ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான 'களனி வெள்ளம்' , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். - பதிவுகள்


12-ம் அத்தியாயம்: மொட்டைக் கடிதம்

ரெஜினா தங்கமணியைப் போல் கால்கள் வரை நீண்ட கிமோனாவை அணியாமல் கவுனே அணிந்திருந்தாள். அவள் ஒரு புள்ளி மான் போல் துள்ளித் துள்ளிக் கனி பறித்த காட்சி வீதியில் போய்க் கொண்டிருந்த இளைஞர்களின் கண்களுக்குப் பெரு விருந்தாயிருந்தது. அவளது உருண்டு சிவந்த கால்களின் எழில் அவ்வாறு வீதி இளைஞர்களின் கவனத்தைக் கவர்ந்தது, தங்கமணிக்குச் சிறிதும் பிடிக்கவில்லை.பத்மாவின் தோழி தங்கமணியை நாம் ஏற்கனவே பம்பலப்பிட்டி எஸ்கிமோ ஐஸ்கிறீம் பார்லரிலும், பல்கலைக் கழகத்துக்கு முன்னாலிருக்கும் நிழல் படர்ந்த பஸ் தரிப்பிலும், பல்கலைக் கழக இரசாயன ஆய்வு கூடத்திலும் சந்தித்திருக்கிறோம். இன்று வத்தளையிலுள்ள அவள் வீட்டில் அவளைச் சந்தித்து வருவோமா? தங்கமணி வசித்த வீடு வத்தளை மெயின் வீதியில் பஸ்தரிப்புக்குச் சமீபமாக அமைந்திருந்தது. அவள் அவ்வீட்டில் தன் தாய், தந்தையருடன் வசித்து வந்தாள். அவளது ஒரே தம்பியான சிங்காரவேல் வவுனியாக் கச்சேரியில் இலிகிதனாகக் கடமையாற்றினான். அப்பா கொழும்பில் ஏதோ கம்பெனியில் வேலை. வீட்டில் அம்மாவைத் தவிர, பேச்சுத் துணைக்கு ரெஜினா இருந்தாள். ரெஜினா கொழும்பில் ஒரு வியாபாரத் தலத்தில் சுருக்கெழுத்து - தட்டெழுத்து வேலை செய்பவள். தங்கமணி வீட்டில் பணம் செலுத்தி "போர்டராக" இருந்தாள். ரெஜினாவுக்கும் தங்கமணிக்கும் நல்ல சிநேகிதம். பொழுது போகாத நேரங்களில் பேசிக் கொண்டிருப்பதற்கும் விடுமுறைத் தினங்களில் சினிமாவுக்குப் போய் வருவதற்கும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்தார்கள்.

நாம் தங்கமணியைச் சந்திருப்பதற்கு சென்ற தினம் மகா சிவராத்திரி விரத நாள். விடுமுறையும் கூட. ரெஜினாவும் வீட்டிலிருந்தாள். தங்கமணி வீட்டு விறாந்தையில் ஒரு நாற்காலியில் தனது கிமோனாவில் ஒய்யாரமாக உட்கார்ந்திருந்தாள். ரெஜினாவோ விறாந்தைக்கு முன்னால் முற்றத்தில் தன் கிளைகளை ஒரு தட்டுப் போல் அலைப்பரப்பி வளர்ந்திருந்த ‘ஜாம்’ மரத்தில் ‘ஜாம்’ பழங்களைத் துள்ளித் துள்ளிப் பிடுங்கிக் கொண்டிருந்தாள். நன்றாய்க் கனிந்து வாய்க்கு ருசியான பதத்தில் பழுத்திருந்த கனிகள் கிடைத்த போது அவற்றைத் தன் வாயில் இட்டுக் கொண்டும், சாப்பிட பதமாகக் கிடைத்தவற்றை "இந்தா தங்கம், உனக்கு பிடி!" என்று தன் அன்புத் தோழிக்கு அவற்றை வீசிக் கொண்டும் நர்த்தனமாடினாள் அவள். ரெஜினா தங்கமணியைப் போல் கால்கள் வரை நீண்ட கிமோனாவை அணியாமல் கவுனே அணிந்திருந்தாள். அவள் ஒரு புள்ளி மான் போல் துள்ளித் துள்ளிக் கனி பறித்த காட்சி வீதியில் போய்க் கொண்டிருந்த இளைஞர்களின் கண்களுக்குப் பெரு விருந்தாயிருந்தது. அவளது உருண்டு சிவந்த கால்களின் எழில் அவ்வாறு வீதி இளைஞர்களின் கவனத்தைக் கவர்ந்தது, தங்கமணிக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. ஆனால் அதை வெளிக்குக் காட்டாமல் வேறு காரணத்துக்காக அவளை அழைப்பது போல் "ரெஜி! இங்கே வா. நான் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்!" என்று கூறினாள்.

"இரு தங்கம். இன்னும் கொஞ்சம் பழங்கள் பிடுங்கி விட்டு வருகிறேன். இன்றைக்கு முழு நாளும் விடுமுறைதானே? பேசிக் கொண்டேயிருக்கலாம்"

"அது சரி, நீ பழத்தைப் பிடுங்கத் துள்ளும் பொழுது உன்னுடைய சட்டை குடை மாதிரி காற்றிலே விரியுது"

"அப்படியா? அப்படியானால் வெகு அழகாயிருக்குமே?"

"அழகாயிருக்குது. ஆனால் ரோட்டிலே போறவர்கள் பார்க்கிறார்கள்!"

"பார்க்கட்டுமே, எங்களுக்கென்ன நட்டம்"

தங்கமணிக்கு ரெஜினாவின் துடுக்குப் பேச்சுப் பிடிக்காவிட்டாலும் "வாடி ரெஜி, காய்களைப் பிடுங்கி வீணாக்காமல் பழுக்க விடு. சரியாக நாளை விட்டு அடுத்த நாள் பதமாய்ப் பழுத்திருக்கும்." என்றாள்.

"காயா?" என்றாள் ரெஜினா ஆச்சரியத்துடன். எண்ணி மொத்தம் முப்பது கனிந்த ‘ஜாம்’ கனிகளை அவள் இது வரை நன்றாகச் சுவைத்துச் சப்பிட்டிருந்ததே அவளது ஆச்சரியத்துக்குக் காரணம்.

"ஓகோ, அப்படி என்றால் நீ பழங்களா சாப்பிடுகிறாய்! அப்போது பழத்தை எல்லாம் நீ சாப்பிட்டு விட்டுக் காய்களை எனக்கு எறிகிறாய், அப்படித் தானே?"

ரெஜினா தன்னை மீறி வந்த சிரிப்பை முகத்தைத் திருப்பி உதட்டைப் பிதுக்கி அடக்கிக் கொண்டு, "சீ! தங்கம், அப்படிச் செய்வேனா? இந்தா உனக்கொரு நல்ல பழம்" என்று கையுள் மறைத்து வைத்திருந்த செக்கச் செவேலென்று கனிந்த மூன்று பழங்களில் ஒன்றைத் தங்கத்தை நோக்கி வீசினாள்.

சில சமயங்களில் மிகப் பெறுமதியான பொருள்களைக் கூட சந்தோசமாகத் தியாகம் செய்ய முன்வரும் பலர் இப்படிப்பட்ட அற்ப பொருள்களை இன்னொருவருக்காகத் தியாகம் செய்ய முடியாது இடர்ப்படுவது எவ்வளவு வியப்பானது? நன்றாகக் கனிந்த அந்தப் பழத்தைத் தங்கமணிக்குக் கொடுக்க வேண்டி வந்ததே என்ற நினைவு வெகு நேரமாக ரெஜினாவின் உள்ளத்தை ஓரளவு அரித்துக் கொண்டிருந்தது. எனவே அந்த நட்டத்தை ஈடு செய்ய ‘ஜாம்’ மரத்தின் அடர்ந்த இலைகளுக்கிடையே பவளமணி போல நன்றாகக் கனிந்த ஜாம் பழங்களைத் தேடிக் கொண்டிருந்தாள் அவள். கடைசியில் கண்னுக்கு ஒரு கனிந்த பழமும் தென்படாத நிலை வந்ததும், வீட்டுப் படியில் குதித்தேறிக் காலில் இருந்த மணலில் வாசலில் இடப்பட்டிருந்த தென்னந்தும்புத் தடுக்கிலே தட்டி விட்டு விறாந்தைக்கு வந்து தங்கமணியின் நாற்காலிக்கு முன்னால் கிடந்த இன்னொரு நாற்காலியில் "அம்மாடி" என்று ஆயாசத்துடன் விழுந்தாள் அவள்.

தங்கமணி, அன்று விரதம் ஆனதால் காலையிலே குளித்து முழுகித் தலையை வழக்கம் போல் அழுத்திச் சீவாது கோடாலி முடி போட்டிருந்தாள். வழக்கமாக அவள் நெற்றியில் தீட்டப்பட்டு விளக்கும் ஆச்சரியக் குறி போன்ற திலகத்தையும் அன்று காணோம். திருநீற்றை மட்டும் நெற்றியில் சற்று அதிகமாக அப்பிக் கொண்டிருந்தாள்.

ரெஜி அவன் முகத்தை ஏற இறங்கப் பார்த்த வண்ணமே "என்ன தங்கம்! முக்கியமான விஷயம் ஒன்று பேச வேண்டுமென்றாயே, சொல்லேன். இப்போது நான் ‘பிறீ’ என்றாள்.

தங்கமணி சுற்று முற்றும் பார்த்துவிட்டு "அம்மா எங்கே!" என்றாள். "அடுக்களையிலே வேலைக்காரியோடு, செவிடியோடு பேசுவது போல சப்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். உமக்குக் காது கேட்காதோ?" என்றாள் ரெஜினா.

தங்கமணி அதற்குப் பதிலளிக்காமல், "வந்து... நான் சொல்லப் போகும் விஷயம் பரம் இரகசியம். இந்த உலகத்தில் உனக்கு மட்டும் தான் சொல்லுவேன். யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்தால் தான் கூறுவேன்" என்றாள்.

ரெஜினா, "அப்படி வாக்குறுதி அளிக்க என்னால் முடியாது. எந்த இரகசியத்தையும் ஓர் ஆளுக்கு மட்டும் நான் கட்டாயம் சொல்லுவேன். அது உமக்கு ஆட்சேபணை இல்லை என்றால் சொல்லும்" என்றாள்.

"யாருக்கு"

"என் போய் பிரெண்டுக்கு!... காதல் மன்னனுக்கு!"

போய் பிரெண்ட்! காதல் மன்னன்!

தங்கமணிக்கு உள்ளத்தை என்னவோ செய்தது. எல்லோருக்கும் ஒரு போய் பிரெண்ட், காதல் மன்னன்! இந்தக் காலத்துப் பெண்கள் எப்படியோ ஒவ்வொருவனைப் பிடித்து விடுகிறார்கள்! காலம் கெட்டுப் போய்விட்டது. ஆனால் என் விஷயத்தில் மட்டும் தான் நாசமாய்ப் போன காலம் கெட மாட்டேன் என்கிறது. எத்தனையோ பேர் தங்கமணியைப் பார்த்து பல்லிளிப்பது மெய்தான். ஆனால் உருப்படியானவன் ஒருவனும் இன்னும் பல்லை இளிக்காததுதான் தங்கமணியின் குறை. உத்தியோகமில்லாதவனும், உருக்குலைந்தவனும் உதவாக்கரைகளும் தான் அவள் பாதையில் வந்து கொண்டிருந்தார்கள். ஆகவே தங்கமணி, "ஓடு மீனோட உறுமீன் வருமளவும்" கொக்கு போல் வாடி இருக்க வேண்டியிருந்தது. இன்றைய விரதம் இது விஷயங்களில் நல்ல பலனைத் தருமோ என்னவோ? இதுதான் விரதம் அனுட்டிப்பதின் நோக்கம். பரீட்சையில் சித்தி பெறுவது தான் என்று அவள் உத்தியோக பூர்வமாக அப்பா, அம்மா, வேலைக்காரி, ரெஜினா ஆகியோர் முன்னிலையில் பகிரங்கப் பிரகடனம் செய்திருந்த போதிலும், அதன் அந்தரங்கமான நோக்கங்களில் தனக்கு ஒரு நல்ல கணவன், அல்லது காதலன் கிடைக்க வேண்டுமென்பதுமொன்றாகும். எமது புராணங்களின் படி உலக நாயகியாகிய உமாதேவியே தனக்குக் காதலன் வேண்டுமென்று விரதமிருந்திருக்கிறார். ஆகவே தங்கமணி அதற்காக இரகசிய விரதம் காத்ததில் தவறில்லையா?

ரெஜிக்கு தன் காதலனைப் பற்றி இடம்பமாகப் பிரகடனம் செய்ததை எப்படியோ ஒருவாறு தாங்கிக்கொண்டு அவருக்குச் சொன்னால் பரவாயில்லை. ஆனால் வேறு யாருக்கும் சொல்லுவதில்லை என்று வாக்குறுதி கொடு" என்றாள் தங்கமணி.

ரெஜினா அவ்வாறே வாக்குறுதி அளித்துவிட்டு, "அவருக்கும் நான் சொல்ல மாட்டேன். சும்மா உன்னை மிரட்டினேன்!" என்றாள் கொஞ்சலாக.

தங்கமணி, "சரி ரெஜினா, சொல்லுகிறேன்." என்று ஆரம்பித்தாள். முதலில் எப்படி விஷயத்தைத் தொடங்குவது என்று தெரியாது சிறிது நேரம் திக்கு முக்காடி வீட்டுக் கடைசியில் ஒரு மாதிரி விஷயத்துக்கு வந்து சேர்ந்தாள் அவள்.

"ரெஜி, உனக்குப் பத்மாவைத் தெரியும்தானே?"

"எந்தப் பத்மா? உன்னுடைய வார்சிட்டி மேட் நீச்சல் ராணி! நீ சொல்லியிருக்கிறாய். பத்திரிகைகளில் படத்தையும் பார்த்திருக்கிறேன்."

"ஆம். அந்தப் பத்மா தான். அந்தப் பெண் எங்களுர்ப் பையன் ஒருவனைக் கெடுத்துக் கொண்டு வருகிறாள்!"

"என்ன செய்கிறாள்?"

"காதல்..."

"காதல் கெடுதியா? அப்போது நீ என்னையுமல்லாவா கண்டிக்கிறாய்! தங்கம், நீ சரியான ஆள்!"

"இல்லை ரெஜி. நீ உன் தரத்திற்கேற்ற பொருத்தமான ஆளைத் தெரிந்தெடுத்துக் காதல் செய்கிறாய். அதிலே பிழையில்லை. ஆனால் பத்மா அப்படியல்ல..."

"அப்படியா... சொல்லு சொல்லு."

தங்கமணி சொல்ல ஆரம்பித்தாள்.

"எங்களூரிலேயே பெரிய குடும்பம் சேர் நமசிவாயம் குடும்பம். அவர்கள் பரம்பரையில் இன்றிருப்பவர் சிவநேசர். இலங்கையிலேயே பெரிய பணக்காரர், படிப்பாளி, சாதிமான், அவருடைய ஒரே மகன் ஸ்ரீதர். ரொம்ப அழகாயிருப்பான். அவனைத்தான் குலுக்கி மினுக்கி ஏமாற்றி வருகிறாள் பத்மா. கொட்டாஞ்சேனைச் சாக்கடையில் பிறந்த அவள் அப்படிச் செய்ய நாம் இடமளிக்கலாமா?"

ரெஜினா, "என்ன சிவநேசர் மகனைக் காதலிக்கிறாளா பத்மா? சிவநேசர் மிகவும் பெரியவர் ஆச்சே! நானும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் எப்படிப் போனாலும் நமக்கென்ன? நம்முடைய வேலையை நாம் பார்த்து கொண்டிருக்க வேண்டியதுதானே?" என்றாள்.

தங்கமணி அதற்குப் பதிலாக பத்மா -ஸ்ரீதர் காதல் சம்பந்தமாகத் தனக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் எடுத்துக் கூறினாள். நான் அவளை எஸ்கிமோ ஐஸ்கிறீம் பார்லரில் ஸ்ரீதரோடு சந்தித்ததையும் பஸ்தரிப்பில் ஸ்ரீதரின் பொய் வேடத்தைத் தான் பத்மாவுக்கு நிரூபித்துக் காட்டியதையும் கூறினாள்.

"ஸ்ரீதர் தன்னை ஏமாற்றி விட்டாள் என்றறிந்ததும் பத்மா பஸ் தரிப்பிலேயே அழ ஆரம்பித்து விட்டாள். ஆனால் நாலு நாள் போவதற்கிடையில் எப்படியோ விஷயங்களைச் சமாளித்துக் கொண்டு மீண்டும் அவனோடு வெட்கமில்லாமல் காரில் ஏறி உட்கார்ந்து கொண்டு அலைகிறாள். அதற்கிடயில் நீச்சல் ராணிப் போட்டி வேறு! அரை நிர்வாணமாக உடுத்திக் கொண்டு எப்படித்தான் அவளால் அந்த ஆண்பிள்ளைகளுக்கு முன்னால் போய் ஆட்டம் போய் ஆட்டம் போட முடிந்ததோ எனக்குத் தெரியவில்லை. நீரும் நானும் இவைகளுக்குப் போவோமா?..." என்றாள் தங்கமணி.

"ஏன் போனாலென்ன? நான் போவன். ஆனால் எங்களப்பாவுக்குத் தெரிந்தால் கொன்று போடுவார். உமக்கோ நீச்சலுடை நன்றாயிருக்காது. உம்முடைய உடம்பின் அளவுக்கு உமது கால்கள் மிக மெலிவு. ஆனபடியால் நீர் இவைகளுக்குப் போகாமலிருப்பது புத்தி தான்" என்றாள் ரெஜினா.

தங்கமணிக்கு ரெஜியின் பேச்சு ஓரளவு ஆத்திரத்தை ஊட்டியதாயினும் அதை வெளிக்குக் காட்டாமல் உள்ளே குமைந்து கொண்டு "அதில்லை ரெஜி, இந்தப் பத்மா - ஸ்ரீதர் ஜோடியை அடியோடு பிரிப்பதற்கு நான் ஒரு திட்டம் தீட்டியிருக்கிறேன். பார் நான் செய்யப் போகிற வேலையை" என்றாள்.

"என்ன செய்யப் போகிறாய்"

"ஸ்ரீதரின் அப்பாவுக்கு இந்தக் காதல் பற்றிய எல்லா விவரங்களையும் அறிவிக்கப் போகிறேன்."

"அதைத்தான் கோள் மூட்டுவது என்பார்கள். நீ கோள் மூட்டப் போகிறாயா? அது மிகவும் கெட்ட பழக்கமென்று சிறு வயதில் பள்ளிக் கூடத்துப் பிள்ளைகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்."

"நான் கோள் மூட்டப் போவதில்லை. கோள் மூட்டுவதென்றால் நேரே போய்ச் சொல்லுவது. நான் கடிதம் எழுதப் போகிறேன்."

"யாருக்கு, சிவநேசருக்கா? சிவநேசரை உனக்குத் தெரியுமா?"

"தெரியும். பார்த்திருக்கிறேன். எங்கள் கிராமத்தில் இருக்கும் இந்த நாட்டின் மிகப் பெரிய மனிதர் அவர். அவரை எனக்குத் தெரியாதா? ஆனால் அந்த அறிமுகத்தைக் காட்டாமலே கடிதமெழுதப் போகிறேன் நான்."

"எப்படி?"

"கை எழுத்துப் போடாமல் மொட்டைக் கடிதம் எழுதப் போகிறேன்..."

"மற்றவர் விஷயமாக நாம் ஏன் முத்திரையை இவ்வாறு செலவழிக்க வேண்டும்? கை எழுத்தில்லா கடிதத்தை முத்திரையும் இல்லாமலே போட்டு விடு. சிவநேசர் இரட்டிப்புப் பணம் கட்டி எடுக்கட்டும்... அது சரி, மொட்டைக் கடிதம் என்றாயே, அது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. சொல்லு கேட்போம்."

தங்கமணி அதற்குப் பெரிய விளக்கமே கொடுத்து விட்டாள். வவனியாக் கச்சேரியில் வேலை பார்த்த தம்பி சிங்காரவேலும் தானும் பல மொட்டைக் கடிதங்களை அவ்வப்போது எழுதியிருப்பதாகவும் உண்மையில் மொட்டைக் கடிதங்களில் எத்தனையோ வகைகள் இருப்பதாகவும் கூறினாள் அவள்.

"மொட்டைக் கடிதங்களில் சிலவற்றுக்குக் கை எழுத்தே இடப்படுவதில்லை. அவைதான் உண்மையான மொட்டைகள். ஆனால் மற்றும் சிலவற்றுக்கோ ‘உண்மை விளம்பி’, ‘சத்தியக் கீர்த்தி’, ‘சமூகத் தொண்டன்’ பொன்ற பெயர்கள் கை எழுத்தாக இடப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட கை ஒப்பம், தமது மொட்டைக் கடிதங்களில் உள்ள பொய்களுக்குச் சத்தியத்தின் வலுவையும் பரோபகாரத்தன்மையையும் தரும் எனபது அவற்றை எழுதுவோர்களின் எண்ணம். வேறு சிலர் "கம்பர்", "வள்ளுவர்", "அகஸ்தியர்" போன்ற புனை பெயர்களை உபயோகிப்பார்கள். ஆனால் மிகத் தந்திரசாலிகளான இன்னும் சிலரோ உண்மைப் பெயர்களைக் கூட உபயோகித்து விடுவார்கள். ஆனால் இது ஆள் மாறாட்டப் பிரச்சினைகளைக் கிளப்பிப் பல தொல்லைகளை அதை எழுதி பலருக்கு விளக்கக் கூடுமாதலால் அனுபவமிக்க மொட்டைக் கடித எழுத்தாளர்கள் இதை அதிகம் விரும்புவதில்லை."

அறிஞர் அ.ந.கந்தசாமி இப்படிப் பல ருசிகரமான தகவல்களைக் கூறினாள் தங்கமணி. தங்கமணி இந்த விவரங்களை எல்லாம் ஒரே மூச்சில் பிரசங்கம் போல் கொட்டி விடவில்லை. ஒரு வினா விடை ரூபத்தில் இத்தகவல்கள் ஒன்றன் பின்னொன்றாக வெளிவந்து மொட்டைக் கடிதங்களின் முழு உருவத்தையுமே விளக்கி விட்டன. ரெஜினா கேள்வி கேட்டாள். தங்கமணி விடை பகர்ந்தாள்.

ரெஜினா கேட்ட கேள்விகளுக்கு ஒன்று "மொட்டைக் கடிதங்களை ஏன் எழுத வேண்டும்" என்பதாகும். அதற்குத் தங்கமணி விரிவாகப் பதிலளித்தாள்.

"குடும்பங்களைப் பிரிப்பதற்கு, உத்தியோகத்தர்களை வேலையிலிருந்து நீக்குவதற்கு, தான் விரும்பாத காரியங்களை நடக்காது தடுத்து நிறுத்துவதற்கு - இப்படி எத்தனையோ நோக்கங்களுக்காக மொட்டைக் கடிதங்களை எழுதலாம். ஒரு குற்றமற்றவன் மீது கூட சந்தேகங்களை ஏற்படுத்துவதற்கு மொட்டைக் கடிதம் போல் சிறந்த கருவி வேறில்லை. உண்மையில் திறமையாக எழுதப்பட்ட மொட்டைக் கடிதங்களால் மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் கூட முடிச்சுப் போட்டு விடலாம்!" இவ்வாறு எத்தனையோ காரணங்களை எடுத்துக் கூறினாள் தங்கமணி. முடிவில் பின்வரும் காரணத்தைச் சொல்லவும் அவள் மறக்கவில்லை.

"மொட்டைக் கடிதங்களை நல்ல நோக்கங்களுக்காகவும் எழுதலாம். நான் எழுதப் போகும் மொட்டைக் கடிதம் அப்படிப்பட்டதுதான். இந்தப் பட்டணத்துப்  பாட்டுக் காரி பத்மா இலங்கையின் மிகவும் உத்தமமான ஒரு குடும்பத்தின் மதிப்புக்கே உலை வைக்கப் பார்க்கிறாளல்லவா. அதை நிறுத்துவதுதான் எனது நோக்கம். அது உயர்ந்த நோக்கந்தானே?" என்றாள் தங்கமணி.

ரெஜினாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. பெரியதொரு சூழ்ச்சித் திட்டத்தில் சும்மா இருக்கும் தன்னையும் இழுத்து மாட்டி விடப் பார்க்கிறாளோ என்ற பயம் ஏற்பட்டுவிட்டது அவளுக்கு.

"தங்கம்! எனக்கென்னவோ நீ செய்ய நினைப்பது சரியாகப் படவில்லை. உலகத்தைத் திருத்த எங்களால் முடியுமா? என்னுடைய போய் பிரெண்டை உனக்குத் தெரியும் தானே? அவர் அடிக்கடி சொல்லுவார்? இந்த உலகத்தைத் திருந்த வள்ளுவர் போன்ற பெரியார்களாலேயே இதுவரை முடியவில்லையாம். நம்மால் முடியுமா என்று! அவர் சொல்லுவதும் சரி தானே? பொய் சொல்லாதே என்று இயேசு, புத்தர், வள்ளுவர் எல்லோரும் தான் எத்தனையோ நூற்றாண்டுகளின் முன்னர் சொல்லிவிட்டார்கள். ஆனால் பொய் இன்று கூட கொஞ்சமாவது நின்றிருக்கிறதா உலகத்தில்" என்றாள் ரெஜினா.

"ஆனால் அதற்காக நாம் முயற்சியை விடலாமா?’ என்றாள் தங்கமணி.

"நடக்க முடியாத காரியங்களுக்காக நாம் முயலுவது வீண், தங்கம். நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று தெரிந்த பின்பும் யாராவது நாயைப் பிடித்து வைத்துக் கொண்டு அதன் வாலை நிமிர்த்திக் கொண்டிருப்பார்களா என்ன?"

"ஸ்ரீதர் - பத்மா விஷயத்தை நான் அப்படிப்பட்ட உடைக்க முடியாத விஷயமென்றெண்ணவில்லை ரெஜி. அதனால் தான் முயன்று பார்க்க நினைக்கிறேன்."

ரெஜினா தங்கமணியின் திட சங்கற்பத்தைக் கண்டு பயந்து போனாள். இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "தங்கம் நான் உன்னை ஒன்று கேட்கப் போகிறேன். நீ கோபித்துக் கொள்ள மாட்டாயே?" என்றாள்.

"இல்லை, கேள்" என்றாள் தங்கமணி. ரெஜியின் சிந்தனை தோய்ந்த முகத்தைத் தன் கழுகுக் கண்களால் உற்றுப் பார்த்தவண்ணமே,

"உனக்கு ஸ்ரீதர் மேல் ஆசையா? பத்மாவை வழியிலிருந்து அகற்றிவிட்டு நீ அவனைக் கட்டி கொள்ள விரும்புகிறாய். அப்படியா?" என்றாள் ரெஜி.

தங்கமணி கலகலவென்று சிரித்தாள்.

"அப்படிக் கனவு காண்பதற்கு நான் ஒரு மடைச்சி அல்ல. முடவன் கொம்பு தேன் ருசியாயிருக்கிறதே என்று ஆசைப்பட்டு என்ன பயன்? ஸ்ரீதர் குடும்ப அந்தஸ்தைப் பற்றி நீ இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை. அவர்கள் ஒரு போதும் என் போன்றவர் குடும்பங்களில் சம்பந்தம் செய்து கொள்ளவே மாட்டார்கள். ஆகவே அந்த எண்ணமே என் மனதில் தோன்றியதில்லை" என்றாள் தங்கமணி.

"அப்படியானால் பத்மா ஸ்ரீதரைக் கட்ட இடமளிக்கக் கூடாது. அதைச் செய்து முடித்தால் உனக்குச் சந்தோசம். அவ்வளவு தானே? மற்றவன் வாழ உனக்குப் பொறுக்க வில்லை. அதுதானே உன்னை இந்த மொட்டைக் கடிதத்தை எழுதத் தூண்டுகிறது?"

"பத்மாவின் தளுக்கும் குலுக்கும்! ஆனால் அதல்ல என் எண்ணங்களுக்குக் காரணம். ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தன் நிலைக்கேற்ற ஆசைகளைத் தான் கொள்ள வேண்டும். பத்மா தன் சமுதாய அந்தஸ்துக்கு மீறிய ஆசைகளைக் கொள்கிறாள். அது தான் எனக்குப் பிடிக்கவில்லை. சிறு வயதிலிருந்தே எனக்கு இப்படிப் பட்ட விஷயங்கள் பிடிக்கா."

ரெஜினா அதற்கு மேலும் பேச விரும்பவில்லை. தங்கமணியின் உள்ளம் ஒரு பொறாமைக் குளமாக விளங்குகிறது. எனபதை அவள் உணர்ந்து கொண்டாள். ஆகவே அவள் விரும்பியதை அவள் செய்யட்டும் என்று விட்டு விட எண்ணினாள் அவள். "சரி உம்முடைய இஷ்டம். எழுதுவதென்றால் எழுதும்" என்று கொண்டு பக்கத்தில் கிடந்த பத்திரிகை ஒன்றை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள் அவள்.

தங்கமணி ரெஜினாவிடம் "இந்தக் கடிதத்தை நான் சொல்ல, நீ உன்னுடைய கை எழுத்தில் எழுதித் தர வேண்டும். ஏனென்றால் எங்கள் கிராமத்தில் என் கை எழுத்தை யாராவது கண்டுபிடித்து விடலாமல்லவா?" என்றாள்.

ரெஜினா திடுக்கிட்டு விட்டாள். "சிச்சீ என்னால் முடியாது. நீயே எழுது. ஒரு மாதிரிக் கை எழுத்தை மாற்றி கீற்றி எழுது" என்றாள்.

தங்கமணி அதற்கு "அப்படி எழுதலாம் தான். முன்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் நான் அப்படி எழுதியிருக்கிறேன். என்றாலும் வேறு ஆளின் கை எழுத்தென்றால் நல்லது. நீயோ எங்கள் கிராமத்திலிருந்து வெகு தொலை. ஊர்காவத்துறை அல்லவா உங்கள் ஊர்? இன்னும் பத்மா ஸ்ரீதர் இருவரும் பல்கலைக்கழக மாணவர்கள். நானும் பல்கலைக் கழக மாணவி. அத்துடன் ஸ்ரீதரும் நானும் ஒரே ஊர். அவன் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் அரை மைல் தூரமில்லை. ஆனபடியால் என் மீது சந்தேகமேற்பட எவ்வளவோ காரணமுண்டு. அது தான் ரெஜி, நீ இந்த உதவியை எனக்குச் செய்ய வேண்டும். நான் உன்னிடம் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன்! உனக்கு என் மீது அன்பில்லையா? நான் கேட்பதைச் செய்ய மாட்டாயா?" என்றாள் தங்கமணி.

ரெஜிக்குத் தங்கமணியின் கேள்வி எக்கச்சக்கமான ஒரு நிலையை ஏற்படுத்தியது. ஆனால் தங்கமணியோ விடுபவளாயில்லை. "ரெஜி, நீயும் உன்னாலியன்ற அளவு கை எழுத்தை மாற்றி எழுது. எங்கள் ஊரில் உன்னை யாருக்கும் தெரியாததால் உன்னை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். இந்தக் கடிதத்தை எழுதிவிட்டு இன்று பிற்பகல் இரண்டு பேரும் கொழும்புக்குப் படம் பார்க்கப் போவோம். செலவெல்லாம் என்னுடையது" என்றாள் தங்கமணி.

"ஓகோ, எனக்கு இலஞ்சம் கொடுக்கப் பார்க்கிறாயா?’ என்றாள் ரெஜி. முடிவில் "சரி படம் இருக்கட்டும். நீ இவ்வளவு தூரம் கேட்கும் போது எப்படி மறுப்பது? எழுதுகிறேன். ஆனால் எனக்கு ஒரு கரைச்சலும் வராது நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்." என்று கடிதத்தைத் தங்கமணி சொன்ன மாதிரியே எழுதிக் கொடுத்தாள் ரெஜினா.

தங்கமணி கடிதத்தை அநாவசியமாக நீட்டி முழக்கவில்லை. ஒரு சில வசனங்களில் விஷயத்தை மிகச் சுருக்கமாக முடித்து விட்டாள் அவள். "மதிப்பு வாய்ந்த சிவநேசர் பிரபு சமூகத்துக்கு" என்று ஆரம்பித்த அக் கடிதத்தில் கீழ்க் கண்ட நான்கு வசனங்களே இடம் பெற்றன. "உங்களுடைய குடும்ப கெளரவத்தைச் சிதைத்துச் சீரழிகக் வல்ல சில சம்பவங்கள் இப்பொழுது கொழும்பில் நடந்து கொண்டிருக்கின்றன. கொட்டாஞ்சேனையில் குடிசையில் பிறந்த பரமானந்தர் மகள் பத்மா என்ற ஒரு சாதி கெட்ட அநாதைச் சிறுக்கி உங்கள் உத்தம மகன் ஸ்ரீதருக்கு வலை வீசி வருகிறாள். இதனால் உங்கள் குலக் கெளரவமும் அந்தஸ்தும் குலையாதிருக்க வேண்டுமானால், உடனடியாக இச் சிறுக்கியின் கொட்டத்தை அடக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். இக் கடிதத்தை உங்கள் குடும்பத்தின் மீது கொண்ட நல்லெண்ணத்தின் பயனாகவே நான் எழுதுகிறேன்." கடிதத்தின் முடிவில் கை ஒப்பமாக "நன்மை விரும்பி" என்ற வார்த்தைகள் இடப்பட்டன.

கடிதத்தை எழுதி முடித்ததும் தோழிகள் இருவரும் விரதச் சாப்பாடு உண்ணச் சென்றார்கள். வழக்கத்துக்கு மாறாக அன்று பாயசத்துடன் சைவச் சாப்பாடு. ரெஜினா கிறிஸ்தவப் பெண்ணென்றாலும் இடையிடையே சைவச் சாப்பாடு சாப்பிடுவதை அவள் ஆட்சேபிக்கவில்லை. அவளுக்குப் பொதுவாக மீன் இறைச்சி இல்லாது உனவு இறங்குவது சற்றுக் கடினமான விஷயமேயானாலும், வாய்க்கு இனிமையான பாயசம் கிடைக்கும் என்ற திருப்தி அதை ஓரளவு சமன் செய்யவே செய்தது!

அன்று பிற்பகல் தோழிகள் இருவரும் கொழும்புக்குச் சினிமா பார்க்கச் சென்ற போது, ஒரு பேராச்சரியம் அவர்களுக்கு அங்கே காத்திருந்தது. பத்மாவும் அடுத்த வீட்டு அன்னம்மாக்காவும் படம் பார்க்க வந்திருந்ததே அது. தங்கமணியைக் கண்டதும் பத்மா, "தங்கம், இங்கே வந்துட்கார்" என்று கூவினாள். தங்கமணியும் பத்மாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். அத்துடன் ரெஜினாவை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் அவள். பின்னர், பெண்கள் மூவரும் கலகலவென்று பேச ஆரம்பித்தார்கள். பத்மாவின் பேரெழிலைக் கண்டு வியப்படைந்தாள் ரெஜினா.

தங்கமணி பத்மாவிடம் ஸ்ரீதர் விஷயம் பற்றி விசாரித்தாள். பத்மாவும் எல்லா விஷயத்தையும் தங்கமணியிடம் ஒளிவு மறைவின்றி கூறினாள். ஸ்ரீதர் தன்னிடம் தனது உண்மைப் பெயரை மறைத்துப் பொய் சொல்லியதன் காரணங்களை விளக்கி விட்டு, "என்னை ஏமாற்றும் நோக்கம் அவருக்குக் கொஞ்சமும் இல்லை. அதன் பலனாக பழையபடி நாங்கள் முன் போலவே நல்ல சிநேகிதம்" என்று உற்சாகமாகக் கூறினாள் பத்மா.

தங்கமணி, "அது எனக்குத் தெரியும். சில நாட்களுக்கு முன்னர் இருவரும் காரில் ஜோடியாகச் சென்றதை நான் பார்த்தேன்.. எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?" என்றாள்.

பத்மாவுக்கு அதிக ஆனந்தம். தன் காசிலே தங்கமணி உட்பட எல்லோருக்கும் ஐசி-சொக்ஸ் வாங்கிக் கொடுத்தாள்.

அதைச் சுவைத்துச் சுவைத்துச் சாப்பிட்ட வண்ணமே தங்கமணி "பத்மா! உண்மையில் நான் உங்கள் காதல் உடைந்து விடுமோ என்று எவ்வளவு கவலைப்பட்டேன் தெரியுமா? ஸ்ரீதர் உனக்கு நல்ல ஜோடி. நீங்கள் இருவரும் கல்யாணம் செய்து சந்தோஷமாக வாழ வேண்டுமென்பது தான் என் ஒரே ஆசை." என்றாள்.

பத்மா, "அதை நீ சொல்லவும் வேண்டுமா, தங்கம்? எனக்கு ஓர் ஆளின் முகத்தைப் பார்த்தாலே அவருடைய மன எண்ணத்தை உடனே கூறி விட முடியும். உன்னை நான் சந்தித்த முதற் நாளே உனது முகம் என்னைக் கவர்ந்துவிட்டது" என்றாள்.

பத்மாவின் இவ்வார்த்தைகள் ரெஜினாவின் உள்ளத்தைத் துணுக்குறச் செய்தன. தங்கமணியின் முகத்தைத் தன் கடைக் கண்களால் நன்கு அவதானித்துப் பார்த்தாள் அவள். அந்த முகத்தில் ஒரு இருள் மேகம் கவிந்திருந்தது போல் தோன்றியது அவளுக்கு. "இந்த முகத்தையா பத்மா இவ்வளவு தூரம் நம்புகிறாள்." என்று ஆச்சரியப்பட்டாள் அவள்.

முகத்தில் ஒன்றுமில்லை. பார்ப்பவர்களின் கண்ணிலும் மனதிலும் தான் இப்படிப்பட்ட விஷயங்கள் தங்கியிருக்கின்றன என்ற எண்ணம் ஏற்பட்டது அவளுக்கு. "இந்த பத்மாவுக்கு எதிராக மொட்டைக் கடிதம் தீட்ட ஒத்துழைத்தேனே, என் முகம் எப்படியிருக்கிறதோ?" என்ற நடுக்கமும் ஏற்பட்டது அவளுக்கு.


