எழுத்தாளர் தேவகாந்தன்எழுத்தாளர் தேவகாந்தன் உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும், தமிழகத்தமிழர்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்ட ஈழத்து எழுத்தாளர்களிலொருவர். இம்முறை 'பதிவுகள்' அவருடனான நேர்காணலைப்பிரசுரிப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றது. முதலில் அவரைப்பற்றிய சிறு அறிமுகத்துடன் நேர்காணலை ஆரம்பிப்பதும் பொருத்தமானதே.

தேவகாந்தனும் அவரது படைப்புகளும்

புகலிடத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் தேவகாந்தனுக்குச் சிறப்பானதோரிடமுண்டு. இவரது கனவுச்சிறை (திருப்படையாட்சி, வினாக்காலம், அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் ஆகிய  ஐந்து பாகங்களை உள்ளடக்கிய, 1247 பக்கங்களைக் கொண்ட,  1981 முதல் 2001 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய நாவல்.) புகலிடத்தமிழ் இலக்கியத்தில் மிகவும் முக்கியத்துவத்துக்குரிய  நாவலாகும்.

முனைவர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலைப் பற்றி அதுபற்றிய அவரது  விமர்சனக் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்: ‘திருப்படையாட்சி, வினாக்காலம், அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் ஆகிய தலைப்புகள் கொண்ட ஐந்து பாகங்களாக 237 அத்தியாயங்களில் 1247 பக்கங்களில் விரியும் இவ்வாக்கம் 1981 முதல் 2001 வரையான இருபத்தொரு ஆண்டுக்கால வரலாற்றியக்கத்தைப் பேசுவது. இந்த வரலாற்றுக் கட்டம் ஈழத்துக் தமிழர் சமூகத்தின் இருப்பையும் பண்பாட்டுணர்களையும் கேள்விக்குட்படுத்தி நின்ற கால கட்டம் ஆகும். பெளத்த சிங்கள பேரினவாதப் பாதிப்புக் குட்பட்ட நிலையில் ஈழத்துத் தழிழ் மக்கள் மத்தியில் ஆயுதப் போராட்ட உணர்வு தீவிரமடைந்த காலப்பகுதி இது. அதே வேளை மேற்படி பேரினவாதக் கொடுமைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் நோக்கில் ஈழத்தமிழர் பலர் புலம் பெயர்ந்தோடி அனைத்துலக நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்வை நிலைப்படுத்திக் கொண்ட காலப்பகுதியாகவும் இவ்வரலாற்றுக் காலகட்டம் அமைகின்றது. இவ்வாறு போராட்டச் சூழல் சார் அநுபவங்களுமாக விரிந்து சென்ற வரலாற்றியக்கத்தை முழு நிலையில் தொகுத்து நோக்கி, அதன் மையச் சரடுகளாக அமைந்த உணர்வோட்டங்களை  நுனித்துநோக்கி இலக்கியமாக்கும் ஆர்வத்தின் செயல்வடிவமாக இவ்வாக்கம் அமைந்துள்ளது. மேற்படி உணர்வோட்டங்களை விவாதங்களுக்கு உட்படுத்திக் கதையம்சங்களை வளர்த்துச் சென்ற முறைமையினால் ஒரு சமுதாய விமர்சன ஆக்கமாகவும் இந்நாவல் காட்சி தருகின்றது. குறிப்பாக, தமிழீழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடும் இயக்கங்களின் உணர்வுநிலை மற்றும் செயன் முறை என்பவற்றுக்குப் பின்னால் உள்ள நியாயங்கள் மற்றும் புலம் பெயர்ந்துறைபவர்களின் சிந்தனைகள், செயற்பாடுகள் என்பவற்றின் பின்னால் உள்ள நியாயங்கள் என்பன இந்நாவலில் முக்கிய விவாதமையங்கள் ஆகின்றன. இவற்றோடு பேரினவாத உணர்வுத்தளமும் இந்நாவலில் விவாதப் பொருளாகின்றது. அதன் மத்தியில் நிலவும் மனிதநேய இதயங்களும் கதையோட்டத்திற் பங்கு பெறுவது நாவலுக்குத் தனிச் சிறப்புத் தரும் அம்சமாகும். போராட்டத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் இருப்பு சார்ந்த உணர்வோட்டங்கள் மற்றும் அவல அநுபவங்கள் ஆகியனவும் விவாதப் பொருள்களாகின்றன.

எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல்கள் பன்முகமானவை. அவரது லங்காபுரம் இராவணன் பற்றிய இராமயணத்தின் மறுவாசிப்பென்றால், கதாகாலம் மகாபாரத்ததின் மறு வாசிப்பு. கனவுச்சிறை ஈழத்தமிழர்களின் ஆயுத மயப்பட்ட விடுதலைப் போராட்டத்தின், அதற்குக் காரணமான இலங்கை அரசுகளின் தமிழ் மக்கள் மீதான அடக்கு ஒடுக்குமுறைகள் பற்றி, அதன் விளைவாக பல்வேறு திக்குகளையும் நோக்கி அகதிகளாகப் புகலிடம் நாடிப் புறப்பட்ட ஈழத்தமிழர்களைப் பற்றி, விடுதலைப் போராட்டத்தில் முன்னின்ற இயக்கங்களின் ஆயுத நடவடிக்கைகள் பற்றி, போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் சிலரின் மீதான சமூக, பொருளியற் சூழல்கள் செலுத்திய ஆதிக்கம் பற்றி, அதன் விளைவாக தடம் புரண்ட அவர்களது வாழ்க்கை பற்றி, இவ்விதமெல்லாம் எவ்விதம் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் அவர்களது இருப்பினைச் சிதைத்து விடுகின்றது என்பவை பற்றியெல்லாம் விபரிக்குமோர் ஆவணப் பெட்டகம்.

