“நமது உலகம் கதைகளால் நிறைந்துள்ளது” என்று சொன்னார் எம்.டி வாசுதேவன் நாயர். அந்த கதைகள் எவ்வளவு முக்கியமானவை, சுவாரஸ்யமானவை, கவனிக்கத்தக்கவை? எவை கதையாகின்றன? எம்.டியின் எழுத்து கலையில் இதற்கு விடை உள்ளது. எம்.டியை வாசிக்கையில் கதைக் கலை வாழ்வின் எளிமையை அதன் வசீகரத்தை உணர்த்துவதற்கான முயற்சியோ என்று வியக்கிறோம். குறிப்பாக, அவரது “மூடுபனி” எனும் குறுநாவலை படிக்கையில். வாழ்வு எத்தனை சாதாரணமானது என்பதை அதை மிக நுணுக்கமாக அணுகி சிந்திக்கும் கதைகள் உணர்த்துகின்றன. மிக மிக சாதாரணமான கவனிக்கவே அவசியமற்ற ஒன்றான வாழ்வின் வசீகரத்தன்மையை உணர்த்துவதில் கதையாளர்கள் பரவலாக மாறுபடுகிறார்கள். ஆய்வகத்தில் மரபணுக்களுக்கு நிறமூட்டி மாறுபடுத்தி ஆய்வது போல் இது நிகழ்கிறது.
ஒரு துளி நீரில் பாக்டீரியாக்கள் போல கதையில் மலிந்துள்ள ஏகப்பட்ட தகவல்களை கத்தரித்து ஒடுக்குவதன் மூலம் அசோகமித்திரன் இதை அநாயசமாய் செய்கிறார். அவரது கதைகள் பின்னோக்கி வளர்வன. ஆ.முத்துலிங்கமும், சுஜாதாவும் பகடியையும் விசித்திர குணாதசியங்களை கூர்மையான அவதானிப்புகளையும் கொண்டு நிறமூட்டுகிறார்கள். ஜெயமோகன் உணர்ச்சிகரமான தருணங்களை, கொந்தளிப்பான மனநிலையை, நாடகீய காட்சிகளை நேரடியாகவும் உருவகமாகவும் முன்னிறுத்துகிறார். ஹெமிங்வே எண்ணெய் தாழி ஒன்றில் இருந்து சொட்டும் துளிகளை போல் தன் இருப்பு சார் தத்துவ சிந்தனையை கதாபாத்திரங்கள் மேல் வடிக்கிறார். இத்தனை ரசவாதமும் மிக எளிய கதைகள் மேல் தான் நடக்கின்றன. எம்.டி தன் கணக்குக்கு உருவகங்களை, குறியீடுகளை நம்பி இருக்கிறார். ஆனால் அவர் கத்தரிப்பதோ தருணங்களை மலர வைக்கப்பதோ இல்லை. எம்.டி சன்னமான சொற்றொடர்களை, சொற்களை மீட்டுகிறார். மனுஷ்யபுத்திரன் அல்லது புக்காவஸ்கியினது போன்ற நேரடிக் கவிதைகளின் உத்தியை மிக அற்புதமாக எம்.டி தன் கதைகளில் பயன்படுத்துகிறார். குருடன் ஒருவன் வண்ணங்களின் சொற்களை அழுத்தி சொலவது போன்றது இது. எம்.டியின் எழுத்துக்களில் நிறமே இல்லாமல் ஒரு நிறம் உருவாகிறது.
