அவுஸ்திரேலியச் சூழலையும், இங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையையும் மையப்படுத்தி மெல்பனில் வதியும் எழுத்தாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தியின் தெரிவிலிருந்து வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பே ‘தைலம்’ நூல். யூகலிப்டஸ் மரங்கள் அவுஸ்திரேலியாவில் பரவலாகக் காணப்படும் மரமாகவும், இந்நாட்டுக்கே பிரத்தியேகமான குவாலா கரடிகளின் வாழ்விடமாகவும் காணப்படுகின்றது. அந்த மரங்களில் இருந்து சாரமாகப் பெறப்படும் தைலத்தைப் போன்று இங்குள்ள மக்களின் வாழ்க்கைச் சாராம்சத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தொகுக்கப்பட்ட சிறுகதைகளுக்கு தைலம் என்று பெயரிடப்பட்டமை சாலப் பொருத்தமாகவே காணப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் இழப்பையும், புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தம் அடையாளத்தைக் கட்டிக் காக்க எண்ணும் தமிழ் மக்களின் மனப்பாங்கையும், புகுந்த இடத்துக்கேற்ப முற்றிலுமாய் தம்மைத் தொலைக்கத் தயாராக உள்ளவர்களின் மனப்பாங்கையும், நவீன தொழில் நுட்பத்தால் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் தமது எழுத்துக்களில் எழுத்தாளர்கள் அற்புதமாக வடித்திருக்கின்றார்கள் என்றேதான் கூற வேண்டும்.
முதலாவது கதை தென் துருவத்தேவதை கன்பரா யோகன் எழுதியது. புகலிடம் தேடி வந்து தனிமையை மட்டுமே அறிந்திருந்த கதிர் என்கின்ற இளைஞன், தந்தையார் தென்துருவத்தில் வேலை செய்த போது பிறந்த ஒரு வெள்ளையினப் பெண்ணின் உருவத்தில் தேவதையைக் காண்கின்றான். கதையோடு சோப்புத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையைக் கற்பனைக்கு கொண்டு வந்திருந்த விதமும் அருமை.
சரளமாக ஆங்கிலம் பேச முடியாத தயக்கத்துடன், தானாக வலிந்து சென்று நட்பு கொள்ள முடியாத ஒதுக்கமும் சேர்ந்து கொள்ள ஒடுங்கி வாழப் பழகும் ஒருவனுக்கு வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக் கொடுக்கின்றாள் ஒரு தேவதை. உயரத்தில் ஏறி நின்று உலக இயற்கையை ஆராதிக்கவும், தன் கூட்டில் இருந்து மெல்ல வெளியே வந்து உலகோடு ஒன்றவும் கற்றுக் கொடுத்தவள், சொல்ல முடியாத சோகத்தைத் தனக்குள்ளே சுமந்து கொண்டிருக்கின்றாள். வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொடுத்த அவளுக்குள் பெரும் சோகமொன்று ஒளிந்திருந்தது என்பதை அவளது மரணத்தின் பின்தான் தெரிந்து கொள்கின்றான் கதிர்.
கருவைத் தாங்கியிருந்த ஒரு தேவதையைக் கண்ணுக்குள் வைத்துக் காக்க வேண்டியவனே போதையின் போதனையில் அவள் கழுத்தைத் திருகிக் கொன்றிருக்கின்றான் என்ற அதிர்ச்சிச் செய்தி கதிரை நிலை குலைய வைக்கின்றது. அவளுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்த முடியாத போதும் காற்றோடு கலந்து விட்டவளுக்கு, அதே காற்றினில் தனது சோகத்தைச் சேதியாகச் சொல்லி முடித்த விதம் சிறப்பு.