13-ம் அத்தியாயம்: சிவநேசர்

தனது ஆடம்பர உடையுடன் ஆறடி உயாமும், கம்பீரமான உருவமும் படைத்த சிவநேசரைப் பார்ப்பவர்கள் யாவருக்கும் அவர் முன்னால் தம்மை அறியாமலே ஒரு வித மரியாதையும் பயமும் ஏற்படும். போதாதற்கு வார்த்தைகளில் அவர் மிகச் செட்டானவர். அத்தியாவசியமிருந்தாலொழிய அவர் பேசுவதேயில்லை. காரில் போய்க் கொண்டிருக்கும் போதோ யாராவது அறிமுகமானவர்களைக் கண்டால் தலையை இலேசாக அசைத்துப் புன்னகை பூப்பார். அந்தப் புன்னகையைப் பெற்றுக் கொண்டவர்கள் "சிவநேசர் தம்மைப் பார்த்துப் புன்னகை செய்தார்" என்று தமது நண்பர்களிடமும் குடும்பத்தாருக்கும் சொல்லக் கூடிய அளவுக்கு அதற்கு என்றைக்குமே ஒரு தனி மதிப்பு இருந்து வந்ததுஸ்ரீதரின் தந்தை சிவநேசரை அவரது புகழளவிலே அறிந்திருக்கிறோமல்லாது அவரை நேரில் ஒரு தடவையாவது சந்தித்ததில்லை. பல்கலைக் கழகத்து நாடகத்தன்று ஒரே ஒரு தடவை அவரை டெலிபோனில் சந்தித்து இருக்கிறோம். அன்று அவருக்குச் சிறிது சுகவீனம். இருந்தாலும் ஸ்ரீதரின் நாடகம் எப்படி நிறைவேறியது என்றறிவதற்காகவும், தன் அன்பு மகனுக்கு அவனது இஷ்டமான கலைத் துறையில் ஊக்கமளிக்க வேண்டுமென்பதற்காகவும் நள்ளிரவு வேளையில் அவனது நாடகத்தைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் அவனுடன் பேசினார் அவர். சிவநேசரைப் பற்றி நாம் இதுவரை அறிந்த விவரங்களின் படி அவர் ஒரு கோடீஸ்வரர், படிப்பாளி, சாதிமான், தன் அந்தஸ்தில் பெரிது அக்கறைக் கொண்டவர் என்பன எங்களுக்குத் தெரியும். அந்தஸ்துதான் அவருக்கு உயிர். அது பெருமளவுக்கு ஒருவன் அணியும் ஆடைகளிலும் தங்கியிருக்கிறது என்பது அவரது எண்ணம். அதன் காரணமாக அவர் எப்பொழுதும் ஆடம்பரமாகவே உடுத்திக் கொள்வார், தமது மாளிகைக்கு வெளியே செல்லும் போது, அவர் ஒரு பொழுதும் தலைப்பாகை அணியாது செல்வதில்லை. எப்பொழுதும் வெள்ளைக் காற்சட்டையும் குளோஸ் கோட்டும் அணிந்திருப்பார். மேலும் தங்கச் சங்கிலியோடு கூடிய பைக் கடிகாரம் ஒன்று அவரது கோட்டை என்றும் அலங்கரித்துக் கொண்டே இருக்கும். கையில் தங்க மோதிரம் ஒன்றும் ஒளி வீசக் கொண்டிருக்கும். ஓரொருசமயங்களில் உள்ளூர்க் கோவிலுக்குப் போகும்போது மட்டும்தான் வேட்டி உடுத்திக் கொள்வார். அந்த வேட்டியும் சாதாரண வேட்டியாய் இராது. ஒன்றில் சரிகைக் கரையிட்ட வேட்டியாகவோ, பட்டு வேட்டியாகவோ தானிருக்கும். கோவிலுக்கு எப்பொழுதுமே அவர் வெறும் மேலுடன் தான் செல்பவரானதால் வடம் போன்ற பெரிய தங்கச் சங்கிலி ஒன்று அவர் பூரித்த நெஞ்சில் என்றும் புரண்டு கொண்டிருப்பதைக் காணலாம்.

ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் அவனுக்கு அந்தஸ்தில் நம்பிக்கையில்லாவிட்டலும் தந்தையாரை போல் ஆடை ஆபரணங்களில் அவனுக்கும் விருப்பமுண்டு. தந்தையார் பழைய மோஸ்தரில் ஆடம்பரமாக உடுத்திக் கொண்டாரென்றால் மகன் நவீன மோஸ்தரில் ஆடம்பரமாக உடுத்திக் கொண்டான்.

தனது ஆடம்பர உடையுடன் ஆறடி உயாமும், கம்பீரமான உருவமும் படைத்த சிவநேசரைப் பார்ப்பவர்கள் யாவருக்கும் அவர் முன்னால் தம்மை அறியாமலே ஒரு வித மரியாதையும் பயமும் ஏற்படும். போதாதற்கு வார்த்தைகளில் அவர் மிகச் செட்டானவர். அத்தியாவசியமிருந்தாலொழிய அவர் பேசுவதேயில்லை. காரில் போய்க் கொண்டிருக்கும் போதோ யாராவது அறிமுகமானவர்களைக் கண்டால் தலையை இலேசாக அசைத்துப் புன்னகை பூப்பார். அந்தப் புன்னகையைப் பெற்றுக் கொண்டவர்கள் "சிவநேசர் தம்மைப் பார்த்துப் புன்னகை செய்தார்" என்று தமது நண்பர்களிடமும் குடும்பத்தாருக்கும் சொல்லக் கூடிய அளவுக்கு அதற்கு என்றைக்குமே ஒரு தனி மதிப்பு இருந்து வந்தது. ஆனால் அவரது மனைவி பாக்கியமோ இதற்கு முற்றிலும் மாறானவள். செல்வத்தின் செழிப்போடு பொலிந்த தோற்றத்துடன் விளங்கிய, அவள் என்றும் கலகலப்பாகவே இருப்பாள். கணவனைப் போலவே அவளும் பொன்னிறமான தோற்றங் கொண்டவள். தந்தையும் தாயும் அப்படி இருந்ததால்தான் மகன் ஸ்ரீதரும் மனத்தை மயக்கும் மன்மதனாகக் காட்சியளித்தான். வயது நாற்பத்தெட்டாகிவிட்ட போதிலும் பாக்கியத்தின் முகத்திலே ஒரு சுருக்கங்கூட விழவில்லை. அப்பிள் போல் உப்பியிருந்த அவளது முகத்திலே ஒரு அழகு இன்னும் நர்த்தனம் புரிந்து கொண்டிருந்தது. சிவநேசர் முகமும் அப்படித்தான் சில காலத்துக்கு முன்னர் இருந்ததாயினும் இரண்டு மூன்று வருடங்களாக அவரைப் பீடித்திருந்த நீரிழிவு நோயும், அவரது வயது ஐம்பதைத் தாண்டி விட்டமையும் இப்பொழுது அவரது முகத்தில் ஓரளவு தளர்ச்சியைக் காட்டவே செய்தன. மேலும் அவரது மீசையும் இப்பொழுது நன்றாக நரைத்துப் போயிருந்தது. சிவநேசர் தன் ஒரே மகன் ஸ்ரீதருக்கு அடுத்தப்படியாகத் தன் மனைவி பாக்கியத்தின் மீது தான் தன் அன்பு முழுவதையும் சொரிந்து வந்தார் என்பது உண்மையேயாயினும், அவள் எல்லோருடனும் கலகலவென்று பேசுவது மட்டும் அவருக்குப் பிடிப்பதில்லை. அது தங்கள் குடும்பத்தின் உயர்ந்த அந்தஸ்திற்குப் பொருந்தாது என்பது அவரது எண்ணம், பல தடவைகளில் அவர் பாக்கியத்தை அதற்காகக் கடிந்து கொண்டது கூட உண்டு.

குடும்பத்தின் அந்தஸ்தைப் பேணுதல் என்ற விஷயத்தில் தனக்குப் பின்னால் தனது ஒரே வாரிசாக, சேர் நமசிவாயம் குடும்பத்தின் குலக் கொழுந்தாகத் தனது பெருஞ் சொத்துகள் எல்லாவற்றையும் அரசாளப் போகும் ஸ்ரீதர் எவ்வித பிழையும் அதில் விட்டு விட மாட்டான் என்பதே சிவநேசரின் எண்ணம். இந்த நம்பிக்கை அவருக்கு ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் ஸ்ரீதர் வெளித் தோற்றத்தில் முற்றிலும் தன்னை உரித்து வைத்தது போல் இருக்கிறான் என்று பலரும் கூற அவர் கேட்டிருந்ததே யாகும். சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்தில் முழு நம்பிக்கை கொண்ட அவர் உருவத்தில் அவ்வித ஒற்றுமை இருக்குமானால பண்புகளிலும் அதே வித ஒற்றுமை இருக்கவே செய்யும் என்று பரிபூரணமாக நம்பினார்.

தன் மகனின் தோற்றம், தலையை நிமிர்த்திச் சிங்க ஏறு போல், அவன் கம்பீரமாக நடந்து செல்லும் முறை ஆகியவை அவரை மிகவும் கவர்ந்திருந்தன. உண்மையில், ஸ்ரீதரின் தனிப் பண்பு போல் விளங்கிய அவனது இராஜ நடை சிவநேசருக்கு அவரது தந்தையார் திரு. கனகசபைப் பிள்ளையின் நடையையும், பாட்டனார் சேர் நமசிவாயத்தின் நடையையுமே ஞாபகமூட்டியது. அதை அவர் மெச்சாத நாளில்லை என்றே கூற வேண்டும். தன் மனைவி பாக்கியத்திடம் கூட "ஸ்ரீதர் நடந்து செல்லும் போது பார்த்திருக்கிறாயா? எங்கள் தாத்தா சேர் நமசிவாயம் போலல்லவா அவன் நடக்கிறான்?" என்று அவர் பல தடவை கூறியிருக்கிறார். இவ்விதம் இயற்கையாகவே தோற்றப் பொலிவைப் பெற்றிருந்த ஸ்ரீதர், தன் அந்தஸ்தைத் தன் வெறும் தோற்றத்தினாலேயே பெற்று விடுவான் என்பது அவரது எண்ணம்.

சிவநேசரின் தோற்றமும் போக்குகளும் மட்டுமல்ல, அவரது பெரிய இல்லமும் பார்த்தவரை மலைக்க வைக்கும் கம்பீரத்துடனேயே விளங்கியது. யாழ்ப்பாணம் பட்டினத்திலிருந்த காங்கேயந்துறை செல்லும் நெடுஞ் சாலையில் பரந்த பெரும் காணியொன்றில் அவரது மாளிகை அமைத்திருந்தது. ஒரு காலத்தில் முதலியார் வளவு என்ற பெயருடன் விளங்கிய அவ்வரண்மனை போன்ற பேரில்லம் சேர் நமசிவாயத்தால் அமராவதி என்ற புதிதாகப் பெயரிடப்பட்டிருந்தது. மாளிகை வாசலில் அப்பெயரும், சேர் கனகசபை நமசிவாயம் நைட் (KNIGHT) என்ற பெயரும், அதன் கீழ் கனகசபை சிவநேசர்நோ.ஓ.பி.ஈ என்ற பெயரும் பித்தளைத் தகடுகளில் பொறிக்கப்பட்டிருந்தன. அத் தகடுகளின் கீழே தனது மகன் ஸ்ரீதரின் பெயரையும் சீக்கிரம் பொறித்துவிட வேண்டுமென்பது தந்தையின் திட்டமாகும்.

பல ஏக்கர் நிலத்தைக் கொண்ட அப்பெரிய வளவைச் சுற்றிப் பலம் வாய்ந்த மிக உயரமான மதில் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அம்மதிலுக்கு மேலே உடைக்கப்பட்ட கண்ணாடித் துண்டுகள் கள்வர்களைத் தடுப்பதற்காக செங்குத்தாகக் குத்தி வைக்கப்பட்டிருந்தன. வளவு பூராவும் தென்னை மரங்களும், வேப்ப மரங்களும், மாமரங்களும் நிறைந்து இருள் நிழலைப் பரப்பிக் கொண்டிருந்தன. அவற்றுக்கிடையே மல்லிகை முல்லைப் பந்தர்களும் பெரிய பூக்கள் பூத்துக் கிடந்த பல ரோஜா செடிகளும் கூடக் காணப்பட்டன. யாழ்ப்பாணக் குடா நாட்டில் கிடையாத அந்நியப் பிரதேச மரங்கள் சிலவும் அங்கு நடப்பட்டிருந்தன. கித்துள் மரம், விசிறி வாழை போன்றவையும் வாசலுக்குச் சமீபமாகக் காட்சியளித்தன. அழகிய வேலைப்பாடுடன் இரும்பினால் செய்த அகன்ற உயரமான கேட்டுகள் வாசலை வழி மறைத்தன. எப்பொழுதும் பூட்டப்பட்டே இருக்கும் அந்தப் பெரிய கேட்டுகளுக்குப் பக்கத்தில் சிறியதொரு வாசல் ஒரு சிறு கேட்டுடன் காணப்பட்டது. அதற்கூடாகவே வேலைக்காரர்களும் மற்றவர்களும் போய் வந்தார்கள். அதற்குப் பக்கத்தில் மரத்தால் செய்த கூடு போன்ற ஒரு சிறு அறையில் காவலாளி இருந்தான். காக்கிக் கோட்டுடன் காணப்பட்ட அவன் முக்கியமானவர்களின் கார்கள் வரும் போது கேட்டைத் திறந்து அவர்களை உள்ளே அனுப்புவதும் பின்னே மூடுவதுமாக இருந்தான். ஆனால் சிவநேசரைக் காண்பதற்கு உள்ளே புகுந்து விடுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல. முதலில் காவலாளி வந்தவரின் பெயரைத் தெரிந்து கொண்டு உள்ளில்ல டெலிபோன் மூலம் மாளிகைக்குப் பேசி, அங்கே இருந்து பதில் வந்த பின்னர் தான் கதவைத் திறப்பான்.

கேட்டிலிருந்து அகலமான வீதி ஒன்று உள்ளே மாளிகையை நோக்கிச் சென்றது. அதன் இருமருங்கிலும் பச்சைப் பசேலென்ற நெடுங் கமுக மரங்கள் வானை நோக்கி வளர்த்திருந்தன. அதன் வழி சென்றால் உயர்ந்த ‘போர்ட்டிக்கோ’வுடன் கூடிய அரன்மணை போன்ற பெரிய வீட்டை அடையலாம். எப்படி சிவநேசரின் ஆடம்பரமான தோற்றம் அவருடன் எடுத்த எடுப்பில் பேசுவதற்கும் கூட, மற்றவர்களைப் பின் நிற்க வைத்ததோ, அப்படியே அமராவதியின் தோற்றமும் அதற்குள் யாரும் அவசரப்பட்டுப் புகுந்து விட முடியாது தடுத்தது. நெடுஞ்சாலையில் சென்றவர்கள் மதிலையும் மரங்களையும் காண முடிந்ததே ஒழிய, அவற்றுக்குப் பின்னால் மறைந்த கிடந்த பெரிய வீட்டைக் காண முடியாதிருந்தது. ஒரு வித மர்மச் சூழல் அந்த வீட்டுக்கு ஒரு தனிக் கம்பீரத்தையும் தனி அந்தஸ்தையும் அளித்தது. "இது தான் சிவநேசர் பிரபுவின் வீடு" என்று அறியாதவர்களுக்கு அறிந்தவர்கள் அந்த வீட்டைப் பற்றி வீதியில் சொல்லிச் செல்வார்கள். அதனால் வீதியில் அவ்வீட்டிற்குச் சமீபத்தில் இருந்த பஸ்தரிப்புக்குக் கூட சிவநேசர் வீட்டடி என்று பெயர் வந்து விட்டது. பஸ் பிரயாணிகள் பிரயாணச் சீட்டைப் பெறுவதற்கு "சிவநேசர் வீட்டடிக்கு ஒரு டிக்கெட்" என்று கேட்பது அப்பகுதியிலே நீண்ட காலப் பழக்கமாகிவிட்டது.

சிவநேசர் அமராவதி வளவில் அவரது பெரிய இல்லத்தைத் தவிர, ஒரு சிறிய சிவன் கோவிலும், அதற்குப் பக்கத்தில் நீந்திக் குளிப்பதற்கேற்ற ஒரு தடாகமும் கூட இருந்தன. வளவில் பிற்பகுதி சிறிது காடடர்ந்து கிடந்தது. ஏராளமான வாழை மரங்களும் அங்கே நடப்பட்டிருந்தன. பாக்கியம் அன்புக்குப் பாத்திரமான இரு புள்ளிமான்களும், ஒரு ஜோடி மயில்களும் எப்பொழுதும் நடமாடிக் கொண்டிருக்கும். பெரிய சீமை மாடுகள் இரண்டைக் கொண்ட பாற் பண்ணையும் அங்கு காணப்பட்டது. பொதுவாக யாழ்ப்பாணக் குடா நாட்டை சூடானதொரு தேசமென்று சொல்வார்கள். ஆனால் அமராவதி வளவை ஒரு தரம் சுற்றி வந்தவர்கள் அதை நம்ப மாட்டார்கள். ஏனெனில் பாரிய வேப்ப மரங்களும் புளிய மரங்களும், மா மரங்களும் அவ்வளவில் தம் தண்ணிழலை இடையீடின்றிப் பரப்பிக் கொண்டு நின்றதால் அங்கு எப்பொழுதும் குளுமை ததும்பிக் கொண்டிருந்தது. ஒரு புறத்தில் ஒரு சிறிய தாமரைத் தடாகம் கூட காணப்பட்டது. அதில் செந்தாமரை, வெண்டாமரை மலர்களோடு நீலோற்பலமும் , அல்லியும் கூட மலர்ந்திருந்தன. சிறிய வாளை மீன்கள் துள்ளி விளையாடிய மாலை நேரங்களில் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு ஏதாவது கதைப் புத்தகங்களை வாசிப்பது பாக்கியத்தின் வழக்கம். அப்பொழுது வேலைக்காரி தெய்வானை கொண்டு வந்து கொடுக்கும் உணவு வகைகளை மீன்களுக்கிட்டு அவை அவற்றை உண்பதற்குத் துள்ளி எழுவதைப் பார்த்து மகிழ்வது அவளுக்கு நல்ல பொழுது போக்காயிருந்தது. ஸ்ரீதர் விடுமுறைகளுக்கு வீட்டுக்கு வரும் பொழுது தாயோடு தானும் அங்கே உட்கார்ந்து மீன்களுடன் விளையாடுவான். நான்கு மாதங்களின் முன்னர் அவன் கொழும்பிலிருந்து வந்த போது ஒரு ஜோடி ஆமைகளை கொண்டு வந்து அக்குளத்தில் விட்டிருந்தான். பாக்கியம் அவற்றை நன்கு கவனித்து வந்தாள். இரண்டு மாதங்களின் முன்னர் ஒரு நாள், ஸ்ரீதர் டெலிபோனில் பேசியபோது அந்த ஆமைகளின் சுகஷேமத்தைப் பற்றியும் விசாரித்திருந்தான். அவற்றை முன்னிலும் பார்க்க மேலும் அதிக அக்கறையோடு இப்போது கவனித்து வந்தாள் பாக்கியம். சிவநேசர் அந்த ஆமைகளுக்கு, இரண்டும் ஆண் ஆமைகளாக இருந்ததால் இராம, இலட்சுமனர் என்று பெயரிட்டிருந்தார். இதை ஸ்ரீதருக்கு அவள் தாயார் டெலிபோனில் சொன்ன போது ஸ்ரீதர் தான் ‘கிஷ்கிந்தா’வாசியானதால் வாலி, சுக்கிரீவன் பெயர்களே தனக்குப் பிடித்தமானவை என்று சிரித்துக் கொண்டு சொன்னான். இதைப் பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த சுரேஷ் டெலிபோனைப் படக்கென்று பறித்து "வேண்டாம். ஸ்ரீதர் சுரேஷ் என்று பெயரிட்டு விடுங்கள். ஏனெனில் இப்பொழுது கிஷ்கிந்தாவில் இருக்கும் வானரங்களின் பெயர்கள் வாலி, சுக்கிரீவன் அல்ல. ஸ்ரீதர் சுரேஷ் என்பதே அவற்றின் பெயர்கள்." என்று கூறிவிட்டான். அதற்குப் பதிலாக பாக்கியம் யாழ்ப்பாணக் குடா நாட்டில் சிரித்த சிரிப்பு டெலிபோனில் கொழும்பு ஹோர்ட்டன் பிளேஸ் வரை கேட்டது!

அமராவதி வளவில் கிழக்கு நோக்கி அமைந்திருந்தது சிவநேசரின் மாளிகை மாடி வீடாக விளங்கிய அம் மாளிகையில் மொத்தம் இருபது அறைகள் இருந்ததென்றால் அது எத்தகைய பெரிய மாளிகையாக இருக்க வேண்டுமென்று யூகித்துக் கொள்ளுங்கள். சலவைக் கற்களாலும், சித்திர ஓடுகளாலும் அழுகுற அமைந்த விறாந்தைத் தளமும், பெரிய கூடமும் மாளிகைக்கு விசேஷ கவர்ச்சியைத் தந்தன. கதவுகளும் ஜன்னல்களும் மாடிப்படிகளும் தேக்கு மரத்தில் பலவித வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருந்தன. சேர் நமசிவாயம் காலத்தில் கட்டப்பட்ட அம்மாளிகை மிகவும் கவனமாகப் பரமரிக்கப்பட்டு வந்ததால் இன்றும் புதிது போலக் காட்சியளித்தது. உண்மையில் இது போன்ற அழகிய மாளிகை இலங்கையில் இன்னொன்று மட்டுமே இருந்ததென்றும், அது தென் இலங்கையில் ஒரு சிங்களப் பிரபுவினுடையதென்றும், பலர் பேசிக் கொண்டார்கள்.

சிவநேசரை நாம் சந்திக்கும் இன்று காலை, அவர் தமது மாளிகையில் விறாந்தையில் ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு தமது மனைவி பாக்கியத்துடன் உரையாடிக் கொண்டிருகிறார். பாக்கியம் இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு பக்கத்திலுள்ள சிறிய மேசையிலிருந்த வெற்றிலைத் தட்டிலிருந்த வெற்றிலையைக் காம்பு முறித்துச் சுண்ணாம்பு தடவி வாயிலிடுவதற்குத் தயாராக்கிக் கொண்டிருக்கிறாள். அவள் ஒரு கட்டம் போட்ட கொர நாட்டுச் சேலையை யாழ்ப்பாணத்துக்கே உரிய பாணியில் பின் கொய்யகம் வைத்துக் கட்டிக் கொண்டிருக்கிறாள். சிவநேசரோ வேட்டி கட்டி வெறும் மேலுடன் சாய்வு நாற்காலியில் சாயாது நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவரது செக்கச் செவேலென்ற நெஞ்சிலே தங்கச் சங்கிலி புரண்டு கொண்டிருக்கிறது. நெற்றியிலே சிறிய திருநீற்றுக் கீற்று மின்னுகிறது.

சிவநேசர் பாக்கியத்திடம் "ஸ்ரீதர் விஷயத்தைச் சீக்கிரம் முடிக்க வேண்டும். இன்று அவனோடு டெலிபோனில் பேசி அடுத்த வாரம் இங்கு வரச் சொல்லிவிடு" என்று கூறினார்.

பாக்கியம் "சரி" என்று கூறிக் கொண்டே வெற்றிலையை வாயில் திணித்த வண்ணம் "உங்களுக்கு வெற்றிலை வேண்டுமா" என்றாள்.

சிவநேசர் வேண்டாமென்று தலையை அசைத்து விட்டு, "பாக்கியம், நீ கந்தப்பர் மகள் அமுதத்தைச் சமீபத்தில் பார்த்தாயா? எப்படி இருக்கிறாள்?" என்று கேட்டார்.

பாக்கியம் "அவள் டாக்டர் பரீட்சையில் சித்தியாகிச் சீமையிலிருந்து வந்த அடுத்தக் கிழமை நல்லூர்க் கோவிலில் கண்டேன். அவளுக்கென்ன? நல்ல அழகாய்த் தானிருக்கிறாள். ஸ்ரீதருக்கு நிச்சயம் அவளைப் பிடிக்கும்" என்று பதிலளித்தாள்.

சிவநேசர் அதற்கு "இந்த சம்பந்தம் எனக்கு மிகவும் திருப்தி. முதலாவதாகச் சுழிபுரம் சேர் பாலசிங்கம் குடும்பத்தார் சாதியைப் பொறுத்த அளவிலோ அந்தஸ்தைப் பொறுத்த அளவிலே எங்களுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்லர். பணத்தைப் பொறுத்த வரையில் வேண்டுமானால் குறை சொல்லலாம். ஆனால் பணம் பெரிதல்ல. ஸ்ரீதருக்கிருக்கும் சொத்து பத்துத் தலைமுறைக்குப் போதும். ஆகவே இதை உடனே முடித்து விடுவதுதான் நல்லது" என்றார்.

அதற்குப் பாக்கியம் "ஆனால் எதற்கும் சாதகப் பொருத்தம் பார்க்க வேண்டாமா? மற்றப் பொருத்தங்களிலும் பார்க்க அதுதானே முக்கியம்" என்றாள்.

சிவநேசர் "அதை நான் பார்த்து விட்டேன். நேற்றிரவு பண்டிதர் பாரதியிடம் இரண்டு சாதகங்களையும் காட்டினேன். எல்லாம் நல்ல பொருத்தமென்று கூறிவிட்டார் அவர்" என்றார்.

"அப்படியானால் உடனே முகூர்த்தத்தை வைக்க வேண்டியதுதான். இன்று ஸ்ரீதருக்கு டெலிபோன் பண்ணுகிறேன். அவன் கலியாணம் என்றதும் திடுக்கிட்டு விடுவான். அமுதத்தை அவனும் ஒரு தடவை என்னோடு பார்த்திருக்கிறான். நான் அவள் பெயரைச் சொன்னதும் அவன் என்ன சொல்லுகிறான் பார்ப்போம்!" என்றாள் பாக்கியம்.

சிவநேசர் "இந்தக் கலியாணத்தை நான் விரும்புவதற்கு மிகவும் முக்கியமான ஒரு காரணமிருக்கிறது. அது என்ன தெரியுமா? என்று கேட்டார்.

"என்ன சொல்லுங்கள் கேட்போம்." என்றாள் பாக்கியம்.

"எங்கள் குடும்பத்தின் பெரிய குறைதான் சந்ததிக் குறை. சேர் நமசிவாயம் தாத்தாவின் ஒரே பிள்ளைதான் என் அப்பா. அவரின் ஒரே பிள்ளை நான். எனது ஒரே பிள்ளை ஸ்ரீதர். இப்படி எங்கள் குடும்பத்தில் ஒரு பிள்ளைக்கு மேல் பிறப்பது அரிதாகி வருகிறது, பாக்கியம். இதனால் நமது சந்ததி நாளடைவில் முற்றாக மறைந்து போய்விடுமோ என்று கூட நான் பயப்படுவதுண்டு. கந்தப்பர் குடும்பமோ இதற்கு முற்றிலும் மாறானது. அமுதத்துக்குக் கூட ஒன்பது சகோதரர்கள் இருக்கிறார்கள். இன்னும் கந்தப்பருக்குக் கூட ஏழு சகோதரர்கள். அவர்கள் குடுமம் சந்தான விருத்தி நிறைந்த குடும்பம். அப்படிப்பட்ட இடத்தில் சம்பந்தம் செய்தால் ஸ்ரீதருக்கும் நல்ல சந்தான விருத்தி ஏற்படலாம். எப்படியும் ஒரு குடும்பத்தில் ஐந்து குழந்தைகளாவது இருக்க வேண்டுமென்பது எனது எண்ணம்" என்று தன் எண்ணத்தை விளக்கினார் சிவநேசர்.

பாக்கியமோ "பிள்ளைகள் பிறப்பது எங்கள் கை வசமில்லை. அது கடவுளின் கையில்தான் இருக்கிறது" என்றாள்.

சிவநேசர் "மனிதன் தன் கடமையைச் சரியாகச் செய்யாவிட்டால் கடவுளால் கூடப் பிள்ளைகளைப் பிறப்பிக்க முடியாது" என்று கூறினார்.

இதற்கிடையில் கேட் காவலாளி அன்றைய கடிதங்களுடன் அங்கு வந்து சேர்ந்தான். மொத்தம் பதினைந்து கடிதங்கள் வந்திருந்தன. அவற்றில் ரெஜினாவின் குண்டு குண்டான எழுத்துகளில் எழுதப்பட்ட தங்கமணியின் மொட்டைக் கடிதமும் ஒன்று.

சிவநேசர் பேச்சை நிறுத்தி விட்டுக் கடிதங்களை வாசிக்க ஆரம்பித்தார். கடிதங்களில் ஒரு சில வங்கிகளிலிருந்தும், வர்த்தக ஸ்தாபனங்களிலிருந்தும் வந்தவை. ஒன்று ஒரு வாரப் பத்திரிகையின் ஆரம்ப இதழ். சிவநேசர் தமக்குத் தனிப்பட்ட முறையில் எழுதப்பட்ட இரண்டு கடிதங்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றைப் பாக்கியத்திடம் கொடுத்தார். பாக்கியம் வேலைக்காரன் சைமனுக்குக் குரல் கொடுத்தாள். சைமன் அவற்றை சிவநேசரின் கிளார்க் நன்னித் தம்பியின் காரியாலாய அறைக்கு எடுத்துச் சென்றான்.

சிவநேசர் முதலில் கிளிநொச்சியில் தமது வயல்களை மேற்பார்வை செய்யும் செல்லையாவின் கடிதத்தை வாசித்து முடித்தார். தனது மகளின் கல்யாணம் சமீபத்தில் நடக்கவிருப்பதாகவும் கல்யாணச் செலவுகளுக்கு ரூபா ஐநூறு தனக்குக் கடனாகக் தந்துதவ வேண்டுமென்றும் அவன் கேட்டிருந்தான். அதை அவர் பாக்கியத்திடம் காட்டிவிட்டு "என்ன செய்யலாம்? சொல்லு" என்றார்.

பாக்கியம் "செல்லையாவின் மகளை உங்களுக்குத் தெரியும் தானே? போன தடவை நாங்கள் கிளிநொச்சிக்குப் போன போது எங்களுக்குத் தேன் போத்தலொன்று கொடுத்தாளே? - அவள். அவளுக்குக் கல்யாணமென்றால் அதற்கு நாம் ஏதாவது கொடுக்கத் தானே வேண்டும். ஆனால் கடனாகக் கொடுக்க வேண்டாம். ரூபா ஐநூறையும் பரிசாகவே அனுப்பி விடுங்கள்" என்றாள்.

சிவநேசர் "அப்படி நாம் பரிசளிப்பதென்றால் ரூபா ஐநூறு போதாது. பத்துப் பதினைந்து வருடங்களாகச் செல்லையா வயல்களைப் பார்த்து வருகிறான். சிறிது அதிகமாக ஆயிரம் ரூபாவாகவே அனுப்பி விடுவோம். அவனுக்கும் மகிழ்ச்சி. அத்துடன் கிளிநொச்சிப் பகுதியில் நமக்கும் நல்ல பெயரேற்படும். அது ஸ்ரீதர் சொத்துகளைப் பாரமெடுத்து நிர்வகிக்கும் பொழுது, அவனுக்கும் நல்ல உதவியாயிருக்கும். மேலும் இந்த மாதிரி விஷயங்களில் நாம் எப்பொழுதும் தாராளமாகவே இருக்க வேண்டும்." என்று கூறிக் கொண்டு "நன்மை விரும்பி" எழுதிய மொட்டைக் கடிதத்தை உடைத்து வாசிக்கலானார்.

சிவநேசர் அதிலுள்ள நான்கு வசனங்களை வாசித்ததும் திடுக்கிட்டுப் போனார். "பாக்கியம், இதோ பார்"- என்று கூறிக் கொண்டு அக்கடிதத்தைத் தன் மனைவியின் கையில் திணித்தார் அவர்.

"நானிங்கே நல்ல இடத்தில் திருமண ஏற்பாடு செய்து கொண்டிருக்க ஸ்ரீதர் அங்கே வேறிடத்தில் மாட்டிக் கொள்ளவா பார்க்கிறான். இதை எப்படியும் நிறுத்தி விட வேண்டும். நானொன்று நினைக்க அவன் வேறொன்று நினைக்கிறான். ஆனால் இதில் அவன் பிழை இல்லை. நாங்கள் தான் அவன் திருமணத்தைத் தாமதித்துவிட்டோம். அமுதத்தை அவனுக்குச் சென்ற ஆண்டே கட்டி வைத்திருக்கலாம். படிப்பு முடியட்டும் என்றிருந்தேன். ஆனால் அது என் தவறுதான். என்றாலும் ஸ்ரீதர் ஒருபோதும் என் பேச்சைத் தட்ட மாட்டான். எதற்கும் விஷயத்தை உடனடியாகத் தீர்த்துவிட வேண்டும். இன்று டெலிபோனில் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசாமல் வேறு ஏதாவது காரணம் சொல்லி, அவனிடம் நாளையே புறப்பட்டு வரும்படி சொல்லி விடு. அதற்கு அவனால் முடியாவிட்டால் நாங்களிருவரும் நாளை கொழும்புக்குப் புறப்படுவோம்" என்றார் அவர்.

பாக்கியம் "சரி" என்று கூறினாள் என்றாலும் சிவநேசரிடம் "ஒரு கடிதத்தைக் கண்டதும் இவ்வளவு பதை பதைக்கலாமா? நீங்கள் சிறிது யோசித்துப் பார்த்துக் காரியங்கள் செய்ய வேண்டும். எதற்கும் இன்று அவனுடன் டெலிபோனில் பேசி வரச் சொல்லுகிறேன்" என்று கூறினாள்.

சிவநேசரோ மூளை குழம்பி ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டார். அச்சமயம் நன்னித்தம்பி தனது காரியாலய அறைக்குள் இருந்து வெளிப்பட்டு, "உங்களைப் பார்க்க அதிகார் அம்பலவாணரும் மனைவியும் வந்திருப்பதாகக் காவலாளி தெரிவிக்கிறான் ஐயா" என்றார்.

சிவநேசருக்கு அதைக் கேட்டதும் சினம் ஏற்பட்டது. "இப்பொழுது என்னால் எவரையும் சந்திக்க முடியாது. வேறு நாளுக்கு வரச் சொல்" என்றார்.

ஆனால் பாக்கியம் உடனே தலையிட்டு, "வேண்டாம் அந்த மனிதன் பதினைந்து மைல் தூரத்திலிருந்து வந்திருக்கிறார். ஒருவரையும் அப்படி அலைகழிக்கக் கூடாது. வரச் சொல்வோம். நீங்கள் உள்ளே போங்கள். நான் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் ஓர் அரை மணி நேரம் கழித்து வந்து அவர்களைச் சந்தியுங்கள்" என்றாள்.

சிவநேசர் "சரி" என்று கூறிக் கொண்டே விறாந்தையிலிருந்து உள்ளே செல்ல, நன்னித்தம்பி டெலிபோனில் வாசற் காவலாளியிடம் அதிகாரின் காரை உள்ளே அனுமதிக்கும்படி சிவநேசர் உத்தரவிட்டிருப்பதாக அறிவித்தான்.

அதைத் தொடர்ந்து ஒரு சில நிமிட நேரங்களில் அதிகார் அம்பலவாணரின் லொட லொட மோட்டார் கார் போர்ட்டிக்கோவில் வந்து நின்றது. அதிகாரும் வள்ளியாச்சியும் அதிலிருந்து இறங்கினார்கள். பாக்கியம் அவர்களை "வாருங்கள் அதிகார்" என்று வரவேற்றாள்.

விறாந்தையிலுள்ள நாற்காலிகளில் அதிகாரும் மனைவியும் அமர்ந்தார்கள். "எங்கே ஐயா? காணோ¡மே!" என்றார் அதிகார். "அவர் உள்ளே அலுவலில் இருக்கிறார். சிறிது நேரத்தில் வந்து விடுவார்!" என்று கூறிய பாக்கியம் வள்ளியாச்சியுடன் அடுத்து வரவிருந்த செல்வச் சந்நிதித் திருவிழா பற்றி ஏதோ பேச்சுக் கொடுத்தாள்.

அதிகார் ‘போர்ட்டிக்கோ’வுக்குச் சற்றுத் தள்ளி நிலத்தில் பூம்பாவாடை விரித்திருந்த வேப்ப மரத்தின் இலைகளைச் சலசலக்கச் செய்து விறாந்தையை நோக்கி வீசிய குளிர்ந்த தென்றல் காற்றில் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் அவருடைய மனம் சிவநேசரிடம் ஸ்ரீதர் விஷயத்தை எப்படிப் பேசுவது, பத்மாவுக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பை எவ்வாறு கூற வேண்டும் என்பது பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தது. எந்த விஷயத்தையும் எடுத்த எடுப்பில் படாரென்று பேசிவிடும் அம்பலவாணருக்குக் கூட சிவநேசர் முன் அப்படிப் பேசும் துணிவில்லை. வார்த்தைகளை எவ்வாறு அளந்து பேசுவது என்பது பற்றித் திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தார் அவர்.


14-ம் அத்தியாயம் சிவநேசர்!

சிவநேசர் குடிகாரர் அல்லாவிட்டாலும் விருந்தினர்களை உபசரித்தற்கும் உணவருந்துவதற்கு முன்னர் தானே சிறிது குடித்துக் கொள்வதற்குமாக எப்பொழுது விஸ்கி போன்ற விலை உயர்ந்த குடி வகைகளைத் தமது மாளிகையில் வைத்திருப்பது வழக்கம். பளபளக்கும் வெள்ளித் தட்டுடன் கூடிய தள்ளு வண்டியில் அவை கண்ணாடிப் பாத்திரங்களுடன், வெண்ணெய்க் கட்டி, ‘பிஸ்கட்; போன்ற உணவு வகைகளுடனும் அலங்காரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. விறாந்தையில் சலவைக் கல் தளத்தில் சைமன் அத்தள்ளு வண்டியைத் தள்ளி வந்ததைக் கண்ட அதிகார் அம்பலவானரோ ஒரு பரவச நிலையில் இருந்தார். அவர் வாயில் எச்சில் ஊறிக் கொண்டிருந்தது. பொதுவாகவே குடிப்பவர்களுக்குக் குடி வகைகளைக் கண்டதும் இவ்வித அனுபவம் ஏற்படுமாயினும், இலவசமாக வரையின்றிக் குடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது, அவர்கள் அடையும் ஆனந்தம் கொஞ்சமல்ல. அதிலும் சாதாரண சாராயத்தையும் பியரையுமே தினசரி குடித்துப் பழகியவர்களுக்கு விலையுயர்ந்த விஸ்கியைக் கண்டதும் பிறக்கும் இன்பத்தை அளவிட முடியாது.சிவநேசர் பத்துப் பதினைந்து நிமிஷங்கள் கழித்து வெளியே வந்த போது, அவரது தலை மயிர் ஒழுங்காக வாரி விடப்பட்டிருந்ததோடு உடைகளும் சீர் செய்யப்பட்டிருந்தன. எப்பொழுதுமே தன்னைப் பார்க்க வருபவர்களை வரவேற்கும்போது அவர் இவற்றை அலட்சியம் செய்வதில்லை. அவரைக் கண்டதும் அதிகார் அம்பலவாணர் தம்மை அறியாமலே தம் ஆசனத்தை விட்டு எழுந்து விட்டார். சிவநேசரைப் பார்த்து “வணக்கம் ஐயா!” என்று கை கூப்பி வணங்கினார் அவர். சிவநேசரோ பதிலுக்கு வணங்கவில்லை. அவர் எப்பொழுதுமே யாரையும் வணங்குவதில்லை. வெறுமனே “அம்பலவாணரா, என்ன விசேஷம்? உட்காரும்” என்று மட்டும் சொன்னார். அம்பலவாணர் உட்கார்ந்தார். வள்ளியாச்சியோ சிவநேசரின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவரது முகத்தில் தன் விழிகளைப் பதிய விட்டாள். ஆனால் அவரோ அதைச் சற்றும் இலட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. இதனால் ஏற்பட்ட ஏமாற்றம் வள்ளியாச்சிக்குச் சிறிது துன்பத்தை அளித்ததாயினும், பாக்கியத்தின் கல கலப்பான பேச்சு அதை மாற்றிவிட்டது.

