[குழந்தைக் கவிஞர் என்றால் அழ. வள்ளியப்பா, நவாலியூர்த் தாத்தா சோமசுந்தரப் புலவர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள்தாம் முதலில் நினைவுக்கு வருவார்கள். அது போல் குழந்தை எழுத்தாளர்களென்றால் வாண்டுமாமா, பூவண்ணன் ஆகியோர்தாம் முதலில் நினைவுக்கு வருவார்கள். எழுத்தாளர் பூவண்ணன் அண்மையில் காலமானார். அவரது நினைவாக, 'தென்றல்' இணைய இதழில் வெளியான இந்த நேர்காணலை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்]
டாக்டர் பூவண்ணன் தலைசிறந்த குழந்தை எழுத்தாளர். சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம், இலக்கிய வரலாறு முதலிய அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்தவர். ஏராளமான பரிசுகளை வென்றவர். இவரது 'ஆலம்விழுது' கதை தமிழ் தவிர இன்னும் பல மொழிகளில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. பெரியவர்களுக்காகவும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார் பூவண்ணன். இதோ அவரே பேசுகிறார்....
குடும்பப் பின்னணி
சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். சொந்த ஊர் செங்கற்பட்டு மாவட்டத்தில் மிஞ்சூருக்கு அருகில் உள்ள நாலூர் என்கிற கிராமமாகும். ஆனால் என் தகப்பனார் பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கு வந்துவிட்டார். தந்தையார் பெயர் தாமோதரம். தாயார் லட்சுமிகாந்தம்மாள். பெற்றோருக்கு நாங்கள் ஆறு குழந்தைகள். இப்போது எனக்கு இரண்டு சகோதரர்கள் ஒரு சகோதரி இருக்கின்றனர். எங்கள் வீட்டு உரிமையாளருக்கு நிறைய வாசிக்கும் பழக்கம் இருந்தது. அந்தக் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஆனந்த போதினி, பிரசன்னவிகடன் போன்ற இதழ்களை வீட்டிற்கு வரவழைப்பார். சில நேரங்களில் எனக்கும் படிக்கத் தருவார். நான் வார்த்தை வார்த்தையாகக் கூட்டிப் படிப்பேன். இப்படி ஆரம்பித்ததுதான் என் வாசிக்கும் பழக்கம். பூவண்ணன் என்கிற பெயர் வந்த விதம் என் பெற்றோர் எனக்கு வைத்த பெயர் கோபால கிருஷ்ணன். என் தமையனார் பால்வண்ணனுக்கு என் பெற்றோர் வைத்த பெயர் பாபு. அவருக்கு தமிழ் இலக்கிய ஆர்வம் அதிகம். தமிழறிஞர் இளவழகனாரின் பரமானந்த சிஷ்யர். ஒருமுறை இளவழகனார் அவரிடம் பாபு என்ற பெயரை மாற்றி நல்ல தமிழ்ப் பெயரை வைத்துக் கொள்ளும்படிக் கூறினார். அவரையே பெயர் வைக்கும்படி என் தமையனார் கூற, அவர் 'பால் வண்ணன்' என்ற பெயரைச் சூட்டினார். அண்ணாவின் அந்தப் பெயர் எனக்கு பிடித்துப் போயிற்று. என் பெயரையும் மாற்றிக் கொள்ள விரும்பித் தமையனாரிடம் தெரிவித்தேன். அவர்தான் எனக்குப் பூவண்ணன் என்ற பெயரைச் சூட்டினார்.
சிலேட்டில் எழுதிய சிறுகதை
அப்போது எங்கள் வீடு மிகப்பெரியது. கீழ்த்தளம் முழுவதும் விசாலமான கூடம் இருக்கும். கூடத்தில் நடுவில் இரண்டு தூண்கள். வலப்பக்கத்தில் ஓர் அறை, இடப்பக்கத்தில் ஓர் அறை இருக்கும். அங்கே ஒரு கூட்டமே நடத்தலாம். ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி போன்ற நேரங்களில் அங்கேதான் பூஜைகள் செய்வார்கள்.
