அத்தியாயம் பத்து
உள்ளத்துள்ளே நிறைவான மகிழ்ச்சிமழை பொழிந்ததனால், இரவு முழுவதும் வெளியே பொழிந்து ஓய்ந்த மழைகூட பெரிதாகத் தெரியவில்லை.
வீட்டின் முன்புறத்து மதிலோடு நின்ற முருங்கை மரமானது, முழுமனத்தோடு வாரிவழங்கி விதைத்த இலைகளும், பூக்களும் முற்றத்தில் “மார்டன் ஆர்ட்” கோலமாகக் கண்களைப் பறித்தன.
பக்கத்துவீட்டு மாடித் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த “மரிக்கொழுந்து”ச் செடிகளிலிருந்து வந்த வாசனை, சுவாசத்தைத் திக்குமுக்காடவைத்துத் திணறடித்தது.
அதிகாலைப் பூஜை “திருவனந்த” லுக்கான அழைப்பு மணி ஓசையிலே, மதுரை மாநகரையே உலுக்கியெடுத்தாங்க மீனாட்சி அம்மா.
அதைத் தொடர்ந்து எங்கள் வீட்டிலும், அதாவது எனது புகுந்தவீட்டிலும் அனைவரும் பரபரப்பானோம்.
ஆமாம் : சொல்ல மறந்துவிட்டேன். இப்போது மதுரையில், என்னவரின் வீட்டிலிருக்கின்றேன்.
திருநெல்வேலியிலிருந்து…… அதுதான் நானிருந்த ஊரான வீரவநல்லூரிலிருந்து இங்கு வந்துள்ளோம்.
நேற்று திருமணம் முடிந்து, மதிய உணவு உண்ட கையோடு என்னையும் மதுரைக்குப் புறப்படும்படி அத்தை சொல்லிட்டாங்க.
எல்லாமே சினிமாவில் நடப்பதுபோல, காட்சிகள் அனைத்துமே அடுத்தடுத்து மாறிக்கொண்டிருந்தன.
பிரிய மனமின்றிப் புறப்பட்டேன்.
நான் கிளம்பும்போது, அம்மாவின் கண்ணிலிருந்து வெளிப்பட்ட கண்ணீரானது, பிரிவின் வலியா, அல்லது ஆனந்தக் கண்ணீரா என்பதை என்னால் அடையாளப்படுத்த முடியவில்லை.
என்னுடைய நண்பிகள் பலரது திருமண வைபவத்துக்குப் போயிருந்தபோது, வைபவத்தின் இறுதி அத்தியாயமாக பெண் வீட்டார்கள் , தமது வீட்டுக்குக் கிளம்புகின்ற நேரத்தில், அந்த மணப்பெண்ணும் – பெண்ணின் பெற்றோர் சகோதர உறவினர்களும் கட்டியணைத்துக் கதறியழுகின்ற காட்சிகளைக் கண்டு நானும் எனக்குள் குமுறியிருக்கின்றேன்.
இப்போது நேரடி அனுபவத்தில் சந்திக்கும்போது, வலியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிப்போனது உண்மை.
“குட்டியம்மா….. நீங்க ஒண்ணும் கவலைப்படாம போய்ட்டு வாங்க….. இங்க எல்லாத்தையும் நானு கவனமா மெயிண்டன்ஸ் பண்ணிக்கிறேன்…..”
சமையல்காரப் பையன் ஆறுதல் மொழி தந்து, அனைவரையும் சிரிக்கவைத்தபோது, அவனது கண்ணுக்குள் தெரிந்த கலங்கலையும், அதை வெளிக்காட்டாமல் வேடிக்கை செய்து நடிப்பதையும் என்னால் துல்லியமாகக் கணிக்க முடிந்தது.
அடுத்து, மதுரைக்கு…… எனது புகுந்த வீட்டுக்கு மணப்பெண்ணாக வந்து சேரும்போது, நேற்று சாயந்தரம் ஐந்துமணி ஆகிவிட்டது. என்னவருக்குச் சகோதரி முறையான ஒரு அம்மா வாசலில் எங்களுக்கு ஆரத்தி எடுத்தாங்க. இன்று காலையில் அனைவரும் மதுரை மீனாட்சியைத் தரிசிக்கச் செல்லவேண்டும் என்று அத்தை ஏற்கனவே தீர்மானித்திருந்தாக.
குளியலறை வசதிகள் அனைத்தும் வீட்டுக்குள்ளேயே இருந்தும், வீட்டு முற்றத்தின் எல்லை மதிலோடு உட்புறமாகப் போடப்பட்டிருந்த தண்ணீர்க் குழாயில் முகத்தைக் கழுவிவிட்டு, பின்பு வீட்டுக் குளியலறையில் குளித்துக்கொள்ளும் எண்ணத்தோடு, பல் துலக்கியபடி நின்றேன்.