சிவநேசர் அம்பலவாணரிடம் “சென்ற வாரம் பட்டணத்தில், உமது மகள் நீர், கொழும்புக்குப் போயிருந்ததாகச் சொன்னாளே, எப்பொழுது வந்தீர்?” என்று கேட்டார்.

“நேற்றுத்தான் வந்தேன். அங்கு பல முக்கியமான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.”

“அப்படியா? அரசியல் விஷயங்களைப் பற்றித் தானே பேசுகிறீர்? எனக்கு அவற்றில் இப்பொழுது அக்கறை இல்லை. சுந்தரேஸ்வரர் கோயில் கோபுரத்தை இவ்வருடம் எப்படியும் கட்டி முடிக்க வேண்டும். அது ஒன்றில் தான் எனக்கு இப்பொழுது அக்கறை. அதற்காகக் கொழும்பில் இரண்டு மூன்று மாதங்கள் நான் தங்கும்படி கூட நேரிடலாம்.”

அம்பலவாணர் கூறிய முக்கிய விஷயம் அரசியல் விஷயமல்ல. உண்மையில் ஸ்ரீதர் விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டே அவர் அவ்வாறு பேசினார். எப்படி விஷயத்துக்கு வருவது என்று திக்கு முக்காடினார் அவர்.

இதற்கிடையில் சிவநேசர் சைமனிடம் அதிகாரை உபசரிப்பதற்காக மதுபான வகையறாக்கள் அடங்கிய தள்ளு வண்டியை அங்கு கொண்டு வரும்படி உத்தரவிட்டார்.

சிவநேசர் குடிகாரர் அல்லாவிட்டாலும் விருந்தினர்களை உபசரித்தற்கும் உணவருந்துவதற்கு முன்னர் தானே சிறிது குடித்துக் கொள்வதற்குமாக எப்பொழுது விஸ்கி போன்ற விலை உயர்ந்த குடி வகைகளைத் தமது மாளிகையில் வைத்திருப்பது வழக்கம். பளபளக்கும் வெள்ளித் தட்டுடன் கூடிய தள்ளு வண்டியில் அவை கண்ணாடிப் பாத்திரங்களுடன், வெண்ணெய்க் கட்டி, ‘பிஸ்கட்; போன்ற உணவு வகைகளுடனும் அலங்காரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. விறாந்தையில் சலவைக் கல் தளத்தில் சைமன் அத்தள்ளு வண்டியைத் தள்ளி வந்ததைக் கண்ட அதிகார் அம்பலவானரோ ஒரு பரவச நிலையில் இருந்தார். அவர் வாயில் எச்சில் ஊறிக் கொண்டிருந்தது. பொதுவாகவே குடிப்பவர்களுக்குக் குடி வகைகளைக் கண்டதும் இவ்வித அனுபவம் ஏற்படுமாயினும், இலவசமாக வரையின்றிக் குடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது, அவர்கள் அடையும் ஆனந்தம் கொஞ்சமல்ல. அதிலும் சாதாரண சாராயத்தையும் பியரையுமே தினசரி குடித்துப் பழகியவர்களுக்கு விலையுயர்ந்த விஸ்கியைக் கண்டதும் பிறக்கும் இன்பத்தை அளவிட முடியாது.

ஆனால் அதிகார் பரவச நிலையில் இருக்க, வள்ளியாச்சிக்கோ “எங்கே மனிதன் அளவு மீறிக் குடித்துவிட்டு வாய்க்கு வந்ததை உளற ஆரம்பித்துவிடுகிறாரோ?”” என்ற அச்சம் ஏற்பட்டது. அந்த அச்சத்தை அவருக்குத் தெரிவித்துக் கொள்வதற்காகத் தன் கண்களை அவர் முகத்தில் நாட்டி ஓர் எச்சரிக்கைப் பார்வை பார்த்தாள் அவள். இவ்விதம் கண்களால் பேசிக் கொள்வதில் சிறு வயதிலிருந்தே வள்லியாச்சி நல்ல சாமர்த்தியசாலி.

ஆனால் பாலைக் கண்ட பூனை எச்சரிக்கைப் பார்வையையா கவனிக்கும்? வெள்ளி பிரேமிட்ட நமது மூக்குக் கண்ணாடியைத் தமது கைக்குட்டையால் ஒரு தடவை நன்கு துடைத்து மாட்டிக் கொண்டு விஸ்கியில் முழுகி எழத் தயாராகிக் கொண்டிருந்தார் அவர்.

முதல் கிளாஸ் வயிற்றை அடைந்ததுமே நாக்கின் கட்டவிழத் தொடங்கியது அதிகாருக்கு. எனவே கொழும்பு அனுபவங்களைப் பற்றித் தாராளமாகப் பேச ஆரம்பித்தார் அவர். ஆண்கள் இவ்வாறு குடிக்க ஆரம்பித்ததும் பாக்கியம் “நீங்கள் குடியுங்கள். நாங்கள் வெளியே போகிறோம்” என்று குறிக் கொண்டு தோட்டத்தில் வேப்ப மர நிழலில் இருந்த சிமெந்து ஆசனத்தில் வள்ளியாச்சியுடன் போய் உட்கார்ந்து கொண்டாள்.

அதிகார் கல்கிசைக் கடற்கரையில் நடைபெற்ற நிச்சலுடைப் போட்டியைப் பற்றியும் தான் அதில் நடுவர் நாயகமாகக் கடமையாற்றியதைப் பற்றியும் பெருமையுடன் கூறினார். குடி போதை ஏற ஏற அதிலிருந்து ஸ்ரீதர் விஷயத்துக்கு தழுவுவது அவருக்குச் சிரமமாயிருக்க வில்லை.

“ஐயாவுக்கு நான் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும். இந்தப் போட்டியின் போது, உங்க மகன் ஸ்ரீதரை நான் அங்கு சந்தித்தேன். ஆள் நன்றாயிருக்கிறான். உண்மையில் அவனது சிநேகிதி ஒருத்தி தான் - பத்மா என்று பெயர் - நீச்சலழகியாகத் தெரியப்பட்டாள்.”

“அப்படியா...”

"ஆனால் ஒன்று. அவள் எவ்வளவு அழகியாயிருந்தாலும் ஸ்ரீதருக்கு ஏற்றவனல்ல ஐயா. யாரோ வாத்தியாரின் மகளாம். இந்தத் தொடர்பை முற்றாக வெட்டிவிட்டு, ஸ்ரீதருக்கு ஒரு கல்யாணத்தை உடனடியாக நீங்கள் செய்து வைக்க வேண்டும்”

அதிகார் சொன்ன இச்செய்தியைக் கேட்டுச் சிவநேசர் திடுக்கிட்டு விடவில்லை. “அப்படியானால் ‘நன்மை விரும்பி’ எழுதியுள்ளது உன்மைதான். பாக்கியம் கூறியது போல் நான் அநாவசியமாகப் பதைத்துவிட வில்லை. உடனடியாக இது விஷயமாக நடவடிக்கை எடுத்து ஸ்ரீதரின் கல்யாணத்தை முடித்து விட வேண்டியதுதான்” என்று தன்னுள் தானே கூறிக் கொண்டார் அவர்.

ஆனால் அந்த எண்ணத்துடனேயே சகிக்க முடியாத ஒரு வகை ஆத்திரமும் அவர் உள்ளத்தில் பொங்கி எழுந்தது. “ஸ்ரீதர் - நான் அவனை எவ்வளவு நேசிக்கிறேன் - என்னுயிர் என்றல்லவா நான் அவனைக் கருதுகிறேன் - அவன் என் அந்தஸ்துக்கும் மரியாதைக்கும் ஒவ்வாத முறையில் இவ்வாறு நடந்து கொள்கிறானே! இதை எப்படி பொறுப்பது” என்ற கலக்கம் ஏற்பட்டது அவருக்கு.

ஆனால் உண்மையில் அவருக்கு ஸ்ரீதரை விட அதிகார் அம்பலவாணர் மீதுதான் ஆத்திரம் அதிகமாக வந்தது. “இவன் போன்ற அற்ப மனிதன் என்னிடம் தன்னைப் பற்றிப் பேசக் கூடிய வகையில் ஸ்ரீதர் நடந்து கொண்டிருக்கிறானே! குறை கூறும்போது கூட என்னிடம் ஸ்ரீதரைப் பற்றி மரியாதையாகவும் கண்ணியமாகவும்தான் பேசுகிறான். ஆனால் மற்றவர்களிடம் இதைப் பற்றிப் பேசும்போது எப்படிப் பேசுகிறானோ யார் கண்டது? “சிவநேசருக்கு ஒரு மகன். அவன் சாதி கெட்ட பெட்டையைப் பிடித்துக் கொண்டு அலைகிறான் என்று சொல்ல மாட்டான் என்பது என்ன நிச்சயம்?” என்று சிந்தித்தார் அவர்.

அதன்பின் சிறிது நேரம் அவர் ஒன்றுமே பேசவில்லை. மெளனமாக இருந்தார். அம்பலவாணர் ஒரு மிடறு விஸ்கியை உள்ளே தள்ளிக் கொண்டு தன்னை மீறி வந்த ஏப்பத்தை வெளியேற்றிய வண்ணமே, “ஏன் பேசாதிருக்கிறீர்கள்? இதைப் பற்றி நீங்கள் ஏதாவது செய்தேயாக வேண்டும். நான் ஸ்ரீதருக்குக் கல்யாணம் ஒன்று பேசட்டுமா ஐயா?” என்றார்.

“ஸ்ரீதர் கல்யானத்தைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். அது எனக்குத் தெரியும். நீர் இப்போது போய் வரலாம்” என்றார் சிவநேசர். கர்வம் நிறைந்த அவரது உள்ளத்துக்கு, அதிகாரின் பேச்சு தன்னை இலேசாக மதித்து அவமானம் செய்வது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தியது.

“நீங்கள் என்னை பிழையாக விளக்குகிறீர்கள் போலிருக்கிறது. ஐயா, நான் பொய் சொல்லவில்லை. உண்மையைத்தான் சொன்னேன்” என்று விநயமாகப் பேசினார் அதிகார்.

சிவநேசர் அதிகார் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அறிந்தவரேயாயினும் “ஏன் இவனுக்கு நான் விட்டுக் கொடுக்க வேண்டும்” என்ற எண்ணம் மனதில் தோன்றவே, “எனக்கு ஸ்ரீதரைப் பற்றி நன்றாகத் தெரியும். அவனைப் பற்றி நீர் ஒன்றும் எனக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை. உம்முடைய மகன் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் ‘பார்’களில் குடித்து விட்டு விழுந்து கிடக்கிறான். அவன் விஷயத்தைக் கவனியும். ஒரு நாள் கொழும்பில் ஒரு ஹோட்டலில் குடி வெறியில் அவன் என்னிடம் வந்து தனக்குச் சிறிது பணம் வேண்டுமென்று கேட்டான். ரூபா நூறு கொடுத்து விட்டு வந்தேன். அவனைத் திருத்துவது பற்றி நீர் கவனியாமல் ஸ்ரீதர் விஷயத்தில் அக்கறை காட்டுகிறீர்? ஸ்ரீதர் என் மகன். அவனைச் சரியான முறையில் வளர்க்க எனக்குத் தெரியும். நீர் போய் வரலாம்.” என்று கடுமையாகக் கூறினார்.

சிவநேசரின் இக்கடும் முகத்தைக் கண்டு அதிகார் அம்பலவாணர் அப்படியே கலகலத்துப் போய்விட்டார். “என்னையோ, என் குடும்பத்தினரையோ என் மகனையோ குறை கூறுவது போற் பேசுவதற்கு, ஏ நாய்களே, உங்களுக்கு என்ன தகுதி?” என்று வினவுவது போன்ற ஒரு மனோபாவம் தொனித்தது. எப்பொழுதுமே சிவநேசர் அகம்பாவமும் கர்வமும் கொண்டவர் என்பது அதிகாருக்குத் தெரிந்த விஷயமேயானாலும், அந்தஸ்தும் அதிகாரமும் செல்வமும் செல்வாக்கும் உடைய அவர் தன் மீது கோபம் கொள்வதை அந்தக் குடிவெறி நேரத்தில் கூட அவர் விரும்பவில்லை. ஆகவே எப்படியாவது அவரது தப்பபிப்பிராயத்தை நீக்கிச் சமாதானம் செய்து கொள்ளவிரும்பிய அதிகார் “என் மகன் விஷயம் தெரிந்ததுதானே ஐயா? அவனுக்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன். அவன் உங்களிடம் பெற்ற ரூபா நூறையும் திருப்பிச் செலுத்திவிடுவேன். ஆனால் உங்களுக்குப் பணம் கொடுக்க என்னும் அத்துணிவு எனக்கில்லை. உண்மையில், நான் உங்கள் மனதை எவ்வகையிலாவது புண்படுத்திவிட்டேன் என்றால் என்னை மன்னிக்கவும், ஐயா” என்றார்.

சிவநேசரோ வெடுக்கென்று “அதிகார்! உமது பேச்சு எனக்கு ஆத்திரத்தை ஊட்டுகிறது. நீர் என்னோடு பேச வேண்டாம். நான் உம் மகனுக்குக் கொடுத்த பணத்தைத் திருப்பிப் பெறுவதற்கா கொடுத்தேன்? அதற்காகத்தான் அக்கதையை நான் இங்கு சொன்னேன் என்று நினைத்தீரா? மெலும் நீர் உம் மகனுக்காக வெடகப்படுவதாகக் கூறுகிறீர். நான் ஸ்ரீதருக்காக வெட்கப்படவில்லை. நீர் போய் வாரும்!” என்று கூறிக் கொண்டே தமது ஆசனத்திலிருந்து எழுந்து உள்ளே போய்விட்டார்.

அதிகார் அம்பலவாணர் தம் ஆசனத்தை விட்டெழுந்து திக்பிரமை பிடித்தவர் போல் நின்று கொண்டிருந்தார்.

சிவநேசர் மனதில் ஒரே கொந்தளிப்பு. தன் அன்பு மகனை யாரும் குறை கூறித் தம் வாழ்க்கையிலேயே அவர் ஒரு போதும் கேட்டதில்லை. இதுவரை அவர் கேட்டுள்ளதெல்லாம் ஸ்ரீதரைப் பற்றிய பாராட்டுரைகள். சென்ற வாரம் கூடப் பண்டிதர் சின்னப்ப பாரதி “பிள்ளை என்றால் ஸ்ரீதர் போலல்லவா இருக்க வேண்டும்? படிப்பில் புத்திசாலி. கலைகளில் பேரார்வம், பண்பில் இணையற்றவன். கொடைக்குக் கர்ணன். அழகில் அந்தச் சுப்பிரமணியக் கடவுளே தான்” என்று வர்ணித்திருந்தார். அந்த ஸ்ரீதரைப் பற்றித் தான் இன்று இந்த அற்பன் அவதூறுகள் கண்டுபிடித்துக் கூறுகிறான். இவனை என்ன செய்யலாம்? - உண்மையில் அவர் அறிவிழந்த நிலையில் இருந்தார். நாம் என்ன செய்கிறோம், பேசுகிறோம் என்பதே அவருக்கு விளங்கவில்லை.

வேப்பமர நிழலில் வள்ளியாச்சியுடன் சைமன் கொண்டு வந்து வைத்திருந்த ஒரேஞ் பார்லியை அருந்தி வெற்றிலை போட்டுப் பேசிக் கொண்டிருந்த பாக்கியம் மாளிகை விறாந்தையில் பரபரப்பான பேச்சும் சம்பவமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன எனப்தைக் கண்டு கொண்டதும் “வா வள்ளியாச்சி, வீட்டுக்குள் போவோம்” என்று எழுந்து வந்தாள்.

அங்கே அதிகார் நின்று கொண்டிருந்த தோரணையைக் கண்டதும் பாக்கியம் " என்ன விஷயம்? ஆள் எங்கே” என்று கேட்டாள். “கோபித்துக் கொண்டு உள்ளே போய்விட்டார்” என்றார் அதிகார்.

“கோபமா? அவர் கோபிக்கும்படி நீர் என்ன பேசினீர்?” என்றாள் பாக்கியம்.

"இல்லை! ஸ்ரீதரைப் பற்றி..”

“ஸ்ரீதரைப் பற்றியா... ஓகோ.. வள்ளியாச்சியும் என்னிடம் சொன்னாள். அவரிடம் நீர் அதைப் பற்றிப் பேசியிருக்கக் கூடாது. என்னிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். ஸ்ரீதரைப் பற்றி யாரும் குறைவாகப் பேசுவதை அவர் ஒரு போதும் பொறுக்க மாட்டார்.”

“நான் குறைவாகப் பேசவில்லை, அம்மா”

“கொழும்பிலே எவ்வித அந்தஸ்துமில்லாத ஒரு பெண்ணின் பின்னால் அவன் திரிகிறான் என்றால் அது குறையில்லாமல் வேறென்ன?”

“உங்களுக்கு யார் சொன்னார்கள்? வள்ளியாச்சி சொன்னாளா? அப்படியானால் வள்ளியாச்சி மீது உங்களுக்குக் கோபமா?”

“எனக்கு யாரிடமும் கோபமேற்படுவதில்லை. மேலும் வள்ளியாச்சி பொய் சொல்லவில்லையே! ஆனால் உனமையைக் கூட ஆளையும் இடத்தியும் அறிந்து சொல்ல வேண்டும். எதையும் கண்ணை மூடிக் கொண்டு பேசலாமா?”

“நீங்கள் சொல்வது சரி. அதற்காக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். ஐயாவிடமும் என்னுடைய தெரியாத்தனத்திற்க்காக என்னை மன்னிக்கும் படி நீங்கள் சொல்ல வேண்டும்.”

“அதை அப்புறம் பார்ப்போம். இப்பொழுது நீங்கள் போய் வாருங்கள். அது போக ஸ்ரீதரின் கல்யாணம் சீக்கிரம் நடக்கும். உங்களுக்கும் அழைப்பு வரும். கட்டாயம் நீங்கள் வள்ளியாச்சியுடன் வர வேண்டும். தெரிகிறதா?”

“கட்டாயம் வருவோம், அம்மா.”

அதிகார் அம்பலவாணரின் பழைய மொடல் எலும்பு குலுக்கி “லொட லொடக்” கார் சில நிமிஷ நேரத்தில் ‘போர்ட்டிக்கோ’விலிருந்து சீறிக் கொண்டு கிளம்பியது. வள்ளியாச்சி அதிகாரிடம் “பெரிய மனுஷருடன் உங்ளுக்குப் பேசத் தெரியாது. அநாவசியமான விஷயங்களைப் பேசிவிட்டு வேண்டிக் கட்டிக் கொண்டு வருகிறார்” என்றாள்.

“சீ வாயை முடு” என்றார் அதிகார்.

பாக்கியம் அன்றிரவு எட்டு மணிக்கு ஹோர்ட்டன் பிளேஸ் ‘கிஷ்கிந்தா’வுக்கு டெலிபோன் செய்தாள். ஆனால் ஸ்ரீதர் வீட்டில்லை. ஆகவே வேலைகாரச் சுப்பையாவிடம் வழக்கத்தில் பேசுவது போல் ஸ்ரீதரின் சாப்பாடு முதலிய விஷயங்களைப் பேசிவிட்டு, அவன் வீட்டுக்கு வந்ததும் “அமராவதி”க்கு டெலிபோன் செய்யும்படி அவனுக்குக் கூறும்படி உத்தரவிட்டாள்.

“ஆகட்டும் அம்மா” என்றான் சுப்பையா.

அன்று ஸ்ரீதரும் சுரேசும் வீட்டுக்கு வந்தபொழுது பதினொரு மணிக்கு மேலாகிவிட்டது. ஸ்ரீதருக்குத் தெரிந்த சில நண்பர்கள் நடத்திய நாடகமொன்றுக்கு அவர்கள் போய் விட்டு வந்தார்கள். வரும் வழியில் நாதசுரம் வேணு கூறிய விஷயத்தைப் பற்றிச் சுரேஷிடம் விவரித்தான் ஸ்ரீதர். “எனக்கு வேணு கூறிய விஷயத்தைக் கேட்டது தொடக்கம் மனம் கலங்கிப் போயிருக்கிறது. நான் பத்மாவைத் திருமணம் செய்வது பற்றி அப்பாவிடம் பேச எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில் கந்தப்பரின் மகள் அமுதா விஷயம் இப்படி முளைத்திருக்கிறது. நான் பத்மாவை விட்டு வேறு யாரையும் ஒரு போதும் திருமணம் செய்யப் போவதில்லை. அம்மாவிடம் சொல்லி எப்ப்டியும் அவளையே திருமணம் செய்வேன். மேலும் அப்பா என் மிது எவ்வªவு அன்பு வைத்திருக்கிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். என் விருப்பத்துக்கு மாறாக அவர் எதையும் செய்ய மட்டார். என்றாலும் இப்படி ஒரு சிறு சிக்கல் தோன்றிவிட்டதே என்ப்து எனக்குக் கவலையாகத்தானிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ் நிலையில் நன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் சுரேஷ்” என்று கேட்டான் ஸ்ரீதர்.

சுரேஷ் சிறிது நேரம் பேசாதிருந்து விட்டு, ஸ்ரீதர், நீ முதல் முதலாகப் பத்மாவைப் பற்றி என்னிடம் கூறிஅய் போது நான் உன் அப்பா நீ பத்மாவைத் திருமணம் செய்ய ஒத்துக் கொள்ள மாட்டார் என்று கூறியது ஞாபகமிருக்கிறதா? இன்றைய சமுதாய அமைப்பிலே இது போன்ற காதல் நிறைவேறுவது கடினம்,” என்றான்.

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

“ஏனா? இன்றைய உலகம் பணத்தைச் சுற்றிச் சுழலும் உலகம். நீ கோடீஸ்வரன். அதனால் ஓர் அந்தஸ்தும் இருக்கிறது. பத்மாவோ சர்வ சாதாரண மத்தியதர வர்க்கப் பென். நீ அவளைத் திருமணம் செய்ய உன் அப்பா மட்டுமல்ல, இன்றைய சமுதாயமே இடங் கொடாது. உன் அப்பா அதற்கு இடம் கொடுத்தால் இவ்வுலகமே அவரைப் பழிக்கும். என்னைப் போன்ற ஒரு சில இளைஞர்கள் வேண்டுமானால் அவரை மெச்சக் கூடும். அதனால் என்ன பயன்? “உலகம் எனபது உயர்ந்தோர் மாட்டு” என்று ஒரு வசனம் உண்டு. இன்றைய உலகில், உயர்ந்தவர் என்பதற்குக் கூடப் பணமும் அந்தஸ்தும் உல்ளவர்கள் என்று தான் பொருள்?” என்றான் சுரேஷ்.

ஸ்ரீதர் சுரேஷின் பேச்சை ‘உம்’ கொட்டிக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

சுரேஷ் மேலும் தொடர்ந்தான். “ஆனால் இதில் ஒரு விசித்திரம்! கோடீஸ்வரர் சிவநேசரின் மகன் கொட்டாஞ்சேனைப் பத்மாவைத் திருமணம் செய்தான் என்று கேட்டதும் குறை கூறுபவர்கள் பணக்காரர்களாகத்தான் இருப்பார்கள் என்று நினைத்து விடாதே. ஏழை, மத்தியதர வர்க்கத்தினர்தான் இன்னும் அதிகமாகக் கண்டிப்பார்கள். போயும் போயும் சிவநேசரின் மகன் இப்படிப் போய்க் குப்புற விழுந்தானே என்று பேசுவார்கள் அவர்கள். இன்னும் பத்மா உன்னை என்னதான் உண்மையாகக் காதலித்தாலும் பத்மாவின் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? பத்மா கெட்டிக்காரி. எப்ப்டியோ ஒரு பெரிய பணக்காரனை ஏமாற்றிப் பிடித்து விட்டாள் என்று தான் பேசுவார்கள்...”

ஸ்ரீதர் சுரேஷின் பேச்சைத் தடுத்து, “இவைகளல்ல இப்போதுள்ல பிரச்சினை. பத்மாவை நான் எப்படியும் திருமணம் செய்தேயாக வேண்டும்.“ அதற்கு வழி என்ன?” என்றான்.

சுரேஷ், “இது கடினமான விஷயம்தான். உனது அப்பா அதை எதிர்க்கவே செய்வார். போராடிப் பார். இதில் என்னைப் பொறுத்தவரையில் நீ கந்தப்பர் மகளைக் கட்டிக் கொண்டு சந்தோசமாயிருக்க முடியுமென்று நான் நம்பவில்லை. என் விஷயம் வேறு. நான் யாரையும் காதலித்ததில்லை. ஆகவே எல்லாப் பெண்களும் ஒன்றுதான். ஆனால் ஒரு பெண்ணை மனதாரக் காதலித்த ஒருவன், இன்னொரு பெண்ணுடன் வாழும்போது பழைய காதலியின் நினைவு அடிக்கடி தோன்றிக் கொண்டுதானிருக்கும். அது குடும்ப வாழ்க்கைக்கு இன்பத்தைத் தராது” என்றான்.

ஸ்ரீதர் “ஆனால் வேணு சொன்ன விஷயம் எவ்வளவு தூரம் உண்மை என்பது யாருக்குத் தெரியும்? இதைப் பற்றி அமமவிடம் கேட்கலாமென்றிருக்கிறேன். நாளை நிச்சயம் வீட்டுக்கு டெலிபோனில் பேச வேண்டும்.” என்றான்.

இவ்வாறு நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது வீடு வந்துவிட்டது. வேலைக்கார சுப்பையா ‘அமராவதி’யிலிருந்து வந்த செய்தியை ஸ்ரீதருக்குக் குறிப்பிட்டான். ஸ்ரீதர் டெலிபோனை எடுத்து ‘ட்ரங்க் கோல்’ போட்டு வீட்டுக்குப் பேசினான்.

என்னதான் மனக் குழப்பங்களிருந்தாலும் ஸ்ரீதர் தாயாரோடு மிகவும் உற்சாகமாகவும் வேடிக்கையாகவுமே பேசினான். பரிகாசமாகப் பேசுவதில் அவனுக்கு எப்பொழுதும் இஷ்டம். சிறு வயதிலிருந்தே தாயாரோடு விளையாட்டுப் பேச்சுப் பேசி அவனுக்குப் பழக்கம். வீட்டில் தனியாக வளர்ந்த ஒரே பிள்ளையாக இருந்ததால், பாக்கியம் அவனுக்குத் தாயாக மட்டுமிருக்கவில்லை. அவனோடு சேர்ந்து விளையாடும் சகோதரி அல்லது விளையாட்டுத் தோழி போலவும் விளங்கினாள் அவள்.

டெலிபோனில் தாய் வந்ததும் குரலை மாற்றிக் கொண்டு, “அது திரு. சிவநேசர் வீடா? திருமதி சிவநேசருடன் நான் பேசலாமா?” என்றான் ஸ்ரீதர்.

பாக்கியம் “யாரது? நான் தான் திருமதி சிவநேசர். என்ன வேண்டும்?” என்றாள்.

“நான் யாழ்ப்பாணம் பொலீஸ் ஸ்டேஷனிலிருந்து பேசுகிறேன். சிவநேசருடன் பேச வேண்டும்.”

“என்ன, பொலீஸ் ஸ்டேஷனிலிருந்தா? என்ன விஷயம்?”

“பாரதூரமான விஷயம். பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் சிவநேசர்.”

பாக்கியம் பதைபதைத்துப் போனாள். பதற்றத்தில் “ஆ” என்று சப்தமிட்டுவிட்டாள். ஸ்ரீதருக்கு அம்மா ஏமாந்து போனாளே என்ற அனுதாபம் ஏற்பட்டது. ஆகவே அதற்கு மேலும் நாடகத்தை நடித்துக் கொண்டு போகாமல் தன்னுடைய சொந்தக் குரலில் “அம்மா என்னைத் தெரியவில்லையா? நான் தான்.. சொல்லு பார்ப்போம்?” என்று கொஞ்சினான்.

பாக்கியம் பெருமூச்சு விட்டாள். ஒரு புறம் ஸ்ரீதரின் விளையாட்டு அவளுக்குச் சிரிப்பை மூட்ட, மறுபுறம் போலிக் கோபட்த்துடன் “ஓ ஸ்ரீதரா? ஆளைப் பார். நல்ல விளையாட்டு. இப்படி எல்லாம் விளையாடக் கூடாது. அப்பாவுக்கு நீ இப்படி விளையாடுவது தெரிந்தால் கோபம் வரும்.” என்றாள்.

“உனக்குத் தெரியாது அம்மா, அப்பா சும்மா கோபிப்பது போல் காட்டுவாரேயல்லாமல் கோபிக்கவே மாட்டார். நீ அவரிடம் சொல்லிப்பார். நிச்சயம் அவர் சிரிப்பார்”

“நீயே அவரிடம் சொல்லு. நான் சொல்ல மாட்டேன்.”

“ நான் சொல்லுவதா? என்னால் முடியாது. எனக்குப் பயம்?”

“அப்படியானால் அவர் கோபிப்பார் என்று தானே சொல்லுகிறாய்?”

“நான் சொன்னால் கோபிப்பார். நீ சொன்னால் கோபிக்கமாட்டார்.”?

“அது கிடக்கட்டும் ஸ்ரீதர். நீ நன்றாக உன் உடம்பைக் கவனித்து வருகிறாயா? சுப்பையா நன்றாய்ச் சமைக்கிறானா? உன்னுடைய சுரேஷ் எப்போது சீமைக்குப் போகிறான்?”

“என் உடம்பைக் கவனிக்கிறேனா என்று கேட்கிறாயா? அடுத்த வாரம் நான் யாழ்ப்பாணத்துக்கு வரும்போது நீ என்னைப் பார்த்தால் நிச்சயம் அடையாளம் கண்டு கொள்ள மாட்டாய் அம்மா. அதற்காக “நான் தான் ஸ்ரீதர்” என்று கொட்டை எழுத்தில் என் பெயரை என் நெஞ்சில் எழுதி ஒட்டிக் கொண்டு வரப் போகிறேன்.”

“என்ன? அடையாளம் தெரியாத அளவுக்கு அவ்வளவு மெலிந்து போய் விட்டாயா ஸ்ரீதர்?”

“இல்லை. கொழுத்துப்போய் விட்டேன் அம்மா. நீயே பார். ஆனால் ஒன்று நீ அனுப்பிய எலுமிச்சை ஊறுகாய் முடிந்து விட்டது. நேற்று சுப்பையா கடையிலிருந்து ஒரு போத்தல் ஊறுகாய் வாங்கி வந்தான். எனக்கு ஊறுகாய் இல்லாவிட்டால் சாப்பாடு செல்லாது.”

"என்ன? கடையிலிருந்து வாங்கினாயா? அது உடம்புக்கு ஒத்துக்கொள்ளுமா? ஏன் நீ  எனக்கு அறிவிக்கவில்லை? இது எல்லாம் சுப்பையாவின் பிழை. அவனுக்கு இப்பொழுது வேலையில் கவனமேயில்லை. இல்லாவிட்டால் எனக்கு அறிவித்திருக்க மாட்டானா? ஆளை நான் என்ன செய்கிறேன் பார்? எல்லாம் நீ கொடுக்கும் இடம். நீ என்னோடு விளையாடுவது போல் தான் அவனோடும் விளையாடுவாய். அதனால் அவன் அப்படிச் செய்கிறான்.”

“சரி அம்மா. ஊறுகாய்க் கதையை விட்டு விடு. சுரேஷைப் பற்றி நீ கேட்டாயல்லவா? சுரேஷ் அடுத்த வெள்ளிக்கிழமை சீமை போகிறான். அவனை அனுப்பியதும் உடனே யாழ்ப்பாணம் வருவேன். அம்மாவைப் பார்த்து இரண்டு மாதத்துக்கு மேலாகிறது. பார்க்க ஆசையாயிருக்கிறது/”

“அப்பாவும் உன்னைக் காணாமல் கவலையாயிருக்கிறார். உடம்பு சரியில்லாததால் அவர் முன்னர் போல் அடிக்கடி கொழும்புக்கு வர விரும்பவில்லை. இன்னும் அவர் வருவதென்றால் நானுமல்லவா வர வேண்டும்? இங்கு வீட்டைப் பார்ப்பதார்? அப்படியானால் நீ இங்கு சனிக்கிழமை வந்து விடுவாய். அப்படித்தானே!”

“அப்படித்தான்”

“சரி அப்படியானால் அப்பாவிடமும் நீ வருவதாகச் சொல்லி விடுகிறேன், ஸ்ரீதர்.”

“ம் - வேறென்ன விஷயம்?”

“ஒன்றுமில்லை. உன்னை உடனே வரச் சொல்ல வேண்டுமென்பதற்காகத்தான் டெலிபொன் பண்ணினேன். ஊறுகாயை நாளைக்கே ரெயிலில் அனுப்பி வைக்கிறேன்.”

“வேண்டாம் அம்மா. இன்னும் ஐந்தாறு நாள் தானே கொழும்பில் இருக்கப் போகிறேன்.’

“அதனால் என்ன? நீ கடை ஊறுகாயைச் சாப்பிடக் கூடாது. உடனே அதை விட்டு விடச் சொல்லு.

ஸ்ரீதர் அதன் பின் பேச்சை வேறொரு முக்கிய விஷயத்துக்கு மாற்றினான்.

“அம்மா ஒரு விஷயம்.”

“என்ன அது?”

“நீயும் சரி. அப்பாவும் சரி என்னுடைய நாடகத்தைப் பார்க்கக் கொழும்புக்கு வர வில்லையல்லவா?”

“ஆமாம். உனக்கு அது மிகவும் மனவருத்தம். அப்படித்தானே?”

“இல்லை அம்மா. அடுத்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் அதே நாடகத்தைப் போடுவதற்கு எங்கள் பேராசிரியர் ஏற்பாடு செய்திருக்கிறார். கல்லூரி நிதிக்காகப் போடுகிறோம். அங்கே வந்து பார் என்னுடைய நடிப்பை. நிச்சயமாக நீ வர வேண்டும். அப்பா வரவிட்டால் பரவாயில்லை. அவர் முன்னால் நடிக்க எனக்கு வெட்கமாயிருக்கிறது.”

“நல்ல நடிகன் நீ! வெட்கப்பட்டால் நடிக்க முடியுமா? அவருக்கும் உன் நடிப்பைப் பார்க்க ஆவல். கொழும்புக்கு உன் நாடகத்தைப் பார்க்க வராதது அப்பாவுக்கு எவ்வளவு மன வருத்தம் தெரியுமா? எத்தனையோதரம் அவர் அதனை எனக்குச் சொல்லிவிட்டார்.”

“சரி அம்மா. அப்படியானால் இரண்டு பேரும் வந்து பாருங்கள். நான் அந்த நாடகத்தில் தேபேஸ் மன்னனாக வந்து என் கண்களைக் குத்திக் கொள்வேன். பார்க்கப் பயங்கரமாயிருக்கும். நீ அழுது விடுவாய்.”

“அப்படி அழ மாட்டேன் நான். நான் என்ன குழந்தைப் பிள்ளையா?”

“சரி, இருந்து பார்ப்போமே”

தாயும் மகனும் இப்படிப் பலவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டாலும் இருவரும் தங்கள் மனதை அலைத்துக் கொண்டிருந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. ஸ்ரீதரின் திருமணத்தைப் பற்றிய விஷயமே அது. வேணு தன்னிடம் கூறிய தகவல்களைப் பற்றிப் பேச ஸ்ரீதர் துடித்தானென்றாலும் எப்படியோ மனதை அடக்கிக் கொண்டான். யாழ்ப்பாணம் போகும்பொது அங்கே அதைப் பேசிக் கொள்லலாம் என்பது அவனது திட்டம். பாக்கியத்தின் எண்ணமும் அதேதான். மேலும், சிவநேசரும் அதைப் பற்றிப் பேச வேண்டாமென்று அவளிடம் சொல்லியிருந்தாரல்லவா? சும்மா இருக்கிற சங்கை அவசரப்பட்டு ஊதினால், விஷயம் கெட்டுப் போய்விடலாம் என்ற அச்சம் இருவர் உள்ளத்திலும் இருந்தது. ஆகவே முக்கியமான விஷயத்தை விட்டுவிட்டு மற்ற எல்லாவற்றையும் பேசினார்கள் அவர்கள்.

தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -அன்றிரவு வானம் மப்பும் மந்தாரமாயிருந்தது. சிவநேசர் அமராவதி மாளிகையின் மேல் மாடியில் நித்திரையின்றி நடந்து கொண்டிருந்தார். அவர் மனது இலகுவில் குழம்புவதில்லை. எபோதாவது அவ்விதம் குழப்பமேற்பட்டால், மாடியிலுள்ள சேர் நமசிவாயத்தின் பெரிய படம் வைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் மேலும் கீழுமாக நடந்து கொண்டே சிந்திப்பது அவரது வழக்கமாகும். பல வருடங்களின் பின் அந்த மண்டபத்தில் அன்றிரவுதான் மேலும் கீழுமாக நடந்து கொண்டிருந்தார் அவர். நன்கு புகையிலை திணிக்கப்பட்ட சுங்கானை வாயிலே பிடித்துக் கொண்டு சிவநேசர் நடந்து கொண்டிருந்த காட்சியைக் கண்ட அவர் மனைவி பாக்கியம் அவர் இப்போது படுக்கை அறைக்கு வர மாட்டார் என்பதைத் தெரிந்து கொண்டு, தான் படுப்பதற்குப் போய் விட்டாள். வேலைக்கார சைமன் கதவுகளைப் பூட்டி விட்டான். எங்கும் பேரமைதி சூழ்ந்த அந்த இரவிலே மாரி காலமானதால் தாமரைத் தடாகத்திலும் நீச்சற் குளத்திலும் கிடந்த தவளைகளின் கூச்சல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.

மணி பன்னிரண்டாகியும் அவர் இன்னும் நடந்து கொண்டேயிருந்தார். திடீரென ஏதோ நினைத்துக் கொண்டவர் போல பாட்டனார் சேர் நமசிவாயத்தின் படத்துக்கு முன்னால் சென்று அதனைப் பார்த்துக் கொண்டு நின்றார் அவர். முழு ஆள் அளவில் வர்ணங்களில் தீட்டப்பட்ட அந்தப் படத்துக்குப் பக்கத்தில் அவரது தந்தையார் கனகசபையின் பெரிய படமும் காணப்பட்டது. அதற்குச் சற்றுத் தொலைவில் ஸ்ரீதர் தீட்டிய சிவநேசர் படமிருந்தது. மூன்றையும் நன்கு பார்த்துவிட்டு அங்கு மாட்டப்பட்டிருந்த ஸ்ரீதரின் புகைப்படங்களையும் பார்த்தார் அவர். சேர் நமசிவாயம் தொடக்கம் ஸ்ரீதர் வரை எல்லோர் முகத்திலும் காணப்பட்ட தோற்ற ஒற்றுமை என்றும் போல் அப்பொழுதும் அவரைக் கவர்ந்தது.

