- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -
ஜான் பெர்கின்ஸ் என்பவர் சர்வதேச ஆலோசனை நிறுவனமான மெய்னுக்கு ( Main ) பொருளாதார அடியாளாக இருந்தார். இவர் ஆரம்பத்தில் தனது வாழ்நிலை சூழலை கருதி ஆசை அதிகாரம் பணம் என்பவற்றின் கவர்ச்சியில் சாராசரி மனிதனாகவே ஈடுபட்டார். காலப்போக்கில் இந்த சதிவலையின் பாரதூரமான விளைவுகளை கண்டு மிகுந்த குற்றவுணர்ச்சிக்கு உள்ளானார். இந்த பெருநிறுவனங்களின் நயவஞ்சக செயற்பாடுகளினால் ஏழைமக்களும், பழங்குடி மக்களும் மிக மோசமாக பாதிப்பிற்கு உள்ளானார்கள். இந்த உண்மையை வெளியுலகிற்கு எடுத்துக் கூறவேண்டும் என்றவாறு மய்னின் நிறுவனத்தில் இருந்து விலகினார். அவர் பெற்ற அனுபவங்களை “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற புத்தகமாக வெளியிட்டார்.
உலகமயமாதல் பெயரில் ஒரு நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனிதவளங்கள் பெருநிறுவனங்களால் பங்கிடப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது. முன்னேற்றம், வளர்ச்சி என்ற மாயத்தோற்றங்ஙளை காட்டி மக்களை ஏமாற்றுகிறது. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் காலனித்துவமாக வைத்திருந்த அடிமை நாடுகளின் வளங்களை ஆளுமை செய்த நாடுகள் கொள்ளையிட்டது போலவே இன்று உலகமயமாதல் என்ற பெயரில் அரங்கேறுகிறது.
அமெரிக்க சர்வதேச நிறுவனம் மெய்ன் (Main) என்பதாகும். அதன் நோக்கம் மூன்றாம் உலக நாடுகளில் நீர் மின்நிலையங்கள், அணைக்கட்டுகள், நெடுஞ்சாலைகள், விமானநிலையங்கள் என மிகப் பெரிய திட்டங்களை அமுல் படுத்துவதாகும். இந்த நிறுவனத்திற்கும், அரசுக்கும், சர்வதேச வங்கிக்கும் பரஸ்பர உறவு காணப்படும். மெய்ன் நிறுவனத்தில் பொருளாதார வல்லுனராக இருப்பவருக்கு கொடுக்கப்படும் வேலையானது இரண்டு முக்கிய விடயங்களை கொண்டிருக்கும்.
1. பெரிய சர்வதேச கடன் வாங்குவதை நியாயப்படுத்தி வாங்க வைத்து மீண்டும் அப்பணம் முழுவதும் பொறியியல் கட்டுமான வேலைகள் மூலமாக மெய்னுக்கும், அமெரிக்க நிறுவனத்திற்கும் கிடைக்குமாறு திருப்பி விட வேண்டும்.
2. கடன் வாங்கிய நாடுகளில் இருந்து பணம் மெய்னுக்கும், நிறுவனத்திற்கும் வந்து சேர்ந்த பிற்பாடு அந்நாடுகளை திவாலாக்கி விட வேண்டும். இங்கு வேலையில் அமர்த்தப்படும் அனைவரும் நிறுவனம் தொடர்பான சகல விபரங்களையும் இரகசியமாக பேணுதல் வேண்டும்.
ஜான் பென்கின்ஸ் இன்று நாம் வாழும் உலகத்தை வியக்க வைக்கும் வகையில் தொடர்ச்சியான அனுபவங்களை கொண்டிருக்கிறார் என்பதையே இப்புத்தகத்தில் சொல்லப்படுகிறது. பணம், அதிகாரம், ஆசை எவ்வாறு வஞ்சகம், அதிர்ச்சியூட்டும் கொலைகளுக்கான வலைப்பின்னலை உருவாகுகிறது என்பதை விவரிக்கிறது. ஒரு நாடு மற்றைய நாட்டை எவ்வாறு சுரண்டலாம் அவர்களின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கலாம் சுற்றுச்சூழல் பேரழிவுகளை ஏற்படுத்தலாம் அவர்களது நீர்நிலைகளை பாதிக்கப் செய்யலாம் அவர்களது அரசியலுக்கு வழிகாட்டலாம் என்ற காப்பிரேட் உலகின் முன்மாதிரிகளின் பின்னால் உள்ள உண்மையை பெர்கின்ஸ் வெளிப்படுத்துகிறார்.
ஜான் பெர்கின்ஸ் இரண்டு விடயங்கள் பற்றி கூறுகிறார்.