மதிலுக்கு வெளிப்புறம் பிரதான தெரு.தெருவின் மறுபுறத்தில் சுமார் நூறு வயதை முட்டும் ஆலமரம். அதன் அருகே பேரூந்துகளுக்கான பயணிகள் தரிப்பிடமும் உள்ளன. அங்கே பேரூந்துக்காக காத்திருப்போர் சாதாரணமாகப் பேசிக்கொள்வதெல்லாம் நான் தற்போது நிற்கின்ற இடத்திற்குத் தெளிவாகக் கேட்கும்.
யாரோ ஒருவர் கேட்கின்றார்.
“ஏண்டா மாப்பிளை…. நம்ம பேங்கு மேனேச்சருக்கு நேத்திக்கு கண்ணாளம் முடிஞ்சிரிச்சாமே…..”
மற்றவர் சொல்கின்றார்.
“ ஆமாண்டா மாப்பிளை….. திருநெல்வேலிப் பக்கமிருந்தோ என்னவோ, யாரோ ஒரு நொண்டிப் பொம்பிளைய கட்டிக்கிட்டு வந்திருக்காளாம்……”
பலமான கடப்பாரையால் இதயத்தில் குத்தியது போலிருந்தது. மதிலோடு முதுகை வைத்துச் சாய்ந்துகொண்டேன்.
மறுகணம் என்னைச் சுதாகரித்துக்கொண்டு யோசித்ததில், அவங்க பேசினதில என்ன தப்பு உள்ளது என எனக்குள் ஒரு குரல். கூடப் பிறந்தவளே “மொடத்தி” என்னும்போது, மற்றவர்களின் குரலில் தவறு காண்பதுதான் தவறானது என்பது புரிந்தது.
அவர்கள் தொடர்ந்து பேசினார்கள்.
“நொண்டியாயிருந்தாலும் பரவாயில்ல மாப்புள….. இந்தக் காலத்தில நல்ல கொணமான பொண்ணாயிருந்தா போதும்….. ஏற்கனவே மேனேச்சரோட மூத்தவுடையாவுக்கு பொறந்த பொட்டப்புள்ள ஒண்ணு இருக்கில்லியா….. அதுக்கு ஒரு ஆதரவாயிருந்தாப் போதாதா…..”
“ஆதரவாயிருந்தா நல்லதுதான்….. ஆனா, ஒலகத்தில என்னதான் நடக்கிண்ணு பாத்துக்கிட்டுத்தான் இருக்கோமே….. கலியாணமாகி வர்ரப்ப பூனைமாதிரி ரொம்பச் சாதுவா வருவாக….. போகப்போக புத்திய காட்டுவாக….. அதுமட்டுமில்ல….. இந்தப் பொண்ணுக்கிண்ணு ஒரு கொழந்த பொறந்திரிச்சிண்ணு வையு மாப்புள….. அப்புறமா மூத்தவுடையா பொண்ணு கதை அம்புட்டுத்தான்……”
இதற்கும் மேல் நின்று கேட்பதற்கு நேரமும் இல்லை. நெஞ்சமும் இல்லை.
எந்த நிமிடம் அவள் என்னை “அம்மா” என்று அழைத்தாளோ அந்தக் கணமே ஒரு தாய்மையின் முழுமையை அடைந்துவிட்ட உணர்வோடு அவளை என் மகளாகப் பூரணித்து விட்டேன்.
அவளுக்கா நான் துரோகம் பண்ணிவிடுவேன்.
தாயைப் பிரிந்த நாளிலிருந்து, நேற்று என்னோடு வந்து ஒட்டிக்கொண்டு மகிழ்ந்த கால இடைவெளிக்குள், அந்தப் பெண்குழந்தை தனது தனிமைத் துயரையும், ஏக்கப் பெருமூச்சுக்களையும் எங்கே கொட்டுவதெனத் தவித்துக்கொண்டிருந்த வேதனைகள் அனைத்துக்கும் நல்லதொரு மருந்தாக நான் இருப்பேன் என என்னை முழுமையாக நம்பிக்கொண்டிருக்கும் என்னவருக்கும், அவரது பெற்றோரான என் அத்தை, மாமா உறவுகளுக்கும் நான் ஊறு விளைவிப்பேனா?
நிச்சயார்த்தத் தட்டு மாற்றும்போது, உரிமை சொல்லித் தட்டு மாற்ற ஒரு ஆண்துணை இல்லையே என்று நொந்தபோது, “பொண்ணுக்கு அண்ணன் நான் இருக்கேன்” என்று வலிய முன்வந்த என் அண்ணன், அண்ணி தம்பதிகள்………..
