க்ரியா ராமகிருஷ்ணனும் , ரோஜா முத்தையா நூலகத்துக்கான அவரது பங்களிப்பும், அது பற்றிய பேராசிரியர் எம்.ஏ.நுஃமானின் உரையும்! - வ.,ந.கிரிதரன் -
அமரர் க்ரியா ராமகிருஷ்ணனின் தமிழ்ப் பதிப்பகத்துறைக்கான பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. க்ரியா என்றால் தரம் என்னும்சொல் நினைவுக்கு வரும். தேர்தெடுத்த தரமான தமிழ் நூல்களை, ஏனைய மொழிகளில் வெளியான தமிழ் மொழிபெயர்ப்புகளைக் க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. நூல் வெளியீட்டுடன் , க்ரியா பதிப்பகத்தின் அகராதித்துறைக்கான பங்களிப்பும் முக்கியத்துவம் மிக்கது. நூல்வெளியீடு, அகராதித் துறைப் பங்களிப்பு இவற்றுடன் இன்னுமொரு முக்கிய பங்களிப்புக்காகவும் க்ரியா ராமகிருஷ்ணன் நினைவு கூரப்படுகின்றார். நினைவு கூரப்பட வேண்டும். அது ரோஜா முத்தையா நூலகத்துகான அவரது பங்களிப்பு.
தனியார் உடமையான ரோஜா முத்தையா நூலகத்தைச் சிகாகோ பல்கலைக்கழகம் ஆய்வு நூலகமாக மாற்றியதில் முக்கிய பங்கினை வகித்தவர்களில் ஒருவர் க்ரிய ராமகிருஷ்ணன். சிகாகோ பலகலைக்கழகத்தின் சார்பில் பேராசிரியர் ஜேம்ஸ் நை தமிழகம் வந்திருந்தபோது, மொழி அறக்கட்டளையின் தலைவராகவிருந்தவர் க்ரிய ராமகிருஷ்ணன். அப்போது தமிழ் மொழி அறக்கட்டளையுடன் தொடர்பிலிருந்த பேராசிரியர் ஏ.கே.ராமனுஜனின் பரிந்துரையின் பேரில் , பேராசிரியர் ஜேம்ஸ் நை க்ரியா ராமகிருஷ்ணனை வந்து சந்திக்கின்றார். அவரை அப்போது தமிழகத்தில் நூலகத்துறையில் முக்கிய பங்காற்றிக்கொண்டிருந்த ப.சங்கரலிங்கத்தைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்தார் க்ரியா ராமகிருஷ்ணன். 'அந்தச்சந்திப்பே சிகாகோ பல்கலைக்கழகம் மொழி அறக்கட்டளையுடன் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தை நிறுவ வேண்டும் என்ற முடிவுக்குக் காரணமாக அமைந்தது' என இந்து தமிழ் இணையத்தில் வெளியான க்ரியா ராமகிருஷ்ணனின் கட்டுரை வெளிப்படுத்துகின்றது.