வாசிப்பும், யோசிப்பும் 374: கவிஞர் நீலாவணனின் 'பல்லிகள்'! & எழுத்தாளர் அரு ராமநாதனின் பிரேமா பிரசுரமும், வெளியிட்ட மர்ம நாவல்களும், எம் பதின்ம வயதுப் பருவமும்! - வ.ந.கிரிதரன் -
என் பதின்ம வயதுகளில் இரவுகளில் படுக்கையில் சாய்ந்திருந்தபடி படுக்கையறைச் சுவரில் பூச்சிகளைப் பிடிக்க வரும் பல்லிகளை அவதானித்திருக்கின்றேன். அந்த அவதானிப்பின் விளைவுகளாக மூன்று சிறுகதைகள் எழுதியிருக்கின்றேன். பல்லி சொன்ன பாடம் (ஈழநாடு வாரமலர்), பல்லிக்கூடம் (ஆனந்த விகடன்) & பல்லி (தாயகம்). கவிஞர் நீலாவணனும் என்னைப்போல் பல்லிகளை அவதானிப்பவர் என்பதை பெப்ருவரி 71 அஞ்சலி இதழில் வெளியான அவரது 'பல்லிகள்', கவிதை மூலம் அறிய முடிகின்றது.
'வெண்டிப்பிஞ்சின் இருபுறமும் விரல்கள் வந்து முளைத்ததுபோல்' பல்லியின் உடல் வாகு இவருக்குத் தென்படுகின்றது. 'பாசி மணி பதித்தது போல் பளபளக்கும்' பல்லிகளின் விழிகள் அமைந்திருக்கின்றன. இவ்விதம் பல்லியின் உடலமைப்பை ஆரம்பத்தில் வர்ணிக்கும் கவிதை பின்னர் அவற்றின் கூடலை வர்ணிக்கின்றது. அதனை வாசிக்கையில் இலேசானதொரு புன்னகை அரும்பாமல் போகாது. 'பூச்சியுண்ட போதை கொண்டு , புருஷனைப்போய் வளைத்துக்கொண்டு , கீச்சுமூச்சு மூட்டு'தாம். 'கிசுகிசுத்து'ப் பேசுதாம் பெண் பல்லி. 'அதற்காகத்தானடியேய் ஆடை அவிழ்த்தோம் என் ஆண் கதையாதே காதலில் கட்டுண்டு' கிடக்குமாம். நிச்சயம் சொல்லுங்கள் இவ்வரிகளைப் படிக்கையில் உங்கள் இதழ்களில் புன்னகை படர்கிறதா இல்லையா?