[ 1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பல்வேறு ஈழத்தமிழரின் விடுதலை அமைப்புகளில் இணைந்து போராடப் புறப்பட்டனர். அவ்விதமாகப் புறப்பட்டவர்களில் 'கடல்புத்திர'னும் ஒருவர். தனது அனுபவங்களை மையமாக வைத்து 'வெகுண்ட உள்ளங்கள்' நாவலை இவர் படைத்திருந்தாலும், இந்த நாவல் விரிவானதொரு நாவலல்ல. ஆனால் இவ்விதமாகத் தமது இயக்க அனுபவங்களை மையமாகக்கொண்டு ஏனையவர்களால் படைக்கப்பட்ட நாவல்களிலிருந்து இந்த நாவல் முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் படைக்கப்பட்டிருப்பதொன்றே இந்த நாவலின் முக்கியமான சிறப்பாகக் கருதுகின்றோம். பொதுவாக இவ்விதமான படைப்புகளை எழுதுபவர்களின் எழுத்தில் விரவிக்கிடக்கும் சுயபுராணங்களை இவரது 'வெகுண்ட உள்ளம்' நாவலில் காண முடியாது. 'வெகுண்ட உள்ளங்கள்' என்னுமிந்த இந்த நாவல் 1983ற்கும் 1987ற்குமிடைப்பட்ட பகுதியில், ஈழத்தமிழர்களின் போராட்ட எழுச்சி எவ்விதம் ஒரு கடலோரக்கிராமத்தின்மீது தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பதை விபரிக்கின்றது. அந்த வகையில் இந்நாவல் அக்காலகட்டத்தை ஆவணப்படுத்திய முக்கியதொரு படைப்பாக விளங்குகின்றது. கூடவே அமைப்புகள் எவ்விதம் செயற்பட்டன, அவற்றின் கட்டமைப்புகள் எவ்விதமிருந்தன என்பவற்றையும் வெளிப்படுத்துகின்றது. - பதிவுகள் -]
அத்தியாயம் மூன்று!
பிறகு அண்ணன் மன்னி வாழ்வு நல்லபடியாகவே ஒடியது. வெளிநாடு போற ஆசை அண்ணனுக்கும் ஏற்பட்டது. அவர்களுக்கிடையில் காசு போதியளவு கிடைக்காமையால் பூசல்கள் மெல்ல மெல்ல எழ ஆரம்பித்தன. ‘என்னடாப்பா வீட்டில் சத்தம் கேட்கிறது’ என்று அவனுடைய நண்பர்கள் கேட்க.ஒரளவு அடங்கிப் போயிருந்தான்.
இயக்கம் அவனை பிடிச்சபோது மன்னி “விடமாட்டேன்” என குழறி அழுதார்.அப்படியும் கொண்டுபோய் விடவே, வீட்டையே ஒடிவந்தார்கள்.
திரும்பிய பிறகு அடிவாங்கியவர்கள் இரண்டு மூன்று நாள் நோவால் வேலைக்கு போகமுடியாமல் தவித்தார்கள்.
கனகனை, அன்டனை, நகுலனைக் கண்டால் விட்டார்கள். அண்ணனோடு நேற்று வந்த பஞ்சன் அவனைப்பார்த்துவிட்டு “உங்கட ஆட்கள் மோசமில்லையடா, ஆனா, அடி வாங்கினால் 2,3 நாளைக்கு கட்டாயம் புக்கை கட்டவேணும்” என்றான்.
அவனுக்கு சிரிப்பு வந்தது. அன்டனும் நகுலனும் நண்பர்களாகவிருப்பதால் அவனையும் இயக்கமாக கருதி முறைப்பாடு தெரிவிக்கிறார்கள்.
அண்ணனும் மெளனமாக இருப்பது சங்கடமாக இருக்கிறது. அவனைக்குறித்து புறுபுறுத்தாவது இருக்கலாம். ஆனால் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் போராடுகிறவர்கள் என்ற மரியாதையும் அவர்களுக்கு இருக்கவே செய்தன.
எனவே இயக்கத்தோடு இழுபடுகிறவர்களையும், 'சப்போட்' பண்ணுகிறவர்களையும் அவர்கள் தடுக்க முயலவில்லை.
ஏ.ஜி.ஏ கூட்டத்திலே, புதிதாய் ஒருத்தனை அறிமுகப் படுத்தினார்கள். இருவருக்கும் அவனை முன்னமே தெரியும்.
“இவன், தற்காலிகமாக தெற்கு அராலிப்பகுதிக்கு ஜி.எஸ்.ஆக நியமிக்கப்படுகிறான்” என அறிவித்தார்கள்.
