தமிழ் முரசு 27.3.2011
சிறுகதைகள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் என பல்வேறு துறைகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழுலகுக்கு படைப்புகளைத் தந்து வருபவர் எழுத்தாளர் திருமதி கமலாதேவி அரவிந்தன். இவரது படைப்புகள் யாவும் நூலாக்கம் பெறவேண்டுமெனில் அதற்கு நூற்றுக்கணக்கான நூல்கள் வெளிவரவேண்டும். தமிழில் எண்ணற்ற படைப்புகளைத் தந்துள்ள இவரது தாய்மொழி மலையாளம். சமூகத்தில் வலுவிழந்தோர் படும் இன்னல்களை அப்படியே அச்சுப் பிறழாமல் படம்பிடித்து கதைமாந்தர்களின் மொழியில் அவருக்கே உரிய தனித்துவம்பெற்ற பாணியில் வாசகர்களுக்கு விளக்கும் விதமே தனி. அவர் எழுதிய ஒவ்வொரு கதையிலும் ஓர் எழுத்தாளனின் உழைப்பை நம்மால் காணமுடியும். கதை எழுதி முடிக்கும் தருணத்தில் வேள்வியிலிருந்து எழுந்த சுகத்தை அனுபவிப்பாராம் எழுத்தாளர் திருமதி கமலா தேவி அரவிந்தன். அவருடைய கதைகள் பிறந்த கதையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் எழுத்தாளர் திருமதி கமலாதேவி அரவிந்தன்.
கே--தமிழிலும் மலையாளத்திலும் கதைகள், நாடகங்கள், கட்டுரை கள் என ஆண்டுக் கணக்கில் பல படைப்புகளைப் படைத்துள்ளீர்கள். முதல் நூலை வெளியிடு வதற்கு ஏன் இவ்வளவு சுணக்கம்?
நூல் வெளியிடுவது என்றால், 150க்கு மேற்பட்ட சிங்கை, மலேசியாவில் ஒலிபரப்பான எனது நாடகங்கள், தமிழ் முரசு, தமிழ் நேசன், தமிழ் மலர், வானம்பாடி, மயில், இணைய இதழ்கள் என பல பத்திரிகைகளில் 130க்கும் மேற்பட்ட கதைகள் எழுதியுள் ளேன். அவற்றையெல்லாம் நூலாக தொகுக்க வேண்டுமெனில் எண்ணிலடங்கா நூல்கள் வேண்டும். நூல் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எழுந்ததில்லை. எனது மகள்களின் ஆர்வமும் தூண்டுகோளுமே எனது முதல் நூல் வெளியீடு காண்பதற்கு முக்கியக் காரணம்.
கே--அந்தக் கால வாசகர்களை ஈர்த்த உங்கள் எழுத்து இக்கால வாசகர்களையும் ஈர்த்துள்ளது. அதற்கு உங்கள் எழுத்தில் நீங்கள் செய்த மாற்றம்?
இரண்டு தலைமுறை எழுத் தாளர்களோடு எழுதிக் கொண் டிருக்கிறேன் என்றால், என்னுடைய இலக்கியத்தேடல், என்னுள் கனன்று கொண்டிருக்கும் தீப்பொறி இன்னும் ஓயவில்லை என்றுதானே அர்த்தம்? அதற்கு வாசகர்கள் தரும் ஊக்கம்தான் மிகப்பெரிய உந்துசக்தி. கதை படித்துவிட்டு ஒருவாரம் வரை என்னிடம் சர்ச்சை செய்யும் மிகத்தரமான ஆழமான வாசகர்கள்கூட எனக்குண்டு. 25 ஆண்டுகட்கு முன்பு ஜன்னல் வழிப் பார்வையில் கதை சொல்வது, உபதேசம் செய்வது, கைதூக்கி விடுவது போன்ற நடை எடுபட்டது. ஆனால் இன்று புத்தாக்க சிந்தனையும் அதை அடியொற்றி, உளவியல், வாழ்க்கைச்சிக்கல், பற்றி எழுதுவதற்கும், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற இன்னொரு மனிதனை, அவனே கண்டு கொண்டாற்போல் வாசகனைத் திகைக்க வைக்கும், கருத்தாக்கத்தோடு எழுதும் அறிவார்த்தமும் வேண்டும். அதற்கு பன்னெடுங்காலமாக வாழ்க்கை கொண்டு வந்த மரபின் சிந்தனையை அடியொற்றி, எழுத வேண்டிய கட்டாயத்தை வலுக்கட்டாயமாக தூக்கி எறிந்து. எல்லா இசங்களையும், கற்பிதங்களையும் முற்றாக அழித்துவிட்டு, புதிய கோணத்தில் பின் நவீனத்துவ சிந்தனையின் வாக்கிய ஜாலங்களில் கதையோட்டத்தை கொண்டு போக அதிகம் உழைக்க வேண்டியிருந்தது. வாழ்க்கையை அதன் அனைத்து அழுக்காறோடும், சொல்லவொணா அவலம் தோய்ந்த சுதி லயத்தோடும், இம்மிகூட பிசகாத, கட்டொழுங் கோடும் எழுதும்போது அர்ஜுனன் கண்ட விஸ்வரூப தரிசனம்போல், வாசகன் வெலவெலத்துப் போவான். சிறுகதைக்கு உத்தி, உள்ளீடு, தடாலடி சாகசங்ககளில் வார்த்தை ஜாலம் எனும் மாயையில் என்றுமே எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை.