ஒரு கிருஷ்ணஜெயந்தி நாளன்று கிருஷ்ணன் பொம்மையை வீட்டுக் கூடத்தில் வைத்து பூஜை செய்தார்கள். விழா முடிந்தவுடன் எல்லாத் தட்டுகளிலிலும் இருந்த பழங்கள் மற்றும் இனிப்பு வகைகளில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கிருஷ்ணர் முன் வைத்தனர். இதை கவனித்த நான் என் பாட்டியிடம், ''இது எதற்கு?'' என்றேன். அதற்கு என் பாட்டி, ''நாம் எல்லாம் தூங்கியவுடன் கண்ணன் இங்கு வருவார். இவற்றையெல்லாம் சாப்பிடுவார்..'' என்றார். பாட்டி சொன்ன வார்த்தைகள் என் மனதில் அப்படியே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. நான் அப்படியே படுக்கச் சென்றேன். காலையில் எழுந்தவுடன் என்னுள் ஒரு சிந்தனை தோன்றியது. ஒரு சிலேட்டுப் பலகையை எடுத்து என் மனதில் தோன்றியவற்றை எழுத ஆரம்பித்தேன். இரண்டு பக்கத்திலும் எழுதி முடித்தேன்.
என் வீட்டுச் சொந்தக்காரரின் மகன் விவேகானந்தன் என் அருகில் வந்து ''என்னடா எழுதுகிறாய்?'' என்றான். "படிச்சுப் பாருடா" என்று நான் அவனிடம் பலகையைக் கொடுத்தேன். படித்துப் பார்த்த அவன் ''நல்லா எழுதியிருக்கிறாய்'' என்றான். தான் படித்ததுமட்டுமல்லாமல் அவன் தன் தந்தையிடமும் இதைக் காட்டினான். கதையைப் படித்துவிட்டு அவர் என்னை அழைத்தார். ''ரொம்ப நன்றாக எழுதியிருக் கிறாய். எப்படி எழுதினாய்? பாட்டி சொல்லிக் கொடுத்தார்களா?'' என்றார். ''இல்லை நான் என் மனதில் பட்டதை எழுதினேன்'' என்றேன். இதுதான் நான் எழுதிய முதல் சிறுகதை.
அந்தக் கதை
அது ஒரு குட்டிக்கதை. கிருஷ்ண ஜெயந்திக்கு லட்டு, சீடை முதலிய பலகாரங்களை கிருஷ்ணன் படத்திற்கு முன்னால் படைத்திருந்தார்கள். இரவு நேரத்தில் கிருஷ்ணன் வந்து அவற்றைச் சாப்பிடுவான் என்கிறாள் பாட்டி. அப்படிச் சாப்பிட வரும் கிருஷ்ணனை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்பது பேரனின் ஆசை. தூங்கிவிட்டால் என்ன செய்வது? அதனால் பேரன் பட்சணங்கள் இருந்த கூடத்தின் இரு தூண்களுக்கும் இடையே ஒரு கயிறு கட்டி வைக்கிறான். கிருஷ்ணன் இரவில் வந்தால் கயிறு தடுக்கிவிழுவான். விழும் சத்தத்தைக் கேட்டுத் தூக்கத்திலிருந்து எழுந்து கிருஷ்ணனைப் பார்த்துவிடலாம் என்பது பேரனின் திட்டம். இரவும் வந்தது. 'தடால்' என்ற சத்தம் கேட்டது. பேரன் உட்பட எல்லோரும் விழித்து எழுந்து பார்த்தார்கள். ''கிருஷ்ணன் வந்துவிட்டான், பலகாரம் சாப்பிட'' என்று பேரன் கூவினான். ஆனால் கிருஷ்ணன் வரவில்லை. வீட்டில் கொள்ளையடிக்க வந்த திருடன் பேரன் கட்டிய கயிறு தடுக்கிக் கீழே விழுந்திருந்தான். வீட்டார் திருடனைப் பிடித்துக் கொண்டு கயிறு கட்டிய பேரனைப் பாராட்டுகிறார்கள். 'தினமணி கதிரி'ல், முதல் பிரசவம் என்ற தொடர் போடும் போது என்னிடம் கேட்டார்கள். அப்போது நான் இந்தக் கதையை எழுதி அனுப்பினேன். அவர்கள் 'பலகையில் ஒரு கதை' என்கிற பெயரில் பிரசுரம் செய்தார்கள்.
