கப்பிட்டல் மகாராஜா குறூப் நிறுவுனர் திரு. ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் மரணச் செய்தி ஒரு கணம் அதிர்ச்சியாக இருந்தாலும், 1980 களில் என் நினைவுகளை மீட்டுப் பார்க்க வைத்தது. அற்புதமான சிந்தனையாளர், எத்தனையோ போட்டிகள், பொறாமைகளுக்கு மத்தியில் மகாராஜா நிறுவனத்தைத் திறம்படக் கொண்டு நடத்தியவர். தமிழரை மட்டுமல்ல, எல்லா இனத்தவரின் திறமைக்கும் முதலிடம் கொடுத்து, ஒரு குடும்பமாகத் தன்னிடம் பணிபுரிந்த எல்லோரோடும் அன்பாகப் பழகியவர். சுருங்கச் சொன்னால் தமிழரைத் துணிச்சலோடு ‘எதற்கும் நாம் சளைத்தவர்கள் அல்ல’ என்று இலங்கையின் தலைநகராம் கொழும்பில் தலைநிமிர்ந்து நிற்கவைத்தவர். அவரது திடீர் இழப்பு எமக்கு, எம்மினத்திற்குப் பெரும் இழப்பாகும்.
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழர்களின் சொத்துக்கள் மட்டுமல்ல, பேரினவாதத்தால் உயிர்களும் பறிக்கப்பட்ட மாதம். சொந்த மண்ணிலே நாங்கள் அகதிகளாக்கப்பட்டதும் அப்பொழுதுதான். இந்த இனக்கலவரத்தின் போது, இலங்கையிலே மிகவும் பிரபலமான தமிழர் நிறுவனமான மகாராஜா நிறுவனத்தை அடியோடு வீழ்த்துவதும் பேரினவாதத்தின் முக்கியமான ஒரு நோக்கமாக இருந்தது. ஏற்கனவே திட்டமிட்டபடி சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியோடு பேரினவாதம் அதைச் சாதித்திருந்தது. கொழும்பில் இருந்து தமிழர்களை விரட்டுவதே அதன் நோக்கமாக இருந்தது. இனக்கலவரத்தின் போது தமிழர்களின் வீட்டு முகவரிகள் காடையர்களுக்கு கொடுக்கப்பட்டு எரியூட்டப்பட்டது போலவே, தமிழர்களின் நிறுவனங்களும், தேடித்தேடி அழிக்கப்பட்டன. ‘போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்’ என்ற முன்நாள் ஜனாதிபதியின் அறைகூவலுக்குச் செவிசாய்த்த பேரினவாதம் இதை திறம்படச் செய்து முடித்தது. கொழும்பிலும், இரத்மலானையிலும் இருந்த மகாராஜா நிறுவனத்திற்குச் சொந்தமான எஸ்லோன் பைப், ஜோன் பேர்ணிச்சர் போன்ற ஆறு தொழிற்சாலைகளுக்கு மேல் எரியூட்டி அழிக்கப்பட்டன.
இக்காலகட்டத்தில் நான் மகாராஜா நிறுவனத்தின் சில கொம்பனிகளின் கணக்குப் பரிசோதகராக இருந்தேன். ஒரு நாள் திரு. ராஜமகேந்திரன் என்னை அழைத்து ‘ரெலிபங்கன் தொலைக்காட்சி’ விற்பனை நிலையத்தின் கணக்கை உடனடியாகப் பரிசோதிக்கும்படியும், விற்பனை திடீரெனக் குறைந்ததற்கான காரணத்தைத் தெரிவிக்கும்படியும் கேட்டிருந்தார். திடீரென அவர் அதைக் கேட்டதால் ஏதோ இருக்கிறது என்ற நினைவோடு நானும் குழுவிரும் பரிசோதனை மேற்கொண்டோம். ஒரு குறையும் கண்டு பிடிக்க முடியவில்லை. கடைசிநாள் தேனீர் நேரம் அங்கு வேலை செய்யும் உதவியாளர் தேனீர் பரிமாறினார். அவரிடம் கதை கொடுத்துப் பார்த்தேன். அவரிடம் இருந்து ஒரு துப்புக் கிடைத்தது. உதிரிப்பாகங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், புதிய தொலைக்காட்சிப் பெட்டிகளில் இருந்து உதிரிப்பாகங்களை எடுத்து வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதாகச் சொன்னார். அதனால் குறிப்பிட்ட தொடர்பின்றி எடுக்கப்பட்ட சில பெட்டிகளைத் திறந்து பார்த்த போது, சுமார் 12 புதிய தொலைக்காட்சிப் பெட்டிகளில் இருந்து உதிரிப்பாகங்கள் எடுக்கப்பட்டதைக் கண்டுபிடிக்க முடிந்தது. இதைப்பற்றி அறிக்கை எழுதி திரு. ராஜமகேந்திரனிடமே நேரடியாகக் கொடுத்திருந்தேன். அறிக்கையை வாசித்து விட்டு ‘இதுதான் எனக்கு வேண்டும்’ பாராட்டினார். எதையோ சாதித்த மகிழ்ச்சி என் மனதில் குடிகொண்டது.
