[ எமக்கு பிலோ இருதயநாத் அவர்களது பயணக்கட்டுரைகள் மிகவும் பிடிக்கும். கானுயிர் பயணங்கள் மற்றும் மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடியாகக் கருதப்படுபவர். அவர் ஞாபகமாக 'எங்கள் புளக்' (engalblog.blogspot.com) வலைப்பதிவில் 1965இல் வெளியான மஞ்சரி இதழில் வெளியான 'நாய் கற்பித்த பாடம்' மீள்பிரசுரமாகியிருந்தது மகிழ்ச்சியினைத்தருகின்றது. அந்தக் கட்டுரையினை இங்கு மீள்பதிவு செய்கின்றோம் பதிவுகள் -.]
ஆபத்தில் உதவாத நண்பர்களிடம் நாயானாலும் ஆத்திரம் வராதா?
அன்று மைசூரிலிருந்து சென்று கூடலூரில் ஒரு நண்பரின் இல்லத்தில் தங்கினேன். மறுநாள் காலையில் சுல்தான்பத்திரி, தேவர்சோலை ஆகிய இடங்களுக்குச் சென்றேன். தேவர் சோலையில் என்னை நீண்ட நாட்களாக அழைத்துக் கொண்டிருந்த நண்பரான ரூப் சிங் என்பவருடைய இல்லத்தில் தங்கினேன். அவர் சிறந்த வேட்டைக்கார். அவரிடம் கன்றுக்குட்டியைப்போல ஒரு வேட்டை நாய் உண்டு. வேட்டைக்கு ரூப் சிங் செல்லும்போதெல்லாம் அந்த நாயும் அவருடன் செல்லும்.
"இந்த நாயை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்?" என்று அவரிடம் கேட்டேன்.ரூப் சிங் சொல்லலானார். "அது ஒரு பெரிய கதை. இந்த நாயின் குடும்பத்தைச் சேர்ந்த முன்னூறு நாய்கள் என் நண்பருள் ஒருவரிடம் இருக்கின்றன. அவர் ஒரு செல்வர். இந்த நாயை அவர்தான் எனக்குக் கொடுத்தார். அவர் நல்ல வேட்டைக் காரர். அது மட்டுமல்ல; நாய் வளர்ப்பிலும் அவருக்கு அளவு கடந்த ஆசை. நாய்களைக் கவனிப்பதற்கு மட்டும் சுமார் இருபது ஆட்களுக்கு மேல் வைத்திருக்கிறார். இரவில் அந்தச் செல்வர் தமது பங்களாவில் எந்தக் கதவையும் மூடுவதே இல்லை. எந்த எந்தக் கதவுகளின் மூலம் அந்தச் செல்வரின் இல்லத்துக்குள்ளும், காம்பௌன்டுக்குள்ளும் அந்நியர் வர இயலுமோ, அந்தக் கதவு வாயிற்படிகளை எல்லாம் நாலு நாலு நாய்கள் காவல் புரியும். இரவு 7 மணிக்குத் தம் காவல் நாய்களைச் செல்வர் தடவிக் கொடுப்பார். பிறகே உறங்கச் செல்வார். செல்வர் தடவிக் கொடுத்த பிறகு, நாய் வளர்ப்பு வேலைக்காரனுங்கூட எந்த வழியாகவும் உள்ளே புக முடியாது.
"மறுநாள் காலையில் செல்வரோ, அவருடைய மனைவியோ விழித்து எழுந்து வந்து மறுபடியும் நாயைத் தடவிக் கொடுத்த பின்பே வேலைக்காரர்கள் உள்ளே வருவார்கள். வரவும் முடியும். இரவில் எந்தத் திருடனும், எந்தக் கொடிய மிருகமும் உள்ளே வர முடியாது. அப்படி வந்தால், முன்னூறு நாய்களும் ஒன்றாகச் சேர்ந்து எதிர்க்குமாம். மனிதனையோ, கொடிய மிருகத்தையோ அவற்றுள் பெரும்பாலான நாய்கள் துரத்திக் கொண்டு போகுமாம். மற்ற நாய்களோ வீட்டில் காவல் காக்குமாம். அப்படிக் காக்க நிரந்தரமாக உள்ள நாய்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் அந்த இடத்தை விட்டு அகல்வதில்லையாம். இப்படிப்பட்ட முன்னூறு நாய்களை நீங்கள் எங்கும் கண்டிருக்க மாட்டீர்கள்..மேலும், அந்த நண்பரும் அவருடைய மனைவியும் ஆளுக்கு ஒரு துப்பாக்கியுடன் காட்டுக்கு வேட்டையாடத் தங்கள் இரண்டு வயதுக் குழந்தையையும் எடுத்துச் செல்வார்கள். காட்டில் எங்கேயாவது ஒரு மரக்கிளையில் ஏணை கட்டிக் குழந்தையை அதில் தூங்க விடுவார்கள். பிறகு திசைக்கு இரண்டு நாய்கள் வீதம் நான்கு திசைகளிலும் எட்டு நாய்களைக் குழந்தைக்குக் காவல் வைத்து விட்டு மற்ற நாய்களுடன் அவர்கள் இருவரும் வேட்டைக்குப் போவார்கள். குழந்தையின் பெற்றோர்க்கள் வருவதற்கு முன் குழந்தை எழுந்து அழுதால், உடனே ஏணையின் தனிக் கயிற்றைப் பிடித்து இப்படியும் அப்படியும் இழுத்து ஆட்டி விடுமாம் அவற்றில் ஒரு நாய்.