தேவகாந்தனின் 'விதி' இன்னுமொரு முக்கியமான நாவல். இதுவரை வேறு யாரும் கை வைக்காத விடயத்தைப்பற்றி விபரிப்பது. ஈழத்தமிழர்களின் மீதான இனக்கலவரங்களில் மலையகத்தமிழர்களும் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அவ்விதம் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வடகிழக்கில் இயங்கிய காந்தியப் பண்ணைகளில் வந்து குடியேறினார்கள். தொடர்ந்து ஈழத்தமிழர்கள்மேல் இனவாத அரசுகளின் அடக்குமுறைகளும், நிகழ்ந்த இனப்படுகொலைகளும் ஏற்படுத்திய தாக்கங்கள் எவ்விதம் அவர்கள் வாழ்வை மேலும் சீரழித்தன; எவ்விதம் அவர்களை மீண்டும் புகலிடம் வாழ்வுக்காக தமிழகம் நோக்கி அகதிகளாகத் துரத்துகின்றன என்[பதையெல்லாம் விபரிக்கும் நாவல் 'விதி'. இதன் காரணமாகவே இந்நாவலின் முக்கியத்துவமும் அதிகரிக்கின்றது.

தேவகாந்தனின் இன்னுமொரு முக்கியமான நாவல் 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்'. இந்நாவலைப்பற்றிய தேவகாந்தனின் பின்வரும் கூற்று நாவலின் கருவை விளக்கப்போதுமானது. ‘சமூகம் வளருமென்பது அதன் முரண் விளைவுகளை உள்ளடக்கியதுமாகும்.  குடியேற்றத்திட்டங்கள்  நல்ல பலன்களைத் தந்தன. ஆனால் பெருகிய குடியேற்றங்களால் நிலம் , நீர்ப் பங்கீடு சார்ந்த குரோதங்கள் எழுந்தன. இனரீதியாய் இப்பிரச்சினை வடிவெடுத்ததுதான் இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த சோகம்.  இந்தப் பகைப்புலத்தில்தான் முதல் துவக்கு வெடிச்சத்தம் இங்கே அதிர்ந்தெழுகிறது. அந்த வருஷம் 1975. சுமார் இரண்டு நூற்றாண்டுக் கால சமூக வரலாற்றுப் புலத்தில் விரிகிறது நாவல். இது தன் ஸ்தூலம் மாறாமல் ஜீவன் மட்டும் அழிந்த ஒரு கிராமத்தின் கதையும்.’

இவை தவிர தேவகாந்தனின் மேலுமிரு நாவல்களும் (உயிர் பயணம், நிலாச்சமுத்திரம்), இரு குறுநாவல் தொகுப்புகளும் (எழுதாத சரித்திரங்கள், திசைகள்), மூன்று சிறுகதைத்தொகுப்புகளும் (காலக்கனா, இன்னொரு பக்கம் & நெருப்பு), மற்றும் 'ஒரு விடுதலைப் போராளி' (உரைவீச்சு) ஆகிய படைப்புகளும் இதுவரையில் நூலுருப்பெற்றுள்ளன.

ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாததோர் ஆளுமை தேவகாந்தன் எனலாம்.

 


நேர்காணல்: தேவகாந்தன்

எழுத்தாளர் தேவகாந்தன்பதிவுகள்: வணக்கம்,  தேவகாந்தன். அண்மையில்தான் நீங்கள் உங்களது நீண்ட பயணத்திலிருந்து  திரும்பியிருக்கின்றீர்கள். இந்தியா, இலங்கை, இங்கிலாந்து என்று உங்களது இலக்கியப் பயணம் இனிதே முடிந்து திரும்பியிருக்கின்றீகள்.  மேற்படி நாடுகளில் உங்களது 'கனவுச்சிறை' நாவலுக்கான வெளியீட்டு நிகழ்வுகள், விமர்சனக் கூட்டங்கள் பல நடைபெற்றிருக்கின்றன. 'கனவுச்சிறை' நாவல் சிறப்பான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்ததாகவும் அறிகின்றோம். உங்களது வெற்றிகரமான இந்த இலக்கியப்பயணத்தைப்பற்றி என்ன கருதுகின்றீர்கள்? 'பதிவுகள்' வாசகர்களுடன் அவற்றைச்சிறிது பகிர்ந்து கொள்ள முடியுமா?

தேவகாந்தன்: வணக்கம், கிரி. ஏறக்குறைய அய்ந்தரை மாதங்களாக நீடித்திருந்த இந்தப் பயணத்தின் நோக்கமே அதுவாக இருக்கவில்லை. குடும்ப காரணம் முதன்மையாக இருந்தது. அதை இலக்கியரீதியிலும் பயனுள்ளதாக ஒழுங்கமைத்துக் கொண்டேன். இங்கிலாந்தில் ஒரு மாதத்தையும், இலங்கையில் ஒன்றரை மாதத்தையும், தமிழ்நாட்டில் இரண்டரை மாதங்களையும் கழித்தேன்.

