- தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். இந்த நாவல் பிறந்த கதை தற்செயலானது. என்னுடைய பால்ய காலத்து நண்பர்களிலொருவர் கீதானந்தசிவம் சிவனடியான். இவர் யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் படித்தவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். பலவருடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் பல்வேறு விடயங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் நன்மை, தீமை பற்றி விவாதிக்க ஆரம்பித்தார். அப்பொழுதுதான் எனக்கு இந்நாவலின் மையக்கருத்து மனதிலுதயமானது. எதற்காக மனிதர்கள் தவறுகள் செய்கின்றார்கள்? என்ற கேள்வியின் விளைவாக எழுந்த தர்க்கமே 'கணங்களும், குணங்களும்' நாவலாக உருவெடுத்தது. ஒரு சில திருத்தங்களுடன் ஒரு பதிவுக்காக 'பதிவுகளி'ல் வெளியாகின்றது.
பகுதி இரண்டு - அகிலாவின் கதை: அத்தியாயம் ஒன்று - குழம்பிய நெஞ்சம்
படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தது தான் மிச்சம். நித்திரையோ வரவே மாட்டேன் என்கிறது. இரவோ நள்ளிரவையும் தாண்டி விட்டது. அப்பா கூடத்தில் குறட்டை விட்டுத் தூங்குவது இலேசாகக் கேட்கிறது. என் நெஞ்சிலோ அமைதியில்லை. அமைதி எப்படி வரும்? நத்து ஒன்று விட்டு விட்டுக் கத்துவது இரவின் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு காதில் கேட்கிறது. மீண்டுமொரு முறை புரண்டு படுக்கிறேன். பல்வேறு வகைப்பட்ட எண்ணங்கள். எண்ணங்கள். மனது அன்று மாலை குளக்கரையில் நடந்த சம்பவத்தையே அசை போட்டபடி. கருணாகரனின் உருவம் நெஞ்சில் வந்து சிரிக்கின்றது. உயர்ந்து திடகாத்திரமான அந்த உருவம். இதயத்தையே துளைத்து விடும் அந்தக் கண்கள். சதா சிந்தனையிலேயே மூழ்கிவிடும் அந்த அழகு வதனம். என்னால் நம்பவே முடியவில்லை. நம்பாமலிருக்கவும் முடியவில்லை. கருணாகரன் சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளி என்பது முன்பே தெரிந்து தானிருந்தது. ஆனால் அவன் செய்த குற்றம் இத்தகைய கொடுமையானதாயிருக்குமென்று நான் கனவில் கூட எண்ணியிருக்கவில்லை. தன் குழந்தையைப் போல அவனை வளர்த்து வந்த சுப்பிரமணிய வாத்தியாரிற்கு அவன் செய்த கைம்மாறு. காயத்ரீக்கு அவன் செய்த மன்னிக்கவே முடியாத அந்தக் கொடுமை. எப்படி அவனால் அவ்விதம் செய்ய முடிந்தது. கருணாகரன். எழுத்தாளன் நீலவண்ணனின் மறுபக்கம் இத்தனை கொடுமையானதாயிருக்க வேண்டும். என்னால் நம்பவே முடியவில்லையே. அவன் முகத்தில் விழிப்பதே பாவம் போலவிருக்கின்றது. பெண்களின் உணர்வுகளைச் சிறிதும் மதிக்காத ஆண்கள் வாழும் உலகின் ஒரு பிரதிநிதிதானே அவனும். செய்த தவறிற்காக அவன் மனம் வருந்துவது உண்மையாக இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம். ஆனால் சிதைந்துவிட்ட காயத்ரீயின் வாழ்வு. நடைப்பிணமாகவே மாறிவிட்ட சுப்பிரமணிய மாஸ்டரின் நிலைமை. கருணாகரன் மேல் வெறுப்பு வெறுப்பாக வந்தது. செய்த பாவங்களிற்குப் பரிகாரமாகத்தான் சமூகவேலை. அது இதென்று அலைகின்றானோ. இருக்கலாம். சிந்தித்து சிந்தித்து புரண்டு புரண்டு படுத்தது தான் மிச்சம். தெளிவுபெறுவதற்குப் பதில் மேலும் மேலும் குழம்பிப்போனதுதான் மிச்சம். எங்கோ ஒரு சேவல் கூவியது. அதனைத் தொடர்ந்து இரண்டு மூன்று சேவல்களின் கூவல்கள்.தொடர்ந்து இரவின் நிசப்தம்.இப்படித்தான் சிலவேளைகளில் சில சேவல்கள் நேரம் மாறிக் கூவிவிடுகின்றன. சிந்திக்கச் சிந்திக்க ஆரம்பத்தில் கருணாகரன் மேல் இருந்த வெறுப்பு சிறிதுசிறிதாக குறைவதுபோல் பட்டது. மனிதர்கள் அடிக்கடி தவறு செய்துவிடுகிறார்கள். சிலவேளைகளில் செய்யும் தவறுகள் சிறிதாக இருந்துவிடுகின்றன. இன்னும் சிலவேளைகளிலோ பெரிதாக இருந்துவிடுகின்றன. ஆனால் செய்ததென்னவோ தவறு தவறு தானே. மனிதனின் மனதில் நல்ல உணர்வுகளும் கெட்ட உணர்வுகளும் உறைந்து கிடக்கின்றன. சில கணங்களில் சில கெட்ட குணங்கள்,உணர்வுகள் ஆட்சி செலுத்தி விடுகின்றன. அந்தக் கணங்களில் மனிதன் தன் மனிதத்துவத்தை இழந்து மிருகமாகி விடுகிறான். பின்னால் கிடந்து வேதனையினால் வெந்து துடித்துப் போகின்றான். கருணாகரனின் கதையும் இதுதானே.
ஒரு கணநேர வெறியில் தன் மனிதப்பண்புகளை இழந்த அவன் காயத்ரியின் பெண்மையினையும் சூறையாடிவிட்டான். இவ்வளவு கொடுமையினையும் தாங்கிக்கொண்டு காயத்ரியால் எவ்வளவு துணிவாக வாழ்க்கையை எதிர்நோக்க முடிகிறது. காயத்ரி துணிச்சலான பெண்தான். கதைகளில், நாவல்களில் வரும் கதாநாயகிகளைப்போல் அவள் கோழையாக இருக்கவில்லை. என்றாலும் எவ்வளவு பரிதாபத்திற்குரிய பெண். இவ்வளவு நாளும் இதுபற்றி எனக்குத் தெரியாமல் போய்விட்டதே. இப்போதானே எல்லாமே வடிவாக விளங்குகின்றது. காயத்ரி எதிலும் பற்றில்லாமல் தாமரையிலைத்தண்ணிர் போன்ற துறவியைப்போன்றதொரு வாழ்வு, வாழ்வதன் காரணம் என்னவென்று.
கடந்த சில நாட்களாக அவள் பாடசாலைக்குக்கூட வரவில்லையே. நீண்ட நாட்களின்பின், கருணாகரனின் திடீர்ப்பிரவேசம் காரணமாக விருக்குமோ. சுப்பிரமணிய மாஸ்டரை நினைத்தாலும் கவலையாகத்தானிருக்கு. கண்ணிற்குக் கண்ணான பெண்ணின் வாழ்வு சீரழிந்த நிலையில் நடைப்பிணமான சூழலில் அவர் வாழ்வு. திடீரென எனக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. ஏன் மனிதர்களாகிய நாம் இந்த உயிரினங்கள்.இந்த உலகம்.இந்தப் பிரபஞ்சம் எல்லாம் இவ்விதம் உருவாகின. விரும்பி வந்து நாம் பிறக்கவில்லை. விரும்பாவிட்டாலும் போகாமல் இருக்காமல் இருக்கப்போவதில்லை. இதற்கிடையில் இடையில் தான் எத்தனை. எத்தனை.கூத்துக்கள். பூசல்கள்.உறவுகள்.பிரிவுகள். பிறக்கும் மனிதனை மனிதனாக வாழவிடாமல் அவனே உருவாக்கிய மனிதத்துவமற்ற சூழல்களிற்குள் சிக்கி உழன்று மூச்சுத்திணறி. திணிக்கும் கட்டுப்பாடுகளிற்குள். தளைகளிற்குள் பின்னிப்பிணைந்து. இவற்றின் அர்த்தமென்ன.அர்த்தமென்று என்றாவது ஒன்றுண்டா. புரண்டு புரண்டு படுத்தது தான் மிச்சம். மனதை ஒரு கட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை. நன்மை இது, தீமை இது என்று கட்டுப்பாடுகளை விதித்து வாழ்கின்றோமே. பார்க்கப்போனால் இந்தக் கட்டுப்பாடு களிலெல்லாம் கூட்டிக் கழித்துப்பார்த்தால் ஏதாவது அர்த்தம் உண்டா? நன்மை செய்தவனும் மண்ணோடு மண்ணாகத்தானே போகிறான். கெடுதல் செய்தவனும் அதே மண்ணிற்குள் தானே போகிறான். ஆனால் இந்த இயற்கை மட்டும் இப்படியே. ஆனால் பார்வைக்கு அமைதியாக இருக்கும் இந்த வெளியில் இந்த உலகிலும் கணந்தோறும் மாற்றங்கள். இயக்கங்கள். ஆனால் வாழ்வில் அர்த்தம் இல்லை. அர்த்தமற்ற வாழ்வு ஒரு மாயை. நன்மையாவது கெட்டதாவது என்று வாழ்வதை விட வாழும் வாழ்வில் அர்த்தம் கண்டு, ஒரு சில உயரிய கோட்பாடுகளை வரித்து வாழ்வதிலுள்ள இன்பம் தறிகெட்டு வாழ்வதில் இல்லையே.