சங்கானை உப அரசாங்கப் பிரிவில், அராலியும் ஒரு கிராமம். மற்ற 12 கிராமங்களைப்போல இல்லாமல் பெரிய கிராமமாக இருந்தது. அதன் வடக்கு, தெற்கு பகுதிகள் ஒவ்வொன்றுமே நிலப்பரப்பில் ,சாதிப்பிரிப்பில் தனி தனிக்கிராமத்துக்குரிய குணாம்சங்களைக் கொண்டிருந்தன.
முழு கிராமத்துக்கு ஒரு கிராமசேவகரையே இலங்கை அரச பிரிவால் நியமிக்கப்பட்டதால் அவ்விடத்து மக்கள் அதிகமாக கஷ்டப்பட்டார்கள். அதை ஒட்டியே இவர்களும் வடக்கைச் சேர்ந்த லிங்கனை ஜி.எஸ்.ஆக நியமித்து விட்டிருந்தனர். ஆனால், தெற்குக்கு இன்னொரு ஜி.எஸ்.ஐ நியமிக்க வேண்டிய தேவையிருந்தது.
தற்காலிகமான திலகனின் தெரிவு நல்லது தான் . ஆனால் வாலையம்மன் பகுதி ஆட்களுக்கு நிச்சயமாக ஆச்சரியமளிக்கப் போகிறது. மற்றைய கிராமங்களிலிருந்து இரண்டு , இரண்டு அங்கத்தவர்கள் வந்திருந்தார்கள். லிங்கன் ,தன்னுடைய தோழர்களிற்கு அரசியல் தெரியவேணும் என்பதற்காக எப்பவும் இரண்டு தோழர்களை கூட்டத்திற்கு அழைத்து வருபவன். தெற்குக்கு புதியவர் நியமிக்கப் படுவதால் இவ்விருவரையும் அழைத்திருந்தான். அடுத்த கூட்டத்திற்கு வடக்கிலிருந்து இருவர் வருவார்கள். அவனுக்கும் கூட பெரிதாக அரசியல் தெரியாதுதான். ஆனால் இவர்களிற்கு எல்லாம் அவன் மூத்த 'பாட்ஜ். எனவே கிராமத்திற்கும், மேலிடத்திற்குமிடையில் இருக்கிற ஒரு தபால்காரனாக தன்னை வைத்திருந்தான். எப்பவும் தொடர்பையும் பேணி வந்தான்.
புதிய தோழர், அந்த இடத்திற்கும் தனக்கும் உள்ள தொடர்பைப் பற்றி அவர்களிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தான்.
“இவன், மானிப்பாய் ஏ.ஜி.ஏ. பிரிவைச் சேர்ந்தவன். எங்கட பிரிவிலே இயங்க வந்திருக்கிறான்” அவனைப் பார்த்து “உனக்கும் அந்தப் பகுதி பிரச்சனையாயிராது” என்றான் பிரபா. எல்லாரையும் பார்த்து “தெற்கராலியில், பலர் பேர் பதிந்து வேலை செய்யவில்லை. ஆதரவாளர் என்ற முறையிலே இயங்குகிறார்கள். அதனாலே நாங்கள் இவனை நியமிக்கிறோம்.” எனப் பகிடியாகச் சொன்னான். தொடர்ந்தான். “அவ்விடத்துதுறை முக்கிய கேந்திரமாக இருப்பதால் சில செயற்பாடுகளை நாம் செய்யவேண்டியிருக்கிறது. கூடிய சீக்கிரம் உங்களில் ஒருவனை ஜி.எஸ்.ஆக நியமிப்போம்” அன்டன் ஆட்கள் இருந்த பகுதியைப் பார்த்து பிரபா பேசுவதை எல்லோரும் கேட்டு கொண்டிருந்தார்கள். ‘ஈடுபட இருக்கும் செயற்பாடு’களை அவன் விவரித்தான்.
“கரையில் வாலையம்மன் பகுதி நடத்திய வள்ளச் சேவையை இனி இயக்கங்கள் செய்வதாக முடிவெடுத்ததால் எம் சார்பில் படகு சேவையை நடத்தத் திர்மானித்திருக்கிறோம்" கூட்டம் அன்று முடிய 'லேட்'டாகியது.