மேடைப் பேச்சு அனுபவங்கள்...
பதினைந்து வயதிலேயே நான் மேடையில் பேசத் தொடங்கிவிட்டேன். மக்கள் மறுமலர்ச்சி மன்றத்தின் ஆண்டு விழா கூட்டத்தில் எனக்குப் பேசச் சந்தர்ப்பம் கிடைத்தது. மூடநம்பிக்கைகளை முறியடித்து, மக்களைச் சீர்திருத்தப் பாதையிலே அழைத்துச் செல்ல, பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முனைப்புடன் செயல்பட்ட காலம் அது. அதனால் என் பேச்சும் மூடநம்பிக்கைகளைச் சாடுகிற பேச்சாகவே இருந்தது. தொடர்ந்து நிறைய வெளி மேடைகளில் பேசியிருக்கிறேன். அதுபோல் பள்ளியிலும் பேசியிருக்கிறேன். எங்கள் வகுப்பில் ஒவ்வொரு வாரமும் இலக்கியக் கூட்டம் நடக்கும். அந்தக் கூட்டத்தை நான்தான் நடத்துவேன். ஒருமுறை பள்ளியில் பாரதிவிழா கொண்டாட ஏற்பாடு செய்திருந் தார்கள். மாவட்டக் கல்வி அதிகாரி அந்த விழாவில் கலந்து கொண்டு பாரதியார் பற்றிப் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது. விழாநாள் அன்று சில காரணங்களால் கல்வி அதிகாரி வர இயலாது என்று தெரிவித்துவிட்டார். எங்கள் தலைமையாசிரியர் தியாகராஜபிள்ளைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.<br><br>விழாவைத் தள்ளி வைக்கலாம் என்று சிலரும், வேண்டாம் நடக்கட்டும், வேறு யாராவது பேசட்டும் என்று சிலரும் கூறினர். பேசுவதற்கு என் பெயரையும் சிபாரிசு செய்தனர். அன்று சுமார் இரண்டு மூன்று மணி நேர அவகாசத்திற்குள் பாரதியார் பற்றிய சொற்பொழிவுக்கு என்னைத் தயார் செய்துகொண்டேன். ஒருமணி நேரம் மேடையில் பேசினேன். கல்வி அதிகாரிக்காக வரவழைக்கப்பட்ட அந்தப் பெரிய மாலையை எனக்கு அணிவித்துப் பாராட்டினார்கள். பின்பு நிறைய பேச்சு போட்டிகள், மேடைப் பேச்சுகளில் பேசியிருக்கிறேன்.
எழுத்தாளராக அறிமுகம்
நண்பர் எத்திராஜன் எழுதிய கட்டுரைகள் காண்டீபம், குஞ்சு, கல்கண்டு போன்ற இதழ்களில் வெளிவந்து கொண்டிருந்தன. பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே அவர் 'மயில்', 'ஒற்றீசன்' என்ற பெயரில் இரண்டு கையெழுத்துப் பத்திரிகைகளை நடத்தி வந்தார். அந்தக் காலத்தில் காலணா, அரையணா, ஓரணா விலையில் சிறுவர்களுக்காக சங்கு, மயில், மான், டமாரம், ரேடியோ, அணில், முயல் என்று பல இதழ்களை வெளிவந்தன. என் மேடைப் பேச்சைப்பற்றி ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த எத்திராஜன் என்னைத் தன் வகுப்பில் நடைபெறும் இலக்கியக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குமாறு கேட்டுக் கொண்டார். நானும் ஒப்புக்கொண்டு பேசினேன். என் பேச்சைப் பெரிதும் ரசித்த எத்திராஜ், நீ ஏன் கதை, கட்டுரைகள் எழுதக்கூடாது என்று கேட்டார். நான் அவரிடம் எனக்கு எழுத வராது என்று பதில் சொன்னேன். உடனே அவர் உன்னால் எழுத முடியும் என்று கூறியது மட்டுமல்லாமல், 'நீ மேடையில் பேசியதை அப்படியே எழுது' என்று எனக்கு யோசனையும் கூறினார். யோசித்தபடியே வீட்டிற்குச் சென்ற நான் 'வாரீர் விரைந்து' என்கிற கட்டுரையை எழுதி நண்பரிடம் காட்டினேன். என் கட்டுரையை பாராட்டிய அவர் அதை 'குஞ்சு' வாரப்பத்திரிக்கைக்கு தந்தார். அந்த இதழின் பொங்கல் மலரில் அது பிரசுரமாயிற்று. இதன் பின்பு எனக்கு இன்னும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