என் நெஞ்சில் அன்று மாலை கருணாகரனுடன் ஏற்பட்ட அந்த மோதல் ஞாபகத்திற்கு வந்தது. நானோ எவ்விதம் மிருகத்தனமாகப் பேசிவிட்டு வந்தேன். பெரிய ஞானியைப்போல், மேதையைப்போல். அவனது கடந்த கால அந்தரங்கத்தை கூறும்படி கேட்டு விட்டு கூறியதும் வெறிமிருகம் அது இதென்று பேசிவிட்டு வந்ததில் என்ன நியாயம் இருக்கமுடியும்.நான் அவ்விதம் நடந்துகொண்டது சரியா? கருணாகரனைப் பொறுத்தவரையில் அவன் தவறு செய்துவிட்டான். செய்த தவறு திருத்தப்பட முடியாததொன்று. ஆனால் அவன் அதற்காக ஏழு வருடங்கள் சிறை வாழ்வை அனுபவித்துவிட்டு வெளியே வந்திருக்கின்றான். ஆனால் அதே சமயம் அவனால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாவமன்னிப்பை நாடி நிற்கின்றான். ஆனால் காயத்ரியைப் பொறுத்தவரையிலோ. சீரழிந்த அவள் வாழ்வு சீரழிந்தது தானே. இழந்தது இழந்தது தானே. திரும்பப்பெற முடியுமா என்ன? திடீரென என் நெஞ்சில் ஒரு கேள்வி எழுந்தது.
காயத்ரி தன் பெண்மை பறிபோய்விட்டதுமே தன் வாழ்வே சீரழிந்துவிட்டதுபோல் தன் வாழ்வை சீரழித்து வாழ்கின்றாளே. இதற்குக் காரணம். சமுதாயத்தில் நிலவும் இந்தக் கற்புப்பற்றிய கோட்பாடுதானே. கற்பு கற்பு என்று வாய் கிழிய கத்திக்கொண்டு. இந்தச் சமூகத்தில் ஆண்கள் தாராளமாய் தவறிப்போகின்றார்கள். ஆனால் அதற்காக அவர்கள் யாருமே காயத்ரியைப்போல் வீணாக வாழ்வே சீரழிந்துபோய்விட்டதாக அழுதுபுலம்பி வாழ்வைச் சீரழிப்பதில்லையே. ஆனால் ஒரு பெண் தவறி விட்டால் அல்லது காயத்ரியைப்போல் களங்கப்படுத்தப்பட்டுவிட்டால் சமுதாயம் மட்டுமல்ல பாதிக்கப்பட்ட பெண்களே தங்கள் வாழ்வைச் சீரழித்துக்கொள்கிறார்கள். சமூகத்தில் விழிப்பு ஏற்படுவதற்கும் முன்பதாக பெண்களிடத்தில் விழிப்பு ஏற்படவேண்டும். சமூகத்தில் நிலவும் ஒரவஞ்சகமான கோட்பாடுகளை எதிர்ப்பதற்குரிய பக்குவத்தை பெண்கள் பெறவேண்டும். பாரதி கூறுவதைப்போல ஆண் பெண் இருவரிற்குமே கற்பு பொதுவானதாகயிருக்கவேண்டும. ஆனால் அதே சமயம் கற்பினைக் காரணம் காட்டி வாழ்வையே சீரழிக்கும் போக்குகள் நிறுத்தப்படவேண்டும். இன்னமும் இந்த இரவின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு அந்த நத்தின் குரல் விட்டுக் விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. கூடவே சிள்வண்டுகளின் ரீங்காரம். ஆரம்பத்தில் குழம்பிக் கிடந்த நெஞ்சில் சிறிது அமைதி. கருணாகரனைச் சந்தித்து மன்னிப்பு கேட்கவேண்டும். காயத்ரியின் வாழ்வை மாற்றி வைக்க வேண்டும். நெஞ்சில் தெளிவு.
எப்போது தூங்கினேன் என்பது எனக்கே.தெரியாது? அப்படியே தூங்கிப்போனேன்.
பகுதி இரண்டு - அகிலாவின் கதை : அத்தியாயம் இரண்டு - காயத்ரியின் கல்யாணம்
மறுநாளும் காயத்ரி பாடசாலைக்கு வரவில்லை. அடுத்த திங்கள் வரை அவள் லீவு போட்டிருப்பதாக சுமித்ரா ரீச்சர் கூறினா. அன்று மாலை பாடசாலை முடிந்ததும் வீடு செல்வதற்கு முன்பாக காயத்ரியின் வீடு சென்றேன். வழக்கம் போல் சுப்பிரமணிய மாஸ்டர் சுருட்டொன்றைப் புகைத்தபடி முன்விறாந்தையில் ஈஸிசேரில் சாய்ந்திருந்தபடி வீதியின் நடமாட்டத்தை பார்த்தபடியிருந்தார்.
என்னைப் பார்த்ததும் "யாரு அகிலாவா?" என்றவர் தொடர்ந்தும் "காயத்ரீ உள்ளே தானிருக்கிறா” என்றவர் தன் சூழலிற்குத் திரும்பி விட்டார். உள்ளே சென்றேன். காயத்ரி அறையினுள் கட்டிலில் படுத்திருந்தாள். என்னைக் கண்டதும் கட்டிலில் எழுந்து அமர்ந்தாள்.
"என்னடி காயத்ரீ உடம்புக்கு" என்றேன்.
"இலேசான காய்ச்சல்..அதோடு மனசும் சரியாகவில்லை. அது தான் ஒரேயடியாக லிவு போட்டேன்." காயத்ரீயின் குரல் சுரத்தின்றி வெளிவந்தது.
அவள் நெற்றியில் கழுத்தில் கைவைத்துப் பார்த்தேன். இலேசாக சுட்டுக்கொண்டிருந்தது. பயப்படும்படியாக ஒன்றுமில்லை.
ஆனாலும் காயத்ரி சரியான அழுத்தக்காரி தான். இத்தனை வருடமாக அவளுடன் பழகுகிறேன். ஆனால் ஒருநாள் கூடத்தான் கடந்த காலத்தைப்பற்றி மறந்து கூட மூச்சுவிடவில்லையே. ஆனால் அதைச் சொல்வதால் தான் என்ன இலாபம் என்று நினைத்திருப்பாள் போலும்.
மெல்ல மெல்ல இருண்டு கொண்டிருந்தது. அந்திப் பறவைகளின் பல்வேறுபட்ட ஒலிகள் காற்றில் கலந்துவிட்டிருந்தன. ஜன்னலினூடு சிவந்து கிடந்த அடிவான் தெரிந்தது.
"காயத்ரீ”
என்ன என்பது போல் என்னை ஏறிட்டுப்பார்த்தாள். கட்டிலில் அவள் தலைமாட்டருகில் அமர்ந்து கொண்டேன். கூந்தலை மெல்ல நீவி விட்டேன். குழந்தையைப்போல அவள் பார்வை தெரிந்தது.