“மூடுபனி” மனோரமா, மங்களம் போன்ற மலையாள பைங்கிளி பத்திரிகைகளில் படங்களுடன் வரும் சோகமான காதல் கதையொன்றின் அச்சை கொண்டிருக்கிறது. ஒரு முப்பத்தெட்டு வயதான பெண். விமலா. அவளது வட இந்தியாவில் குடியேறிய ஒரு சிதிலமான கேரள குடும்பம். உறவினர்களோடு பகைத்து ஊருக்கு திரும்ப விரும்பாமல் வேரற்று நோய்வாய்ப்பட்டு சிறிது சிறிதாக படுக்கையில் சாகும் அப்பா. கள்ள உறவு கொள்ளும் அம்மா. குடிகார தம்பி. இவர்கள் இடையே மாட்டி முழிக்கும் வளர்-இளம் பருவ தங்கை. இத்தனை பேரிடமும் பொருந்த முடியாமல் விமலா இமய மலை அடிவாரத்தில் நைனிட்டாலில் குமவோன் மலைவாச தலத்தில் உள்ள ஒரு போர்டிங் பள்ளியில் ஆசிரியையாக சென்று சேர்கிறாள். இத்தனை கண்ணீர் சுவையும் போதாதென்று விமலாவுக்கு ஒரு முன்னாள் காதலன் வேறு சுதீர் ஷர்மா. அவளது நினைவுகளில் அடிக்கடி தோன்றி துன்புறுத்துகிறான்; நிராசையை, அவநம்பிக்கையை, தப்பித்தல் மனநிலையை தூண்டுகிறான். 16 வருடங்களுக்கு முன் பிரிந்து விடுகிறார்கள் அல்லது அவன் கைவிட்டு விடுகிறான். நாவலின் பாதியில் அப்பா இறந்து விடுகிறார். நமது காதுகளில் எத்தனையோ நெடுந்தொடர் டைட்டில் பாடல்கள் குழப்படியாக ஓடுகின்றன. ஆனால் எம்.டி ஒரு கையில் இந்த பைங்கிளி கதையினோடு மறுகையில் தீவிர வாசகனை எந்த துணுக்குறலும் இல்லாமல் அழைத்து செல்கிறார். தீவிர வாசகனுக்கு அவர் போடும் முதல் கொக்கி மிக நன்றாகவே மாட்டி விடுவது. அது தலைப்பு. தொடர்ந்து நாவலின் பின்னணியில் மூடி மூடி திறக்கும் மூடுபனியை அவன் கவனிக்கிறான். நாயகி கதைக்களனை மீண்டும் மீண்டும் சுற்றி வருவது கதைக்குள் இருக்கும் மற்றொரு உலகுக்கான குறிப்பு என்று அவனுக்கு புரிய வருகிறது. அடுத்து இருபதாம் நூற்றாண்டு நவீன நாவல் அணிந்துள்ள கறுப்பு கண்ணாடியின் இரு துண்டுகளை கவனிக்கிறான்: வெறுமையும், அபத்தமும். அவற்றின் வழி நாவலை மேலும் பார்க்கிறான்.
மூட்டம். அது தான் நாவலின் பிரச்சனை. வெவ்வேறு கட்டங்களில் வாழ்க்கை மூடிக் கொள்கிறது. மனிதன் அதை தாமதித்து உணரலாம். இல்லாவிட்டால் உணர்ந்த பின்னரும் ஓடி ஒளியலாம். விமலாவை போல் ஒரு மலைத் தொடரின் பனித்திரைக்கு பின் அபயம் தேடலாம். பதினாறு வருடங்களாக பழகின பாதைகளை, ஏரியை, அதன் படகுகளை, மலை உச்சி கோவிலை, மாறும் பருவங்களை, தோன்றி மறையும் சுற்றுலா பயணிகளை அவள் தன் வெறித்த ஒளியிழந்த கண்களால் கவனித்த படியே உள்ளாள். ஒரு நுண்பெருக்கியின் கீழுள்ள ஆய்வுப்பொருளைப் போல் குமவோன் குன்று அவளுக்கு தெரிகிறது. அதன் வழி வாழ்வும் தெரிகிறது. வாழ்வு மொத்தத்தையும் கையடக்கமாய் சுருக்கி எறும்பு போல் ஓட விட்டும் பார்க்கும் மனநிலை அவளுடையது. மனிதர்களின் தொடர் அலைச்சலின், பாய்ச்சலின், மாற்றங்களின், அர்த்தமற்ற மன எழுச்சிகளின் பின்னால் அவளுக்கு எந்த நோக்கமும் தெரிவதில்லை. அவள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறாள். தொடர்ந்து கவனிப்பதன் மூலம் தன் முடிவை உறுதி செய்து கொண்டபடி இருக்கிறாள். பதினாறு வருடங்களாக. விமலாவின் வாழ்வு ஒரு கலைக்கப்பட்ட வாக்கியத்தை போன்று உள்ளது. அவள் மீள மீள செய்வது அதை படித்து பொருள் கொள்ளத் தான். அதை சரியாக வடிவமைக்க அவளுக்கு தெரிவதில்லை. ஆனால் கிங் லியரை போல அவள் கடவுளை சபிப்பதும் இல்லை. அவள் இருபதாம் நூற்றாண்டு மனநெருக்கடியின் விளிம்பில் நின்று வியக்கும் பெண். அவளுக்கு கடவுள் இல்லை. மேலும் சாய குடும்பமும், உறவுகளும், லட்சியங்களும் இல்லை.