இருவருக்கும் பசித்தது. கடை ஏறி பசியாற கையில் காசிருக்கவில்லை. சைக்கிளைக் கொடுக்கக் கனகனின் வீட்டுக்கு வந்தார்கள். இயக்கம் என அலைந்து திரிய வெளிக்கிட்டபிறகு அவர்கள் பொதுவாக சரியாக சாப்பிடுவதில்லை. “டேய் பசிக்குதடா. மீன் குழம்பு ஏதும் இருக்கிறதா?” என்று அன்டன் கேட்டான். “நில்லு பார்த்துச் சொல்லிறன்” என்றுவிட்டு உள்ள போனவன் குழம்புச் சட்டியோடு பாணையும் எடுத்துவந்தான். “டேய் கையை கழுவிப்போட்டு வாங்கடா" என்று பாணை தட்டில் வைத்து குழம்பை ஊத்தி வைத்தான். தண்ணியை ஊத்தி அம்மா அடுப்பில் வைத்தார். “என்னடா சேதி? கூட்டத்தில் என்ன சொன்னாங்கடா" கனகன் அவசரமாகக் கேட்டான். “கொஞ்சம் பொறடா. சாப்பிட்டுவிட்டு கதைக்கிறோம். ஆனா, பெரிய ஆச்சரியம். எல்லாம் காத்திருக்கடா” என்றான் அன்டன், “எங்க பகுதிக்கு புதிதாய் ஜி.எஸ்.ஒருத்தன் நியமிக்கப்பட்டிருக்கிறான். யார் தெரியுமா?” என்று நகுலன் கேட்டான்.
“எனக்கென்னடா மூக்குச் சாத்திரமா தெரியும்? யாரும் பொதுவான ஆளாய் இருப்பான்.ம்.யார்? அந்த நரேனையா நியமிச்சிருக்கிறாங்கள்"
நரேன் சாதி அபிமானம் அற்றவன். சமயத்தில் சென்றியால் வரும்போது அன்டனை வாசிகசாலையில் இறக்கி விட்டுப்போகிறவன். பழக இனிமையானவன். ஆனால் அங்கே நிலவுகிற சமூகக் கட்டமைப்பால் அவன் மாற்றுச் சாதிக்காரன்’ அவர்கள் மட்டுமே எல்லாரையும் தோழர்களாக ஏற்றிருக்கிறார்கள். சாதி முறை நீண்ட காலம் நிலவிய தன்மையாலும், விழிப்புணர்ச்சி இளைஞர் மட்டத்திலே நின்றுவிட்டதாலும் சமூக மாற்றம் ஏற்படும் அறிகுறிகள் தென்படவில்லை. அவனை என்ன, வேறு அவ்விடத்து ஆட்களைக் கேட்டாலும் நரேனையே நினைப்பார்கள். ஒரு இயக்கத்துக்கு எல்லாப்பக்கமும் வேலை செய்யக்கூடியவர்களாக இருக்கவேண்டும். சமயங்களில் உதவிகள் திரட்டக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டும். மளமளவென இருவரும் சாப்பிட்டார்கள்.
கனகன்ரை அம்மா போட்டுத் தந்த தேத்தண்ணியை குடிச்சபிறகு அவர்களுக்கு களைப்பு பறந்திருந்தது. இயக்க கெடுபிடிகளால் இரண்டு மூன்று நாட்களாக அப்பனும் தொழிலுக்குப் போகாதிருந்ததால் ஒருபுறம் வைத்திருந்த உலர்ந்த வலைக் குவியலில் போய் மூவரும் படுத்திருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். காற்று குளிர்மையாக வீச அப்படியே தூக்கம் வந்துவிடும் போலிருந்தது.
உடுப்புகள் காயப்போட அங்கே வந்த அம்மா “உங்கம்மாமார் தேடி வரப் போகினம், வீட்டப் போங்கடா” என்று ஞாபகமூட்டினார்.
“இயக்கத்திற்கு ஒடிய பிறகு… எங்களைப் பற்றி கவலைப்ப படுகிறதை விட்டிட்டினமக்கா” என்றான் அன்டன். திடீரென அப்பகுதியில் இருவரும் ரெயினிங் என்று போனதும் உடனே அவர்களின் அம்மாமார் இருவரும் அந்த வீட்டுக்கே ஒடி வந்தார்கள். கனகன் இருப்பதைப் பார்த்துவிட்டு “தம்பி உனக்குத்ரியாமல் இருக்காது. எங்கே தம்பி போயிருக்கிறார்கள்” என்று தவித்துக் கேட்டது அவருக்கு ஞாபகம் வந்தது. பிறகு கனகனே தபால்காரனாக அவர்களுக்கிடையில் வேலை பார்த்தான். ஒன்றரை மாதம் கழிய இருவரும் திரும்பி வந்தார்கள். லிங்கன் மற்றும் பலர் அப்பகுதிக்கு பரிச்சயமானார்கள்.
“யாரடா வரப் போகிறான். வேறு ஊரைச் சேர்ந்தவனா?” என்று நக்கலாக அவன் கேட்டான்.