ஒரு நூலின்  வெளியீடு,  விமர்சனம், அபிப்பிராய உருவாக்கம், அவற்றின் வெளிப்படுத்துகைகளின்  ஏற்பாடு  ஒரு  படைப்பாளிக்கு முக்கியமானதல்ல என்றே நான் எப்போதும் கருதிவந்திருக்கிறேன்.  இதை மீறியும் சிலவேளைகளில் நான் இயங்க நேர்ந்திருக்கிறதுதான். சில சமயங்களில் நண்பர்கள் என்பொருட்டு இதைச் செய்திருக்கிறார்கள். எனினும் இந்தக் கருத்தில் எனக்கு மாற்றமில்லை. சரியான விமர்சனம் அக்கறைக்குரியதெனினும், அதற்காக படைப்பாளி செய்வதற்கு எதுவும் இருப்பதில்லை.  இலங்கையில் ‘கனவுச் சிறை’ எதிர்கொண்ட விமர்சனங்கள் ஆரோக்கியமானவையாகவும், சிறப்பானவையாகவும் இருந்தன. அது மனத்தளவில் என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

பதிவுகள்: சென்றமுறை சந்தித்தபொழுது நீங்கள் புதியதொரு நாவல் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியிருந்தீர்கள். அந்நாவலை முடித்து விட்டீர்களா? எப்பொழுது வெளிவரவிருக்கிறது? அதுபற்றிச் சிறிது கூறுங்கள்.

தேவகாந்தன்:
‘கனவுச் சிறை’யின் ஒற்றைத் தொகுப்பைத் தயாரிக்க ஆரம்பிப்பதற்கும், தாய்வீடு பத்திரிகையில் ‘நதி’ நாவல் தொடராக வெளிவருவதற்கும் முன்பிருந்தேகூட, என் மனத்தில் இருந்துகொண்டிருந்த நாவல்தான் இப்போது வெளிவரவிருக்கிற ‘கந்தில் பாவை’. மணிமேகலை காப்பியத்தில் முற்பிறப்பில்  வந்ததும்,  இனி வருவதும் உரைத்த சக்ரவாளக்கோட்டத்து கோயில் தூணில் அமைந்திருந்த சிலைதான் கந்தில் பாவையெனப்படுவது. மணிமேகலையதும், சுதமதியினதும் முற்பிறப்புகள்பற்றிக் கூறி வருவதுரைத்த பாவையும் அதுதான். 1880ல் தொடங்கி 2015இல் முடிவுறும் இந்தப் புதிய நாவல், நான்கு காலகட்டங்களைக்கொண்டதாக ஒரு நீண்ட காலப் பரப்பில் தன் கதையை விரித்துச் செல்கிறது. இந்த நான்கு காலகட்டங்களும் முதுமக்களின் அனுபவங்களதும் அறிவினதும் ஊடாக புனைவும் தொடர்பும் பெறுவதால் ‘கந்தில் பாவை’யென இந்நாவலுக்குப் பெயரிட்டேன்.

பதிவுகள்: நாவல் நான்கு காலகட்டங்களை உள்ளடக்கியுள்ளதாகக் கூறுகின்றீர்கள். இந்த நாவல் கூறும் பொருள் என்ன? நடைபெறும் களம் எது? 'கனவுச்சிறை' போல் இதுவும் அக்காலகட்டத்து அரசியலை உள்ளடக்கியதொரு அரசியல் நாவலா?

தேவகாந்தன்: கதையின் பின்னணியில் அவ்வக்கால அரசியலும், சமூகமும் தேவைக்கேற்ற அளவில் பதிவாகியுள்ளன.  அக்காலகட்டங்களின் வாழ்க்கை சிறப்பாகப் பதிவாகியுள்ளதாகவே நம்புகிறேன். மனவாழங்களிலுள்ள  வடுக்களைக் கீறி யுத்தமானது எப்படி ரணமாக்கி  மனிதர்களைச் சிதைவு நிலைக்குத் தள்ளுகிறது என்பதை விளக்குவதையே இது பிரதானமாகக் கொண்டிருக்கிறது.  அதைச் சொல்ல எடுத்துக்கொண்ட உத்தியிலிருந்துதான் நாவல் வடிவங்கொள்கிறது. ஒரே பரம்பரையின் நான்கு தலைமுறைகளில் வாழ்ந்த நான்கு குடும்பங்களுக்கு நேரும் ஒரேவிதமான மனநிலை சார்ந்த சம்பவங்களையும் ஒரே கதையாக நாவலென்ற வடிவத்துள் ஒற்றைச் சங்கிலியால் பிணைத்திருக்கிறேன். வடிவப் பிரக்ஞையோடு மிகவும் அவதானமாக படைப்பாக்கப்பட்டுள்ள நாவல் இது. இந்த வடிவ உத்தி நாவலின் சிறப்புக்கு மிகுந்த கைகொடுத்திருக்கிறது. 1880களில் மிசனரிகளின் வருகைக் காலத்தில் ஆரம்பிக்கும் நாவல், அடுத்து கிறித்துவத்திற்கெதிரான சைவத்தின் புத்தெழுச்சிக் காலத்தைக் கடந்து, பின்னர் அதற்கடுத்த தலைமுறையின் கதையை இலங்கை சுதந்திரம் பெற்ற சிறிது காலத்திற்குப் பிந்தி நகர்த்தி, மேற்கு நாடுகளைநோக்கிய புலப்பெயர்வுகளின் பின் தம் குடும்ப வரலாறுகளையும், அவற்றில் சிலரின் மனோநிலைப் பாதிப்புக்களின் மூலங்களையும் கண்டறிய எடுக்கும் இரண்டு குடும்பங்களின் முயற்சிகளை விளக்குவதாகவும் நாவல் விரிகிறது. இந்தத் தேடலின் தடங்களை தீட்சண்யமாகத் தெரிவிப்பதற்காக நாவலை பின்னோட்டமாக நகர்த்தியிருக்கிறேன். யாழ்ப்பாணச் சரித்திரத்தில் புராதன நகராகக் கருதப்பெறும் கந்தரோடையையும், அதையொட்டிய கிராமங்களையும் நாவல் பிரதான களங்களாகக் கொண்டிருக்கிறது. ஐதீகங்களதும், வரலாற்றுத் தகவல்களினதும் பின்னணியில் நாம் ஈழத்து இலக்கியத்தில் இதுவரை விவரிக்கப் பெற்றிராத கந்தரோடை நகர் நாவலில் விசுவரூபம்கொண்டு எழுந்திருக்கிறது. காலச்சுவடு வெளியீடாக விரைவில் வெளிவரவிருக்கிற நாவல் இது.