தெய்வீகன் எழுதிய பொதுச்சுடர் என்ற சிறுகதை, போராளி ஒருவர் புலம் பெயர்ந்து வந்த இடத்தில் எதிர் நோக்கியிருந்திருக்கக் கூடிய மனஉளைச்சல்களைப் படம் போட்டுக்காட்டியிருந்தது. மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடிய போராளி ஒருவரின் விழுப்புண் கூடக் காட்சிப்பொருளாக்கப்பட்ட விதமும் மனசாட்சியே இல்லாமல் அந்த நினைவுகளைக் கிளறி மனதைப்புண்ணாக்கும் விதத்தில் நம்மவர் நடந்து கொள்ளும் விதமும் வேதனை தருவதொன்றே. மரியாதை கொடுக்காவிட்டால் கூடப் பரவாயில்லை அதனை ஆய்வுப் பொருளாக்கி ஆதாரம் தேட முயற்சித்து அவமானப் படுத்தாமல் விடுவதே போராளிகளுக்கு கொடுகக் கூடிய மிகக் குறைந்த பட்ச மரியாதை.
மக்களுக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்து நின்றவர்களின் அத்தனை தியாகமும் அர்த்தமின்றிப் போனதான மனநிலையிலும், அத்தனை உயிர்களைப் பலி கொடுத்திருந்திருந்தும் பலனற்றுப் போனது ஆறாக்காயமாகப் படிந்திருக்கும் நிலையிலும் அதைக் கிளறி விட்டு பூராயம் தேட முயற்சிப்பது, உயிருடன் வைத்து பிரேத பரிசோதனை செய்வதற்கொப்பானது என்பதை இச்சிறுகதை சிறப்பாகப் பதிவு செய்திருந்தது. போராட்டதுக்கு ஆதரவு கொடுக்கக் தொடங்கப்பட்ட ஒரு சங்கத்தில், பதவிக்காக ஒரு போராளியின் மானத்தை அடகு வைக்க நினைப்பது நடைமுறையில் இல்லாமல் இல்லை. அது வலியைத் தராமலும் இல்லை. பெண்மையை பேசும் விதத்தை கொஞ்சம் மாற்றியிருக்கலாமோ என்ற எண்ணம் மட்டும் எனக்குள் தோன்றியது.
( அமரர் ) அருண். விஜயராணியின் தொத்து வியாதி கதை என்னைக் கவரத் தவறவில்லை. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொற்றிக் கொள்ளும் எண்ணக் கருக்களாலும், நடைமுறைக்கொவ்வாத அந்நியக் கலாசாரத்தின் தொற்றுதலாலும் எம்மவர்களின் மனதில் விவாகரத்து என்பது எத்தனை எளிதான விடயமாக மாறிவிட்டிருக்கின்றது என்பதை இச்சிறுகதை தெளிவாகக் காட்டியிருந்தது. ஆடம்பர வாழ்க்கையே அர்த்தமுள்ளது என்றெண்ணும் ஒரு மனைவியாலும், நாகரிக வாழ்க்கையே நல்ல வாழ்க்கை என்று வாழத் தலைப்படும் ஒரு கணவனாலும் மனங்கள் ஒன்றாமல் போய் மணமுறிவில் வந்து நின்றிருந்தமை அடுத்த சந்ததியினரைப்பற்றி அச்சம் கொள்ள வைத்தது. கடந்த காலங்களும், கட்டிக் காத்த கலாசாரமும் காற்றில் கரைந்து விட, அர்த்தமில்லா வாழ்க்கைக்காகவும், போலி ஆடம்பரத்துக்காகவும் குடும்பக்கட்டுப்பாட்டை குலைக்க எண்ணும் ஆணினதும், பெண்ணினதும் வாழ்க்கை சித்திரிக்கப்பட்ட விதம் நம்மை ஒருகணம் சிந்திக்க வைத்தாலே போதுமானது. ஒருகாலத்தில் வாழ்வாதாரத்துக்காகக் கணவனைத் தங்கியிருக்க வேண்டிய நிலையில் அத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொண்டு பெண்கள் நரகத்துள் வாழ வேண்டியிருந்தது. இன்று மனைவியை அடிமையாக நடத்தும் ஒரு ஆணுடன் பொருளாதாரத்துக்காக தங்கியிருக்கத் தேவையில்லை என்று நம்பிக்கை கொடுக்கும் விதமாக இக்கதையை அவர் முடித்த விதமும் சிறப்பாக இருந்தது.