1. Economic Hitman
2. Corporatocracy
பொருளாதார அடியாள் பற்றி கூறும்போது அமெரிக்காவின் வணிக நலன்களை ஊக்குவிக்கும் ஒரு பரந்த வலையமைப்பின் ஒரு பகுதியாக மாற உலகத் தலைவர்களை ஊக்குவிக்கும் குழு என்பதாகும். இதன் விளைவாக உலகத் தலைவர்களை கடன்வலையில் சிக்கவைத்து அமெரிக்கா அரசியல், இராணுவ, பொருளாதார ரீதியில் ஆதரவு வழங்கும். விமான நிலையங்கள் மின் உற்பத்தி நிலையம் புகையிரத நிலையம் தொழிற்துறை பூங்கா போன்ற திட்டங்களை முன்வைக்கும். ஜான் பெரகின்ஸ் துல்லியமான வரையறையை வழங்குவார். இவர்கள் உலகமெங்கும் உள்ள நாடுகளில் இருந்து டிரில்லியன் டொலர்களை ஏமாற்று வேலைகள் ஊடாக கொள்ளையடிக்கிறார்கள். இவர்கள் இந்த கொள்ளையடிப்பை செய்வதற்கு மோசடியான நிதி அறிக்கை, மோசமான தேர்தல், லஞ்சமாக பணம் கொடுத்தல், பாலியல், கொலை என எல்லா வகையான மிகக் கொடூரமான செயல்களையும் செய்ய தயங்குவதில்லை.
Corporatocracy என்பது உலகளாவிய ரீதியில் முன்னேற்றங்களுக்கு உழைக்கும் நிறுவனங்கள், வங்கிகள், அரசாங்கம் ஆகியவற்றின் கூட்டுச் செயற்பாடாகும். குறிப்பிட்ட திட்டங்களை 20 25 வருடங்களுக்கு பிரமாண்டமான வளர்ச்சி என பூதாகாரமான சித்திரத்தை உருவாக்க வேண்டும். அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள வைத்தல், அதற்கான அறிக்கைகளை உருவாக்குதல், செலவிற்கான பணத்தை வங்கிகள் மூலம் கடனாக கொடுத்தல் என இந்த கூட்டு நடவடிக்கைகள் வாயிலாக திட்டங்கள் நிறைவேற்றப்படும். இவ்வாறு கடன் பெறுவதானது அந்த நாட்டை முற்றும் முழுதாக அமெரிக்காவை சார்ந்திருக்கச் செய்யும். கடன்களை கட்ட முடியாத நிலைமைகள் ஏற்பட்டால் கடன் கொடுத்த வங்கிகள் அந்நாட்டு அரசாங்கம் தன் நாட்டு மக்களுக்கு செய்யும் அடிப்படைத் தேவைகளான கல்வி, சுகாதாரம், போன்ற செலவீனங்களை கட்டுப்படுத்தும். தேசிய மொத்த வளர்ச்சி என்பதே ஒரு மோசடி வேலைதான். தன்னலம் சார்ந்த வெளியுறவுக் கொள்கை வருங்கால தலைமுறைக்கு உதவிக்கரமாகவோ அவர்களது பாதுகாப்பாகவோ இருக்கமுடியாது.
'மெய்ன்' நிறுவனமானது பனமா, சவுதி அரேபியா, ஈராக், ஈக்குவடோர் ஆகிய நாடுகளில் மூலோபாய தந்திரங்களை பயன்படுத்தி தமது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு அவர்களது அங்கீகாரத்தை பெறுகின்றன. சவுதியும், ஈராக்கும் எண்ணெய் வளம் கொண்ட நாடு என்பதால் பனமா முக்கியத்துவம் வாய்ந்தது. பனமா கால்வாய் தென் அமெரிக்காவையும்,வட அமெரிக்காவையும் இணைக்கும் கண்ணியாக உள்ளது.
ஈக்குவடோரில் அமேசன் பகுதியில் பெருமளவு எண்ணெய் உருஞ்சல் 1960 இன் பின் பகுதிகளில் தொடங்கப்பட்டது.
அமெரிக்க சதிவலையை பனமா தலைவர் ஒமர் டோரிஜோஸ் ( Omar Torrijos ) இனம் காண்கிறார். பனமா கால்வாயின் ஆளுகை அந்நாட்டு மக்களுக்கே உரியது என்ற நம்பிக்கை கொண்டிருந்தார். இங்கு அமெரிக்க தலையிடு என்பது சதிவலை மக்களை பாதாளத்தில் தள்ளிவிடும் என்பதை உணர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார். 1972 ல் ஜான் பெர்கின் டோரிஜோரிடம் தொடர்ப்பு கொண்டபோது அவர் தனது நாட்டின் மீதும்,ஏழைமக்கள் மீதும் வைத்துள்ள அக்கறையை அறிந்து கொள்கிறார். ஆனால் ஒமர் டோரிஜோஸ் தான் கொல்லப்படலாம் என்பதையும் தெரிந்து வைத்திருந்தார். 1982 இல் ஜூலை 31 அன்று ஒமர் டோரிஜோஸ் விமான விபத்தில் கொல்லப்படுகிறார்.