கனவாய், மழையாய் உதிப்பது இலக்கியம். அந்த யாகத்திலிருந்து எழும் ஒவ்வொரு சிருஷ்டியும் எழுதி முடிக்கும் போது, வேள்வியிலிருந்து எழுந்த அனுபவம்தான் எனக்கு ஏற்படுகிறது. மலையாளத்தில் உள்ள பரிசோதனை முயற்சிகளைத்தான் தமிழிலும் எழுதுகிறேன். சமகால இலக்கியம் பெற்ற அசுர வளர்ச்சியில், புதிய பார்வையும், ஆழமான பன்முகக் கூறுகளை, வாசகனுக்கு மூச்சு முட்டாத நிலையில், அகவுலக தரிசனங்களை கைபிடித்துப்போய் காட்டவும் வேண்டும். அனைத்தும் மறந்த ஸ்தம்பிதத்தில், கிளியோடுள்ள என்டெ அனுபவம், கணநேர மூர்ச்சையில் விழுந்த
கதைக்கருதான், எனது நுவல். தியேரி ஆப் மார்டன் ஷார்ட் ஸ்டோரி எனும் பயிற்சிக்கு ஞான் தெரிவு செய்யப்பட்ட போது, தாமஸ் மான், டால்ஸ்டாய், டாஸ்டாவ்ஸ் கியை படிக்க வேண்டி வந்தபோது அவர்களின் எழுத்தைப் படித்துத் தெளிய அப்படி கஷ்டப்பட்டேன். ஆனால், மாப்பாசான், செகாவ், ஓஹென்றியை சுலபமாய் என்னால் கிரகிக்க முடிந்தது. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், லா.ச.ரா, தி.ஜா. போன்றோரில் மெய்ம்மறந்து லயிக்க முடிந்தது. எம்.டி. வாசு தேவன் நாயர், காரூர் நீலகண்டன் பிள்ளை, பாலச்சந்திரன் சுள்ளிக் காடு, ஆற்றூர் ரவிவர்மா, போன்றோரின் நடையோடு இசைந்து நடை போடமுடிந்தது. உலகின் மிகச்சிறந்த நாவல்களாகிய, நார்வே தேசத்து நட் ஹாம்சனின் ‘நிலவளம்’ ருஷ்ய தேசத்து நிகோலை கோகால், எழுதிய “டோரஸ் பல்பா” ஹெர்மன் மெல்வில் எழுதிய “திமிங்கில வேட்டை”, ஸ்பானிய நாட்டு மைகல் ர்வாண்டிஸ் எழுதிய டான் க்விஜோட், லியோ டால்ஸ்டாயின், அன்னா கரினீனா, ஸ்வீடன் நாட்டு செல்மா லகர்லெவ் எழுதிய, “கெஸ்டாவின் கதை”, டாஸ்டாவ்ஸ்கியின், “கரமஸாவ் சகோதரர்கள்” ஆகிய நாவல்கள், என்டெ உள்ளம் கொள்ளை கொண்ட நாவல்கள். “பேட்டர்ன் ரைட்டிங்”, “இன் வலுட்டெட் ரைட்டிங்”, “கன்வலுட் டெட் ரைட்டிங்” எனும் மூன்று நிலைகளிலும் கதைகள் புனைந்த அனுபவம் கிட்டியதும் கூட அங்கு தான். அதுபோலவே மலையாள மேடை நாடகத் துறையில் 3 குறிப்பிட்ட விருதுகள் பெற்றபோது, தமிழ் நாட்டில் கூத்துப்பட்டறை முத்துசாமி சாரிடம் பயிற்சிக்குச் சென்றேன். அங்கே பேராசிரியர் ராமானுஜம், டெல்லி டாக்டர் ரவீந்திரன் ,போன்றோரிடம் பெற்ற பயிற்சி இன்னொரு உரைகல். புதுக் கவிதை எழுச்சியை முத்துசாமி சாரிடம் தான் பெற்றேன். குருகுல வாசம் போல் இலக்கியப்பட்டறையில் மிகப் பொறுமையாக, தெளிவாக, கற்றுக்கொடுத்தவர் ஆசிரியர் முத்துசாமி. “அந்த்தாலஜி ஆஃப் மாடர்ன் லிட்டரேச்சர்”, “மாஸ்டர் பீஸ் ஆஃப் இண்டியன் லிட்டரேச்சர்,” எனும் நூல்களுக்காக ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அலைந்திருக்கிறேன். இறுதியாக அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு பேராசிரியரிட மிருந்து பொன் விலை கொடுத்து வாங்கினேன். பத்திபத்தியாய், ஒவ்வொரு உள்ளடக்கமும் அவ்வளவு ஆழமாக படித்தேன். அப்படியும் எனது வாசிப்பு ஓயவில்லை. தொலைக்காட்சியோ, சினிமாவோ என்றுமே என்னை ஈர்ப்பதில்லை. அந்த நேரத்தில், ஒரு நாவல் விமர்சனமோ கதையோ எழுத அமர்வேன். நள்ளிரவுக்குமேல்தான் எனக்கு எழுதவே நேரம் கிட்டும். அப்படியும் வாசிப்பதை விட்டதில்லை. தமிழ், மலையாளம் மட்டுமல்ல, பிறமொழி மொழிபெயர்ப்புகளும் கூட தேடித் தேடி வாசிக்கிறேன். இணையத் திலும் விடாது வாசிக்கிறேன். 