“லிங்கன்ரை சொந்தக்காரப் பெடியனடா" என்று அன்டன் சொல்ல நகுலன் சிரித்தான். ‘அதிலே ஒன்றும் ஆச்சரியமில்லையே என்ற கனகனுக்கு அவர்கள் ஏதோ ஒன்றை மறைக்கிறார்கள் போலப் பட்டது.
லிங்கனும் நரேனும் அன்டனையும் நகுலனையும் தேடி வாசிகசாலைக்கு வந்தார்கள். இருவரின் சைக்கிள் பாரிலும் ஆளுக்காள் ஏறினர். லிங்கன் கையில் வைத்திருந்த புத்தகக் கட்டை அன்டன் வாங்கிக் கொண்டான்.
“அதிரடி நடவடிக்கை ஏதுமா? கனகன் கண்ணைச் சிமிட்டிக் கொண்டு கேட்டான்.
சைக்கிள்கள் விரைந்தன.
சந்தியில் அவர்களுடன் இன்னும் பலர் சேர்ந்து கொண்டார்கள். தெற்குப்பக்கமாகவிருந்த ஒழுங்கையில் இறங்கி விரைந்த அந்தப் பட்டாளம் பூட்டிக் கிடந்த ஒரு பழைய வீட்டை அடைந்தது. நூறு வருடங்களை கடந்துவிட்டிருக்கிற மூப்பின் அடையாளங்கள் வீட்டில் காணப்பட்டன. பூச்சு கழன்று உப்பு சிறிது பூத்த சுவர். சுண்ணாம்புக் கல் அதிகமாகப் பாவிக்கப்பட்டு கட்டப்பட்ட உறுதியான பழைய வீடு.
அவ்வீட்டை நரேன் தெரிந்திருந்தான். முன்னாலுள்ள பாதை. அயலிலுள்ள இரண்டொரு வீட்டைக் கடந்தால் கரையை நாடியே போகிறது. பனை மரங்களும் நெல் வயல்களும் இருமருங்கிலும் கணிசமாக இருந்தன. நரேன். அன்டன், குமார் மூவரும் பக்கத்திலிருந்து வீட்டுப் பக்கம் நடந்தார்கள். அவ்வீட்டுக்காரர்“யார் தம்பி நரேனா வா. வா" என வரவேற்றார். அவன் அவருக்கு தூரத்து உறவு. அவனைப் பற்றி முன்னமே தெரிந்து வைத்திருந்தார்.
“பழைய வீட்டை எடுக்கிறோம். அதன் திறப்பை தரமுடியுமா?” என்று அவன் கேட்டான்.
“குறை நினைக்க வேண்டாம் தம்பி அவயள் கொழும்பிலிருந்து வரவிருக்கினம்” தர மாட்டேன் என்பதை நாசூக்காக தெரிவித்தார். “அவயள் வரேக்கை எழும்பி விடுறம். நீங்க பயப்படத் தேவையில்லை. வீட்டைப் பொறுத்தவரை சேதம் ஏற்படாது. தாங்கோ” என்று நரேன் சிறிது நக்கல் தொனிக்க கேட்டான். அவர் மசிவதாகத் தெரியவில்லை. தட்டிக் கழிக்கவே அவர் முயன்றார் "உனக்குத் தெரியாததா? தரக்கூடியதாக இருந்தால் தராமல் இருப்பேனா?” தொடர்ந்தும் முரண்டு பிடிக்க நரேன் அன்டனை 'லிங்கனைக் கூட்டி வா’ என்று சொல்லி அனுப்பினான்.
அவர்கள் வீட்டை திறந்து விட்டிருந்தார்கள். ‘எங்கே நரேன்’ என்று லிங்கன் கேட்டான். நிலைமையைச் சொன்னான். “தெரிஞ்சவையளா, அப்படியென்றால் வேற ஆளை அனுப்பியிருக்கலாம். சரி வா. நீங்க வீட்டை ஒதுக்கி துப்புரவாக்குங்கள். கவனம். சாமான்களை ஒரு அறையில் போட்டு பூட்டி விடுங்கள். கண்டிப்பாய் அதிலை ஜாக்கிரதையாயிருங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தான்.
“நரேன் நீ போ” என்று அனுப்பி விட்டு வீட்டுக்காரனுடன் கதைத்தான்.
“எங்கட தோழர்கள் தங்கி போறதுக்கு வீடு தேவைப்படுகிறது. சும்மா பூட்டிக்கிடக்கிற வீடு என்று எங்களுக்கு நல்லாய் தெரியும். திறப்பை தந்தீங்க என்றால் நன்றாயிருக்கும்” என்று கேட்டான்.
