைப்படைப்பாளிகள் ஈழத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச இலக்கியப்போட்டிகளில் பங்கு பற்றி பல பரிசில்களைத் தட்டிக்கொள்கிறார்கள். ஞானம் சஞ்சிகையும் பலபிரச்சினைகளை எதிர்கொண்டுதான் வெளிவருகிறது. இந்நிலையில் எப்படி ஈழத்துச் சஞ்சிகைகளை புலம்பெயர் சஞ்சிகைகளுடன் ஒப்பிட முடியும். விமர்சனங்களுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிக்கிறோம். ஆனால், எந்தக்கருத்தானாலும் அதனை ஆதாரங்களுடன் கூறவேண்டும். எழுந்தமானமாகக் கூறக்கூடாது. தரம் பற்றிக்குறிப்பிடும்போது அவற்றைச் சான்று ஆதரங்களுடன் குறிப்பிடவேண்டும். தரம்பற்றிய உங்கள் அளவுகோல் என்ன? தமிழகத்து வணிகச்சஞ்சிகைகளா அல்லது வேறென்ன?
சங்க காலத்து மக்களது வாழ்க்கை முறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாங்கள் அகநானூறு, புறநானூறு போன்றவற்றைப் படிக்கிறோம். அவை இலக்கிய ஆதாரங்கள். அதே போன்று 20 ஆம் நூற்றாண்டில் ஈழத்தமிழன் எப்படி வாழ்ந்தான் என இன்னும் பல நூற்றாண்டுகளின் பின் வரப்போகும் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டுமானால் ஈழத்து இலக்கிய சிற்றிதழ்களை ஆதாரமாகக் கொள்ள வேண்டும். ஈழத் தமிழன் முகம் கொடுத்த போர்பற்றி அறிய வேண்டுமானால் ஞானம் சஞ்சிகை தொகுத்த போர் இலக்கியம், புலம்பெயர் இலக்கியம் போன்ற தொகுப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.
ஈழத்து சஞ்சிகைகள் பல்வேறுபிரச்சினைகளுக்கு முகம் கொடுத்போதிலும் ஈழத்து இலக்கியம் என்ற தனித்தவத்தைப்பேணி தரமானதாகத்தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றை புலம் பெயர்சஞ்சிகைகளுடன் அல்லது வணிக சஞ்சிகைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவது தவறானது. தற்போது ஈழத்து இலக்கியச் செல்நெறி போருக்குப்பின்னரான இலக்கியமாக மாறியுள்ளது. போருக்குப்பின்னரான இலக்கியங்கள் மக்களின் மனச்சாட்சியைத்தூண்டி போரினால் சீரழிந்த நாட்டை, சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற உணர்வினை ஏற்படுத்துகின்றன. தற்போது எவ்வித சுயதணிக்கைகள் எதுவுமின்றி எழுத்தாளர்கள் தமது படைப்புகளை எழுதக்கூடிய சூழ்நிலை ஈழத்தில் உள்ளது. போரில் இடம்பெற்ற தவறுகளை விமர்சிக்கும் இலக்கியங்கள் அங்கு வருகின்றன. போராளிகள் சிலர் வெளிப்படையாகத் தமது எண்ணங்களை எழுதுகின்றனர்.
அகதி நிலை, சிறை வாழ்க்கை, கணவர்களை இழந்த கைம்பெண்கள் 60,000 பேர் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது அவர்களது வாழ்வாதாரப்பிரச்சினை, தாய்தந்தையரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த தாய்தந்தையர், ஊனமுற்ற போராளிகளின் வாழ்க்கைப் போராட்டம், போராளிப்பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சொந்த நிலங்களை இழந்து பிறிதோர் இடத்தில் வாழநேரிடும் அவலம், வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் பெருவாரியான மக்கள், இராணுவப் பிரசன்னம், வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு அந்த நினைவுகளை சுமந்து கலங்கிநிற்கும் பெண்கள். திருமணம் செய்ய ஆண்கள் கிடைக்காது தவிக்கும் பெண்கள், போரின் பின்னர் சமூகத்தில் ஏற்படும் சமூகச் சீரழிவு, பண்பாட்டுச்சீரழிவு மனோரீதியாகப் பாதிக்கப்பட்டோர், மனப்பிறழ்வு அடைந்தோர் இவர்களையெல்லாம் மனத்திலிருத்தி மீள்கட்டுமான இலக்கியங்களைப் படைக்கவேண்டிய தேவை, ஒரு சமூகப்பொறுப்பு ஈழத்தில் வாழும் படைப்பாளிகளுக்கு உள்ளது. போருக்குப் பின்னரான இலக்கியம் இன்று இந்தத் திசையிலேதான் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனை ஆதரித்தும், பதிவுசெய்தும் ஊக்கப்படுத்தியும் ஆதரிக்க வேண்டிய தார்மீகப்பொறுப்பு ஈழத்துச் சஞசிகைகளுக்கு இருக்கிறது. இதனைத்தான் பெரும்பாலான ஈழத்துச் சஞ்சிகைகள் இன்று செய்து கொண்டிருக்கின்றன. போருக்குப்பின்னரான இலக்கியம் என்று வகைப்படுத்தக் கூடிய பல கவிதைத் தொகுதிகள், சிறுகதைத் தொகுதிகள் நாவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக அதிக கவிதைத் தொகுதிகள் போருக்குப்பின்னரான விடயப்பரப்பைக் கொண்ட தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
தீபச்செல்வனின் பதுங்கு குழியில் பிறந்த குழந்தை, கிளி நொச்சி - போர்தின்ற நகரம், பாழ்நகரத்தின் பொழுது, கருணாகரனின் பலிஆடு, எதுவுமல்ல இதுவும், கி.பி.நிதுன் எழுதிய துயரக்கடல், சித்தாந்தனின் துரத்தும் நிழல்களின் யுகம், மன்னார் பெனில் எழுதிய ஈரநிலத்தை எதிர்பார்த்து, நிலாந்தனின் யுகபுராணம், குணேஸ்வரனின் மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள், பெரிய ஐங்கரனின் கறுப்பு மழை, கு.றஜீபனின் பேசற்க போன்ற தொகுதிகள் உடனடியாக என் நினைவில் வருகின்றன. இன்னும்சில தொகுதிகள் வந்திருக்கலாம்.