ஸ்ரீதரின் படத்தைப் பார்த்த வண்ணம் “ஸ்ரீதர்! நீதான் எங்கள் குடும்பத்தின் குலக் கொழுந்து. நீ என்னை ஏமாற்றி விடுவாயா? கந்தப்பர் மகளை நீ கட்டாவிட்டால் கூடப் பரவாயில்லை. ஆனால் நிச்சயம் நீ அந்தஸ்துக் குறைந்த இடத்தில் திருமணம் செய்யக் கூடாது. வேண்டுமானால் சேர் நமசிவாயத்தின் தம்பி சேர் தம்பையா செய்தது போல ஒரு வெள்ளைக்காரியைக் கட்டிக் கொள். அதைக் கூட நான் அனுமதிப்பேன். ஆனால் நிச்சயம் மொட்டைக் கடிதத்தில் கூறப்பட்டது போன்ற பெண்ணை நீ கட்ட முடியாது” என்று ஸ்ரீதருடன் பேசுவது போல் தன்னுள் தானே பேசிக் கொண்டார் அவர்.

அதன் பின் மண்டபத்தின் இன்னொரு புறத்தில் மாட்டப்பட்டிருந்த சேர் தம்பையா தம்பதிகளின் புகைப்படத்தைப் பார்க்கச் சென்றார் அவர்.

இவ்வாறு அவர் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்க வானம் பிளந்தது போல் இடி முழக்கத்துடன் பெருமழை கொட்ட ஆரம்பித்தது. மின்னல் சீறியது; காற்று குமுறியது. திறந்து வைத்திருந்த ஜன்னல்கள் படார் படார் என்று மோத ஆரம்பித்தன. சைமன் படுக்கையை விட்டு எழுந்து ஓடி வந்தான். அவன் ஜன்னல்களை மூடிக் கொண்டிருக்க, சிவநேசர் திறந்திருந்த ஓரிரு ஜன்னல்களுக்கூடாக வெளியே மழையின் நர்த்தனத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். ‘அமராவதி’ வளவின் மரங்கள் காற்றில் ஹோவென்று அலறி ஆடிய காட்சி பயங்கரமாயிருந்தது. “புயலின் ஆரம்பமா இது?” என்று பயந்து போனார் அவர்.

பாக்கியம் படுக்கையறையிலிருந்து வெளியே வந்து “வாருங்கள். ஏன் நித்திரை விழிக்கிறீர்கள்?” என்று கேட்டது, முதலில் அவருக்குக் கேட்கவில்லை. இரண்டாவது முறையும் கூப்பிட்ட பின்னர் படுக்கை அறையை நோக்கிச் சென்றார் அவர்.


15-ம் அத்தியாயம்: மழை நீராட்டு!

15-ம் அத்தியாயம்: மழை நீராட்டு!அடுத்த வாரம் டாக்டர் சுரேஷ் சீமைக்குப் பயணமானான். ஸ்ரீதர் அவனுக்குத் தான் வாக்களித்த பிரகாரம் விலை உயர்ந்த உடைகளைப் பரிசளித்தான். கொழும்புத் துறைமுகத்தில் அவனை வழியனுப்பப் பத்மாவுடன் அவன் போயிருந்தான். அவர்களைத் தவிர சுரேஷின் சொந்தக்காரரான வெள்ளவத்தைக் கடைகாரர், அவனது மாமனார், மற்றும் நண்பர்கள் பலரும் துறைமுகத்துக்கு வந்திருந்தார்கள். எல்லோரும் அவனை வாழ்த்தி வழியனுப்பினார்கள். ஆனால் சுரேஷைப் பிரிவதற்கு மற்றவர்கள் எல்லோரிலும் பார்க்க ஸ்ரீதரே கஷ்டப்பட்டான். சுமார் ஐந்து வருடங்களாக அவனது வாழ்க்கையில் முற்றாக ஒட்டிக் கொண்டு இரவும் பகலும் கூடி வாழ்ந்த அறிவு நிறைந்த அருமை நண்பனல்லவா? ஆகவே அவனது பிரிவு ஸ்ரீதரை அப்படியே ஆட்டிவிடும் போலிருந்தது. இனித் தொட்டதற்கெல்லாம் ஆலோசனைகள் கேட்பதற்கும், மனதிலுள்ளவற்றையெல்லாம் கொட்டிப் பேசுவதற்கும் எங்கு போவது? அதை நினைத்ததும் கப்பல் புறப்படும் நேரம் வந்த போது ஸ்ரீதரின் கண்கள் கலங்கிவிட்டன. சுரேஷ் சிரித்துக் கொண்டு அவன் கலங்கிய கண்களைத் துடைத்து விட்டான். "ஸ்ரீதர்! நான் இங்கிலாந்திலிருந்து மீள இரண்டு வருடங்களாகும். அதற்கிடையில் உன்னுடைய கல்யாணம் நடந்து முடிந்து விடுமல்லவா? நான் மீண்டு வரும்பொழுது ஒரு சின்ன ஸ்ரீதர் உன் கையைப் பற்றிக் கொண்டு ஓடித் திரிவான்! நான் இலங்கை வந்ததும் முதலில் உன்னைத்தான் சந்திப்பேன். அதன் பின் எனது திருமணமும் நடைபெறும். நீ அதற்குக் கட்டாயம் வர வேண்டும். அது தவிர உனது சுகம் பற்றி எனக்கு அடிக்கடி கடிதங்கள் எழுத மறக்காதே. நானும் உடனுக்குடன் பதில் போடுவேன்." என்று கூறினான் சுரேஷ்.

பின்னர், பத்மாவிடம் "ஸ்ரீதரைக் கவனமாகப் பார்த்துக் கொள். நீங்கள் இருவரும் இன்பமாக வாழ வேண்டுமாறு இப்பொழுதே எனது திருமண வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ளுகிறேன்." என்றான். பத்மா நாணத்தோடு "உங்கள் அன்புக்கு எனது நன்றி" என்று பதிலளித்தாள்.

சுரேஷை வழியனுப்பி விட்டுப் பத்மாவுடன் துறைமுகத்துக்கு வெளியே வந்த ஸ்ரீதர் "பத்மா! சிறிது நேரம் கால்பேஸ் கடற்கரைக்குப் போய் விட்டு வரலாமா?" என்றாள். பத்மாவும் "ஆம்" என்று பதிலளிக்கவே கார் கால்பேஸ் மைதானத்தை நோக்கிச் சென்றது.

நேரம் இரவு எட்டு மணியாயிருந்தது. கால்பேஸ் கடற்கரையில் மின்சார விளக்குகள் சுடர் விட்டுக் கொண்டிருந்தன. ஏராளமான ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் ஒருவரை ஒருவர் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் இருந்தார்கள். ஒரு சில காதலர்கள் இருள் மண்டிய இடங்களில் மோனத்தில் மூழ்கி ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இன்ப மோகத்தில் மூழ்கிக் கிடந்தார்கள். காற்றோடு போராடிக் கொண்டிருந்த பெரிய திரிகளுடன் கூடிய மண்ணென்ணெய் விளக்குகள் பொருத்திய தட்டுகளில் கடலை விற்றுக் கொண்டிருந்த கடலைக்காரர்களிடம் கடலை வாங்கி உண்டு கொண்டு இக்காதல் ஜோடிகளில் சிருங்கார சேஷ்டைகளைக் கடைக் கண்ணாற் பார்த்துக் கொண்டிருந்தனர் ஒரு சிலர். காதல் விஷயங்களில் அனுபவமில்லாத இளம் வாலிபர்கள்தான் இதில் ஈடுபட்டனர் எனபதற்கில்லை. நன்கு வழுக்கையாகிவிட்ட நடுத்தர வயதினர் பலரும் தமது பளபளக்கும் மண்டையோடுகளைத் தடவிக் கொண்டு இவற்றைக் கள்ளத் தனமாகப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தனர். வெள்ளைக்காரச் சுற்றுப் பயணிகள் சிலர் இலங்கையின் வெள்ளிப் பூவிட்ட கரு நீல இரவை அண்ணாந்து பார்த்து இரசித்த வண்ணம் கடலோர நடைபாதையில் சென்று கொண்டிருந்தார்கள். ஐஸ்கிறீம் வான்கள் குழல்களை முறுக்கிக் கொண்டு ஐஸ்கிறீம் விற்றுக் கொண்டிருந்தன. சிறுவர் சிறுமியர் அவற்றை மொய்த்துக் கொண்டு அட்டகாசம் செய்தார்கள். எத்தகைய கஷ்டங்களுக்கிடையேயும் வாழ்க்கை வாழத் தக்கது என்ற நம்பிக்கை மனிதனின் இதயத்தில் எவ்வளவு தூரம் ஊறியிருக்கிறது என்பதற்கு இக் கடற்கரைக் காட்சிகள் சான்று பகர்ந்தன. இருந்தாலும், கடற்கரைக்கு வந்திருந்த எல்லோருமே இன்பப் பொழுது போக்குகளிலேயே ஈடுபட்டிருந்தனர் என்பதற்கில்லை. நீலக் கடலின் பூப்பொன்ற வெள்ளலைகளில் ஏறி வந்த குளிர் காற்று உடலைத் தழுவ, தம் எதிர்காலத்துக்குத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தவர்களும், நிகழ்காலப் பிரச்சினைகளுக்கு முடிவு காண முயன்று கொண்டிருந்தவர்களும் பலர் துன்பத்தால் அலைந்து தனித்த மனதிற்கு அமைதியைக் கொணர்வதற்கு "இராம ஜெயம்" என்றும் " நமசிவாய" என்றும் மந்திரங்கள் சொல்லி மனதை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்கள் சிலர். வேறு சிலர் தேகாப்பியாசம் செய்தார்கள். சிலர் பிராணாயாமம் செய்தார்கள். முஸ்லிம்கள் சிலர் மெக்காவை நோக்கி வணக்கம் செலுத்தினார்கள். இன்னும் சிலர் புல்லிலே படுத்துக் கொண்டு வானத்தின் அழகை வியந்துக் கொண்டிருக்க, வேறு சிலர் கண்களை மூடிக் காட்சிப் புலனை வெட்டி விட்டு, கால்பேஸ் கடல் எவருடனோ "உஸ்" என்று பேசிய இரகசிய வார்த்தைகளைத் தாமும் மெல்லச் செவிமடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒலிகளுக்கெல்லாம் மூல ஒலி என்று சொல்லப்படும் ஓங்கார நாதம் இது தானோ என்ற எண்ணத்துடன் இயற்கையன்னையின் நாப் போல இரவு பகலாகத் தூங்காது ஒலித்த அலைகயோசையில் மந்திரத்தில் கட்டுண்டவர் போல மயங்கிக் கிடந்தனர் சிலர். பலர் பாட்டிசைத்தனர். கடற் காற்றில் சப்தத்தில் தம் குரல் கேட்காதென்ற துணிவில் மனதிலுள்ள ஆசா பாசங்களைப் பைத்தியகாரர் போல் சப்தமிட்டே பேசித் தீர்த்தவர்கள் சிலர். இவ்வாறு பேசியவர்களில் சிலர், நல்ல வார்த்தைகள் பேச, மற்றும் சிலர் அருவருக்கும் ஆபாச வார்த்தைகளைக் கூடப் பேசினர்.

இரவில் இருளிலே வானத்திலே கார் முகில்கள் திரண்டு கொண்டிருந்ததை இவர்களில் பலர் கவனிக்கவில்லை. ஆனால் மழை நீரால் நிறைந்த மேகப் பொதிகள் ஆகாயத்தில் கட்டவிழத் தயாராகிக் கொண்டிருந்தன.

ஸ்ரீதர் இச் சூழ் நிலைகளில் தனது காரை முடிந்த அளவில் இருள் படிந்த ஒதுக்குப் புறமான ஓரிடத்தில் கொண்டு வந்து நிறுத்தினான். பத்மாவோடு நெருங்கி உட்கார்ந்து கொண்டு "கண்ணே! என் கருமணியே!" என்றான் அவன். பத்மா அவன் நெஞ்சில் சாய்ந்த வண்ணமே "உங்கள் சுரேஷ் போய் விட்டார். இனி எங்கள் விஷயத்தைப் பற்றிப் பேசுவோமா?" என்று கூறிக் கொண்டே, அவனது கன்னங்களை இலேசாக முத்தமிட்டு விட்டுச் சிரித்தாள்.

ஸ்ரீதர் அவளது மென்மையான தோள்களைத் தன் கரங்களால் தடவிய வண்ணமே "பத்மா நாளை நான் வீட்டுக்குப் புறப்படுகிறேன். அடுத்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் எங்கள் நாடகம். அது முடிந்த பிறகு அம்மாவிடம் எல்லா விஷயங்களையும் பேசி முடித்துக் கொண்டு இன்பமான செய்தியுடன் இன்னும் இரு வாரங்களுக்குள் கொழும்பு வந்து விடுவேன். சரிதானே?" என்றான்.

ஸ்ரீதர் வாய் தான் அப்படிப் பேசியதே ஒழிய, உள்ளத்தில் அவனுக்குத் தன் திருமண விஷயமாகச் சிறிது அச்சம் இருக்கவே செய்தது. கந்தப்பர் மகள் அமுதா நினைவால் வந்த அச்சமே அது. அமுதாவின் நினைவு வந்ததும் பத்மாவிடம் உடனே அது பற்றிக் கூறி விடலாமா என்ற எண்ணம் அவனுக்கேற்பட்டதாயினும், அது அவளுக்கு அநாவசியமான கவலையையும் திகிலையும் தரக் கூடும் என்பதைக் கருதி, அந்த எண்ணத்தை அவன் மெள்ளக் கை விட்டான். இன்னும் அமுதா விஷயம் வெறும் சலசலப்பாக முடியுமேயல்லாமல் அதனால் பாரதூரமான விளைவுகள் வந்தே தீரும் என்ற திட்டவட்டமான எண்னமும் அவனுக்கில்லை. ஆகவே அதைப் பற்றிச் சிந்திப்பதையோ பேசுவதையோ விட்டு, பத்மாவிடம் வேறு விஷயங்கள் பற்றிப் பேச ஆரம்பித்தான்.

"பத்மா! யாழ்ப்பாணம் போகும் போது கல்கிசையில் நான் வரைந்த உன் படத்தையும் எடுத்துக் கொண்டு போகப் போகிறேன். அதை நான் இன்னும் பூர்த்தியாக்கவில்லை அல்லவா? யாழ்ப்பாணத்திலிருக்கும் போது அதை நான் பூர்த்தியாக்க உத்தேசித்திருக்கிறேன். அன்று நீச்சலுடையில் நீ அந்தப் படத்துக்குப் ‘போஸ்’ கொடுத்த போது, உன்னை எறும்பு கடித்ததல்லவா? அந்த எறும்புகளில் ஒன்றிரண்டு உன் காலில் ஊர்வதையும் நான் படத்தில் வரையப் போகிறேன் பார்" என்று சிரித்தான் ஸ்ரீதர்.

பத்மா பதிலுக்கு "உங்கள் படம் மிகப் பெரியது. எறும்பு மிகச் சிறியது. ஆகவே அதை நீங்கள் வரைந்தாலும் அது பார்ப்பவர்களுக்கு நன்றாகத் தெரியப் போவதில்லை." என்றாள்.

ஸ்ரீதர் சிறிது யோசித்து விட்டு, " நீ சொல்வது உண்மைதான். ஆனால் எனக்கு வேறொரு யோசனை வருகிறது. ஒரு நண்டு உன் தொடையில் ஏறுவது போல் எழுதி விடப் போகிறேன். பார்ப்பதற்கு மிக வேடிக்கையாயிருக்கும்! படத்துக்கு " நண்டும் நங்கையும்" என்று பேரும் போட்டு விடப் போகிறேன். எறும்பைப் போலன்றி வர்ணங்களில் எழுதப்படும் பல கால்களையுடைய நண்டு மிக விழிப்பாகத் தெரியுமல்லவா? அது உன் காலுக்கு ஓர் அணிகலன் போல் விளங்கும்" என்றான்.

பத்மா சிரித்துவிட்டு, "ஆனால் படத்தில் அந்த நண்டை விட ஒரு கழுகின் படத்தையும் நீங்கள் வரைய வேண்டும்." என்றாள்.

"கழுகா? இது என்ன புதுக் குழப்பம்?" என்றான் ஸ்ரீதர். ஓரிரு மாதங்களின் முன்னர் வெளியாகிச் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்த ஒரு சினிமா படத்தில் அடிக்கடி உபயோகிக்கப்பட்ட "புதுக் குழப்பம்" என்ற சொற்றொடர் ஊரெல்லாம் பரவியிருந்ததாலேயே ஸ்ரீதரும் அச்சொற்றொடரை உபயோகித்தான். பத்மா கழுகென்று எதைப் பற்றிக் குறிப்பிடுகிறாளென்று முதலில் ஸ்ரீதருக்குக் குழப்பமாகத் தானிருந்தது. ஆனால் அவள் சீக்கிரமே ஐயத்தைத் தீர்த்து வைத்தாள்.

"அந்தத் தலைப்பாகைக்கார அதிகாரைத் தான் நான் குறிப்பிடுகிறேன். அவர் என்னை முன்னும் பின்னும் பக்கமுமாகப் பார்த்த வார்வை அசல் கழுகுப் பார்வையேதான். ஒரு டாக்டர் கூடத் தனது நோயாளியை அவ்வாறு உற்றுப் பார்க்க மாட்டார். என்னைப் பின்னாலிருந்து பார்ப்பதைப் போல் படம் போட்டு விடுங்கள். வேண்டுமானால் அவரது வால் முளைத்த மனைவியையும் வரைந்து விடுங்கள்."

ஸ்ரீதர் விழுந்து விழுந்து சிரித்தான். "அப்படி எல்லாம் வரையக் கூடாது. அவ்வாறு வரைந்தால் படத்தின் மதிப்பே போய் விடும். ஒரு ஹாஸ்யச் சித்திரம் போலாகிவிடும்" என்றாள்.

பத்மா "நண்டை வரைந்தாலும் அப்படித்தானே? என்றாள்.

ஸ்ரீதர் அதற்கு "இல்லை. நண்டு ஹாஸ்யத்தை உண்டாக்காது, பயங்கரத்தை உண்டாக்கும். இப் பேரழகியை நண்டு கடித்து விடுமோ என்று அச்சத்தை உண்டாக்கும்." என்றான். பத்மாவுக்கும் அது சரி போலவே பட்டது. என்றாலும் விட்டுக் கொடுக்காமல், "சீ, நீஙகள் சொல்லுவது பிழை." என்று கூறிக் கொண்டு மேலும் ஸ்ரீதருடன் நெருங்கி உட்கார்ந்து கொண்டாள்.

இவ்வாறு காதலர்கள் பொழுது போக்கிக் கொண்டிருக்க, வானத்தில் திரண்டிருந்த கரு மேகங்கள் முதலில் மெல்லிய நீர்த் திவலைகளைப் பன்னீர் தெளிப்பது போல் நெளிந்து, பின்னர், பெருந் தாக்குதலைத் தொடங்கிவிட்டன. ஹோவென்று மழை கொட்ட ஆரம்பிக்க, மைதானத்து மக்கள் மந்தைகள் போல் சிதறியோட ஆரம்பிட்ததார்கள். கடலைக்காரர்கள் கடலையை மூடிக் கொண்டு கிளம்ப, ஐஸ்கிறீம் வான்களும் இதர மோட்டார் வாகனங்களும் கூட மைதானத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் மைதானமே வெறிச்சென்று விட்டது. கடலின் ஓசையும் காற்றோசையும் மழையோசையுமே எஞ்சின. மின்சாரக் கம்பங்களுக்குச் சமீபமாக ஒளிக் கதிர்களில் சிக்கிய மழைத் தாரைகள் வெள்ளி விறீசுகள் போல நிலத்தை நோக்கி விழுந்து கொண்டிருந்தன. சாம்பல் வர்ணமாயிருந்த இரவின் இருள், மேகக் குப்பாயம் கவிந்ததால் இருண்ட கரிய வெல்வெட் போன்ற கடும் இருளாகியிருந்ததால் மழைத் தாரை என்னும், வெள்ளி விறீசுகள் அங்கு வீழ்ந்து கொண்டிருந்த காட்சி, பகைப்புலத்தின் எதிர் நிலையின் காரணமாக மனதை மயக்கும் மோகனக் காட்சியாக இருந்தது.

அதைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த ஸ்ரீதர் திடீரென மைதானத்தில் மழையின் தாக்குதலிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கும்போது கூட ஒருவரை ஒருவர் இறுக அணைத்த வண்ணமே போய்க் கொண்டிருந்த ஒரு காதற் ஜோடியைப் பத்மாவுக்குச் சுட்டிக் காட்டினான்.

"பார்த்தாயா அவர்களை? அதைப் பார்த்ததும் எனக்குத் திருக்குறளில் ஒரு செய்தி ஞாபகம் வருகிறது" என்றான் ஸ்ரீதர்.

"ஓகோ, சுரேஷின் வியாதி உங்களையும் தொற்றி விட்டதா? அல்லது சீமை செல்லும்போது கொழும்பில் தனது வியாதியை அவன் விட்டு விட்டுச் சென்று விட்டானா? அது எப்படி என்றாலும் பரவாயில்லை. எடுத்ததெற்கெல்லாம் மேற்கோள் காட்டுவதும், கதைகளும் சொல்வதும் குட்டிப் பிரசங்கங்கள் அடிப்பதும் அவன் வழக்கம். ஐயாவுக்கோ இது புதுக் குழப்பம். என்றாலும் பரவாயில்லை. கால்பேஸ் கடற்கரையில் மழையிலே கட்டிப் பிடித்துக் கொண்டு ஓடும் இக்காதலர்களைப் பற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார்? சொல்லுங்களேன்" என்றாள்.

ஸ்ரீதர் விளக்க ஆரம்பித்தான். "காதலர் இருவர் இறுக அணைத்து கொண்டிருக்கும் போது இடையிலே காற்றுப் புகுந்தாலும் அவ்வணைப்பின் இறுக்கம் குறைந்து இன்பம் குன்றிவிடுமாம். நம் இருவருக்குமிடையே காற்றுக் கூட வரக் கூடாது என்பது காதலர் எண்ணம். அப்படிக் காற்றாலும் பிரிக்கப்படாத தழுவலன்றோ தழுவல் என்கிறார் வள்ளுவர்.

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைப்
போழப் படாஅ முயக்கு.

(ஒருவரை ஒருவர் நேசிக்கும் காதல்ர்களுக்கு இன்பளிப்பது காற்று இடையே புகுந்து ஊடறுக்காத தழுவலாகும்.)

அதோ மழையில் ஓடுகிற அத்தலைவனும் தலைவியும் அப்படிப்பட்டவர்கள் தாம். மழையால் கூடப் பிரிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. அதனாலேதான் ஒட்டிக் கொண்டு ஓடுகிறார்கள் அவர்கள். அவர்களை இனிப் பிரிப்பதென்றால் கத்தியால் வெட்டித்தான் எடுக்க வேண்டும் போல் இருக்கிறது"

"அப்படியானால் நீங்கள் ஏன் அப்படித் தள்ளியிருக்கிறீர்கள்? மழைக் குளிருக்கும் நல்லது. இன்னும் நெருங்கி உட்காருங்கள்" என்று கூறிக் கொண்டு ஸ்ரீதருடன் மேலும் நெருங்கி உட்கார்ந்தாள் பத்மா.

மைதானத்தில் இப்பொழுது யாருமே இல்லை. காரில் காற்று வாங்கியவர்கள் கூடப் போய் விட்டார்கள். ஸ்ரீதர் மட்டும் தான் பத்மாவுடன் அங்கே காரில் இன்னும் உட்கார்ந்து கொண்டிருந்தான். பத்மா பேச்சுக்குக் குளிரைப் பற்றிப் பிரஸ்தாபித்திருந்தாலும் உண்மையில் கார் கண்ணாடி ஜன்னல்கள் நன்கு பூட்டப்பட்டிருந்ததால் வெளியே குளிர் மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் காரின் உள்ளே மிகவும் வெதுவெதுப்பாகத்தான் இருந்தது.

மழையால் வீதிப் பார்வை மறைவதைத் தடுப்பதற்காகக் காரின் முன் கண்ணாடியை மேலும் கீழுமிறங்கித் துடைத்துக் கொண்டிருந்த மின் துடைப்பம் தங்களுடைய பேச்சுக்குத் தடையாயிருப்பதைக் கண்ட ஸ்ரீதர் அதை நிறுத்தி விட்டான். அதனால் கடலோடு சேர்ந்தொலித்த மழையின் மெத்தென்ற ஓசையை தவிர வேறு எவ்வித ஓசையுமே அங்கிருக்கவில்லை. ஆனாலும் அங்கியிருந்தாலும் காலி வீதியில் இடையிடையேனும் ஒரு கார் தனது முன் லைட்டுகளால் ஒளிக் கதிர்களைக் கொட்டி இருளைப் பிளந்து சென்று கொண்டிருந்தது.

பத்மா சிறிது நேரம் ஒன்றும் பேசாதிருந்துவிட்டு, "மழை கொட்டுகிறது. நேரமும் போய்க் கொண்டிருக்கிறது. வீட்டுக்குப் போவோமா?" என்றாள். ஸ்ரீதர் "மழை கடுமையாகக் கொட்டுவது எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தாயா? மைதானத்தில் யாருமில்லை. நாங்கள் புல்லில் போயுட்கார்ந்து மழையை அனுபவிப்போமா? என்றான். பத்மா "உங்களுக்கென்ன பைத்தியமா? யாராவது அப்படிச் செய்வதுண்டா?" என்று கேட்டாள்.

ஸ்ரீதர் "எனக்குச் சின்ன வயதிலிருந்தே மழையில் கும்மாளம் போட ஆசை. எங்களூரில் இருந்த ஏழைச் சிறுவர்கள் மழை காலத்தில் வாய்க்கால்களிலும் வெள்ளத்திலும் குதித்துக் குதித்துக் கும்மாளமடிப்பார்கள். எனக்கும் அவர்க்ளோடு சேர்ந்து சேறில் புரண்டு குதூகலிக்க ஆசை. ஆனால் அப்பா விட மாட்டார். பணக்காரப் பிள்ளை ஏழைகளோடு சேர முடியுமா? இன்னும் சேறில் விளையாடுவது அசுத்தமான பழக்கமென்றும் அப்பா கூறிவிட்டார். ஆகவே அது நிறைவேறாத ஓர் ஆசையாக இன்றும் என் மனதில் மூலையில் இருந்து வருகிறது. கடந்த வாரங் கூட கும்பனித் தெருப் பகுதியில் ஏழைச் சிறுவர் சிலர் மழையில் குதித்து விளையாடுவதைப் பார்த்தேன். எனக்கு மட்டும் அப்படி விளையாடக் கொடுத்து வைக்க வில்லையே என்று நான் கவலைப்பட்டேன் பத்மா! நீயும் என்னோடு சேர்ந்து கொள்வதாயிருந்தால் இப்பொழுது இம்மழையில் நாம் ஆசை தீர விளையாடலாமல்லவா?" என்றான் ஸ்ரீதர்.

தண்ணீரில் விளையாட அழைத்த ஸ்ரீதரின் ஆலோசனை பத்மாவுக்கும் பிடிக்கவே செய்தது. ஆனால் சேலை சட்டை பழுதாகிவிடுமே என்ற எண்னத்தினால் முதலில் மழையில் விளையாட அவள் மறுத்தாள். "சேலையைப் பற்றிக் கவலைப்படாதே. ‘கிஷ்கிந்தா’வில் அம்மாவின் நல்ல சேலைகள் சில இருக்கின்றன. இங்கிருந்த நேரே அங்கு போய் அந்தச் சேலையிலொன்றை அணிந்து கொண்டு நீ வீடு போய் விடலாம்." என்றான் ஸ்ரீதர். அவ்வாறு சொல்லிக் கொண்டே ஸ்ரீதர் கார்க் கதவைத் திறந்து வெளியே இறங்கி விட்டான். பத்மாவும் வெளியே குதித்தாள்.

வெதுவெதுப்பான சூழ் நிலையிலிருந்து கொட்டும் மழைக்கு வந்ததும் பத்மாவுக்கு குளிரினால் உடல் நடுங்க ஆரம்பித்தது. ஆனல் சில விநாடிகளில் அது குறைந்து போய் விட்டது. ஒரு வித உயிர்த்துடிப்பு அங்கங்களெல்லாம் பரவ, இருவரும் கொட்டும் மழையில் இறங்கிப் புல் தரையில் ஓடினார்கள். பெரியவர்களாகி விட்டவர்களுக்குக் கூடக் குழந்தைகள் போல் நடப்பதில் எவ்வளவு ஆசை. சமுதாய வழக்கங்களும், மற்றவர்கள் பரிகசிப்பார்கள் என்ற எண்ணமுமே பலரை அவ்வாறு செய்யமல் தடுக்கின்றன. ஸ்ரீதர் - பத்மாவைப் பொறுத்த வரையில் இன்னும் அவர்களைப் பெரியவர்கள் என்றும் சொல்ல முடியாதல்லவா? விளையாட்டுக்களில் ஆசையுள்ள வாலிபக் காதலர்களான அவர்கள் ஒருவரை ஒருவர் ஓடிப் பிடித்தார்கள். சிரித்தார்கள். பத்மா கீச்சிட்டாள். யாருக்கும் தங்கள் சப்தம் கேட்காதென்பதும் தாங்கள் புரியும் அட்டகாசங்கள் தெரியாதென்பதும் அவர்களை அவர்கள் மனதின் இச்சைக்கு ஏற்றவாறு ஓடவும் ஆடவும் கூச்சலிடவும் செய்தன. இரு சிறு பூனைக்குட்டிகளோ, நாய்க் குட்டிகளோ சேர்ந்து விளையாடுவது போல் தம்மை மறந்து மழை நீராடினார்கள் அவர்கள். கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு மனிதனே காணப்படாததால் அவர்கள் இம்முழு உலகமுமே தம்முடையது என்று எண்ணியவர்கள் போல் இறுமாந்து குதித்தார்கள். சிறிது துரம் சென்றதும் ஸ்ரீதர் நிலத்தில் உட்கார்ந்தான். பத்மாவும் உட்கார்ந்தாள். இருவரும் புல்லிலே சாய்ந்து படுத்தார்கள். உடம்பும் உடையும் சேறாகச் சேறாக ஒருவித இன்ப வெறி தலைக்கேறியது. ஸ்ரீதருக்குத்தான் சின்ன வயதில் கண்ட தனது கிராமத்து வாய்க்கால்களில் குதித்துக் குதித்துக் கூத்தாடிய சிறுவர்களின் நினைவு வந்தது. குழந்தைப் பருவ ஆசை இன்றுதான் இரவின் இருட்டிலே கொழும்பில் தன் கிராமத்துக்கு எத்தனையோ மைல்களுக்கு அப்பால் நிறைவேறிக் கொண்டிருந்தது. நிறைவேறாத ஆசைகளே மனக் கிலேசங்கங்ளுக்கும், ஏன் சில சமயங்களில் மனக் கோளாறுக்கும் கூடக் காரணம் என்று உளவியலாளர் கூறுவார்கள். அதனால் தான் போலும் ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் சின்ன வயதில் இப்பெரிய ஆசையின் நிறைவேற்றம் மனதிற்கு ஒருவித சாந்தி நிலையைக் கொண்டு வந்திருந்தது. அதில் இலயித்துச் சிறிது நேரம் புல்லில் எவ்வித ஆட்டமும் அசைவுமின்றி பத்மாவை அணைத்தவாறு உட்கார்ந்திருந்தாள் அவன்.

பத்மாவுக்கு ஏற்பட்ட அனுபவமோ இது போன்றதல்ல. அவளுக்கு மழையில் ஆடியதும், சேற்றில் புரண்டதும் நிறைவேறாத ஆசைகளின் நிறைவேற்றமல்ல; அதனால் பிறந்தது ஸ்ரீதருக்கு ஏற்பட்டது போன்ற மனச்சாந்தியுமல்ல. இவை எல்லாம் ஒரு வகைக் காதல் லீலைகள் போலவே அவளுக்குத் தோன்றின. சினிமாக்களில் காதலர் தண்ணீரில் கும்மாளமடிக்கும் காட்சிகளை அவள் கண்டிருக்கிறாள். அவைதான் அப்பொழுது அவளுக்கு நினைவு வந்து கொண்டிருந்தன. இப்படிப்பட்ட காட்சிகளைச் சினிமாக்களில் சினிமா மண்டபத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் போது கூட அவளது உடலுணர்ச்சிகள் ஓரளவு தூண்டப்படுவது வழக்கம். இன்றோ அவை அதிகமாகத் தூண்டப்பட்டிருந்தன. அவள் மனதில் ஒரு புயல் தோன்றியிருந்தது. ஸ்ரீதரையும் அப்புயலில் மாட்டிவிட நினைத்தாள் அவள். ஆனால் ஸ்ரீதரோ அதில் அற்ப ஈடுபாடு கூடக் காட்டவில்லை. அவன் உலகு வேறாக இருந்தது.

ஆனால் பத்மாவுக்கோ உலகே மறந்து போயிருந்தது. தந்தையார் நினைவும் மறந்து போயிற்று. சமுதாயக் கட்டுப்பாடுகளும் மறந்து போயின. எங்கோ ஓரிடத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தது அவள் மனம். ஸ்ரீதரும் அதே இடத்தை நோக்கி வர மாட்டானா என்று ஏங்கியது நெஞ்சம். கவிஞரும் கதாசிரியரும் வர்ணித்த அந்த உலகுள் விரைந்து இப்பொழுதே புக வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஓர் ஆணும் பெண்ணும் சிநேகிப்பது அதற்காகத்தானே என்று கூட எண்ணினாள் அவள். சகுந்தலையை வனத்தில் சந்தித்து, துஷ்யந்தன் எவ்வளவு விரைவாகவும் இலகுவாகவும் அவளை அவ்வுலகுக்கு அழைத்துச் சென்று விட்டான். அவனது ஆண்மையல்லவோ ஆண்மை என்று கூட நினைத்தாள் அவள். ஆனால் துஷயந்தனின் அந்த அவசர ஆண்மையால் சகுந்தலை பின்னல் பட்ட துன்பமும் துயரும் கொட்டிய கண்ணீரும் அடைந்த இன்னல்களும் அவளுக்கு ஞாபகம் வரவில்லை. கணநேர இன்பத்துக்கு யுகத்தையே பரிசளிக்கும் நிலையில் அவள் இருந்தாள். இன்னும் "ஸ்ரீதர் என்னைத் திருமணம் செய்யப் போவது நிசமென்றால் - இவற்றில் எல்லாம் இனிக் கட்டுப்பாடு என்ற பெயரில் எம் மனதோடு நாமே போராடிக் கொண்டிருப்பது ஏன்? களவொழுக்கம் என்று முன்னோர் சொன்ன பிரகாரம் நடந்துகொள்ள வேண்டியதுதானே?" என்று சிந்தித்த அவள் பெண்மைக்கு இயற்கையாயிருக்கும் நாணத்தால் மட்டுமே தன் எண்ணத்தை வெளிப்படையாகக் கூறாதிருந்தாள். இன்னும் வெளிப்படையான செயலாலோ சொல்லாலோ ஒரு பெண் தன் உள்ளத்தின் இத்தகைய அந்தரங்க ஆசைகளை ஓர் ஆணிடம் வெளியிட்டால், அவ்வாண் கூட அவளை மதிக்க மாட்டான் என்பது அவள் அறியாததல்ல. இவ்விவகாரங்களில் ஆணே முன் கை எடுக்க வேண்டுமென்ற உலக நியதியே அவள் செயல்களை அன்று கட்டுப்படுத்தின. உண்மையில் ஸ்ரீதர் போக்கு அவளுக்கு அடியோடு பிடிக்கவில்லை. என்றாலும் அவளால் என்ன செய்ய முடியும்? அவள் இதுவரை அடுத்த வீட்டு அன்னம்மா அக்காவிடமிருந்தும், கெட்டுப்போன குசுமாவிடமிருந்தும் ஆண்களைப் பற்றித் தெரிந்து கொண்டிருந்த விவரங்களின் படி அவர்கள் பெரிய அவசரக்காரர்கள். அவர்களிடமிருந்து தப்புவது தான் கஷ்டமென்று நினத்திருந்தாள். உண்மையும் அதுவாகத்தானிருக்க வேண்டும். ஆனால் ஸ்ரீதரோ எவ்வளவு வேடிக்கையாகப் பேசினாலும் என்னதான் தன்னோடு உராய்ந்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாலும் ஓர் எல்லைக்கு அப்பால் போகாதவனாக அல்லவா இருக்கிறான்? - இது பத்மாவுக்குப் பெரியதோர் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் ஒரு பெண் நினைத்தால், ஆணைக் கொண்டு எதையுமே செய்வித்து விடலாம். ஆனால் அதற்கு அப்பெண் தன் பெண்மையின் கர்வத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். பத்மாவோ அதற்குத் தயாராகவில்லை. ஆகவே ஸ்ரீதரிடம் சலிப்போடு "போதும் மழை விளையாட்டு. குளிரும் அதிகமாயிருக்கிறது. தடிமன் பிடித்தாலும் பிடித்து விடும். போவோமா?" என்றாள்.

இவ்வாறு அவள் சொல்வதற்கும் வானம் மின்னச் சிரிப்பொன்று சிரிப்பதற்கும் சரியாயிருந்தது. மின்னைலைத் தொடர்ந்து இடி நகை கேட்டது. காற்றும் கடுமையாக வீச ஆரம்பித்தது. ஆம், இயற்கை புயற் கோலம் காட்டத் தொடங்கியது. மழையும் அடித்தோங்கிப் பொழிய ஆரம்பித்தது. ஸ்ரீதரும் எழுந்தான். "சரி போவோம்." என்று காரை நோக்கி நடந்தான். திருப்தியற்ற உள்ளத்தோடு அவனைப் பின் தொடர்ந்தாள் பத்மா.

ஸ்ரீதர் பத்மாவை கொலீஜ் ரோட்டில் கொண்டு போய் விட்ட பொழுது, இரவு 9 மணியாகி விட்டது. "கிஷ்கிந்தா’விலிருந்து அன்னை பாக்கியத்தின் அழகான பெங்களூர்ச் சேலையொன்றைப் பத்மாவுக்கு அணியக் கொடுத்திருந்தான். இருவரும் மழையில் நீராடி வந்திருந்தமை அவர்களுக்கு ஒரு பரிசுத்தமான அழகுத் தோற்றத்தைக் கொடுத்தது. பத்மாவின் தந்தை பரமானந்தர் ஸ்ரீதரை வீட்டுள் வரச் செய்து சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் "ஈடிப்பஸ் நாடகத்தைத்தான் அடுத்த வாரம் இரண்டாம் முறையும். அரங்கேற்றம் செய்யவிருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டான் ஸ்ரீதர். அனுபவஸ்தரான பரமானந்தர் நாடகத்தை முன்னிலும் பார்க்கச் சிறப்பாக அரங்கேற்றம் செய்வதற்கேற்ற சில நல்ல ஆலோசனைகளைக் கூறினார்.