“ஏண்டா இவளுக்காக உறவுசொல்லித் தலைகொடுத்தோம்”
என்றே நொந்துவிடும்படி, என்னையே புரட்டிப் போடும் குறுக்குப் புத்திக் குணாதிசயத்தை, என் வயிற்றிலிருந்தும் பிறக்கலாமெனப் பிறரால் எதிர்பார்க்கப்படும் குழந்தை தந்துவிடுமா?
அப்படியொரு குழந்தையை ஆண்டவன் தரவேண்டுமா?
உள்ளூரக் கொதித்துக்கொண்டிருந்தேன்.
மகிழ்ச்சியைச் சுமந்தபடி ஆரம்பித்த வாழ்க்கைக்காக தெய்வத்துக்கு நன்றிசொல்லத் தயாராகிக்கொண்டிருந்த எனக்கு , இப்போது மலையைச் சுமந்தபடி , வேதனையைச் சொல்லியழும் சூழ்நிலை ஆனதுகண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
என் பிறந்தவீட்டில் இருந்திருந்தால், அம்மாவின் மடியில் முகம்புதைத்துக் கதறிக் கண்ணீர்சிந்தி ஆறுதல் பெற்றிருப்பேன். ஆனால், இங்கோ ஆலயத்தில் தொழும்போதும், அதிலே என் வேதனையைச் சொல்லும்போதும் அடுத்தவருக்குத் தெரியும்படி, கதறிவிடக் கூடாது என்பதிலே கவனமாக இருந்தேன்.
கண்ணீர் மட்டும் கண்களில் வெடித்தது. நெஞ்சமோ விம்மிவிடாமல் பெருமூசைத் தொடுத்தது.
புதுமணப் பெண்ணாகத் தரிசனத்துக்கு வந்திருக்கும் நான், என் உள்ளத்து வெளிப்பாட்டின் வேதனையைக் கொட்டிவிட்டால், வீணான சந்தேகத்தை அடுத்தவர் நெஞ்சில் விதைப்பதோடு, என்னவரின்மீது வீண் பழிகள் ஏற்படவும் காரணமாகிவிடுவேனே என்னும் பய உணர்வு உள்ளூர உதைக்க, ஆண்டவன் முன்னே மனம்விட்டு அழுவதற்கும்கூட சுதந்திரமில்லாமல் தவிக்கும் பரிதாபத்துக்குரிய ஜீவன் ஆனேன்.
மூலஸ்தானத்தில் மீனாட்சி அம்மனைத் தரிசிக்கும்போது, அவங்க தந்த வாழ்க்கைக்காக நன்றி சொல்வதை விடுத்து, இந்த வாழ்க்கையின் விளைவால், வயிற்றிலே கருக்கொள்ளாதிருந்தால் போதும் என வருந்தி வணங்கினேன்.
நெஞ்சோடு அணைத்துவைத்துக் கூப்பி வணங்கும் கைகளை, அப்படியே மேலே தூக்கி, முகத்தில் ஒற்றிக்கொள்வதுபோல அழுத்திவைத்துக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டேன்.
மூலஸ்தான தரிசனத்தை முடித்துக்கொண்டபோது, என்னுடன் வந்தவர்கள் உள் வீதியையும், அடுத்து வெளி வீதியையும் சுற்றுவதற்குத் தயாரானார்கள்.
அத்தை என்னருகே வந்தாங்க.
“அவங்க எல்லாரும் போயி ரெண்டு வீதியும் சுத்தீட்டு வரட்டும்….. நான் ஒங்கூட துணைக்கு உக்காந்துக்கிறேம்மா….. வா ஒரு ஓரமா போயி உக்காருவோம்…..”
அத்தை காட்டிய இடத்தில் உட்கார்ந்தேன்.
“அத்தை…… நீங்களும் அவுங்ககூட போயி நல்லா சுத்திக் கும்பிட்டுட்டு வாங்க….. ஒண்ணும் பிரச்சினை இல்லை….. எம்புட்டு நேரமானாலும் சரி….. நான் உக்காந்து ரெஸ்டு எடுத்துக்கிட்டிருக்கேன்…. நீங்க போங்கத்தை…..”
“அது எப்பிடீம்மா….. உன்னய ஒத்தையில போட்டிட்டு, நான்பாட்டில போகமுடியுமா…..”
அத்தை சற்றுத் தயங்கியபோது, எனது மகள் பேசினாள்.
“பாட்டி….. அம்மாகூட நான் இருந்துக்கிறேன்….. நீங்களும் அவங்ககூட போயி நல்லா சுத்திக்கும்பிட்டுட்டு வாங்க…..”
