2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றை சித்தரிக்கும் "பாலை" திரைப்படம் நவம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் வெளியாகின்றது. இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற திரு. வேத் ஷங்கர், இசையமத்துள்ள படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
தேசிய விருது பெற்ற "போஸ்ட் மேன்" குறும்படத்தின் ஒளிப்பதிவாளரான திரு அபிநந்தன் இராமனுஜம் இப்படத்தின் ஒளிப்பதிவாளர். இவர் எல்.ஜி.பிரசாத் திரைப்பள்ளியின் மாணவர். படத்தொகுப்பாளர் திரு. ரிச்சர்ட் சென்னை திரைப்படப் பள்ளியின் முன்னாள் மாணவராவார். இவர் தொகுத்த பல படங்கள் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளன.
தஞ்சை, புதுக்கோட்டை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பழங்குடித் தமிழர்களான இருளர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் பலர் இத்திரைப்படத்தில் முதல் முறையாக திரையில் அவர்களாகவே தோன்றுகின்றனர். படத்தின் கதாநாயகன் சுனில் மற்றும் கதாநாயகி ஷம்மு ஆகியோர் தம் பாத்திரத்தை சிறப்புறச் செய்திருகின்றனர். இவ்விருவரைத் தவிர்த்து, படத்தில் நடிக்கும் அனைவரும் திரையுலகம் சாராத நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திரு. நாகை தி.இரவி படத்தை தயாரித்துள்ளார்.
கடந்த மாதம் முக்கியப் பிரமுகர்களுக்காக திரையிடப்பட்ட படத்தின் விசேட காட்சியைக் கண்ட தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களான திரு. தங்கர் பச்சான், திரு. வெற்றிமாறன் ஆகியோர் படத்தை வெகுவாகப் பாராட்டினர். தமிழறிஞர் மா.பொ.சி.யின் பெயர்த்தி திருமதி. பரமேஸ்வரி, எழுத்தாளர் யுவபாரதி, பத்திரிக்கையாளர் பாரதி தம்பி உள்ளிட்ட திரளான தமிழ் உணர்வாளர்களும், எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு திரைப்படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டினர்.
இயக்குநர் பாலு மகேந்திரா படக்குழுவினரை நேரில் தம் இல்லத்திற்கு அழைத்து அவர்களது முயற்சியை பாராட்டினார். தமது 45 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் இப்படியொரு திரைப்படத்தை இயக்கவில்லையே என்றும், இப்படம் உலக வரலாற்றுத் திரைப்படங்களின் வரிசையில் முக்கியப் படமாக அமையும் என்றும் அவர் படக்குழுவினரிடம் தெரிவித்தார்.
சென்னை சாந்தி திரையங்கு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் நவம்பர் 25 அன்று இத்திரைப்படம் வெளியாகிறது. தமிழ் மக்களின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் இத்திரைப்படம் குறித்து, தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது