'இன்றைய சுற்று சூழல் அழிவுகளுக்குக் காரணம்,இயற்கையைத் தனது சுயநல மேம்பாட்டுக்காகத் துவம்சம் செய்தழிக்கும் மனித இனத்தின் செயற்பாடுகளே' என்று பல ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.அதில் முக்கியமானவர் பிரித்தானியாவைச் சேர்ந்த திரு.டேவிட் அட்டம்பரோ. இயற்கைசார் ஆய்வாளர். இவர் உலகம் தெரிந்த பிரபலமான சுற்றாடல் சூழ்நிலைஅறிஞராகும். இவர் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக,மனித வாழ்வக்கு இன்றியமையாத இயற்கையின சக்திகள் பற்றி பல தரப்பட்ட ஆய்வுகளைச் செய்திருக்கிறார்.
இக்கட்டுரையில் இன்றைய இயற்கை மாசுபடுதலையும், அன்றைய தமிழரின் இயற்கையை மதித்து வாழ்ந்த வாழ்வியலையும் சுருக்கமாகச் சொல்ல முற்பட்டிருக்கிறேன். இதை எழுத என்னைத் தூண்டிய பேராசியர் மா.சிதம்பரம் அவர்களுக்கும்,தமிழரின் சங்க கால இலக்கியப் பொக்கிசங்கள் பற்றிய தகவல்களைத் தந்துதவிய நண்பர்.பத்மநாப ஐயர் அவர்களுக்கும் எனது மிகவும் பணிவான நன்றி.
'இயற்கையை அழித்தால் மனித இனம் துயர்படும்'என்ற தத்துவக் கோட்பாட்டை எங்கள் தமிழர் மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரே தெரிந்து வைத்திருந்தனர் என்பதற்குப் பல ஆவணங்கள் உள்ளன.பிரபஞ்சத்தையும்,அதன் செயற்பாடுகளையும் மனித இன மேம்பாடு குறித்த அறிவியற் கருத்துக்களுடன் தமிழ்த் தகமை தொல்காப்பியர் மூவாயிரம் வருடங்களுக்கு முன் இயற்கையும் மனித இனமும் பற்றிய அற்புத கருத்துக்களை எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறார்.
,'நிலம், தீ, நீர், ஆகாயம். வளி' போன்ற ஐம்பெரும் சக்திகளும் இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றன எனபதை 'நிலம் தீ நீர் வளி விசும்பெரு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்'(பொருள்635) என்பதைப் படித்தாற் புரிந்து கொள்ளலாம். இந்த மாபெரு சக்திகளில்; ஒன்று மாசுபட்டாலும் மிகுதியாகவிருக்கும் அனைத்தும் செயலிழக்கும் என்பது யதார்த்தம். அதுதான் சூழ்நிலை மாசுபடுதலின் அடிப்படைக் கருத்து
சுற்றாடல் சூழ்நிலையின் பாதிப்பு என்னெவென்று மனித இனத்தையே அழித்தொழிக்கும் என்பதைத் தற்போது நடந்துகொண்டிருக்கும் கோவிட்-19 கொடுமையின் தாக்கம் சொல்கிறது. மனிதன் இயற்கையின் ஒரு படைப்பே அவன் தன்னைச் சுற்றியிருக்கும்~'சூழலையழித்தால்' என்ன பேராழிவுகள் வரும் என்பதை இன்று எங்கள் கண்களுக்கு முன்னால் தொடரும், பேரழிவுகளிகளான,பெருவெள்ளம், சூறாவளி. பூமியதிர்ச்சி, நிலச்சரிவு, கொரணா கொடிய வியாதி என்று பல அழிவுகளைப் புரிதலால் தெளிவாக உணரலாம். இயற்கைசார்ந்து வாழ்ந்த தமிழர்கள்,இந்தியாவின் நாகரீக வளர்ச்சியில் முன்னணியிலிருந்தவர்கள். இயற்கையின் மாபெரு சக்திகளையுணர்ந்து இயற்கையுடன் வாழப் பழகியவர்கள். தங்கள் வணக்க முறை தொடங்கி, வாழ்வியலின் அங்கங்களான கலை. தொழில்,பொருளாதாரம் அத்தனையையும் இயற்கையுடன் பிணைத்தவர்கள். தாங்கள் வாழ்ந்த பூமியை ஐந்திணையாகப் பிரித்து அதனுள் மனித அகத்தையும் புறத்தையும் கண்டவர்கள். குறிஞ்சி (மலைப்பகுதி,பாதுகாப்பு,), முல்லை(காடு,தேடல், மிருகங்களுடான உறவுகள்), மருதம் (ஆற்றுப் படுக்கைகள், வயல்வெளி, குடியிருப்பு, மொழி, கலை வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி) நெய்தல் (கடற்கரை சார்ந்த வாழ்வு நிலை, கடல் கடந்த வணிகம்), பாலை (மக்களற்ற வரண்ட பிரதேசம்) எனப் பிரித்து இந்த அகண்ட உலகத்தின் பல பரிமாணங்களைக் காட்டியவர்கள்.
