கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி (3) - ஜோதிகுமார் -
3
“உன்னை காதலிக்கின்றேன் - அனைத்தையுமே அப்படியே அறிந்து வைத்திருந்தும், ஒன்றுமே பேசாமல், மௌனம் காக்கின்றாயே – அதற்காய்…” உன்மைத்தான். இவ்வளவு அடக்கம் ஒருவனில் அடங்குமெனில், எந்தப் பெண்தான் காதல் வசப்படாமல் இருப்பாள்? கிளிம், மாஸ்கோவை விட்டகன்று, ரசிய மாகாணம் ஒன்றில் குடியேறிய பின், அவன், மூன்று முக்கிய மனிதர்களைச் சந்திக்கின்றான். அவர்களில் ஒருத்தி, கிளிம்மிடம் கூறும் கூற்றே, மேலே காணப்படுகின்றது. இவள் ஒரு பாடகி. ஏற்கனவே மாஸ்கோவில், கிளிம்முக்கு ஓரளவு அறிமுகமாகி இருந்தவள், அவர்களின் பரஸ்பர நண்பர்களின் சுற்று வட்டத்திற்கூடு. வித்தியாசமான ஒரு பெண்ணாக இவளை நாவலில் உலவ விட்டிருக்கின்றார், கார்க்கி.
“எனக்கு பிள்ளைகள் பெற்றுக் கொள்வதில் இஷ்ட்டமில்லை…”
“என்னைப் பொறுத்தவரை, மனிதன் என்பவன், அன்பு செலுத்தி கொண்டிருக்கும் வரைத்தான் வாழ்கின்றான். பிறிதொருவன் பொறுத்து அவனால் அன்பு செலுத்த முடியாது போய் விட்டால், அவன் இருப்பதன் அர்த்தம் தான் என்ன…?"
அவளது தர்க்கங்கள் இப்படியாகத்தான் இருக்கின்றது. கிளிம்மின் புலமை தோற்றத்தால் ஈர்க்கப்பட்டு, அவனது மௌனத்தால் வசீகரிக்கப்பட்டு விடும் இவள், கிட்டத்தட்ட, கிளிம்மின் அடிமைப் போன்றே இருப்பதில் பெருமை கொள்கின்றாள் - ஆரம்ப கட்டத்தில். போதாதற்கு தனது அந்தரங்கங்களை எல்லாம் கிளிம்மிடம் கொட்டி தீர்ப்பதில் வேறு ஆனந்தம் கொள்கின்றாள் - இவ் அபலை பெண்.
“என் தந்தை ஒரு சீட்டுப் பிரியர். அவர் தோற்கும் போதெல்லாம் என் தாயாரை அழைத்து, பாலில் தண்ணீரை கலக்கச் சொல்லுவார். எங்களிடம் இரண்டு பசுக்கள் இருந்தன. அம்மா பால் விற்பவர். நேர்மை. அனைவரும் அம்மாவை மனதார விரும்பினர். மரியாதை செலுத்தினர். அவள் தண்ணீரைக் கலக்கும் போது எப்படியாய் அழுதாள் தெரியுமா – என் அம்மா. எவ்வளவு, எவ்வளவு துன்புற்றுக் கலங்கினாள், என்பதை உங்களால் அறிய முடிந்தால்…”