பதிவுகள்: சுமார் அரைநூற்றாண்டுக் காலமாக படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றீர்கள். இன்றிலிருந்து உங்கள் ஆரம்ப காலகட்டத்தை நோக்குகையில் என்ன நினைக்கின்றீர்கள்? இக்கால இடைவெளியில் புனைவு பற்றி, இலக்கியம் பற்றியெல்லாம் உங்களது கருத்துகளிலும் பரிணாம வளர்ச்சியொன்று ஏற்பட்டிருக்கும். அவற்றைப்பற்றிச் சிறிது பகிர்ந்து கொள்ளுங்களேன் பதிவுகள் வாசகர்களுடன்.

தேவகாந்தன்: எனது முதல் படைப்பு வெளிவந்த காலத்துக்கும், அண்மையில் நான் முடித்திருக்கும்  ‘கந்தில் பாவை’க்குமிடையே சுமார் அரை நூற்றாண்டுக் கால இடைவெளியிருக்கிறது. இந்த  இடைவெளியை என் வாசிப்பும் அனுபவமும் பூரணமாக தன் படிமுறையான வளர்ச்சியில் நிரவி வந்திருப்பதாகவே  நான் நினைக்கிறேன். அதுபோல்  இலக்கியத்தின் நோக்கம், தன்மைகள்பற்றிய என் பார்வை மாறாமலும், அதேவேளை இன்னும் தீவிரப்பட்டும்  இருப்பதாகவே  எனக்குத் தோன்றுகிறது. 

அறுபதுகளில் அன்றைக்கு எழுத ஆரம்பித்த பெரும்பாலானவர்களுக்கு ஒரு நோக்கமிருந்ததாக நான் கருதுகிறேன். ஒரு கருத்துநிலையில் நின்று அவர்கள் எழுதினார்கள். சமூகத்தில் நிலவிய பொருளாதார ஏற்ற இறக்கங்களினாலும், சாதி பேதங்ககளினாலும் வாழ்க்கையில் நிறைந்திருந்த அவலங்களைக் கண்டு அவற்றுக்கான தீர்வாக  சோஷலிச சிந்தனையை உள்வாங்கியவர்களாக அவர்கள் இருந்தார்கள். அந்தப் பாதிப்பிலேயே அவர்கள் எழுதவும் தொடங்கினார்கள். அதுவே அக்காலகட்டத்தின் இலக்கியப் பாணியாகவும் இருந்தது.

பதிவுகள்: அக்காலகட்டம் இலங்கைத்தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் முற்போக்கு இலக்கியத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததாக நினைக்கின்றேன். எஸ்.பொ.வின் 'நற்போக்கு' , மு.தளையசிங்கத்தின் 'பிரபஞ்ச யதார்த்தவாதம்' என்று மாற்றுக்கருத்துகள் நிலவினாலும்,  முற்போக்கு இலக்கியக்காரரின் ஆதிக்கமே அதிகமாகவிருந்த காலகட்டம் அது. 'கலை கலைக்காக அல்ல, மக்களுக்காக' என்ற கருத்தினை முன் வைத்து அவர்கள் செயலாற்றிக்கொண்டிருந்த காலகட்டம் அது. அக்காலகட்டத்தில் உங்களது இலக்கியம் பற்றிய நோக்கு எவ்வாறிருந்தது? நீங்களும் அன்று நிலவிய பிரிவுகளிலொன்றின் ஆதிக்கத்தில் இருந்தீர்களா? அல்லது அவற்றை மீறி, உங்களுக்கென்று தீர்க்கமான இலக்கியக்கொள்கைகள் ஏதுமிருந்ததா?

தேவகாந்தன்: அவ்வாறான எந்தச் சார்பும் இருக்கவில்லையென்றுதான் தோன்றுகிறது. தான்தோன்றித்தனமாக எழுத ஆரம்பித்தேன். அதுபோலவே என் சிந்தனையும் தான்தோன்றித்தனமானதாகவே கட்டமைக்கப் பெற்றிருந்தது அப்போது. எந்த வட்டமும் இல்லை, எந்தச் சார்பும் இல்லை. விலங்குகளற்றுப் பறக்கும் சுதந்திரம் எனக்கு இருந்தது. அது எனக்கு ஒருவகையில் பலம். இன்னொரு வகையில் பலஹீனம்.