நாவலின் ஆரம்பத்தில் ரேஷ்மி என்றொரு மாணவி விடுதி வார்டனான விமலாவிடம் ஊருக்கு போவதாய் பொய் சொல்லி தன் காதலனுடன் ஒரு விடுதியில் இரவு தங்குகிறாள். பொய் என்று நன்றாக தெரிந்து தான் விமலா அனுமதிக்கிறாள். காதல் மீது விமலாவுக்கு எந்த அபிமானமும் இல்லை. ஆனாலும் அனுமதிக்கிறாள். ரேஷ்மி தன் காதலனை மணப்பாள் என்று விமலாவுக்கு நம்பிக்கை இல்லை. வேறொருவனை மணந்த பிறகு அவளுக்கு திரும்பி பார்த்து புன்னகைக்க ஒரு கிளர்ச்சியான அனுபவம். இனிப்பான கசப்பான வாழ்வின் தொகுப்பில் மற்றொரு அர்த்தமற்ற பக்கம். காமம் ஒரு மிருகநிலை அனுபவமாக மட்டுமே நாவலில் வருகிறது. காதலை அது மகத்துவப்படுத்துவதோ கீழ்மைப்படுத்துவதோ இல்லை. அவ்விரவின் போது நடைபழக செல்லும் விமலா ரேஷ்மி புணரும் விடுதியை திரும்ப திரும்ப பார்க்கிறாள்; நினைக்கிறாள். அவளுள் ஒரு மெல்லிய பொறாமை கிளர்கிறது. இது கூட தூய மிருகநிலையிலே நடக்கிறது; அவளுக்கு ரஷ்மி மேல் கோபமோ வெறுப்போ இல்லை. காமத்தை அவள் ஒழுக்க அடிப்படையில் பார்ப்பதில்லை. குடும்பத்தை, உறவை, கடவுளை இழந்த பின் அவள் எந்த அடிப்படை மதிப்பீட்டையும் கொண்டு வாழ்வை அளப்பதில்லை. மேலும் ரேஷ்மியின் புணர்ச்சி முதல் அனுபவமாகவே காட்டப்படுகிறது. பின்னர் வேறொரு அத்யாயத்தில் விமலாவுக்கு தன் முதல் புணர்ச்சி நினைவு வருகிறது. ஜவ்வு கிழிபடுதலின் வலியும் கிளர்ச்சியின் உச்சமும் பிரக்ஞை இழத்தல் மூலம் சுயத்தை கடப்பதும் கலந்த ஒரு அனுபவமாக காமம் அவளுக்குள் குருதியின் லிபியில் எழுதப்பட்டுள்ளது. காமத்தின் போதும் மூடுபனி ஒன்று விலகுகிறது. படுக்கையில் இருந்து எழுந்த பின அவள் பதற்றபட்டு தன் நிர்வாணத்தை மறைத்துக் கொள்கிறாள். காமம் மூடிக் கொள்கிறது.