9ம், 12ம் நூற்றாண்டு நூல்களிலிருந்து, இன்றைய, ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணனிலிருந்து, அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா ஆகியோரின் படைப்புகள் வரை வாசிப்பதாலேயே விரல் நுனியில், பம்மாத்து இலக்கியம் எது, தரமான இலக்கியம் எது, இலக்கிய காடேற்றிகள் யார், என்பதை வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கணிக்க முடிகிறது. இன்றும் என்னுடைய எழுத்தில், அது சிறுகதைகளாகட்டும், நாடகங்களாகட்டும் அன்றாட வாழ்வியலில் நமது சிங்கப்பூரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, பெண்களின் பிரச்சினைகளை, அடித்தளத்தட்டு மக்களின் பிரச்சினைகளைத் தான் அதிகமாக எழுதுகிறேன். எனக் கென்று உள்ள வாசகர்கள்கூட அந்த கதைகளால் தான் கவரப்பட்டு என்னை வாசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
கே-- உங்கள் சிறுகதைகளில் எழுத்தாளனின் உழைப்பை காண முடிகிறது. உதாரணத்திற்கு கடைசியாக தமிழ் முரசில் தாங்கள் எழுதிய “சூரிய கிரகணத் தெரு” சிறுகதையின் கதை மாந்தர்களின் பேச்சு மொழியை எப்படி அறிந்து கொண்டீர்கள் என்று விளக்க முடியுமா?
ஒவ்வொரு கதைக்கும் மிகக் கடுமையாகத்தான் உழைக்கிறேன். வீட்டில் பேசுவது மலையாளம், ஞான் சார்ந்த உலகம் மலை யாளம், எனும் சூழலில் தமிழ் எழுதுவதொன்றும் சுலபமாக இல்லை. இதில்,” சூரிய கிரகணத் தெரு” ஞான் கண்ணீருடன் கலங்கி எழுதிய கதை, மிகவும் பாடுபட்டு களப்பணி செய்து எழுதிய கதை. பல மாதங்களாக இந்த பெண்களின் பிரச்சினையை எழுதத் தவித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர்களை எப்படி அணுகுவது என்றே தெரியவில்லை. பத்திரிகை செய்திகளும் ஊடகங்களில் வந்த தகவல்களையும் படித்த போதே, இதை ஆய்வு செய்யும் ஆவல் வந்தது. தெரிந்தே பாலியலுக்கு வரும் பெண்களைத் தானே தெரியும் நமக்கு. ஆனால், அப்பாவிப் பெண்களும் ஏமாற்றப் பட்டு, எப்படி இத்தொழிலுக்கு வருகிறார்கள் என்பதை உணர்த்த எழுதிய கதை. இதற்காக, அந்தப் பெண்களை எப்படி தேடிக்கண்டு பிடிப்பது, என்றுகூட எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், சிங்கப்பூரில் எங்குமே கணவர், குழந்தைகளின் உதவி இல்லாமல் தனியே வெளியில் செல்லும் ஆற்றல் எனக்கில்லை. முன்னாள் ஆங்கிலப் பத்திரிகையில் பணிபுரிந்த என்டெ இனிய ரிப்போர்ட்டர் தோழி ஒருவர் உதவியால்தான் அந்தப்பெண் களை அணுகவே முடிந்தது. பேட்டி எடுக்க அல்ல. போட்டோ பிடிக்க அல்ல, ஞான் எழுத்தாளர் மட்டுமே என்று, புரிய வைத்தும் ஒரு பெண் கூட பேச முன் வர வில்லை. ஆனால் ராமக்கா (உண்மைப்பெயரல்ல) கதாபாத்திரம் மட்டுமே, என்னிடம் பேசினார். “நான் சொல்றேங்கா! 