அண்மையில் இலங்கை சென்றிருந்தபோது இலங்கைச் சுவடிகள் காப்பகத்திலும், யாழ் பொதுசன நூலகத்திலும், யாழ் பல்கலைக் கழக நூலகத்திலும் தேடி அறுபதுகளில் வெளிவந்த எனது ஆரம்பகால சிறுகதைகள் சிலவற்றை எடுக்க முடிந்திருந்தது. அவற்றைப் பார்த்தபோது மார்க்சிய விருப்பமும், சோசலிச ஈர்ப்பும் அறுபதுக்களின் அந்தக் காலகட்டத்தில் என்னிடத்தே இருந்திருந்தாலும், என்னுடைய கதைகள் அவற்றுக்கு அழுத்தம் கொடுத்தனவாக இருக்கவில்லையென்பதைக் காணமுடிந்தது.

அறுபதுக்களின் இறுதியில் நான் எழுத ஆரம்பித்த காலத்தில் சோஷலிச சிந்தனைக்குள் நான் உட்சென்றுகொண்டிருந்தபோதும், அதை ஒரு அரசியல் சித்தாந்தமாக மட்டும்தான் நான் பார்த்திருந்தேன் என்றே நினைக்கிறேன். அரசியலும் இலக்கியமும் வேறுவேறானவை என்று யோசிக்கக்கூடிய தெளிவு இல்லாத வயதுதான் அது. ஆயினும் பரந்துபட்ட வாசிப்பு இருந்துகொண்டிருந்த வகையில் என்னால் வித்தியாசமாக  இயங்க  முடிந்திருக்கலாம்.

‘குருடர்கள்’ என்ற எனது முதல் சிறுகதை சமூக நோக்கின் காரணமாக ஒரு கோபத்தை வெளிப்படுத்திய கதையாக மட்டுமே இருந்ததை நான் கண்டேன். இந்தச் சமூக நோக்கை மீறி அரசியல் நோக்கு அழுத்தம் பெறுவதாய் பின்னால் வந்த எனது கதைகளும் இருக்கவில்லை. கம்யூனிசம் அல்லது சோஷலிசம் என்பது ஒரு அலையாக, ஒரு புரட்சிகரச் சிந்தனையாக உலகளாவி வீசிக்கொண்டிருந்த காலமது. மேல்நாடுகளில் எந்த அறிவுஜீவியுமேகூட அச்சிந்தனையிலிருந்து பெரும்பாலும் தப்பியிருக்கவில்லை என்றே சொல்லிவிடலாம். இலங்கையைப் பொறுத்தவரையில் இளைய தலைமுறையினரில் மிகப் பெரும்பாலானவர்களிடையே அது ஒரு பாணியாகவே மாறியிருந்தது. மார்க்சீயம்பற்றி தெரியாதவர்களும்கூட  சமூக மாற்றம்பற்றி பேசினார்கள். இவைகளை வைத்துப் பார்க்கும்போது  சோஷலிசத்தின்மீதான என் ஈர்ப்புக்கூட அத்தகைய ஒரு ஆர்வக் கோளாறினால் ஏற்பட்டிருந்ததாகவும் சொல்ல முடியும். ஆனாலும் தொடர்ந்தேர்ச்சியான மார்க்சீயப்  பயில்வு பின்னாளில் என்னை ஒரு மெய்யான சோஷலிசவாதியாகவே மாற்றியிருந்தது. இன்று உலகநிலைமையின் பல்வேறு மாற்றங்களும் என்னை ஒரு மார்க்சீயவாதியாகவே தொடர்ந்தும் தக்கவைத்துக்கொண்டு இருக்கின்றன. அதன் மூலமாகவே இன்றைய சமூகத்தை, அரசியலை, உலகத்தை நான் புரிந்துகொள்கிறேன். ஆயினும் விவிலியத்தில் இல்லாதது இல்லையென்று கிறித்தவர்களும், குர்ஆனில் இல்லாதது இல்லையென்று முஸ்லிம்களும், வேதங்களில் இல்லாதது இல்லையென இந்துக்களும் சொல்வதுபோல் மார்க்சீயத்தில் இல்லாதது இல்லையென்று நான் எப்போதும் கொண்டது இல்லை. மார்க்சீய உலகத்துக்கு வெளியே ஒரு அக உலகம் உண்டுவென்றும், அது காவியங்களாலும் இலக்கியங்களாலும் சீர்செய்யப்படுகின்றது என்றுமே நான் நம்பி வந்திருக்கிறேன். அன்றும் சரி, இன்றும் சரி அரசியலும் இலக்கியமும் வேறானவை என்ற எனது இந்தப் பார்வை இயல்பாக ஏற்பட்டதே தவிர, வட்டங்களிலிருந்து விலகியிருக்கவேண்டுமென்ற எந்த நிர்ப்பந்தத்தினதுமோ  தேவைகளினதுமோ அடிப்படையில்  இருக்கவில்லையென்று நான் நிச்சயமாகச் சொல்வேன். அது சுயம்புவாக ஏற்பட்டது. அதனாலேயே சார்புகளற்று இருக்க நேர்ந்தது. இந்தப் புரிதல் என் சிந்தனையில்  தவிர்க்க முடியாதபடி தன் பாதிப்பைச் செய்யவே செய்யும்.

