கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி... - ஜோதிகுமார் -
“கிளிம்மின் 40 வருட கால வாழ்வு” என்னும் பிரமாண்ட நாவல் பற்றி மாக்சிம் கார்க்கி ” இது எனது வாழ்நாளின் உச்ச சவால் (Ultimate Test)என் மொத்த வாழ்வின் சாரம்” எனக் குறிப்பிடுவார். கிளிம் நாவலின் மூன்றாம் தொகுதி வாசிப்பு தவிர்க்க முடியாமல் எமது இன்றைய தமிழ் இலக்கிய உலகை ஒரு தரம் ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது.
1. தமிழ் இலக்கிய உலகு இன்று எதை நோக்கி நகர்கின்றது?.
2. ஜெயமோகன் போன்றோர் யாருடைய அல்லது எதனுடைய கதைசொல்லிகள்?
- என்பது போன்ற அடிப்படை வினாக்களை கிளப்புவதாக உள்ளது. இக்கேள்விகளே இக்கட்டுரையின் நான்காம் அத்தியாயத்தில் அலசப்படுகின்றன. முதல் மூன்று அத்தியாயங்களை வாசிக்க நேரங்களை ஒதுக்க முடியாதிருப்பின், எமது தமிழ் இலக்கிய உலகைப் பரிசீலனைக்கு உட்படுத்தும், நான்காம் அத்தியாயத்தினை அவசியம் வாசிப்பது முக்கியப்படலாம்.
1
கிளிம் வாழ்க்கையின் மூன்றாம் தொகுதி, அவனது 30களை பதிவு செய்வதாய் உள்ளது. 1905-ஞாயிறு படுகொலைகளை அடுத்து ரசியாவில் இடம்பெறும் புரட்சி அலைகளின் இறுதி, வீச்சும் வீழ்ச்சியும் இக்காலப்பகுதியிலேயே, நடந்தேறுகிறது. இப் படுகொலைகள் ரசிய வரலாற்றில் ஒரு திருப்பு முனை என்றும் கூறப்படுகின்றது. ஓர் அரசுயந்திரத்தின், உண்மை பண்பை, மிக கறாராக மக்களுக்கு அம்பலப்படுத்திய ஓர் நிகழ்வாக இது வரலாற்றில் பதிவானது. அரச யந்திரத்தின்,உண்மை பண்புகளை இப்படியாக படம் பிடித்து காட்டும், படுகொலைகள் வரலாற்றில் சகஜமானதுதான்.
இந்திய ஜாலியன் வாலா பாக் படுகொலைகளாகட்டும், 1971-1989-2009 இன் இலங்கை படுகொலைகளாகட்டும் அரச யந்திரத்தின், உண்மை முகத்தை இவை தோலுரித்து காட்டவே செய்கின்றன. ஆனால், ரசியாவில் நடந்ததைப் போல், இங்கே, இப்படுகொலைகளும், “இப்படுகொலைகளுக்கு இட்டுச் சென்ற” அரசியலும், சரியான விமர்சன கற்கைகளுக்கூடு மக்களை சென்றடைந்ததாக தெரியவில்லை. உண்மையை சொன்னால், ‘தவறுகளை’ புதைத்து, புதைத்து மீள மறைத்துவிடும் அரசியலே இங்கு காணக்கிட்டுகின்றது. இதுவே காலப்போக்கில் மக்கள் மீள மீள தொடர்ந்தும் அத்தகைய கனவுலகில் சஞ்சரிக்கச் செய்யவும், தொடர்ந்தும் மக்கள் தங்கள் அரசியல் இருண்மையில் ஆழ்ந்து போகவும் காரணிகளாகின்றன.