30 வெள்ளியும் ஒரு பொங்குசு பிரியாணியும் தறியாக்கா!? என்று கேட்டபோது, நெஞ்சை அடைத்து அழுகை வந்தது. ”இப்பல்லாம் பீர் குடிக்காம தூங்கவே முடியலைக்கா,” என்று சொன்ன அந்தப் பெண்ணுக்கு வயது 20 கூட இல்லை. பாஸ்போட்டை பறி கொடுத்து, வேறொரு போலி பாஸ் போட்டுக்காக, அவர்கள் எப்படி யெல்லாம் என்னென்ன தொழிலில் பலிகடாவாக இயங்குகிறார்கள், என்று அந்தப்பெண் விஸ்தரித்த போது, அதிர்ச்சியில் உறைந்தேன். என் கண்கள் குளமாயின. ஆனால் எனது கண்ணீரையும் மீறி, அந்தப்பெண்ணின் பாஷையும் எனக்குப் புரியவில்லை. அவள் பேசிய மொழியை அப்படியே ஒலிப்பதிவு செய்து கொண்டு வந்து, கிட்டத்தட்ட அந்தப்பெண்ணின் பாஷையிலேயே கதையை நடத்திச் சென்றேன். அதுதான் சூரியக் கிரகணத்தெருவாய் சிறுகதை யாகியது. இக்கதையை கணிணியில் தட்டச்சு செய்து முடித்தபோது, விடியற்காலை 4 மணி ஆகி விட்டது. ஆனால் தட்டச்சு செய்து முடித்தும், ஒரு பொட்டுக்கூட இமை மூட முடியாமல் தூங்க முடியாமல், விடிந்தும் கூட எழ முடியாமல் சக்தி யெல்லாம், உறிஞ்சப்பட்டவளாய், கட்டிலில் சுருண்டு கிடந்தேன். அந்தப் பெண்களை நினைக்க நினைக்க பித்துப்பிடித்தாற்போல் அழுகை வந்தது. இந்த பாதிப்பிலிருந்து மீளவே எனக்கு இரண்டு நாட்கள் பிடித்தது. நள்ளிரவிலும் உலுக்கி விட்டாற்போல், தூக்கத்திலிருந்து எழுந்து நடுங்கியிருக்கிறேன். “தண்ணியடிச்சாத்தாங்கா தூங்கவே முடியுது,” என்ற அந்த பெண்ணின் குரலை வாழ்நாளில் மறக்கவே முடியாது. இதுபோலவே “நுகத்தடி” கதை யும் என்னை மிகவும் பாதித்த சம்பவம்தான். குறும்படம் ஒன்றுக்கு யதார்த்த இலக்கியம் வேண்டும் என்றபோது, எங்கள் குழுவில் சிலர் சேர்ந்து, என்டெ கணவருடன் மலேசியாவில் உள்ள மனநல மருத்துவமனைக்குப் போனோம். “அக்கா, தோடுக்கா, ஒரே ஒரு தோடுக்கா, வேறொண்ணும் வேணாங்கா,” என்று ஒரு பெண் பின்னாலேயே ஒடி வந்தாள். ஒரு வெள்ளி போதுங்கா, என்று இன்னொரு பெண்? இதோ, இப்பொழுதும்கூட அந்த அனுபவத்தை என்னால் எழுதக்கூட முடியாமல் மனசு கனத்துப் போகிறது. பெற் றோராலும் உற்றாராலும் கைவிடப்பட்ட அவர்களின் வாழ்வாதாரமே சாப்பாடுதான். கலர் வளையல் களும் மணிமாலைகளும் போட்டு விட்டால் அப்படியே பூரித்துப் போகிறார்கள். மாதமொருநாள் தியானமாக, வாழ்க்கை நியதியாக அவர்களை ஞான் சந்திக்கிறேன். சாப்பாடும் கலர் வளையல்களுக்குமான அவர்களின் உலகம் பார்த்தபோது, எழுதும்போதே கரைந்து கரைந்து அழுதிருக்கிறேன். ஆன்மீகம் என்ற பெயரில் போலி சாமியார்களுக்கும், சல்லிக்காசு பெறாத சுய விளம்பரங்களுக்கெல்லாம், பணத்தை அநாயாசமாய் செலவு செய்யும் ஆன்றோர்கள் இந்த பேதைப்பெண்களுக்கு உதவமாட்டார்களா? என்று பரிதவித்திருக்கிறேன். ஆனால் மனசெல்லாம் குளிரக் குளிர அபிஷேகம் செய்த சம்பவம் ஒன்று நடந்தது. இணையத்தில் எனது “நுகத்தடி” கதை படித்து ஒரு தொண்டூழிய நிறுவனம், அவர்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளது. சாந்தா என்ற பெண்மணி முத்துமாலைகள் செய்து கொண்டு போய் கொடுக்கிறார். “முத்தக்கா குடுத்தாங்க”, என்று அந்த பெண்கள் சொல்லும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. மற்றும் என்னை அழைத்துப்போகும் டேக்சி ஓட்டுநர்களின் மனைவிகள், பலர் அந்த பெண்களுக்கு உணவு சமைத்துக்கொண்டு போகிறார்கள். ஆத்மார்த்தமான இலக்கியத்தில் என்னதான் சாதிக்க முடிந்த தில்லை? அதிரடி உத்தியும் தடாலடி சாக சங்களும் மட்டும்தான் இலக்கியமா? உக்கி உருகி, கண்ணீருடன் அவர்களுக்காக ஞான் எழுதிய கதையில் ஒரு நிமிஷமேனும் மானுடம் சிலிர்த்ததே, அது போதாதா? அதைவிட என்ன வேண்டும?