தொழிற் நுட்ப விருத்தியற்ற கால கட்டமான 1850ம் ஆண்டில் உலக வெப்பநிலை பூச்சியமாக இருந்தது. 2020ல் ஒரு பாகை சென்டிகிறேட்டைத் தொடடிருக்கிறது.வெப்பநிலை காரணமாகக் கடல மட்டம் உயர்கிறது.இது தொடர்வதால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் கடற்பகுதி சார்ந்த குடியிருப்புகளைக் கடல் கொண்டு விடும்.உதாரணமாக வேளைச்சேரி மணிப்பாக்கம் போன்ற பகுதிகளின் நிலை மிக ஆபத்தாகவிருக்கும்.அத்துடன் தமிழ் நாட்டில் மழைவீழ்ச்சி 10 மடங்கு அதிகரிக்கும் அந்த மழை இன்றைய நிலையைவிட 60 விகிதம் கூடிய மழைநீரால் வெள்ளப் பெருக்குகள் வரும்.கிட்டத் தட்ட 38 தமிழ் மானிலங்கள் பாதிக்கப்படும்.
இன்று தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளும் பெரு வரட்சி காரணமாக நீர்;த்தட்டுப்பாட்டால் அவதிப் படுகிறார்கள்.1924ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்த காவேரி நிர்pன் அளவு இன்றைய இந்திய மாநில பாகுபாட்டால் மூன்றில் ஒருபங்காக மட்டும் குறைத்துக் கிடைக்கிறது. இதனால் விவசாய உற்பத்தி பாதிக்கப் படும். தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் உள்ள பழைய வரலாற்றைப் பார்த்தால்,தமிழர்கள் விவசாயத்தை எவ்வளவு தூரம் மதித்திருக்கிறார்கள் என்பதற்கு.'உழுதுண்டு வாழ்வாரோ வாழ்வார்,மற்றோர்கள் தொழுதுண்டு பின் செல்பவர்' என்ற குறள் போதுமானது.அத்துடன்,-'வரப்புயர நீருயரும்,நிர் உயர நெல் உயரும்', 'தை பிறந்தால் வழி பிறக்கும' என்ற முதுமொழிகளைச் சொல்லாம்.
இயற்கையைத் தெய்வீகமாகக் கண்ட தமிழர்கள் வைகாசி மாதத்தில், மழைவேண்டி இந்திர விழா வைத்து மகிழ்ந்தார்கள்.இதைப் பற்றிய தகவல்களைச் சிலப்பதிகாரத்தில் காணலாம்.
சங்க காலத்தில் எழுதப்பட்ட திருமுருகாற்றுப் படையில்(புறநாநூறு),முருகனுக்கும் அசுரனுக்கும் நடந்த யுத்தத்தை கார்த்திகை மாதத்தில் வரும் சந்திர உதயத்தின் ஆறாம் நாள் கொண்டாடுகிறார்கள்.சூரியன் வீடு திரும்புவதை மார்கழிமாதத்தில் வாடை விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.இந்த விழாவும் அகநாநூறில் கூறப்பட்டிருக்கிறது.
இன்றைய,சுற்றாடல், சூழ்நிலை அழிவுக்குப் பெரும் முதலாளிகளின் வணிக விரிவாக்க முன்னெடுப்புக்கள் முக்கிய காரணமாகும். 1988-2015 வரையுமுள்ள கால கட்டத்தில உலகின் பிரமாண்டான 100 தொழில்நிறுவனங்களின் செயற்பாடுகள், உலகின் சுற்றாடல் சூழ்நிலை மாசுபடுவதில் 71 விகிதத்தைக் கொண்டிருக்கிறது.