பேத்தியின் சொல்லுக்கு பாட்டியிடமிருந்த மதிப்பை அப்போதுதான் கண்டேன்.
அத்தை அவ்விடத்தை விட்டு நகர்ந்ததும், என்னருகே உட்கார்ந்த மகள் சற்றுத் தயங்கிபடி நோக்கினாள்.
அவளது பார்வையில், எதையோ கேட்க வருவது புரிந்தது.
“சொல்லும்மா….. குட்டிக்கு என்ன வேணும்……”
ஆதரவாகக் கேட்டேன் நான்.
“அம்மா….. சுத்திக் கும்பிடப் போனவங்க வர்றத்துக்கு கொஞ்சம் நேரமாகும்…. அதுவரைக்கும் உங்க மடியில தலைவெச்சுப் படுத்துக் கெடக்கவா….”
அவளை மெதுவாக அழைத்து, என் மடியினில் உட்கார வைத்து நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டேன்.
தாய்மடியின் சுகத்தைத் தாராளமாகப் பலதடவை அனுபவித்த எனக்கு, விபரமே தெரியாப் பருவத்தில் தாயை இழந்து தவிக்கும் இந்தப் பிள்ளையின் ஏக்கத்தைப் புரிந்துகொள்ளவா முடியாமலிருக்கும்?
தாய்மடி சுகத்தைத் தாராளமாக அனுபவித்ததில் எத்துணை பாக்கியசாலி நான், என்று அடிக்கடி எனக்குள் தோன்றி மறையும் இறுமாப்பானது,
தாய்மடி சுகமே கிடைக்காத ஏக்கத்தில் தவிக்கும் என்மகளை நோக்கும்போது இருக்குமிடம் தெரியாமல் கரைந்துபோனது.
இந்தப் பிள்ளைக்கு துரோகம் புரியவா எனக்கொரு பிள்ளை வேண்டும்?
வீரவநல்லூரில், அம்மாவுடன் கோவிலுக்குச் செல்லும்போதெல்லாம் , சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு, வெளி மண்டபத்தில் நல்ல காற்றோட்டத்தை அனுபவித்தபடி படுத்துக் கிடக்கின்ற சுகத்தை இத்தனை காலமும் வெறும் ஏக்கத்திலேயே இந்தக்குழந்தை அனுபவித்திருக்கின்றாள் என்பதைக் காணும்போதும், அந்த ஏக்கத்தைத் தீர்க்கும் வடிகாலாக அவள் என்னை எத்துணை அன்புள்ளம் கொண்டவளாக நம்புகின்றாள் என்பதையும் நினைக்கும்போதும்……..
இவளுக்குமேல் இன்னுமொரு குழந்தையா…..? இந்தப் பாசத்துக்கு மீறிய இன்னுமொரு பாசமா…….
வேண்டாம்……! வேண்டவே வேண்டாம்…!!
கடவுள் எனக்கென்று தந்த குழந்தை, இவளது பாசமும்…… கண்ணிறைந்தவராய் வாய்த்த என்னவரின் அன்பும்…… கரிசனையோடு உரிமை முறைசொல்லித் , தாங்கிக்கொள்ளும் உறவுகளும்……
கடைசிவரை இவைகள் மட்டுமிருந்தாலே போதும் !
“ஏன் குட்டி….. எல்லாருமே கோயில் சுத்திக் கும்பிட்டுச் சந்தோசமாய் வேடிக்கை பாத்து வர்ரப்போ, குட்டி மட்டும் ஏன் அவங்ககூடப் போகாம இப்பிடிப் படுத்துக்கிடக்க ஆசைப்படுறீங்க…..”
அவளது மனத்துள்ளிருந்து என்ன வெளிப்படுகிறது என்பதை அவளது வாய்வழியே தெரிந்துகொள்வதில் என் கவனம் சென்றது.
ஆனால், அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. என்மடியில் தலைவைத்து மல்லாந்து படுத்திருந்த அவளது கண்கள் இரண்டும், என் முகத்தை நோக்கி, நிலைகுத்தி நின்றன.
அதிலே பனித்து ஊற்றெடுத்த இரு துளிகள், காதை நோக்கி வழிந்தன.
துடித்துப்போனேன் நான். உள்ளத்துக்குள்ளே ஒரு பலமான உதை விழுந்தது.
“முட்டாள்….. எருமைமாடாய் வளந்திருந்தும், ஒரு பச்சைப் புள்ளைகிட்ட என்ன பேசணும்னு தெரியல்லியாடி உனக்கு……”
என் கைகளால் அவளின் கண்ணீரைத் துடைத்தபோது, என் கண்களில் உடைப்பெடுத்த வெள்ளத்தை அவளின் சின்னக்கரங்கள் துடைக்க, உட்கார்ந்திருந்த நிலையிலேயே சற்றுக் குனிந்து, அவள் முகத்தை என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன்.