கே-- 120க்கு மேற்பட்ட சிறுகதை களை எழுதியுள்ள நீங்கள், அக்கதைகள் அத்தனையையும் நூலாக எப்போது வெளியிடப் போகிறீர்கள்?
இப்பொழுது நூலாக்கம் பெற்ற எனது, ”நுவல்” நூலின் ஆய்வாளர்கள் மற்றும்,டாக்டர் .திண்ணப்பன் சார், தமிழாசிரியர் வீ.ஆர்.பி. மாணிக்கம் போன்றோர் மட்டுமல்ல, எமது எழுத்தின் பால் நேசம் கொண்ட பலரும் முன்னரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். ஆனால், அண்மையில் முனைவர் பட்டப்படிப்பை முடித்த, ஆங்கில விரிவுரையாளரான எனது தங்க மகள் ,ஆங்கிலத்தில் 5 நூல்கள் எழுதியுள்ளாள். மூன்று தலைமுறை சிங்கப்பூர் மலையாளிகள் பற்றிய அவளது அருமையான ஆங்கில நூலை அமேசன் டாட் காம் பிரசுரித்துள்ளது. அவளது இதர நூல் களையும்கூட ஒரு அன்னையாக, பெருமிதத்தோடு தான் காண்கிறேன், இலக்கியத்தில் எனது வாரிசை உருவாக்கியுள்ளேன், இனியும் என்ன? எனது மற்ற நூலாக்கங்கள் பற்றியும் ம்ம்ம். யோசிக்கிறேன்.
கே-- உங்களின் சிறுகதைகளில் அவ்வப்போது வடமொழிச் சொற்கள் வந்து விழுகின்றன, அதே நேரத்தில் உங்கள் கதைகளிலும் சரி, கதைகளின் தலைப்புகளிலும் சரி, தமிழில் வழக்கத்தில் இருந்து மறக்கப்பட்ட அழகிய இனிய சொற்களையும் பயன்படுத்துகிறீர்கள்? இதுபற்றிய குறை நிறைகளை யாரேனும் உங்களிடம் பகிர்ந்துகொண்டதுண்டா?
பிறப்பால், வளர்ப்பால், வாழ்வால், ரசனையால், உணர்வால், உடையால், ஏன், உணவால் கூட, ஞான் ஒரு அப்பட்டமான மலையாளி தான். அப்படியிருக்க தாய்மொழித் தாக்கம் எப்படி இல்லாமலிருக்கும்? தமிழோடு ஆரியம் கலக்கத்தொடங்கியபோதே, தமிழுக்கு வரம்பு கட்டிவிட்டார்கள் தமிழிலக்கண அறிஞர்கள். ஆனால் மலையாளம் இன்றும் மாற்றுப்பெறவில்லை. அதன் பிறந்த பொலிவோடுதான் இன்றும் இலங்குகிறது. சங்ககால இலக்கியசொற்கள் பல மலையாளத்தில் இன்றும் நடைமொழியில் உண்டு. அங்கு தான் என்டெ சிக்கல். மலையாளத்தில் சிந்தித்து, மலையாளத்திலேயே ஒருமுகப் படுத்தி, மலையாளத்திலேயே வடிவமும் கொடுத்தபிறகே தமிழ் படுத்துகிறேன். தமிழர்களைப்போல், நேரடியாகவே தமிழில் எழுதும் ஆற்றல் எனக்கில்லை. அதனால்தான் தமிழ் எழுதுவதே எனக்கு இமாலய சாதனை என்கிறேன். திருமணமாகி ஞான் சிங்கைக்கு வந்தபோது, கொச்சு கேரளம் என்றழைக்கப்படும் செம்பவாங்கில் தான் எனது புக்ககம். கூட்டுக்குடும்பத்தில், கணவரின் பெற்றோர், கணவரின் ஏட்டன்மார், அவரது மனைவிகள், கணவரின் தங்கை, என்றல்லாமல், அக்கம் பக்கம், திரும்பிய இடமெல்லாம் மலையாளிகள் ,என முழுக்க முழுக்க பெற்றோரிட மிருந்த, அதே, மலையாளச் சூழலில் தான் வாழ்க்கை தொடங்கியது. அப்பொழுது எனது தமிழ்த்தாகத்துக்கு, எனக்குக் கிட்டிய ஒரே வடிகால், தமிழ்ப் பத்திரிகைகளும் வானொலியும் தான். புத்தகத்தமிழ் மிகச்சிறப்பாக என்னால் எழுதமுடியும். ஆனால் வானொலி நாடகங்கள் எழுதத் தொடங்கியபோது, பேச்சுத்தமிழில் எழுத மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன். வானொலித் தயாரிப்பாளர்கள் அமரர் மூர்த்தி சார், ராமையா சார், போன்றோர் மிகப்பொறுமையாக சொல்லிக் கொடுத்தார்கள். கணவரின் நண்பர்களின் வீட்டுக்குப் போகும்போது, அவர்கள் பேசுவதை ஒலிப்பதிவு செய்தும், மனனம் செய்தும் எல்லாம், பேச்சுத்தமிழ் பயின்றிருக்கிறேன். அந்தக் கால கட்டத்தில் தான், தி.ஜா. லா.ச.ரா, ஜெ.கா. சு.ரா. ஆகியோரது