“அதில்லை தம்பி. அவயள் கொழும்பிலேயிருந்து வரவிருக்கினம்” வீட்டுக்காரர் நரேனுடன் கதைத்தது போல முயன்றார். “பரவாயில்லை. நாங்க வீட்டை திறந்து விட்டோம். நீங்க ஒருக்கா வந்து வீடு ஒதுக்கிறதை பார்த்தால் மட்டும் போதும். உங்க பொறுப்பிலே இருக்கிறதாலை கேட்கிறோம். எங்கேயோ இருக்கிற வீட்டுக்காரர் ஒருவேளை உங்களை கேட்டால் நீங்கள் இயக்கம் மிரட்டி சாவியை வாங்கி விட்டது என்று சொல்லலாம். உங்க பாதுகாப்புக்காகதான். இனி உங்க இஷ்டம்.” லிங்கனின் முடிவான பேச்சு அவரை கலக்கி விட்டது. பேசாமல் திறப்பை எடுத்துக் கொடுத்தார். அவர்களோட கூட வந்தார். முக்கிய சாமான்களை தனியறையில் வைத்து பூட்டிவிட்டு அந்த ரூம் சாவியை நரேன் அவரிடம் கொடுத்தான்.
“உங்களுக்கு பிரச்சனை வார போது எங்கட பெடியளிடம் கூறுங்கள். உடனே நடவடிக்கை எடுப்போம். கொஞ்ச காலம் மட்டுமே தேவைப்படும் என நினைக்கிறேன்” என்று லிங்கன் ஆதரவாக சொன்னான். அவர் வீட்டிலேயிருந்து அவர்களுக்கு டீ வந்தது. நரேனுக்காக செய்வதுபோல அனுப்பினார்.
"ஆள் பரவாயில்லை அன்டன்” என்று லிங்கன் சொல்லிச் சிரித்தான்.
“டேய் வீடு ஒன்று எடுத்துவிட்டோம்” என்று வந்த அன்டனைப் பார்த்து கனகன் சிரித்தான். அவனுக்கு அந்த விசயம் தெரிந்ததேயிருந்தது. “வா, அண்ணன் வீட்ட போவம்" என்று கூட்டிக் கொண்டு போனான். அங்கே பாபுவோடும் லதாவோடும் விளையாடுற ஆளைப் பார்த்த போது இருவருக்கும் விசயம் விளங்கிவிட்டது.
“மன்னி, அடுப்பிலே தண்ணி வைத்திருந்தா தேத்தண்ணி ஊத்துங்கோ” என்றான். “இண்டைக்கு, சமையல் மூக்கை துளைக்கிறதே" என்று கேட்டான்.
“உங்க வீட்டை விட என்ன புதிதாய் இருக்கப் போகிறது தம்பி" என்றார். அண்ணன் கறிக்கு கொண்டு வாரபோது அவன் வீட்டயும் குடுத்து அனுப்பி விடுவான். அப்பன் கரையிலிருந்து மிச்சத்தை விற்றுவிட்டு வருவான். தண்ணியை எடுத்து அடுப்பிலே வைச்சவர். “தம்பி கொதிச்சதும் கூப்பிடுறேன்” என்றார். கனகன் அவர்களிடம் வந்தான்.
“திலகன், சரியான ஆளடா இவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தனும் என்று நினைச்சோம். நீ இங்க வந்து குட்டை உடைச்சுவிட்டாய்” என்றான் நகுலன்.
"நீ பொடி போட்டு கதைத்த போதே எனக்கு ஒரு சந்தேகம். ஆனால், நான் இவனை எதிர்பார்க்கவில்லை” என்றான் கனகன். கதைத்துக் கொண்டிருக்கையில் மன்னி “குரல் கொடுத்தார். “இதோ வாரோம் வாங்கடா எல்லோரும்” என்று சொல்ல.போய் ஆளுக்காள் தேத்தண்ணியை எடுத்து வந்தார்கள்.
அவ்விடத்திலே எல்லோருங்குமே ஆச்சரியம்தான். மன்னியிட தம்பிக்காரன் அப்பகுதிக்கு ஜி.எஸ்.ஆக நியமிக்கப்பட்டிருக்கிறான் என்றால்.? பொதுவாக பலர் வரவேற்ற போதும் முருகேசனைப் பொறுத்தவரையில் பற்றற்ற நிலையில் இருந்தான்.
கல்யாணம் கட்டிய போது, மனிசியை திரும்பிப் பாராது இருந்தவையள். அதுவே வீட்டிலே பிரச்சனையாகி தினமும் சண்டையாய் வளர்ந்தது. ஏதேதோ எல்லாம் நடந்த பிறகு அவன் அவையள் வீட்டை ஏறி கேட்டதுக்காக மட்டும் முதல் தடவையாக படியேறி வந்தவன் ‘எப்ப இவன் இயக்கத்திற்குப்போனான்? தங்கிறதுக்கு சனம் இருக்கிறது. உவனுக்கு படகு ஒட்டம் பற்றி எல்லாம் என்ன தெரியும்? ஆனால் என்னத்தைக் கதைக்க முடியும்? அவள் சந்தோசமாயிருக்கிறாள் என்பதால் ஒன்றும் பேசாமல் இருந்தான்.