“ஏன் குட்டி….. எதுக்கம்மா அழுறே….. அம்மா ஏதாச்சும் தப்பா சொல்லிப்புட்டேனா….”
இப்போது அவளின் முகத்திலே தெரிந்த மலர்ச்சி, என்மனத்தையும் மலரவைத்தது.
“இல்லைம்மா….. நீங்க ஒண்ணும் சொல்லல்லை….. நான் ரொம்ப ரொம்ப ஹேப்பியாத்தான் இருக்கேன்…… ஆனா கண்ணிலயிருந்து எதுக்கு தண்ணி வருது, எதுக்கு நானு அழுறேன்னே தெரியல்லைம்மா….. இதுக்கு முன்னாடியெல்லாம் அம்மாவ நெனெச்சிண்ணாலும் சரி, இல்ல வேற எதுக்காச்சும் சரி அழுறப்ப, நெஞ்செல்லாம் வலிக்கிற மாதிரி இருக்கும்….. ஆனா இப்ப அழுறப்போ, வானத்தில பறக்கிறமாதிரி இருக்கும்மா……”
ஆனந்தக் கண்ணீரின் அதிசக்திகள், மனத்துக்கு ஆரோக்கியத்தைத் தருபவை என்று ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வந்தது.
நான் எதுவுமே பேசவில்லை. பெருக்கெடுத்த அன்பைக் குழந்தையின் நெற்றியிலும் கன்னங்களிலும், முத்தங்களாகச் சிதறவிட்டேன்.
ஒருவர் முகம்பார்த்து ஒருவர் மகிழ்வுற்றோம்.
“இப்ப ரொம்ப ஹேப்பியா குட்டிக்கு……”
“ஹேப்பிதான்…. ஆனாலும்……..”
என் நெற்றி சுருங்கியது.
“அது என்ன, ஆனாலும்னு ஒரு இழுவை……..” தலையைக் கோதிவிட்டேன்.
“அது ஒண்ணுமில்லை அம்மா….. பக்கத்தில அப்பாவையும் உக்கார வெச்சு, இப்போ உங்க மடியில தலைய வெச்சமாதிரி, அப்பா மடியில காலை வெச்சுக்கணும்….. நீங்க தலையைத் தடவுறப்போ, அப்பா காலை அமுக்கிவிடணும்….. நெனைக்கிறப்பவே ரொம்ப ஹேப்பியா இருக்கும்மா…..”
உலகத்தில் எத்தனை பெற்றோர்களால், இப்படியொரு பேறைத் தமது பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட முடியும்? கணவன், மனைவி என இருவரும் சேர்ந்தே போட்டிபோட்டுச் சம்பாத்தியம் பண்ணுவதிலும், சொத்துக்களை வாங்கிக் குவிப்பதிலும் காலத்தைக் கழித்துவிடும் பட்சத்தில், தமது ஏக்கங்கள், ஆசாபாசங்களையெல்லாம் எடுத்துச்சொல்லிப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களை இழந்து தவித்து, சரியான வழிநடத்தல் இல்லாது வளரும்போது, நெஞ்சுக்குள்ளே வக்கிரத்தனமான புத்திகளை உருவாக்கிக்கொள்ளும் இளைய சமுதாயம்….,
வாழ்ந்தும் - வளர்ந்தும் பெரியவர்களாக ஆகும்போது, சமூகத்தில் நிகழும் விரோதச் செயல்களுக்குத் தமது பங்களிப்பை அளித்தும், கடைசியில் தாமும் வீணே அழிவதும், உலகம் தரிசிக்கும் உண்மைதானே!
“என் மகளுக்கு அப்படியான ஒரு நிலை நான் உயிரோடு இருக்கும்வரை ஏற்படாது…. அதற்கு நான் விடமாட்டேன்…..”
உள்ளூர உறுதி பூண்டேன்.
இரு வீதிகளையும் சுற்றித், தரிசனத்தை முடித்துக்கொண்டு அனைவரும் வந்து சேர்ந்தாங்க.
முகத்தில் புன்முறுவல் பூத்தபடி அருகேவந்து என்னவர் உட்கார்ந்தாங்க.
“பொறவீதி சுத்தித் தரிசனம் பண்ணிக்கிட்டு வர்ரப்போ, எனக்கு உன்னய பத்தின ஒரு ஐடியா தோணிச்சு…. உனக்கு அது பழைய ஐடியாதான்…. இருந்தாலும், அதை உடனடியா செஞ்சுமுடிச்சிட்டா நல்லதுண்ணு நெனைக்கேன்….”