வெறுமையின் மறுபக்கம் போல் விமலா மனிதர்களிடத்து காண்பதெல்லாம் அபத்தம் மட்டுமே. அபத்தம் பொருத்தமின்மையின் இன்னொரு பெயர். நுட்பமாக கவனிக்கையில் வாழ்வில் இது புலனாகிறது. திருமதி.புஷ்பா சர்கார் என்கிற ஆசிரியை விமலாவுக்கு முன் விடுதி வார்டனாக இருந்தவள். அவள் நடத்தை ஒழுங்கீனம் காரணமாக வேலையில் இருந்து நீக்கப்பட்டவள். அவள் செய்த தவறு தனது அறைக்கு ஒரு இளைஞனை இரவுத் துணைக்காக அழைத்து வந்தது. வேலைக்கு சேரும் விமலாவுக்கு திருமதி புஷ்பாவின் அறை கிடைக்கிறது. தனது அறையை காலி செய்து செல்லும் திருமதி புஷ்பாவை விமலா சந்திக்க நேர்கிறது. அவளது இடத்தை கைப்பற்ற வந்த தன் மீது திருமதி.புஷ்பா கடுமையான துவேசம் கொண்டிருப்பாள் என்று விமலா எதிர்பார்க்கலாம். ஆனால் வெறுப்பு போக திருமதி.புஷ்பாவிடம் தனது ஒழுக்கம் குறித்த குற்றவுணர்வு கூட இல்லை. அவள் விமலாவிடம் சொல்கிறாள் “எனது அறையை எடுத்துக் கொள், இந்த விடுதியிலேயே மிகச் சிறந்தது அது தான். இதற்காக நீ பின்னர் எப்போதுமே வருந்த மாட்டாய்” அந்த அறையில் இருந்து பார்த்தால் மட்டுமே சூரிய வெளிச்சத்தில் பனிமலைகள் ஒளிர்வது தெளிவாக தெரியும். திருமதி.புஷ்பா கள்ள உறவு கொள்கிறாள், மூன்று முறை திருமணம் செய்கிறாள், தொடர்ந்து ஒழுக்க சிலுவையில் அறையப் படுகிறாள். ஆனால் இவை யாவுமே அவளுக்கு ஒரு அர்த்தத்தில் வெறும் வேடிக்கை தாம். அவள் வழிமொழிந்த அந்த ஜன்னல் தான் விமலாவுக்கு பல வருடங்களாய் இயற்கையின் தொடர்மாற்றங்களையும் மாறாமையையும் ஒரு சேர காட்டி வருகிறது. வசந்தமும், இலையுதிர் பருவமும், பனிக்காலமும், கோடையும் மாறி மாறி செல்கிறது. ஆனால் பனிக்காலமும் வசந்தமும் இடம் மாறும் இடைக் கோட்டில் தான் திருமதி.புஷ்கர் நிற்கிறாள். தனது இருப்பின் பொருத்தமின்மை அவளுக்கு புரிந்திருக்க கூடும். திட்டவட்டமான விதிமுறைகளால் அர்த்தப்படுத்தல்களால் ஆன வாழ்வின் மீதுள்ள அவளது எதிர்வினை அசட்டை. தொடர்ந்து காதலர்களை மாற்றி சலித்த பின் அவள் மதம் மாறுகிறாள். அதையும் ஒரு அசட்டையுடனே திருமதி.புஷ்கர் செய்திருக்க கூடும்.