தம்பி முதலே இவர்களோடு சேர்ந்தவன். திலகனுக்கு படகு ஒட்டம் பற்றி தெரியாத போதும், “மேலிடம் சொன்னதைக் கடைப்பிடித்தான். படகுச் சொந்தக்காரனையும் அவுட்போட் மோட்டார் கொண்டு வந்தவனையும் ஒட்டிகளாக அனுமதித்தான். இரண்டிற்கும் ஒருத்தனே உரித்தவனாய் இருந்ததால்.அவன் மற்றவனை தெரிவு செய்யலாம் அவ்விடத்திற்கு பரிச்சயமானவர்களை போடாத போது, படகுக்கு சேதாரம் கூடுதலாக ஏற்பட்டன. ஆழமற்ற கடலாததால் ஒடி ஒடி அழமான பாதை கண்டு ஒடவேண்டும்.
இல்லாது போகிறபோது படகு தரை தட்டி அதன் சீமெந்து ஏர் உடைய நேர்ந்தது. கல் பகுதியில் ஏறுகிறபோது பக்கப் பகுதியில் ஒட்டைகள் ஏற்பட்டன. அடிக்கடி பைபர் லேயர் வைத்து ஒட்டுற செலவுகள் ஏற்பட்டன. அதனால் அனுபவமிக்க பெடியளையும் சேர்த்து படகுச் சேவையை நடத்த வேண்டியிருந்தது.
\
ஒருநாள் சம்பளமாக அவன் ஒட்டிக்கு 75 ரூபா கொடுத்தான். இருவருக்கும் 150. வள்ள ஒட்டம் சீராக, நடைபெற்றது.
அன்டனும் நகுலனும் அவனுக்கு வலதுகரமாக நின்றார்கள். ஒரு அவுட்போட் எஞ்சின் அன்று பழுதுபடவே, அவர்கள் வலுவாகக் கஷ்டப்பட்டு விட்டார்கள். காரைநகரைச் சேர்ந்த படகுக்காரன் மட்டுமே ஒட்டினான்.
அன்டன் அணியத்தில் இருந்து பாதை காட்ட நகுலன் காசைச் சேர்த்தான். அந்தப் பிரச்சினையைக் கதைக்க திலகன் ஏ.ஜி.ஏ.யிடம் போயிருந்தான். கரைப்பக்கம் வரும் லிங்கனிடம் சேர்ந்த பணத்தை கொடுக்க சொல்லி வைத்தான். ஒட்டியின் சம்பளம், சாப்பாட்டுச் செலவு போக மீதியை கொடுத்துவிட்டு கனகனிடம் வந்தார்கள்.
“வந்திட்டாங்கள் வெட்டிப்பொழுதைக் கழிக்க” அவனது அப்பரின் வழமைக்கு மாறான பேச்சு இருவருக்கும் ஒருமாதிரியாக இருந்தது. இயக்கம் என தாம் சீரழிவது போலப்பட்டது. இவர்களால் எங்களைப் புரிந்துகொள்ள முடியாதா? களைப்பு வேறு அவர்களை 'மூட் அவுட்'டாக்கியது. இன்னும், எத்தனை பெடியள்கள் எல்லாம் ஏன் சீரழிகிறார்கள்? சிந்திக்கவே மாட்டார்களா?
இயக்கம், இவர்களைப் பிடித்து அடிச்சதுக்காக பழகிய முகங்களையே முறிக்கிறார்கள். புரிந்தது. இனிக் கனகனிடமும் முன்னை மாதிரி வரமுடியாதோ? என சிந்தனை தலையை அழுத்தியது. “அப்ப, நாங்கள் போயிட்டு வாறம்” வந்த கையோடு கிளம்பினார்கள்.
“நில்லுங்கடா தம்பி. அது தண்ணி குடிச்சுவிட்டு விவரம் இல்லாமல் உளறும்.” அம்மா அவர்களை மறித்தார். அதில் இழைந்த வாஞ்சையை மீற முடியாமல் உள்ளே வந்தார்கள்.