சுற்றாடல்சூழல் மாற்றத்தலுண்டாகும், அசுத்தக் காற்றைச் வாசிப்பதால் மனிதர்களை பலவிதமான நோய்களும் ஆட்கொள்ளும். மாசுபட்ட காற்றால்,நரம்பு மண்டல பாதிப்புக்கள்,சுவாசப்பை தாக்கத்தால் பல நுரையிரல் புற்று நோய்கள்,இருதய வருத்தங்கள்,சிறுநீர்ப்பைகள் சார்ந்த நோய்கள்,தோல் பழுதுபடுவதலான நோய்கள்,ஈரல் நோய்கள்,நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்,ஆண்,பெண் இருபாலாருக்கும் மலட்டுத்தன்மை,பெண்களுக்குக் கர்ப்பகாலப் பிரச்சினைகள்,குழந்தைகளின் சாதாரண வளர்ச்சியில் பாதிப்பு,வயது,பால் வித்தியாசமின்றிப் பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்றவை அதிகரிக்கின்றன்.இந்தத் தகவல்களின்படி எதிர் காலத்தில் மக்கள் பெருக்கத்தில் பல மாற்றங்கள் உண்டாகலாம்.
தமிழ்நாட்டின் மக்கள் பெருக்கம் எற்கனவே பல காரணங்களால் குறைந்து கொண்டு வருகிறது. உதாரணமாக 1951ம் ஆண்டு,இந்தியாவில் சனத்தொகை மதிப்பீட்டின்படி,இந்திய சனத்தொகையில் 7.43 விகிதமாகவிருந்த தமிழர்களின் தொகை 2011ம் ஆண்டில் 5.96 விகிதமாகக் குறைந்திருக்கிறது.
இன்றைய இளம் தமிழ்ச் சமுதாயம் இந்தத் தகவல்களை உள்வாங்கிக்கொண்டு, உலகத்திற்கு பற்பல பட்ட தத்துவங்களைத் தந்த தமிழ் நாட்டை இயற்கை அழிவிலிருந்து பாதுகாப்பது மிக முக்கியமாகும்.இயற்கையின் மாபெரும் சக்திகளையுணர்ந்த ஆதித் தமிழர்கள்,நிலத்தை ஐந்திணைகளாகப் பிரித்து அவற்றையும் தெயவீகமாக்கி வாழ்ந்தார்கள்.மலைசார்ந்த பகுதியைக் குறிஞ்சி என்றும் அந்தப் பிரதேசக் கடவுள் சேயோன் என்றும்,காட்டுப் பகுதியை முல்லை என்றம் அதற்குக் கடவுள் மாயோன் என்றும் மருதம் என்ற வயல்பகுதிக்கு வாயு கடவுளாகும்,கடல் சார்ந்த பிரதேசக் கடவுள், வருணன் என்றும், வரண்ட பிரதேசக் கடவுள் கொற்றவை என்றும் வழிபட்டார்கள்.
மனித உடலில் மிக முக்கியமான செயற்பாடுகளை, மூளைஇஇருதயம்,நுரையீரல்,ஈரல்,சிறுநீரகங்கள் போன்ற ஐம்பெரும் அவயவங்களும் ஒட்டுமொத்தமாகக் கவனிக்கின்றன.அதேமாதிரி எங்கள் இந்தப் ஆதித் தமிழர் நிலத்தை ஐந்திணைகளாகப் பிரித்து அதன் இயற்கையுடன் சேர்ந்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள்.
பேராசிரியர் சி மௌனகுரு அவர்கள் '19ம் நூற்றாண்டின் பரிணாமவாத மானுடவியலாளர், திரு லுயிஸ் ஹென்றி மோர்கன் என்ற ஆய்வாளர், மனித இன வளர்ச்சியை,காட்டுமிராண்டி நிலை,அநாகரிக நிலை,நாகரீக நிலை என்று பிரித்து ஆய்வு செய்திருக்கிறார் என்று குறிப்பிடுகிறார். காட்டு மிராண்டிக் காலத்தில்,காடுகளில் உணவு தேடுதல்,வேட்டையாடுதல்,அதற்கான கருவி தயாரித்தல் என்பன நடை பெற்றிருக்கின்றன.