அவர் பேசிமுடித்த மறுகணம், யாருமே எதிர்பாராவண்ணம் எங்கள் மகள் வாய் திறந்தாள்.அவளின் பார்வை என்னை நோக்கியது.
“பாத்தீங்களா அம்மா…. கோவிலைச் சுத்திக் கும்பிடுறப்ப, அப்பா, மனசுக்குள்ள சாமியை நெனைக்கல்ல…. உங்களப்பத்தின ஐடியாவோடதான் சுத்தியிருக்காங்க….”
அனைவரும் சிரித்தாங்க. வெட்கம் என்னைக் கொன்றது. அதேவேளை எங்கள் மகளின் முகத்திலே தெரிந்த மகிழ்ச்சியைக் கண்டு குளிர்ந்தேன் நான்.
கூட வந்தோர் யாரேனும் ஏதாவது சொல்லிக் கிண்டல் செய்வதன் முன், நான் முந்திக்கொள்ளவேண்டும்.
“உண்மைதான் குட்டி…. கோயிலைச் சுத்துறப்போ சாமியைத்தான் நெனைக்கணும்…. அப்பிடிப்பண்ணாதது தப்புத்தானே…. அதுக்காக அப்பாக்கு ஏதாச்சும் ஒரு பணிஸ்மெண்ட் குடுக்கணுமே….. என்னபண்ணலாம்…. சொல்லுங்க….”
“எனக்கு ஒண்ணும் தோணல்லயே அம்மா….. நீங்கதான் நல்ல ஐடியா சொல்லணும்….”
அவளின் முகத்தைப் பார்த்தபோது, சடாரென்று எனக்குள் ஒன்று பளிச்சிட்டது.
மறுகணம் –
என்மடியில் தலைவைத்துப் படுத்திருந்த மகளின் இரண்டு கால்களையும் மெதுவாகத் தூக்கி, என்னவரின் மடியிலே வைத்தேன்.
“ஓகே…. இதுதான் கரெக்டான பணிஸ்மெண்ட்…. யாரும் எதுவும் பேசக்கூடாது…. இடையில நிறுத்தாம பத்து நிமிசத்துக்கு குட்டியோட காலை அமுக்கிவிடணும்….”
அம்மா மடியில் தலையும், அப்பா மடியில் காலும் வைத்து, அதை அப்பா அமுக்கிவிடணும்ங்கிற நீண்டநாள் ஆசையையும் எடுத்துச்சொல்லி, அடுத்தடுத்த சில நிமிடங்களில் அவை நடைமுறைப்படுத்தல் ஆவதைக் கண்டபோது, எங்கள் மகளின் முகமானது உடன் மலர்ந்த ரோஜாவை விஞ்சிநின்றது. நன்றி கலந்த மகிழ்வும், கண்களுக்குள் இலேசான ஈரமும் படரத் தொடங்கின.
“அழக் கூடாது” என்று, கண்களால் ஜாடை செய்து யாருக்கும் தெரியாமல் அறிவுறுத்தினேன்.
மகளின் காலை அமுக்கிவிட்டபடியே என்னை நோக்கியவர்,
“உனக்கு செயற்கைக்கால் போடலாம்னு முடிவுபண்ணியிருக்கேன்…. அதுவும் சீக்கிரமா பண்ணணும்…. எனக்குள்ள லீவு முடிஞ்சு டியூட்டில ஜாயிண்டு பண்றத்துக்குள்ள முடிக்கணும்….”
ஒருநிமிட மனப்போராட்டத்தின் பின் அமைதியாகப் பதிலுரைத்தேன்.
“ரொம்ப சாரிங்க…. எனக்கு அதிலயெல்லாம் இஸ்டம் போயிரிச்சு….”
அனைவரும் அதிர்ந்தனர்.
என்னவரின் முகத்திலே கேள்விக்குறி.வாயடைத்துப் போன நிலையில் அசையாதிருந்தாங்க.
“ஏன் மதனி…. எதுக்கு வேணாங்கிறீங்க…..”
பதறிப்போய் கேட்டாங்க அண்ணியார்.
அருகே நின்ற அண்ணனோ…..,
“நாங்க ஒண்ணும் பாண்டு பத்திரத்தில, ரெவினியூ ஸ்டாம் ஒட்டி கையெழுத்துக் கேக்கமாட்டோம்….. பயப்பிடவேண்டாம் தங்கச்சி….”
நறுக்கென்றிருந்தது எனக்கு. ஏற்கனவே அக்காளுக்கும் எனக்கும் நிகழ்ந்த இது விசயத்தை, இரண்டு நாளின் முன்பு வாற்சப் வீடியோ காலில் பேசும்போது, என்னவரிடம் தெரிவித்திருந்தேன். அதன் விளைவுதான் இது.
