பழம்பெரும் நடிகையான செளகார் ஜானகிக்கு 12.12.2011 அன்று வயது எண்பது. சிறந்ததொரு குணசித்திர நடிகையாக விளங்கிய செளகார் ஜானகி அமைதியாகச் சாதனைகள் பலவற்றைப் புரிந்துவிட்டிருக்கின்றார். தற்போது பெங்களூரில் வசித்துவரும் செளகார் ஜானகி இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 385 திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் என்பது பிரமிப்பைத் தருகின்றது. இது தவிர 300 தடவைகள் மேடையேறியுமிருக்கின்றார். சிறுவயதிலிருந்தே செளகார் ஜானகி அவர்கள் கலையுலகில் நுழைந்து விட்டார். தனது 11 வயதில் தெலுங்கு வானொலிக் கலைஞராக விளங்கிய 'செளகார் ஜானகி' மூன்று மாதக் கைக்குழந்தையுடன் விளங்கிய தாயாகத் திரையுலகில் காலடியெடுத்து வைத்துச் சாதனைகள் படைத்தார். நாகிரெட்டியாரின் விஜயா கம்பைன்ஸ்ஸாரினால் தயாரிக்கப்பட்ட செளகார் என்னும் தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் 'செளகார் ஜானகி' என்று அழைக்கப்படத் தொடங்கினார். அப்படத்தில் அவர் என்.டி.ராமராவுடன் நடித்திருப்பார். அவரது முதல் படமான 'செளகார்' படத்திற்காக அவர் பெற்ற வருமானம் ரூபா 2500 மட்டுமே.
தனக்குப் பிடித்த நடிகர்களாக சிவாஜியையும், சாவித்திரியையும் குறிப்பிடும் செளகார் ஜானகி தான் நடித்த திரைப்படங்களில் தனக்குப் பிடித்த படங்களாக 'செளகார்', 'இரு கோடுகள்', 'பாமா விஜயம்', 'காவியத் தலைவி', 'அன்னை', 'புதிய பறவை', 'ஒளி விளக்கு', 'குமுதம்' மற்றும் 'ரோயுலு மாரயி' ஆகியவற்றைக் குறிப்பிட்டிருக்கின்றார். மக்கள் திலகத்தின் 'ஒளி விளக்கு' திரைப்படம் யாழ் ராஜா திரையரங்கில் வெளிவந்தபோது 169 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம். பின்னர் இரண்டாவது முறையும் எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளிவந்து மீண்டும் நூறு நாட்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்றது. இரண்டாவது தடவை வெளிவந்து 100 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருந்த சமயம் மாணவர்களான நாங்கள் (நானும் நண்பர்கள் சிலரும்) மூன்று நாட்களாக முயன்று டிக்கற் கிடைக்காத நிலையில் நான்காவது நாள் . காலைக் காட்சியின்போது 'பல்கனி' டிக்கற் பெற்றுப் படம் பார்த்துக் கொண்டிருந்த சமயம் மரணப்படுக்கையிலிருக்கும் எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கடவுளை வேண்டி செளகார் ஜானகி 'ஆண்டவனே உன் பாதங்களைக் கண்ணீரால் நீராட்டுவேன்' என்று பாடுவார். அப்பாடலின் இடையில் 'உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை, விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்?' என்று வரிகள் வரும். அச்சமயத்தில் 'பல்கனி'யிலிருந்து பலர் விசும்பி அழத் தொடங்கினார்கள். அழுதவர்கள் அனைவரும் எம்ஜிஆரின் தீவிர பக்தர்களான ஆண் இரசிகர்கள்தான். பொதுவாக