அங்கிருந்து அவன் வீட்டுக்குக் கிளம்பும் போது பத்து மணியாகிவிட்டது. ஸ்ரீதர் பரமானந்தரிடம் "நான் யாழ்ப்பாணத்திலிருந்து வரும்போது கல்யாணத்துக்கு நாள் குறித்துக் கொண்டு தான் வருவேன். கல்யாணத்துக்கு முன் நீங்கள் அப்பாவைக் கண்டு பேசுவதற்கும் ஏற்பாடு செய்வேன்." என்று கூறினான். பரமானந்தர் "எல்லாம் சுபமாக நடக்க வேண்டும்" என்று வாழ்த்தினார்.

இதற்கிடையில் கூரையில் நடமாடிக் கொண்டிருந்த ஒரு பல்லி ‘டிக் டிக்’ என்று ஓசை கிளப்பியது. "பல்லி சொல்லுகிறது" என்றான் ஸ்ரீதர். "உனக்கு பல்லி சொல்வதில் நம்பிக்கை உண்டா?" என்றார் பரமானந்தர். "ஆம்" என்றான் ஸ்ரீதர். பரமானந்தர் தன்னிடமிருந்த ஒரு பழைய பஞ்சாங்கத்தை எடுத்துத் தமது மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு பார்த்தார். "சுப செய்தி -வெற்றி நிச்சயம்" என்று மகிழ்ச்சியோடு கூறினார் அவர்.

ஸ்ரீதர் சந்தோஷத்தோடு புறப்பட்டாள். பத்மா வாசலுக்கு வந்து தனது கையை உயர்த்தி வளைக்கரம் குலுங்க "செரியோ" கூறினாள்.

ஸ்ரீதர் கண்ணுக்கு மறைந்ததும் பரமானந்தர் பத்மாவை நோக்கி "இன்று கமலநாதன் வந்திருந்தான். அவர்கள் விளையாட்டுச் சங்கத்தின் ஆண்டு விழா இன்னும் இரண்டு வாரத்தில் நடைபெறுகிறதென்று கூறி, ஓர் அழைப்புக் கடிதத்தையும் உனக்குக் கொடுத்து விட்டுப் போனான். உள்ளே மேசையில் வைத்திருக்கிறேன். எடுத்துப் பார்" என்றார்.

பத்மா அறையுள் சென்று கடிதத்தை எடுத்த பொழுது, "இன்று கால்பேஸ் கடற்கரையில் ஸ்ரீதருக்குக் கிடைத்த வாய்ப்பு போல் கமலநாதனுக்குக் கிடைத்திருக்குமானால் அவன் எவ்வாறு நடந்திருப்பான்? மீசைக்காரனான அவன் ஆண்மையுடன் நடந்திருக்கலாமல்லவா?" என்ற எண்ணம் தன்னை அறியாமலே அவளுக்கேற்பட்டது.

"ஆனால் அதை எப்படிச் சொல்ல முடியும்? அங்கே வாய்ப்பை அளித்தல்லவோ பார்க்க வேண்டும்?" என்ற பதிலும் உடனடியாகவே அவள் மனதில் எழுந்தது.

அன்றிரவு பத்மா நீண்ட நேரம் நித்திரை கொள்ளவில்லை. கட்டிலிலே வெறுமனே புரண்டு கொண்டிருந்தாள் அவள். யெளவனத்தின் துடிதுடிப்பு அவள் நெஞ்சையும் உடலையும் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. காதலென்பது உள்ளத்தின் உணர்ச்சி மட்டுமல்ல. உடலுணர்ச்சியும்தானே?" என்று தனக்குத் தானே வினவிக் கொண்டவள் தன் உடம்பெல்லாம் ஒரு நெருப்புப் பாவி வருவது போன்று உணர்ச்சியைப் பெற்றாள். "இதைத் தான் பண்டைக்காலத்துப் புலவர்கள் விரக தாபம் என்று வர்ணித்தார்கள் போலும்" என்றும் நினைத்துக் கொண்டாள் அவள்.

நித்திரையின்றி படுக்கையில் புரண்ட அவள் ஜன்னலூடாக வானைப் பார்த்த போது, பாதி மதி ஒன்று அங்கே தன்னையே நட்சத்திரப் பரிவாரங்களுடன் உற்றுப் பார்த்துக் கொண்டு நிறபது தெரிந்தது. "நட்சத்திரங்கள் எனபன விரக தாபத்தால் வானத்தேவியின் உடலில் ஏற்பட்ட கொப்புளங்கள்’ என்று தான் எங்கோ ஒரு பழைய கவிதை படித்தது அவளுக்கு அப்பொழுது ஞாபகம் வந்தது. ஆம். நளவெண்பாவில் புகழேந்தி பாடிய பாட்டில் அப்படி வருகிறது - என்ற நினைவு கூர்ந்த அவள், தனது உடலிலும் அப்படிக் கொப்புளங்கள் குமிழியிட்டிருக்கின்றனவா என்று தடவிப் பார்த்தாள். "இல்லை, கவியின் கற்பனை நடைமுறைக்கு ஒத்து வராது. என்றாலும் என்னுடலில் அனல் வீசுவது மட்டும் என்னவோ உண்மைதான்" என்ற எண்ணிய அவள் மனதிலே கமலநாதன் மீண்டும் மீண்டும் காட்சியளித்தான்.

வீடு சென்ற ஸ்ரீதருக்கோ இவ்வித அனுபவங்கள் ஏற்படவில்லை. சேற்றில் விளையாடியதால் ஏற்பட்ட ஆயாசத்துடன் சுப்பையா தயாரித்திருந்த சாப்பாட்டை ஊறுகாயுடன் இரசித்துச் சாப்பிட்ட அவனுக்கு நல்ல நித்திரை கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. படுக்கையில் படுத்து ஒரு வார சஞ்சிகையை எடுத்து இரண்டு மூன்று பக்கங்களைத் தட்டியதும், துயில் அவன் கண்களைத் தழுவிக் கொண்டது.

இப்படிப்பட்ட நேரங்களில் வழக்கத்தில் அவன் நண்பன் சுரேஷ் ‘லைட்’டை நிறுத்துவான். அன்று சுரேஷில்லாததால், வேலைக்காரச் சுப்பையா ‘லைட்’டை நிறுத்தினான். சுரேஷோ நடுக் கடலில் ஸ்ரீதர் இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பானோ என்ற சிந்தனையில் இலயித்திருந்தான்.


16-ம் அத்தியாயம்: யாழ்ப்பாணத்தில் ஸ்ரீதர்

ஸ்ரீதர் மோகனாவுக்குப் பக்கத்தில் சென்று "ஏ! மோகனா என்ன ஒரே கூச்சல்" என்று கூறிக் கொண்டே தான் கொறித்துக் கொண்டிருந்த முந்திரிக் கொட்டையிலொன்றை அதன் வாயில் திணித்தான். மோகனா நிசப்தமாகியது.யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மண்டபத்தில் இரண்டாவது முறையாக அரங்கேறவிருந்த "ஈடிப்பஸ் மன்னன்" நாடகத்திற்காகவும் தன் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்துக்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் ஸ்ரீதர் இரண்டு மூன்று தினம் கழித்து டிரைவர் சுப்பிரமணியத்துடன் தனது காரில் யாழ்ப்பாணம் புறப்பட்டான். புறப்படும் முன் வழக்கம் போல் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பரிசுகள் வாங்கத் தவறவில்லை. தாயைப் பொறுத்த வரையில் அவளுக்கு எது பிடித்தமென்பது அவனுக்குத் தெரியும். தென்னிலங்கையில் கிடைக்கும் பொருள்களில் அவளுக்குப் பிடித்தமானது முந்திரிக் கொட்டையும், கித்துள் கருப்பட்டியுமே. அவற்றை வேலைக்காரனை அனுப்பி வாங்காது, தானே புறக்கோட்டைச் சந்தைக்குச் சென்று வாங்கிக் கொண்டான். தந்தையைப் பொறுத்த வரையில் தத்துவ சாத்திரத்தில் அதிக ஈடுபாடுடைய அவர் சில காலமாக நீட்சே என்ற ஜெர்மானிய தத்துவ தரிசகரின் நூல்களையும் கட்டுரைகளையும் தேடித் தேடிச் சேகரிப்பது, அவனுக்குத் தெரியுமாதலால் லேக் ஹவுஸ் புத்தகசாலைக்குச் சென்று அங்கு புதிதாக வந்திருந்த நீட்சே எழுதிய நூல்களையும் விலைக்கு வாங்கிக் கொண்டான்.

பெரும் பணவசதியுள்ள சிவநேசரரால் இப் புத்தகங்கள் எதையும் நினைத்தவுடன் வாங்கிவிட முடியுமென்றாலும், அன்பு மகன் அவற்றை அக்கறையுடன் விலைக்கு வாங்கிப் பரிசாகக் கொண்டு வரும்போது, அவற்றைப் பெற்றுக் கொள்வதில் ஒரு தனி இன்பம் அவருக்கு ஏற்படும் என்பது ஸ்ரீதருக்குத் தெரிந்திருந்ததே அவன் அவற்றை வாங்கிச் சென்றதற்குக் காரணம். அது போலவே தாய் பாக்கியமும் நினைத்தவுடன் எவ்வளவு முந்திரிக் கொட்டைகளையும் கருப்பட்டியையும் வாங்கிக் கொள்ளக் கூடியவளே என்றாலும் தமது கையிலிருந்து அவற்றைப் பெறும்போது அவற்றின் உருசி அவளுக்கு இரட்டிப்பாய் இருக்கும் என்பது ஸ்ரீதருக்குத் தெரியும். அன்பெனும் பாகில் தோய்த்தெடுத்த முந்திரிக் கொட்டைகள் சுவையில் விருந்தாயிருக்கும் என்பது அவள் அனுபவத்தில் கண்ட உண்மை. வேறெந்தத் தேன் பாகும் அந்தச் சுவையை அவற்றுக்கு அளித்துவிட முடியாது.

ஸ்ரீதர் இவ்வாறு கொழும்பிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்க, ‘அமராவதி’ தனது அருமை வாரிசை வரவேற்பதற்காகத் தடல் புடலாக ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தது. மாதத்திற்கு இரண்டு மூன்று தடவை வந்தால் கூட ஒவ்வொரு தடவையும் சிவநேசரும் பாக்கியமும் அவனுக்கு இராஜ வரவேற்பளிக்கத் தவறுவதில்லை. இம்முறையோ அவன் மூன்று மாதம் கழித்து வீட்டுக்கு வருகிறான். ஆகவே வரவேற்பு ஏற்பாடுகள் மிகவும் அமர்க்க்களமாயிருந்தன.

அவன் வருவதற்கு முதல் நாளே தாய் பாக்கியம் அவனது மாடி அறையை வேலைக்காரரைக் கொண்டு அப்பழுக்கில்லாமல் சுத்தம் செய்வித்து வைத்தாள். அவனது படுக்கைக்குப் புதிய விரிப்புகள் விரிக்கப்பட்டன. தலையணைகளுக்கு அழகான உறைகள் இடப்பட்டன். வெளியே இருந்த ரேடியோ கிராமும், புதிதாக வாங்கப்பட்ட பல இசைத்தட்டுகளும் அவன் படுக்கைக்கு அருகே கொண்டு போய் வைக்கப்பட்டன. இன்னும் படுக்கைக்கு அருகே முக்காலியில் இருந்த டெலிபோன் கிருமி நாசினியால் சுத்திகரிக்கப்பட்டு அத்தரால் வாசனையூட்டி வைக்கப்பட்டது. அறையில் நடுவே அழகான இரத்தினக் கம்பளம் ஒன்றும் விரிக்கப்பட்டது. ஸ்ரீதர் இவற்றை எல்லாம் விரும்பி அனுபவிப்பவன் என்பது அவன் தாய்க்கு நன்கு தெரிந்திருந்ததே அவன் இவ் விஷயங்களில் இவ்வளவு கவனமெடுத்ததற்குக் காரணம். சாதாரணமாக அவன் படுக்கையில் படுத்திருக்கத் தாய் பாக்கியம் கம்பளத்தில் உட்கார்ந்து வெற்றிலையை மென்று கொண்டு அவனோடு உரையாடுவது வழக்கம். அவ்வாறு உட்கார்ந்து பேசுவது அவளுக்கு எல்லையில்லாத ஒரு மன நிறைவைக் கொடுத்தது. ஆகவே இரத்தினக் கம்பளத்தை அவள் விரித்தது ஸ்ரீதருக்காக மட்டுமல்ல. தன் வசதிக்காகவும் தான், இன்னும் ஸ்ரீதர் சித்திரம் வரையும் ‘ஸ்டான்’டையும் ஜன்னலுக்கு அருகே வெளிச்சம் நன்கு விழும் ஓரிடத்தில் வைக்கும் படி ஏற்பாடு செய்தாள். அந்த ‘ஸ்டான்டில்’ அவன் அரை குறையாக எழுதி நிறுத்திய ‘மோகனா’ என்னும் அமராவதி இல்லத்தின் பஞ்சவர்ணக் கிளியின் படத்தையும் அவள் எடுத்து வைத்தாள். ஸ்ரீதர் வந்ததும் அவனிடம் அந்தப் படத்தை எழுதி முடித்துவிடும்படி கூற வேண்டுமென்றும், அதற்குத் தக்க முலாமிட்ட ‘பிரேம்’ போட்டு விறாந்தைகளில் மாட்டி வைக்க வேண்டுமென்பதும் அவள் அவா.

"ஸ்ரீதர் எவ்வளவு கெட்டிக்காரன். என்ன அழகாகப் படமெழுதுகிறான் பார்த்தாயா? அவனைப் போல் தத்ரூபமாகப் படமெழுத யாராலும் முடியாது" என்று வேலைக்காரி தெய்வானையிடம் கூறிய வண்ணமே படத்தில் பட்டிருந்த தூசைத் தன் சேலையின் முன்றானையால் தட்டிவிட்டாள் பாக்கியம்.

வேலைக்காரி தெய்வானை அதைக் கேட்டு "ஆம் அம்மா. நீங்கள் சொல்வது முற்றிலும் மெய். அவர் படமெழுதியதை தான் நேரில் பார்த்திருக்காவிட்டால், இப்படம் மனிதர் கையால் எழுதப்பட்டதென்று யாராவது எனக்குச் சொல்லியிருந்தால் நான் அதை நம்பி இருக்கவே மாட்டேன்." என்று கூறினான்.

"மோகனா"வின் படத்தைப் பார்த்ததும் பாக்கியம் தெய்வானையிடம் "வீட்டின் பின் புறத்திலிருக்கும் மோகனாவைக் கூட்டோடு தூக்கி வா. இங்கே படுக்கை அறையிலேயே தூக்கி வைத்து விடுவோம். ஸ்ரீதர் அறையுள் நுழைந்ததுமே அது அவனை "ஸ்ரீதர்" என்று அழைக்கட்டும். அவனுக்கு அது சந்தோஷமாயிருக்கும்" என்றாள்.

தெய்வானை "அம்மா சரியான வேடிக்கைக்காரி. அத்துடன் மகன் மீது எவ்வளவு அன்பு. அவரை மகிழ்விப்பதற்காக எவ்வளவு ஏற்பாடுகள்" என்று மெச்சினாள்.

"அவனைப் போல் மகனிருந்தால் யாருக்குத்தான் அன்பேற்படாது. அவன் என் மகனாகப் பிறக்க நான் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்." என்றாள் பாக்கியம். "ஆம் அம்மா, அவரைப் போல் அழகானவரையும் திறமையுள்ளவரையும், அன்புள்ளவரையும் நான் பார்த்ததில்லை. கதையில் வரும் அர்ச்சுனராசா அப்படியிருந்திருப்பாரோ என்னவோ" என்றான்.

ஆனால் பாக்கியம் அறை விஷயத்தை மட்டும் நான் கவனித்தாள் என்பதில்லை. அவனுக்கு வேண்டிய உணவு வகைகளையும் ஏற்பாடு செய்து வைத்தால். கோழி சூப், கருணைக் கிழங்குக் கறி, பொரி விளங்காய் போன்ற அவனுக்குப் பிரியமான உணவு வகைகளைத் தயாரிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து வைத்தாள். வேப்பம் பூ வடகம், எலுமிச்சங்காய் ஊறுகாய் என்பதையும் போதிய அளவு இருக்கின்றனவா என்று கவனித்துக் கொண்டாள். இன்னும் சீமைச் சொக்கிளேட் வகைகளும், பிஸ்கட்டுகளும், கொக்கோ போன்ற பான வகைகளும் அவளால் அலுமாரியிலிருந்து மேசை மீது எடுத்து வைக்கப்பட்டன. அத்துடன், அடுத்த நாட் காலையிலிருந்து ஸ்ரீதர் வரும் வரைக்கும் அமராவதி வளவின் பெரிய இரும்பு கேட்டுகள் திறந்து வைக்கப்பட வேண்டுமென்றும் வாயிற் காப்பாளனுக்கு உத்தரவிடப்பட்டது. அதன் காரணமாக, அடுத்த நாட் காலையில் வீதியில் சென்றவர்கள் யாவரும் அமராவதி மாளிகைக்கு யாரோ ஒரு முக்கிய விருந்தினர் வருவதாக அறிந்து கொண்டனர். கொழும்பிலிருந்து இலங்கையின் பிரதம நிதியரசர், சிவநேசரின் விருந்தினராக வருவதாகப் பொய்க் கதையொன்றும் வீதியோரத்திலிருந்த தேநீர்க் கடையில் பிறந்து பாவி விட்டது.

பாக்கியத்தின் பரபரப்பைப் பார்த்து சிவநேசரும் ஒரு வகைப் பரபரப்பை அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும். பாக்கியத்திடம் ஒரு விஸ்கி போத்தலையும் கிளாஸ்களையும் நல்ல தட்டொன்ற்¢ல் ஸ்ரீதரின் அறையில் வைக்கும்படி கூறினார் அவர்.

"எதற்கு? அவன் தான் குடிக்க மாட்டானே?" என்றாள் பாக்கியம்.

"உண்மைதான். ஆனால் ஆண் பிள்ளை என்றால் இப்படிப்பட்ட விஷயங்களிலும் ஓரளவு பயின்றல்லவா இருக்க வேண்டும்? சிறிது குடிப்பது உடம்புக்கும் நல்லது. நானும் அவனைப் போலவே குடிகாரனல்லாவிட்டாலும், அவன் வயதில் ஒரு நாளுக்கு அரை போத்தல் விஸ்கி குடித்து விடுவேனே" என்றார் சிவநேசர்.

"ஆமாம். குடிக்காதவர் தான் நீங்கள். அது தான் அரைப் போத்தல் குடித்தீர்களா. என் மகன் குடிக்கவே மாட்டான்" என்று பாக்கியம் சிவ நேசரைக் கிண்டல் பண்ணிக் கொண்டே விஸ்கி போத்தலைத் தேடிக் கிளம்பிவிட்டாள். இந்த உலகில் சிவநேசரைக் கிண்டல் பண்ணும் துணிவு பாக்கியத்துக்கு மட்டும் தான் இருந்தது. அவளது கிண்டலை அவர் சில சமயம் விரும்பி இரசிப்பதுமுன்று.

பாக்கியம் விஸ்கித் தட்டை ஸ்ரீதர் அறையில் வைத்தது அவன் குடிப்பான் என்ற எதிர்பார்ப்பில் அல்ல, அவன் விரும்பினால் அந்தக் குறைக் கூட அவனுக்கு இருக்கக் கூடாது என்றது அவளது அன்னை உள்ளம்.

ஸ்ரீதர் பகல் பத்து மணியளவில் காரில் வீடு வந்து சேர்ந்தான். மோகனா "ஸ்ரீதர் ஸ்ரீதர்" என்று ஒரே ரகளைப் படுத்திவிட்டது. வேலைக்காரி தெய்வானை கூட்டுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு அதைப் பேசும்படி தூண்டிவிட்டுக் கொண்டிருந்தாள்.

ஸ்ரீதர் மோகனாவுக்குப் பக்கத்தில் சென்று "ஏ! மோகனா என்ன ஒரே கூச்சல்" என்று கூறிக் கொண்டே தான் கொறித்துக் கொண்டிருந்த முந்திரிக் கொட்டையிலொன்றை அதன் வாயில் திணித்தான். மோகனா நிசப்தமாகியது.

தாய் பாக்கியம் " நீ போன முறை மோகனாவின் படத்தைப் பூர்த்தி செய்யாமல் போனாயல்லவா? அதுதான் அதைப் பூர்த்தி செய்யும்படி சப்தம் போடுகிறது அது" என்றாள்.

ஸ்ரீதர், "ஆமாம் அதைப் பூர்த்தி செய்து, அடுத்த மாதம் நடக்கும் கலைக் கழகப் போட்டிக்கு அனுப்ப வேண்டும். எனக்கு முதலாம் பரிசு கிடைக்கும் அம்மா" என்றான் உற்சாகமாக. அத்துடன் "அம்மா உனக்கு நிறைய முந்திரிக்கொட்டையும் கருப்பட்டியும் வாங்கி வந்திருக்கிறேன். தெய்வானை அவை எல்லாவற்றையும் அம்மாவுக்கு எடுத்துக் கொடு" என்று உத்தரவிட்டான் அவன்.

பாக்கியத்துக்கு ஒரே ஆனந்தம். ஸ்ரீதருக்குச் சமீபமாகச் சென்று "அப்பாவுக்கு என்ன கொண்டு வந்தாய்" என்றாள் மெல்லிய குரலில்.

"புத்தகங்கள். அவர் அறிஞர். உன்னைப் போல் சாப்பாட்டு ராமரல்லவே அவர்" என்றான் ஸ்ரீதர்.

பாக்கியம் செல்லமாக அவனை அடித்து விடுவது போல் கையை ஓங்கினாள். ஸ்ரீதர் சிரித்து விட்டு, "அம்மா அடிக்காதே. நான் விளையாட்டுக்குச் சொன்னேன்." என்று சொல்லிக் கொண்டே புத்தகங்களை எடுத்துத் தெய்வானை மூலம் சிவநேசர் அறைக்கு அனுப்புவித்தான்.

சிவநேசர் புத்தகங்களின் தலைப்புகளை மட்டும் வாசித்து விட்டு, ஸ்ரீதரைப் பார்க்க வெளியே வந்தார். புத்தகங்கள் எல்லாமே அவர் தேடிக் கொண்டிருந்த நீட்சேயின் புத்தகங்கள். அவர் எழுதத் திட்டமிட்டுக் கொண்டிருந்த நூலொன்றுக்கு அவருக்கு மிகவும் பயன்படக் கூடிய துணை நூல்கள் அவை. ஆகவே அவர் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

சிவநேசர் ஸ்ரீதரைப் பார்க்க வெளியே வந்தது. அவனுடன் உரையாடி அளவளாவுதற்கல்ல. அவ்வித கலகலப்பான பழக்கம் தான் அவரிடம் எப்பொழுதுமே இல்லையே. அவன் கொழுத்திருக்கிறானா மெலிந்திருக்கிறானா என்பதை நேரில் பார்க்க வெண்டும். அவ்வளவுதான் அவர் எண்ணம். அவர் அதற்காக வெளியே வந்து பார்த்தபோது ஸ்ரீதர் மொளு மொளு என்று காட்சியளித்தது அவருக்கு இன்பத்தையே அளித்தது. நவீன மோஸ்தரில் அமைந்த டீ ஷேர்ட்டும், காற்சட்டையும் அணிந்து ஸ்ரீதர் பாக்கியத்துடன் சிரித்துப் பேசி கொண்டிருந்ததைக் கண்டு அவர் மனம் மகிழ்ந்தார்.

தந்தையைக் கண்டதும் மகன் அவரை நோக்கித் திரும்பினான். சிவநேசர் மகனைப் பார்த்து "என்ன வீடு மறந்து போய் விட்டதா? மூன்று மாதமாக வீட்டுக்கே வரவில்லையே" என்றார்.

ஸ்ரீதர் பதிலளிக்கவில்லை. புன்னகை செய்து கொண்டு நின்றான்.

சிவநேசர் தொடர்ந்து "சுரேஷ் சீமை போன பிறகு தான் வீடு ஞாபகம் வந்தது போலிருக்கிறது. ஏன் ‘கிஷ்கிந்தா’வில் தனியாய் இருக்கப் பயமாயிருக்கிறதா? பழையபடி பேய் நடமாட்டம் உண்டாகி விட்டதா?" என்றார். கொழும்புக்குப் போய்த் தனியாக வாழத் தொடங்கிய புதிதில் ஸ்ரீதர் தனியாய் இருக்கப் பயமாய் இருக்கிறது என்று தபால் எழுதி டெலிபோனிலும் பேசியதை அவ்வாறு ஞாபகமூட்டினார் அவர்.

"நான் இப்போது பெரியவனாகி விட்டேன். எனக்குப் பேய்க்குப் பயமில்லை" என்று சிறிது அடக்கமாகவே முனகிய ஸ்ரீதர். வாயில் வந்த ஒரு நகைச்சுவை வார்த்தையை அடக்க முடியாதவனாக "இப்போது நான் பேயைக் கண்டு பயப்படுவதில்லை. பேய்க்குத்தான் என்னைக் கண்டு பயம், அப்பா." என்று மெதுவாகக் கூறிவிட்டான். சிவநேசர் சிரித்தார். "சுரேஷ் உனக்கு நன்றாகப் பேசப் பழக்கி விட்டிருக்கிறான். அவன் எவ்வளவு காலம் இங்கிலாந்திலிருப்பான். அவன் மிகவும் நல்ல பையன். அவன் பிரயாணத்தின் போது நீ அவனுக்கு ஏதாவது பரிசளிக்க வில்லையா?" என்றார்.

"பரிசளித்தேன். ஒரு ஜோடி உடுப்பு" என்றான் ஸ்ரீதர்.

"என்ன விலை?" என்றார் சிவநேசர். எங்கே தங்கள் அந்தஸ்துக்கு ஒவ்வாத முறையில் மலிந்த செலவில் ஏதாவது பரிசைக் கொடுத்து விட்டானோ என்று அவர் அஞ்சினார்.

"ரூபா எழுநூற்றைம்பது. வைட்டவேய்ஸில் வாங்கினேன்." என்றான் ஸ்ரீதர்.

"எங்கே மலிந்த பரிசு ஏதாவது கொடுத்துவிட்டாயோ என்று நான் நினைத்தேன். இப்படிப்பட்ட விஷயங்களில் நாம் பணத்தைப் பார்க்கக் கூடாது. எங்கள் அந்தஸ்தைக் காப்பாற்ற வேண்டும்" என்றார் சிவநேசர் திருப்தியுடன்.

பாக்கியம் "ஸ்ரீதர் சின்னப் பையனல்ல. அவனுக்கு இப்பொழுது இவை எல்லாம் நன்கு தெரியும்" என்று சிபாரிசு செய்தாள் . அவ் வார்த்தைகளுக்காக அன்னையை நன்றியோடு பார்த்து புன்னகை செய்தான் ஸ்ரீதர்.

"பரிசளிக்கப் பணத்திற்கு எங்கே போனாய்? என்னைக் கேட்டிருக்கலாமே" என்றார் சிவநேசர்.

"ஏன்? என்னிடம் பணம் நிறைய இருக்கிறது." என்றான் ஸ்ரீதர்.

"எப்படி?"

"ஏன் என்னுடைய அலவன்ஸ் முழுவதும் பாங்கில் மிஞ்சியிருக்கிறது"

"எவ்வளவு?"

"50 அல்லது 60 ஆயிரம் இருக்கலாம்"

"அப்படியானால் நீ பணத்தைச் செலவழிப்பது இல்லையா?"

"எனக்கு என்ன செலவு? சாப்பாடு, பெட்ரோல் எல்லாம் தான் சும்மா கிடைக்கின்றன. புத்தகங்கள் வர்ணங்கள், வெளியே போனால் கைச் செலவு, உடைகள் அவ்வளவு தானே என் செலவு" என்றான் ஸ்ரீதர்.

சிவநேசர் புன்னகை பூத்தார். "நீ எங்கள் குடும்பத்திலேயே பெரிய கருமியாய் வருவாய் போலிருக்கிறது. என்னுடைய இறந்து போன மாமனார் ஒருவர் இப்படித்தானாம். சாகும் போது அவர் தலையணையுள் ஐயாயிரம் தங்கப் பவுன்களை வைத்திருந்தார். ஆனால் ஒன்று. ஒருவன் எவ்வளவுதான் கருமியாயிருந்தாலும் கருமி என்று பெயரெடுக்கக் கூடாது. அதைப் போன்ற அபவாதம் உலகிலேயே வேறு இல்லை. எவனாவது ஒருவன் ஊதாரியாக வாழ்ந்தான் என்று உலகம் ஏசும் போது, அந்த எச்சில் கூட ஒருவித அன்பு தொனிக்கும். ஆனால் கருமியை ஏசும்போது ஒரு புழுவை ஏசுவது போல் ஏசுவார்கள்." என்றார்.

பாக்கியம் "ஸ்ரீதர் கருமியல்ல" என்று இடை மறித்தாள். சிவநேசரும் தம் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

வெளிப்படையாக, சிவநேசர், ஸ்ரீதர், பாக்கியம் ஆகிய மூவரும் இவ்வாறு உல்லாசமாகப் பேசிக் கொண்டாலும் நீரு பூத்த நெருப்புப் போல அவர்கள் எல்லோர் உள்ளத்திலும் ஸ்ரீதரின் திருமணப் பிரச்சினை ஒரு பெரிய பாரமாகவே கிடந்தது. பாக்கியம் சமையல் வேலைகளைச் செய்து கொண்டிருப்பதிலும் அதனை மறப்பதற்கு முயன்றாள். ஸ்ரீதரோ படுக்கையில் சாய்ந்து கொண்டு அடுத்த நாள் நாடக வசனங்களை மனனம் செய்ய ஆரம்பித்தான். ஏற்கனவே அவன் அவற்றைத் தலை கீழாக மனனம் செய்திருந்தது உண்மையேயாயினும், சிறு தவறுமின்றி மிக நேர்த்தியாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் முன்னிலையில் நடிக்க வேண்டுமென்ற பேரார்வத்திலேயே அவன் அவ்வாறு அதில் அதிக கவனம் செலுத்தலானான். பாக்கியத்தின் உத்தரவின் படி ஐஸ் போட்டுக் குளிரச் செய்யப்பட்டிருந்த செவ்விளநீரைத் தெய்வானை உயர்ந்த பெரிய ‘கிளாசில்’ ஊற்றி ஸ்ரீதரின் படுக்கைக்கு அருகே வைத்திருந்தாள். அதை இடையிடையே அருந்தியவாறு ஸ்ரீதர் நாடக வசனங்களை உரக்கப் பேசிப் பழகிக் கொண்டிருந்தான். இடையிடையே கூண்டிலிருந்த மோகனா அவனைப் பார்த்து "ஸ்ரீதர் ஸ்ரீதர்" என்று அழைத்தது. "சப்தம் போடாதே. எனக்கு வேலையிருக்கிறது." என்று விரலை வாயில் வைத்து அதற்குச் சைகை காட்டிவிட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தாள் அவள்.

சிவநேசர் சிறிது நேரம் நீட்சேயின் கருத்துகளோடு மல்லாடிவிட்டு விஸ்கி அருந்தினார். தோட்டத்தில் உலாவினார். இயற்கை மர நிழலுக்குச் சென்று புள்ளி மன்களுக்கும் மயில்களுக்கும் தம் கையால் உணவு கொடுத்தார். பின்னர் காரியாலய அறைக்குள் சென்று கிளாக்கர் நன்னித்தம்பிக்கு வேலைகள் சொல்ல ஆரம்பித்தார். அப்பொழுதும் ஸ்ரீதரைப் பற்றி மொட்டைக் கடிதத்தில் கூறப்பட்டிருந்த விஷயங்களும் அதிகார் அம்பலவாணர் கூறிய விஷயங்களும் அவருக்கு ஞாபகம் வரவில்லை. இருந்தாலும் நாளை நாடகம் முடித்து வேலைப் பரபரப்புகள் அடங்கிய பிறகு - அதாவது நாளை மறு தினம் இவ்விஷயங்களைக் கவனிக்கலாம் என்றிருந்து விட்டார் அவர்.

ஆனால் அவர் அவ்வாறு நினைக்கச் சுழிபுரம் கந்தப்பர் வேறு விதமாக நினைத்தார். சுழிபுரத்திலிருந்து ‘ட்ரங் கோல்’ போட்டுப் பேசினார் அவர்.

"நாளைக்கு உங்கள் மகன் ஸ்ரீதர் இந்துக் கல்லூரி நாடகத்தில் நடிக்கிறாராமே உண்மைதானா?"

"ஆமாம். நீங்களும் வாருங்கள். நன்றாக நடிக்கிறானாம்"

"நான் வராமலிருப்பேனா. டாக்டரையும் கூட்டி வருகிறேன்."

"டாக்டரா? யாரது?... ஓகோ உங்கள் மகளைக் கூறுகிறீர்களா? சரி. அழைத்து வாருங்கள்... இல்லை... இன்னும் நான் ஸ்ரீதரிடம் பேச வில்லை. எதற்கும் நாளைக்கு நாடகத்தில் சந்திப்போம்."

டெலிபோன் பேசி முடித்த பின்னர் சிவநேசர் எழுந்து சென்று விட்டார்.

அவர் போய்ச் சிறிது நேரத்தில் காரியாலய அறைக்கு ஸ்ரீதர் வந்தான். கிளாக்கர் நன்னித்தம்பி எழுந்து நின்று "தம்பி ஸ்ரீதரா, வாருங்கள்" என்று விநயமாக வரவேற்றார்.

ஸ்ரீதர் தந்தையின் சுழல் நாற்காலியில் உல்லாசமாக உட்கார்ந்து சுழன்று கொண்டே "நன்னித்தம்பி என்ன புதினம்?" என்று கேட்டான்.

நன்னித்தம்பி சிரித்துக் கொண்டு "புதினமா? ஒரு புதினமுமில்லை. என் மகள் சுசீலா பீ.ஏ பாஸ் பண்ணிவிட்டாள். அப்பாவிடம் அவளுக்கு எங்காவது ஒரு வாத்தியார் வேலை பார்த்துத் தரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர் அவளை நாளை மறு தினம் இங்கே அழைத்து வரும்படி சொல்லியிருக்கிறார். மற்றப்படி உங்கள் புதினம் தான் பெரிய புதினம்?"

"எனது புதினமா? இது என்ன புதுக் குழப்பம்? எனக்கொன்றும் விளங்கவில்லையே. விவரமாய்ச் சொல்லு" என்றான் ஸ்ரீதர்.

நன்னித்தம்பி, "இல்லை, உங்கள் திருமண விஷயமாகச் சொன்னேன். கந்தப்பசேகரர் மகள் டாக்டர் அமுதாவை உங்களுக்குக் கல்யாணம் பேசி இருக்கிறார் அப்பா. நான் சொன்னேன் என்று யாரிடமும் சொல்ல வேண்டாம். நாளை இந்துக் கல்லூரி நாடகத்துக்கு உங்களைப் பார்க்க டாக்டர் வருகிறாளாம். இப்பொழுதுதான் அது பற்றிச் சுழிபுரத்திலிருந்து கந்தப்பர் டெலிபோனில் பேசினார்" என்றார் விநயமாக.

"அப்படியா? ஆனால் டாக்டர் பார்ப்பதற்கு எனக்கொன்றும் சுகவீனம் இல்லை...அல்ல.. மறந்து விட்டேன். இரு நாட்களாக கண்ணில் தண்ணீர் வருகிறது. சில சமயங்களில் எரிச்சல் கூட எடுக்கிறது. அதை வேண்டுமானால் டாக்டருக்குக் காட்டலாம்" என்றான் சிரித்துக் கொண்டு.

"நீங்கள் குறும்பாகப் பேசுகிறீர்கள். ஆனால் கண்ணில் சுகவீனமென்பது உண்மைதானா தம்பி? அப்படியானால் நல்ல டாக்டரிடம் காட்ட வேண்டும். எனது இறந்து போன மைத்துனர் சிவலிங்கத்துக்கு இப்படித்தான் கண்ணில் சுகவீனமாகிப் பின்னர் பார்வையே பழுதாயிற்று. அதற்காகச் சந்திர சிகிச்சை செய்தோம். ஆனால் அச் சந்திர சிக்கிச்சை அவர் உயிரையே கொண்டு போய் விட்டது" என்றார் நன்னித்தம்பி.

"என்ன கண்ணில் சந்திர சிகிச்சை செய்ததால் உயிர் போயிற்றா? நான் அப்படிப்பட்ட கண் நோயைப் பற்றி இதற்கு முன் கேள்விப்பட்டதேயில்லை" என்று ஆச்சரியத்தோடு கூறினான் ஸ்ரீதர்.

அதற்கு நன்னித்தம்பி, "எனக்கும் அப்படிப்பட்ட கண் நோயைப் பற்றியோ சந்திர சிகிச்சையைப் பற்றியோ முன்னர் தெரியாதுதான். அவருக்கு நோய் ஏற்பட்ட பிறகு தான் இது விஷயங்களைத் தெரிந்துக் கொண்டேன். எதற்கும் முன் ஜாக்கிரதையாக டாக்டருக்குக் காட்டுவது நல்லதல்லவா?" என்றார்.

ஸ்ரீதர் "காட்டத்தான் வேண்டும். ஆனால் இந்த லேடி டாக்டருக்கல்ல." என்று கூறிக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டான்.

கிளாக்கர் அவனது பேச்சைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்துக் கொண்டே வேலையில் மூழ்கினார்.

அன்று மாலை நாலரை மணியளவில் தாயாருடன் சேர்த்து அமராவதி வளவு முழுவதும் சுற்றித் திரிந்தான் ஸ்ரீதர். மான்கள், மாடுகள், மயில்கள் ஆகியவற்றோடு விளையாடினான். தடாகத்திலிருந்த தாமரைப் பூக்களையும் அல்லியையும் கொய்தான். வளவிலிருந்த கோயிலுக்குப் போய் அங்கிருந்த சந்தனக் கல்லில் தன் கையாலேயே சந்தனத்தை அரைத்துத் தன் நெற்றியில் அழகாகப் பொட்டிட்டுக் கொண்டு அம்மாவின் நெற்றியிலும் பொட்டு வைத்தான்.

தாயார் கொழும்பு சுந்தரேஸ்வரர் கோவிலைப் பற்றி விசாரித்தாள். கோவிலின் தெற்குக் கோபுரத் திருப்பணியைத் தந்தையார் சீக்கிரம் தொடங்கவிருக்கிறாரென்றும் தானும் அப்போது அங்கே வந்து ‘கிஷ்கிந்தா’வில் ஒரு வாரம் தங்கியிருக்கப் போவதாகவும் கூறினாள் அவள். "அந்தக் கோவில் உனது பரம்பரைக் கோவில். அதுதான் இந்த அமராவதி வளவையே எப்பொழுதும் பாதுகாத்து வருகிறது. மணவாள சுந்தரேஸ்வரர் தான் எங்களுக்கு இந்த இலங்கை முழுவதுமே இவ்வளவு பெரிய அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறார். ஆகவே நீ கோவில் நிர்வாகத்தில் அப்பொழுதும் அக்கறையாயிருப்பதோடு நேரடியாக அதைக் கவனிக்கவும் வேண்டும்." என்றாள் பாக்கியம்.