எதுவுமே பேசாமல் ஓரக்கண்ணால் நோக்கினேன். பொங்கிவரும் சிரிப்பை மென்று விழுங்கச் சிரமப்பட்டுக்கொண்டிருந்தாங்க.
அருகே வந்த அத்தை, ஆதரவாக எனது தலையைத் தடவியபடி கேட்டாங்க.
“எதுக்கும்மா செயற்கைக்கால் வேணாங்குறே…. புடிக்கலியா…..”
பதில் சொல்லாமல் மெளனமாயிருந்தேன்.
“சொல்லுங்க மதனி…. செயற்கைக் கால் போடுறதால என்ன பிரச்சினை”
அண்ணியார் கேட்டாங்க.
இதற்கு மேலும் வாய்திறவாதிருப்பது நல்லதல்ல.
“அண்ணி…. செயற்கைக்கால் மாட்டுறதுக்கு ஏங்கிட்ட எந்த மறுப்புமே இல்லை…. ஆனா, ஒரு சின்னக் கண்டிசன்….. யார் என்ன நெனைச்சாலும் பரவாயில்லை…..”
“சொல்லுங்க மதனி…. எதுவானலும் ஒடைச்சுப் பேசுங்க….. உங்க உணர்வுகளை மதிக்காம மிதிக்கிற ஜென்மங்க நாங்க இல்லை….”
“அந்த நம்பிக்கை இருக்கிறதாலதான் துணிஞ்சு பேசிறேன் அண்ணி…. நான் ரெண்டாந் தாரமா வாழ்க்கைப்பட்டு வர்ரதால கொழந்தை கண்ணுக்கு சித்தியாகத்தான் படுவேன்னும், இன்னும் கொழந்தைங்க பெத்துக்கிட்டு வாழுவேன்னு நெனைச்சும்தான் வந்தேன்……. ஆனா, கொழந்தையோ அப்பிடி நெனைக்காம என்னய சொந்த அம்மாவா நெனைச்சு நூத்துக்கு நூறு நம்பிக்கையோட பாசம் வெச்சிருக்கா…. அம்மா இல்லாத ஏக்கத்த நெஞ்சு நெறைய சொமக்க முடியாமெ சொமந்துகிட்டிருக்கா…. அந்த சொமையை முழுசா நான் எறக்கி வைக்கணும்…. அந்தப் பாசத்த இன்னுமொரு பிள்ளைக்கு பங்குபோட்டுக் குடுக்க விரும்பல…. அதனால இனி எனக்கிண்ணு ஒரு கொழந்தை பெத்துக்கவும் விரும்பல்ல…. உண்மையிலேயே என்னோட உணர்வுகளுக்கும் மதிப்புக் குடுப்பீங்கன்னா இனி ஒரு கொழந்த பெத்துக்கணும்னு என்னய யாரும் கட்டாயப்படுத்தாதீங்க…. எனக்கு இந்தக் கொழந்தை ஒருத்தியே போதும்…. இனி இவளோட நிம்மதியும், சந்தோஷமும்,வளர்ச்சியும்,படிப்பும், வருங்காலமும் தவிர வேற எதுவுமே எனக்கு வேணாம்….இதுக்கு சரீன்னா, கொழந்தை பெத்துக்கச் சொல்லி என்னய யாருமே கட்டாயப்படுத்த மாட்டோம்ணு இந்த மீனாட்சி அம்மன் சந்நிதி வாசல்ல வெச்சே எனக்கு புரோமிஸ்ட் பண்ணிக் குடுக்கணும்….அப்பிடிப் பண்ணிற பட்சத்தில நானும் செயற்கைக் கால் மாட்டிக்க சம்மதிக்கிறேன்…. அப்பிடியெல்லாம் முடியாதிண்ணு யாராச்சும் சொல்லுவீங்கன்னா, காலம் பூராவும் இப்பிடியே முழு நொண்டியாவே இருந்திட்டுப் போறேன்……”
பேசி முடித்தபோது, என்னவர் முகத்தையே நோக்கினேன்.
சில நிமிட அமைதிக்குப் பின் அவங்க பார்வை என்மீது நிலை குத்தியது.
“ரெண்டாந்தாரமா கலியாணம் பண்ணிக்கிட்டா, மொதல் தாரத்தோட பொண்ணு அனாதை ஆகிரும்னு நெறையப்பேரு சொன்னாங்க…. ஆனா இப்ப நான் சொல்றேன்…. உன்னய கட்டிக்கிட்டதால நான் அதிஷ்டசாலியோ இல்லையோ…. ஆனா என் பொண்ணு ரொம்பவும் குடுத்துவெச்சவ…. அவ சந்தோசத்துக்கு மேல வேற எதுவுமே முக்கியமில்ல…. நீ கேட்டபடி இந்த நிமிசமே புரோமிஸ்ட் பண்றேன்….”