முற்போக்கு இலக்கியச் சிந்தனை ஒரு தேவை கருதி இலங்கைத் தமிழ்ச் சூழலில் தோன்றிற்றென்றால் அதன் எதிர்நிலையாக நற்போக்கு இலக்கிய சிந்தனை தோன்றியது. பிரபஞ்ச யதார்த்தவாதத்தை முன்னிறுத்திய மு.த.வின் சிந்தனை இவை இரண்டுக்கும் எதிர்நிலையில் நின்றிருந்ததெனலாம். இன்று இந்த இரண்டும் தொடர்ச்சியின்றி வரலாற்றில் புதைந்து கிடக்கின்றன. முற்போக்கு இலக்கியத்துக்கு கொஞ்சமேனும் தொடர்ச்சி இருக்கவே செய்கிறது. இருந்தும் என் நடையை அதன் பாதையிலிருந்தும் விலக்கியே கொண்டிருந்தேன்.

இன்னுமொன்று. எல்லாருக்குமான சுகங்கள்போலவும், எல்லோருக்குமான துக்கங்கள்போலவும் வாழ்க்கை எனக்கும் அளித்தது. அவற்றை பிரக்ஞையற்றுக்கூட ஒருவரால் வாழ்ந்துவிட முடியும். ஆனால் வாழ்க்கை தந்தனவற்றுள் நான் அழுந்தி வாழ்ந்தே  மீண்டேன். அது எனக்குப் பிடித்திருந்தது. வாழ்க்கையைச் சுகித்தே வாழ்ந்திருக்கிறேன். சுகங்களைப்போலவே துக்கங்களையும். ‘எதுவும் இழப்பல்ல’ என்று ஒரு கவிதை தொண்ணூறுகளில் தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த  ‘நிழல்’ என்ற ஒரு சிறுபத்திரிகையில் எழுதியிருக்கிறேன். இழப்பை ஒரு அறிதலாகவும், அனுபவமாகவும் எப்போதும், எல்லாராலும் கொண்டுவிட முடியுமாவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தக் வயதில், அந்தக் காலகட்டத்தில் என்னால் அவ்வாறு நினைக்கவும் உணரவும் முடிந்திருந்தது. இழப்பதும் சுகமே என்பது ஞானமல்லவா? ஒருவேளை  இந்த வித்தியாசமான அனுபவங்களேகூட என் எழுத்தின் ஆதார பலமாய்  நின்றிருக்க முடியும்.

அப்போது  அரசியலுக்கும்  இவனுக்குமான ஒரு விலகல் நிகழ வாய்ப்புண்டுதானே? அவ்வாறே அது நிகழ்ந்தது. அரசியல் என்னை ‘இவன் எனக்கு லாயக்கற்றவன்’ என ஒதுக்கினாலென்ன, நானே ‘இது எனக்கு ஏற்பானதல்ல’ என ஒதுங்கினாலென்ன, நிகழ்ந்ததென்னவோ ஒரு விலகல். இது நான் நேரடி அரசியலுள் இல்லை என்று அர்த்தமாகிறதே தவிர, எனக்கு அரசியலே இல்லையென்று ஆகவில்லை. சமூக மனிதனாக இருக்கிற எவனொருவனுக்கும் ஒரு அரசியல் இருக்கவே செய்கிறது. எனக்கும் அரசியல் உண்டு. ஆனாலும் அதை வெளிப்படையாக என் எழுத்தில் என்றும் நான் அழுத்தம் செய்வதில்லை. அந்தவகையில் என் படைப்புகள் எல்லாமே  எந்தக் கருத்தையும் வலிந்துசொல்வனவாக இருக்கவில்லை.

பதிவுகள்: அரசியலும், இலக்கியமும் வேறானவை என்று கூறுகின்றீர்கள். ஆனால் கனவுச்சிறை நாவல் ஈழத்துத் தமிழரின் தேசிய விடுதலைப்போராட்ட அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றதே. அது ஈழத்தமிழரின் அரசியலைப்பேசும் இலக்கியப்படைப்பல்லவா?  பின் எங்ஙனம் நீங்கள் அரசியலும், இலக்கியமும் வேறானவை என்று  கருதலாம்? சிறிது விளக்குவீர்களா?

தேவகாந்தன்: ‘கனவுச் சிறை’யின் தோற்ற நியாயமே வேறு. அது அரசியலைச் சொல்ல வந்த நாவல் அல்ல. அரசியல் சிதைத்த மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லவந்த நாவல். மனித வாழ்க்கையைச் சிதறடித்த அரசியலை அது சொல்லியிருந்தபோதும், நாவலின் தேவைக்களவான அரசியலே அதில் பேசப்பட்டிருக்கிறது.

தாஸ்தாயெவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்க’ளில் அரசியலுக்கும் மதத்திற்கும் இடையே இருந்த, இருக்கவேண்டிய ஊடாட்டம்பற்றி விரிவாகப் பேசப்படுகின்றது. அரசியல்போல் மதம் குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கவேண்டுமென்று கருதும் குழுவினரையும் அதில் காணமுடியும். மதத்திற்கு கீழே அரசியல் இருக்கவேண்டுமென்றும், அரசியலுக்குக் கீழ் மதம் இருக்கவேண்டுமென்றுமாக பலவாறான தளங்களில் விரிவான விவாதங்கள் அதில் உள்ளன. ஆனாலும் ‘கரமசோவ் சகோதரர்கள்’ அரசியல் நாவலல்ல. கரமசோவ் காலத்திலும், அவனது மகன்களின் காலத்திலும் இருந்த ரஸ்யாவின் சமூக, அரசியல் புலத்தில் அதில் ஒரு கதை சொல்லப்படுகிறது. ‘கனவுச் சிறை’யும் அவ்வாறானதே. அது யுத்தத்தின் மனிதாயத சிதைவைச் சொல்ல வந்த நாவலே.