'உழைக்காமல் வீட்டில் இருப்பதாலே.அப்பன் இப்படிக் கதைக்கிறான்’ எனக் கனகன் நினைத்தான். நெடுக இப்படியே இருக்கிறது. நல்லதாகப் படவில்லை. அண்ணன் அப்பனோடு தொழிலுக்குப் போவதால் அவனுக்குப் புதிதாக யாரையும் தெரிந்ததாக வேணும். “டேய் உங்களுக்குத் தெரிந்து தொழிலுக்குப் கேட்கிறவர் யாராவது இருக்கினமாடா” என்று கேட்டான்.
‘வள்ளம் ‘ஒன்றை அவிழ்க்கப்போவதாக சொல்லித் திரிந்த செல்லண்ணையின் ஞாபகம் அன்டனுக்கு வந்தது. அவர் முந்தி மூத்தியப்புவோடு தொழில் பார்த்தவர். அப்புவின் பேரன் வளர்ந்து விடவே தொழிலுக்குள் இழுக்க விரும்பினார். அதை அப்பு செல்லனுக்கு தெரியப்படுத்தினார்.
அவர் நவாலி பக்கத்திலே சிறிய வள்ளத்திற்கும் வலைக்கும் பேசிக் கொண்டிருக்கிறார். உதவிக்கு அன்டனைக் கேட்டிருந்தார்.
“டேய் எல்லாம் வெல்லலாமடா" என்றான் உற்சாகத்துடன்.
வென்றுதான் விட்டிருக்கிறான்.
செல்லனும் வள்ளத்தை அவிழ்த்து விட்டிருந்தான். கனகனின் அப்பாவில் அவனுக்கு நிரம்ப மரியாதை இருந்தது. அன்டன் கேட்ட போது உடனேயே சேர்த்துக் கொண்டான்.
கனகனை வலைப் பொத்தல்களை தைக்கச் சொல்லி விட்டு செல்லன் காய்வெட்டிக் கொண்டு கள்ளடிக்கப் போயிருந்தான். தன் தலைவிதியை நொந்தபடி தனியக் கிடந்து போராடிக் கொண்டிருந்த போது திலகன் அண்ணி வீட்டுப் பக்கம் இருந்து வருவது தெரிந்தது.பட்லையைத் திறந்து கொண்டு வந்த அவன் “டேய் அன்டனைக் கண்டனியா?” என்று விசாரித்தான்.
அன்டனோடயே கனகனும் ஒரேயடியாய் வீட்டிலேயிருந்து வெளிக்கிட்டு வந்தவன் “ஒரே அலைச்சலப்பா?”இப்படி ஏதேதோ வளவளத்துவிட்டு, கனகன் செல்லனின்ரை வளவுக்குள்ள நுழைய அவன் காம்ப்பிற்கு விடைபெற்றுப்போயிருந்தான்.
“ஒ, இண்டைக்கு வெள்ளை மோட்டார், திருத்த வாரன்" என்றவன், "மறந்துபோனன்” எனச் சொன்னவன் “எப்படி உன்ரை தொழில் போகிறது?’ என்று கேட்டான். "உந்த ஒட்டை வலையிலும் சின்ன வள்ளத்திலும் என்னத்தை பெரிதாய் எதிர் பார்க்க முடியும்”?என” என்று கனகன் பகடியாகப் பதில் அளித்தான்.
தனது மனதில் இருந்த குமுறலையும் சொன்னான்."நீங்களும் கடைசிலே முட்டாளாய் தானே இருக்கிறீர்கள்?"என்றான்."நீ சொல்றது புரியிறது கனகு. நீங்க வள்ளம் ஓடக்கே இந்த ஏர் உடையிறதும்,பக்கப் பாட்டிலே ஓட்டை விழுகிறதும் இல்லை. உங்களுடைய கடல். உங்கள் ஒவ்வொருவருக்கும் பாதை தெளிவாகத் தெரியும். தவிர மர வள்ளத்தில் பாதுகாப்பு கூடத்தான். எங்களிற்கு ஏற்படுற பைபர் கிளாஸ் இழைகள் ஒட்டுறதும்,திருத்துறதுமான... வீண் செலவுகள் துப்பரவாக இல்லை. இந்த சிறிலங்கா அரசு அரசாங்கம் நடத்துவது போல. மாகாணவரசு இருக்கிறது. நகரசபைகள் இருக்கின்றன. எதற்கு இந்த ஜி.எ, எ.ஜி.எ ,ஜி.எ என்கிற ஏஜென்ட் அமைப்புகள். ஒரு தொகைப் பேர்கள் அதில் இருக்க மாட்டினமா? எல்லாருக்கும் அரச படிகளுடன் கூடிய சம்பளம். அந்த பணத்தில் முதல் தரமாக பாலங்கள் ,வீதிகள் எல்லாம் அமைக்கலாமே. இந்த மக்கட் தொகையைக் கொண்டு தீவின் முக்கிய பொருளாதாரத் துறைகளான விவசாயத்திலும்,மீன் பிடியிலும் ஈடுபட வைத்து.. .வளப்பைத்தை அதிகரித்திருக்கலாம். எம்மைப் போல உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தைப் பறித்து ,நாமாவது சுகப்படுகிறோமா ?என்றால் அதுவுமில்லை. தவிர ,எங்கையெங்கோ இருந்தெல்லாம் பைபர்கிளாஸ் படகு வைத்திருப்பவர்கள் ட்ராக்டரில் கட்டிக் கொண்டு வாரார்கள். உறவுக்காரப் பெடியன் ஒருத்தனையும் கூட்டி வருகிறார்கள். தொழில் இல்லாத நிலைமை. அவர்களிற்கு இங்கிருக்கிற பெடியன் சேர்ந்து பயணித்து ஒரு நாள் 'பாதையை' காட்டி புரிய வைத்தாலும்.... அவர்களால் சரிவர படித்துக் கொள்ள முடியிறதில்லை. திருத்தச் செலவுகள் என விரயமாக இறைத்துக் கொண்டிருக்கிறோம். வைக்கோல் பட்டடை நாய்கள் போல, அதே ஊதாரித் தனம் தான் “என்றான் திலகன்.