அந்த பகுதியில் உள்ள மலை உச்சயில் ஒரு கோவில் உள்ளது. வசந்தத்தின் போது அங்கு வரும் சுற்றுலாவாசிகளில் காதலர்கள் அம்மலைக்கு செல்லும் வழியில் கைகோர்த்து நடப்பார்கள். கட்டிப்பிடித்து உருளுவார்கள். அங்கு ஒரு கூர்மையான பாறை உச்சி உள்ளது. அதில் ஏறி நின்று காற்றில் அலைமோதியபடி தொலைவில் ஆழத்தில் தெரியும் குமவோனின் சிறுத்த காட்சியை பார்க்கலாம். அந்த பாதைக்கு “lovers track” என்று பெயர் காதலர்களால் அந்த மலைக் கோவிலுக்கு அமோக வசூல். ஆனால் ஒருநாள் ஒரு பெண் அந்த பாதையின் பெயரையும் கோவிலின் நிலைமையையும் தலைகீழாக மாற்றி விடுகிறாள். காதல் ஏமாற்றத்தால் அவள் கூர்மைமான அப்பாறை மீது ஏறி குதித்து விடுகிறாள். அப்பாதை அன்றில் இருந்து “devil’s track” என்று அழைக்கப்படுகிறது. பயணிகள் வருகை கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிறது. கோவில் பாழடைந்து போகிறது. சாமி அநாதையாகிறார். அக்கோவிலின் பூசாரி தன் வாழ்நாள் முழுக்க இனி அந்த தற்கொலை செய்த பெண்ணை சபித்துக் கொண்டிருக்கக் கூடும் என்று விமலா நினைத்துக் கொள்கிறாள். நாவலின் மற்றொரு முக்கிய பாத்திரம் ஒரு சர்தார்ஜி. அவர் விமலாவின் அண்டையில் உள்ள ஒரு விடுதியில் தங்க வருகிறார். வயதான அம்மனிதர் புற்றுநோய் தாக்குதலின் இறுதி கட்டத்தில் இருக்கிறார். ஒருநாள் அவர் விமலாவின் தனித்த மலை ஏற்ற சாகசத்தில் எதிர்பாராமல் கலந்து கொள்கிறார். அவர் அந்த கூர்மையான பாறைக்கு இட்டு செல்லும் பாதையை சுட்டி இங்கு காதலுக்கும் மரணத்துக்கும் மனிதர்கள் ஒருசேர வருவதில் ஒரு நியாயம் உள்ளது என்கிறார். “வாழ்க்கை மலரக் கூடிய ஆதே இடத்தில் தான் அது அழிக்கப்படவும் வேண்டும்”. மனித நடவடிக்கையின் பொருத்தமின்மையை இவ்வசனம் சுட்டிக் காட்டுவதை கவனியுங்கள்.
மரணமும், இழப்பும், வேரின்மையும் உண்மைத் தேடலை, கண்டறிதலை தூண்டுகின்றன. இதற்கான மனித எதிர்வினை ஆளாளுக்கு மாறுபடும். விமலா தன் ஆன்மாவின் புலன்களை இறுக்க மூடிக் கொள்கிறாள். இயற்கை வெறுமனே தன்னை கடந்து செல்வதை பார்த்தபடி இருக்கிறாள். ஒரு உறைந்த புதைபடிமம் போன்று உள்ளது அவள் மனது. சர்தார்ஜி நேர்மாறாக வாழ்வை எதிர்கொண்டு அனுபவிக்கும் அவசரத்தில் இருக்கிறார். புத்து என்றொரு படகோட்டி வருகிறான். ஒரு வெள்ளைக்கார பயணியின் ஓரிரவு இச்சைக்கு உடன்படும் இந்திய ஏழைப் பெண்ணுக்கு பிறந்தவன். அவன் தினமும் தன் அப்பாவை எதிர்பார்த்து அவரது பழைய புகைப்படம் ஒன்றுடன் காத்திருக்கிறான். வெள்ளைக்காரர்கள் இந்தியாவை விட்டு சென்று விட்டார்கள் என்றும் காத்திருந்து ஏமாற வேண்டாம் என்றும் அவனுக்கு சொல்லப்படுகிறது. ஆனால் அவன் அந்த காத்திருப்பின் மூலம் மட்டுமே தன் வாழ்வை உறுதிப்படுத்துகிறான். அந்த எதிர்பார்ப்பு அவனது பிடிமானம். தனது அசட்டுத்தனம் அவனுக்கு புரியாமல் இல்லை. ஆனாலும் “இந்த முறை எப்படியும் என் அப்பாவை பார்த்து விடுவேன்” என்று அவன் திரும்பத் திரும்ப சொல்கிறான். வாழ்வின் அபத்தத்தை அறிவீனம் கொண்டு எதிர்கொள்வதில் ஒரு குழந்தைமை உள்ளதாக எம்.டி அவதானிக்கிறார். அவனது பாத்திரம் தான் நாவலின் பரிசுத்தமானது. அவன் மட்டுமே தொடர்ந்து மனம் திறந்து சிரிக்கக் கூடியவனாக வருகிறான். புத்து என்றால் பேதை என்று பொருள். (இப்பொருள் எந்த ருஷ்ய நாவலை நினைவுபடுத்துகிறது?)