இலக்கியத்துக்கு சமூக அக்கறை இருக்கவேண்டுமென்பது ஒரு தேவை. கண்டிப்பான விதியல்ல. இல்லாவிட்டால் மணிமேகலையும், சிலப்பதிகாரமும் இலக்கியமாவது எப்படி? விஸ்ணுபுரமும், யாமமும், போராளிகள் காத்திருக்கிறார்களும், நிலக்கிளியும், காலங்கள் சாவதில்லையும், விதியும் நாவல்களாவது எப்படி?

பதிவுகள்: உங்கள் நாவல்களில்  ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’, ‘விதி’ ஆகியவை அவை வெளிவந்த காலத்தில்   மார்க்சீய சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட படைப்புகளென விமர்சிக்கப்பட்டவையென அறிகின்றோம். அது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

தேவகாந்தன்: உண்மை. மார்க்சீய சிந்தனையை வலியுறுத்துவதற்காக அவை எழுதப்படாவிட்டாலும், அந் நாவல்களில் மார்க்சீயப் பார்வை இருந்தது. ஆனாலும் அதை ஒரு மேலோட்டமான வாசிப்பில் புரிந்துவிடவே முடியாதிருக்கும். அதற்கு மார்க்சீயத்தை தெரிந்திருப்பது அல்லது நிறைந்த வாசிப்பனுபவம் கொண்டிருப்பது முக்கியமான நிபந்தனையாகவிருந்தது. அந்தளவுக்கு அது கதையோட்டத்தோடு ஒட்டிய கருத்தாகவே அந்நாவல்களில் பதிவாகியிருந்தது.

பதிவுகள்: எழுத்து சமூகப்பிரக்ஞை உள்ளதாக இருக்க வேண்டுமென்று நீங்கள் கருதுகின்றீர்களா? அல்லது அப்படி இருக்கத் தேவையில்லையென்று  நீங்கள் கருதுகின்றீர்களா?  எழுத்து எப்படி இருக்க வேண்டுமென்று நீங்கள் கருதுகின்றீர்கள்? கருத்தை மையமாக வைத்துப்  படைக்கப்படும் எழுத்தானது பிரச்சார எழுத்தென்று நீங்கள் கருதுகின்றீர்களா?

தேவகாந்தன்: கருத்து வேறு, ஒருவரை கருத்துநிலைப்படுத்தும் சித்தாந்தம் வேறு என்ற தெளிவு இங்கே முக்கியம். இல்லாவிட்டால் புரிந்துகொள்ளப்படாத கேள்வி  ஆகிவிடும். இதற்கான பதிலை ஒரு உதாரணத்திலிருந்து ஆரம்பிக்கின்றேன். நான் வீதியில் ஒரு நண்பரைச் சந்திக்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். முதலில் சுக துக்கங்களை விசாரித்த பின் அவசரமற்ற நிலைமையானால் நின்று நாம் வேறு சில விஷயங்களையும் பேசுவோமல்லவா? அவை உடனடி நம் இருவருக்கும் கரிசனமான விஷயங்களாகவே இருக்குமல்லவா? அவை பரஸ்பரம் இருவருக்கும் கரிசனமான விஷயங்களெனினும், இயல்பான உரையாடலிலேயே அவை வந்து விழுகின்றன. அந்தமாதிரியானதுதான் பிரச்சார நோக்கமில்லாத கருத்து வெளிப்பாடென்பது.  அந்த நிலைமையில் கருத்து வற்புறுத்தப்படுவதில்லை. அதுபோலவே இலக்கிய எழுத்தும். கருத்து இருக்கும், ஆனால் வற்புறுத்தப்பட்டிருக்காது. வற்பறுத்தப்படும்போது அந்த எழுத்து  தன் இலக்கிய நயத்தை இழந்து போகின்றது.
அதுபோல் கருத்து இல்லாதபோதும்  இலக்கியத்தின் தகைமை குறைவுபடவே செய்யும். எழுத்துக்கு எப்போதும் கருத்து வேண்டியே இருக்கிறது. ஆனால் கருத்து புடைத்துக்கொண்டு நிற்கக்கூடாது என்பதுதான் இலக்கியத்தின் விதி. வெறும் கதை எவ்வாறு இலக்கியம் ஆகமுடியும்? சிலப்பதிகாரத்தைக்கூட அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகுமென்பதையும், பத்தினிப் பெண்டிரை உயர்ந்தோர் ஏற்றுவர் என்பதையும், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதையும் சொல்ல இயற்றியதாகத்தானே பாயிரத்தில் இளங்கோ கூறுகிறான்? ஆனாலும் கருத்துக்காகவன்றி அதன் இலக்கிய நயத்துக்காகவே அது காலகாலமாகப் போற்றப்பட்டு வருகிறது?