கனகன் அசந்து போனான் !
“எங்களுடைய போக்குவரத்துச் சேவை நட்டமாக ஒடுகிறதால் அங்கால அமைப்பிடமே கொடுத்து ஒன்றாக ஒடுகிறது நல்லது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இங்கால காம்பை எடுத்து விட்டால் காம்ப் செலவு இல்லை தானே .அதனால் செலவு குறையப் போகிறது. ” இருவரும் கதைத்துக் கொண்டிருக்க மாலை மங்கியது. செல்லனின் இருபுதல்விகளான கமலமும், செல்வமணியும் சேர வந்தார்கள். அவ்விடத்தில் உள்ளவர்களைப் போல் சுமாரான அழகு பெற்றவர்கள். அவர்களைப் பார்த்துவிட்டு திலகன் “பரவாயில்லையே, உனக்கு பொழுது நல்லாய்ப் போகும்” என கண்ணைச் சிமிட்டியபடி பகடியாகச் சொன்னான்.
தாய்க்காரி இருவருக்கும் தேனீர் போட்டு மணி மூலமாக அனுப்பினாள்.
அவனை பொதுவாக அவ்விடத்தில் எல்லாருக்கும் தெரியும். எனவே அவனைக் குறிப்பாகப் பார்த்து முறுவலித்தாள். அவள் பார்வையில் வேறு சாதிப் பெடியன் என்ற ஆச்சரியமும் இயக்கத்தில் சீரழியிறவன் என்ற அனுதாபமும் கலந்து இருந்தன. செல்லன் வரவே விடைபெற எழும்பினான். “எப்படியிருக்கிறாய் ?” என விசாரித்தவர் “தம்பி, கருவாடு இருக்கிறது; காம்ப்பில் சமைச்சுச் சாப்பிடுங்களன்” என்றார்.
உள் பக்கம் திரும்பி “எடியே, புள்ள கருவாடு கொஞ்சம் பையில போட்டு தம்பிட்ட குடு” என குரல் கொடுத்தார். அன்டனும் நகுலனும் அவனை மதிப்பதால் உதவி செய்ய நினைத்தார்போலும்.
காம்ப்பிலே, ஆறு ஏழுபேராவது இரவில் தங்குவது வழக்கம். ஒருதடவை அன்டனோடு போன கனகன் அங்கே கருவாட்டுக் குழம்புடன் சோற்றை ஒரு கை பார்த்திருந்தான். யாருடைய கைவண்ணமோ ருசியாக இருந்தது. அங்கேயே திலகன் அதிகமாய் தங்கிறவன். சமயங்களில் மன்னி வீட்டு விராந்தையில் பாயை விரித்து படுத்திருப்பான். காற்று நேரங்களில் கனகனோடு இருந்து விட்டு அவன் வீட்டு மணலில் படுக்கை விரித்து விடுவான்.
அன்டன் நகுலனைப்போல் இப்ப திலகனையும் அவனோடு காணக் கூடியதாக இருந்தது. செல்லன் வீட்டுக்கு அண்ணியும் அடிக்கடி தம்பியைத் தேடி வந்து அவனை விசாரிப்பார்.
இந்த திலகன் எப்படி இயக்கத்திற்குப் போனான் என்றது கனகனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அதோடு அண்ணிக்கு ஏற்பட்ட அந்த சம்பவம்? அண்ணி பாவம்!, அது அவன் மனதையும் உலுக்கிக் கொண்டே இருக்கிறது..
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.