அத்தியாயம் பத்தொன்பது: கோஷின் காதல்!
அன்றைய தினம் மாலை இளங்கோவும் அருள்ராசாவும் வீடு திரும்பியபோது அவர்களது சிந்தனையெல்லாம் அடுத்தநாள் அவர்கள் ஹரிபாபுவுக்காக ஆரம்பிக்கவிருக்கும் நடைபாதை வியாபாரத்தின் மீதிலேயேயிருந்தது. அனறு சில மணித்தியாலங்கள் ஹென்றியுடன் பொழுதினைக் கழித்ததன் மூலம் ஓரளவுக்கு அவர்களுக்கு ஹரிபாபுவின்நடைபாதை வியாபாரம் பற்றிய புரிதலேற்பட்டுவிட்டிருந்தது. சிறிது முயன்றால் விற்பனையை மேலும் அதிகரிக்கலாம் போலவும் அவர்கள் எண்ணினார்கள். இதே சமயம் இளங்கோ தடுப்புமுகாமிலிருந்து வெளிவந்த நாளிலிருந்து அன்றுவரையிலான அவர்களது வாழ்வின் நிக்ழ்வுகளை ஒருகணம் எண்ணிப் பார்த்தான். இதுவரையில் புதுப்புது அனுபவங்களுக்குமேல் அனுபவங்களாக பொழுதுகள் விடிந்து கொண்டிருந்தனவேயல்லாமல் ஓர் உறுதியான அடித்தளத்தைப் பொருளியல்ரீதியிலிட்டு எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் வகையில் எந்தவிதமான சம்பவங்களுமே நிகழவில்லையே என்ற உண்மை உறைத்தது. அந்த நினைப்புடன் அவன் அருள்ராசாவிடம் கூறினான்: "அருள்! இதுவரையிலை ஒன்றுமே எங்கடை எதிர்கால வாழ்க்கையை உறுதியாகக் கட்டுகிறமாதிரி அமையேலை. பார்ப்பம். இந்தத் தடவியாவது அமையுதாவென்று.."
அதற்கு அருள்ராசாவின் பதிலிவ்விதம் அமைந்தது: "என்னடா இளங்கோ. எப்பவுமே 'பாசிடிவ் திங்கிங்க்' அது இதென்று கதைத்துத் திரியிற நீயே இப்பிடிக் கதைக்கிறதை நினைச்சால் நானென்னத்தைச் சொல்ல. நீ அடிக்கடி சொல்லுற மாதிரி எல்லா
அனுபவங்களையுமே எதிர்கால வெற்றிக்கான படிக்கட்டுக்களாக எடுக்க வேண்டியதுதானே. அதைவிட்டிட்டு இப்பிடி நெகட்டிவ்வாகக் கதைக்கிறதாலை என்ன லாபம்?"
இளங்கோவுக்கு அருளின் கூற்று மனநிறைவினைத் தந்தது. அதே சமயம் தன் சொற்களையே வைத்து நண்பன் தன்னை மடக்கியதை நினைத்து உள்ளூர ஒருவித பெருமையும் கொண்டான். சோர்ந்திருந்த அவனது மனம் வழக்கம்போல் மீண்டும் துள்ளியெழுந்து விட்டது. அத்துடன் "அருள்! நீ சொல்லுறதும் ஒரு விதத்திலை சரிதான். எங்களுக்குக் ஹரிபாபுவிடம் கிடைச்சிருக்கிற சந்தர்ப்பம் ஒருவிதத்திலை
நல்ல சந்தர்ப்பமாகத்தான் படுகுது. விற்பனைக் கலையை எங்கடை வாழ்க்கையிலைப் பிரயோகித்துப் பார்க்கிறதுக்கு இது நல்லதொரு சந்தர்ப்பம் என்று கருதவேண்டியதுதான். அதுதான் உண்மையும் கூட. எங்களாலை முடிந்த அளவுக்கு ஹரிபாபுவிடமாவது நிலைச்சு நிற்க முடியுதாவென்று பார்ப்பம்" என்றும் கூறினான்.
ஹரிபாபுவுடனான வேலை பற்றிய சிந்தனைகளுடனும், எதிர்காலக் கனவுகளுடனும் தம்மிடம் திரும்பியவர்களை கோஷ் வரவேற்றான்: "நண்பர்களே! இன்று போன விடயம் என்னவாயிற்று? காயா? பழமா?"