"காயத்ரீ. நீ எதையோ மனதில் வைத்து சங்கடப்படுவது போல் எனக்குப் படுகிறது. என்னிடம் சொல்வதால் உன் பாரம் குறையுமென்றால் ஏன் சொல்லக்கூடாது"
இதற்கு அவள் பதிலேதும் கூறாமல் சிறிது நேரமிருந்துவிட்டு கூறினாள்.
"அகிலா.அப்படி எதுவுமேயில்லை”
எப்படியாவது அவள் வாயைக் கிண்டி அவள் மூலமாக உண்மையை வரவழைக்கவேண்டுமென்று மனது பரபரத்தது.
"காயத்ரீ.உனக்கும் வயசாகுது..நீ ஏன் ஒரு கல்யாணம் செய்யக்கூடாது" திடுக்கிட்டவளாக ஒரு கணம் என்னை நோக்கிய காயத்ரீ, மறுகணமே சாதாரண நிலைக்குத் திரும்பிவிட்டாள். கூடவே முகத்தில் ஒருவித விரக்தி கலந்த பார்வை.அத்துடன் கூறவும் செய்தாள்.
"அகிலா, கல்யாண மென்பது நீ நினைக்கிற மாதிரி அப்படியென்ன இலேசான விஷயமா. சீதனம் சீதனமென்று அலையிற இந்த சமூகத்தில் ஏழைப்பெண்கள் திருமணத்தைப் பற்றிக் கனவு காணமுடியுமா என்ன?”
இவ்வார்த்தைகளை காயத்ரீ கூறியபோது அவள் குரலில் ஒப்புக்குக் கூறுவது போன்ற தொனியே ஒலித்தது.
"காயத்ரீ, உன் அழகிற்கும் குணத்திற்கும் சீதனமில்லாமல் உன்னைக் கட்டுவதற்கு எத்தனையோ பேர் போட்டி போடுவார்களடீ. நீ மட்டும் சரியென்று சொல்லு.சீதனப் பிரச்சனையேயில்லாமல் உனக்குக் கல்யாணம் செய்து வைப்பது என் பொறுப்பு” என்றேன். இதற்கு அவள் என்ன கூறிச் சமாளிப்பாளோ என்று எண்ணியபடியே அவளை நோக்கினேன்.
"அகிலா.கல்யாணம் கட்ட வேண்டுமென்பதற்காகவல்ல கல்யாணம். எனக்குப் பிடித்த என் உணர்வுகளைப் புரிந்த ஒருவர், சீதனமில்லாமல் என்னை ஏற்கவேண்டும்.ஆனால் அப்படிப்பட்டவர்கள் கோடியில் ஒருவரே." இவ்விதம் கூறியவள் தொடர்ந்தும் கூறினாள்.
"அகிலா.உன்னிடம் ஒன்று கேட்பேன் செய்வியா"
"என்ன காயத்ரீ இது.எது வேண்டுமானாலும் கேளு.செய்யக் காத்திருக்கிறேன்."
"தயவு செய்து இனிமேல் இந்தக் கல்யாணப் பேச்சை மட்டும் எடுக்காதே.ஏற்கனவே அப்பா உடைந்துபோய்க் கிடக்கின்றார். இந்தப் பேச்சு மட்டும் அவர் காதில் விழும் என்றால் சிதறியே போய் விடுவாரடி"
"காயத்ரி. உனக்கு விருப்பமில்லையென்றால் இந்தப் பேச்சை இனிநான் எடுக்கவே மாட்டேனடி.போதுமா"
காயத்ரியுடன் சிறிது நேரமிருந்து கதைத்துவிட்டு வீடு திரும்பிய போது கதிரவன் தன் தலையை அடிவானப்பெண்ணின் தழுவலிற்குள் மறைத்திருந்தான். இயற்கை அழகாக விரிந்து கிடந்தது. மெல்லிய தென்றல் உடலை வருடிச் சென்றுகொண்டிருந்தது. ஆனால் வீடு திரும்பிக்கொண்டிருந்த என் மனதிலோ பல்வேறுபட்ட உணர்வுகள். எண்ண அலைகள். காயத்ரியின் வாழ்வை எப்படியாவது சீர் செய்துவிட வேண்டும். அதே சமயம் கருணாகரனிற்கும் வாழ்வில் ஒரு அமைதியை ஏற்படுத்தவேண்டும். ஆனால் அது எப்படி? என்பதுதான் புரியவில்லை. ஆனால் விரைவிலேயே இதற்கொரு வழி காணவேண்டும் இவ்விதம் மனதினுள் உறுதிசெய்து கொண்டேன். பிரச்சனைகளால் மனது குழம்பியிருக்கையில் சில முடிவுகளை எடுத்ததும் தான் இவ்வளவு இலேசாகப் பாரம் குறைந்துவிடுகின்றது.
பகுதி இரண்டு - அகிலாவின் கதை : அத்தியாயம் மூன்று - மின்னல் வாழ்வு!
அன்று நிறைய வேலையிருந்தது.
அப்பாவுடன் பாரதி நகருக்குப்போகவேண்டும்.
பாரதிநகர் என்ற பெயர் அந்தக் குடியிருப்புப்பகுதிக்கு கருணாகரனால் தான் வைக்கப்பட்டது. பாரதிநகர் என்ற பெயர் நன்கு பொருத்தமாகத்தான் பட்டது. ஏழ்மை, சமுதாயச் சீர்கேடு, அடக்குமுறைகளிற்கு எதிராக, மக்களிற்காகவே பாடிப்போராடி மடிந்த பாரதியின் பெயரைவிட்டால் வேறு அப்படியென்ன பெயரை வைக்கமுடியும். அன்று பாரதிநகரிலிருந்து திரும்புவதற்கிடையில் கருணாகரனைத் தனிமையில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அன்று குளக்கரையில் அநாகரீகமாக நடந்துகொண்டதற்காக
அவரிடம் மன்னிப்புக்கேட்டேன். அதற்கு அவரோ "நீங்கள் அப்படி நடந்திருக்காவிட்டால் தான் ஆச்சரியப்பட்டிருப்பேன் அகிலா!" என்று சிரித்தபடியே கூறி, அதனை ஒரு பிரச்சனையேயில்லாமல் செய்துவிட்டார். என் நெஞ்சில் அவர் மேலிருந்த மதிப்பு மேலும் அதிகரித்தது. அதே சமயம் என் மனமோ மீண்டும் ஏன் தவறுகள் செய்துவிடுகின்றார்கள்? செய்யாமலே இருந்துவிட்டால் என்று ஆதங்கப்பட்டது. ஆனால் தவறுகளே செய்யாவிட்டால்..மனித வளர்ச்சி என்பதே கிடையாதே .தவறுகள் விடுவதும் அவற்றின் விளைவாக அனுபவம் பெறுவதும் இவற்றிலிருந்து அறிவு வளர்வதும்.மனித வாழ்வின் போக்குகளல்லவா இவை. தவறுகள், குற்றங்கள், புரிவது அப்படியொன்றும் பாரதூரமானதல்ல. ஆனால் அவற்றிலிருந்து பாடங்கள் படிக்காமல் விடுவதுதான் பாரதூரமாகப்பட்டது. தவறுகள் விட்டவர்கள், தவறுகள் விட்டதனாலேயே மாமனிதர்கள் ஆகவில்லையா.காந்தி தன் வாழ்வை சுயவிமர்சனம் செய்தார். விட்ட தவறுகளிலிருந்து தன்னை சுத்திகரித்தார். மகாத்மா ஆகவில்லையா? பெண் பித்தனாகத் திரிந்த அருணகிரிநாதர் அவதார புருஷராகி திருப்புகழே பாடவில்லையா. என் நெஞ்சினிலோ என்னையுமறியாமலேயே கருணாகரனின் நினைவுகளே அலையலையாய் பரவியபடியிருந்தன. ஆனால் கருணாகரனின், காயத்ரீயின் வாழ்வில் நிலவும் சிக்கல்களிற்கு தீர்வு எப்படிக் காண்பது என்பதுதான் புரியவில்லை. ஆனால் அதே சமயம்என்னையுமறியாமலேயே நானும் இந்தச் சிக்கலிற்குள் சிக்கிக் கொண்டிருக்கிறேனா என்பதும் புரியவில்லை.