நூல்களையெல்லாம் ஒரு பயிற்சியாகவே எடுத்துப் படித்தேன். அப்படியும் இன்றும் பேசும் போது மலையாளத்தாக்கம் உண்டு என்பதை ஒப்புக்கொள்கிறேன். கதைவடிவத்துக்கேற்ப மொழி நடையைக் கொண்டுபோவதுதான் இலக்கியம். அழகியல் பரிமாணங்களுடன், உருவகப் படிமத்தோடு எழுதுவதும் கூட எனக்குப்பிடிக்கும். Illusion and realityயிலும் கதை புனைபவள் நான் என்பதை எனது கதைகளில் உணரலாம். ஆனால் தனித்தமிழில் எனக்கு அபார காதல் உண்டு. ஆனால் மகாகவி பாரதியின் கவிதைகளில் உள்ளம் பறி கொடுத்தவள். சங்க இலக்கியப்பாடல்களிலும் அபார மோகம் உண்டு. அப்படியும் ஏதேனும் ஐயம் இருந்தால் டாக்டர் திண்ணப்பன் சாரிடம், கேட்டு தெளிவு பெற்றுள்ளேன். தொல்காப்பிய உரையில் பல இடங்களில் திண்ணப்பன் சாரின் விளக்கம் எனக்கு உதவியுள்ளது. சங்க இலக்கிய காதலால்தான் எனது கதைகளில், ”உற்றுழி, காக்காய்பொன், நுகத்தடி, சூரியக்கிரகணத்தெரு, நுவல் போன்ற தலைப்புக்களில் எழுதுகிறேன். அதே நேரம் ”உங்கள் தலைப்புக்களைப் படித்தால் தமிழ் டிக்ஷனரியை வைத்துக் கொண்டுதான் பொருள் கண்டுபிடிக்கவேண்டும் போலிருக்கிறதே, ” என்று குறைசொன்னவர்களும் உண்டு. ஆனால், “எப்படி இவ்வளவு பழைய மரபுச்சொற்களைத் தேடிக்கண்டு பிடிக்கிறீர்கள்? என்று தமிழ் நாட்டிலேயே என்னை பேட்டி எடுக்க வந்த இருவர் கேட்டார்கள். ”நுவல்“ என்ற தலைப்பில் முதன்முறையாக தமிழ்நூல் வந்துள்ளது என்று மகிழ்ந்தார் எனது மதிப்பிற்குரியபேராசிரியர் ராமானுஜம் சார் அவர்கள். ஆய்வுக்கட்டுரைகளில் தூய தமிழ்ச் சொற்கள் தேவை என்பதை ஞான் மறுக்கவில்லை. அப்படித்தான் இணையத்தில் விமர்சனங்களும் கட்டுரைகளும் எழுதுகிறேன்.
கே,,-- உங்களை ஒரு பெண் எழுத்தாளர் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறீர்களா அல்லது எழுத்தாளர் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறீர்களா?
இரண்டுமே இல்லை. ஞான் ஒரு எழுத்தாளினி என்று சொல்லிக் கொள்வதில் தான் எனக்குப் பெருமை. ஆனால் ஒரு கேள்வியுண்டு. ஆண் என்ன? பெண் என்ன? எல்லோருமே படைப்பிலக்கியம் தானே எழுதுகிறோம் என்று ஆறுதல்பட்டுக்கொண்டாலும், நிச்சயமாக ஒரு பெண் வயிற்றுக்குள் குழந்தை புரளும் அனுப வத்தை எந்த ஓர் ஆண் எழுத் தாளராவது எழுதமுடியுமா? தாய்மை வலியை, மாதவிடாய் துன்பத்தை “தாகம்” என்ற தலைப்பில் ஞான் எழுதியிருக்கிறேன். “சிங்கா”, இதழில் ஆங்கிலத்திலும் தமிழிலும் அக்கதை பிரசுரமானபோது, டாக்டர் சித்ரா சங்கரன் அவர்கள், மிகச்சிறப்பாகஅக்கதையை முன்னிலைப்படுத்தி அறிமுகப்படுத்தியிருந்தார்கள்,. தவிரவும் என்னுடைய எழுத்துக்கள் எல்லாமே பெண் எழுத்துக்கள்தான். “முகடுகள்,” மாதந்தோறும் ஞான் சென்று உதவும் முதியோர் இல்ல பெண்மணிகளின் பிரச்சினை சார்ந்தது. என்னைச் சுற்றியுள்ள சமுதாய அவலங்கள்தான் முதலில் என்னை உறுத்துகிறது. அவர்களைத்தான் மனித நேயத்தோடு காண்கிறேன். எழுதுகிறேன். உற்றுழி, நண்டு, நாசிலெமாக், மிதவை, சூரியக்கிரஹணத்தெரு, நுவல்,நுகத்தடி, என எல்லாமே பெண்கள் சார்ந்த, பெண்களின் பிரச்சினைகளைப் பேசும் கதைகள்தான் .என்னை படித்தவர்களுக்குப் புரியும். அப்படியிருக்க ஞான் பெண் எழுத்தாளரா, இல்லை எழுத்தாளரா என்பதை வாசகர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
கே-- பொதுவாக இந்தியர்களில் பெண் எழுத்தாளர் என்றாலே நினைவுக்கு வருவது பெண்ணியம்தான். அவர்களது எழுத்துகள் பெரும்பாலும், பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியே பேசிக்கொண்டுள்ளன. இந்த நவீன உலகில் பெண்கள், ஆண்கள் என பிரித்துப் பேசுவது பொருந்துமா? இன்றைய பெண்கள், ஆணாதிக்கத்தில் இன்னமும் அடிமைப்படுத்தப் படுகின்றனரா? பெண்ணியம் பேச வேண்டிய காலத்தில்தான் இன்னமும் வாழ்கிறோமோ? கொஞ்சம் விளக்க முடியுமா?
