

நெருக்கடி மிகுந்த இன்றைய காலப்பகுதியில், ரஷ்ய வெளிநாட்டு மந்திரியான, ‘லெப்ரோ’ என்ற மனிதரின் முக்கியத்துவம் பல மடங்குப் பெரிதாகின்றது. இதன் காரணமாகவே, பூமியில் வாழும், அரசியல் ஞானம் மிகுந்த ஜீவராசிகள் ஒவ்வொன்றும் இம்மனிதரை, தத்தம் பார்வையில், பார்க்க விழைவது இயல்பானதே. முக்கியமாக, உலகு இன்று வரலாறு காணாத இழுபறிகளுக்குள் சிக்கியுள்ள இந்நேரம், இது, பொதுவானதே. இதற்கு திரு. மு.நித்தியானந்தன் அவர்களும் விதிவிலக்கானவர் அல்ல என்பதனை, அவரது வீரகேசரிக் கட்டுரை வெளிப்படுத்துகின்றது.
ii
ஒருமுனை ஒழுங்கில் இருந்து, இன்று, பல்முனை உலக ஒழுங்கை நோக்கி உலகுப் பயணப்பட்டுக் கொண்டிருப்பதாய்க் கூறப்படுகின்றது. இவ் இழுபறி, வடக்குக்கும், தெற்குக்குமான இழுபறி என்றும் வர்ணிக்கப்படுகின்றது. அதாவது, அமெரிக்காவின் தலைமையில் காணக்கிட்டும் ஓர் ஐரோப்பிய யூனியனின் இழுபறி, தூய வெள்ளை நிறத்தவருக்கும், சீன-ரஷ்ய தலைமையிலான தூய வெள்ளை நிறம் அல்லாத அல்லது கறுப்பு அல்லது மாநிறத்தவர்களுக்கும் இடையே நடக்கும் இழுபறி என வரையறுக்கப்படுகின்றது. ஆனால், இது ஒரு பல்முனை ஒழுங்குக்கான முயற்சி அல்லது இதுவே இன்று வடக்கின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான முயற்சி என்றும் கூறப்படுகின்றது.
iii
சீனத்தின், SHELONG விண்வெளி விமானம், இப்போது அமெரிக்காவின் X-37B விண்வெளி விமானத்துக்குப் போட்டியாகக் குதித்துள்ளது என்றும், இது விண்வெளியில் இருக்கும் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யும் மர்ம சாகசத்தில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் உலாவுகின்றன. இச்செய்திகளில் உண்மையும் இருக்கலாம். பொய்யும் இருக்கலாம். ஆனால், விண்வெளி ஆதிக்கத்துக்காக ஓர் உக்கிரப் போர் இன்று ஆரம்பமாகி உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இதனாலேயே, இவ் உக்கிரப் போரினால் உந்தப்பட்ட நாடுகள், ‘நாளும்’ தத்தமது செய்மதிகளை விண்வெளியில் நிலை நிறுத்தத் தெண்டித்து வருவது இன்றைய நடைமுறையாகின்றது.