"ஆம். அப்படியே செய்வேன்" என்று வாக்களித்தான் ஸ்ரீதர்.

பின் தாயும் மகனும் வேலைக்காரி தெய்வானையுடன் ஸ்ரீதர், சுரேஷ் என்ற ஈர் ஆமைகளையும் பார்க்கச் சென்றனர். அவற்றுக்கும் அவற்றோடு வாழ்ந்த மீன்களுக்கும் உணவளித்தான் ஸ்ரீதர். "மிருகங்களுக்கு உணவளித்தல் பெரிய புண்ணியம். கடவுள் எங்களுக்குச் செல்வம் அளித்திருப்பது மனிதருக்கும் மிருகங்களுக்கும் உதவுவதற்காகத்தான்." என்று கூறிய பாக்கியம் ஸ்ரீதரிடம் "கிஷ்கிந்தா"வில் கண்னாடி நீர்ப் பெட்டிகளை வைத்துச் சில மீன்களை வளர்க்கலாமே என்றும் ஆலோசனை கூறினாள். அத்துடன் " நீ கொழும்புக்குப் போகும் போது மோகனாவையும் எடுத்துச் செல். அது "ஸ்ரீதர் ஸ்ரீதர்" என்று உன்னை அழைத்துக் கொண்டே இருப்பது உன் நண்பர்களுக்கு வேடிக்கையாயிருக்கும்" என்றும் சொன்னாள் அவள்.

பின்னர் இருவரும் குளத்தின் கட்டில் உட்கார்ந்து இளைப்பாறினார்கள். ஸ்ரீதர் குழந்தை போல் அம்மாவின் மடியில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டான். "அம்மா என் தலையில் பேனிருக்கிறதா பார்" என்று குறும்பாகச் சொன்னான் அவன். பாக்கியத்துக்கு அவன் தலையில் பேனில்லை என்பது தெரிந்தாலும் பொய்க்குப் பேன் பார்த்தாள். தெய்வானை அதைப் பார்த்துச் சிரித்தாள்.

திடீரென ஸ்ரீதர் "அம்மா, நான் அப்பாவைப் படம் எழுதியிருக்கிறேன். உன்னை எழுதவில்லையல்லவா? இன்றைக்கு எழுதப் போகிறேன்" என்றான்.

பாக்கியத்துக்கும் அது பிடித்தது. "சரி எழுது. நான் எப்படியிருக்கிறேன் என்று படத்தில் பார்க்க எனக்கும் ஆசைதான்" என்றாள் அவள்.

" நான் உன்னை உனது மான்களுடன் ரவிவர்மாவின் சகுந்தலை படம் போல் எழுதப் போகிறேன்." என்றான் ஸ்ரீதர்.

"சகுந்தலை இளம் பெண். என்னை அப்படி எழுத முடியுமா? அது நல்லாயிருக்காது" என்றாள் பாக்கியம்.

"யார் சொன்னது? சகுந்தலை இளம் பெண்ணென்று? அவளும் அவள் மகன் பரதனுக்கு இருபத்து முன்று வயதாயிருக்கும்போது உன் வயசை அடைந்திருப்பாள் தானே? அநேகமாக, அவளும் உன்னைப் போல் உருண்டு திரண்ட, பூசணிக்காயாகத்தான் இருந்திருப்பாள். அப்படி நினைத்துக் கொண்டு நானுன்னைச் சகுந்தலை போலவே எழுதப் போகிறேன்." என்றான் ஸ்ரீதர்.

"ஆனால் பரதனுக்கு இருபத்துமூன்று வயதான பொழுது சகுந்தலை காட்டில் இல்லையல்லவா? ஆகவே மான்களை எழுதக் கூடாது" என்றாள் பாக்கியம்.

"ஏன்? மான்களோடு வனத்தில் வளர்ந்த சகுந்தலை நிச்சயம் அரண்மனையிலும் மான்களை வளர்த்துத்தான் இருப்பாள். துஷ்யந்தன் என்ன எங்க அப்பாவைவிடக் குறைந்தவனா? தன் மனைவிக்கு மான்களைக் கொண்டு வந்து கொடுத்திருக்க மாட்டானா?" என்றான் ஸ்ரீதர்.

பாக்கியம் சிரித்தாள். "உன்னோடு என்னால் வாதிட முடியாது. சரி. படத்தை எழுது. எப்படி விருப்பமோ, அது போல் எழுது. ஆனால் ஒன்று. என்னை அதிகம் கிழவியாக எழுதிவிடாதே. வயசைச் சிறிது குறைத்தெழுது" என்றாள் பாக்கியம்.

"ஆ! அப்படியா? எவ்வளவு தூரம் வயசைக் குறைக்க வேண்டும். இருபத்தைந்து வயதுப் பெண்னாக எழுதிவிடட்டுமா?" என்று கேலி செய்தான் ஸ்ரீதர்.

பாக்கியம் "இப்படி நீ என்னைப் பரிகாசம் செய்வதாயிருந்தால் படம் எழுதவே வேண்டாம். நீ அப்பாவின் படத்தை எழுதி விட்டாயல்லவா? நீ அப்பாவின் மகன் தானே? என்னை எழுத வேண்டாம்." என்று கோபித்துக் கொண்டாள்.

ஸ்ரீதர் அதற்கு "இல்லையம்மா. உன்னை எழுதித்தான் தீருவேன். ஆனால் உன் வயசை ஐந்து வயதுக்கு மேல் குறைக்க முடியாது. என்ன சொல்கிறாய்?" என்றான்.

"அது போதும். ஐந்து வயதுக்கு முன் நான் எப்படி இருந்தேன் தெரியுமா? நானும் அப்பாவும் அப்பொழுது கவர்னர் மாளிகை விருந்துக்குப் போன போது, அங்கிருந்த வெள்ளைக்கார ஆண்களும் பெண்களும் அப்பாவிடம் என் அழகை மிகவும் புகழ்ந்தார்களாம். என் படம் பத்திரிகைகளில் கூட வெளி வந்தது. நான் அப்பொழுது இன்று போல் கிழவியல்ல" என்றாள் பாக்கியம்.

"என்ன என் அம்மா கிழவியா? யார் சொன்னது? இதோ படத்தை எழுத ஆரம்பிக்கிறேன்" என்று கூறிக் கொண்டே படம் எழுதுவதற்கு வேண்டிய பொருள்களைத் தெய்வானையை அனுப்பி எடுத்து வரச் செய்து, படம் வரைய ஆரம்பித்தான் ஸ்ரீதர்.

படம் எழுத அரம்பித்த சிறிது நேரத்தில் பாக்கியம் வேலைக்காரி தெய்வானையை ஸ்ரீதருக்குத் தேநீரும் தனக்கு வெற்றிலையும் எடுத்து வர அனுப்பி வைத்தாள். இதனால் ஏற்பட்ட தனிமையை உபயோகித்து அம்மாவிடம் பத்மாவைப் பற்றிப் பேசுவதற்குத் தீர்மானித்தான் ஸ்ரீதர்.

"அம்மா, உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும். ஆனால் பேச வெட்கமாயிருக்கிறது. என்றாலும் பேச வேண்டிய விஷயந்தான்.." என்று பீடிகை போட்டான் ஸ்ரீதர்.

"எதென்றாலும் பேசு. என்ன விஷயம்? சொல்லு" என்று வினவினாள் பாக்கியம்.

ஸ்ரீதர் தட்டுத் தடுமாறிக் கொண்டு முடிவில் எப்படியோ விஷயத்துக்கு வந்து சேர்ந்தான். ‘அப்பா எனக்குக் கல்யாணம் பேசியிருக்கிறாராமே. அது உண்மையா?" என்று ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டான் ஸ்ரீதர்.

"ஆம். அது உனக்கு எப்படித் தெரியும்" என்றாள் பாக்கியம்.

"கொழும்பில் நாதசுரம் வேணுவைச் சந்தித்தேன். வேணு சொன்னான்"

"இதைக் கேட்கத்தானா நீ இவ்வளவு வெட்கப்பட்டாய்? நீ இன்னும் சின்னப் பையன் அல்லவே? கல்யாணம் செய்யும் வயதுதானே? அதுதான் அப்பா கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார்." என்றாள் பாக்கியம்..

"மணப்பெண் யார்?"

"வேணு சொல்லவில்லையா?"

"சொன்னான். கந்தப்பருடைய மகள் அமுதா என்று."

"ஆமாம். அவள்தான். படித்தவள். அழகி. நீயும் அவளும் நல்ல ஜோடி. அவள் அமெரிக்காவுக்குப் படிக்கப் போகு முன் இங்கு பல தடவை வந்திருக்கிறாள். நீ பார்த்திருக்கிறாயல்லவா? இன்னும் அவள் ஒரு லேடி டாக்டர். எல்லா வகையிலும் அவள் உனக்கேற்றவள்."

"அம்மா. எனக்கு லேடி டாக்டர்களைப் பிடிக்காது."

"அப்படியானால் அவளை டாக்டர் வேலை செய்ய வேண்டாமென்று சொல்லிவிட்டால் போகிறது. அவள் சம்பாதித்தா நீ சீவிக்க வேண்டும்? சுந்தரேஸ்வரர் அந்த நிலையில் எங்களை வைக்கவில்லை.

"இல்லை அம்மா. எனக்கு அமுதாவைப் பிடிக்காது. எனக்கு இந்தத் திருமணம் வேண்டவே வேண்டாம் அம்மா"

" நீ அமுதாவிடம் பேசிப் பழகாததால் அப்படிச் சொல்கிறாய். போன மாதம் கீரிமலையில் நான் அவளைச் சந்தித்தேன். மிகவும் இனிமையான குணம். நிச்சயம் அவளை உனக்குப் பிடிக்கும். அது மட்டுமால்ல. அவளுக்கு உன் மீது மிகவும் பிரியம். உன்னுடைய நாடகப் படம் ‘தினகரனி’ல் வெளிவந்ததல்லவா? அதை அவள் வெட்டி ஒட்டி வைத்திருப்பதாக அவளது தாயார் எனக்கு இரகசியமாகச் சொன்னாள். அப்பாவும் அவர்களும் ஏன் நானும் கூடத்தான் இந்தத் திருமணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்ப்பர்த்திருக்கிறோம்."

ஸ்ரீதருக்கு விஷயம் தலிக்கு மேல் போய்விட்டது போல் தோன்றியது. திடீரென அவன் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து திகிற் கோலம் தோன்றியது. இருந்த போதிலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "அம்மா, அமுதாவிலும் பார்க்க நல்ல மருமகளை நான் உனக்குக் கொழும்பிலே பார்த்து வைத்திருக்கிறேன் . அமுதா எனன அமுதா? அவளை விட எத்தனயோ மடங்கு நல்ல பெண்ணை நான் பார்த்து வைத்திருக்கிறேன்" என்றான் ஸ்ரீதர்.

"என்ன? கொழும்பிலே உனக்கேற்ற பெண்னா? அமராவதி வளவின் அந்தஸ்துக்கேற்ற பெண் கொழும்பில் எங்கே இருக்கிறாள்? இந்த இலங்கை முழுக்கப் பார்த்தாலும் கந்தப்ப்சேகரர் குடும்பத்தை விட எஙகளுக்கு சமமான அந்தஸ்துள்ள குடும்பம் வேறு இல்லை. அவர்கள் கூடப் பணத்தைப் பொறுத்த வரையில் எங்களுக்குக் குறைவு தான். இருந்தாலும் அவர்கள் மட்டும்தான் இந்த நாட்டிலேயே எங்களுடன் சம்பந்தம் செய்யத்தக்கவர்கள்."

"அம்மா, நீ கூறும் அந்த அந்தஸ்தில் எனக்கு நம்பிக்கை இல்லை."

"அதற்கென்ன செய்வது? அப்பாவுக்கு அதில் முழு நம்பிக்கை. அதை மாற்ற யாராலும் முடியாது."

"அப்படியானால் நான் பத்மாவைக் கட்ட முடியாதா?"

ஏக்கம் நிறைந்த ஸ்ரீதரின் இவ்வசனத்தைக் கேட்டதும் தாயுள்ளம் ஸ்தம்பித்துவிட்டது. நம்பிக்கை இழப்பதனால் ஏற்பட்ட சோகத்தில் எல்லைக் கோட்டில் நின்று ஒலித்த திகிலும் பயமும் நிறைந்த அந்தப் பரிதாப வார்த்தைகளை அவளால் சிறிதும் தாங்க முடியவில்லை. ஆம், ஸ்ரீதர் பத்மாவின் மீது கொண்ட முழுக் காதலும் அக்கேள்வியில் அப்படியே எதிரொலித்தது. பத்மா இல்லாத வாழ்வு வாழ்வல்ல, சாவே என்ற முடிவான தீர்மானத்தில் எழுந்த வார்த்தைகள் போல் தோன்றின அவை. சற்றும் எதிர்பாராத வகையில் நம்பிக்கைக் கோட்டைகள் யாவும் இடிக்கப்பட்டவனின் வாயிலிருந்து வெளி வந்த சக்தியற்ற சொற்களாகத் தோன்றின அவை.

பாக்கியம் ஸ்ரீதரின் முகத்தைப் பார்த்தாள். வெளிறிப் போலிருந்த அவன் முகத்தை வேதனை நிறைந்த அந்த நிலையில் அவள் அதற்கு முன் எப்போதும் பார்த்ததில்லை. அவனை அப்படியே அணைத்துக் கொண்டு தேறுதல் கூற வேண்டும் போலிருந்தது அவளுக்கு. இருந்தாலும் மனதைக் கெட்டிப்படுத்திக் கொண்டு "பத்மாவா அது யார்?" என்று ஒன்றுமறியாதவள் போல் கேட்டாள் அவள்.

ஸ்ரீதர் "பத்மா என்னுடன் படிக்கும் ஒரு மாணவி. ஒரு வாத்தியாரின் மகள். அவள் என்னை நேசிக்கிறாள். நானும் அவனை நேசிக்கிறேன். அம்மா, அவளை விட்டு வேறு ஒருவரையும் ஒரு போதும் நான் கல்யாணம் செய்ய மாட்டேன். என்னால் அமுதாவைக் கட்ட முடியாதம்மா?" என்றான்.

பாக்கியம், "அப்பா உனது பத்மாவை ஒருபோதும் ஏற்க மாட்டார், ஸ்ரீதர். நீ அமுதாவைக் கட்டுவதுதான் சரி" என்றாள்.

தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -ஸ்ரீதர் "இல்லையம்மா. நீ அப்பாவிடம் பேசு. விஷயங்களை எடுத்துச் சொன்னால் அவர் நிச்சயம் ஒப்புக் கொள்ளுவார். பத்மா மிகவும் நல்லவன். நீ கொழும்புக்கு வந்தால் பத்மாவை ‘கிஷ்கிந்தா’வுக்கு அழைத்து வந்து உனக்குக் காண்பிப்பேன். உனக்கு அவளை நன்றாய்ப் பிடிக்கும். அப்பாவுக்கும் பிடிக்கும். அம்மா, நீ அப்பாவிடம் பேசுவாயா?" என்றான்.

பாக்கியத்துக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கலங்கியிருந்த அவன் கண்களைக் கண்டு அவள் கண்களும் கலங்கிவிட்டன.

"சரி. பேசிப் பார்க்கிறேன். ஆனால் எனக்கென்னவோ இவ்விஷயங்களில் அப்பா விட்டுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை இல்லை." என்றாள்.

இமயமலையை அசைத்தாலும் அசைக்கலாம். ஆனால் சிவநேசர் மனதை மட்டும் இப்படிப்பட்ட விஷயங்களில் அசைக்க முடியாது என்பது பாக்கியத்துக்கு நன்கு தெரியும். எனவே ஸ்ரீதரின் எதிர்காலத்தையும் குடும்பத்தின் எதிர்காலத்தையும் எண்ணிப் பார்க்கவே அவளுக்குப் பயமாக இருந்தது.

இன்னும் ஸ்ரீதரின் பேச்சிலே அவனது காதலின் வலிமையும் அவளுக்குத் தெரிந்துவிட்டது. அதுவும் அசைக்க முடியாததாகவே அவளுக்கு பட்டது. சிறிய விஷயங்களில் எல்லாம் அவன் விருப்பபட்டதை உடனுக்குடன் பெற்றுக் கொடுத்துப் பழகிய அவள் கல்யாணம் போன்ற பெரிய விஷயத்தில் அவன் மனதுக்கு மாறாக எப்படி நடிப்பது என்றறியாது திக்குமுக்காடினாள்.

நிச்சயம் சிவநேசர் இதில் விட்டுக் கொடுக்க மாட்டார். என்னதான் மென்மை நிறைந்தவனாகக் காட்சியளித்தாலும் ஸ்ரீதரும் அவர் வளர்ப்பில் வளர்ந்தவன்தான். அவனும் இக்காதலை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. இந்த நிலையில் என்னென்ன விபரீதங்கள் நேரிடுமோ என்று அஞ்சினாள் பாக்கியம். காதலுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்தவர்களைப் பற்றி அவள் கேள்விப்பட்டு இருக்கிறாள். அதை நினைத்ததும் ஸ்ரீதரின் உயிருக்காக அவள் அஞ்ச ஆரம்பித்தாள் அவள். தாய் உள்ளம் நடுங்கியது.

அதன் பின் தாயும் மகனும் சிறிது நேரம் ஒருவருடன் ஒருவர் பேசவில்லை. இருவரும் வெவ்வேறு திசைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீதர் குளக்கட்டில் உட்கார்ந்து ஆமைகளைப் பார்த்தான். அங்கே சுரேசும் ஸ்ரீதரும் ஒன்றுக்கொன்று அருகருகாகக் காணப்பட்டன. இப்பொழுது எனது சுரேசும் அந்தச் சுரேஷைப் போல என் பக்கத்திலிருந்தால் அவனிடம் நான் இது சம்பந்தமாக ஆலோசனை கேட்டிருக்கலாமே என்றெண்ணிப் பெருமூச்சு விட்டான்.அவன்.

இதற்கிடையில் நேரம் ஆறு மணியாகி இருந்தது. இரணியனைக் கொன்ற நேரம். இது வரை இயற்கை மர நிழலை மட்டும் நிலவிய இருள் இப்பொழுது நாலாதிசைகளிலும் பார்த்து தாயையும் மகனையும் விழுங்கிக் கொண்டிருந்தது.


17-ம் அத்தியாயம்: ஸ்ரீதரின் தியாகம்

மனக்கண் - அத்தியாயம் 17.மனத்தில் எம்மை எவ்வளவு தான் கவலை பீடித்தாலும் அவ்வப்போது நாம் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து கொண்டுதானே போக வேண்டியிருக்கிறது? ஸ்ரீதரை, அவன் “அமராவதி”க்கு வந்த அன்று மாலை கப்பிய சோகம் தாங்கவொண்ணாத சோகம்தான். இருந்த போதிலும் அது அடுத்த நாள் மாலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவிருந்த “ஈடிப்பஸ் மன்னன்” நாடகத்தை எவ்விதத்திலும் பாதிக்க விடுவதிலலை, என்று அவன் தீர்மானித்துக் கொண்டான். நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிவிட்டு, அதன் பின் “அமராவதி” வளவில் எங்காவது ஒரு மூலையில் கவலைப்பட உட்காரலாம் என்பது அவன் எண்ணம். கவலையைக் கூட ஒழுங்காக, வேறு நினைவின்றி அனுபவித்தால்தான் அதனால் நிவாரணமோ இன்பமோ ஏற்படுகிறது. அதறகு இந்த நாடகச் சந்தடி தீர வேண்டும் எனபது அவன் நினைவு.

மேலும் கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே... என்று யாரோ ஒரு சினிமாப் பாடகன் எங்கோ பாடியிருக்கிறான். நாட்டியக் கலை மட்டுமல்ல சகலக் கலைகளுமே இப்பணியைத்தான் செய்கின்றன. உண்மையில் இவ்வித கலைகள் என்பன மட்டும் இல்லாவிட்டால் மானிடன் தன்னை எதிர் நோக்கும் துன்பங்களையெல்லாம் அச்சங்களையும் எவ்வாறு தாக்குப்பிடித்துச் சமாளிப்பான் என்று எண்ணிப் பார்க்கப்பட முடியாமல் இருக்கிறது. துன்பத்தின் பிடியில் அகப்பட்ட இதயம், இசையால், நாடகத்தால், கவிதையால், சித்திரத்தால் எத்தகையை சாந்தியைப் பெறுகிறது. ஸ்ரீதருக்கும், அவனுக்குக் கலைகளில் இருந்த ஈடுபாடுதான் அவனது துயருக்கு மாற்றாக அமைந்தது. உண்மையில் கலைகளில் ஈடுபாடு இருப்பவர்கள், அவ்வித ஈடுபாடுள்ளவர்கள் அதிர்ஷடசாலிகள், அவ்வித ஈடுபாடு வாய்க்கப் பெறாதவர்கள் தான் தம் கவலைகளைப் போக்கச் சாராயத் தவறணைகளையும், கள்ளுக் கொட்டில்களையும் தஞ்சமடைய வேண்டியிருக்கிறது.

ஸ்ரீதர் அன்றிரவும் அடுத்த நாட் பகலும் நாடக வசனங்களைப் பேசிப் பார்ப்பதிலும், “ஈடிப்பஸ்” பாத்திரத்தை நடித்துப் பார்ப்பதிலும், இடையிடையே மோகனாவின் பூர்த்தி பெறாத ஓவியத்திற்கு வர்ணம் தீட்டுவதிலும் காலத்தைச் செலவிட்டான். இவற்றில் மூலம் மனத்தை மனத்தைத் தன்னாலியன்ற அளவு கலகலப்பாக வைத்துக் கொண்டதால் ‘ஈடிப்பஸ்’ நாடகம் அடுத்த நாள் எவ்விதத்திலும் சோடை போகாது சோபித்தது. உண்மையில், அவன் அரங்குள் நுழைந்த போது ஸ்ரீதர் மறைந்து விட்டான். தெபேஸ் நகரத்தின் மாமன்னான ஈடிப்பஸ் கிரேக்க நாடகாசிரியன் சொபோக்கிளியின் கற்பனையில் இருந்து அங்கரங்கில் நேரே வந்து, குதித்து வந்துவிட்டான்!

நாடகத்துக்கு யாழ்ப்பாண நகரத்திலிருந்தும், சுற்று வட்டார கிராமங்களிருந்தும் ஏராளமான கலா ரசிகர்கள் வந்திருந்தனர். சிவநேசர் தம் தலைப்பாகையுடன் ஆடம்பரமாக உடையணிந்து முன் வரிசையில் வீற்றிருந்தார். அவருக்குப் பக்கத்தில் பாக்கியம். அவர்களுக்கு ஒரு புறம் யாழ்ப்பாண அரசாங்க அதிபரும் மறுபுறம் கல்லூரித் தலைமை ஆசிரியரும் வீற்றிருந்தார்கள். அரசாங்க அதிபருக்கு அடுத்த ஆசனத்தில் சுழிபுரம் கந்தப்பசேகரரும் டாக்டர் அமுதாவும் அமர்ந்திருந்தனர்.

அரசாங்க அதிபர் கூறிய ஒரு குறிப்புக்குப் பதிலாக, சிவநேசர் கிரேக்க நாடகத்தில் சொபோக்கிளின், “ஈடிப்ப”சுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை எடுத்து விளக்கினார். பறங்கியரான அரசாங்க அதிபர் சிவநேசரது அறிவின் பரப்பைக் கண்டு வியப்படைந்தார்.

ஸ்ரீதர் நாடகத்தில் தன் முழுத் திறமையையும் காட்டி நடித்தான். திரை நீக்கியதும் சிவநேசரும் பாக்கியமும் மிகுந்த வேஷப் பொருத்தத்தோடு விளங்கிய தமது மகனை முதலில் அடையாளம் காண முடியாது திக்குமுக்காடி விட்டார்கள். பாக்கியம் சிவநேசரை நோக்கிச் சிறிது வளைந்து “உங்களைத்தானே, இராசா வேஷத்தில் இருப்பது ஸ்ரீதர் தானே? பார்த்தீர்களா? நல்ல வேஷப் பொருத்தம்.” என்று கூறினாள். கந்தப்பசேகரர் அமுதாவிடம் “பார்த்தாயா ஸ்ரீதரை? வேஷப் பொருத்தம் மிக நன்றாயிருக்கிறாரல்லவா” என்றார். “இதோ ஈடிப்பஸ் வேஷத்தில் இருக்கிறானே, அவன் தான் நமது சிவநேசரின் மகன். ஸ்ரீதர் என்று பெயர்.” என்று சிவநேசர் காதில் நன்கு கேட்கும்படியாக அரசாங்க அதிபரிடம் சொல்லி வைத்தார். சிவநேசருக்கு அதைக் கேட்டு எல்லையற்ற மகிழ்ச்சி.

கொழும்பில் போலவே ஸ்ரீதர் ஈடிப்பஸ் மன்னன் தன் கண்களைத் தானே பறிக்கும் காட்சியில் மிகவும் அற்புதமாக நடித்தான். மேடை மீது மின்சார ஒளி வட்டத்தில் நின்று கொண்டு, கூரிய ஒரு கருவியைக் கையிலேந்திப் பொருத்தமான வசனங்களைப் பேசிக் கொண்டு ஈடிப்பஸ் மன்னன் கண்களைக் குத்திக் கபோதியாகும் அக்காட்சி சபையோரை உணர்ச்சிக் கடலில் ஆழ்ந்திவிட்டது. ஒரு சிலர் “ஐயோ பாவி” என்று கதறி விட்டார்கள். பாக்கியம் நடுங்கிப் போய்விட்டாள். டாக்டர் அமுதா திக்பிரமை பிடித்து வீற்றிருந்தாள். சிவநேசரோ, “உண்மையில் ஸ்ரீதர் உயர்ந்த நடிகன் தான். சென்ற தடவை இந் நாடகம் கொழும்பில் அரங்கேறிய போது அது பற்றிப் பத்திரிகைகள் எழுதியவை உண்மைதான்.” என்று தனக்குள் தானே மெச்சிக் கொண்டார். கண்களிலிருந்து கொட கொடவென்று செவ்விரத்தம் பீறிப் பாய ஸ்ரீதர் மேடையில் தோன்றிய காட்சியைக் கண்டு பாக்கியம் அவன் உண்மையாகவே கண்களைக் குத்திக் கொண்டு விட்டானோ என்று அஞ்சிவிட்டாள். தாயுள்ளத்தில் தவிப்போடு, சிவநேசரின் கோட்டை இருட்டிலே பற்றிக் கொண்டாள் அவள்.

நாடகம் முடிந்ததும் அரசாங்க அதிபர் உட்பட நகரப் பிரமுகர்கள் பலரும் திரைக்குப் பின்னால் சென்று ஸ்ரீதரைப் பாராட்டினார்கள். கந்தப்பசேகரரும் டாக்டர் அமுதாவும் ஸ்ரீதரைப் போய்க் கண்டார்கள். டாக்டர் அமுதாவோ நாணத்தால் அதிக வசனங்கள் பேசவில்லை. அவன் முகத்தின் அழகைத் தன் கண்களால் விழுங்கிய வண்ணம் “உங்கள் நடிப்பு அற்புதம்” என்று மட்டும் கூறி வைத்தாள். கல்லூரித் தலைமை ஆசிரியர், ஸ்ரீதருக்குக் கல்லூரியின் சார்பில் ஒரு மலர் மாலையைச் சூட்டி விட்டு, சிவநேசரிடம் “உங்கள் மகனைப் பற்றி நீங்கள் பெருமைப்படலாம். இப்படிப்பட்ட மகனைப் பெற நீங்கள் என்ன தவம் செய்தீர்களோ” என்று கூறினார். சிவநேசர் இலேசாகப் புன்னகை செய்தார். பாக்கியமோ ஸ்ரீதரைத் தனியே கண்டு “உன் கண்ணுக்கொன்றும் கெடுதியில்லையே? நான் பயந்து போய்விட்டேன். இனிமேல் நீ இப்படிப்பட்ட பயங்கரமான நாடகங்களில் நடிக்கக் கூடாது” என்றாள். ஸ்ரீதர் “உனக்குப் பயங் காட்டத்தான் அப்படி நடித்தேன். பயப்பட மாட்டேன் என்று சொன்னாயே. பார்த்தாயா, தோற்றுவிட்டாய்.” என்று கூறினான். பாக்கியம் அவன் முதுகை வாஞ்சையோடு தடவி இரகசியமாக, “அமுதாவைப் பார்த்தாயா, அழகாயிருக்கிறாளல்லவா? உன் நாடகத்தை அவள் மிகவும் இரசித்தாள்" என்று சொன்னாள். ஸ்ரீதர் “போ அம்மா அதைப் பற்றி இப்பொழுது பேசாதே. என் மனம் குழம்பிப் போய்விடும்.” என்று கூறினான். இவ்வாறு சொல்லும் போதே திடீரெனச் சந்திரனை மறைக்கும் மேகங்கள் போல அவன் முகத்தைக் கவலை மேகங்கள் மறைத்தன. பாக்கியத்துக்கு அதைப் பார்த்ததும் “ஏன் அதைப் பேசினேன்” என்று எண்ணத் தோன்றிவிட்டது. “சரி வருகிறேன் ஸ்ரீதர். நீ உன் வேலைகளை முடித்துக் கொண்டு அப்புறம் தானே வருவாய்? அதிக நேரம் செல்லாது வந்து விடு” என்று கூறிப் புறப்பட்டாள்.

காரின் பின்னாசனத்தில் சுங்கானைப் பிடித்துக் கொண்டு பாக்கியத்துக்குப் பக்கத்தில் சாய்ந்து கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்த சிவநேசரின் மனதில் ஸ்ரீதரின் எதிர்காலம் பற்றிய சித்திரங்கள் ஒன்றன் பின்னொன்றாக வந்து கொண்டிருந்தன. “ஸ்ரீதரைப் போல் ஒரு மகனைப் பெற நீங்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்?” என்று தலைமை ஆசிரியரின் சொற்கள் அவர் மனதிற்கு ஓர் இன்பப் போதையைக் கொடுத்திருந்தது உண்மைதான். “மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொள் என்னும் சொல்” என்ற வள்ளுவர் வாக்கு என் விஷயத்தில் அனுபவ வார்த்தையே. நாடகத்தில் நன்றாய் நடித்தான் என்பதால் மட்டுமல்ல, எல்லா விஷயத்திலும் ஸ்ரீதர் சிறந்தவன்தான். ஆனால் அவன் திருமண விஷயம்? அது எப்படி முடியப் போகிறதோ?” என்று எண்ணிக் கொண்டே பாக்கியத்திடம், “பாக்கியம், ஸ்ரீதரிடம் அமுதாவை பற்றிப் பேசினாயா நீ?” என்று கேட்டார்.

“பேசினேன். அவனுக்கு அது பிடித்தமே இல்லை” என்றாள் அவள்.

“அப்படியானால் மொட்டைக் கடிதத்தில் சொன்ன பத்மாவைத்தான் உள்ளம் நாடுகிறது போலும்?”

“ஆமாம். அவன் இன்பமாக வாழ வேண்டுமென்றால், அதுதான் அவனுக்கேற்ற திருமணம்.”

“என்ன? பைத்தியக்காரி மாதிரிப் பேசுகிறாய்? எங்கள் அந்தஸ்தென்ன? அந்த வாத்தியார் அந்தஸ்தென்ன? அதிகார் அம்பலவாணன் போன்றவர்கள் சிரிப்பார்கள். உலகமே சிரிக்கும். நடக்கிற காரியமாகப் பேசு. மடத்தனமாகப் பேசாதே.”

பாக்கியம் தான் பத்மாவுக்குப் பரிந்து பேசினால் என்ன பதில் கிடைக்குமென்று எதிர்பார்த்தாளோ அதே பதில் தான். எதிர்பார்த்ததை விட இன்னும் சற்றுக் காரசாரமாகவே கிடைத்தைக் கண்டு மேலே பேச அறியாது அடங்கிவிட்டாள்.

“ஸ்ரீதரின் மனதை நாம் மாற்ற வேண்டும். என் தவத்தால் பிறந்த மகனென்று இன்று இந்துக் கல்லூரியின் தலைமை ஆசிரியர் அவனைப் பாராட்டினார். அப்படிப்பட்ட மகனை நான் குப்பைமேட்டில் வீசிவிட முடியுமா? ஒரு போதும் நான் அவனை அந்தஸ்தற்ற இடத்தில் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க மாட்டேன். சிங்கம் சிங்கத்தோடுதான் தொடர்பு கொள்ள வேண்டும். நரியோடு தொடர்பு கொள்ள விட மாட்டேன். அமராவதி வளவு சீரழிய நான் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன்.”

“ஆனால் அவன் அதைக் கேட்காவிட்டால்...”

"கேட்க வைக்க வேண்டும்"

“அவன் தனக்கு டாக்டர் பெண்ணை பிடிக்காது என்றான். அப்படியானால் அமுதா டாக்டர் வேலையிலிருந்து விலகி விட்டால் போகிறதென்றேன். அதற்குத் தனக்கு அமுதாவைப் பிடிக்கவில்லை என்கிறான். பத்மாவைப் பற்றிச் சொல்லி “அவள் மிகவும் நல்லவள். நீ அவளை ஒரு தரம் சந்தித்துப் பேசினல் நிச்சயம் உனக்கு அவளைப் பிடிக்கும்’ என்று கூறுகிறான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாளைக்கு அவனிடம் நீங்களே இது பற்றிப் பேசினால் என்ன?”

“பேசத்தான் போகிறேன்.”

அன்றிரவு ஸ்ரீதர் வீட்டுக்கு வந்தபோது இரவு ஒரு மணிக்கு மேலாகிவிட்டது. தாய் பாக்கியம் கண் விழித்திருந்து அவனுக்கு உணவு பரிமாறினாள். இன்னும் கலங்கிப் போயிருந்த அவனுக்கு உற்சாகமளிப்பதற்காக நாடகத்தை மிகவும் சிலாகித்துப் பேசினாள். தந்தை சிவநேசரும் நாடகத்தை பெரிதும் இரசித்ததாகக் கூறினாள் அவள். என்னதான் கவலை இருந்தாலும் அம்மாவின் பாராட்டுரைகள் அவனுக்கு இன்பத்தை அளிக்கவே செய்தன.

அடுத்த நாள் அவன் நித்திரை விட்டெழுந்த போது காலை ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது. தாய் அவனுக்குப் பிரியமான முறையில் தோசை செய்து வைத்திருந்தாள். அதனை உண்டு கொண்டே தாயிடம் “அம்மா, என் கண்களில் அடிக்கடி கண்ணீர் வருகிறது. இன்னும் பார்வை கூட முன்போல் தெளிவாக இல்லை.” என்று கூறினான். பாக்கியம் அவன் முகத்தைக் கைகளால் நிமிர்த்திக் கண்களைப் பார்த்து விட்டு “அப்படியானால் நல்ல டாக்டரிடம் காட்ட வேண்டும். அப்பாவிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன்.” என்றாள்.

சாப்பிட்டு முடித்ததும் மோகனாவின் படத்தைப் பூர்த்தி செய்வதற்காகத் தன் அறைக்குப் போய்விட்டான் ஸ்ரீதர். அங்கே ஜன்னலடியில் ஓவியமெழுதும் ஸ்டான்டுக்கு முன்னால் ஒரு முக்காலியில் உட்கார்ந்துகொண்டு படமெழுத ஆரம்பித்தான். மோகனாவோ கூண்டுக்குள்ளிருந்தபடி “ஸ்ரீதர் ஸ்ரீதர்” என்று சப்தமிட்டுக் கொண்டுருந்தது

சிறிது நேரம் செல்ல அவன் விறாந்தைக்கு வந்தபோது காரியாலய அறைக்குள்ளிருந்து ஒரு பெண் குரல் அவன் காதுகளில் வீழ்ந்தது. என்ன இது? அவனால் நம்பவே முடியவில்லை. பத்மா எப்படி இங்கே வந்தாள்? என்னிடம் ஒன்றும் சொல்லாமல் அவள் இப்படி வந்திருக்கக் கூடாதே. இதனால் என்ன தொல்லைகள் ஏற்படுமோ என்று எண்ணிக் கொண்டே காரியாலய அறையை நோக்கி நடந்தான். அவன் நெஞ்சு திக்திக்கென்றது.

ஆனால் காரியாலய அறைக்குள் அவன் எதிர்பார்த்தது போலப் பத்மாவைக் காணவில்லை. வேறு ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். பத்மாவைப் போல் அவளும் ஓர் அழகிதான். அவளது குரலைத்தான் அவன் கேட்டான். ஆம் பத்மாவின் குரலுக்கும் சிறிது வித்தியாசம். இல்லை. என்ன ஆச்சரியமான குரலொற்றுமை என்று அதிசயித்தான் அவன்.

காரியாலயத்துள் அவன் கண்ட பெண் கிளாக்கர் நன்னித்தம்பியோடு உரையாடிக் கொண்டிருந்தாள். “வேண்டாமப்பா, எனக்கு வாத்தியார் வேலை பிடித்தமே இல்லை. வேறு வேலை ஏதாவது பார்த்தாலென்ன?” என்றாள் அவள்.

“பெண்களுக்கு இதர உத்தியோகங்களிலும் பார்க்க வாத்தியார் வேலைதான் நல்லது. அதுவும் கிடைக்கிறதோ என்னவோ? எதற்கும் ஐயா உன்னைக் கூட்டி வரச் சொன்னார். உனக்கு வேண்டியதை அவரோடு பேசிக் கொள். பயப்படாதே. பார்ப்பதற்குத்தான் கர்வி மாதிரித் தெரியுமே ஒழிய, அவரைப் போல நல்லவர் கிடைக்க மாட்டார்கள் சுசீலா” என்றார் நன்னித்தம்பி.

ஓ! இதுதான் நேற்று முன்தினம் நன்னித்தம்பி கூறிய அவரது மகள் சுசீலாவோ? சரி தான். குரலைக் கேட்டு எவ்வளவு பதறிவிட்டேன்? பத்மாவின் குரல் போலவே இவள் குரலிருக்கிறதே - என்று எண்ணிக் கொண்டே ஸ்ரீதர் “இது தான் உன் மகள் சுசீலாவோ? பீ.எ.பாஸ் பண்ணி விட்டாள் என்றாயே, அவள்தானா இது?" என்றான் நன்னித்தம்பியைப் பார்த்து.

நன்னித்தம்பி “ஆம் தம்பி” என்று கூறியதும் ஸ்ரீதர் அவனைப் பார்த்துப் சுமூகமாகப் புன்னகை பூத்து விட்டு நான் வருகிறேன். உன் மகள் பீ.ஏ. பாஸ் பண்ணி விட்டாள். நான் அடுத்த வருஷம் பாஸ் பண்ணி விடுவேன் பார். என்றாலும் உன் மகள் கெட்டிக்காரி. என்னிலும் பார்க்க வயது குறைந்தவள் போல் தெரிகிறது. இருந்தாலும் எனக்கு முன்னரே பீ. ஏ. பாஸ் பண்ணி விட்டானே” என்றான்.