ஆண் என்றாலே ஆல், பெண் என்றால் நாணல் ,எனும் கோட்பாட்டில் வாழ்ந்து வருபவள் ஞான். பெரியவர்களைக்கண்டால் இன்றும் பாதம் பணிந்து நமஸ்காரம் செய்பவள் ஞான். பெரியவர்களுக்கு முன்னால் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமரவே தெரியாது. ஆண்களைக்கண்டால் இயல்பாகவே எழுந்து நின்று மரியாதை கொடுப்பேன். இன்றும் வெளியில் போனால் , கணவரின் உணவுநேரத்துக்குள், வீடு திரும்ப வேண்டுமே எனும் பரிதவிப்பில் , பறவாய்ப்பறந்து வீடு திரும்புபவள் ஞான். ஏழரை மணிக்குள் கணவர் உண்டாரா, மகளின் குழந்தை , சாப்பிட்டானா? என்றெல்லாம் தவியாய்த்தவிக்கும் ஒரு சராசரி குடும்பத்தலைவி ஞான். ஒருமுறை கணவருக்கு சாய கலக்கணும் என்று தொலை பேசியைத் துண்டித்தபோது, ஏன்? உன் கணவர் சொந்தமாக சாய கலக்கிக் குடிக்கமாட்டாரா? என்று தோழி ஒருவர் கேட்டார். முதலில் ஞான் ஒரு மனைவி, என் குழந்தைகளின் அன்னை, பட்டுக்குட்டனின் அம்மம்மா, பிறகுதான் ஒரு இலக்கியவாதி. இப்படித்தான் என்னைப்பற்றி ஞான் சொல்லிக் கொள்ள முடியும். அதற்காக என்னுடைய வாழ்வியல் சிந்தனையை மற்றவர்கள் மேல் புகுத்த எனக்கென்ன உரிமை இருக்கிறது? பாரதியார் காலத்தி லிருந்து, பெண்களின் உடற்கூறும்பிள்ளைப்பேறும் அவர்களை அடிமைப்படுத்தும் இயற்கைக் காரணிகள்என்றுணர்ந்து, கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை, அ. மாதவையா, பெரியார்,புதுமைப்பித்தன் ,போன்றோர் எழுத்தாலும்,மூவலூர் ராமாமிர்தம்,பண்டிட் ரமாபாய், முத்துலெட்சுமி ரெட்டி,போன்ற பெண்சக்திகள், பெண்விடுதலைக்காகவும் பாடுபட்டார்கள்.ஆனால் இன்று, கல்வி, சம்பாத்தியம், என எல்லா துறைகளிலுமே, ஆணுக்கு சரிநிகர் சமமாக விளங்கும், இன்றைய இளம்பெண்களில் பலருக்கும் தெளிவான சிந்தனை உண்டு.அப்படியும் கூட தரமான கல்வித்தகுதிக்குக் கூட இணையில்லாத ஆண்களை, ஏதோ நிர்ப்பந்தத்தால் மணந்து ,அவர்களால் வக்கிரமாக துன்பப்பட்டுக் கொண்டும் கூட, சமுதாயத்துக்கு அஞ்சி , சேர்ந்தே வாழும் பெண்களையும் ஞான் பார்க்கிறேன். இதை ஆணாதிக்கம் என்றல்லால் வேறென்ன சொல்ல? அதனால் தான் எனது சூரியக்கிரகணத்தெரு ” கதையில் வரும் பெண்களை ரத்தமும் சதையுமாய் நேரில் சந்தித்தபோது, நெஞ்சுடைந்து அழுகை மட்டுமல்ல, அவர்களை ஏமாற்றியவர்கள் மீது கோபமும் வந்தது. அதைத்தான் எழுத்தில் கொண்டு வந்தேன். இது மட்டுமல்ல, அப்பாவிப்பெண்களின் வரு மானத்தில் வாழ்ந்துகொண்டு, மதுவிலும் தீய பழக்கங்களிலும் தன்னை அழித்துக்கொண்டு, மனைவியின் சம்பாத்தியத்தில் குளிர் காயும் ஆண்களிடமிருந்து பெண் விடுதலைக்கு போராடுவதில் என்ன தப்பு.? அப்படிப் பேசினால், அல்லது எழுதினால் உடனே அது பெண்ணியமாகிவிடுமா? என்டெ சாரே, ? ! எந்தக்காலத் தில் வாழ்ந்தால் என்ன? ஆண், பெண், உறவுச்சிக்கல்களுக்கு, இதம் பதமாய், மாற்றுமொழி