இதைத் தொடர்ந்த பரிணாம வளர்ச்சியில் தமிழர்களின் நிலை,கி;மு 8ம் ஆண்டு தொடக்கம் மிகவும் கட்டுமானமான சமுதாயமாக இருந்திருக்கிறது, அத்துடன் அவர்கள் இயற்கைசார்ந்த வணக்கமுறையைக் கொண்டிருந்தார்கள் என்பதை,பேராசிரியர் க.கைலாசபதி பதிவிடுகிறார்.அவரின் 'பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்' என்ற நூலில் (குமரன் பிரசுரம்,1996) கட்டுரையில்,'மரவழிபாடு பூர்வீக மக்களின் சொத்தாக இருந்தது.சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு இலச்சினையில்,இரு அரசமரக் கிளைகளுக்கிடையில்,ஆடைகளின்றிப் பெண்தெய்வமொன்று காணப்படுகிறது.மக்கள் உருவங்களும் விலங்குருவங்களும் அவ்வன்னைத் தெய்வத்திற்கு அடிபணிந்து அஞ்சலி செய்கின்றன.அரச மரமும் அதனுடன் சேர்ந்த அன்னை வழிபாடும் ஆரியர் காலத்துக்கு முற்பட்டன என்பதற்கு இதனையும் சான்றாகக் கொள்வார் வரலாற்றாசிரியர்'(பக்5) என்று சொல்கிறார்.தமிழரின் வாழ்வியலில் இயற்கை தெய்வீகமானது. ஐம்பெரும் சக்திகளும் வணக்கத்துக்குரியவை,பாதுகாக்கப் படவேண்டியவை. போற்றிப் பாடப்பட்டவை.
'முதலெனப்படுவது நிலம்பொழுதிரண்டின் இயல்பென மொழி இயல்புணர்ந்தோரே' என்கிறார் தொல்காப்பியர். தொல்காப்பியர் இந்த உலகத்தை,இயற்கையின் அற்புதத்தை,மனித வாழ்வியலை எப்படிப் பார்த்தார் என்பதை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று பிரித்துப்பார்த்து விரிவுரைகள் தந்திருக்கிறார்.
கருப்பொருள: அந்த நிலத்தில் வாழும் மிருகங்கள், பறவைகள்,மரங்கள், தாவரங்கள்;.
உரிப் பொருள்: அந்த நிலவமைப்பில் வாழும்,உணர்வுகள்.(இரக்கம்.காதல்,பிரிவு,சோகம்)
முதற் பொருள்: இடம்-நிலம்,காலம்-ஐம்பெரும் சக்திகள் இரண்டும் ஒன்றுபட்டுத்தான் மனிதத்தை மட்டுமல்லாமல் அத்தனை, உயிரினங்களையும் மரங்களையும் செடி கொடிகளையும் படைத்தன என்று சொல்கிறார் தொல்காப்பியர்.
தமிழரின் இயற்கையுடனிணைந்த சமத்துவ சிந்தனையை அவர்களின் முக்கிய தொழிலாக நீட்சியடையத் தொடங்கிய உளவுத் தொழிலையும் அதைத் தெய்வீகமாகக் கண்ட உருவகம்தான் இலிங்க வழிபாடு என்கிறாh பேராசிரியர் கைலாசபதி. அதாவது,'நீண்டு குவிந்த கல்வடிவு ஆண்குறியின் அடையாளமாகவும்,அக்கல்லைச் சூழ்ந்தவட்டக் கல்வடிவு பெண்ணின் அடையாளமாகவும் முன்னோரால் கருதப்பட்டது' (பேராசிரியா கைலாசபி பக்4).
கால கட்டத்தில்,பிற்காலச் சைவ சித்தாந்த சாத்திர நூலில்:
'சக்தியும் சிவமுமாய தன்மையிவ் வுலகமெல்லாம்
ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உயர்கண குணியுமாக
வைத்தனன் அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கை யெல்லாம்
இத்தையும்அறியார்பீடலிங்கத்தின் இயல்பும் ஓரார்'
என்று சிவஞானசித்தியார் தத்துவ விளக்கத்தோடு உரைப்பது பண்டுதொட்டு வந்த உண்மையே என்பதில் ஐயமில்லை என்கிறார்.
இப்படிப் பல மிகவும் பழைய வரலாற்றுத் தொன்மையுடைய தமிழரை,'கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி' என்று சேர அரசரான ஐயனாரிதனார் குறிப்பிட்டிருக்கிறார்.
குறிஞ்சி: அக்கால கட்டத்திலேயே இயற்கையைத் தெய்வமாக வணங்கிய தமிழர் குறிஞ்சித் தலைவனான முருகனைத் தங்கள் தெய்வமாகக் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள்.