அவுஸ்திரேலியா, பல்லின கலாசார நாடு என்ற ரீதியில் இங்கு வாழும் பல்வேறு நாட்டுக்காரரின் மன நிலையில் வெள்ளையினத்தவரை எப்படி நோக்குகின்றார்கள் என்பதை அசன் எழுதிய பனை என்ற சிறுகதை அலசுகின்றது. வெள்ளையினத்தவர்கள், வியட்னாமியர் என்று குற்றம் காணுவதுடன் நின்றுவிடாமல், தினப்பொழுதுக்கும் எதைப்பற்றியாவது குறை சொல்லிக் கொண்டிருக்கும் போர்த்துக்கல்லைச் சேர்ந்த டோனி என்பவன்தான் இந்தக் கதையின் நாயகன். இவனுடன் ஆரோக்கியமான விவாதங்களில் விட்டுக் கொடுக்காமல் மல்லுக் கட்டும் ரேச்சல் என்ற வெள்ளையினப் பெண்ணும் ஒரு பாத்திரமாகின்றாள். இவர்களுடன் ‘பற்றிக்’ எனப்படும் பிரித்தானிய இளைஞனும் ஒப்பந்த அடிப்படையில் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கின்றார்கள். ஆளுக்கொரு குணவியல்புடன் அவர்களின் காலைப்பொழுதுகள் ஆரம்பித்து ஒரு நாட்பொழுது எப்படிக் கழிகின்றது என்பதை கற்பனையில் காணமுடிந்தது.
பழகப் பழக டோனி பெண்களை மட்டமாக மதிப்பவன் மட்டுமல்லாமல், அவன் சொல்லும் கருத்துகள் ஏற்கப்படாத போது பெரும் விசனத்துக்கும் உள்ளாகின்றான். பற்றிக்கின் வேலை நீட்டிப்பு செய்யப்படாமல் போனபோது, அவன் தன் வீட்டை விற்க முற்படுகையில் சொத்தால் மட்டுமே உறவான தம்பதியரிடையே முரண்பாடு ஏற்படுவதும் கதையினூடு சொல்லப்படுகின்றது. ஆட்குறைப்பு, வேலையுயர்வு என்று வரும்போது ‘நிறங்களும்’ ஒரு பங்கு வகிக்கின்றன என்ற நடைமுறையும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. பெண்ணின் நிர்வாணப்படத்தையே டோனி கொம்பியூட்டர் திரையில் போட்டு வைத்திருக்கும்போது, எம்மண்ணின் மணம் பேசும் ஒரு பனைமரக் கூடலைக் கூடப் போடத் தைரியமில்லாத எம்மவரின் பெருமூச்சுடன் கதை நிறைவுக்கு வருகின்றது.
புதர்க்காடுகளில் நடக்க வைப்பது போன்றதான அனுபவத்தைக் கொடுக்கும் விதமாக முருகபூபதியின் புதர்க்காடுகளில் சிறுகதை அமைந்திருக்கின்றது. இயந்திரமயமாக நகரும் வார நாட்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் வார இறுதியை நண்பர்கள் கழித்த விதத்தைக் கண்முன்னே கொண்டு வந்த விதம் சிறப்பாக இருந்தது. புலம் பெயர்ந்து உடல் இங்கு வாழ்ந்து கொண்டிருந்தாலும், சிந்தை சுற்றிக் கொண்டிருப்பது என்னமோ தாய் மண்ணில்தான். எதை அனுபவித்தாலும் அதைச் சொந்த நாட்டின் வீதியுடனோ அல்லது இடங்களுடனோ தொடர்பு படுத்தி சொர்க்கம் காணுவது மண்பாசம் மாறாத அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்கின்றது.