அழ. வள்ளியப்பாவுடனான தொடர்பு பற்றி
பிரபல பதிப்பகமான பழனியப்பா பிரதர்ஸ் அப்போது தங்கள் 'குழந்தைப் பதிப்பகம்' மூலம் இரண்டணா விலையில் சிறுவர்களுக்காக ஒரு மாத இதழை வெளியிட்டனர். குழந்தை எழுத்தாளர் அழ. வள்ளியப்பா அதில் பதிப்பாசிரியராக இருந்தார். நண்பர் எத்திராஜன் அந்தப் பகுதிக்கு கதை ஒன்று அனுப்பியிருந்தார். அந்தக் கதை என்னவாயிற்று என்று அறிந்து கொள்ள நான் அழவள்ளியப்பாவின் வீட்டிற்குச் சென்றேன். அப்போதுதான் நான் அவரை நேரில் சந்தித்தது. அதற்கு முன்பே அவரது பாடல்கள் எனக்குப் பரிச்சயம். தொடர்ந்து அவர் பாலர்மலரில் எழுதிக் கொண்டிருந்தார். எனவே அவர் எனக்கு ஒரு மானசீக குரு.
அருமையான எழுத்தாளர். சிறுவர்கள் தானே வந்திருக்கிறார்கள் என்று எண்ணாமல் அன்போடு உபசரித்தார். கதை நன்றாக இருக்கிறது. அதை நாங்கள் தேர்வு செய்திருக் கிறோம். எப்போது வெளியிடு வோம் என்று சொல்ல முடியாது என்றார். அப்போது எனக்கு நாம் எழுதாமல் இருக்கிறோமே என்று எண்ணம் ஏற்பட்டது. உடனே அவரிடம், ''ஐயா, நான் கதை எழுதித் தந்தால் வெளியிடுவீர்களா?'' என்று கேட்டேன். உடனே அவர் என்னைப் பார்த்து ஏதோ சொன்னார். ஆனால் என் காதில் ''போடுவேன்'' என்கிற ஒரே ஒரு வார்த்தைத்தான் கேட்டது. அவர் சொன்னது 'கதை நன்றாக இருந்தால் போடுவேன்'' என்று.
எப்படியாவது ஒரு கதை எழுதி வள்ளியப்பாவிடம் கொடுத்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். அப்போதுதான் தமிழ்நாட்டில் மதுவிலக்குச் சட்டம் அமுலாகியிருந்தது. இருப்பினும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் கூட்டம் இருந்து கொண்டு தான் இருந்தது. மதுவிலக்கின் பயன் மக்களுக்குக் கிடைக்காதபடி கள்ளச்சாராயம் காய்ச்சுவதில் ஈடுபட்டிருப்பவர்கள் ஏழைகள் அல்லர். பெரும் பணக்காரர்கள் என்பதை மையமாக வைத்துக் கதை ஒன்றை எழுதி வள்ளியப்பாவிடம் கொண்டு கொடுத்தேன். படித்துப் பார்த்த அவர் நன்றாக இருக்கிறது. புத்தகமாக வெளியிடுகிறேன் என்று சொன்னது எனக்கு அளவில்லா சந்தோஷத்தை கொடுத்தது. "உன் புத்தகத்தை வெளியிடுகிறோம். ஆனால் இதற்கு முன்பு நீ எந்தப் பத்திரிகைகளிலாவது எழுதியிருக்கிறாயா? பூவண்ணன் யார் என்று எல்லோருக்கும் தெரிய வேண்டும் இல்லையா? அதனால் இந்தக் கதை புத்தகமாக வெளிவருவதற்கு முன், பாலர்மலர், டமாரம் போன்ற இதழ்களில் பிரசுரிக்க சில சிறுகதைகளை எழுதித் தா" என்றார்.