அதற்கு நன்னித்தம்பி சிரித்துக் கொண்டு, “ஆம் தம்பி, சுசீலா உன்னிலும் பார்க்க இரண்டு வயது குறைந்தவள் தான்” என்று கூறினார். “பரவாயில்லை. என் வயதை ஈடு செய்யத்தான் அடுத்த வருடம் முதலாம் வகுப்பில் பாஸ் செய்கிறேன் பார். சுசீலா சாதாரண பாஸ் தானே பெற்றிருக்கிறாள்?” என்றான் ஸ்ரீதர்.

அதற்குச் சுசீலா “யார் சொன்னது நான் சாதாரண பாஸ் பெற்றேனென்று? நானும் முதலாம் வகுப்பில்தான் பாஸ் பண்ணியிருக்கிறேன்” என்றாள். நன்னித்தம்பி சிரித்தார்.

ஸ்ரீதர் “ஓ அப்படியா? அப்படியானால் நான் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்” என்றான்.

நன்னித்தம்பி ஸ்ரீதரைப் பார்த்து “சுசீலா என்னதான் பாஸ் பண்ணினாலென்ன? உங்களுக்கிருக்கும் அறிவில் பாதி அவளுக்கு இல்லை” என்றார். சுசீலா அதனை இடைமறித்து “நீங்கள் அப்பாவை நம்பாதீர்கள். அவர் பெண்களைப் பற்றி எப்பொழுதும் குறைவாகத்தான் பேசுவார். என்னை பொறுத்தவரையில் என் படிப்புக்கு ஏற்ற அறிவு இருக்கத்தான் இருக்கிறது” என்றாள்.

ஸ்ரீதருக்கு அவளது சாதுரியமான பேச்சு இன்பத்தை அளித்தது. “நன்னித்தம்பி. உன் மகள் நன்றாக வாதிடுகிறாள். அவள் அட்வகேட்டாவகப் படிக்க வை” என்று கூறி அங்கிருந்து கிளம்பி விட்டான். தந்தை சிவநேசர் காரியாலயத்தை நோக்கி வந்து கொண்டிருந்ததே அவள் அவ்வாறு நழுவுவதற்குக் காரணம்.

சிவநேசர் சுசீலாவை மெச்சிப் பாராட்டினார். அவள் பீ.ஏ. பாஸ் பண்ணியதில் தமக்கேற்பட்ட மகிழ்ச்சியைத் தெரிவிக்க ரூபா முந்நூறைக் காரியாலயத்திலிருந்த இரும்புப்  பெட்டியைத்  திறந்து தாமே தம் கையால் எடுத்து அவளுக்குப்  பரிசாக அளித்தார் அவர். “இந்தப் பணம் உனக்கு. அப்பாவுக்குக்கொடுத்து விடாதே. உனக்கு விருப்பமான விதத்தில் செலவழி.” என்று வாஞ்சையோடு கூறினார் அவர்.

அன்று பிற்பகல் ஐந்து மணியளவில் சிவநேசர் ஸ்ரீதரை விறாந்தையில் தம் அருகே உட்கார வைத்துப் பேசினார்.

“நாளை நீ பெண் பார்க்கப் போக வேண்டும். மாலை நாலு மணிக்கு இங்கிருந்து சுழிபுரம் போகத் தயாராயிரு. அம்மாவும் நீயும் நானும் சின்னையா பாரதியும் போகிறோம். பாரதி நேரமெல்லாம் பார்த்துவிட்டார். நாளை மிகவும் உத்தமமான நாளாம்” என்றார் சிவநேசர்.

ஸ்ரீதர் திடுக்கிட்டு விட்டான். என்ன சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. இருந்தாலும் வெள்ளம் தலைக்கு மேலே போய் விடும் என்ற நிலை ஏற்பட்டு விட்டதால் எல்லாவற்றையும் வெளியாகப் பேசித் தீர்த்துவிடுவதென்று தீர்மானித்துவிட்டான் அவன்.

“எனக்கு அமுதாவைக் கல்யாணம் செய்ய இஷ்டமில்லை.”

“ஏன்?”

“நான் கொழும்பில் வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்யத் தீர்மானித்து விட்டேன்.”

“அம்மா சொன்னாள். ஆனால் அந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.”

“ஏன் அப்பா, அவள் மிகவும் நல்லவள். நீங்கள் கொழும்புக்கு வந்தால் அவளை நான் கிஷ்கிந்தாவுக்கு அழைத்துக் கொண்டு வருகிறேன். உங்களுக்கு மிகவும் பிடிக்குமப்பா.”

“கல்யாணப் பெண் நல்லவளா அல்லவா என்பதல்ல முக்கியம் ஸ்ரீதர். உனது நிலைக்கு ஏற்ப பெண்ணை நீ கட்ட வேண்டும். அமுதாவும் நல்லவள்தான். அத்துடன் சகல விதத்திலும் எங்கள் குடும்ப அந்தஸ்துக்கு ஏற்றவள் அவள்.”

“எனக்கு இந்த அந்தஸ்து என்பதில் நம்பிக்கையே இல்லை. ஏன், நீங்கள் கூட “எமது சமுதாயப் பிரச்சினைகள்” என்ற நூலில் கலப்புத் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்று எழுதியிருக்கிறீர்களல்லவா?” பத்மாவின் தகப்பனார் பரமானந்தர் கூட அந்த நூலின் பிரதி ஒன்றை வைத்திருக்கிறார். அந்த நூலைப் படித்ததன் காரணமாக அவர் இந்தத் திருமணத்திற்குக் கட்டாயம் உங்கள் ஆசி கிடைக்குமென்று நம்புகிறார், அப்பா.”

சிவநேசர் ஒரு கணம் மெளனமானார். எதிர்பாராத இவ்வார்த்தைகள் அவரை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டன. இருந்தும் சமாளித்துக் கொண்டு, உண்மைதான். ஒரு காலத்தில் அக்கொள்கைகளை நான் நம்பியதுண்டுதான். ஆனால் அவை கூடச் சாதாரண பொதுமக்கள் தம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நான் கூறிய ஆலோசனைகளேயல்லாமல் என்னையோ உன்னையோ போன்றவர்களுக்குக் கூறப்பட்ட ஆலோசனைகளேயல்ல. பரம்பரைச் செல்வாக்குடன் உள்ள நாம் உண்மையில் ஆட்சி செய்யப் பிறந்தவர்கள். அப்படிப்பட்ட எங்களுக்கு நீ சொல்லும் வாத்தியார் போன்றவர்களுடன் எந்தவிதமான உறவும் இவ்வுலகில் சாத்தியமில்லை” என்றார்.

"இதை நீங்கள் மனதார நம்பிக் கூறுகிறீர்களா? என்னைப் பொறுத்தவரையில் நான் மனித சமத்துவத்தை நம்புகிறேன். மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள். இதில் அந்தஸ்துக் கூடியவர் குறைத்தவர் என்று யாருமே இல்லை.”

“நீ எனக்குப் பரிசாகக் கொண்டு வந்தாயே நீட்சேயின் நூல்கள்? - அந்த நீட்சே மனிதர்கள் சமமென்ற கொள்கையை அங்கீகரிக்கவில்லை. உலகில் ஒருவர் ஆளவும் மற்றும் சிலர் அவர்களுக்குப் பணி செய்யவும் பிறந்திருக்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் இதுவரை நான் கண்டவர்களெல்லாம் ஆளப் பிறந்தவர்கள் தான். நீயும் ஆளப் பிறந்தவன் தான். உன்னைப் பார்த்தவர்கள் உன் தோற்றத்தைக் கொண்டே அதைப் பளிச்சென்று சொல்லிவிடுவார்கள். நீ ஆள வேண்டுமென்ற விருப்பத்தில் நான் தான் உன் ஆசைக்குத் தடையாய் நிற்கிறேன். நீட்சே கருத்துகள் மட்டுமல்ல, இந்துக்களின் மனுதர்மம் கூட அந்த அடிப்படையில் தான் எழுந்தது. ஆளப்பிறந்தவனை அன்று ஷைத்திரியன் என்றார்கள். இன்று அவனுக்கு அவ்விதம் பெயரளிக்கப்படாவிட்டாலும், ஆளப் பிறந்தவன் தன் நடவடிக்கைகள் மூலம் தான் யார் எனபதைக் காட்டி விடுகிறான். என்னைப் பொறுத்தவரையில் உலகில் சமத்துவம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது இயற்கைக்கு விநோதமான கொள்கை.”

"எப்படி?”

“இயற்கையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சமத்துவமாயிருப்பதை நீ எப்போதாவது கண்டிருக்கிறாயா? ஒரு மனிதன் குட்டை, மற்றவன் நெட்டை, ஒரு மனிதன் நூற்றைம்பது இறாத்தல், மற்றவன் நூற்றைம்பத்தைந்து இறாத்தல், ஒருவன் சிவப்பு, மற்றவன் கறுப்பு, ஒருவன் புத்திசாலி, மற்றவன் மடையன். உலகில் ஒருவருக்கொருவர் சமமான மனிதர் இல்லவே இல்லை. சமத்துவம் பேசுவபர்கள் உண்மையில் பொய் பேசுகிறார்கள்.”

சிவநேசர் தமது அந்தஸ்து வெறிக்கு ஒரு தத்துவ உருவமே கொடுத்து விட்டதைக் கண்டு ஸ்ரீதர் திகைத்தான். “நீட்சேயின் புத்தகங்களை நீங்கள் வாசிப்பது இதற்குத் தானா” என்றான் அவன்.

“தத்துவ தரிசர்களில் நீட்சே ஒருவன் தான் உண்மையை அப்படியே எடுத்துக் கூறியவன்.”

ஸ்ரீதருக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. நிறையக் கற்ற தந்தயாருடன், தத்துவ விசாரணை நூல்களை எழுதும் படிப்பாளியான தந்தையாருடன் தன்னால் வாதாடி வெற்றி பெற முடியாது என்றே அவனுக்குப் பட்டது. ஆகவே ஒன்றும் பேசாது மெளனமாகினான்.

பாக்கியம் தந்தையும் மகனும் பேசிக் கொண்டிருபதைத் தூரத்திலிருந்து பார்துவிட்டு இப்பேச்சுகளின் முடிவு என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு நேர்த்திக் கடன் வைத்தாள். ஸ்ரீதர் மகிழும்படி விஷயங்கள் முடிந்தால் அவனைக் கொண்டு கந்தனுக்குக் காவடி எடுப்பேன் என்று கூறிக் கொண்டாள் அவள்.

சிவநேசர் திடீரெனத் தம் ஆசனத்தை விட்டெழுந்தார். பின் தமது அறைக்குள் சென்று சில விநாடி நேரத்தில் வெளியே வந்தார் அவர்.

“ஸ்ரீதர், என்னுடன் வா. யாருக்கும் தெரியாத ஒரு குடும்ப இரகசியத்தை உனக்குக் காண்பிக்கப் போகிறேன். உன் அம்மாவுக்கும் தெரியாத இரகசியம். அந்த இரகசியத்தைப் பெண்களால் தாங்கிக் கொள்ள முடியாது. உன்னாலும் தாங்கா முடியுமோ என்னவோ? அதை நான் இவ்வளவு விரைவில் உனக்குச் சொல்ல வேண்டி வரும் என்று ஒரு போதும் நினைத்ததேயில்லை. இப்பொழுது அதைச் சொல்லியாவது உன்னை மாற்றமுடியுமா என்ற எண்ணத்தில் அதைச் சொல்ல முற்படுகிறேன். வா என்னோடு.”

சிவநேசர் அமராவது வளவின் காடாய்க் கிடந்த பகுதியை நோக்கி நடந்தார்.  அங்கே இலந்தை மரம், விளாமரங்களுக்கு அப்பால ஒரு நாவல் மரமும்,  சூரை மரமும் இருந்தன.  முள்ளும்  செத்தையுமாய்க்  கிடந்த  அப்பிரதேசத்தில்  ஓணான்கள்  சரசரவென்று ஒலி  கிளப்பி ஓடிக்கொண்டிருந்தன. அணில்கள்  சில நாவல் மரத்தில் ஏறுவதும், இறங்குவதுமாயிருந்தன.   'அப்பா எங்கே போகிறார்?' என்று எண்ணிக்கொண்டே ஸ்ரீதர் அவர் பின்னால் மெளனமாகச் சென்றான்.

பாக்கியம் ஒன்றும் விளங்காது  அவர்கள் போன திசையைப்  பார்த்துக்கொண்டு நின்றாள்.

சிவநேசர்  சூரை மரத்துக்குச் சிறிது தொலைவில் வளவைச் சூழ இருந்த மதிலுக்கு அருகாமையில் செத்தைகளுள் மறைந்து கிடந்த ஒரு சிறிய நடுக்கல்லை ஸ்ரீதருக்குச் சுட்டிக் காட்டினார்.

“ஸ்ரீதர், இக்கல் எதற்காக அங்கே நடப்பட்டிருக்கிறது என்று தெரியுமா?” என்று கேட்டார் அவர்.

"அது ஒரு பழைய எல்லைக் கல்லு. அப்படித்தான் அம்மாவும் வேலைக்காரி தெய்வானையும் எனக்குக் கூறியிருக்கிறார்கள்.”

“இல்லை. அது எல்லைக் கல்லல்ல. அவர்களுக்குக் கூட அது ஏன் அங்கு நடப்பட்டதென்று தெரியாது.”

“அப்படியானால்?”

“நீ பிறப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவத்தின் ஞாபகக் கல் அது. ஆம் அது எனது தங்கை விசாலாட்சியின் நடுக்கல். உனது மாமியின் நடுக்கல். அவள் மட்டும் புத்திசாலியாயிருந்திருந்தால் நீ இன்று கந்தப்பசேகரர் மகள் அமுதாவைக் கல்யாணம் செய்யும் பேச்சே ஏற்பட்டிருக்காது. அவள் மகளை, உன் மைத்துனியை நீ கல்யாணம் செய்திருக்கலாம்.”

ஸ்ரீதர் இச் செய்தியை கேட்டு நடு நடுங்கிவிட்டான்.

“இந்நடுக்கல்லுக்குக் கீழே விசாலாட்சியின் சடலம் இப்பொழுது எலும்புக் கூடாகக் கிடக்கிறது. அவளும் உன்னைப் போலத்தான். அழகாயிருப்பாள். குணமானவள். திறமையானவள். எல்லோரும் அவளை மனதார விரும்பினார்கள். ஆனால் பிடிவாதக்காரி. தனது அந்தஸ்தைப்பற்றி எண்ணாதவள். உள்ளூர் வைத்தியர் ஒருவரின் மகனைத் திருமணம் செய்வேனென்று பிடிவாதம் பிடித்தாள் அவள். அப்பா அதைத் தடுக்க எவ்வளவோ முயற்சி எடுத்தார். வேறு கல்யாணம் பேசினார். ஒன்றையும் அவள் ஏற்கவில்லை. கடைசியில் ஒரு நாள் வைத்தியர் மகனோடு ஓடி விட்டாள் அவள். இதனால் ஆத்திரமடைந்த அப்பா அவளை எப்படியோ பிடித்து வந்து விட்டார். கொதிப்படைந்த அவர் அவளை இங்கே தன் கையாலேயே கொன்று புதைத்தார். அவள் நினைவுதான் இந்த நடுக் கல். சாகும் வரைக்கும் எங்கள் அப்பா தினசரி இவ்விடத்துக்கு வரத் தவறியதில்லை. தனது சொல்லைக் கேட்காத அன்பு மகளுக்காக அவர் ஒரு நாளாவது இங்கே கண்ணீர் விடத் தவறியதில்லை.”

கதையைக் கேட்டு வந்த ஸ்ரீதர் “பொலீசார் அவரை ஒன்றும் செய்யவில்லையா?” என்று கேட்டான்.

சிவநேசர் “போலீசார்! சக்தி வாய்ந்த மனிதர்கள் அப்படிப்பட்ட சிறிய பிரச்சினைகளை இலகுவாகச் சமாளித்துக் கொள்வார்கள். ஓடியவள் ஓடியவள் தான். திரும்பி வரவில்லை என்று உலகத்தை நம்ப வைத்துவிட்டார் உன் பாட்டனார்.” என்றார்.

ஸ்ரீதர் “இந்த கதையை இப்பொழுது நீங்கள் எனக்குக் கூறுவதற்கு என்ன காரணம் அப்பா? எனது பிரச்சினைக்கும் அதே முடிவைக் காண்பது உங்கள் நோக்கமா? என்னைப் பொறுத்த வரையில் அவ்வித முடிவை நான் வரவேற்கிறேன். மாமியை அப்பா கொன்றது போல் என்னையும் நீங்கள் உங்கள் கையால் கொன்று பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.” என்றான்.

சிவநேசர், “ ஆம். அது இலகுவான ஒரு முடிவுதான். ஆனால் எனது அப்பாவுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம். விசாலாட்சி இறந்த பின்னரும் நான் அவருக்கு மிஞ்சினேன். ஆனாலெனக்கு இருப்பது ஒரேயோர் அன்பு மகன். அவன் போனால் “அமராவதி” வளவே அழிந்து விடும். அதற்கு நான் இடமளிக்க மாட்டேன். இன்னும் அப்பா விசாலாட்சி மீது செலுத்திய அன்பை விட நான் உன் மீது செலுத்தும் அன்பு மிக மிக அதிகம். ஸ்ரீதர்! நீ இறந்த பின் நான் இவ்வுலகில் இருக்க மாட்டேன். உன்னைப் பிரிந்து, என்னால் வாழ முடியாது. நானும் தற்கொலை செய்து கொள்ளுவேன். அவ்விதம் நேரிட்டால் பாக்கியமும் என்ன செய்வாளோ? அதனால்தான் நீ சொல்லும் அந்த இலகுவான முடிவை என்னால் அமுல் நடத்த முடியாதிருக்கிறது ஸ்ரீதர்.” என்றார்.

ஸ்ரீதர் சிவநேசர் கூறியதைத் திக்பிரமை பிடித்தவள் போல் கேட்டுக் கொண்டிருந்தான். இரு விநாடிகளின் மெளனத்துக்குப் பிறகு, சிவநேசர் மீண்டும் பேசினார். பேசிக்கொண்டே தம் சட்டைப் பையிலிருந்த கைத் துப்பாக்கி ஒன்றை வெளியே எடுத்தார் அவர்.

“ஸ்ரீதர், ஆனால் இப்பிரச்சினையை வேறு விதமாகவும் தீர்த்துக் கொள்ளலாம். நீ விரும்பிய அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு நீ வாழ வேண்டுமானால் இதோ இந்தத் துப்பாக்கியை உன் கையில் எடுத்துக் கொள். என்னைச் சுடு. அதன் பின் உன் இஷ்டப் படி நீ நடந்து கொள்ளலாம். எங்கள் பிரச்சினைக்கு அதுதான் நல்ல முடிவு. இதோ துப்பாக்கியைப் பிடி.”

ஸ்ரீதர் கலங்கிப் போய்விட்டான். “அப்பா என்ன சொல்கிறீர்கள்?” என்று கூறும் போதே அவன் கண்கள் கலங்கிக் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தன. நிலத்தை நோக்கிய வண்ணம் தன் உதடுகளைத் தன் பற்களால் கடித்துக் கொண்டான் அவன்.

“ஆம். என்னால் உன்னைச் சுட முடியாது. ஆனால் உன்னால் என்னைச் சுட முடியுமென்றே நினைக்கிறேன். இதோ தைரியமாக முயன்று பார். துப்பாக்கியைப் பிடி.”

சிவநேசர் அவனை வற்புறுத்தினார்.

“அப்பா இதென்ன பயங்கரமான பேச்சு? வாருங்கள் நாங்கள் வீட்டுக்குப் போவோம்”

“போவோம். ஆனால் போவதற்கு முன்னர் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இது வரை நீ வாழ்வில் விரும்பியதெல்லாவற்றையும் நான் மறுக்காது கொடுத்திருக்கிறேன். இனியும் அவ்வாறு நடக்க வேண்டுமென்பதே என் எண்ணம். ஆனால் இந்த விஷயத்தில் மட்டும், குடும்ப அந்தஸ்து என்ற ஒரு விஷயத்தில் மட்டும் என்னால் விட்டுக் கொடுக்க முடியாமல் இருக்கிறது. அது என் உயிரோடு சேர்ந்த கொள்கையாகி விடுகிறது. நான் என்ன செய்வேன்? குடும்ப அந்தஸ்துக்குக் கெடுதி ஏற்படும் வகையில் நடப்பதில்லை என்று உறுதி கூறு. நாங்கள் போய் விடலாம்.”

“அப்பா நான் உறுதி கூறுகிறேன். குடும்ப அந்தஸ்துக்குக் கேடு தரும் வகையில் நான் நடக்கவே மாட்டேன்.”

“அப்போது நீ அந்த வாத்தியார் மகளைக் கட்டப் போவதில்லையா?”

"நீங்களே சம்மதித்தாலொழிய நான் பத்மாவைக் கல்யாணம் செய்ய மாட்டேன்.”

“ஸ்ரீதர் நீ நல்லவன்! உன்னைப் போல் பிள்ளை எல்லோருக்கும் கிடைக்க மாட்டார்கள். நீ என் உயிருக்குச் சமானம். ஆனால் பத்மாவை நீ கட்ட நான் சம்மதிப்பதா? அவ்வாறு மட்டும் என் மனதிற்கிருந்தால் நான் நிச்சயம் அதற்கு உடனே சம்மதிப்பேன். ஆனால் அதை நினைத்தாலே எனக்கு அருவருப்பேற்படும்போது, நான் எப்படி அதற்குச் சம்மதிப்பது? இந்த “அமராவதி” வளவு என்னை அப்படி வளர்த்துவிட்டதே”

"ஆனால் ஒன்று....” ஸ்ரீதர் தாழ்ந்த குரலில் ஏதோ சொல்வதற்கு முயன்றான்.

“சொல்லு, என்ன வேண்டுமோ சொல்லு ஸ்ரீதர்.” என்றார் சிவநேசர்.

“நான் உங்கள் எண்னத்துக்குச் சம்மதித்து விட்டேன். ஆனால் ஒரு நிபந்தனை...”

“என்ன நிபந்தனை?” எதை வேண்டுமானாலும் கேள்”

“பத்மாவை நான் உண்மையிலேயே நான் நேசிக்கிறேன். சாவித்திரியைச் சத்தியவான் நேசித்தது போல, அமராவதியை அம்பிகாபதி நேசித்தது போல நான் அவளை நேசிக்கிறேன். அவளைத் தவிர வேறொருத்திக்கு என் மனதில் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். அது மட்டும் நிச்சயம். ஆகவே என்னால் ஒருபோதும் அமுதாவைத் திருமனம் செய்ய முடியாது. என்னை என் போக்கில் விட்டுவிட வேண்டும். நான் கலியாணம் செய்யாமலே வாழ்வேன், அப்பா.”

"ஸ்ரீதர் நீ போடுவது பயங்கரமான நிபந்தனை. எங்கள் வம்சத்துக்கே முற்றுப்புள்ளி போடும் நிபந்தனை...”

“உங்கள் மனதை மகிழவிக்க நான் அதையும் விட்டுக் கொடுப்பேன் அப்பா. ஆனால் என் செய்வேன், அது என்னால் முடியாத விஷயமாயிருக்கிறதே...”

சிவநேசரின் உள்ளம் துணுக்குற்றது. ஸ்ரீதர் எதற்காகத் தன் உயிரினும் உயிராகப் பேணும் பத்மாவைத் தியாகம் செய்கிறான்? எனக்கு மகிழ்ச்சி தருவதற்காக என்றல்லவா அவன் கூறுகிறான்? ஆனால் நான் அதனால் இப்பொழுது அடைந்து கொண்டிருக்கும் உணர்ச்சி மகிழ்ச்சிதானா? தன்னை அதி மனிதனாகக் கணித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனும் தன் எண்ணத்தை நிலை நாட்டி விட எதையும் செய்யத் தயாராயிருக்கிறான். அவன் அதனால் அடையும் திருப்தி அவனது அகம்பாவத்தினால் பிறக்கிறது. எனது செயல்களும் அகம்பாவத்தில் பிறந்தவைதான். ஆனால் இலட்சிய மனிதனின் அடிப்படைப் பண்பே கர்வம் அல்லது அகம்பாவம் என்னும் அப்பண்புதானே!

சிவநேசருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு “காலம் செல்ல இதிலும் உன் மனம் மாறுதல் அடையலாம். இப்பொழுது நீ போ. இங்கு நடந்ததை அம்மாவிடம் கூடச் சொல்லாதே. முக்கியமாக விசாலாட்சியைப் பற்றிய விஷயத்தைச் சொல்லிவிடாதே. இன்று விசாலாட்சியுமில்லை. அவளைக் கொன்ற என் அப்பாவுமில்லை. அதனால் விஷயம் பொலீசாருக்குத் தெரிந்து எவருக்காவது கஷ்டங்கள் விளையுமென்ற நிலை இல்லாவிட்டாலும், பாக்கியம் இதை அறிந்தால் பயந்துவிடுவாள் என்ற அச்சம் எனக்குண்டு. நீயோ ஆண் பிள்ளை எதையும் தாங்கிக் கொள்ள நீ பயின்று கொள்ள வேண்டும்.”

அன்றிரவு சிவநேசர் தூங்கவே இல்லை. தம் அறையுள் நீண்ட நேரம் குறுக்கும் மறுக்குமாக நடந்துக் கொண்டிருந்த அவர், ஸ்ரீதர் தூங்கி விட்டானா என்று பார்க்க விரும்பினார். மெல்ல அவன் படுக்கை அறையை நோக்கி நடந்தார்.

வளர்பிறையின் வண்ண நிலா அறையின் ஜன்னலூடாக, படுக்கைக்குச் சமீபமாகப் பிரவகித்துக் கொண்டிருக்க, ஸ்ரீதர் ஆழ்ந்த தூக்கத்தில் அமிழ்ந்திருந்தான். ஆம், தூக்கம் என்பது விசித்திரமானது. துக்க நினைவுகளில் ஈடுபட்ட ஒருவரின் கண்களை அது சில சமயங்களில் முற்றாகத் தழுவ மறைந்து விடுகிறது. ஆனால் வேறு சமயங்களில் கவலைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்குத் தூக்கமே சிலருக்கு உறு துனையாகவும் ஆகிவிடுகிறது.

சிவநேசர் சிறிது நேரம் ஸ்ரீதரையே பார்த்துக் கொண்டு நின்றார். தனக்காக அவன் செய்த தியாகத்தை நினைத்ததும் அவரது உளளம் வெதும்பியது. எந்த ஆண் பிள்ளையும் எந்தக் கஷ்டத்திலும் அழவே கூடாது, அழுகை பலவீனத்தின் அறிகுறி என்பதே அவரது சித்தாந்தமாயினும் இருளில் தனியே நின்று தன் மகனைப் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு தன் கண்களில் பீறிட்டு வந்த கண்ணீரைத் தடுக்க முடியவில்லை. “அவனை எவ்வளவு கஷ்டப்படுத்துகிறேன் நான்” என்று எண்ணிய அவர், கன்னத்தின் வழியே கோடிட்டுச் சென்ற கண்ணீர்த் தாரையைத் துடைப்பதற்குக் கூடக் கையை உயர்த்தவில்லை. அக்கண்ணீர் தான் அன்று மாலை ஸ்ரீதரின் ஆசைக் கோட்டைகள். எல்லாவற்றையும் அடியோடு தரை மட்டமாக்கிவிட்ட கொடிய பாவத்துக்குத் தான் செய்ய்யும் பிராயச் சித்தம் போலிருந்தது அவருக்கு.


18-ம் அத்தியாயம்: இருள் சூழ்ந்தது

தொடர்நாவல்: மனக்கண்: 18-ம் அத்தியாயம்: இருள் சூழ்ந்ததுஅடுத்தநாட் காலை ஸ்ரீதர் படுக்கையை விட்டு எழுந்த போது பகல் பதினொரு மணியாகிவிட்டது. சிறிது கண்ணயர்வதும், மீண்டும் மறுபுறமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டு தூங்குவதுமாக நேரம் போய் விட்டது. பாக்கியம் அவனைப் பத்துப் பதினைந்து தடவை வந்து பார்த்துவிட்டுப் போய் விட்டாள். உடலும் மனமும் சேர்ந்து அவன் கட்டிலில் படுத்திருந்த காட்சி அவளுக்கு மிகவும் பரிதாபமாகத் தோன்றியது. பாவம், எவ்வளவு கலகலப்பாக இருக்க வேண்டியவன் இப்படிச் சோர்வுறும்படி ஏற்பட்டுவிட்டதே என்று வாடிப் போய்விட்டாள் அவள். காலையில் சிவநேசர் முதல் நாள் மாலை சூரை மரத்தடியில் தானும் மகனும் செய்து கொண்ட ஏற்பாடுகளைப் பாக்கியத்துக்குச் சுருக்கமாகக் கூறியிருந்தார். அத்துடன் "ஸ்ரீதர் உண்மையில் என் மகன் தான். எங்கள் குடும்ப அந்தஸ்தைத் தான் கெடுக்கப் போவதில்லை என்றும், பத்மாவை, நான் சம்மதித்தாலொழிய தான் திருமணம் செய்ய மாட்டான் என்றும் ஒப்புக் கொண்டுவிட்டான். ஆனால் ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் விதித்திருக்கிறான். தன்னை யாரும் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய வற்புறுத்தக் கூடாது என்பது தான் அது. பத்மாவின் நினைவை மறக்கும் வரை அவனை நாம் இது விஷயத்தில் அவன் போக்கிலே தான் விட வேண்டும். ஆறு மாதமோ ஒரு வருடமோ போன பிறகு, அவன் மன நிலையை அறிந்து மீண்டும் அவன் திருமணப் பேச்சைத் தொடங்கலாம். இப்போதைக்கு நாம் மெளனமாகவே இருக்க வேண்டும். நாட் செல்ல அவன் எங்கள் வழிக்கு வந்தே தீருவான். மேலும் ஸ்ரீதருக்கு என்ன வயதா போய்விட்டது? இன்னும் இருபத்துமூன்று வயதுதானே நடக்கிறது?" என்று கூறினார் அவர்.

"அப்படி என்றால் இன்று பெண் பார்க்கச் சுழிபுரம் போவதாக இருந்த ஏற்பாடு பற்றி என்ன செய்யப் போகிறீர்கள்?" என்றாள் பாக்கியம்.

"இப்பொழுதே டெலிபோன் பண்ணி ஸ்ரீதருக்கு உடம்பு சுகமில்லை. வேறொறு நாள் பார்க்கலாம் என்று கூறிவிட்டால் போகிறது." என்றார் சிவநேசர்.

சொன்ன மாதிரி காலை எட்டு மணிக்கு முன்னரே சுழிபுரத்துக்கு ‘ட்ரங் கோல்’ போட்டு, பெண் பார்க்கும் ஏற்பாட்டை இரத்து செய்து விட்டார் அவர். கந்தப்பசேகரருக்கு இது ஏமாற்றத்தைக் கொடுத்ததாயினும் வேறு வழியில்லாததால் ஒப்புக் கொண்டார்.

பாக்கியத்துக்கு ஸ்ரீதர் காலையில் எழுந்து தேநீரோ கோப்பியோ அருந்தாதது அதிக கவலையைத் தந்தது. ஆகவே ஓரிரு தடவை தாயின் வாத்சல்யத்துடன் அவன் நெற்றியையும் தலை மயிரையும் தன் கைகளால் தடவிவிட்டு "ஸ்ரீதர் ஸ்ரீதர்" என்று மெல்ல அழைத்துப் பார்த்தாள். ஆனால் அவனோ நித்திரையிலிருந்து எழும்புவதாகக் காணோம். எனவே "சரி தூங்கட்டும். தூக்கத்தைக் கலைக்கக் கூடாது" என்று போய் விட்டாள். பின்னர் நேரம் பதினொரு மணியாவதைக் கண்டதும் இனியும் சாப்பிடாமல் பட்டினியாகத் தூங்கவிடக் கூடாதென்று எண்ணிய அவள் மோகனாவைத் துண்டிவிட்டு "ஸ்ரீதர் ஸ்ரீதர்" என்று அழைக்கும்படி செய்தாள்.

மோகனா "ஸ்ரீதர் ஸ்ரீதர்" என்று பல முறை தன் தத்தை மொழியில் அவனைக் கூப்பிட்டது. ஸ்ரீதர் விழித்துக் கொண்டு "சத்தம் போடாதே மோகனா பேசாமலிரு" என்று கூறினான். பாக்கியம் கட்டிலில் அவள் தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டே "ஸ்ரீதர்! மோகனா உன்னைச் சாப்பிடக் கூப்பிடுகிறது. எழுந்து சாப்பிட்டுவிட்டுப் படு" என்று கூறினான். ஸ்ரீதர் பதிலுக்கு ஒன்றும் பேசாமல் தலையணையிலிருந்த தலையைத் தாயின் படிக்கு மாற்றிக் கொண்டான்.

"ஸ்ரீதர், உனக்குப் பிரியமான கருணைக்கிழங்குக் கறியும் கோழி இறைச்சியும் சமைத்து வைத்திருக்கிறேன். எழுந்து சாப்பிடுகிறாயா/" என்றாள் பாக்கியம்.

"சாப்பிடுகிறேன். அது இருக்கட்டும் அம்மா. இன்று நாங்கள் சுழிபுரம் போவதாக இருந்ததே, அது என்ன ஆச்சு?" என்று கேட்டான் ஸ்ரீதர்.

"அதை அப்பா ஒத்தி போட்டு விட்டார்" என்றாள் பாக்கியம், அவனுக்கு உற்சாகம் அளிக்கும் நோக்கத்துடன்.

"அப்படியா? அது நல்ல செய்திதான்" என்று சொல்லிக் கொண்டே அவன் படுக்கையிலிருந்து எழுந்து முகம் கழுவிச் சாப்பிடுவதற்குச் சென்றான்.

சாப்பாட்டு மேசையில் அவன் தாயாரிடம் "அம்மா என் கண் பார்வை சிறிது மங்கி வருகிறது. மேலும், கண்களில் அடிக்கடி எரிச்சல் உண்டாகி வருகிறது. என்னவென்றே தெரியவில்லை. டாக்டரிடம் காட்ட வேண்டும்." என்றான்.

"அதற்கென்ன? டாக்டர் நெல்சனுக்கு உடனே டெலிபோன் பண்ணி வரவழைக்கிறேன். அவர் நல்ல கண் வைத்தியர், அப்பாவுக்கு நன்கு தெரிந்தவர். போன தடவை அவரிடம் காட்டித்தான் அப்பா கண்ணாடி வாங்கினார்." என்றாள் பாக்கியம்.

அவ்வாறு சொல்லிவிட்டு, சிவநேசர் அறைக்குச் சென்று டாக்டருக்கு டெலிபோன் செய்ய ஏற்பாடு செய்துவிட்டு, சாப்பாட்டு மேசைக்கு மீண்டும் வந்தாள். ஸ்ரீதருக்குப் பக்கத்திலிருந்து ஒரு நாற்காலியில் அமர்ந்து மகனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள் அவள்.

" நேற்று தகப்பனும் மகனும் கல்யாணத்துக்கு ஒரு முற்று எடுத்து விட்டீர்களல்லவா? என்ன ஏற்பாடு" என்று ஒன்றுமறியாதவள் போல் ஆரம்பித்தாள்.

"ஏற்பாடா? அம்மா விசித்திரமான ஏற்பாடு. அப்பாவுக்கு அந்தஸ்துக் குறைந்த இடத்தில் திருமணம் செய்வதை நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறதாம். அவர் உண்மையைத்தான் சொல்கிறார். என்ன செய்வது? அவர் தம் மனதை அவ்வாறு பயிற்றி விட்டார். இந்த நிலையில் நான் என்ன செய்ய முடியும். அந்தஸ்துக் குறைந்த இடத்தில் திருமணம் செய்வதில்லை - அப்பாவே தம் மனம் மாறிச் சம்மதித்தாலன்றி நான் பத்மாவைக் கல்யாணம் செய்யப்போவதில்லை என்று ஒப்புக் கொண்டுவிட்டேன். ஆனால் அப்பாவைப் போன்ற ஓர் அருவருப்பு எனக்கும் இருக்கிறது. அதாவது பத்மாவைத் தவிர வேறொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்வதை நினைத்தாலே எனக்கு ஒரே அருவருப்பாயிருக்கிறது. உண்மையில் உன்னையும் பத்மாவையும் தவிர வேறு எந்தப் பெண்ணும் எனக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தால் கூட எனக்கு எரிசல் ஏற்படுக்கிறது. அம்மா இந்த நிலையில் என்னை வேறெந்தப் பெண்ணையும் திருமணம் செய்யும்படி வற்புறுத்தக் கூடாது என்று நான் அப்பாவிடம் கூறிவிட்டேன். அவரும் ஒப்புக் கொண்டுவிட்டர்" என்றான்.

"உன்னையும் பத்மாவையும் தவிர வேறு எந்தப் பெண்ணும் எனக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தால் கூட எனக்கு எரிச்சல் ஏற்படுகிறது, அம்மா" என்ற அந்த வசனத்தில் ஸ்ரீதர் பத்மா மீது எத்தகைய அழுத்தமான அன்பு வைத்திருக்கிறான் என்பதைக் கண்டு கொண்டாள் பாக்கியம். இவ்வாறு கள்ளங்கபடற்ற தன் மகனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்ட பத்மா எப்படியிருப்பாள். அவளைப் பார்க்க வேண்டுமே என்ற எண்ணம் கூட அவளுக்கு ஏற்பட்டது. இப்படிப்பட்ட அப்பழுக்கற்ற உண்மைக் காதலை நானும் அவருமாக உடைத்தெறிந்து கொண்டிருக்கிறோமே, இது எவ்வளவு பாவம் என்று வருந்தினாள் அவள். இன்னும் பத்மாவையே சதா எண்ணிக் கொண்டு நித்திய பிரமச்சரியாகவே ஸ்ரீதர் காலத்தைக் கழித்துவிட்டால் "அமராவதி" வளவு தன் தொடர்ச்சியை இழந்து மறக்கபட்டுவிடுமோ என்றும் பயந்தாள் அவள். காலமும் மாவிட்டபுரம் கந்தசாமியும்தான் ஸ்ரீதரின் மனதை மாற்ற வேண்டும் என்று எண்ணிய அவள், ஒரு நல்ல சாஸ்திரியாரிடம் ஸ்ரீதரின் சாதகத்தைக் காட்ட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.