அதற்கு இளங்கோவே முதலில் பதிலிறுத்தான்: "ப்ழம்தான். நாளையே அவனுக்கு வேலையை ஆரம்பிக்கப்போகின்றோம். இன்று அவனது விற்பனயாளனான எஸ்கிமோ ஹென்றியுடனிருந்து வியாபாரத்தின் நுணுக்கங்களைக் கவனித்துக் கொண்டோம்"
இச்சமயம் இடைமறித்த கோஷ் "என்ன மராத்திய முதலாளி எஸ்கிமோவிடமும் வேலை வாங்குகின்றானா? ஆள் ஊரையே தின்ற கள்ளனாகவிருப்பான் போல் தெரிகிறதே!" என்று வியந்தான்.
இதற்கு அருள்ராசா பின்வருமாறு பதிலளித்தான்: "ஒருவிதத்தில் நீ சொல்லுவதுபோல் ஊரைத்தின்று ஏப்பமிட்டவன் போல்தான் தெரிகிறான். இன்னும் அவனுடன் பழகி அவனைப் பற்றிய போதிய தகவல்கள் பெற்றுக் கொண்டதன் பின்னர்தான் அவனைப் பற்றிய எந்தவொரு முடிவுக்கும் வரமுடியும். எதற்கும் அவனுடனும் வேலை செய்து பார்ப்போம். முயன்று பார்ப்பதில்தான் தவறொன்றுமில்லையே."
இவ்விதம் அருள்ராசா கூறவும் இளங்கோ கூறினான்: "அருள்! சரியாய்ச் சொன்னாய். அவசரப்பட்டு முடிவுகளை எடுத்து விட்டுப் பிறகு கஷ்ட்டப்படுகிறதிலும்பார்க்க ஆறுதலாக முடிவுகளை எடுக்கப் பழக வேண்டும் அதுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் வந்து வாய்ச்சிருக்கு"
இச்சமயம் மீண்டும் அவர்களது உரையாடலில் தன்னையும் பிணைத்துக் கொண்ட கோஷ் " நண்பர்களே! இந்த விடயத்தில் எனக்கு உங்களை நிரம்பவும் பிடித்திருக்கிறது. எத்தனை தடவைகள் முயற்சி பிழைத்தாலும் , எதிர்பார்த்த விளைவினை ஏற்படுத்தாது போனாலும் தளர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறீர்களே! அது எனக்கு நன்கு பிடித்துள்ளது. நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள். ஒருவேளை இம்முறையும்...."
அருளராசாவும் இளங்கோவும் ஏககாலத்தில் கேட்டார்கள்" ஒருவேளை இம்முறையும்.... .. என்ன பிழைத்துக் கொண்டால் என்றுதானேகூற வருகிறாய்?"
அதற்கு கோஷ் " ஒருவேளை இம்முறையும் உங்களது இந்த முயற்சி பிழைத்து விட்டால் கவலைப் படாதீர்களென்று கூற வந்தேன். நான் என் தொழிற்சாலையில் கதைத்து நிச்சயம் உங்களுக்கொரு வேலை எடுத்துத் தர முயல்கின்றேன் என்ன கூறுகிறீர்கள்?"
இதற்கு இளங்கோ "கோஷ். நல்ல சமயத்தில் நல்ல வார்த்தைகள் பேசி நெஞ்சில் பாலை வார்த்தாய். உன்னை மறக்கவே மாட்டோம். நீ இவ்விதம் கூறியது எமக்கு இந்த வேலையினைச் சிறப்பாகச் செய்வதற்குரிய மன வலிமையினை அளித்து விட்டது. இந்த வேலை போனால் எப்படியாவது நீ எங்களுக்கொரு வேலை எடுத்துத் தருவாயென்ற நம்பிக்கையொன்று முகிழ்த்துள்ளது. அந்த நம்பிக்கை எங்களுக்கு இந்த வேலையினை உற்சாகத்துடன், நம்பிக்கையுடன் செய்வதற்குரிய ஆற்றலினை அளித்து விடுமென்ற நம்பிககை நிறையவே ஏற்பட்டுவிட்டது." என்றான்.
கோஷ்: "நல்லது. அதுதான் தேவை. இதில் மட்டும் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்களென்றால் உங்களைப் பிறகு பிடிக்க முடியாது. அதற்குப் பிறகும் இந்த அப்பாவி கோஷை நீங்கள் உங்கள் அடிமனதில் வைத்திருப்பீர்களா? வைத்திருப்பீர்களென்று நினைக்கிறேன்."