மூன்று சிறுகதைகளை எழுதினேன். எங்கள் வீட்டில் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுகிழமைதோறும் இளவழகனார் நடத்திய தொடர் சொற்பொழிவைக் கேட்ட அனுபவத்தினாலும், அங்கு அடிக்கடி நடைபெறும் திருக்குறள் வகுப்புகளைக் கேட்டதாலும் திருக்குறளில் வரும் 'அன்பிற்கும் உண்டோ' என்கிற கருத்தை வைத்து ஒரு சிறுகதை எழுதி அனுப்பினேன். அது பாலர்மலரில் அட்டைப்படக் கதையாக வெளிவந்தது. மற்றக் கதைகளும் தொடர்ந்து வெளிவந்தன.
இப்படிச் சிறுகதைகள் பிரசுரம் ஆகிக் கொண்டிருக்கும் நேரத்தில் என்னுடைய புத்தகத்தை 'சபாஷ் மணி' என்ற பெயரில் வள்ளியப்பா அவர்களின் முன்னுரையுடன் குழந்தை பதிப்பகம் வெளியிட்டது. மக்கள் விலைகொடுத்து வாங்கும் இதழ்களில் முதன்முதலாகத் திருக்குறள் பற்றிக் கதை எழுதியவன் நான்தான். அன்று குழந்தை பதிப்பகத்தில் தங்களுடைய சிறுகதை வந்தால் அது சிறப்பு என்று எண்ணி அகிலன், ஜெகசிற்பியன், வலம்புரி சோமநாதன், தெய்வசிகாமணி, தங்கமணி போன்றோர் எழுதியிருக்கிறார்கள். இப்படி வள்ளியப்பா கொடுத்த ஊக்கத்தினால் என் ஆர்வம் மிகுதியாயிற்று. பின்னர் இதைத் தொடர்ந்து 'வீரமணி' என்ற கதை 'டமாரத்தில்' தொடர்கதையாக வந்தது. பல கதைகளும் பிரசுரமாயின.
'பாபு சர்க்கஸ்' பற்றி...
பூஞ்சோலை இதழுக்கு வள்ளியப்பா கெளரவ ஆசிரியராக இருந்தார். பூஞ்சோலை யில் 'பாபு சர்க்கஸ்' கதை எழுதுவதற்கு முன்பு நான் 'வீரமணி' தொடர்கதையை எழுதிக் கொடுத்தேன். அதற்கு என்னுடைய படம் வேண்டுமென்று வள்ளியப்பா சொல்ல, நான் என் தமையனாருடன் சென்று புகைப்படம் பிடித்து அவரிடம் கொடுத்தேன். அவர் என்னுடைய புகைப்படத்தை பத்திரிகையில் போட்டு, "வீரமணி என்கிற தொடர் கதையை எழுதுபவர் யார்? அவர் எப்படியிருப்பார்? அவருக்கு என்ன வயது இருக்கும்? என்றெல்லாம் நிறைய கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதோ நீங்களே பார்த்து தீர்மானியுங்கள்?" என்று எழுதி என் புகைப்படத்தைப் பிரசுரித்தார்.
டமாரத்திற்காக மற்றொரு தொடர்கதையை எழுதி வள்ளியப்பாவிடம் கொண்டு போய் கொடுத்துவிட்டு என் நண்பருடன் வெளியூர் சென்றுவிட்டேன். ஒரு மாதத்திற்குப் பிறகு சென்னைக்கு வந்தேன். என் வீட்டில் வள்ளியப்பாவிடமிருந்து உடனடியாக என்னைச் சந்திக்கவும் என்று கடிதம் வந்திருந்தது. நான் போனேன்.