மகாராஜாவின் முக்கியமான தூண்களில் ஒருவர் திரு. நிமால் குக் அவர்கள், மற்றவர் நண்பர் சி. கணநாதன் அவர்கள். அப்போது ஏ. எவ் ஜோன்ஸ் நிறுவனத்தின் கணக்காளராகக் கணநாதன் இருந்தார். இந்தக் கலவரங்களின்பின் ஒருநாள் தொலைபேசியில் என்னை அழைத்து மகாராஜா நிறுவனத்தில் இணைந்து கொள்ள விருப்பமா என்று கேட்டார். கலவரத்தில் மகாராஜா நிறுவனம் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்திருந்தது. ஏற்கனவே எனது அண்ணாவிடமும் திரு. ராஜமகேந்திரன் (கிளி) இதைப்பற்றிக் கேட்டிருந்தார், எனவே மகிழ்ச்சியோடு இணைந்து கொண்டேன். ஜோன் பேர்ணிச்சர் நிறுவனத்துக்குக் கணக்காளராகப் பொறுப்பெடுத்தேன். முதல்நாள் அதற்குப் பொறுப்பான திரு. பார் குமாரகுலசிங்கத்தை அறிமுகம் செய்துவைத்து, ‘நாங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும், என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள்’ என்றார் திரு. ராஜமகேந்திரன். அப்போது அவரது முகத்தில் தெரிந்த உறுதியான நம்பிக்கையைப் பார்த்தேன், ‘வீழ்வோம் என்று நினைத்தாயோ?’ என்ற பாரதியின் பாடல்தான் எனக்கு நினைவுக்கு வந்தது.
மறுநாள் யூனியன் பிளேஸில் உள்ள காட்சி அறைக்குச் சென்றேன். அதன் முகாமையாளராக திரு. கே. இரட்ணசபாபதி இருந்தார். அவருடன் உரையாடினேன். தளபாடங்கள் இல்லாமல் எமது காட்சியறை தூங்கிக் கொண்டிருந்தது. நான் உடனடியாகவே காரியத்தில் இறங்கினேன். இரத்மலானையில் உள்ள தொழிற்சாலைக்குச் சென்று பார்த்தபோது ஏராளமான தளபாடங்கள் எரிந்த நிலையில் கருகிப்போய், கவனிப்பாரற்றுக் கிடந்தன. மறுநாள் அங்கே முன்பு தொழில் பார்த்த நேர்மையான இருவரை அழைத்து எரியாமல் கிடந்த எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து ஓரிடத்தில் வைக்கச் சொன்னேன். மறுநாள் சென்று பார்த்தபோது, நூற்றுக் கணக்காகக் குவித்திருந்தார்கள். சில மேசைகள், கதிரைகளுக்கு மூன்று காலகள்தான் இருந்தன. எது இல்லையோ அதை உடனடியாகச் செய்யச் சொன்னேன். இரண்டு வாரத்தில் காட்சியறை தளபாடங்களால் நிறையத் தொடங்கியது. இரண்டு மாதத்தில் மீண்டும் விற்பனையைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்ததில் பெருமையாக இருந்தது. மாதமுடிவில் பார் குமாரகுலசிங்கம் என்னிடம் கவர் ஒன்றைத்தந்தார், திறந்து பார்த்தேன், திரு. ராஜமகேந்திரனின் கையொப்பமிட்ட காசோலை ஒன்று ‘போனஸ் பேமென்ட்’ என்ற குறிப்போடு இருந்தது.
அதைத்தொடர்ந்து கொப்பியூட்டர் சிஸ்டம் லிமிட்டெட், அதற்குத் திரு. தில்லைநடேசன் பொறுப்பாக இருந்தார். முதன் முதலாக கணனியில் கணக்குகளை பதியக்கூடியதாக எல்லா கணக்காளர்களுக்கும் கணனி பாவனையை அறிமுகப்படுத்தியது மகாராஜா நிறுவனம்தான். இதற்காக ஐபிஎம் நிறுவனத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டோம். அந்த நிறுவனத்திற்கும், சண்பவர் சிஸ்டம் என்ற நிறுவனத்திற்கும், ஜோன் இன்ஜினியேர்ஸ் நிறுவனத்திற்கும் கணக்காளராக பொறுப்பைத் தந்தார்கள். இன்னபிளவர் வீதியில் இருந்த அதற்கு திரு. கே. துரைசிங்கம் பொறுப்பாக இருந்தார். திரு. நிமால் குக் தனக்கு ஒரு கணக்காளர் வேண்டும் என்று சொல்லி ‘மகாராஜா புறஜெக்ஸ்;’ நிறுவனத்திற்கு என்னைக் கணக்காளராக நியமித்துக் கொண்டார். மகாராஜா நிறுவனம் 50வது ஆண்டு விழாவைக் கொண்டாடிய போது, நான் மொத்தம் ஐந்து நிறுவனங்களின் கணக்காளராகப் பொறுப்பேற்றிருந்தேன். அங்கர்பால்மா நிறுவனத்திற்கு திரு. சுந்தரலிங்கம் கணக்காளராக இருந்தார். திரு. ராஜமகேந்திரனுக்கு அடுத்ததாக நான் பார்த்து வியர்ந்த மனிதர் திரு. நிமால் குக் தான். எந்தவொரு பந்தாவும் இல்லாமல் அன்பாகப் பழகக்கூடியவர். அவருடைய செயலாளராகப் பணிபுரிந்த கந்தானையில் இருந்து வந்த ரஸ்மி பெர்னாண்டோவும், சட்டத்துறைக்குப் பொறுப்பான ருத்ராணி பாலசுப்ரமணியமும் மிகவும் அன்போடு பழகக்கூடியவர்கள். நான் கனடாவுக்குப் புலம் பெயர்ந்ததால் இவர்களை எல்லாம் விட்டுப்பிரிய வேண்டி வந்தது.
