கம்பராமாயணத்தில் ஆயிரம் என்ற எண்ணுப்பெயரின் சிறப்புகள்! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
முன்னுரைபழங்காலத்தில் ஆயிரம் என்ற எண்ணிக்கை பேச்சுவழக்கில் பெரிய எண்ணாகக் கருதப்பட்டது. ஆயிரம் தடவை சொன்னேனே, ஆயிரம் தடவை போய் சொல்லி என்பது நாம் அறிந்ததுதான். தொல்காப்பியத்தில் எண்ணுப் பெயர் புணரியல் விதிகள் விரிவாக குற்றியலுகர புணரியலில் இடம் பெற்றுள்ளன. எண்ண இயலாத அளவீடுகளைக் குறிக்க தாமரை, வெள்ளம், ஆம்பல் முதலான பெயர்களும், வழக்கில் இருந்ததைப் பழந்தமிழ் இலக்கியங்களில் நாம் காண முடிகிறது. பரிபாடலில் நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என்பன பேரெண்ணுப் பெயர்கள் என பாடப்பட்டுள்ளது. சங்கம் என்பது கோடி என்றும், தாமரை என்பது கோடாகோடி என்றும் சொல்லப்படுகிறது. கம்பராமாயணத்தில் ஆயிரம் என்ற எண்ணுபெயர் வரும் இடங்களை இக்கட்டுரையின் வழி ஆராய்வோம்.
சீதைக்கு, இராமனுக்கு ஆயிரம் கண்கள் வேண்டும்
இராமன் வில்லை உடைத்ததைக் கேட்ட மிதிலை நகரத்து மக்கள் சந்தோஷமாகப் பேசினர். இராமனின் அழகைக் காண்பதற்குச் சீதைக்கு ஆயிரம் கண்கள் வேண்டும். சீதையைக் காணவும் அதைப்போல இராமனுக்கும் ஆயிரம் கண்கள் வேண்டும். இந்த அழகனின் தம்பியினுடைய அழகையும் பாருங்கள் என்று சிலர் சொல்லுவர். இந்த அழகர்களைப் பெற்றுள்ள இவ்வுலகம் தவம் பெற்றுள்ளது என்பது சிலர். இவ்வுலகில் தோன்றிய அழகர்களான இவ்விருவரையும் நாம் காணுமாறு இந்த மிதிலை நகருக்கு அழைத்து வந்த விசுவாமித்திரனை வணங்குங்கள் என்பர் ஒரு சிலர்.
“நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்
கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கும் அன்னதேயாம்
நம்பியைக் காண்மின் என்பார் தவம் உடைத்து உலகம் என்பார்
இம்பர் இந்நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார்”
(கார்முகப்படலம் 657)
ஆயிரம் கைகள்
தசரதன் சேனைகளுடன் சந்திர சயலம் விட்டுச் சோனையாற்றை அடையும்போது, நட்சத்திரங்களாகிய பற்களைப் பெற்ற இரவாகிய இரணியனைக் கோபித்து தொகுதியாக உள்ள வெப்பம் கொண்ட கதிர்கள் என்று சொல்லப்படுகின்ற ஆயிரம் கைகளை வெளியே நீட்டிக்கொண்டு, தான் தோன்றுகின்ற இடமாகக் கொண்ட உதயகிரி எனும் பொன் தூணிலிருந்து நரசிங்க மூர்த்தியைப் போல விளங்கும் சூரியன் உதயமானார்.