மரணம் பற்றின சித்தரிப்புகள் நாவலின் மிகத் தீவிரமான இடங்கள். விமலாவின் அப்பா இறக்கிறார். அந்த செய்தியை கேட்டதும் அவள் தான் உடைந்து அழப் போவதாய், தடுமாறி மயங்கப் போவதாய் எதிர்பார்க்கிறாள். ஆனால் காம்யூவின் மெர்சால்டை போல அவள் மிக அமைதியாகவே இருக்கிறாள். ஒரு சொட்டு கண்ணீர் வர மாட்டேன் என்கிறது. மரண வீட்டில் நிம்மதியாக தூங்குகிறாள். அங்கு தன் அம்மா, தம்பி மற்றும் உறவினரின் பாசாங்கு அவளை அருவருப்படைய வைக்கிறது. அன்பை விட சுயநலத்தையே மிகையாக காண்கிறாள். அதற்கு மேல் தாங்க முடியாமல் அடுத்த நாள் காலையில் கிளம்பி விடுகிறாள்.
சர்தார்ஜி மரணத்துடன் ஒரு அமைதி உடன்படிக்கை செய்து கொள்கிறார். தினமும் மாலையில் உருக்கமான ஒரு காதல் பாடலை பாடியபடி அற்புதமாக இக்தாரா எனும் ஒரு இசைக்கருவியை மீட்டுகிறார். தன்னுடன் ஒரு நண்பன் தங்கி இருப்பதாய் அடிக்கடி விமலாவிடம் கூறுகிறார். ஒரு நாள் அவளை நடைக்கு அழைத்து செல்வதாய் சொல்லி பின்னர் தன் நண்பன் அனுமதிக்கவில்லை என்று வர மறுக்கிறார். சர்தார்ஜி விடை பெற்று அந்த ஊரை விட்ட சென்ற பின் தான் விமலாவுக்கு தெரிய வருகிறது அவர் தனிமையில் தான் தங்கி இருந்தார் என்று. ஆனாலும் அவர் தனியாக இருக்கவில்லை. நண்பருடன் தான் இருந்தார்: ’மரணம்’.