பனமாவின் அடுத்த தலைவராக Manuel Noriega தெரிவாகிறார். இவர் ஜப்பானியரால் நிதியளிக்கப்பட்ட ஒரு புதிய கால்வாயை கட்டும் திட்டத்தை அமுல்படுத்துகிறார். அமெரிக்க நிறுவனம் அச்சம் கொள்கிறது. பல பில்லியன் டொலர்கள் ஜப்பானை சென்றடைவதில் போட்டி பொறாமை கொள்கிறது. இதன் வெளிப்பாடாக அத்துமீறலுடன் 1986 இல் பனமா மக்கள் மீது வான்வழித் தாக்குதலுடன் படையெடுப்பு செய்கிறது. பல மோசமான அழிவிற்கு பின்னர் Manuel Noriega ஐ கைது செய்து மியாமி கொண்டு சென்று 40 ஆண்டு சிறை விதித்தனர். அத்துடன் போர் குற்றவாளி எனவும் குற்றம் சாட்டியது.
ஈராக் எண்ணெய்க்காக முக்கியத்துவம் கொண்டிருப்பதைப் போலவே அதன் நீரும் நில அரசியலும் முக்கியமானது. உலகின் முக்கியமான யூப்ரடீஸ், டைகிரிஸ் ஆறுகள் பல்வேறு நாடுகள் வழியே ஓடினாலும் ஈராக்கினாடாக அதற்கு தனித்த முக்கியத்துவம் உண்டு. அதிமுக்கிய நீர்வளத்தையும் ஈராக் கொண்டிருந்தது. ஈராக்கை எப்படியாவது மற்றொரு சவுதியாக மாற்றிவிட புஷ்- ரீகன் நிர்வாகம் கனவு கண்டது. பெருநிறுவனங்களின் கண் நீர்மீது விழுகிறது. ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மத்தியகிழக்கில் நீரை வியாபாரமாக்க முனைந்தார்கள். நீர் எண்ணெய் இரண்டிலும் ஈராக் மையமான இடத்தில் உள்ளது. அதன் எல்லை நாடுகள் ஈரான், குவைத், சவுதி அரேபியா, ஜோர்தான், சிரியா, துருக்கி ஆகும். பாரசீக வலைகுடாவில் அதற்கு கடற்கரையும் உண்டு. ஈராக்கில் இருந்து இஸ்ரேலுக்கும், சோவியத் யூனியனுக்கும் ஏவிகனை செலுத்துவது இலகுவானது. இவ்வளவு சிறப்புத் தன்மைகள் கொண்ட ஈராக்கை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் மொத்த மத்தியகிழக்கையும் தன் கைக்குள் கொண்டுவரலாம் என்ற உண்மையை U.S தெரிந்து கொண்டது. ஆனால் பொருளாதார அடியாட்களின் வஞ்சக வலைக்கு சதாம் குசைன் பணிந்து விடுபவராக இல்லை. இது புஷ்- ரீகன் நிர்வாகத்திற்கு ஆத்திரம் அளித்தது. சதாம் குசைன் 1990 இல் குவைத் சேக்கில் எண்ணெய் வயல்களை ஆக்கிரமித்தார். சதாமின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஈராக் மீது இராணுவத் தாக்குதல் நடத்தவும், சர்வதேச படையில் 5 இலட்சம் துருப்புகளையும் U.S அனுப்பியது.