நண்பர்களிருவரும் ஒரே சமயத்தில்: "நிச்சயமாக. கோஷை நினைக்காமல் யாரை நினைப்பதாம்?"
கோஷ் உள்ளூர மகிழ்வுடன்: "பிறகென்ன! புது வேலை கிடைத்ததற்கொரு 'பார்ட்டி' போட வேண்டியதுதானே?"
இளங்கோ: "அதற்கென்ன, போட்டால் போயிற்று"
பிறகென்ன அன்றிரவுப் பொழுதும் குடியும் கும்மாளமுமாகக் கழிந்தது. ஆனந்தமாகப் பொழுதினைக் கழித்தனர். பல்வேறு விடயங்களைப் பற்றியும் தமக்குள் பல்வேறு எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். நனவிடை தோய்ந்தனர். அவ்விதமான நனவிடை தோய்தலில் உரையாடல் காதலில் வந்து நின்றது. கோஷ்தான் இந்த விடயத்தைப் பற்றி உரையாடலினை முதலில் ஆரம்பித்தவன்: "இளங்கோ. அடிக்கடி உனக்கு ஊரிலிருந்து ஒரு நாளைக்கு பத்து இருபதென்று கடிதங்கள் வருகிறதே. எல்லாமே காதற் கடிதங்களா?"
அதற்கு அருள்ராசா இவ்விதம் சிறிது கேலியாகக் கூறினான்: "அதையேன் கேட்கிறாய். ஐயா மேல் பழகாமலே வந்த காதலின் விளைவு அது."
இதற்கு கோஷ் சிறிது வியப்புடன் "என்ன பழகாமலே வந்த காதலா? அப்படியும் காதல் வருமா என்ன? "என்றான்.
அதற்கு அருள்ராசா "வருமாவா. ஐயாமேலை வந்திருக்கிறதே" என்றான்.
இச்சமயம் உரையாடலில் குறுக்கிட்ட இளங்கோ "இதுவொரு பெரிய கதை. பிறகொரு சமயம் கூறுகிறேனே. இப்பொழுது இதெல்லாவற்றையும் கொஞ்ச நேரமாவது மறந்து விட்டு உற்சாகமாகப் பொழுதினைக் கழிப்போமே"
இச்சமயம் கோஷின் முகம் சிறிது வாட்டமடைந்தது. "இளங்கோ நீ கொடுத்து வைத்தவன். என் நிலையைப் பார். ஒரு சமயம் ஒருத்தியை நீண்ட காலமாக ஒரு தலைக்காதலாக விரும்பினேன். அவளோ அதை எள்ளி நகையாடிவிட்டு இப்பொழுது இன்னுமொருத்தனுடன் கூடி வாழ்கிறாள். அதையே மறக்க முடியாமல் இன்னும் கிடந்து மனது வாடிக்கொண்டுதான் இருக்குது."
இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் கோஷின் காதற்கதை சிரிப்பையும், வியப்பையும் கூடவே தந்தது.
"என்ன ஒருதலைக் காதலியை நினைத்து இன்னும் வாடிக்கொண்டிருக்கிறாயா. இருதலைக்காதலென்றாலும் பரவாயில்லை. அதுவும் ஒருதலைக் காதல். அதற்காக யாராவது இவ்விதம் மனதைப் போட்டு வருத்திக் கொண்டிருப்பார்களா?"
இவ்விதம் இளங்கோவும், அருள்ராசாவும் கூறவும் கோஷிற்குச் சிறிது சினமேற்பட்டது. எவ்வளவு எளிதாக அவனது அந்தக் காதலை அவர்கள் எடைபோட்டு விட்டார்கள். பதினைந்து வருடங்களாக அவன் மனதுக்குள் உருகி உருகி வளர்த்த காதல் உணர்வுகளை எவ்விதம் எளிதாகக் கருதிவிட்டார்கள். சுமித்திராவின் ஞாபகம் நெஞ்சில் தலைகாட்டியது. சுமித்திரா அவனது நெஞ்சில் காதற்பயிரை வளர்த்துவிட்டுப் பின்பு காட்டுப் பன்றியாகச் சீர்குலைத்தவள். அது அவள் தவறா?