பாரதிநகரிலிருந்து திரும்பும் போது இரவு ஒன்பது மணியைத்தாண்டிவிட்டிருந்தது. நகர் ஒன்பது மணிக்கே சந்தடியற்று ஓய்ந்துபோய்க்கிடந்தது. வவுனியாவைப் பொறுத்தவரையில் பிரதான நகரின் மையத்தைத் தவிர ஏனைய பகுதிகள் பெரும்பாலும் குடியிருப்புகளும் வயல்களுமாய் பரவிக்கிடந்தன. முன்பிருந்த காடுகள் பெரும்பாலானவை அழிக்கப்பட்டு ஏராளமான குடியிருப்புகள் உருவாகி விட்டன. இருந்தாலும் நகரின் அழகு குறையவேயில்லை. விண்ணில் சந்திரன் பவனிவரத் தொடங்கிவிட்டான். இதமான தென்றல் வயல்களினூடு வீசிக்கொண்டிருந்தது. பயிர்கள் அக்காற்றில் அசைவது கூட அந்த இரவின் அமைதியில் மிகத் தெளிவாகவே கேட்டன. வீதிகளில் சில கட்டாக்காலி மாடுகள் மரங்களிடையே வாலை அசைத்தபடி அசை போட்டபடியிருந்தன. நத்து, ஆந்தை முதலான இரவுப் பறவைகள் சில விட்டு விட்டுக் குரல் கொடுத்தபடியிருந்தன. தங்கள் பங்கிற்கு சில்வண்டுகளும் சளைக்கவில்லை. பால்போல் காய்ந்து கொண்டிருந்த நிலவின் ஒளிக்குப்போட்டியாக, கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழியாக மின்மினிகளும் ஒளிவீசப்போட்டி போட்டபடியிருந்தன. அந்த இரவின் அமைதியில் என் மனமும் என் வாழ்வின் சில சம்பவங்களை அசை போட்டபடியிருந்தது. கருணாகரன் என் வாழ்வில் குறுக்கிடுவதற்கு முன்னால் என் வாழ்வு பாடசாலையும் வீடுமாக ஓடிக்கொண்டிருந்தது. ஏழ்மையில் வாடும் மக்கள் பற்றியோ, அவர்கள் பிரச்சனைகள் பற்றியோ நான் எண்ணிப் பார்த்ததுமில்லை. அல்லது அவற்றை உணரக்கூடிய நிலையில் நிலையில் நானுமிருக்கவில்லை. நாவல்கள், கதைகள் படிப்பதுதான் குறிப்பிடக்கூடிய பொழுதுபோக்காக இருந்தது. ஆனால் இன்று உப்புச் சப்புமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த என் வாழ்வில் சுவை கூடியிருந்தது. பாரதிநகரில் மாலை நேரங்களில்
பாடம் சொல்லிக் கொடுப்பது மனதிற்கு நிறைவாக இருந்தது. ஆசிரியை வேலையின் பொறுப்புகளை, சமுதாயக் கடமைகளை உணர்ந்தேன். எனக்கே என் மேல் நம்பிக்கையும் அன்பும் பெருமையும் ஏற்பட்டன். கருணாகரனுடன் சந்திப்புகள் விவாதங்கள், கருத்துப் பரிமாறல்கள் என் அறிவை இவ்வுலகை விளங்கும் தன்மையை மேலும் மேலும் அதிகரித்தன. இந்நிலையில் கருணாகரனின் வாழ்வில் நடந்த சம்பவமும் காயத்ரீயின் பாதிப்பும் என்மேல் புதியதொரு பிரச்சனையைத் திணித்து விட்டதாக அல்லது உண்மையில் புதியதொரு பொறுப்பினைச் சுமத்தி விட்டதாக உணர்ந்தேன். இதே சமயம் தினமுழக்கத்தில் வெளிவரத் தொடங்கியிருந்த "கணங்கள் சில குணங்கள்” நாவலைத் தொடர்ந்தும் படித்துவந்தேன். கருணாகரன் தன் வாழ்வின் அனுபவங்களையே பிரதான மையமாக வைத்து அந்நாவலை எழுதுவதாகப் பட்டது. அந்நாவல் உளவியல் ரீதியில் அதில் வரும் கதாநாயகனின் பாதிப்பை விளங்கப் படுத்துவதாக அமைந்திருந்தது. அதில் வரும் கதாநாயகனிற்கும் நிஜகருணாகரனிற்குமிடையில் உள்ள பிரதான வித்தியாசம். அக்கதாநாயகன் கொலை செய்திருந்தான். நிஜக்கருணாகரனோ காயத்ரியைப் பாலியல் வல்லுறுவுக்குட்படுத்தியிருந்தான். இருந்தாலும் நாவல் மனித வாழ்வில் நிகழும் நன்மை, தீமைகளிற்கு இடையிலான போராட்டத்தையே மையமாக வைத்து நடைபோட்டபடியிருந்தது. சில கணங்கள், குணங்களில் எத்தகைய மாற்றங்களை விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன.
திடீரெனக் கீழ்வானைக் கிழித்தபடி எரிநட்சத்திரமொன்று ஓடி மறைந்தது. என் சிந்தனை மீண்டும் இவ்வுலகிற்கு திரும்பியது. எரிந்து மறைந்த எரிநட்சத்திரம் என் நெஞ்சில் வேறுவிதமான எண்ண அலைகளை ஏற்படுத்தின. சிறுகணமே வாழ்ந்தாலும் மின்னலைப்போல் எரிநட்சத்திரமும் ஒளிவீசி மறைந்து விடுகிறது. இதனைப்போலல்லவா மனித வாழ்வும் இருக்கவேண்டும். மின்னலைப்போல் இந்த எரிநட்சத்திரத்தைப்போல் ஒரு கணம் தான் வாழ்ந்தாலும் ஒளி தந்து பயனுள்ள வாழ்வு வாழ்ந்து மடியவேண்டும்.ஆனால் இந்தச் சிறுகணத்துள் தான் எத்தனை எத்தனை பாதிப்புகள். உணர்ச்சிப் போராட்டங்கள். எம்மைச்சுற்றி நாமே போட்டுக்கொண்ட வேலிகள்.தளைகள்.
"என்னம்மா அகிலா.ஒரே யோசனையில் ஆழ்ந்துவிட்டாய்."
அருகில் வந்துகொண்டிருந்த அப்பாதான் கேட்டார். ஆனால் என் மனவோட்டங்களை அப்பாவிடம் எப்படிக் கூறுவது.கருணாகரனின் கதையைப் பொறுத்தவரை அவரிற்கு அதுபற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை. இந்நிலையில் அவரிடம் என் பிரச்சனைகளிற்கான பதிலை எதிர்ப்பார்ப்பதில் அர்த்தமில்லை.
"ஒன்றுமில்லையப்பா.. சரியான வேலைக்களைப்பு" என்று சமாளித்தேன்.
பகுதி இரண்டு - அகிலாவின் கதை: அத்தியாயம் நான்கு - பெண் உள்ளம்
நாட்கள் ஓடி மறைந்தன. வாரங்கள் சில ஓடி மறைந்தன. ஏன் மாதங்கள் சிலவும் ஓடி மறைந்தன. என் வாழ்வில் குறிப்பிடும்படியான பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டு விடவில்லை. பாடசாலை செல்வது, காயத்ரீயுடன் அளவளாவுவது, சமயம் கிடைத்தபோதெல்லாம் கருணாகரனுடன் சிந்தனைகளை அலசுவது, பாரதிநகர் அபிவிருத்திக்கு உதவுவது, இவ்விதம் வாழ்வு ஓடிக் கொண்டிருந்தது. அதே சமயம் அன்றைய சம்பவத்திற்குப்பின்னர் காயத்ரியுடன் அவள் திருமண சம்பந்தமான பேச்சு எதையும் எடுக்கவேயில்லை. கருணாகரனுடனும் அவனது பழைய வாழ்வு பற்றியோ, காயத்ரீ பற்றியோ பேச்சு எதையும் எடுக்கவில்லை.