அவர் என்னிடம் அந்தமாதப் பூஞ்சோலை இதழை எடுத்துக் கொடுத்தார். நான் ஆவலுடன் வாங்கிப் பார்த்தேன். அட்டையைத் திருப்பியவுடனே முதல் பக்கத்தில் பூவண்ணனுடைய முதல் தொடர்கதை 'பாபு சர்க்கஸ்' என்று போட்டிருந்தது. எனக்கு ஒரே ஆச்சர்யம். அவரிடம் நான் எந்தக் கதையும் இதுவரை கொடுக்கவில்லையே என்றேன். உடனே அவர் என்னிடம், "நீ டமாரத்திற்கு என்று எழுதிக் கொடுத்தாய் அல்லவா? அது நன்றாக இருந்தது. அந்தக் கதையைத்தான் நான் போட்டேன்'' என்றார். அதை என்னிடம் திருப்பி கொடுத்த வள்ளியப்பா, "இந்தக் கதையை இன்னும் விரிவாக எழுதிக் கொண்டுவா" என்று கூறினார். சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான மின்கம்பங்களில் 'பாபு சர்க்கஸ்' தொடர்கதைக்காக விளம்பரம் வைத்திருந்தார்கள். பூஞ்சோலை முதல் வெளியீடாக என்னுடைய நூல்தான் வெளிவந்தது.
பெரியவர்களுக்கான கதைகள்
கல்லூரியில் சேர்ந்து மூன்றாமாண்டு ஆனர்ஸ் படிக்கும் போதே பெரியவர் களுக்கான கதை எழுத ஆரம்பித்து விட்டேன். என் தமையனார் பால்வண்ணன் சென்னை ஸ்ரீமகள் நிறுவனத்தில் 'கலை மன்றம்' என்ற இலக்கிய இதழுக்கும், 'கலை அரங்கம்' என்ற சினிமா இதழுக்கும் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போது 'கரும்பு' என்கிற சிறுவர் வார இதழைத் தொடங்கி அதில் என்னை ஆசிரியராக நியமித்தார். அந்த வார இதழ்களில் நான் பெரியவர்களுக்காக நிறைய எழுதியிருக்கிறேன். 'தனிநாடு' என்கிற பத்திரிகையில் 'துரோகிகள்' என்கிற தொடர் ஒன்றை எழுதினேன். எனக்கு கல்கியிடத்தில் அதிக ஈடுபாடு. என்னுடைய பேச்சாற்றல், எழுத்தாற்றல் இரண்டும் வளர்ந்ததற்குக் காரணம் கல்கி அவர்கள்தான் என்று சொல்லலாம்.
'ஆலம்விழுது' பெற்ற வெற்றி
அது 1968-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். வானொலி அண்ணா அய்யாசாமி வானொலிக்கு ஒரு தொடர்கதை எழுதித் தருமாறு என்னைக் கேட்டார். நானும் ஒப்புக்கொண்டேன். இதன் பிறகு ஒருநாள் சினிமா பார்த்துவிட்டு வரும்போது நடுத்தர வயதான ஒருவரைப் பார்த்தேன். அவரைப் பார்த்தால் ரொம்பவும் கஷ்டப்படுபவர் போல் தெரிந்தார். அவருக்குப் பக்கத்தில் அவரின் பிள்ளைகள் சோகமே உருவாக நின்றிருந்தார்கள். திடீரென்று என் மனதில் ஓர் எண்ணம். இந்தக் காட்சியை வைத்தே கதை ஒன்றை 'ஆலம்விழுது' என்கிற தலைப்பில் எழுதினேன். வானொலிக்காக நான் எழுதிக் கொண்டிருக்கும் போது ஆனந்தவிகடனில் சிறுவர்களுக்கான ஒரு தொடர்கதையை உடனடியாகக் கேட்டதால் நான் அதை அவர்களுக்குக் கொடுத்தேன். அந்தக் கதையைப் படித்துவிட்டு, கன்னட நடிகர் வாதிராஜ் என்னை தேடி வந்தார். கன்னடப்படம் ஒன்றுக்கு நல்ல கதை தேடிக்கொண்டிருந்ததாகவும் அந்தச் சமயத்தில் அவரது சகோதரி என்னுடைய 'ஆலம்விழுது' கதையைப் பற்றி அவரிடம் சொன்னதாகவும் அதைப் படித்துவிட்டு என்னைத் தேடிவந்ததாகவும் கூறினார். நானும் படமாக்குவதற்கு ஒப்புக்கொண்டேன். கன்னடத்தில் 'நம்ம மக்களு' என்ற பெயரில் வெளிவந்தது. அப்படம் திரையிட்ட முதல்நாளே அப்படத்திற்கு கன்னட அரசு வரிவிலக்கு அளித்தது. அது சிறந்த படத்திற்கான விருதையும் பெற்றது.