சிவாஜியின் திரைப்படங்களைப் பார்த்துப் பெண்கள் மூக்குச்சிந்தி அழுவதைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் எம்ஜிஆரின் படமொன்றிற்கு அதுவும் ஆண் இரசிகர்கள் அழுததை அப்பொழுதுதான் பார்த்தேன். இதன் காரணமாகவே அந்தப் பாடலும், செளகார் ஜானகியும், எம்ஜிஆரும், அழுத இரசிகர்களும் என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமொன்றின் பங்காளிகளாகி விட்டார்கள். அப்பொழுது நாங்கள் நினைப்போம். உண்மையிலேயே எம்ஜிஆர் இறந்தால் என்ன நடக்கும்? அந்த வயதில் எங்களால் எம்ஜிஆர் இறப்பதைப் பற்றியே கற்பனை செய்ய முடியாமலிருந்தது? ஆனால் என்னைக் கவர்ந்த செளகார் ஜானகியின் முக்கியமான திரைப்படங்களாக 'காவியத் தலைவி', 'இரு கோடுகள்', 'பாமா விஜயம்', 'எதிர் நீச்சல்', 'மோட்டார் சுந்தரம் பிள்ளை', 'உயர்ந்த மனிதன்', 'பாவை விளக்கு' , 'பாக்கியலக்சுமி' போன்றவற்றைக் குறிப்பிடுவேன். காவியத் தலைவியில் தாயாகவும் , மகளாகவும் நடித்துப் பலருடைய பாராட்டுகளையும் பெற்றிருக்கின்றார். அதிலும் மகளைத் தன் மகளெனக் கூற முடியாத நிலையில், எட்ட நின்று அவளது வளர்ச்சியை இரசித்து நிற்கும் காட்சிகளையும், தாய்க்காக வாதாடும் மகளின் நீதி மன்றக் காட்சிகளையும் அவ்வளவு இலேசில் மறக்க முடியாது. ஜெமினியும் அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல், நன்கு நடித்திருப்பார். அதுபோல் எதிர்நீச்சல் பட்டு மாமியைத்தான் அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா என்ன?
செளகார் ஜானகியின் சகோதரியான கிருண்ணகுமாரி தெலுங்குத் திரையுலகினைக் கலக்கிய நடிகைகளிலொருவரென்பது குறிப்பிடத்தக்கது. பேத்தியான நடிகை வைஷ்ணவியும் நல்லதொரு தமிழ், மலையாள நடிகை. செளகார் ஜானகிக்கு இரு புதல்வியரும், ஒரு புதல்வனும், நான்கு பேரப்பிள்ளைகள், இரண்டு பூட்டப்ப்பிள்ளைகளுள்ளனர். இவரது இரண்டாவது புதல்வியும், மகனும் அமெரிக்காவிலேயே குடியேறிவிட்டனர்.
செளகார் ஜானகியின் கலையுலகப் பங்களிப்பினைக் கெளரவிக்கும் முகமாக தமிழக அரசின் சிறந்த நடிகையாக (1969 - 1970) தமிழக அரசு அவரைத் தேர்ந்தெடுத்தது. தமிழக அரசின் கலைமாமணி விருது, நாகேஸ்வரராவ் விருது, சிவாஜி விருது, சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபெயர் விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி இவரது கலையுலகச் சேவையினைக் கெளரவிக்கும் பொருட்டு அரிஷோனா பல்கலைக்கழகம் இவருக்குக் கெளரவ 'டாகடர்' பட்டம் கொடுத்துள்ளது.
'
ஓரிளந்தாயாக, வாழ்வைத் துணிச்சலுடன் எதிர்நோக்கிச் சாதனை படைத்தவர் செளகார்ஜானகி. 1950 இலிருந்து 30 வருடங்களுக்குக் குறையாமல் தென்னிந்தியத் திரைப்படத்துறையில் தனக்கென்று ஓரிடத்தை நிலைநிறுத்தியவர் செளகார்ஜானகி. தென்னிந்தியத் திரையுலகில், குறிப்பாகத் தமிழ்த் திரைப்பட உலகில் அவருக்கு நிலையானதோரிடமுண்டு.
- ஊர்க்குருவி -