முக்கியமானதொரு சம்பவமாக வள்ளியுடனான எனது உறவின் வளர்ச்சியைக் குறிப்பிடலாம். பாரதிநகர் அபிவிருத்தியில் என்னை இணைத்துக்கொண்ட போக்கு காயத்ரியுடன் மட்டுமே சினேகிதியாக பழகிக்கொண்டிருந்த என் வாழ்வில் வள்ளியும் ஒரு சினேகிதியாக உருமாறியிருந்தாள். வள்ளியும் கடந்த கால வாழ்வின் போக்குகளிலிருந்து விடுபட்டு புதியதொரு வாழ்வு வாழ ஆரம்பித்து விட்டாள். பத்திரிகைகள் படிக்கவும் தன் அறிவாற்றலை வளர்க்கவும் அவள் முற்பட்டுக்கொண்டிருந்தாள். அதே சமயம் பாரதிநகர் அபிவிருத்திக்காக எவ்வித பயனும் கருதாது அவள் உழைத்துக் கொண்டிருந்தாள். வள்ளியின் கூரிய அறிவும் வளர்ச்சியும் அவளையே வருங்கால ஆசிரியையாக பாரதிநகரில் அமர்த்துவதாக எம்மை முடிவு செய்ய வைத்தது. இவ்விதம் வள்ளியை அப்பொறுப்பில் அமர்த்துவதே சரியான செயலாகவும், சீரடைந்துள்ள அவள் வாழ்விற்கு ஏற்றதாகவும் எமக்குப்பட்டது. இதே சமயம் பொதுவான நாட்டு நிலைமைகளைப் பொறுத்தவரையில், தமிழ் சிங்கள மக்களிற்கிடையான பிரச்சனைகள் ஆழமாகப் புரையோடிப்போன புண்ணாயிருந்த போதும். தமிழ் பகுதிகளைப் பொறுத்தவரை பெரிய அளவிலான தமிழ் மக்களிற்கெதிரான சிங்களப்படைகளின் அட்டகாசங்கள் எதுவுமே ஏற்பட்டிருக்கவில்லை. எப்பவாவது இருந்துவிட்டு சிங்கள தமிழ் கலவரங்கள் தென்னிலங்கையில் ஏற்படுவதும் சிங்கள அரசுகளின் தமிழ் மக்களிற்கெதிரான ஒரவஞ்சகமான சட்டதிட்டங்கள் அமுலாகுவதுமான போக்கும், இவற்றிற்கெதிரான தமிழரசுக் கட்சியின் சத்தியாக்கிரகங்கள், கண்டனப்பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதான போக்கும் தவிர பொதுவில் தமிழ்ப் பகுதிகளில் சிங்கள தமிழ் கலவரங்களோ அமைதியின்மையோ இல்லையென்றே கூறலாம்.
பொதுவான நிலைமைகள் இவ்விதம் ஓடிக் கொண்டிருக்கையில் என் பெண்மைக்குரிய இதயத்திலோ குறிப்பிடும்படியான சில மாற்றங்கள். என் இதயத்திற்கு மட்டுமே உரிய இனிமை தரக்கூடிய எண்ணங்கள், சிந்தனைகளின் வியாபிப்பு. ஆடியும் பாடியும் சிறுபெண்ணைப்போல் வளைய வந்து கொண்டிருந்தேன். நானும் ஒரு பருவமடைந்த இளம்பெண். எனக்கும் இளமைக்குரிய உணர்வுகள் இருக்கும் என்பதை இதுவரை காலமும் மறந்தேயிருந்தேன். இதுவரை காலமுமான என் வாழ்வில் இன்று நான் கருணாகரனுடன் பழகுவதைப்போல் வேறெந்த ஆணுடனுமே பழகியிருக்கவில்லை. முதல் முதலாக என்னையறியாமலேயே கருணாகரனுடனான எனது தொடர்பு, உறவு இன்னுமொரு தீவிரமான கட்டத்தை நோக்கி வளர்ச்சியடைந்து செல்வதாகப்பட்டது.
நான் காதல் உணர்வுகளால் பீடிக்கப்பட்டிருந்தேனா.நான் என்னையே அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தேன். கருணாகரனை என்னையறியாமலேயே நான் உள்ளூரக் காதலிக்கத் தொடங்கி விட்டேனா.ஆனால் உண்மையில் கருணாகரனின் அறிவும் தெளிவும் என் வாழ்வை நிரம்பவே மாற்றித்தான் விட்டன. அதே அந்தக் கம்பீரமான உருவம்.சதா சிந்தனை தவழும் வதனம். கூரிய ஆனால் தெளிவான அந்தச் சொற்கள்.எண்ணங்கள்.என் நெஞ்சம் அவனருகே நிற்கும் போதெல்லாம் சிறகடித்துப் பறக்கத் தொடங்கி விட்டதென்னவோ உண்மைதான். பாரதியின் காதற்கவிதைகள், வள்ளுவரின் காமத்துப்பால் ஆகியன நெஞ்சில் இன்பத்தைப்பரப்பின. பாரதியின் காதற்பாடல்களோ நோய்ப்பட்டிருந்த என் இதயத்திற்கு அருமருந்தாகவே தெரிந்தன. ஆனால் அதே சமயம் கற்பனையில் என் இதயம் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த அதே சமயம், நிஜங்களின் தன்மையினையும் நான் அறிந்து தானிருந்தேன். கருணாகரனுடனான தொடர்பு என் வாழ்வை மாற்றியதென்னவோ உண்மைதான். அவனது நினைவுகள் என் நெஞ்சினில் இன்ப நினைவுகளைப் பறக்க வைத்தன என்பதும் உண்மைதான்.ஆனால் அதே சமயம் கருணாகரனின் வாழ்வில் நிலவிய சிக்கலையும் காயத்ரியின்மேல் அவன் வைத்துள்ள அன்பினையும் நான் அறிந்து தானிருந்தேன். இந்நிலையில் நான் அவன் மேல் வைத்துள்ள காதல் வெறும் ஒரு தலைக்காதலாகவே இருக்கமுடியும் என்பதை நான் உணர்ந்து தானிருந்தபோதும் என் உணர்வுகளை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. மனித வாழ்வே ஒரு விசித்திரமாகவும் இவ்வித உணர்வுகளெல்லாமே புரிபட முடியாத இன்னுமொரு விசித்திரமாகவும் எனக்குப்பட்டது. இல்லாவிட்டால் கருணாகரனின் மேல் இவ்விதமானதொரு ஈடுபாடு எனக்கு ஈடுபட்டிருக்கமுடியுமா என்ன? நிறைவேற முடியாதது என்பது தெரிந்திருந்தும் அவன் மேல் இவ்விதமான ஈடுபாடு தான் ஏற்பட்டிருக்கமுடியுமா. இத்தகைய சந்தர்ப்பங்களில் தான் என் மனது இவ்வுலகம் சம்பந்தமான தத்துவ விசாரங்களில் அடிக்கடி ஆழ்ந்துவிடுகிறது.
உண்மையில் நான் காணும் இந்த உலகு.இந்த வான், இந்தச் சுடர்கள், தென்றல், மனிதர்கள், பறவைகள் யாவுமே உண்மையா என்று கூடச் சில நேரங்களில் சந்தேகம் கூட வந்து விடுகிறது. இந்த உணர்வுகள் இந்த எண்ணங்கள். இந்த நெருடல்கள். இந்த உருகல்கள். இவையெல்லாமே உண்மைதானா. என்று கூட ஒரு விதமான சந்தேகம் ஏற்பட்டுவிடுகிறது. இவ்விதமானதொரு உலகு. இவ்விதமானதொரு வாழ்வு, இவ்விதமான ஒரு நிகழ்வு, உறவு., பிரிவு ஏன் இவற்றின் அர்த்தம் தானென்ன? என்று மனது அடிக்கடி கேட்கின்றது. இவ்விதம் சில வேளைகளில் சலித்துக் கிடக்கும் நெஞ்சு, மறுநாளில் துள்ளியெழுந்து பழையபடி இவ்வுலக ஆசாபாசங்களில் துள்ளிக்குதித்து விளையாடத் தொடங்கிவிடுகின்றது.