ஒரு அழகான ஆரணங்கு மட்டும் இல்லையென்றால் பட்சிகளின் கீதமும் நெடிதுயர்ந்த பச்சைப் பசேல் என்ற மரங்களும், மெல்லிய கீதத்துடன் வளைந்தோடும் நதியும் இருந்துதானென்ன? வோல்கா என்ற வியட்னாம் பெண்ணொருத்தியுடனான உரையாடலில், அவரவர் தம் நாட்டைப்பற்றிய பெருமைகளைப் பகிர்ந்து கொள்கின்றார்கள். விழுதுகள் எப்போதும் வேர்களுடன்தான் என்பது போல் அவர்களின் உரையாடலில் ஊர்மணமே அதிகம் வீசுகின்றது. போரின் தழும்புகளையும் அதன் வடுக்களையும் சுமந்தபடி தம் நினைவுளைப் பகிர்ந்துகொள்ளும் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த இருவரின் உரையாடல், இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கே பொதுவானதான பைன் மரத்துடன் முடிவடைகின்றது. மரப்பட்டைகள் உரிந்து கொண்டே போனாலும், அதைப் பற்றிய கவலையின்றி ஏதோவொரு பயன் கொடுப்பேன் என்பது போல் வளரும் பைன் மரத்தைப் போன்று மனிதனும் இழப்புகளைப் பற்றி வருந்தாது ஏதோவொரு தொலை நோக்குடன் வளர வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்திருக்கின்றார் எழுத்தாளர்.
நடேசன் என்ற மிருக வைத்தியர் தன் தொழிலுடன் சம்பந்தப்படுத்தி வௌவால்கள் என்ற சிறுகதையைப் புனைந்திருக்கின்றார். விலங்குகளை விட எண்ணத்தாலும் செயல்களாலும் கீழான நிலையில் இருக்கும் மானிடருக்குள் இருக்கக் கூடிய பல ஆளுமைக் கோளாறு பற்றியும் முகத்திரைகளுக்குள் மறைந்திருக்கக் கூடிய உண்மை முகங்கள் பற்றியும் உரித்துக் காட்டுகின்றார். வயதுக்கும், அனுபவத்துக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டிய அவசியமின்றி எல்லோரையும் பெயர் சொல்லி அழைக்கக் கூடிய சமத்துவ பூமியான அவுஸ்திரேலியாவில் வேலை செய்யும் மிருக வைத்தியர் ஒருவருக்கு உதவித்தாதியாக இணைந்து கொண்ட அடிக்கா என்ற ஒரு பெண்ணின் மன உணர்வுகளைப் பற்றி அலசுவதன் மூலம் மனிதருக்குள் மறைந்திருக்கக் கூடிய வியாதி ஒன்றைப் பற்றி எழுத்தாளர் இந்தச் சிறுகதை மூலம் கோடிட்டுக் காட்டியிருக்கின்றார். மிருகங்களுடன் வேலை செய்தாலும் இரண்டு கால் மிருகங்களின் உணர்வுகளைப் பற்றித் தெளிவாகக் கணிக்கின்றார் மிருக வைத்தியர்.
துப்பறிவாளர் போன்று அடிக்காவின் ஒவ்வொரு செயலையும் கண்காணித்தவர், அவளுக்கு இம்பொஸ்ர்சிம்ரோம் என்ற மனவியாதி இருப்பதைக் கண்டு பிடிக்கின்றார். அதன் விளைவாக அவளுடைய வேலையும் பறி போய், பின்னர் தன் வீட்டைக் கொளுத்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சிறுகதை முடிகின்றது.
தான் செய்யும் வேலைகளில் நம்பிக்கை ஏற்படாததுடன், சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தாம் இல்லையோ என்ற கற்பனையிலும் சந்தேகத்திலும் மனதுக்குள் ஆயிரம் வௌவால்கள் குடியிருந்து மருட்டிக் கொண்டிருக்கும் நோயைப் பற்றிய விழிப்புணர்வைக் கொடுத்த விதம் சிறப்பானது.
ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் இருவேறு உலகங்களில் வாழும் அவல நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தின் உண்மை நிலையை ஒரு வீடு இருவேறு உலகம் என்ற சிறுகதை மூலம் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார் எழுத்தாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி. இடம்பட வீடெடேல் என்பதன் பொருளை இச்சிறுகதை சிறப்பாக விளக்குகின்றது. ஆடம்பரத்துக்காக பெரிய வீட்டைக் கட்டி, அதை எல்லோருக்கும் காட்டிப் பெருமையடித்துக் கொள்வதற்கு பின்னால் உறவுகளுக்குள் நெருக்கம் இல்லாமல் விரிசல் விழுந்து கொண்டே போகின்றது என்பதுதான் இப்போதைய நிலைமை. தொழில் நுட்பம் எமது வாழ்க்கையை இலகுவாக்கி விட்டிருக்கின்றது என்ற மாயைக்குப் பின்னால் உறவுகளுக்கு இருக்க வேண்டிய ஆத்மரீதியான நெருக்கத்துக்கும் பிணைப்புக்கும் ஆப்பு வைத்து விட்டிருக்கின்றது என்பது தான் உண்மை. பிள்ளைகளைப்பற்றி எல்லாவற்றையும் அறிந்து வைத்திருக்கின்றோம் என்று பெற்றோர் எண்ணிக் கொண்டிருக்க, அவர்கள் அறியாமல் அதே வீட்டில் மகன் இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்பது தெரியவரும் நிகழ்வுகள் மிகச் சாதாரணமாக நடைபெறக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை.
விளைமீன் என்ற சிறுகதையை எழுத்தாளர் ஜே.கே புனைந்த விதம் புன்னகையை வரவழைத்தாலும், மூத்தவர்களின் புலம் பெயர் வாழ்க்கையை எண்ணி வேதனை தோன்றாமலும் இல்லை. விளைமீன் மீது ஒரு மூதாட்டி கொண்ட ஆசை அவரை என்னவெல்லாம் செய்ய வைத்திருக்கின்றது. வண்டியோட்டப் பழக வைத்து, தெரியாத ஊரில், புரியாத மொழியுடன் ஏறாத வண்டியெல்லாம் ஏற வைத்து ஊர் முழுவதும் தனியாகவே சுற்றித் திரிய வைத்து, ஆங்கிலம் பேச வைத்து, நண்பர்களைத் தேட வைத்து உலகத்தைப் புரட்டிப் போட வைத்து, தன்னம்பிக்கை வர வைத்து என்று எத்தனை எல்லாம் செய்ய வைக்கும் ஆற்றல் நாம் தீராத ஆசை கொள்ளும் ஒரு பொருளுக்கு உண்டு என்ற யதார்த்தமான உண்மையை ஒரு மீன் மூலம் கதாசிரியர் சொல்லியிருக்கின்றார். குரக்கன் புட்டுக்கு தேங்காய்பூக்கூடப் போடத் தேவையின்றிப் பதமாகப் பொரித்த விளைமீனின் சுவையைப் பற்றிச் சொன்ன விதத்தில் வாயில் நீரை ஊற வைத்தது. வரக்கூடாத இடத்தில் வந்து மாட்டுப்பட்ட விளைமீன் போல, சொந்த ஊரைத் துறந்து அந்நிய மண்ணில் நாவின் ருசியைக் கூட அடகு வைத்து அல்லற்பட்ட நிலையில் வாழ்கின்றார் ஒரு பெண்மணி. அந்தப் பெண்மணியின் ஒரு சிறிய தேடல் அவருக்குள் இருக்கக் கூடிய தன்னம்பிக்கையை வெளிக்கொணர்ந்து பெரும் சக்தி வாய்ந்த பெண்ணாக மாற்றியிருக்கின்றது என்பதை அங்கதம் இழையோட கொண்டு சென்ற விதம் ரசிக்க வைத்தது.
அந்த நாறல் மீனின் சுவை மாமிக்கு ஊர் ஞாபகங்களை மீட்டு வரும் போது, மருமகளுக்கு அது வீட்டை நாற வைக்கும் விடயமாகவும், மகனுக்கு வீட்டைக் கொளுத்தும் விடயமாகவும் இருந்தமை மூத்தவர்களில் ஒரு பரிதாபத்தை உண்டு பண்ணாமல் இல்லை. சிறுவயது முதல் ரசித்த ஒன்றுக்காய் பெற்ற பிள்ளையையே பிரியத் துணிந்த மாமி பிடித்த ஒன்றுக்காய், பிடிக்காதவற்றைச் சகித்துக் கொண்டிருக்கக் தேவையில்லை என்ற ஒரு பாடத்தையே கற்றுத் தந்திருக்கின்றார் என்று தோன்றியது.