இலங்கைத் தமிழெழுத்துக்கள் பெரும்பாலும் கருத்துநிலைகளை வற்புறுத்துவதற்காக எழுதப்பட்டனவாகவே உள்ளன.  காலம் அவ்வாறானதாகவே   இருந்தது. அக்காலத்தின் தேவையும் அதுவாகவே இருந்தது. முற்போக்கு இலக்கியத்தில் சில நல்ல எழுத்துக்களையே தரமானதாக நாம் பெறமுடிந்திருப்பதின் இரகசியம் இங்கே இருக்கிறது.

பதிவுகள்: 'முற்போக்கு இலக்கியத்தில் சில நல்ல எழுத்துக்களையே தரமானதாக நாம் பெறமுடிந்திருப்பதின் இரகசியம் இங்கே இருக்கிறது' என்று கூறுகின்றீர்கள். 'இலங்கைத் தமிழெழுத்துக்கள் பெரும்பாலும் கருத்துநிலைகளை வற்புறுத்துவதற்காக எழுதப்பட்டனவாகவே உள்ளன' என்றும் கூறுகின்றீர்கள். அப்படியானால் முற்போக்கிலக்கியத்தின் பெரும்பாலான படைப்புகள் கருத்தினை வற்புறுத்தும் பிரச்சாரப்படைப்புகள் என்று கருதுவதுபோல் தெரிகிறதே. மேலும் நீங்கள் தரமானதாகக் கருதும் முற்போக்கிலகத்தியத்தின் படைப்புகள் சிலவற்றைப்பற்றி எம்முடன் சிறிது பகிர்ந்திட முடியுமா?

தேவகாந்தன்: மேலே நான் சொன்னதாக நீங்கள் கூறியிருக்கும் இரண்டும் ஒன்றுதான். கருத்துநிலைகளை வற்புறுத்துவதற்காக தோன்றிய ஈழத்து இலக்கியம் தரமான எழுத்துக்களை குறைவாகவே தந்திருக்கிறது. கே.டானியலின் ‘போராளிகள் காத்திருக்கிறார்கள்’  மற்றும் திக்குவல்லை கமாலின் ‘ஒளி பரவுகிறது’ என்ற நாவல்களை எடுத்துக்கொள்ளலாம். கடற்கரைக் கிராமமொன்றில் மீனவ சமுதாயத்தில் நிகழும் பொருளாதார நெருக்கடியையும், அங்குள்ள வாழ்நிலையையும் விபரிக்கின்ற ‘போராளிகள் காத்திருக்கிறார்கள்’, தொழிலாளர் ஒற்றுமை, போராட்டம் என்ற எந்தச் சுலோகத்தையும் தாங்கி நிற்காமல், தொழிலாளர் வாழ்முறையை, கடலின் சந்நதங்களை, அதன் அமைதியை, அதனால் நேரும் நெருக்கடிகளை, இயல்பு நிலைகளை, அம்மக்களின் காதலை அதற்கான மோதலை மட்டும் சொல்கிற நாவல். கே.டானியலின் நாவல்களிலே மிகுந்த கலாநேர்த்தி கொண்டதாக இதைச் சொல்ல எனக்குத் தயக்கமில்லை. அது கே.டானியலின் ஏனைய நாவல்களைவிட அனேகமாக சகல நிலைகளிலும் மாறுபட்டிருப்பது. ஆனால் ‘ஒளி பரவுகிறது’ தயார் ஆடை தயாரிக்கும் நிறுவனமொன்றின் நடப்பியல்புகளையும், அதில் வேலைசெய்யும் தொழிலாளரின் ஒற்றுமை, தொழிலாளர் சங்கம் அமைத்தல் போன்றனவற்றின் அவசியத்தையும் வற்புறுத்தி வருவது. முன்னதிலும் தொழிலாளர் வாழ்க்கை இருக்கிறது. பின்னதிலும் அந்த வாழ்க்கையே பேசப்படுகிறது. ஆனால் முன்னது கலாநேர்த்தியுடன் இலக்கியமாகிறது. பின்னதோ கருத்தைச் சொல்லும் கதையாக எஞ்சுகிறது.

பதிவுகள்: ஆக ஈழத்து இலக்கியத்தில்  முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் பங்களிப்பு எந்தவகையில் முக்கியமானது  என்று நீங்கள் கருதுகின்றீர்கள்? 

தேவகாந்தன்: இலக்கிய வரலாற்றுப் புலத்தில் இலங்கைத் தமிழிலக்கியத்தை, இலங்கைத் தேசிய இலக்கியத்தை, இலங்கையின் மண்வாசனை எழுத்தை அது உருவாக்கித் தந்தது என்பதை நாம் மறக்கக்கூடாது. இவற்றையே அதன் மாபெரும் பங்களிப்பாக நான் கருதுகின்றேன். முற்போக்கு இலக்கியம் இல்லையேல் இலங்கைத் தமிழிலக்கியம் எனக் கூறுவதற்கான எந்தவித தனித்தன்மையும் அற்றதாகவே அது பின்னாளில் உருவாகியிருக்க முடியும். அந்த விபத்தைத் தவிர்த்தது முற்போக்கு இலக்கியம்தான்.

(தொடரும்)

தேவகாந்தனுடனான நேர்காணல் பகுதி இரண்டு: http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3316:-2-&catid=16:2011-03-03-20-10-49&Itemid=34

தேவகாந்தனுடனான நேர்காணல் பகுதி மூன்று: http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3359:2016-06-05-07-04-13&catid=16:2011-03-03-20-10-49&Itemid=34

 

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்