இந்தக் கணத்தில் ஏன் இந்த உலகம், உணர்வு, இருப்பு யாவுமே உண்மையாக, உவகையாக நெஞ்சு அடித்துக்கொள்ளத் தொடங்கிவிடுகிறது. இது ஏன்? ஏன் நாம் வீணாக மனிதர்களாக வந்து பிறக்கின்றோம்? பிறந்து இந்த வாழ்க்கையில் கிடந்து உழன்று வாழும் சிறு வாழ்க்கையிலும் நாம் நாமாகத்தான் வாழ்கிறோமா என்றால். எம்மைச்சுற்றி எத்தனை எத்தனையோ தளைகளைப்போட்டுப் பூட்டி. அற்பத்தனமான அபிலாஷைகள், எண்ணங்களால், எண்ணங்களிற்காய் மோதிச் சிதைந்து, ஒருபுறம் ஏராளமான உயிரினங்களைக் கொன்றொழித்து ஏப்பம் விட்டபடியே.இன்னொரு புறம் உயிர்க்கொலை கூடாதென்று உபதேசம் செய்கிறோம். பேராசை, சுயநலம் முதலிய குணங்களால் உலகை ஏழ்மையில் வாடவைத்து விட்டுப்பிறகு போராடி மடிகின்றோம். இவ்விதம் பல்வேறுபட்ட சிந்தனைகளில் மூழ்கி விடுகின்றேன். இந்நிலையில் கருணாகரனின் உறவு என் நெஞ்சிற்கு இதமாக, உவகையாக என் வாழ்வில் முக்கியதொரு தொடர்பாக இருக்கிறது. ஆனால் என் காதலை அவனும் ஏற்கமாட்டான், எனக்கும் தேவையற்றது என்பது தெரிந்தும் கட்டுப்படுத்த முடியாமலிருக்கின்றது. ஏனெனில் அவனைச்சுற்றி எத்தனையோ பிரச்சனைகள். ஆனால் நான் நினைத்தபடி இன்பமாக உண்மையாக வாழ்வது தான் சரியான வாழ்க்கை யென்றால் "அப்படி என்னால் வாழ முடியாது. என் நெஞ்சின் உணர்வுகளை எனக்கு மட்டுமே சொந்தமாக்கி.என் உள்ளேயே ஒரு கற்பனை உலகை சிருஷ்டித்துக்கொண்டு.அதில் ஆடிப்பாடிப் பறந்துகொண்டு, நிஜத்தினாலேயோ வேறொரு அகிலாவாக போலியாக வாழவேண்டியுள்ளது. இப்படித்தான் ஒவ்வொருவரும் வெளியில் ஒரு உலகும் உள்ளே இன்னொரு உலகுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ.
அதே சமயம் என்னுள் ஒரு கேள்வி எழுந்தது. நான் கருணாகரனை இக்கணத்தே விரும்புவதைப்போல், அவன் திருமணமானவனாக என்னைச் சந்தித்திருந்தால் விரும்பியிருப்பேனா? ஆனால் என் நெஞ்சில் அவன் பதிந்ததற்குக் காரணமே.. அவனது சொற்கள், பார்வை, ஆண்மை எல்லாமே என்னோடு ஒன்றிக் கலந்தவை போன்றதொரு உணர்வு அல்லவா...அவனது கடந்த கால அந்தரங்க வாழ்க்கையை அறிந்த பின் வந்த உணர்வுகள் அல்லவே. சிக்மண்ட் பிராய்டின் உள்ளுணர்வுகள் பற்றிய கருத்துக்கள் தான் ஞாபகத்திற்கு வந்தன. இத்தகைய உணர்வுகள் யாவுமே இயற்கையாக பிறப்புடன் எம்முடன் வருபவை. யாரும் சொல்லித் தருவதில்லையே. இவ்விதமான சிந்தனைகளில் காலம் ஓடிக்கொண்டிருந்த நாட்கள் ஒன்றில் தான் அப்பா கூறினார் "அகிலா. வர வர உனக்கும் வயசாகிக்கொண்டு போகுதம்மா. உனக்கும் பார்க்கவேண்டிய இடத்தில் பார்த்து ஒரு முடிச்சைப்போட்டு விட்டால் எனக்கும் நிம்மதியாக இருக்கும்"
இங்கு யார் தான் ஒருவரின் உணர்வுகளைக் கவனிக்கின்றார்கள். நிலவும் பழக்கங்கள், சட்டதிட்டங்களை ஏற்று. ஒழுங்காக அதையே பின்பற்றி.போலியான சம்பிரதாயங்கள். போலியான வாழ்வு.பொய்மைகளுக்குள் உண்மைகளைத் தேடி தேடிச் சலித்துத் தளர்ந்து விடுகையில் உக்கி உதிர்ந்துவிடும் வாழ்வு.
பகுதி இரண்டு: அகிலாவின் கதை -
அத்தியாயம் ஐந்து: தெளிந்த உள்ளம்
அப்பா திருமணப் பேச்சை எடுத்தபோது. எனக்கோ திருமணம் செய்வதில் அதிக நாட்டமில்லாமிருந்து கருணாகரனுடன் கதைப்பதில், காயத்திரியுடன் பழகுவதில், பாரதிநகரில் கடமை செய்வதில், படிப்பிப்பதில் உள்ள நிறைவு, திருப்தியை திருமணம் செய்தால் இழந்து விடுவேன் போலிருந்தது. ஆனால் அதற்காக அப்பாவை எதிர்க்கவும் விரும்பவில்லை. ஒரு பெண்ணின் திருமணம் என்பது நடைபெறுவதில் உள்ள சிக்கல்கள் தெரிந்திருந்தால் அதுபற்றி நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அந்த நேரம் பார்த்துக் கொள்ளலாமென விட்டு விட்டு, உடனடிக் கடமைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். அதே சமயம் நாளிற்கு நாள் கருணாகரன் மீதான என் உணர்வுகள் தீவிரமடைந்து கொண்டே செல்வது போலவும் பட்டது. கருணாகரனில்லாத ஒரு வாழ்வை கற்பனை செய்து பார்க்கையில் சூன்யமான, வெறுமை கலந்த உணர்வொன்றே ஏற்பட்டது. அப்படி வாழ்வது முடியாதது போலவும் பட்டது. உண்மையில் கருணாகரன் மேல் ஏற்பட்ட உணர்வுகள் வெறும் பாலியல் ரீதியிலானவையா அல்லது தூய காதலுணர்வுகளா. தனிமனித உணர்வுகளிலிருந்து யாருமே மீட்சி பெற்று விடுவதில்லை என்றும் பட்டது. ஆனால் சமுதாயக் கடமைகளைச் செய்வதை இத்தகைய உணர்வுகள் பாதிக்காமல் இருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பட்டது.
கருணாகரனைப் பொறுத்தவரையில். மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பார்த்தேன். காயத்ரியைப் பொறுத்தவரையில் அவனை மன்னிப்பாளா என்பது தெரியவில்லை. ஆனால் கருணாகரனும் அவளது மன்னிப்பைப் பெறாமல் இன்னொருத்தியை ஏறெடுத்தும் பார்ப்பானோ என்பதும் தெரியவில்லை. இந்நிலையில் அவனது குற்றங்குறைகளை உணர்ந்து அவனை ஏற்க சித்தமாயிருக்கும் நான் ஏன் அவனை அடைய முயலக் கூடாது. ஒரு முறை, ஒரேயொரு முறை முயன்று பார்த்தால் என்ன? அவன் மட்டும் சரியென்று சொல்லட்டும், அவனிற்காக எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் காத்திருக்க என் மனது தயாராகவுள்ளதே. ஆரம்பத்தில் நடைமுறைக்குச் சாத்தியமற்றதாகத் தோன்றிய உணர்வுகள், இப்பொழுதே சாத்தியமானவையாகப்படத் தொடங்கின. உள்ளுக்குள்ளேயே வைத்து வைத்துப் புழுங்கிக் கிடப்பதை விட கேட்டு விடுவது நல்லது போல் பட்டது. இந்த ஒரு தலைக்காதல் உணர்வுகளைப் போல் பயங்கரமானவை வேறு எதுவுமேயில்லை போலவும் பட்டது. ஆனால் இவ்விதம் கேட்பதற்கும் தகுந்த ஒரு சந்தர்ப்பத்தை மனது எதிர் நோக்கியபடியிருந்தது. கருணாகரனிடம் என் மனதைக் கொட்டி அதற்குரிய பதிலைப் பெற்று விடுவது நல்லதுபோல் தோன்றியது. இம்முயற்சியில் எனக்கு ஏமாற்றம் கிடைத்தால். என்றொரு எண்ணமும் எழுந்தது. ஆனால் வாழ்க்கையில் எண்ணியவை யாவுமே கிடைத்து விடுவதில்லையே. அவ்விதம் ஏமாற்றம் ஏற்பட்டால் அதனைத் தாங்கிக் கொண்டு வாழ்க்கையை நடத்தக் கூடிய நெஞ்சும் நிறையவே என்னிடமிருந்தது. இவ்விதமானதொரு சந்தர்ப்பம் விரைவிலேயே கிடைத்தது. உண்மையில் விரைவிலேயே உருவாக்கிக்கொண்டேன் என்று தான் கூற வேண்டும்.