பேராசிரியர் க.கைலாசபதியின் தகவலின்படி, கிமு.எட்டாம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்தியாவிலே தமிழ் மக்கள் சிறுசிறு கூட்டங்களாக வாழத் தொடங்கி விட்டனர் என நாம் கொள்ளலாம் என்கிறார்.(பக்7).அக்காலத்தில் இருந்த 'வெறியாட்டு-முருக வழிபாட்டிலிருந்த புராதான சடங்கு பற்றிச் சொல்கிறார்(பக்11).
ஆதி மனிதன் மிருகங்களுக்குப் பயந்து,மறைந்திருந்து உணவுதேடியிருந்த இடமான மலைப் பகுதியை மாபெரும் சக்தியாகக் கண்டவர்கள்.அங்கிருந்து தங்களைப் பாதுகாத்த பெண்ணை தலைமகளாக வணங்கியவர்கள். ,'சிரியாவில் அகத்தாத் என்னும் தத்துவமும், சின்னாசியாவில் சிபெலேயும் எகிப்தில் இஸிஸ் என்ற பெண்வழிபாடுகள் தோன்றிய காலத்தில் 'சக்தி; வழிபாடு தமிழகத்தில் தோன்றியிருக்க வேண்டும்'என்கிறாh பேராசிரியர் கைலாசபதி.;.
தமிழ் நாட்டில்,பல மலைகளிருக்கின்றன குறிஞ்சித் தலைனான முருகன்' தமிழக் கடவுள்'எனப் போற்றப்படுகிறான். ஆறுபடை வீடுகள் வைத்து அவனை வழிபடுகிறார்கள் தமிழர்கள்.தமிழர்கள் தங்கள் 'தமிழ்க்' கடவுளாக வழிபடும் முருகனின் வழிபாட்டில் இயற்கை முற்று முழுதாக இணைந்திருப்பது தெரியும்.முருகன் என்பது குறிஞ்சி நில சக்தி. கந்தன் என்றும் அவனுக்குப் பெயர் உண்டு. மலைச்சாரலில் வளரும் பெருமரம். அதைச் சுற்றிப் படர்வது வள்ளி.அது அவனின் காதலி வள்ளி;.அவனின் வாகனம் மயில்.
தமிழரின் இலக்கியப் பெட்டகங்களான தொல் இலக்கியப் படைப்புக்கள் மூலம், தமிழரின் இயற்கையை இலக்கியத்தின் ஆரம்பகாலமான கி.மு 3ம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்தியா முழுதும் பரவியிருந்த தமிழரின்; வாழ்க்கையில் வடக்கில் பரவிய நாடோடி ஆரியரால் கி;மு.1500ம் ஆண்டளவில் ஹரப்பா,சிந்துவெளி இடங்களில் அழிக்கப பட்டதாகப் பேராசிரியர் க.கைலாசபதி (1966) குறிப்பிடுகிறார்.
ஏனென்றால் அக்காலத்தில் ஆரியர் அழித்த ஹரப்பா என்னும் நகரமே வேதத்தில், ஹரியூப்பா (சு.ஏ.627) என்று வடமொழி வடிவில் இடம் பெற்றிருப்பதாக கோசாம்பி என்னும் அறிஞர் கருதுவர்'(பக் 6). அவர்களால் தென்னாட்டின் கடவுள்கள்,வேறுபெயர்களில்- பணம் படைக்கும் கடவுளர்களாக உருவாக்கம் செய்யப் பட்டனர்.உதாரணம் முருகக் கடவுள் ஸ்கந்தாவாக மறுபெயர் பெற்றதைச் சொல்லலாம்.இன்றைய பூவுலம் பணவெறி பிடித்த,உலகத்தின் ஒரு விகிதமானவர்களல் அழிக்கப் படுவதுபோல் அன்றும் இன்றும் தங்கள் தன்னலத்திற்காக,ஆரியர்கள்,அகில உலகமே மதித்த தமிழரைச் சாதி ரீதியாகப் பிரித்து, சரித்திரங்களையும் திரிவுடுத்துகிறார்கள்.(உதாரணமாக,தமிழர்கள் கலாச்சாரங்களை ஒப்புக் கொள்ளாமல் தங்கள் அடையாளங்களை முன்னெடுப்பது)
முல்லை-இயற்கையான காற்று மனித வாழ்வின் அடிப்படைத் தேவையாகும்.அதற்கு மரங்கள்தேவை.ஆனால், உலகின் வனங்கள் கடந்த 1960ம் ஆண்டிலிருந்து இன்றுவரை 60 விகிதத்தில் அழிக்கப்பட்டு விட்டது.'காடழிந்தால' மழையும் கெடும்' என்றார் அவ்வையார்.