மலை மீது விமலாவை சந்தித்து அவர் மேற்கொள்ளும் உரையாடல் கவித்துவமானது. விமலா சதா மிக அமைதியாக இருக்கிறாள். சர்தார்ஜி சொல்கிறார் “இளமையில் நானும் உங்களைப் போலத் தான் இருந்தேன். பெரும்பாலும் தனக்குத் தானே தான் பேசிக் கொண்டு இருப்பேன். இப்போது என்னால் எதனுடனும் பேச முடியும். பாறைகள், மரங்கள், விளக்கு கம்பங்கள். இது ஒரு வரம் இல்லையா, பேச முடிவது, டீச்சர்ஜி”. பின்னர் விமலாவின் அப்பாவின் மரணம் குறித்து உரையாடும் போது சொல்கிறார் “நீங்கள் அழுவது பார்த்தால் அருவருப்பாக இருந்தது. ஆனால் நீங்கள் அதை மறைத்து புன்னகைப்பது இன்னும் சகிக்கவில்லை”. மரணத்தை வேறு என்னதான் செய்வதாம்? இதற்கு காட்சிபூர்வ விடை போல் ஒரு காட்சியில் சர்தார்ஜி மலை மீதுள்ள கூர்மையான தற்கொலை பாறையின் மீது நின்று உற்சாகமாக புன்னகைத்தபடி கையை தூக்கி காட்டி சொல்கிறார் “பாருங்கள் இங்கிருந்து மரணத்தை பார்க்க முடியும்”. அப்பாறைக்கு அப்பால் உள்ள பனித்திரைக்கு அப்பால் பெரும் பள்ளம் தான். இந்த வெறுமை நிஜம் என்றால் அவரால் அதை உள்ளார்ந்த திருப்தியுடன் ஏற்றுக் கொள்ள முடிகிறது; கிங்லியரை நினைவுபடுத்தும் படியாய் சர்தார்ஜி ஒரு மணிமொழி உதிர்க்கிறார் “மரணம் மேடை பிரக்ஞை இல்லாத ஒரு கோமாளி”. அவரால் அமைதியாக இந்த கோமாளியுடன் கைகுலுக்க முடிகிறது. ஆனால் நாவலின் முடிவில் விமலா
வேறொரு முடிவுக்கு வந்து சேருகிறாள்.
சுதீர் ஏன் விமலாவை கைவிடுகிறான். இதற்கு நேரடியான காரணங்கள் சொல்லப்படவில்லை. சுதீருக்கு மிக விருப்பமான சில கவிதை வரிகள் உள்ளன. அடிக்கடி அவற்றை அவன் மேற்கோள் காட்டுவான்.
“எனது வாழ்வினாலும், எனக்கு பின்வரப் போகிறவர்களின் வாழ்வினாலும் நான் சோர்ந்து போகிறேன் என் மரணத்தையும், எனக்கு பின்னார் வருபவர்களின் மரணங்களையும் நான் இறந்து கொண்டிருக்கிறேன்”
காதலை அதன் விதிமுறைகளுடனும் சம்பிரதாயங்களுடனும் வாழ முயலும் போதும் இந்த சோர்வு நமக்கு ஏற்படும். காதலில் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. மற்ற எல்லா இறுகிப் போன உறவுமுறைகளைப் போலவும் காதல் மியூசியத்தில் பாதுகாக்க வேண்டியிய ஒன்றாகிறது. காதலுக்கு துரோகம் அவசியமான ஒன்றா? குன்றின் மேலேறி செய்யும் காதலை அங்கிருந்து குதித்தே அழித்துக் கொள்ள வேண்டுமா?
மேற்சொன்ன கவிதை வரிகளின் சோர்வு சுதீரின் துரோகத்தின் காரணங்களில் ஒன்றா?
சர்தார்ஜி விமலாவிடம் “ஒரு ஜோக் சொல்லவா? உங்களை எனக்கு பிடித்திருக்கிறது” என்கிறார். விமலா பதற்றமாகிறாள்.
அவர் சொல்கிறார் “கவலைப்படாதீர்கள் உங்களை வழிமறிக்கவோ காதல் கடிதங்கள் எழுதவோ எல்லாம் செய்ய மாட்டேன், அப்படித் தான், எந்த உறவும் கற்பனை செய்யாமல் தான் உங்களை நேசிக்கிறேன்”
விமலா சொல்கிறாள் “உங்களுக்கு என்னை பற்றி எதுவுமே தெரியாதே?”
“அப்படித் தான் இருக்க வேண்டும். நான் வேண்டுமானால் பிறரிடம் விசாரித்து உங்கள் மொத்த பின்னணியையும் தெரிந்து கொள்ளலாம்.