அப்படத்தின் 125-வது நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் கர்நாடக முதல்வராக இருந்த வீரேந்திர பட்டீல் கலந்து கொண்டு 'நம்ம மக்களு' போல ஒரு படம் வருமானால் 100 தரமற்ற படங்களுக்கு மானியம் கொடுத்ததன் பலன் கிடைத்து விடும் என்று பாராட்டிப் பேசியது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. பிறகு அந்தப் படம் தமிழில் 'நம்ம குழந்தைகள்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு, அதுவும் அந்த ஆண்டின் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டது. பிறகு இந்தியிலும் இந்தப் படம் தயாரிக்கப்பட்டது. அதன்பின் என்னுடைய 'காவேரியின் அன்பு' கதை 'அன்பின் அலைகள்' என்னும் பெயரில் தமிழில் திரைப்படமாக வந்தது. சிறந்த குழந்தைகள் படக்கதாசிரியர் என்ற தமிழக அரசின் விருதையும், தங்கப் பதக்கத்தையும் அப்படம் பெற்றுத் தந்தது.
என் குடும்பம்
என்னுடைய மனைவி வத்சலா கோபால கிருஷ்ணனும் எழுத்தாளர்தான். அந்தப் பெயரில் கலைமகள், சுதேசமித்திரன், கல்கி போன்ற பத்திரிகைகளில் கதை எழுதியிருக்கிறார். 'பாவை விளக்கு' என்ற பெண்களுக்கான மாதம் இருமுறை இதழுக்கு ஆசிரியராகக் கொஞ்ச காலம் பணியாற்றினார். 'இல்லத்தலைவிக்கு நல்ல துணை', 'வளைக் கரத்துக்கு ஒரு துணைக்கரம்', 'விசாலம் சொர்க்கத்துக்குப் போகிறாள்' என்னும் சிறுகதைத் தொகுப்புகளை எழுத்¢யிருக்கிறார். எனக்கு இரண்டு பெண்கள், ஒரு மகன் உள்ளனர். பெரிய பெண் அமுதா கோவையில் மருத்துவராகப் பணியாற்றுகிறார். மகன் ரவி பொறியியல் பட்டதாரி. தற்போது கோயம்புத்தூரில் தொழிற்கூடம் ஒன்றை நிறுவி, காற்று அழுத்தப் பொறி இயந்திரக் கருவிகளைத் தயாரித்து வழங்குகிறார். அடுத்த மகள் சாதனா ஒரு பட்டதாரி. இவரும் கதை எழுதுவார்.
விருதுகளும் பட்டங்களும்
பாரதி இலக்கியச் செல்வர்
தமிழ்நெறிச் செம்மல்
தமிழண்ணல்
பாரதி புகழ் பரப்பும் சான்றோ
மனிதநேய மாண்பாளர்
ஆய்வுக்கரசர்
செந்தமிழ்ச் சிற்பி
இலக்கிய செம்மல்
பாரதிப் பதக்கம்
குழந்தை இலக்கியக் கேடயம்
பாலர் இலக்கிய ஜோதி
இந்தியாவின் தலைசிறந்த குழந்தை எழுத்தாளர்
குழந்தை இலக்கியமாமணி
குழந்தை இலக்கியப் பணியின் மணிமுடி
சந்திப்பு: கேடிஸ்ரீ
தொகுப்பு: மதுரபாரதி
நன்றி: தென்றல் http://www.tamilonline.com/thendral/Content.aspx?id=58&cid=4