தமிழர்களின் 'அநாகரிக' காலத்தில் அதாவது,குறிஞ்சிப் பகுதியிலிருந்து முல்லைப் பகுதியாக காட்டுப்பகுதிக்குத் தொடர்ந்தபோது,விவசாயம், மிருகங்களைத் தங்கள் தொழிலுக்காகப் பயன்படுத்துவது போன்ற விடயங்கள் நடந்திருக்கின்றன.அதைத் தொடர்ந்து சில மிருகங்களையும் மற்ற உயிரினங்களையும் தங்களின் இயற்கைசார்ந்த வணக்க முறையில் இணைத்துக் கொண்டார்கள் என்பதற்கு இயற்கையை வழிபாட்டு முறையில் இன்றும் பல தடயங்களுள்ளன.
மருதம்-தமிழ் சமுதாயத்தின் சமத்துவத்தை'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற அற்புதமான கோட்பாட்டுடன் முன்னெடுத்திருக்கிறார்கள்.விவசாய சமுதாயத்திற்கு இந்தச் சமத்துவக் கட்டுமானம் அத்தியாவசியமானது.ஆதிகாலம் தொடங்கியே விவசாயத்தில் ஆண்கள் மட்டுமல்லாத பெண்கள் முக்கிய பங்கெடுத்திரு;கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக.
'பொருபடை தருஉங்கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் இன்றதன் பயனே'
என்ற புறநானூற்றடிகளை முன்வைக்கிறார்.க.கைலாசபதி.
இன்றைய இந்தியாவில் விவசாயம். பயிர் செய்கைகளில் பெண்களின் பங்கு 75 விகிதம் என்பதையும் மனதில் எடுத்துக் கொள்ளலாம்.
சங்க காலத் தமிழரின் பொருளாதார வாழ்க்கை விவசாயத்துடன் வளர்ச்சி பெற்றது.;. பெரும்பாலானவர்கள்; சமுதாயத்திற்கான பல்வேறு தொழில்களான வேலைகளிலும் ஈடுபட்டிருந்தார்கள்.சாதியற்ற தொல் தமிழர் வாழ்வில் நில உடமையாளர்களாகச் சிலர் இருந்திருக்கிறார்கள். காலக்கிரமத்தில், சமுதாயங்கள் பிளவு பட்டு ஒருத்தரின் நிலத்தை மற்றவர் எடுத்துக் கொள்வதற்கான போர்கள் தொடர்ந்திருக்கின்றன.இவற்றை அகநாநூறு பதிவுகளிற் காணலாம்.
பொதுவாக அவர்களின் வாழ்க்கைஇயற்கையுடன் இணைந்தது. அவர்களின் சமூக ஒன்றுகூடல் விழாக்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் காலமாற்றத்துடன் இணைந்திருந்தது.தங்களின் விவசாய வளத்திற்கு உதவிய சூரியனை வணங்க தைபொங்கலை அறுவடையின்பின் கொண்டாடினார்கள்.விவசாயத்திற்கு உதவிய மாடுகளுக்குப் பொங்கலுக்கு அடுத்தநாள் மாட்டுப் பண்டிகை கொண்டாடினார்கள்.கொடிய வெயிற்காலத்தில் நோய்நொடிகள் வராமலிருக்கவும் சூரியன் திசைதிரும்புவதையும் முன்னிட்டு சித்திரை மாதம் 14 அல்லது 15ம் திகதி பெருவேனில்நாள் கொண்டாடினார்கள்.இதுதான் ஆதிகாலத்தில் தமிழர்களின் புதுவருடமாகவிருந்தது.
தங்களின் வாழ்க்கையை மேம்படுத்திய தலைவர்களை வணங்கினார்கள். தங்கள் வாழ்க்கையை வளம்படுத்திய முன்னோர்களை வணங்கினார்கள்.அவை குல தெய்வழிபாடாக நீட்சி பெற்றிருக்கிறது.தொல் தமிழரின் வாழ்க்கை இயற்கையுடன் இணைந்திருந்தது என்பதற்கு இன்னுமொரு சான்றாக இன்றும் நடைமுறையிலிருக்கும் மூலிகை,சித்த வைத்தியம்,ஆயள்வேதம் போன்றவற்றைச் சொல்லலாம். ஆதித் தமிழர்கள்,மக்களுக்குத் தேவையான பல மூலிகைகள்,தாவரங்கள்,அத்துடன் மிருகங்களின் வாழ்வாதாரமான மலைகள்,விவசாயத்திற்கு இன்றியமையாத நீர் நிலைகள்,நிழல் தரும் பெரு மரங்களையும் வணங்கினார்கள்.