சுமித்திராவின் நினைவுகள் தந்த கனத்தினைத் தாளமுடியாதவனாக இன்னுமொரு மிடறு 'ஜானிவாக்கரை' உள்ளே தள்ளினான் கோஷ். அவனது கண்கள் மதுமயக்கத்தால் மேலும் சிவந்தன. இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் அவனது காதற்கதையைக் கேட்பதிலொரு சுவாரசியமேற்பட்டது. இச்சமயம் வீட்டுச் சொந்தக்காரர் அஜித்தும் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டார். வரும்போதே இலேசாக அவர்களது உரையாடலைச் செவிமடுத்துக் கொண்டு வந்தவர் "என்ன காதல் அது இதுவென்று அடிபடுகிறதே. என்ன விசயம்?" என்றார். அவர் இவ்விதம் கேட்கவும் அருள்ராசா கூறினான்: "அங்கிள். நீங்களே சொல்லுங்கள் யாராவது ஒருதலைக்காதலுக்காக இவனைப் போல் இவ்விதம் வாழ்க்கையை வீணாக்குவார்களா?"
இவ்விதம் அருள்ராசா கேலியாகக் கூறவும் கோஷின் சினம் மீண்டுமேறியது. "இங்குபார். இவ்விதம் மீண்டும் மீண்டும் நீ என்னை அவமதித்தால் நான் இப்பொழுதே இந்தப் பார்ட்டியிலிருந்து விலகிவிடுவேன்".
விளையாட்டு வினையாவதை உணர்ந்த இளங்கோ "கோஷ். அவன் கிடக்கிறான் விடு. நாங்கள் உன் காதலை நம்புகிறோம் இல்லையா அங்கிள்" என்றான். அதற்கு 'அங்கிள்' அஜித்தும் ஒத்துப்பாடினார்: "காதல் உணர்வுகள் ஒருதலையோ இருதலையோ புனிதமானவை என்பது என் கருத்து. காதலுக்காக ஒருவர் தன்னையே இழக்கச் சித்தமாகவிருக்கிறாரே. ஒருதலையோ இருதலையோ அந்த உறுதி உண்மையானதுதானே. எனக்குத் தெரிந்து ஒரு பெண்மணி ஒருத்தர்மேல் ஒருதலையாகக் காதல் கொண்டார். ஆனால் அவர் காதலித்தவரோ இதுபற்றி ஒன்றுமே அறியாமல் அந்தப் பெண்மணியின் உயிர்த்தோழி ஒருவரைக் காதலித்து மணந்து கொண்டார். அந்தப் பெண்மணியோ அதற்குப் பின் யாரையும் திருமணமே செய்யவில்லை. வாழ்க்கை முழுவதுமே தான் காதலித்தவரின் நினைவுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதைப்பற்றி என்ன சொல்லுகிறீர்கள்"
இப்பொழுது அருள்ராசா மீண்டும் உரையாடலினுள் தன்னை நுழைத்துக் கொண்டான்: "கோஷ். என்னை மன்னித்துக் கொள். நான் உன் ம்னதைப் புண்படுத்துவதற்காக எதனையும் கூறவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இந்தக் காதல் கீதல் உருகலெல்லாம் தேவையில்லாதவை. பருவக் கோளாறுகள். அதனால்தான் அவ்விதம் கூறினேன். ஆனாலும் இவ்விதம் காதல்வயப்பட்டு வாழும் மனிதர்களைக் கண்டு ஒவ்வொருமுறையும் நான் வியப்பதுண்டு. ஒருவேளை அவ்வுணர்வுகளை அறிந்து கொள்ளும் பக்குவமெனக்கில்லையோ தெரியவில்லை"
இப்பொழுது கோஷ் கூறினான்: "நண்பனே! பரவாயில்லை. நானும் சிறிது மிகையாக என் உணர்வுகளைக் கொட்டி விட்டேன். அவற்றை நீயும் மறந்துவிடு. ஒருவேளை நீ சொல்லுவதும் சரியாக இருக்கலாம். நான்தான் தேவையில்லாமல் என் வாழ்க்கையை இந்த உணர்வுகளுக்காக வீணடித்துக் கொண்டிருக்கிறேனோ தெரியவில்லை"
இளங்கோ: "கோஷ். நீண்டகாலமாக ஒருத்தியை விரும்பியதாகக் கூறினாய். எவ்வளவு காலமாக?"
கோஷ்: "பதினைந்து வருடங்களாக அவளை, சுமித்திராவை, நான் எனக்குள்ளேயே விரும்பியிருக்கிறேன். அவளிடம் இதுபற்றி எதுவுமே கூறாமலேயே எனக்குள்ளேயே பதினைந்து வருடங்களாக நான் அவளை விரும்பியிருக்கிறேன்.."