ஈக்குவடோரில் அமெரிக்க எண்ணெய் நிறுவனமாகிய Chervon Texaco Corp ஆனது நான்கு மில்லியன் கலன் நச்சு கழிவுநீரினால் ஆறுகள் திறந்த துளைகள் மாசுபடுத்தப்படுகிறது. அந்த கழிவுநீரில் எண்ணெய், Carcinogenic, heavy metal கலந்திருப்பதாகவும், அதனால் அங்குள்ள மக்களுக்கும், விலங்குகளுக்கும் விஷமானது எனவும் புற்றுநோயினை ஏற்படுத்தக் கூடியது என்ற தகவலும் அறியப்படுகிறது. Jaime Roldos என்ற வழக்கறிஞர் Ecuador இல் அமெரிக்க நிறுவனங்கள் கால் ஊன்றுவதையும் அவர்களது சுரண்டலையும் எதிர்த்தார். அந்நாட்டிலுள்ள செல்வங்களை தரும் எண்ணெய் வளங்கள் அங்குள்ள மக்களுக்கே உரிமை உள்ளதாகவும் அதனை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசியல்வாதிக்கு உள்ளது என்ற நம்பிக்கையை கொண்டிருந்தார். ஈக்குவடோர் மக்கள் அவரில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அங்குள்ள முக்கிய கனிமப்பொருள் பெற்றோல் ஆகும். Roldos ஐதரோகார்பன் பொலிசியினை உருவாக்கினார். அங்கு கிடைக்கும் வருமானத்தில் பெரும்பகுதி மக்களுக்காகவே செலவிட வேண்டும் என்பதே அவரின் கொள்கையாக இருந்தது.
ரோல்டோய் அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முதல் வேலையாக டெக்ஸாகோ எண்ணெய் நிறுவன விடயத்தில் கவனம் செலுத்தினார். 1981 இல் ரோல்டோய் நிர்வாகம் ஈக்குவடோர் காங்கிரசுக்கு புதிய ஐதரோகார்பன் கொள்கையை பரிந்துரைத்தது. எண்ணெய் நிறுவனங்கள் அச்சட்டத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ரோல்டோய் அனைத்து வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் நிறுத்தும்படி உத்தரவிட்டார். 1981இல் மே 24 ஆம் திகதி ரோல்டோய் பயங்கர விமானமோதலில் கொல்லப்பட்டார். பின்னர் ஒஸ்வல்டோ ஹர்ட்டோ அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்றார். இன்ஸ்டியூட் ஆவ் லிங்குவிஸ்டிக் அமைப்பினர் ஈக்குவடோரில் வேலையை தொடருவதற்கு அனுமதி பெற்றனர்.
வெனிசுலாவில் 1998 இல் பொதுத்தேர்தலில் ஏழை எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதரவுடன் சாவேஸ் அதிவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சாவேஸ் அரச அமைப்புகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்தார். உலகமயமாக்கலுக்கு எதிராக குரல் கொடுத்தார். ஐதரோகார்பன் சட்டத்தை அமுல்படுத்தினார். பொருளாதார உலகில் வெனிசுலா எண்ணெய் வளம் முக்கியமான இடத்தை வகித்தது. 1980 இல் நிறுவனவிய அடியாட்கள் வெனிசுலா சென்றார்கள். பின்னர் எண்ணெய் சரிந்தபோது வாங்கிய கடனை வெனிசுலா திரும்ப செலுத்த முடியவில்லை. 1989 இல் பன்னாட்டு நிதியம் நெருக்கடி கொடுத்தது.
ஜான் பெர்கின்ஸ் பொருளாதார அடியாளாக 1968 இல் தொடங்குகிறார். மெய்ன் நிறுவனம் போல் பல நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் நோக்கம் ஒன்றாகவே இருந்தது. அபிவிருத்தி, வளர்ச்சி என்ற போர்வையில் அரசையும் மக்களையும் நம்பவைத்து கழுத்தறுத்தல் செய்வதாகும். ஜான் பெர்கின்ஸ் தனது புத்தகத்தில் சவுதி அரேபியா, கொலம்பியா, இந்தோனேசியா பற்றியும் விவரிக்கிறார். எல்லாமே அந்த நாடுகளின் வளங்களையும் பொருளாதாரத்தை சுரண்டுவதுமே அடிப்படையாகும். அவற்றின் பாதகமான விளைவு வறுமையினை அதிகரித்தல், காடுகளை அழித்தல், பழங்குடி மக்களின் கலாச்சாரங்களை அழித்தல், அவர்களது நிலங்களை விட்டு துரத்துதல், நிலங்களை அகழ்ந்து விடுதல், நச்சுத்தன்மை கொண்ட கழிவை நீரை ஆறுகளுடன் கலத்துவிடல், மக்களுக்கும் மிருகங்களுக்கும் அபாயத்தை ஏற்படுத்தல், நாடுகளில் கடன்கட்ட முடியாத நிலைமையினை உருவாக்கி மேலும் மேலும் கொள்ளையடித்தல் என அவர்களது கொடூரமான ஈவிரக்கமற்ற செயற்பாடாகளே ஆகும். ஜான் பெர்கின்ஸின் இவ்வெளியீடு அவரது உயிருக்கே சவாலாக இருந்திருக்கும். ஆனால் அந்த உயிருக்கு மேலாக அவரிடம் மனிதம் இருந்தமையை எடுத்துக் காட்டுவதே ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்றால் பொருத்தமாக இருக்கும்.