டாகட்ர் சி. பாலசுப்பிரமணியம் அவர்கள், ஐந்திணைகளில் ஒன்றான நெய்தல் பகுதியான கடலை மதித்து, அதன் உதவியுடன் பல நாடுகளுக்கு வணிகம் செய்த விபரத்தைக் கீழ் கண்டவாறு சொல்கிறார் - ' கிமு.10; நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த சாலமன் என்னும் கிரேக்க அரசனுக்குத் தமிழ் நாட்டிலிருந்து கப்பல்கள் வாயிலாக மயில்தோகை,யானைத் தந்தம்,மணப் பொருள்கள் முதலிய சென்றன.சேரநாட்டு மிளகினைப் பொலீசிரியர்கள் வாங்கினர்.'யவனப் பிரியா' என்றே மிளகு வழங்கப் பெற்றது.கி;மு.ஐந்தாம் நூற்றாண்ற்கு முன்பே பாபிலோன் நகரத்திறகுக் கடல் வழியாக அரிசி,மயில்.சந்தனம், முதலிய பொருட்களின் பெயர் திராவிடப் பெயர்களாகவே அமைந்திருப்பதைக் காணும்பொழுது பண்டைத் தமிழரின் கடல் வாணிகச் சிறப்பு பெற்றெனப் புலப்படும் என்கிறார்.(மேற்குறிப்பிடப்பட்ட டாக்டர் சி. பாலசுப்பிரமணியத்தின் பதிவில்.சாலமன் என்ற அரசன்,கி.மு 970-931.வரை இஸ்ஸரேல் நாட்டை ஆண்ட 'யூத' அரசன் என்றிருக்கவேண்டும்.'யவனர்கள் என்பவர்கள் கிரேக்க,உரோம,மேற்காசிய மக்களைக் குறிக்கும் சொல்லாகும்).
தமிழரின் கடற் பிரயாணம் பற்றிச் சொல்லும்போது,தொல்காப்பியரும்,' முந்நீர் வழக்கம் மகடுவோ டில்லை' என்று கடற்பயணத்திறகுப் பெண்களை அழைத்துச் செல்லக் கூடாது என்று விதி கூறியிருப்பது கொண்டு தமிழர் தம் கடற் செலவினைக் குறித்து அறியலாம்.
'தென்னாடுடைய சிவனே போறி என்னாட்டவர்க்கும் இறைவாபோற்றி'என்று தமிழர்கள் சிவனை வழிபடுகிறார்கள்.இன்று இந்தியாவின் மாபெரு மலையும்,சிவனின் உறைவிடமுமாகக் கருதப்படும் இமாலயமே,சூழ்நிலை மாசுபடுதலால் பல மாற்றங்களுக்கு முகம் கொடுக்கவேண்டியிருக்கிறது.திரு.டாஷ் எட்.டெல் (2011) அவர்களின் அறிக்கையின்படி,இமாலயம் சார்ந்த பிரதேசத்தின் வெப்ப நிலை கடந்த 102வருட சரித்திரத்தில்(1901-2003) 0.9 செல்சியஸ்; பாகைகள்கூடியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
திரு புட்டியானி அவர்களின் கூற்றுப்படி,இம்மாற்றங்கள் பெருவாரியான வெள்ளப் பெருக்குகளை,இமாலயம் சார்ந்த பிரதேசங்களில் உண்டாக்கும்.மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வார்கள்.இதனால் சில பிரதேசங்கள் தங்கள் தனித்துவத்தை இழப்பது தவிர்க்கமுடியாது.இம்மாற்றங்கள், தவிர்க்கப் படுவதற்கு மனிதர்களின் இன்றைய வாழ்வியல் கருத்துக்களில் அதி முக்கிய மாற்றங்கள் உண்டாவது மிக மிக முக்கியமாகும் என்கிறார்.இன்றைய காலகட்டத்திலேயே,வடக்கில் நடக்கும் இயற்கை மாற்றத்தாலும் வேறு பல காரணங்களாலும் தெற்கு நோக்கி வருபவர்களின் தொகை கூடுவதை அவதானிக்கவும்.
