பேராதனைத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு! - தகவல்: எஸ்.சுதர்சன் -
- * தெளிவாகப் பார்க்க கீழுள்ள படத்தைக் 'கிளிக்' பண்ணவும் . -
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30, 31ஆம் திகதிகளில், “ஈழத்தில் அச்சுப் பண்பாடும் பதிப்பும்” எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“தமிழ்ச் சூழலில் அச்சுப் பண்பாட்டு இயக்கத்திலும் பதிப்புத்துறையிலும் ஈழத்தவர் பணிகள் மகத்தானவை. அச்சு, பதிப்பு ஆகியவற்றினூடு தமிழியல் வரலாற்றைக் கட்டமைப்பதிலும் பாதுகாப்பதிலும் நவீனப்படுதுவதிலும் ஈழத்தவரின் சாதனைகள் முன்னோடியானவை. அச்சியந்திரங்களைக் கொணர்ந்து அச்சியந்திர சாலைகளை நிறுவுதல், ஓலைச் சுவடிகளை அச்சேற்றி நூல்களுக்கு நிலையான ஆயுள் அளித்தல், அச்சிட்ட நூல்களைப் பரப்புவதனூடு அறிவுப் பரவலாக்கத்தை நிகழ்த்துதல் முதலாய செயற்பாடுகளை காலனிய காலத்தில் மேற்கொண்ட ஈழத்து அறிஞர்கள், தமிழ்ப் பதிப்புலகின் கேந்திர தேசமாக ஈழநாட்டை மிளிரச் செய்தனர். ‘சீர்பதித்த நற்பதிப்பு மூலவர்’ ஆறுமுக நாவலர், ‘பதிப்பு உலகின் தலைமைப் பேராசிரியர்’ சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகியோரதும் அவர்களைப் பின்பற்றி இத்துறைசார்ந்து ஈடுபட்டோரதும் பணிகளை ஆராய்ந்து பயன்கொள்வது நமது கடமையாகும்” என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.