அனைவரும் வியப்புடன் :" என்ன பதினைந்து வருடங்களாகவா... இவ்வளவு வருடங்களாக ஒருமுறையாவது உன்காதலை நீ அவளுக்கு வெளிப்படுத்தவில்லையா! என்ன ஆச்சரியமிது. இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் கூட நடக்குமா!"
கோஷ்: "அதுதான் எனக்கும் புரியவில்லை. நானேன் அவ்வளவு காலம் அவ்விதம் ஓட்டினுள் தலையை நுழைத்துவிட்ட ஆமையாக இருந்திருந்தேனோ? எனக்கும் புரியவில்லை. ஆனாலொன்று.. அந்தப் பதினைந்து வருடங்களில் ஒவ்வொரு நாளும் நான் சுமித்திராவை நினைக்காத நாளில்லை. ஒவ்வொரு நாளும் அவளை நிணைத்திருக்கின்றேன். அவளைப் பற்றிய கனவுகளைக் கண்டிருக்கிறேன். அவளைப் பற்றி ஒவ்வொரு கணம் நான் நினைக்கும் போதும் என் நெஞ்சம் விரகத்தால் உருகி வழியும். என் ஆழ்மனது முழுவதும் அவளே நிறைந்திருப்பதால்தான் நான் அவ்விதம் நினைப்பதாகக் கருதினேன். அவ்விதம் ஒருவரை ஆழ்மனதொன்ற ஆழமாக
நினைப்போமானால் அந்த நினைவுக்குரியவரும் காலப்போக்கில் அவ்விதமே நினைப்பாரென்றொரு ஆழமானதொரு நம்பிக்கை உளவியல்ரீதியில் எனக்கிருந்தது. அதனால் நான் அவளைப்பற்றி ஆழமாக உருகிக் காதலிப்பதைப்போல் அவளும் என்னைக் காதலிப்பாளென்றொரு ஆழமான நம்பிக்கையுடன் வாழ்ந்திருந்தேன். பதினைந்து வருடங்களாக அவ்விதமே காலத்தைக் கழித்து விட்டேன். அதன்பிறகே அவளிடம் சொல்லுவதற்குரிய துணிவும் ஏற்பட்டது. ஆனால் அந்தச்சமயம் அவள் இன்னொருத்தனுக்குச் சொந்தமாகிவிட்டாள். இருந்தும் சந்தர்ப்பமேற்பட்டபோது அவளிடமே கூறினேன். அவ்விதம் கூறாவிட்டால் என் தலையே உடைந்து சுக்குநூறாகி விடும் போலிருந்ததால் என் மனப்பாரத்தை இறக்கி வைப்பதற்காக அவளிடமே அவ்விதம் சந்தர்ப்பமேற்பட்டபோது அவ்விதம் கூறினேன். அவ்விதம் கூறியதன்மூலம் என் காதல் வெற்றியடையாததாகவிருந்தாலும் ஒருவிதத்தில் அவளும் அறியும் சந்தர்ப்பமேற்பட்டதன்மூலம் இருதலைக் காதலாகி விட்டதல்லவா. அதன்பின்தான் என் மனப்பாரம் சிறிது குறைந்தது."
'அங்கிள்' அஜித்: "கோஷ். நீ அவ்விதம் அவளிடம் உன் காதலைத் தெரியப்படுத்திய சமயம் அவள் என்ன கூறினாள்? ஆத்திரப்பட்டாளா? அனுதாப்பட்டாளா?"