"வேட்டையாடிக் கொண்டு வந்த பிராணியின் மாமிசத்தில் பாதிக்கு மேல் தங்கள் நாய்களுக்கு அவர்கள் போடுவார்கள். அந்தச் செல்வரிடமிருந்து கிடைத்த நாய்தான் இது. ஆனால் இந்த நாயை நான் வேட்டைக்கு மற்றொரு விதமாகப் பழக்கி வைத்திருக்கிறேன்."
நான் அவரது இல்லத்தில் இருந்தபோது ரூப் சிங்குக்கு மிக நெருங்கிய நண்பரான ஜயசீலன் என்பவர், தாம் புலி வேட்டைக்குப் போவதாகவும், ஆகவே புலி வேட்டையில் மிகவும் தந்திரமான ரூப்சிங்கின் நாயை ஒரு நாளைக்கு இரவல் கொடுக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
புலி வேட்டைக்கு ஜயசீலன் போவதைக் கேள்விப்பட்டவுடன், "நானும் உங்களுடன் வருகிறேன்" என்று ஜயசீலனிடம் கூறினேன்.
ஆனால் ரூப் சிங், "இப்போது வேண்டாம். நான் போகும்போது வாருங்கள். புலியை வேட்டையாடுவோருள், புலியின் குணத்தை முழுவதும் தெரிந்து கொண்டவர்கள் எவரும் இல்லை. எது எப்படி இருக்குமோ, யாருக்குத் தெரியும்? நீலகிரிப் பகுதியில் ஆட்கொல்லிப் புலி இல்லை என்று ஷிகாரிகள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் மைசூரிலிருந்து அத்தகைய புலி ஒன்று ஒரே இரவில் நூறு மைல் பிரயாணம் செய்து நீலகிரிக்கும் வருவதுண்டு" என்று கூறினார்.
நான் "அப்படியானால் சரி ; நான் இப்போது ஜயசீலனுடன் போகவில்லை" என்று ஒப்புக் கொண்டேன்.
"நீங்கள் என் நாயைக் கொண்டு போவதில் எனக்கொன்றும் தடையில்லை. ஆனால் நான் சொல்வதைப்போல் மட்டும் தயை செய்து மறக்காமல் செய்ய வேண்டும். இல்லா விட்டால் வீணாக நாய் இறந்து விடும். காட்டினுள் நாயைக் கட்டி அழைத்துச் செல்லும்போது, நாய் முன்னால் போய்க்கொண்டே இருக்கும். இடையில் புலியையோ, கரடியையோ மற்ற மிருகங்களையோ மோப்பம் பிடித்ததும், நாய் உங்களைச் சுற்றி வரும். அப்படி இது செய்தால், உடனே இந்த நாயை அவிழ்த்து விட்டு விடுங்கள். அவிழ்த்து விட்டதும் நாய் உங்களுக்கு முன்னால் சுமார் இருபது அல்லது முப்பது அடி தூரத்தில் போய்க்கொண்டே இருக்கும். மோப்பம் பிடித்த பிராணியைக் கண்டதும் நாய் கீழே உட்கார்ந்து மெதுவாக நகர்ந்து போக ஆரம்பிக்கும். நீங்களும் அதன் பின்னால் நடந்து போக வேண்டும். எதிரியின் அருகில் ஓரளவுக்கு நாய் போனதும், மேலே போகாமல் நின்று விடும். அப்போது நீங்கள் உடனே உங்கள் துப்பாக்கியால் ஆகாயத்தைப் பார்த்துச் சுட வேண்டும். அந்த வெடிச் சத்தம் கேட்டுப் புலி ஒரு வினாடி திரும்பும். அந்த கணத்திலே நாய் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து புலியின் தொண்டையைப் பிடித்துக் கொள்ளும். நாயை என்னதான் புலி உதறினாலும் நாய் தன் பிடியை விடாது. கடைசியில் புலிக்கு மூச்சுத் திணற ஆரம்பிக்கும். அப்போது புலியை நீங்கள் சுட வேண்டும். அந்த நிலையில் புலி உடனே சுருண்டு கீழே விழுந்து விடும். நீங்கள் சுட்ட பிறகுதான் நாய் தன் பிடியை விடும். அதுவரையில் புலியின் கழுத்தை நாய் விடாது. தயை செய்து இவற்றை எல்லாம் ஒழ்ங்காகச் செய்ய வேண்டும்" என்று ஜயசீலனிடம் ரூப் சிங் கூறினார்.