தொல் பெருமை படைத்த தமிழரின் புராதன வாழ்க்கையைச் சொல்லும்,தமிழரின் அற்புத சொத்தான தொல்காப்பியம்,சங்க இலக்கியங்களுக்கு முந்தியது என்பதை செம்மொழி குழவினர் அறிவித்திருக்கிறார்கள் என்று தமிழச்சி தங்கபாண்டியன் 2018ம் ஆண்டு நடந்த கூட்டமொன்றில் சொன்னார்.செம்மொழிக் குழவின் ஆய்வின்படி,தொல்காப்பிய காலம் கி.மு.713ம் ஆண்டு ஆகும்.அதாவது, பேராசிரியர் க.கைலாசபதி சொல்வதுபோல் கி.மு.8ம் நூற்றாண்டில் தமிழரின் வாழக்கை இயற்கையின் பன்முக சக்திகளைப் புரிந்து கொண்ட அறிவியல் சார்ந்ததாக இருந்ததென்றால் அச்சமுகத்தின் அறிவு,இலக்கியம் சார்ந்த வளர்ச்சியின் பிரதிபலிப்புதான் தொல்காப்பியம் என நாம் புரிந்து கொள்ளலாம்.
இன்று இந்தியாவில் சூழ்நிலை மாற்றத்தால் உண்டாகப்போகும் பல மாற்றங்களைத் தடுக்க பல விடயங்கள் முன்னெடுக்கப் படுகின்றன் உதாரணமாக,உலக மாசுபடுதலில் 75 விகித பாதிப்பு,மக்களாலும் இயந்திரங்களாலும் பாவிக்கப்படும் மினசார உற்பத்தியால உண்டாகிறது.மின்சார உதவியற்ற சூரிய ஒளி சோலார் ரெயில் இராஜஸ்தானிலுள்ள ஜோத்பூரில் தயாரிக்கப் பட்டு சோதனை ஓட்டத்திற்குத் தயாராக இருக்கிறது.இந்திய ரயில்வேயின் மாற்று சக்தி மூலத்திற்கான பணியின் முதற் கட்டமாக துவங்கப் பட்டுள்ளது.
இந்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கத்தின் பங்களிப்பாக இந்திய ரெயில்வே மறு சுழற்சி இயந்திரம் ஒன்றை மும்பாய் ரெயில் நிலையங்களில் நிறுவியுள்ளது.நாம் குடித்துவிட்டு எறியும் தண்ணீர் போத்தல்களை மறுசுழற்சி செய்ய இயலும்.
அடுத்ததாக மனிதருக்கு மிகவும் தேவையான நீர் பற்றிய விடயத்தைப் பார்க்கலாம்.மலையில் பிறந்த வனத்தில் தவழ்ந்து வயல்களை வளம் படுத்திய நீரை, உயிர்தரும் பெண் தெய்வமாக வழிபட்டு காவேரி என்றும் பொன்னி என்றம் பெயரிட்டு மகிழ்ந்தவர்கள் தமிழர்கள்.'நீரின்றி அமையாது இவ்வுலகு' என்போர் பெரியோர் வாக்கு.ஆனால்.தமிழ்நாடு பிரமாணடட்மான தண்ணீர்தட்டுப்பாட்டை எதிர் நோக்குகிறது.
இந்தியாவில் எதிர்காலத்தில்; 40 விகிதமான மக்கள் குடிநீரின்றித் துயர்படுவார்கள் சொல்லப்படுகிறது.இதன் எதிரொலி தென்னாட்டையும் பாதிக்கும்.இதனால் தமிழ் அரசும் ஒட்டு மொத்த தமிழர்களும் முக்கிய கவனங்ளைச் செலுத்தவேண்டும்.தமிழ் மக்கள் இயற்கையை வாழ்வில்,வணக்கமுறை என்பவற்றுடன் இணைந்து வாழ்பவர்கள்.தமிழ்நாட்டைத் தூய்மையாக விருத்தி செய்து தமிழர்களின் வளம்பெற எதிர்கால சந்ததி முன்வரவேண்டும்.
உசாத்துணைப்பட்டியல்
1. 'பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்' வ் பேராசிரியர் க.கைலாசபதி (குமரன் பிரசுரம்,1996)
2. தொல்காப்பியம்
3. சைவ சித்தாந்த சாத்திரம் - சிவஞானசித்தியார்
4. சிலப்பதிகாரம்
5. அகநானூறு & புறநானூறு
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.