அன்று வழக்கம் போல் பாரதிநகர் வேலைகளை முடித்து விட்டுத்திரும்பும் போது கருணாகரனைத் தனிமையில் சந்தித்தேன். என் உள்ளத்துப் போராட்டங்களிற்கு முடிவு கட்டத் துணிந்தேன்.
'கருணாகரன், உங்களுடன் தனியாகச் சில விஷயங்கள் பேச வேண்டும். நாளைக்குப் பின்னேரம் குளக்கரையில் சந்திக்க முடியுமா” என்றவளைச் சிறிதே வியப்புடன் நோக்கிய கருணாகரன் "ஆகட்டும் அகிலா" என்றான். அடுத்தநாள் மாலைப் பொழுது. கருணாகரன் கூறியபடியே குளக்கரையில் எனக்காக காத்திருந்தான். நான் செல்கையில் அந்தியில் அந்தப் பிரதேசம் முழுவதுமே ஒருவித தனிமையில் மூழ்கிக் கிடந்தது. குளத்தினுள் சிறுசிறு கற்களை விட்டெறிந்து விட்டு, அப்படி எறிகையில் ஏற்படும் வட்டவட்ட அலைகளை பார்த்தபடியிருந்த கருணாகரன் என்னைக் கண்டதும் அப்படி எறிவதை நிறுத்தி விட்டு என்னையே நோக்கினான். அவனருகில் அமர்ந்து கொண்டேன்.
நிலவிய மெளனத்தை நானே கலைத்தேன்.
"கருணாகரன். நானேன் உங்களை வரவழைத்தேனென்று உங்களையே கேட்டுக் கொண்டிருப்பீர்கள் இல்லையா”
அவன் மெளனமாக என்னையே நோக்கியபடியிருந்தான். நானே தொடர்ந்தேன்.
"கருணாகரன். காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்"
"அகிலா. காதல் என்பது புனிதமானதொரு உணர்வு. தூயகாதல் உயர்வானது"
"எழுத்தாளரைப் போலவே பேசுகிறீர்கள்" என்று தொடர்ந்தேன்.
"கருணாகரன் ஒரு பெண் அல்லது ஒரு ஆண் ஒருவர். மேல் ஒருவர் காதல் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் அவர்களில் ஒருவர் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
"அப்படி வெளிப்படுத்துவதன் மூலம் தான் அவர்கள் தங்களது பிரச்சனைகளுக்கு இலகுவாகத் தீர்வு காண முடியும்." "சரி, விசயத்துக்கு வருகிறேன். உங்களது, நடத்தை, உங்களது தோற்றம் என்னில் ஒருவித பாதிப்பை ஏற்படுத்தி விட்டன. நான் உங்களைக் காதலிக்கிறேன் கருணாகரன்"
படபடவென்று விசயத்தைப் போட்டுடைத்தேன். பரபரத்த நெஞ்சை அடக்கிக் கொண்டேன். கருணாகரன் இதனைச் சிறிதுமே எதிர்பார்க்கவில்லை என்பதை சிறிதே நிலை குலைந்திருந்த அவனது முகபாவமே எடுத்துக் காட்டியது. சிறிது நேரம் எதுவுமே பேசாமல் மெளமாகவிருந்தவன் பேசினான்.
"அகிலா. நீங்கள் பட்டென்று விசயத்தைப் போட்டுடைத்ததற்கு நன்றி. ஆனால்” என்றவன் தொடர்ந்தான். இந்த "ஆனால்” என்ற விசயத்தை நான் முன்பே எதிர்பார்த்தது தானே. வீணாக மனதினுள் குமைவதை விட போட்டுடைப்பது நல்லதாகப் பட்டது.. போட்டுடைத்தேன். எதுவாயிருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே.
"அகிலா. என் வாழ்வை எடுத்துக் கொள்ளுங்கள். நான் என் வாழ்வில் காதலித்த ஒரே பெண் காயத்ரிதான். இந்நிலையில் அவள் வாழ்வை நான் சீரழித்து விட்டிருக்கிறேன். இத்தகையதொரு நிலையில் நான் எப்படி இன்னொருத்தியை ஏற்க முடியும்? என்னால் சீரழிந்த காயத்ரிக்கு நல்லதொரு வாழ்வை ஏற்படுத்த வேண்டும். அது தான் தற்போது என் நோக்கம். காயத்ரியின் வாழ்க்கையில் நல்லதொரு நிலையை ஏற்படுத்த முதல் என்னால் என்னைப் பற்றி நிச்சயம் சிந்திக்கவே முடியாது அகிலா"
கருணாகரனைப் பார்க்க பெருமிதமாகவுமிருந்தது. அதே சமயம் பாவமாகவும் இருந்தது. காயத்ரியின் போக்கை இவனால் எப்படி மாற்ற முடியும்?
"கருணாகரனைக். காயத்ரியின் வாழ்க்கையில் நல்லதொரு முடிவை ஏற்படுத்த வேண்டுமானால் அவளிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். ஆனால் இலகுவில் நடக்கக்கூடியதா என்ன?”
"அதுதான் அகிலா எனக்கும் கவலையாக உள்ளது. ஆனால் அது ஒன்று தான் நான் அவளிற்குச் செய்ய வேண்டிய பிராயச் சித்தம். அதற்காக எது வேண்டுமானாலும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்"
"ஆனால், அகிலா எல்லாமே என்னால் வந்த வினை தானே. இதனைத் தீர்க்க வேண்டியது எனது கடமை. இதற்கு முதல் நான் காயத்ரியைச் சந்திக்க வேண்டும். அவளிடம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். அகிலா உங்களால் மட்டும் அவளைச் சந்திக்க ஏற்பாடு செய்ய முடியுமென்றால்."
மிகவும் கஷ்டமான காரியம் தான். ஆனால் முயன்று பார்ப்பதில் தப்பில்லையே.
"கருணாகரன் உங்கள் நிலை எனக்குப் புரிகின்றது. என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்கிறேன். ஆனால்." என்று நிறுத்தினேன்.
"ஆனால். என்ன அகிலா"
"கருணாகரன். நான் உங்களைக் காதலித்தது தப்பானது என நீங்கள் கூற மாட்டீர்கள் என நினைக்கிறேன். இன்று நடந்த சம்பவத்தை மறந்து விடுங்கள். நாங்களிருவரும் தொடர்ந்தும் நல்லதொரு நண்பர்களாகவே இருப்போம்”
"அகிலா! நீங்கள் வெளிப்படையாகப் பேசியதற்காக நிச்சயம் உங்களைப் பாராட்டுகிறேன். நிச்சயம் உங்களை அடையும் யாருமே கொடுத்து வைத்தவர்தான்"
திடீரென என் மனதில் ஒரு உணர்வு எழுந்தது. "ஏன் கருணாகரன். இப்படிச் செய்தாலென்ன.." என்றவளை "என்ன” என்பது போல் நோக்கினான் கருணாகரன்.
"காயத்ரியைப் பொறுத்தவரையில் இன்னொருவனை மணக்கச் சம்மதிப்பாளா என்பதே பெரிய விசயம். ஆனால் ஏன் நீங்களே அவளை மணக்கக் கூடாது.”
"அகிலா. இது நடக்கக் கூடியதா. இது மட்டும் நடக்குமென்றால்.”
"கருணாகரன். இது மட்டும் நடக்குமென்றால். உங்களிற்கும் பிராயச்சித்தம் செய்தது போலாகும். அதே சமயம் காயத்ரிக்கும் வாழ்வு கிடைத்ததும் ஆகும்"
"அகிலா. இதற்கு மட்டும் காயத்ரி சம்மதிப்பானென்றால். ஆனால்."
"ஆனால். என்ன கருணாகரன்?”
"ஆனால். அவளது உணர்வுகளையே சிறிதும் பொருட்படுத்தாமல், மிருகமாகி அவள் உணர்வுகளை பெண்மையைச் சிதைத்த என்னை அவள் ஏற்றுக் கொள்வாளா?”
"கருணாகரன். ஆணுடன் ஒப்பிடும் பொழுது பெண்ணின் உளவியல் சிறிதே வேறுபட்டது. இரக்க சுபாவமும் மன்னிக்கும் தன்மையும் பொறுமையும் ஆணை விடப் பெண்ணிடம் நிறையவே உள்ளன. இதனால் தான் எனக்கு இவ்விடயத்தில் நம்பிக்கையுண்டு.”
