அஞ்சலி: தலைநகரில் தமிழரைத் தலைநிமிர வைத்த தமிழர்! - குரு அரவிந்தன் -
கப்பிட்டல் மகாராஜா குறூப் நிறுவுனர் திரு. ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் மரணச் செய்தி ஒரு கணம் அதிர்ச்சியாக இருந்தாலும், 1980 களில் என் நினைவுகளை மீட்டுப் பார்க்க வைத்தது. அற்புதமான சிந்தனையாளர், எத்தனையோ போட்டிகள், பொறாமைகளுக்கு மத்தியில் மகாராஜா நிறுவனத்தைத் திறம்படக் கொண்டு நடத்தியவர். தமிழரை மட்டுமல்ல, எல்லா இனத்தவரின் திறமைக்கும் முதலிடம் கொடுத்து, ஒரு குடும்பமாகத் தன்னிடம் பணிபுரிந்த எல்லோரோடும் அன்பாகப் பழகியவர். சுருங்கச் சொன்னால் தமிழரைத் துணிச்சலோடு ‘எதற்கும் நாம் சளைத்தவர்கள் அல்ல’ என்று இலங்கையின் தலைநகராம் கொழும்பில் தலைநிமிர்ந்து நிற்கவைத்தவர். அவரது திடீர் இழப்பு எமக்கு, எம்மினத்திற்குப் பெரும் இழப்பாகும்.
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழர்களின் சொத்துக்கள் மட்டுமல்ல, பேரினவாதத்தால் உயிர்களும் பறிக்கப்பட்ட மாதம். சொந்த மண்ணிலே நாங்கள் அகதிகளாக்கப்பட்டதும் அப்பொழுதுதான். இந்த இனக்கலவரத்தின் போது, இலங்கையிலே மிகவும் பிரபலமான தமிழர் நிறுவனமான மகாராஜா நிறுவனத்தை அடியோடு வீழ்த்துவதும் பேரினவாதத்தின் முக்கியமான ஒரு நோக்கமாக இருந்தது. ஏற்கனவே திட்டமிட்டபடி சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியோடு பேரினவாதம் அதைச் சாதித்திருந்தது. கொழும்பில் இருந்து தமிழர்களை விரட்டுவதே அதன் நோக்கமாக இருந்தது. இனக்கலவரத்தின் போது தமிழர்களின் வீட்டு முகவரிகள் காடையர்களுக்கு கொடுக்கப்பட்டு எரியூட்டப்பட்டது போலவே, தமிழர்களின் நிறுவனங்களும், தேடித்தேடி அழிக்கப்பட்டன. ‘போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்’ என்ற முன்நாள் ஜனாதிபதியின் அறைகூவலுக்குச் செவிசாய்த்த பேரினவாதம் இதை திறம்படச் செய்து முடித்தது. கொழும்பிலும், இரத்மலானையிலும் இருந்த மகாராஜா நிறுவனத்திற்குச் சொந்தமான எஸ்லோன் பைப், ஜோன் பேர்ணிச்சர் போன்ற ஆறு தொழிற்சாலைகளுக்கு மேல் எரியூட்டி அழிக்கப்பட்டன.