எழுத்தாளர் தாமரைச்செல்வியின் பறவைகளின் நண்பன் என்ற கதை, அன்பு என்ற பரிமாணம் ஐந்தறிவு முதல் ஆறறிவு வரை பேதமின்றிப் பேணப்படுகின்றது என்ற உண்மையை எடுத்துச் சொல்லியது.
ஜோ என்ற இருபத்தெட்டு வயது வியட்னாமிய இளைஞன் பறவைகளுடனும் பேசும் அளவுக்கு கருணை கொண்டவன். அவனுக்குக் குணப்படுத்த முடியாத வியாதி ஒன்று வந்து விட்டிருந்தது. இப்போதுதான் கவலை மறந்து வாழத் தொடங்கியிருக்கும் தன் வீட்டுக்காரருக்கு, அந்தத் துக்கச் செய்தியைச் சொல்லி வருந்த வைக்க வேண்டாமே என்று எண்ணத்தில் அந்தத் துயரத்தை தான் மட்டுமே அனுபவித்துக் கொண்டு, தனக்குள்ளேயே அந்த உண்மையைப் பூட்டி வைத்துக்கொள்ளுமளவுக்கு அன்பு நிறைந்தவன். மனம் பூராவும் காதல் நிறைந்து வழிந்தாலும் அந்த வலியை காதலிக்குப் பரிசாகக் கொடுக்க கூடாது என்று எண்ணும் அளவுக்கு பக்குவமானவன்.
மெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட கைப்பிடி கொண்ட வெறுமையான இருக்கையும், மௌனமாயிருக்கும் பறவைகளும் மட்டுமே ஒரு இறப்புக்கான சாட்சிகள் என்று முடித்திருந்த விதம் அருமையாக இருந்த து.
ஆசி.கந்தராஜாவின் கங்காரு என்ற கதை, கங்காரு ஒருவனின் கனவாகவே மாறி, அவனை இம்மண்ணுக்குக் கொண்டு வந்ததும் அவனை கங்காருக்களுக்காகவே வேலை பார்க்க வைத்து, அவைக்காக உரிமைக்குரல் கொடுக்க வைத்து, அவன் மன நிலையில் மாற்றத்தை உண்டு பண்ண வைத்து, இறுதியில் அவன் இருப்பையே கேள்விக்குறியாக்க வைத்துக் கதையை முடித்த விதமும் சிந்திக்க வைத்தது.
குறைமாத வளர்ச்சியுடன் உலகை எட்டிப் பார்த்த தனக்கும் கங்காருவுக்கும் ஏதோவொரு சம்பந்தம் இருப்பதாக உணர வைத்து, ஒரு இனம்புரியாத பந்தத்தை கங்காருக்களுடன் உருவாக்கிக் கொண்ட சயந்தனுக்கு இயல்பாகவே இயற்கையை நேசிக்கும் குணம் இருந்தது.
அன்னையின் பராமரிப்பின்றி முழு உருவம் காண முடியாக்குட்டிகள் தாயை இழந்து விட்டால் எப்படியெல்லாம் தவித்துப் போகும் என்று கற்பனையில் கண்டு, கலங்கிப் போன சயந்தனின் இளகிய மனம் இதயத்தைத் தொட்டது. தாயைப் போரில் பறி கொடுத்த இலங்கைக் குழந்தைகளின் துயரத்தையும் அது ஒருபுறமாய் தொட்டுச் சென்றது இந்தச் சிறுகதை. தாயிலிருந்து பிரித்தெடுத்து ஆய்வுக்காகப் பரிசோதனைக் கூடத்தில் பலிக்கடாக்களாக வளர்க்கப்படும் குட்டிகளுக்காகப் பரிதாபப்படும் அவனது குணவியல்புகள் ஒரு கட்டத்தில் கங்காரு போன்றதாகவே மாறி விடுகின்றது. அன்புக்கு இல்லை அடைக்கும் தாழ் என்பது போல் ஐந்தறிவு விலங்கிடம் அவன் கொண்ட பாசம் எப்படியெல்லாம் அவனை செயற்பட வைத்தது என்று ஈரத்துடனும், அறிவியல் பூர்வமான செய்தியாகவும் சொன்ன விதம் மனதைத் தொட்டது.