இச் சந்தர்ப்பத்தில் 1943 ஆம் ஆண்டு பிறந்த திரு. ராஜமகேந்திரன் கட்டி எழுப்பிய மகாராஜா நிறுவனத்தைப் பற்றிக் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். திரு. ராஜமகேந்திரனின் தந்தை பெயர் சி. இராஜேந்திரம், தாயாரின் பெயர் செல்லம்மா. தந்தையின் நண்பரின் பெயர் திரு. மகாதேவன். இருவரும் சேர்ந்து 1939 ஆம் ஆண்டு உருவாக்கிய நிறுவனம் தான் மகாராஜா நிறுவனம். 1957 ஆம் ஆண்டு திரு. மகாதேவனின் மரணத்தைத் தொடர்ந்து இவர்கள் பொறுப்பேற்றார்கள். 1965 ஆம் ஆண்டு தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து பிள்ளைகளான திரு. மகாராஜாவும், திரு. ராஜமகேந்திரனும் பொறுப்பேற்றார்கள். இவர்களுக்கு ராஜலக்சுமி, மகாலக்சுமி, ஜெயலக்சுமி, விஜயலக்சுமி என்ற நான்கு சகோதரிகளும் உண்டு. இந்து மதத்தவரான இவரது தந்தையார் ‘கிண்டு எடியூக்கேசனல் சொசைட்டி’ என்ற நிறுவனத்தின் நிறுவுனராகவும் இருந்தார். பாக்கர் இங், பொன்ஸ் பவுடர், எஸ்லோன் பைப் போன்ற கம்பெனிகள் நல்ல வருமாத்தை ஈட்டிக் கொடுத்தன. சக்தி, சிரச போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களும் இவர்களுக்குச் சொந்தமானது. திரு. ராஜமகேந்திரன் கடவுள் பக்தி மிக்கவர். பாங்ஷால் வீதியில் உள்ள நிறுவனத்திற்குச் செல்லும் போதெல்லாம் அருகே வழியில் உள்ள கோயிலுக்கு முன்னால் வண்டியை நிறுத்தி வணங்கிவிட்டுத்தான் செல்வார்.
திரு. ராஜமகேந்திரன் முன்நாள் ஜனாதிபதி பிரேமதாசாவுடன் நல்ல நட்போடு பழகினார். பிரேமதாசாவின் செயலாளராக இருந்தவர் தமிழர், மகாஜனாவின் பழைய மாணவர். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அரசு அறிமுகம் செய்த வீட்டுத் திட்டங்களுக்கு உதவியாகவும் இருந்தார். சுகததாசா ஸ்ரேடியத்தின் பராமரிப்புக்கு உதவி செய்தார். கொழும்பில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தில் உள்ள மணிக்கூடு பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாக இருந்தது. நாங்கள் சீக்கோ மணிக்கூடு முகவர்களாக இருந்ததால், பழைய மணிக்கூடு போலவே புதிதாகச் செய்வித்துக் கொடுத்தோம். இப்படியாகத் தனிப்பட்ட முறையில் பல உதவிகளைச் செய்திருந்தார். விளையாட்டுத் துறையையும் அவர் ஊக்குவித்தார். நீல் சண்முகம், துலிப் மெண்டிஸ், றுமேஷ் ரட்நாயக்கா, றோய் டயஸ் போன்ற சுமார் 12 கிரிகெட் வீரர்கள் அப்போது அங்கே எங்களுடன் பணிபுரிந்தார்கள். இன்னும் சில வருடங்களில் 100 வது ஆண்டைக் கொண்டாட இருக்கும் மகாராஜா நிறுவனத்தை அவரது மகன் சசிதரன், மகள் அஞ்சலி ஆகியோர் சிறந்தமுறையில் கொண்டு நடத்தி அமரர் ராஜமகேந்திரனின் கனவுகளை நினைவாக்குவார்கள் என்ற நம்பிக்கையோடு. அவரது குடும்பத்தினரின் துயரில் கலந்து கொண்டு, அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.