கோஷ்: "முதலில் நானும் அவ்விதமானதொரு பதில் தாக்கத்தைத்தான் அவளிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆனால் அவளோ மிகவும் இயல்பாக அதனை எடுத்துக் கொண்டாள். அவளிடம் நான் கேட்டேன் 'இவ்விதம் கூறியதற்காக ஆத்திரப்படுகிறீர்களா'வென்று. 'என்னைப்
பற்றித் தவறாக நினைக்கிறீர்களாவென்று'. ஆனால். அவளோ மிகவும் இயல்பாக என்னில் மிகவும் மதிப்பு வைத்திருப்பதாகக் கூறி அந்தச் சூழலையே மாற்றி வைத்து விட்டாள். அந்தக் கணத்திலிலிருந்து நான் அவள் பற்றிய நினைவுகளை மனதின் மூலையில் மூட்டை கட்டி வைத்து விட்டேன். இருந்தாலும் அந்தப் பதினைந்து வருடத் தாக்கம் அவ்வளவு எளிதில் போய் விடுமாயென்ன? நிறைவேறாக் காதல்
உணர்வுகள் தொல்லை தருவதைப் போல் வேறெந்த உணர்வுகளும் தொல்லை தருவதில்லை"
இவ்விதமாகக் கோஷ் தன் காதற் கதையினை அவர்களுடன் பகிர்ந்து கொண்டதைத்தொடர்ந்து மற்றவ்ர்களும் தங்கள் காதல் அனுபவங்களைக் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்கள். முதலில் 'அங்கிள்' அஜித்தே தன் காதற் கதையைச் சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்: "என் காதல் கதையைக் கேட்டால் உங்களுக்குச் சிரிப்பாகவிருக்கும். நானும் ஒருத்தியைக் காதலித்தேன். நான் யார் மூலம் அவளுக்குக் காதற்கடிதங்களை அனுப்பினேனே அவள்தான் இன்று எனக்கு மனைவியாக இருக்கிறாள். அக்கடிதங்களை அன்று ஆசையோடு வாங்கியவள் தன் வீட்டாரின் சொல்லுக்கடங்கி என்னைவிடப் படித்த பணக்கார மாப்பிள்ளையாகப் பார்த்துப் பிடித்துக் கொண்டாள். அன்று நான் பட்ட வேதனையைக் கண்டு பரிதாப்பட்டு பத்மா என்னைத் தன் கணவனாக ஏற்றுக் கொண்டாள். இனறு பத்மா இல்லாமல் ஒரு வாழ்வையே என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. வாழ்க்கையென்றால் எப்பொழுதுமே இப்படித்தான். நினைப்பதொன்று நடப்பதொன்று. சூழலுக்கேற்ப வாழப்பழகிக் கொள்ள வேண்டும்"
இச்சமயம் இளங்கோவுக்கும் தன் முதற்காதல் அனுபவங்கள் ஞாபகத்துக்கு வந்தன. கூடவே சிரிப்பும் வந்தது. அவன் தன் வாழ்க்கையில் ஒருமுறைதான் காதற் கடிதமென்று எழுதியிருக்கிறான். பதினாறு வயதுக் காதல். அவளது சுருண்ட கூந்தலும், நிலம் நோக்கிய பார்வையும், கூரிய கண்களும் அவனைப் பாடாய்ப்படுத்தி விட்டதன் விளைவாக ஒரு கடிதமொன்றினை எழுதி அவளிடம் நேரிலேயே
துணிவாகக் கொடுத்து விட்டான். அதில் அவள் அவனை விரும்பும் பட்சத்தில் வரும்போது தலையில் மல்லிகைப் பூ வைத்து வரும்படி கூறியிருந்தான். அவ்விதம் விரும்பாவிட்டால் அந்தக் கடிதத்தைக் கெட்ட கனவாக் மறந்து விடும்படியும், யாரிடமும் அது பற்றிக் கூற வேண்டாமெனவும் கூறியிருந்தான். அவளோ.. அவன் என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்த்தானோ அதனைச் செய்யாமல், எவையெல்லாவற்றையெல்லாம் செய்யக் கூடாதென்று எழுதியிருந்தானோ அவற்றையெல்லாம் செய்தாள். அதன்பிறகு அவளது தோழிமாரெல்லாரும் வழியில் அவனைக் கண்டால் அந்தக் கடிதத்தைப் பற்றிக் கூறி எள்ளிநகையாடத் தொடங்கி விட்டார்கள். அவனோ.. அத்துடன் அந்தக் காதற்கதைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு அவள் கொடுத்து வைத்தது அவ்வளவுதானென்று தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டான். அதன்பிறகு அவளை அவன் ஒருமுறை கூடச் சந்திக்கவேயில்லை. அதெல்லாம் அந்த வயதுக் கோளாறு. அத்தகைய கோளாறுகளால்தான் அந்தப் பருவமும் பூத்துக் குலுங்குகிறது. அந்த வயதில் விரும்பிய எத்தனைபேர் நிஜ வாழ்வில் இணைகிறார்கள்? இவ்விதமாக அன்றையை இரவுப் பொழுது உற்சாக பானமருந்தி காதல் பற்றிய நனவிடை தோயலுடன் கழிந்தது.
[ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் அமெரிக்கா என்னும் பெயரில் 2007 ஆம் காலப்பகுதியில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.- ஆசிரியர்]