சிறுகதை: இரசவாதம்! தெலுங்கில் : பி.அஜய்பிரசாத் | தமிழில் : பொருநை க.மாரியப்பன்
- தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத் -
தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத் - பி.அஜய் ப்ரசாத் (முழுப் பெயர் - பாதர்ல பிரசன்ன அஜய் ப்ரசாத்) ஆந்திரமாநிலம், குண்டூர் மாவட்டம், நகரிகல்லு கிராமத்தில் ஜூன் 9, 1972இல் பிறந்தவர். 2005ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் சிறுகதைகளை எழுதி வருகிறார். இவரின் கதைத் தொகுதி 2018ஆம் ஆண்டு “லோயா மரிகொன்னு கதலு” என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இவரின் இரண்டாவது கதைத் தொகுதி “காலி பொரலு” ஆகும். இவரின் கதைகள் ஆங்கிலம், இந்தி, பெங்காளி மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவந்துள்ளன.
மொழிபெயர்ப்பாளர்: க.மாரியப்பன் - பொருநை க.மாரியப்பன், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் ஏப்ரல் 4, 1976இல் பிறந்தவர். ஆந்திரமாநிலம், திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையில் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், ஒப்பியலாளர். சமீபத்தில் ஏப்ரல் 23, 2022இல் இவரின் தெலுங்குச் சிறுகதைத் தொகுப்பு மொழிபெயர்ப்பு நூல் ‘மஹாவித்துவான்’ வெளிவந்தது.
அன்று மதியம் பழைய புத்தகக் கொட்டகையில் இருந்தேன். மே மாதம் என்பதால் உள்ளே ஒரே வெக்கை. காற்றில்லாத புழுக்கத்தில் மர அலமாரிகளின் நடுவில், பழைய புத்தகங்களின் வாசனையில் என்னோடு சேர்ந்து, உள்ளே வேறு இரு வாடிக்கையாளர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.
சாலையோரம் இருக்கும் இந்தப் புத்தகக் கொட்டகையின் பின்னால் கிருஷ்ணா வாய்க்கால். கொட்டகை முன்பும் சாலை மீதும் பெரிய ஆரவாரம் இருக்காது. இந்தக் கொட்டகைகள் எல்லாம் பதினைந்து வருடங்களாக, அதாவது என் கல்லூரி நாட்களில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். பத்துவருடங்கள் கழித்துக் கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு எங்கள் ஊர் அத்தங்கியை விட்டுவிட்டு இந்த விஜயவாடாவிற்கு வந்து சேர்ந்தேன். பல ஆண்டுகளாக இந்தக் கொட்டகை அப்படியே இருக்கிறது. முதல்முறை பார்த்தபொழுது அவருக்கு நீண்ட தாடி இருந்தது. அவர் புத்தகங்களைப் படிக்காவிட்டாலும் எந்தெந்தப் புத்தகங்கள் யார் வாங்குகிறார்கள் என்று சொல்லிவிடுவார். வாங்குபவர்களின் அவசரத்திற்குத் தகுந்தவாறு அப்போதைக்கு அப்போதே விலை நிர்ணயத்துவிடுவார். அவரிடம் ஆரம்பத்தில் ஒன்றே கால் காசு விலையுள்ள ஒரு பழைய புத்தகத்தை இருநூற்றைம்பது ரூபாய் கொடுத்து வாங்கினேன். புத்தகங்கள் விற்பதில் அவர் பேராசைப்படுபவர் என்று நானும், புத்தகம் வாங்குவதில் நான் பரமகஞ்சன் என்று அவரும் வாதிடுவோம். எங்கள் இருவரின் அறிமுகம் அவ்வளவுதான். அதற்குமிஞ்சி வளரவில்லை.
அவர் பலரிடம் வாதிடுவதைப் பல சமயம் பார்த்திருக்கிறேன். விலை சொல்வதில் எள்ளளவும் தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை. ஆத்திரத்தில் பொங்கியெழுந்து என்ன பேசுவாரோ தெரியாது. பேசும்பொழுது எழுந்து கத்திக்கொண்டு கடைக்குள்ளேயே அடியெடுத்துவைத்து அங்கும் இங்கும் நடப்பார். அவரின் குரல் கனத்த குரல். பேசும்பொழுது இரண்டு வீதிகளுக்கு அப்பாலும் அவரின் குரல் கேட்கும். அப்படிப் பேசும் பொழுது ஒரு சிலசமயம் யாரும் தடுக்காமல் இருந்தால் பேச்சு தானாகவே அரசியலை நோக்கிப் போகும். ஆவேசம் மேலும் அதிகமாகும். சாதாரணமாக எப்பொழுது பார்த்தாலும் கொட்டகை முன்பு பாயை விரித்துப் பழைய புத்தகங்களுக்கு அட்டைப் போட்டுக்கொண்டும், கிழிந்துப்போன காகிதங்களை ஒட்டிக்கொண்டும் இருப்பார்.