த. அஜந்தகுமார், யாத்திரீகன், செ. சுதர்சன், இ.சு. முரளிதரன், ஐ.வரதராசன், பெ. கை. சரவணன், த.ஜெயசீலன், ஸ்ரீபிரசாந்தன், ந. சத்தியசீலன், றஷ்மி, அ. யேசுராசா, சோ.பத்மநாதன், ந.சத்தியபாலன், வெற்றி துஷ்யந்தன், மரதம் கேதீஸ், மகாலிங்கசிவம், கோகுலராகவன், புலோலியூர் வேல்நந்தன், அல்வாயூர் சிவநேசன், பா. அகிலன், தானா விஷ்ணு, ந.மயூரரூபன், போன்றோரின் கவிதைகள் பல போருக்குப்பின்னரான கவிதைகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
போருக்குப்பின்னரான சிறுகதைகள் அடங்கிய தொகுதிகளாக கருணை ரவி எழுதிய கடவுளின் மரணம், யோ.கர்ணன் எழுதிய சேகுவேரா இருந்த வீடு, இரா உதயணன் எழுதிய பனிமலர், வன்னிவலி போன்ற தொகுதிகளும் வேறு சிலரின் தொகுதிகளும் வெளிவந்துள்ளன. இவர்களை விட இராகவன், மருதம்கேதீஸ், சீனா உதயகுமார், தாட்சாயிணி, விஷ்ணுவர்த்தனி, இயல்வாணன், தெணியான், குப்பிழான் ஐ. சண்முகன், நந்தினி சேவியர், குந்தவை, யோகேஸ்வரி சிவப்பிரகாசம், சட்டநாதன், கே. ஆர் டேவிட், த.கலாமணி, அநாதரட்சகன், கொற்றை பி. கிருஷ்ணானந்தன், மு.பொன்னம்பலம், சூசை எட்வேர்ட. ஷெல்லிதாசன், வி. என். சந்திரகாந்தி ஆகியோர் அவ்வப்போது போருக்குப்பின்னரான அவலங்களைக் கதைகளாக வெளிக்கொணர்ந்துள்ளனர்.
போருக்குப் பின்னரான நாவல்களாக தமிழ்க்கவியின் ஊழிக்காலம், குணா கவியழகனின் நஞ்சுண்டகாடு, விடமேறிய கனவு, இரா உதயணனின் வலியின் சுமைகள், தமிழினி ஜெயக்குமாரன் எழுதிய கூர்வாளின் நிழல்(சுயசரிதை) போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன.
சிவஆரூரன் என்ற சிவலிங்கம் ஒரு பொறியியல் பட்டதாரி. பத்து வருடங்களாக மெகசீன்சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரது யாழிசை என்ற நாவல் முன்னாள் பெண் போராளிகளின் வாழ்க்கை நிலைமைகளைச் சித்திரிக்கிறது. இந்தப் பெண்கள் சமூகத்தில் படுகின்ற துன்பங்களை, கஷ்டங்களை கதையினூடாகக் காட்டிச் செல்கிறார். இந்த நாவல் சென்ற ஆண்டில் இலங்கை தேசிய சாஹித்திய விருதினைப்பெற்றது என்பது குறிப்பித்தக்கது.
படைப்பாளிகள் மட்டுமல்ல புதிய தலைமுறை ஆய்வாளர்கள் பலரும் ஈழத்தில் தோன்றியிருக்கிறார்கள் ஞானம் பாலச்சந்திரன் ஈழமும் தமிழும் என்ற தலைப்பில் ஆய்வுகள் பலவற்றை மேற்கொண்டு இதுவரை ஆறு நூல்களை வெளியிட்டுள்ளார். பல்கலைக்கழக மட்டத்தில் செ. சுதர்சன், ஜெயசீலன், சரவணகுமார். எம். ரூபவதனன், இராஜேஸ்கண்ணன் போன்றோர் ஆய்வாளர்களாக உள்ளனர். எஸ். குணேஸ்வரன் புலம்பெயர் இலக்கியம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு சமீபத்தில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.
நிறைவாக நான் கூறுவதானால் சமகால ஈழத்து இலக்கியச் செல்நெறியானது உள்நாட்டுப் போரின் தாக்கங்களால் பல பிரச்சினைகளை எதிர் கொண்டபோதும் ஈழத்து இலக்கியம் தனித்துவத்துடன் சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை எனது 53 வருடகால ஈழத்து இலக்கியத்துடனான தொடர்பின் அடிப்படையிலும் 17 வருடகால ஓர் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் என்ற நிலையில் பெற்றுக்கொண்ட அனுபவப் பின்னணியிலும் திடமாகக் கூறமுடிகிறது.