இது மிகவும் சிக்கலான சிரமமான விசயம் தான். அதே சமயம் முடியக் கூடியது என்று தான் எனக்குப் படுகின்றது"
இவ்விதம் கூறிய என்னை நன்றியுடன் நோக்கினான் கருணாகரன். அந்த நன்றியில் அவன் காயத்ரி மேல் வைத்துள்ள காதலின் தீவிரத்தை உண்மையை என்னால் உணர முடிந்தது? என் நெஞ்சின் ஒரு மூலையில் என் ஏமாற்றத்தை புதைத்து விட்டேன். நான் இவன் மேல் கொண்ட காதல் உணர்வுகள் உண்மை என்றால், இவன் மேல் வைத்த அன்பு உண்மை என்றால் இவன் காயத்ரி மேல் வைத்த காதல் உணர்வுகளை நான் மதிக்க வேண்டும். அதனை அவன் அடையப் பாடுபடுவது தான் நான் அவன்மேல் வைத்த காதலின் உண்மையைக் காட்டுவதாயிருக்கும். கருணாகரனை எனது மனது விரும்பியது. என் நெஞ்சில் அவனது உணர்வுகள் ஒன்றிக் கலந்து விட்டிருந்தன. எனக்கு ஏற்பட்ட மாற்றத்தை விட அன்பிற்குரிய அவனது வாழ்வைச் சீராக்குவதே நான் செய்ய வேண்டிய கடமையாக நான் உணர்ந்தேன். அதே சமயம் என் உயிர்தோழி காயத்ரியின் வாழ்வில் ஒளியேற்றுவதே அவளுடனான என் நட்பின் பெருமையாகவும் நான் கருதினேன்.
அன்று நான் வீடு திரும்பிய பொழுது வழக்கத்தை விட என் மனது தெளிந்திருந்தது. இரவு முழுக்க படுக்கையில் பல்வேறு விதமான சிந்தனைகளுடன் புரண்டு புரண்டு படுத்தபோதும் மனது குழம்பியிருக்கவில்லை. தெளிவாகவே இருந்தது. கருணாகரனோ என் நெஞ்சில் இன்னும் ஒருபடி உயர்ந்தே இருந்தான். காயத்ரியின் நெஞ்சில் மாற்றத்தை ஏற்படுத்துவது பெரிய சிரமமான காரியம் என்பதை நான் உணர்ந்து தானிருந்தேன். பெண்ணின் உணர்வுகளை மதிக்காமல், அவளை வெறும் போகப் பொருளாகவே கருதும் பெரும்பாலான ஆண்களின் பிரதிநியாக, மிருகமான கணத்தில் கருணாகரன் அவள் பெண்மையை, உணர்வுகளைச் சீரழித்ததை அவளால் எப்படி மறக்க முடியும்? மிருக உணர்வுகளும் உயரிய மனித உணர்வுகளும் குடி கொண்ட ஒரு பாலுண்ணி தானே மனிதன். சில கணங்களின் விளைவுகளால் மனிதன் தவறிழைத்து விடுகிறான். ஆனால் பகுத்தறிவுள்ள மனிதனிற்கு மன்னிக்கும் சுபாவமும் உண்டல்லவா. காயத்ரீயின் மென்மையான, இரக்க சுபாவம் நான் அறியாததல்லவே. எப்படியாவது என்னால் முடிந்தளவிற்கு இவ்விடயத்தில் உதவ வேண்டும். அது தான் என் காதலின், என் நட்பின் கடமையாகப் பட்டது. திறந்திருந்த யன்னலினூடு விரிந்திருந்த வானமும், கெக்கலி கொட்டி நகைத்துக் கொண்டிருந்த நட்சத்திரக் கன்னியர்களும். காலவோட்டத்துடன் ஒப்பிடும் போது எமது வாழ்வு சிறுதுளியைப் போல் அர்த்தமற்று மறைந்து விடுகின்றது. ஆனால் இந்தச் சிறு வாழ்வினுள் தான். எத்தனை எத்தனை
ஒரு காலத்தில் நாம் வாழும் இந்த உலகம்தான் இந்த பிரபஞ்சத்தின் மையமாகவும், சூரிய சந்திரர்கள் எம்மைச் சுற்றி வருபவையாகவும் மனிதன் கருதிக் கொண்டான். ஆனால் இன்றோ விஞ்ஞானம் நாம் வாழும் இவ்வுலகை சூரியக் குடும்பத்தின் ஒரு மூலையில் வளைய வரும் அற்பமானதொரு சிறு கோளாகவும், நமது சூரியனை இப்பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கில் வளையவரும் சூரியன்களில் ஒரு சிறு அற்ப சூரியனாகவும் புலப்படுத்தி விட்டது. இந்நிலையில் இச்சிறுகோளில் மனிதர்களாகிய வளைய வரும் நாமோ. நாடு, மதம், மொழியென்று பிரிந்து நின்று, ஒருவரோடொருவரும் மோதிக் கொண்டு, எம்மை நாமே அழித்துக் கொண்டு, மனிதத்துவத்தையே இழந்து கொண்டு. இத்தகையதொரு சூழ்நிலையில் ஒரு தனிமனித வாழ்வை எடுத்துக் கொண்டாலோ. வாழும் சமுதாயத்தில் நிலவும் சீர்கேடுகளிற்குள் சிக்கி, உழன்று, தான் விரும்பியபடி வாழமுடியாதபடி வாழ்ந்து முடித்து போய் விடுகின்றோம். திறந்திருந்த யன்னல் வழியாக மெல்லிய குளிர் தென்றல் வந்து மேனியைத் தழுவுகின்றது. இவ்வாழ்வின் அர்த்தமென்ன? இவ்விதமான உணர்வுகளின் அர்த்தமென்ன? அர்த்தமற்றதொன்றாக நீர்க்குமிழியைப் போல் இக்காலவோட்டத்தில் நம் வாழ்வோ முடிந்து விடுகிறதெனில், அர்த்தமற்ற இவ்வாழ்வின் அர்த்தமென்ன? எங்கோ சேவலொன்று நேரம் தப்பிக் கூவியதைத் தொடர்ந்து, வேறு சில சேவல்களின் கூவல்கள். பின் ஒருவித அமைதி, நள்ளிரவு. சுவரில் பல்லியொன்று இரைக்காக மெளனமாக, அமைதியாகக் காத்து நிற்கின்றது. சிறிது நேரத்தில் அழியப்போகின்ற அந்தப் பூச்சிக்காகவும், பின்னொரு நாளில் அழியப்போகின்ற அந்தப் பல்லிக்காகவும். ஏன் எல்லா உயிர்களின் மேலும் ஒருவித அனுதாபம் தோன்றியது. அர்த்தமற்றுத் தோன்றும் இந்த வாழ்வில், இந்தக் கணத்தில் அர்த்தம் கண்டு வாழ்வது தான் சரியானதாகப் படுகின்றது. இந்தக் கணத்தை நாம் இன்பமாக யாருக்குமே கெடுதல் செய்யாததாகக் கழிக்க வேண்டும். அதே போல் தான் இவ்வாழ்வையும் நாம் கழிக்க வேண்டும். இதுதான் மனித வாழ்வின் தத்துவமோ. இந்தச் சிறிய வாழ்வில் அமைதியை, இன்பத்தை தருபவை இந்தக் காதல், அன்பு உணர்வுகளல்லவா.
திடீரென அமைதியாயிருந்த விண்ணைக்கிழித்தபடி எரிநட்சத்திரமொன்றின் விரையல். முடிவை நாடிய அதன் பயணத்தினிடையில் ஒளிவீசி விட்டு மறையும் எரிநட்சத்திரங்கள். முடிவதற்குள் விடியலிற்காய் பயனுள்ள வாழ்வு. இதுதான் வாழ்வின் நோக்கமோ. இந்த எரிநட்சத்திரங்களைப் போல் ஒவ்வொருவரும் பயனுள்ள வாழ்வு வாழ முயன்றால். போராவது. பூசலாவது. நாங்கள் மனிதர்கள். மனிதர்களாகிய நாங்கள் மிருகங்களை விட உயர்ந்தவர்கள். மனிதர்களாக வாழ முயலவேண்டும். பல்வேறுப்பட்ட சிந்தனை வளையங்களாக. எவ்விதம் தூங்கினேனே தெரியவில்லை அப்படியே தூங்கிப் போனேன்.
பகுதி இரண்டு 'அகிலாவின் கதை முடிந்தது. இனி காயத்திரியின் கதை தொடரும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.