ஜயசீலனும் "சரி" என்று கூறி ரூப் சிங்கின் நாயைத் தம்முடன் அழைத்துக் கொண்டு போனார். அன்று மாலையில் சுமார் ஐந்து அல்லது ஆறு மணி இருக்கும்.
"காலையில் போனவர் இன்னும் வரவில்லையே" என்ற கவலையுடன் நானும் ரூப் சிங்கும் உட்கார்ந்து கொண்டிருந்தோம். சிறிது தூரத்தில் ஜயசீலன் மூச்சு வாங்க ஓடி வருவது தெரிந்தது. ஆனால் நாயைக் காணவில்லை.
"மிஸ்டர் ரூப் சிங்! நீங்கள் சொன்னதைப் போலெல்லாம் நாய் செய்தது. ஆனால் பெரிய புலியின் எதிரில் நாயின் தோற்றத்தையும், பார்வையையும், புலியின் பார்வையையும் கண்ட எனக்கு உடம்பெல்லாம் நடுக்கம் ஏற்பட்டு விட்டது. ஒரு நிமிஷங்கூட நான் அங்கு இல்லை. உடனே ஒரே ஓட்டமாக ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டேன்" என்று சொல்லி முடிப்பதற்கு முன், ரூப் சிங்கின் கண்கள் சிவந்தன.
அவர் மனம் பதறியவராய், ஜயசீலன் சுட்டிக் காட்டிய திசையிலே தம் துப்பாக்கியுடன் பறந்தார்.
ரூப் சிங்கின் வேகத்தையும், கோபத்தையும் கண்ட நான், வீட்டிலேயே தங்கி விட்டேன்.
சில மணி நேரத்துக்குப்பின் ஜயசீலன் தம் துடையில் ஏதோ காயக் கட்டுடன் வருவதைக் கண்டேன். நாயின் உடல் முழுவதும் காயங்கள்; குருதி! திகைத்து நின்றேன்.
ரூப் சிங் சொன்னார் :
"நான் ஓடி இரா விட்டால் நாயை இழந்திருப்பேன். நாய் நான் வருவதை மோப்பத்தின் மூலம் தெரிந்து கொண்டு, தன் வாலை மட்டும் லேசாக ஆட்டியது. ஆனால் தன் தலையை ஒரே பார்வையில் வைத்திருந்தது. அது வாலை ஆட்டும் காட்சியைக் கண்டதும் எனக்குக் கண்கள் கலங்கின. சட்டென்று துப்பாக்கியால் ஆகாயத்தில் சுட்டேன். புலி அதைக் கேட்டு ஒரு வினாடி திரும்பியது. அடுத்த வினாடி புலியின் கழுத்தை என் நாய் பிடித்திருப்பதைக் கண்டேன். புலி என்ன என்னவோ செய்தது. நாயின் உடலில் தன் நகங்களால் பீறிப் பல காயங்களை உண்டாக்கியது. சுமார் பத்துப் பதினைந்து நிமிஷங்களுக்குப் பின் புலியின் வேகம் குறைந்தது. சமயம் கிடைத்ததும் புலியின் நெற்றியைப் பார்த்துச் சுட்டேன். புலி தரையில் சாய்ந்தது.
"அடுத்த நிமிஷம் நண்பர் ஜயசீலனின் அலறல் குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். என் நாய் என்ன செய்தது தெரியுமா? ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஜயசீலனின் துடையைக் கவ்விக் கடித்து விட்டது. நான் மட்டும் நாய்க்குக் குரல் கொடுக்கா விட்டால், அவரைத் தீர்த்தே இருக்கும்.
" 'ஆபத்தில் உதவாத நண்பன் பகைவனே' என்று நாய் பாடம் கற்பித்திருக்க வேண்டும்."
நன்றி: http://engalblog.blogspot.com/2015/10/blog-post_28.html