கே.எஸ் சுதாகரின் விளக்கின் இருள் என்ற சிறுகதையில் ஒளி தரும் விளக்கின் கீழ் இருள் இருப்பதைப் போன்று, அனைவருக்கும் அத்தியாவசியமானதாக மாறிவிட்ட தொழில் நுட்ப வளர்ச்சியின் பின்னால் மறைந்துள்ள ஆபத்தைப் பற்றியும் அதைப் பாவித்து ஆதாயம் தேடும் சில தீய சக்திகள் பற்றியுமான ஒரு விழிப்புணர்ச்சியை உண்டு பண்ணும் ஒரு கதையாகக் காணப்பட்டது. மின்னியல் கழிவுகளால் மண்ணும் நீரும் எவ்வாறு மாசுபடுகின்றது என்பதையும் சூழலின் வெப்ப நிலை உயர்ந்து வாழ்வதற்கு பொருத்தமில்லா சூழல் உருவாகி மனித சஞ்சாரமற்ற ஒரு சூனியப் பிரதேசமாக மாறி விடும் அபாயம் இருக்கின்றது என்பதையும் பாத்திரங்களூடாக சொன்ன செய்தி மனதில் பதியாமல் இல்லை.
அவள் ஒரு பூங்கொத்து என்ற தேவகி கருணாகரனின் கதை, இனம் - மதம் என்ற பாகுபாட்டைத்தாண்டி இலங்கையைப் பின்னணியாகக் கொண்ட ஒரு இளைஞனின் காதல் மலர்ந்த விதத்தைச் சொன்னது. சொந்த மண்ணில் வெள்ளையினத்தவரின் ஆக்கிரமிப்பில் தம் சந்ததியைத் தொலைத்து விட்ட பூர்வகுடியினப் பெண் ஒருவருடன் காதலில் வீழ்ந்த கதையின் ஊடாக அவுஸ்திரேலிய மண்ணிலும் நடந்த இன ஒழிப்பு பற்றிப் பேசுகின்றார் கதாசிரியர். காதலில் உணர்வுகள் ஒன்றிப் போகும் போது மற்றைய வேறுபாடுகள் மறைந்து போய் விடுகின்றன என்பதையும் பண்பாடு பற்றிப் பேசும் பெற்றோர் கூட யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்துக்கு இப்போது வந்து விட்டமையையும் பற்றிக் கூட கதாசிரியர் கோடிட்டுக் காட்டியிருக்கின்றார்.
சொந்த நாட்டிலேயே இரண்டாம்தரக் குடிமக்களாக வாழ வேண்டிய அவல நிலையிலுள்ள இரு வேறு சமூகத்தின் வலியும், இன ஒழிப்பும் பொதுவானதாகவே இருந்து இளம் நெஞ்சங்களைக் காதலில் இணைக்கும் பாலமாக இருந்ததைச் சொல்லி, ஒரு திருடப்பட்ட ஒரு தலைமுறையின் வேதனையைத் தமிழில் புடம் போட்டும் காட்டியிருக்கின்றார் கதாசிரியர்.
அவுஸ்திரேலியப் பின்னணியைக் கொண்டு பன்னிரண்டு எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளைத் தாங்கிய தைலம் சிறுகதைத் தொகுப்பு பல்வேறு கோணங்களில், பல்வேறு மட்டங்களில், இங்கு வாழும் மக்களின் மன நிலையையும் வாழ்க்கையையும் அலசுகின்றது. வாசிக்கும் போதே அவுஸ்திரேலியா பற்றியும் இங்குள்ள வாழ்க்கை முறைமை பற்றிய ஒரு விளக்கமும் தெளிவும் ஏற்பட்டு விடுகின்றது. பிராந்திய ரீதியிலான சிறப்பைக் கண் முன்னே கொண்டு வரும் இச்சிறுகதைத்தொகுப்பு வாசிக்கவேண்டிய நூல்களில் ஒன்று என்பதில் எந்த ஐயமுமில்லை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.