“பண்றேன் என்ன…. பண்றோம்…..எல்லாருமே புரோமிஸ்ட் பண்றோம்…..”
சிரித்தபடி பேசிய அண்ணியார், தொடர்ந்து…….
“ஆமா மதனி…. இதெல்லாம் லேட் பண்ணக்கூடிய சமாச்சாரம் இல்லை…. அத்தோட கூடிய சீக்கிரத்தில ஆல் தமிழ்நாடு டூர் ஒண்ணு அரேஞ்ச் பண்ணிக்கிட்டிருக்கோம்….”
அப்போது குறுக்கிட்ட அண்ணன்,
“ஆல் தமிழ்நாடு டூர் இருக்கட்டும்…. முதல்ல ஆல் மதுரை டூரையே ஒழுங்கா முடிக்கணும்…. சொல்லப்போனா இந்த மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்ள போனாலே கால்ல வெந்நீரை ஊத்தினமாதிரி வேகவேகமா சாமி கும்பிட்டுட்டு எப்படா வெளிய வளையல் கடைக்குப் போகலாம், எப்போ சினிமா கொட்டகைக்கு போகலாம்ணுதான் ரொம்பபேரு இருக்காங்க…. பேசுறப்போ மட்டும் பண்பாடு,கலாச்சாரம், லொட்டை லொசுக்குண்ணு பெரிசா வாயடிப்பாங்க…..”
அண்ணியின் முகத்திலே எள்ளும்,கொள்ளும் வெடிக்கத் தொடங்கியது.
“போதும்…. எதையும் நேரடியா பேசுங்க…. ஜாடை மாடையா ரொம்ப பேரு, கொஞ்சப்பேருன்னு என்ன கிண்டல் வேண்டிக்கிடக்கு…. கோவிலுக்குள்ள போனா, சாமியைக் கும்பிட்ட கையோட வெளிய வராம உள்ள இருந்து குடும்பம் நடத்தணும்ங்கிறீங்களா……”
“வட நாட்டிலயிருந்து வர்ரவங்களும், வெளிநாடுகளிலயிருந்து வர்ரவங்களும் எவ்வளவு ரசனையோட ரசிச்சு படம்பிடிச்சு, குறிப்புகள் எடுத்து, தமிழ் கலை,கலாச்சாரங்களைப்பத்தி அவங்க நாட்டுப் பத்திரிகையில பெருமையா எழுதிக்கிட்டு இருக்காங்க…. வெளிநாட்டு டிவி காரங்க அவங்கநாட்டு டிவி யில டெலிக்காஸ்டு பண்ணிக்கிட்டிருக்காங்க…. அந்தளவுக்கு கலையம்சங்கள் குவிஞ்சுபோய்க் கிடக்கிற சமாச்சாரங்கள் நம்ம உள்ளூர்க்கார ஜென்மங்க கண்ணுக்கு தெரியவே தெரியாதெல்ல…..”
பேச்சு வலுவாகப் போவதன்முன் திசைதிருப்ப வேண்டும். அத்துடன் குழந்தைகளை வைத்துக்கொண்டு பெரியவர்கள் வாக்குவாதங்கள் பண்ணக்கூடாதென்று அடிக்கடி அப்பா சொன்னது நினைவில் வந்தது.
பேச்சை மாற்றினேன் நான்.
“உங்க சண்டைய அப்புறமா வெச்சுக்கலாம்…. டூர் போகணுமா வேண்டாமா…..”
அனைவரும் ரிலாக்ஸ் ஆகினார்கள்.அண்ணியாரே பதில் சொன்னாங்க.
“கண்டிப்பா போகணும் மதனி….. அத்தோட நீங்க நல்லா கார் ஓட்டுவீங்கண்ணு கேள்விப்பட்டோம்…. அவசரத்துக்கு ட்ரைவரைத் தேடிக்கிட்டு இருக்கவேண்டாமில்லியா…..”
இவர்கள் என்னைப் பாராட்டுகின்றார்களா, கேலி பேசுகின்றார்களா என்று சற்றுக் குழம்பியபோதிலும், அதை வெளிக்காட்டாமல் சிரித்தபடி பதில் சொன்னேன்.
“தாங்ஸ் மதனி…. வண்டியை நான் ஓட்டுறேனோ இல்லையோ…. என்னய வெச்சு நீங்க நல்லா ஓட்டுறீக….”
(தொடரும்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.