நூற்றுக்கணக்கான தகவல்கள். எல்லாவற்றையும் சேர்க்கும் போது உங்கள் சித்திரத்தில் ஓராயிரம் இலைகளும் வேர்களும் இருக்கும். நீங்கள் அதில் ஒரு புள்ளியாக மட்டும் இருப்பீர்கள்”. திட்டவட்ட நிலைத்த உறவின் பிரச்சனை இதுதான். எதிர்தரப்பை நமது அறிவின் தூசு மண்டலத்தில் மூழ்கடித்து விடுகிறோம். விழுமியங்களின் சட்டகத்தில் மாட்டி கண்காணிப்பின் கடும்வெயிலில் காய வைக்கிறோம். சுவாசம் கிட்டாமல் காதல் மெல்ல மெல்ல
காய்ந்து சாகிறது. (சுதந்திரமான காதல் சர்தார்ஜி சொன்னது படி தான் இருக்க வேண்டும் என்று ஒரு இருத்தலியலாளர் சொன்னார். யார் அவர்?)
இந்த தத்துவ இரைச்சலை எல்லாம் மீறி அன்பின் பரிசுத்தத்தை விமலா இந்த இடத்தில் முதன்முறை தொடுகிறாள். இந்த தொடுகை முக்கியம். விமலா மெல்ல இளகுகிறாள். சர்தார்ஜி ஊரை விட்டு கிளம்புகிறார். விமலாவை அவரது பிரிவு மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது. நான்கே மாதங்களில் சர்தார்ஜி இறந்து விடுவார். அன்பை பல சமயங்களில் முட்டாள் தனமாக வெளிப்படுத்தி அவ்வாறே முடித்து கொள்ள வேண்டி இருக்கிறது. சர்தார்ஜி அதுவரை தனது துணைவன் என்று குறிப்பிட்டது மரணத்தை தான் என்று அவளுக்கு அவர் சென்ற பின்னர் தான் தெரிய வருகிறது. அறைக் கதவை சாத்திக் கொள்கிறாள். அவளும் தனக்குள் மூடிக் கொள்கிறாள். ஆனால் இம்முறை மூடுபனிக்கு அப்பால் வெறுமை அல்ல
என்று அவளுக்கு தெரியும். மூடுதல் என்பது ஒரு அணைப்பாகவே இருக்கிறது.
நாவலின் கடைசி காட்சியில் விமலா விமலமான, முட்டாள்தனமான தன் நண்பன் புத்துவுடன் படகில் செல்கிறாள். சீஸன் முடிந்து விட்டது. இனிமேல் சுற்றுலா பயணிகளும், அவர்களுடன் அவனது வெள்ளைக்கார அப்பாவும், வரப் போவதில்லை. அவன் சொல்கிறான் “சீஸன் முடிந்து விட்டது, யாரும் வரவில்லை”. அவள் திரும்ப சொல்கிறாள் “”யாரும் வரவில்லை”. “மேம்சாப் நாம் அடுத்த வருடத்துக்காக காத்திருப்போம்” என்கிறான் அவன். அவள் முதன்முறையாக தலையாட்டி ஆமோதிக்கிறாள். நாவல் விமலா முணுமுணுத்து தனக்குள் சொல்லும் இவ்வரியுடன் முடிகிறது: “அவர் கண்டிப்பாக வருவார்”. இங்கு “அவர்” சுதிர் எனும் காதலனில் இருந்து புத்துவின் அப்பாவில் இருந்து வேறொருவராக பொருள் மாறுகிறது.
கடைசி வரியில் இருந்து நாவல் மீண்டும் தொடங்குகிறது.
(பின்குறிப்பு: இக்குறுநாவல் கீதா கிருஷ்ணன் குட்டியால் அருமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு The Writings of M.T. Vasudevan Nair என்ற மொத்த தொகுப்பில் இடம் பெற்று உள்ளது. பிரசுரம் Orient Blackswan.)
http://thiruttusavi.blogspot.com/
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நன்றி: வலைப்பதிவு: 'மின்னற் பொழுதே தூரம்' .