தான் என்ன? அதேபோல் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களும் உண்டு. ஆண்களுக்கும் பெண்களால் ஏற்படும் துன்பங்கள் உண்டு. அவர்கள் கவலையும், கூற்றும் கூட அனுசரணையாய் கவனிக்கப்படவேண்டியவையே. ஆனால் என்னுடைய கேள்வி? பெண்ணியம் பற்றி தெரிந்தே தான் பேசுகிறார்களா? அல்லது அதை ஒரு ஸ்டைல் என்று பேசுகிறார்களா என்பதும், இங்கு யோசிக்க வேண்டிய விஷயமே.என்னுடைய ”உற்றுழி“ கதையில் ஒரு பெண் ணிய கதை நாயகியைப் பற்றிய அனுபவம் எழுதியிருக்கிறேன். எனது நுவல் நூலில் அக்கதை உண்டு.
>கே-- இலக்கியம் படைக்கவிரும்பும் இளையோருக்கு நீங்கள் கூற விரும்புவது?
படு புத்திசாலியான இளையர் களைத்தான் ஞான் பார்க்கிறேன். கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் இலக்கிய வகுப்பு நடத்தச் சென்ற போது, அவர்களின் கேள்விகள் என்னை திகைக்க வைத்துள்ளது. என்னிடம் பயிற்சிக்கு வரும் இளையர்களிடமும் அசாத்திய திறமையை உணர்ந்திருக்கிறேன் . அவர்களின் வாழ்வியல் தேடல் வேறாக இருப்பதால், அவர்களால் இலக்கியத்தில் தொடர முடிவதில்லை, ஆனால் தமிழே எதற்கு என்று கேட்கும், தமிழ் பேசவே வெட்கப்படும், ஏன், தமிழ்படித்து என்ன செய்யப் போகிறோம்என்று கோபப்படும் இளையர்களையும் பார்க்கிறேன். இலக்கியம் மனதை மிருதுவாக்கும. கனிந்து குழைந்து, மென்மையாக,மனதை தாலாட்டும் என்றெல்லாம், என்டெ சஹ்ருதய ஸ்னேஹத்தை அவர்களுக்கு எடுத்து சொல்லியிருக்கிறேன். அப்படியும் இலக்கியம் படைக்க வேண்டுமென ஆவலோடு வருபவர்களுக்கு,எப்பொழுதுமே சொல்லும் அறிவுரை ஒன்றேதான். அவர்கள் நிறைய வாசிக்கவேண்டும். முதலில் நம்மைச்சுற்றி நிகழும் நிகழ்வில் ஏற்படும் தாக்கங்களில், அவர்களால் கவனம் செலுத்த முடிகிறதா? அப்படியாயின் அதை முதலில் எழுதிப்பார்க்கலாம், இப்படித்தான் என்னிடம் வரும் , ஞான் நடத்தும் இலக்கிய வகுப்புகளில், எழுத்துப்பயிற்சி கொடுக்கிறேன். தமிழிலும் மற்ற மொழிகளிலும் வரும் ஏராளமான மொழிபெயர்ப்பு நூல்களையும் படிக்கவேண்டும். எழுதி, எழுதி, பயிற்சி பெற வேண்டும். தெரியவில்லையாயின் தெரிந்த மூத்த எழுத்தாளர்களிடம் ,அல்லது அவர்களின் தமிழாசிரியர்களிடமாவது, காண்பித்து, தங்கள் எழுத்தைச் செப்பனிடலாம். ஆங்கிலத் தாக்கத்தில் தமிழ் எழுத முன்வராமல் தமிழர்கள் தங்கள் தாய்மொழியான> தமிழிலேயே, எழுதப் பயில வேண்டும். தமிழ் அற்புதமான மொழி. நெஞ்சை அள்ளும் இனிமையான மொழி. தமிழின் மிகப்பெரிய வரம் பாரதி, பாரதியைப்படித்து, பாரதியால் ஆக்ர்ஷிக்கப்பட்டு, தமிழிலக்கியம் படைக்க வந்தவள் ஞான். ஒரு மலையாளி தமிழ் எழுதும்போது தமிழர்களுக்கென்ன தமிழர்கள் பாக்கியசாலிகள் தானே? ஆரோக்கியமான இலக்கிய சூழல் இளையர்களிடையே வரவேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.