"நேற்று நீயும் அப்பாவும் பேசச் சென்ற போது நான் மிகவும் பயந்து விட்டேன். அப்பா சிங்க லக்கினக்காரர். தான் பிடித்ததை ஒரு போதும் விட மாட்டார். அவரை எதிர்த்து வெல்ல இந்த உலகத்தில் யாராலும் முடியாதும். நீயும் அப்படித்தான். நீயும் சிங்க லக்கினக்காரன். ஆகவே சண்டை போட்டுக் கொள்வீர்களோ என்று பயந்தேன். ஆனால் ஆண்டவன் காப்பாற்றி விட்டான்" என்று ஸ்ரீதரிடம் கூறினாள் அவள். இடையிடையே "கோழிக் கறி ருசியாயிருக்கிறதா?" என்று கேட்டு வைத்தாள். "இன்றைக்கு ஒன்றுமே ருசிக்கவில்லையம்மா. இனிமேல் எனக்கு எந்தக் கறியுமே ருசிக்காது." என்று கையை அலம்பிக் கிளம்பிச் சென்றான் அவன். அவன் முகத்தை இருள் கப்பியிருந்தது.

அதன் பின் பாக்கியம் சிவநேசரைத் தேடிப் புறப்பட்டாள். அவர் தமது நூல் நிலையத்தில் ஏராளமான புத்தகங்களை மேசையில் பரப்பி வத்துவிட்டு எதிலும் மனம் செல்லாதவராய் உட்கார்ந்திருந்தார். பாக்கியம் அங்கிருந்த ஒரு சோபாவில் உட்கார்ந்து கொண்டே " நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். அவனைக் கசக்கிப் பிழிந்துவிட்டீர்கள். அவ்வளவுதானே உங்களுக்குத் தேவையாயிருந்தது" என்றாள். பாக்கியத்தின் சொற்களிலே அவள் அடக்க முயன்று கொண்டிருந்த அவளது எல்லையற்ற கோபம் தெரிந்தது.

சிவநேசர் அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு "பாக்கியம் நீ அநாவசியமான சொற்களைப் பேசி என் மனதைத் துன்புறுத்தாதே. என்னை என் பாட்டில் விட்டு விட்டுப் போய் விடு. என் மனதின் வேதனை உனக்குச் சிறிதும் தெரியவில்லையே" என்றார்.

‘அமராவதி’ வளவை இவ்வாறு அன்று காலையிலிருந்து சூழ்ந்து கொண்டிருந்த இருள் அன்று மாலை மேலும் மோசமாகியது. பிரபல கண் வைத்தியர் டாக்டர் நெல்சன் ஸ்ரீதரின் கண்களைப் பரிசோதித்து விட்டு, சிவநேசரிடம் கூறிய வார்த்தைகளே அதற்கும் காரணம்.

டாக்டர் நெல்சன் இலங்கையில் மிகச் சிறந்த கண் வைத்தியர் என்று புகழ் பெற்றவர். கண் வைத்தியத் துறையில் அவருக்குச் சமமான பட்டமும் படிப்பும் பெற்றவர் இன்னொருவரே இலங்கையில் இருந்தார். கொழும்பு கண்ணாஸ்பத்திரியின் பிரதான வைத்தியரே அவர்.

டாக்டர் நெல்சன் ஸ்ரீதரின் கண்களைப் பரிசோதித்துவிட்டு வேடிக்கையாக, ‘ஸ்ரீதர், கண்ணில் உனக்கு இப்படி நோய் வரக் காரணமென்ன? பெண்களைப் பார்த்து அதிகமாக கண்ணடிப்பதுண்டோ?" என்றார். மற்ற நேரங்களில் என்றால் ஸ்ரீதர் இதைக் கேட்டுச் சிரித்து மகிழ்ந்திருப்பான். ஆனால் அன்று அவன் சிரிக்கக் கூடிய மன நிலையில் இல்லை.

பரிசோதனையில் டாக்டர் நெல்சன் சிவநேசருடைய அறையில் சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

"ஸ்ரீதருக்குக் கண்ணில் ஏற்பட்டிருக்கும் நோய் மிகவும் பயங்கரமான ஒரு நோய். இரண்டு கண்களிலும் ஒரே மாதிரி நோய் கண்டிருக்கிறது. மிகவும் அரிதாகவே ஏற்படும் இந்நோய்க்குச் சந்திர சிகிச்சை செயய வேண்டுமென்றாலும் அதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். இன்னொன்று, இந்நோய் அவன் கண்கள் இரண்டையும் குருடாக்குவதையும் தடுக்க முடியாது. அநேகமாக அவன் கண் பார்வை இன்னும் ஒரு மாதம் கூட நீடிக்குமோ என்பதே சந்தேகம்." என்றார்.

சிவநேசர் திகைத்துவிட்டார். "என்ன, உண்மையாகவா மேல் நாடுகளுக்குக் கொண்டு சென்றாவது அவனுக்குச் சிகிச்சை செய்ய முடியாதா? நீங்கள் சொல்வது என்னைத் திகிலடைய வைக்கிறது, டாக்டர்" என்றார்.

அதற்கு டாக்டர் நெல்சன் தம் தலையை இலேசாக அசைத்தார். "ஸ்ரீதரை மேல் நாடுகளுக்குக் கொண்டு செல்வதால் நன்மை ஏற்படும் என்று நான் நம்பவில்லை. இதே நோயுற்ற இன்னோர் இளைஞனை நான் அறிவேன். இந்நோய் நரம்புகளோடு சம்பந்தமுடையது. சிகிச்சையை அதிகம் செய்யப் போவதால் நாம் அவனுக்கு இன்னும் அதிக கேட்டை உண்டாக்கிவிடலாம். அதனால் இது பற்றி ஒன்றும் செய்யாதிருப்பதே நல்லது. கண்ணில் ஏற்பட்டுள்ள எரிச்சல், நோவு முதலியற்றைக் குறைப்பதற்கு மட்டும் வேண்டுமானால் மருந்து கொடுக்கலாம். வேறு வழி ஒன்றும் எனக்குத் தெரியவில்லை."

இவ்வாறு கூறிச் சில மருந்துகளை எழுதிக் கொடுத்துவிட்டு டாக்டர் போய்விட்டார். சிவநேசர் பாக்கியத்திடம் விஷயத்தைக் கூறினார். அவள் பயந்து போய்விட்டாள். "ஸ்ரீதர் குருடாவதா? கடவுள்தான் அவனைக் காப்பாற்றவேண்டும்." என்று தனக்குத் தெரிந்த தெய்வங்கள் எல்லாவற்றுக்கும் நேர்த்திக் கடன் வைத்தான் அவள்.


அமராவதி வளவில் இவை நடந்து கொண்டிருக்க கொழும்பு கொட்டாஞ்சேனை கொலீஜ் ரோட் 48/3 இலக்க வீட்டில் பத்மா என்ன நினைவில் இருந்தாள் என்பதைப் பார்ப்போம்.

ஸ்ரீதரும் பத்மாவும் கால்பேசில் மழை நீராடி இப்பொழுது பத்து நாட்களாகியிருந்தன. அவள் ஸ்ரீதரிடமிருந்து ஏதாவது செய்தி வருமென்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து கொண்டிருந்தாள். அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. "ஸ்ரீதர் என்னை மறந்து விட்டானா" என்று கூட அஞ்சினாள் அவள். "ஒரு வேளை நான் முதலில் அஞ்சியது போலவே அவன் என்னை மோசம் செய்து விடுவானா" என்று கூட எண்ணினாள் அவள்.

தினசரி பல்கலைக் கழகத்தில் அவனைச் சந்திக்கும் இடத்தைக் கடந்து செல்லும் போது அவள் உள்ளம் வேதனைப்பட ஆரம்பித்தது. தனிமை நோய் அவளைக் கொன்றது. ஸ்ரீதருடன் சிரித்துப் பேசி அவன் விரல்களைப் பற்றி விளையாடுவதும், வசதியான இடங்களில் இலேசாக அவனுடன் முத்தங்கள் பரிமாறிக் கொள்வதுமாகச் சென்று இரண்டு மூன்று மாதங்களாக அவள் அனுபவித்து வந்த காதல் வாழ்வு திடீரென நின்று போனதும் அவள் வாழ்க்கையே உப்புச் சப்பற்றதாகத் தோன்றியது அவளுக்கு. அழகனான ஸ்ரீதரின் அணைப்பிலே அவளுக்கு வழக்கத்தில் பொழுது போவதே தெரிவதில்லை. ஆனால் இப்போது அந்த அணைப்புகளும், வேடிக்கைப் பேச்சுகளும், காதல் மொழிகளும் நின்று போக, அவளுக்கு நேரம் போக மாட்டெனென்றது. நேரத்தைப் போக்குவதற்கு என்ன செய்வதென்றறியாது மயங்கினாள் அவள். தான் அனுபவித்து வந்த இன்பம் இப்படித் திடீரென நின்று போகும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. உண்மையில் ஸ்ரீதரின் சேர்க்கை அவளுக்கு ஓர் உள்ளத் தேவையாக மட்டுமல்ல ஓர் உடல் தேவையாகவே ஆகியிருந்ததால், அது இல்லாது போகவே "வயல் மீது தண்ணீர் வற்றி வாடுகின்ற நெற் பயிர் போல்" வாடி வதங்க ஆரம்பித்தாள் அவள். பல்கலைக் கழகத்துக்குப் போகும் வழியிலும் வரும் வழியிலும் காதல் ஜோடிகளை அவ்வப்பொழுது காணும் நேரங்களிலெல்லாம் தாங்கொணாத விரகதாபம் அவளைப் பீடிக்க ஆரம்பித்தது. காதற் கதைகளை வாசிக்கும்போதும், சினிமா விளம்பரங்களில் ஆடவர், அரிவையர் கட்டியணையும் காட்சிகளைக் காணும்போதும் அவளை அறியாமலே உள்ளத்தில் ஒரு தீ எரிவது போன்ற உணர்ச்சி அவளுக்கு ஏற்பட ஆரம்பித்தது. அந்தத் தீயை அணைக்க முடியாது தத்தளித்த அவள் மனதிலே கமலநாதன் அடிக்கடி தோன்றலானான்.

கால்பேஸ் கடற்கரையில் ஸ்ரீதருடன் சேற்றில் புரண்டு விளையாடிய நிகழ்ச்சியை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்ட அவள், ஸ்ரீதர் எவ்வளவுதான் நல்ல காதலனாயிருந்த போதிலும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்கத் தெரியாத ஓர் அப்பாவியாகவே அவளுக்குக் காட்சியளித்தான். பத்மாவைப் பொறுத்த வரையில் அவள் உலக வாழ்வின் மர்மங்களை இன்னும் முற்றாக அறிந்தவளல்ல. ஆனால் அவற்றை அறிவதற்கு உள்ளமும் உடலும் துடித்துக் கொண்டிருந்த ஒரு சாதாரணப் பெண்ணே அவள். அவளால் ஸ்ரீதரின் அமைதியான போக்கைச் சற்றும் புரிந்து கொள்ள முடியவில்லை.

இவ்விதமான மன நிலையில் அவள் புழுங்கிக் கொண்டிருந்த போதுதான் கமலநாதனின் சகோதரிகளான விமலாவும் லோகாவும் அன்று காலை அவள் வீட்டுக்கு வந்தார்கள். தந்தை பரமானந்தர் வீட்டிலே இல்லாததால் விமலாவும் லோகாவும் ஒரே கும்மாளம் போட்டார்கள்.

விமலா பத்மாவிடம் "டீச்சர், அடுத்த வாரம் நடக்கவிருக்கும் முனிசிப்பல் விளையாட்டுச் சங்க ஆண்டு விழாவில் நடனமாடுவதற்காக நான் ரொக்-இன்-ரோல், டுவிஸ்ட் நடனமெல்லாம் பழகியிருக்கிறேன்.’ என்று ஜம்படித்துக் கொண்டாள். லோகாவோ விமலாவை விட நான் தான் நன்றாய் ஆடுவேன். "ஆடிப் பார்ப்போமா?" என்று அறை கூவல் கூட விடுத்துவிட்டாள்.

பின்னர் விமலாவும் லோகாவும் பத்மாவுக்குத் தமது நடனங்களை ஆடிக் காட்டினர். அவர்கள் துள்ளிக் குதித்துப் போட்டிப் போட்டு ரொக்-இன்-ரோல் நடனமாடியதையும், நெளிந்து நெளிந்து டுவிஸ்ட் நடனம் செய்ததையும் பத்மா மெச்சினாள். "டீச்சர், நீங்களும் ஆடுங்கள். ஆண்டு விழாவுக்கு நீங்களும் வருகிறீர்களல்லவா? அங்கே எல்லோரும் நடனமாடும் போது நீங்கள் மட்டும் பொம்மை போல் ஆடாமலிருந்தால் உங்களை அசல் பட்டிக்காடென்றல்லவா நினைப்பார்கள்?" என்றாள் விமலா. பத்மாவுக்கும் அது சரியாகவே பட்டது. இன்றைய சமுதாயத்தில் மதிப்போடு வாழ்வதற்கு இவற்றை எல்லாம் பயிலவே வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு ஏற்பட்டது. ஆகவே லோகா கூறியது போலவே கொட்டாஞ்சேனை தேவாலயத்துக்குப் பின்னாலிருந்த மிஸ் ரோஸ்மேரி டீ வுட்டென்னும் பறங்கிப் பெண்ணிடம் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக நடனப் பாடங்கள் பெற ஆரம்பித்தாள் அவள்.

ரோஸ்மேரி டீ வுட்டின் இல்லம் ஓர் உல்லாசபுரியாகவே பத்மாவுக்குத் தோன்றியது. பகல் இரவு என்றில்லாமல் எப்பொழுதும் நடன வகுப்புகள் அங்கே நடந்து கொண்டிருந்தன. பால்ரூம் நடனம், ரொக்-இன்-ரோல், டுவிஸ்ட்,..என்று எத்தனையோ வித நடனங்கள் அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்டன. பெரிய ரேடியோ கிராமொன்று இசைத்தட்டு சங்கீதத்தை இறைந்துக் கொண்டிருக்க ஆண்களும் பெண்களும் அங்கு நடனம் பயிலும் காட்சி அவ்வில்லத்தையே ஒரு கந்தர்வ லோகம் போல் ஆக்கியது. ரோஸ்மேரி நடனம் சொல்லிக் கொடுப்பதில் கெட்டிக்காரி. ஆடுவதற்கே ஜென்மெடுத்தவள் போல் தோன்றினாள் அவள். பத்மா சகல நடனங்களையும் மிக விரைவாகவே கற்று விட்டாள். ரோஸ்மேரி அவளத் தனது சிறந்த மாணவிகளில் ஒருத்தி என்று மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த ஆரம்பித்தாள்.

நடனப் பாடங்கள் பத்மாவுக்கு அவள் தனிமையைப் போக்கவும் உதவின. சில சமயங்களில் ரோஸ் மேரியிடம் நடனம் பயில வந்த வாலிப ஆண்களுடன் அவள் பால்ரூம் நடனம் பயின்றாள். இது அவளுடைய உள்ளத்திற்கும் உடலுக்கும் உல்லாசத்தைத் தந்தது. ஆனால் இதனால் அவளுக்கு ஒரு பிரச்சினையும் ஏற்படாமல் இல்லை. கால்பேஸ் கடற்கரையில் ஸ்ரீதர் அவள் உள்ளத்திலும் உடலிலும் தோற்றுவித்த தீ இன்னும் அணைக்கப்படாமலே இருந்தது. அத்தீ கட்டிளம் காளையர் பலருடன் உடலோடு உடல் உராய பால்ரூம் நடனம் ஆடி வந்ததால் மேலும் மேலும் அதிகமாக எரிய ஆரம்பித்தது. அதனால் அவளுக்கு ஏற்பட்ட மென்மையான போதை நாளடைவில் பெரும் வெறியாகவே ஆகிவிடும் போல் தோன்றியது. அவ்வெறியைத் தீர்த்துக் கொள்ளச் சில சமயங்களில் எதையும் செய்யலாம், எப்படியும் நடந்து கொள்ளாம் என்று கூட அவளுக்குத் தோன்ற ஆரம்பித்தது. அவள் உள்ளத்தில் ஒவ்வோர் அணுவும் " இன்பம் இன்பம்" என்று கூவிக் கூவி அவளை உல்லாச வாழ்வுக்குத் தூண்ட அவள் மனம் கமலநாதனைச் சுற்றி அதிகமாகப் படரலாயிற்று. "ஸ்ரீதர் ஏமாற்றிவிட்டான் போலிருக்கிறது. ஒரு கடிதம் கூட அவன் எழுத வில்லையே. அவன் கொழும்பில் இருக்கும்வரை அதாவது ஏறக்குறைய இரண்டு மூன்று மாதங்களாக அவன் என் வாழ்க்கைக்குத் தினசரி இன்பம் கிளுகிளுப்பை அளித்துக் கொண்டு வந்ததற்காக நான் அவனுக்கு நன்றி பாராட்டத்தான் வேண்டும். ஆனால் அவன் இப்படித் திடீரென என் வாழ்க்கையை விட்டு, மறைந்துவிட்டதும் பெரியதொரு மந்தமல்லவா வாழ்க்கையைச் சூழ்ந்துவிட்டது. இதை என்னால் சகிக்க முடியாது. கமலநாதனை என் காதலுக்கு ஒரு "ஸ்டான்ட்-பை"யாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முன்பே யோசித்தேனல்லவா? இனி அவன் தான் எனக்குத் துணை போலும். "ஸ்டான்ட் - பை" என்றாலும் அவன் ஸ்ரீதரை விட எவ்விதத்திலும் குறைந்தவனல்ல. அழகிலும், படிப்பிலும் பணத்திலும் வேண்டுமானால் அவன் ஸ்ரீதரை விடக் குறைவாக இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணைக் கவரும் ஆண்மையில் அவன் ஸ்ரீதரை விடச் சிறந்தவனாகவே விளங்குகிறான். அவன் கன்னங்கரிய மீசை ஒன்றே போதுமே." என்று பலவாறாகச் சிந்தனை செய்தாள் பத்மா.

முனிசிப்பல் விளையாட்டுச் சங்க வருடாந்த விழாவுக்குக் கமல நாதன் தனக்கு அழைப்புக் கடிதம் அனுப்பியதைப் பத்மா உண்மையில் தனது அதிர்ஷ்டம் என்றே கருதினாள். கமலநாதனுடன் நெருங்கிப் பழக அது தனக்கு வாய்ப்பளிக்கும் என்று அவள் எண்ணியதே அதற்குக் காரணம். விமலாவும் லோகாவும் பத்மாவின் தந்தை பரமானந்தரிடம் வருடாந்த விழாவுக்குத் தாங்களும் பத்மாவும் ஒன்றாகப் போவதாகக் கூறி அதற்கு வேண்டிய அனுமதியையும் பெற்றுவிட்டார்கள்.

வருடாந்த விழாவன்று காலை பல்கலைக் கழகத்துக்குப் போவதற்காக பஸ்தரிப்பில் நின்ற பத்மாவின் முன்னால் பேரிரைச்சலுடன் கமலநாதனின் மோட்டர் சைக்கிள் வந்து நின்றது. "பத்மா இன்று விழாவுக்குக் கட்டாயம் வர வேண்டும். விமலாவுடனும் லோகாவுடனும் கூடிக் கொண்டு டாக்சியில் வந்துவிடு" என்று கூறினான் அவன். பத்மா ஆம் என்று பதிலளித்தாள்.

அன்றிரவு எட்டு மணியளவில் வருடாந்த விழாவுக்குக் கண்ணைப் பறிக்கும் பகட்டான உடையணிந்து கமலநாதனின் சகோதரிகளுடன் டாக்சியில் வந்திறங்கினாள் அழகு மோகினி பத்மா. கமலநாதன் அவளை வரவேற்றுத் தன் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான். சிறிது நேரத்தில் விருந்தாளிகள் எல்லோரும் நீச்சல் ராணி பத்மாவைப் பற்றியே பேச ஆரம்பித்தார்கள். ஒரு சிலர் அவள் கண்கள்தான் மிக அழகு என்று கூறினார்கள். இல்லை அவள் உடலமைப்பின் அழகே அழகு என்றனர் மற்றும் சிலர்.

கறுப்புக் காற்சட்டையும் வெள்ளைக் கோட்டும், ‘போ’ டையும் அணிந்து கம்பீரமாக விளங்கிய கமலநாதன் பத்மாவின் மனதைப் பரவசத்திலாழ்த்திவிட்டான். அவனோடு ஜோடியாகக் காட்சியளிப்பதில் அவளுக்குத் தனித் திருப்தி ஏற்பட்டது. கமலநாதனின் களிப்பையோ சொல்ல வேண்டியதில்லை. தங்கப் பொட்டுகளிட்ட கரிய சேலையணிந்து அப்சரஸ் போல் தோன்றிய பத்மாவின் பேரழகிலே பெருமையும் பூரிப்பும் அடைந்தவன் "பத்மா மட்டும் ஸ்ரீதரைக் கை விட்டு என்னை மணக்கச் சம்மதிப்பாளானால்..." என்பது போன்ற எண்ணங்களில் மூழ்கலானான்.

கமலநாதன் பத்மாவைப் பலவாறு உபசரித்தான். இடையிலே கதையோடு கதையாக "விமலாவும் லோகாவும் நீ நன்றாக நடனமாடக் கற்றிருப்பதாகக் கூறினார்கள். இன்று நீ என்னுடன் நடனமாட வேண்டும்." என்றான். பால்ரூம் நடனத்தில் அவனுக்கு எப்பொழுதுமே மிகவும் பிரியம். பத்மா அவனது கேள்விக்குப் பதிலாக "நான் ஒன்றும் பெரிய நடனக்காரியல்ல. என்றாலும் உங்களுடன் நடனமாடுவேன். நடனத்தில் குறைபாடிருந்தாலும் நீங்கள் அதைப் பொருட்படுத்த மாட்டீர்கள் அல்லவா?" என்றாள்.

விழாவின் முக்கியமான நிகழ்ச்சி நடனம்தான். பால்ரூம் நடனமும் இடையிடையே ரொக்-இன்-ரோல், டுவிஸ்ட் போன்ற நடனங்களும் நடைபெற்றன. ஆங்கில இசை மழையும், "கபரே" நடனங்களும் கூட இடம்பெற்றன. சுமார் நூறு நூற்றைம்பது பேர் வரை நடனங்களில் பங்கு பற்றினார்கள். பியர், விஸ்கி, உவைன் போன்ற குடி வகைகள் பிரவகிக்க, நடன விருந்து மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பாண்ட் வாத்திய கோஷ்டியினர் இன்னிசையை வாரி இறைத்துக் கொண்டிருந்தனர்.

பத்மா ஒரு நடன விருந்தில் கலந்து கொண்டது இதுவே முதல் தடவையானாலும் ரோஸ் மேரி வீட்டில் பலருடனும் ஆடிப்பாடிப் பழகியிருந்ததால் எவ்விதமான கூச்சமோ குழறுபடியோ இல்லாமல் மிகவும் சகஜமாக நடந்து கொண்டாள். அவளுக்கு உண்மையில் இவ்வனுபவம் அளவில்லாத இன்பத்தையே கொடுத்துக் கொண்டிருந்தது. போதாதற்குக் கமலநாதன் அவளுக்குச் சிறிது உவைனையும் பருகக் கொடுத்திருந்தான். இதனால் பத்மாவுக்கு இவ்வுலகம் மறந்து போக, கமலநாதனுடன் உல்லாசமாக ஆடினாள் அவள். விமலாவும் லோகாவும் சிறுமிகளானதால் பெரியவர்களாடும் ஜோடி நடனமான பாங்கு நடனத்தில் அவர்கள் பங்கு பற்றவில்லை. ரொக் இன் ரோல், டுவிஸ்ட் நடனங்களில் மட்டுமே கலந்து கொண்டார்கள். மற்ற நேரங்களில் அண்ணன் கமலநாதனுடன் தங்கள் டீச்சர் பத்மா நடனமாடுவதைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

பத்மா சிறிது உவைனை உட்கொண்டிருந்த போதிலும், மதுப் பழக்கம் அதற்கு முன்னில்லாததால் அதன் போதை சற்று அதிகமாகவே அவளுக்கேறியிருந்தது. அதன் பயனாக அவள் பருவ உணர்ச்சிகள் கட்டுக் கடங்காது ஓங்க ஆரம்பித்துவிட்டன. போதாததற்கு, சுற்றிலும் கட்டிளங் காளையர்களும் கட்டழகுக் கன்னியரும் ஒருவரை ஒருவர் அணைத்து ஆடிக் கொண்டிருந்த காட்சியும் அவளுணர்ச்சிகளைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தது. இவை தவிர, அங்குமிங்கும் சில ஜோடிகள் ஒருவரையொருவர் தழுவியும் தழுவாமலும் காதல் மொழி பேசிக் கரங்களைப் பற்றி இன்பபுரியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தமையும் அவள் காதலுணர்ச்சிகளைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது. அவளுக்கு அப்பொழுது இவ்வுலகமே மறந்து போயிருந்தது. ஸ்ரீதரின் நினைவு கூட வரவில்லை. அவளுக்கு இப்பொழுது இவ்வுலகிலே வேண்டியிருந்தது ஒன்றேயொன்று தான் காதல், காதல், காதலொன்றே அது.

கமலநாதன் அவள் இடையைத் தன் கரங்களால் பற்றி ஆடிக் கொண்டிருந்தாள். பத்மா அவன் கண்களில் தன் கண்களை நாட்டி அவனை விழுங்குவது போல் பார்த்தாள். "உங்கள் மீசை உங்கள் முகத்துக்கு மிக அழகு." என்று கூறி அவன் மீசையைத் தன் விரல்களால் பட்டும் படாமலும் தடவிவிட்டாள் அவள். கமலநாதனுக்கு அவள் வார்த்தைகள் தாங்கொணாத பெருமையையும் தன்னம்பிக்கையையும் கொடுத்துவிட்டன. அவன் எதிர்பார்த்த நாள் வந்துவிட்டது. "இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது. பத்மாவை எனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்." என்று தனக்குள் தானே கூறிக் கொண்டான் அவன். நீச்சலழகியாகத் தெரியப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளி வந்த அன்று, தன் படுக்கை அறையில் அவன் அவள் படத்தை இரகசியமாக மோகித்துப் பார்த்தபோது, பத்மா தன் கரங்களில் இப்படி இலகுவில் சிக்கிக் கொள்வாள் என்று அவன் ஒருபோதும் எண்ணியதில்லை. இன்று உண்மையிலேயே அவள் அவன் கரங்களிலே சிக்கிக் கிடக்கிறாள். அவனது ஒரு கரம் அவள் காந்தள் விரல்களுடன் பின்னிக் கிடந்தது.

கமலநாதனுக்கு ஆடி ஆடி அலுத்துப் போயிருந்ததோடு சற்றுப் புழுக்கமாகவும் இருந்தது. அத்துடன், பத்மாவை எங்காவது தனியிடத்துக்குக் கொண்டு போய் அவளுடன் பேச வேண்டுமென்ற ஆர்வமும் அவனுக்கு ஏற்பட்டிருந்ததால், அவன் அவள் மீசையை மெச்சியதற்குப் பதிலாகத் தனது நன்றியைக் கூவி விட்டு "பத்மா இங்கே புழுக்கமாயிருக்கிறதல்லவா? சிறிது நேரம் வெளியே மோட்டார் சைக்கிளில் ஒரு சுற்றுச் சுற்றி விட்டு வருவோமா?" என்றாள்.

மோட்டர் சைக்கிள் என்றதும் பத்மாவின் உள்ளம் துள்ளி எழுந்தது. காதலன் சைக்கிள் ஓட்டத் தான் பின்னே உட்கார்ந்து போக வேண்டுமென்ற மனத்தின் கனவு மலர்ச்சியுற்றது. ஆகவே அவனது வேண்டுகோளுக்கு "ஆம்" என்று பதிலளித்தாள் அவள். சீக்கிரமே மோட்டார் சைக்கிள் இருளைக் கிழித்துக் கொண்டு வீதியில் பறந்தது. பத்மா கமலநாதனின் தோள்களை இறுகப் பற்றிக் கொண்டு சைக்கிளின் பின்னாசனத்தில் உட்கார்ந்திருந்தாள். அமாவாசை இருளில் வானத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் ஒளி வீசிக் கொண்டிருந்த பத்மா, திடீரென கமலநாதனிடம் "கமல், நேரமென்ன டார்லிங்" என்றாள். பத்மாவின் மனம் துணுக்குற்றது. எத்தனையோ மாதங்கள் தொடர்ந்து பழகிய ஸ்ரீதருடன் கூட அவள் இப்படி நள்ளிரவு வரை ஊர் சுற்றியதில்லை. ஆனால் அது அவளுக்கு அச்சத்தையோ வெட்கத்தையோ தரவில்லை. உற்சாகத்தையே கொடுத்தது.

பத்மா உண்மையில் மோட்டார் சைக்கிள் சவாரியை மிகவும் இரசித்தாள். காற்றுக்கெதிராகப் போய்க் கொண்டிருந்ததால், காற்று முழு மூச்சோடு அவள் முகத்தில் வீசி அவள் மென்மையான கூந்தலைச் சிதறடித்துக் கொண்டிருந்தது. காற்றின் ஸ்பரிசம் அவள் முகத்தில் நரம்புகளில் புதிய உயிர்த் துடிப்பை ஏற்படுத்தியது. என்றாலும் கமலநாதன் மோட்டார் சைக்கிளை ஓட்டிய வேகத்தைக் கண்டு அவள் நடுங்கிப் போய்விட்டாள். ஆனால் அந்த நடுக்கத்திலும் பயத்திலும் கூட ஓர் இன்பம். இராட்டின ஊஞ்சல் நிலத்திலிருந்து மேலே எழும்பிக் கீழ் நோக்கிச் சுழலும் போது யாருக்கும் பயமேற்படவே செய்யும். ஆனால் அந்தப் பயம் தான் அந்த ஊஞ்சல் சுழற்சிக்கே சுவையை ஊட்டுகிறது. அது போலத்தான் மோட்டார் சைக்கிளின் அளவு மீறிய வேகமும் அவளுக்கு இன்பத்தையே ஊட்டிக் கொண்டிருந்தது. எந்நாளும் எந்நேரமும் இப்படியே எங்காவது வேகமாக மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

உண்மையில் பத்மாவின் உள்ளத்தில் அப்போது மூன்று போதைகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டிருந்தன. ஒன்று காதலின் போதை; மற்றது உவனும் பியரும் குடித்ததால் ஏற்பட்ட கள்ளின் போதை; மூன்றாவது போதையோ வேகமான வாகனத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமென்ற நீண்ட காலம் ஆசையின் பூர்த்தியால் ஏற்பட்ட மன மயக்கம், இவை போதாவென்று அமாவாசை இருள், குளிர்ந்த காற்று, கமலநாதனின் மீசை, நடன சல்லாபம், நள்ளிரவின் தனிமை என்ற பகைப் புலங்கள், பத்மா வாழ்க்கையின் மர்மங்களைத் துலக்கிவிட வேண்டுமென்று துடி துடித்தாள். கமலநாதனை ஆதரவாக அணைத்துக் கொண்டு "கண்ணாளா" என்று முனகினாள்.

கமலநாதன் மோட்டார் சைக்கிளைக் கொள்ளுப்பிட்டியில் கடற்கரையோரமாக இருந்த ஒரு யாழ்ப்பாண நண்பனின் பங்களாவுக்குச் செலுத்தினான். அவ்வீட்டில் அப்பொழுது அவனது நண்பன் மட்டும்தான் இருந்தான். மற்றவர்கள் எல்லோரும் யாழ்ப்பாணம் போயிருந்தார்கள். நண்பனோ நடன விருந்தின் குடியில் மூழ்கிக் கிடந்தான். அவன் நடன விருந்து முடியும் வரை வர மாட்டான்.

பங்களாவைச் சுற்றி நல்ல புற்றரை. ஒரு புறம் ஒரு சிறிய பிரதேசத்துக்கு வெண் மணல் பரப்பப்பட்டிருந்தது. காதலர்கள் தனிமையில் சல்லாபிப்பதற்கு அதைப் போன்ற தனியிடம் வேறு கிடைக்காது. பங்களா கேட் எப்பொழுதும் திறந்து கிடக்கும். வீடு மட்டும் தான் பூட்டப்பட்டிருக்கும் என்பது கமலநாதனுக்குத் தெரிந்ததே. அவன் நேராக அங்கு வந்தததற்குக் காரணம். இது விஷயத்தில் கமலநாதனிடம் மிகவும் அன்பும் மதிப்பும் கொண்ட அவனது நண்பன் "உனக்கு வேண்டிய எதையும் இங்கு செய்யலாம்" என்று பூரண அனுமதி வழங்கியிருந்தான். ஒரே ஒரு நிபந்தனை மட்டும் தான் விதிக்கப்பட்டிருந்தது. ஒரு கனவானாக நடந்து கொள்ள வேண்டுமென்பதே அது. கனவான் என்ற வார்த்தைக்கு இவ்விடத்தில் அக்கம் பக்கத்தார் கவனத்தை ஈர்க்காமல் இரகசியமாக காதும் காதும் வைத்தாற் போல் விஷயங்களைச் செய்து கொள்பவன் என்று பொருள். விசித்திரமான பொருள்தான். ஆனால் இன்றைய மத்தியதர மேலிட மக்கள் சிலரின் ஒழுக்கக் கோட்பாட்டுக்கு இது நல்ல எடுத்துக்காட்டு. ஒழுக்கம் செயலில் இல்லை, அதை வெளிப்படுத்துவதிலும் மறைப்பதிலும் தான் இருக்கிறதென்பது இந்த ஒழுக்கத்தின் அடிப்படை நியதியாகும்.

பங்களாவின் புல் தரையில் புகுந்து கேட்டை நன்கு சாத்திவிட்டு, கடலை நோக்கிய வீட்டின் பின்புறத்தில் வெண் மணல் பரப்பிய ஜாம் மர நிழலுக்கு எவித சத்தமுமில்லாமல் பூனை போல் பத்மாவுடன் சென்றான் கமலநாதன். பத்மாவுக்கு இது புது அனுபவம். ஸ்ரீதர் எப்பொழுதுமே இப்படி நடந்து கொண்டதேயில்லை. பத்மா பக்கத்திலிருந்தால் அவள் எப்பொழுதும் சிரித்துக் கொண்டும் கலகலப்பாகவுமே இருப்பான். வேடிக்கையும் விளையாட்டும் அமர்க்களப்படும். அவள் பின்னலை இழுப்பான். விரல்களை வருடுவான். ஆனால் கமலநாதன் போக்கோ முற்றிலும் வேறு விதமாக இருந்தது. ஆனால் ஒரு காதலனிடமிருந்து சாதாரணப் பெண்ணொருத்தி எதிர்பார்ப்பது எதனை? கமலநாதனிடம் ஸ்ரீதரின் வேடிக்கைப் பேச்சில்லை. அவன் எப்பொழுதும் காரியமாகவே பேசினான். பத்மாவுக்கு என்றும் எந்த நேரமும் இப்போக்கு பிடித்திருக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இன்று இந்த நேரத்தில் கமலநாதனின் போக்கு அவளுக்கு மிகவும் பிடிக்கவே செய்தது. ஸ்ரீதர் பொய்ப் பெயர் சொல்லித் தன்னுள்ளத்தில் காதல் அலைகளைத் தோற்றுவித்த துஷ்யந்தன் என்றால், கமலநாதன் கானகத்துச் சகுந்தலையைக் காந்தர்வத்துக்கு அழைத்துச் சென்ற துஷ்யந்தன் போல் தோன்றினான் அவளுக்கு.

மணலிலே "அப்பாடா" என்று உல்லாசமாகச் சாய்ந்தாள் பத்மா. அவள் சேலை அங்குமிங்கும் பரவிச் செல்ல, கமலநாதன் அவளோடு நெருங்கி உட்கார்ந்து கொண்டு "பத்மா, இந்த இடம் உனக்குப் பிடித்திருக்கிறதா?" என்று கேட்டான். "அழகான இடம். சுவர்க்க லோகம் போலிருக்கிறது," என்று சொல்லிக் கொண்டே அவன் மீசையைத் தன் விரல்களால் பிய்த்தெடுப்பது போல் பாசாங்கு பண்ணிக் கலகலவென்று சிரித்தான் அவன்.

பங்களாவின் சுவருக்கப்பால், ரெயில் பாதைக்கு அந்தண்டை கொள்ளுப்பிட்டிக் கடல் குசுகுசுத்துக் கொண்டிருந்தது. ஸ்ரீதர் என்றால் "கடலும் வானமும் இரகசியம் பேசுகின்றன. கடலே பெண். வானம் காதலன்" என்று கூறியிருப்பானோ என்னவோ? போதையின் ஊடேயும் ஸ்ரீதரின் ஞாபகம் வந்ததும் பத்மாவின் நெஞ்சம் துணுக்குறவே செய்தது. என்றாலும், "எல்லாம் அவன் பிழைதானே. கடிதம் கூட எழுதவில்லை. நான் என்ன செய்வேன்? சும்மா இருந்த எனக்கு காதலுணர்ச்சியின் கிளுகிளுப்பைப் பழக்கி வைத்தவன் அவன். அதனால் இப்பொழுது என் மனம் பொழுது போகாத நேரமெல்லாம் அந்த அனுபவத்தைத் தானே தேடுகிறது. இதோ கமலநாதன் என் பக்கத்தில் என் காதலுக்காகக் காத்திருக்கிறான். ஸ்ரீதர் மிகப் பெரிய இடம். பார்க்கப் போனால் அவனுக்கும் எனக்கும் திருமணம் சாத்தியமில்லை தான்போலிருக்கிறது. அதனால் தன் போலும் மூன்று வாரங்களாகியும் இன்னும் ஸ்ரீதரின் கடிதத்தைக் காணோம். ஆனால் கமலநாதன் எனக்குச் சகல வகையிலும் ஏற்றவன். அவனையே திருமணம் செய்தால் என்ன? அந்தப் பிரச்சினையை இப்பொழுதே தீர்த்துக் கொண்டாலென்ன?" என்று சிந்தித்தாள் அவள்.

கமலநாதன் பத்மாவிடம், "பத்மா நீ ஸ்ரீதருடன் பழகுகிறாயல்லவா? இப்படி அவனுடனும் பல இடங்களுக்குப் போயிருக்கிறாயா?" என்றான்.

"இல்லை" என்றாள் பத்மா.

"நான் அதை நம்ப மாட்டேன். நீ எச்சிற்படுத்தப் பட்ட பழமே" என்றான் கமலநாதன்.

"இல்லை. என்னால் அதனை நிரூபிக்க முடியும்."

கமலநாதனுக்கு இச்செய்தி மகிழ்ச்சியைத் தந்தது. "அப்படியானால் நான் உன்னை ஒன்று கேட்கப் போகிறேன். மறுக்க மாட்டாயே"

"கேளுங்கள்"

"பத்மா, நான் உன்னை நேசிக்கிறேன். உன் கொடி போன்ற அழகுக்காக மட்டுமல்ல, நீ படித்தவள், நாகரிகமானவள், பண்புடன் நடக்கத் தெரிந்தவள், வீட்டு வேலை தொடக்கம் பால் ரூம் நடனம் வரை எல்லாம் அறிந்தவள். உண்மையில் இன்றைய உலகில் குடும்ப வாழ்க்கை சிறப்பாக நடக்க ஒரு பெண்ணிடம் என்னென்ன குணங்கள் இருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேனோ அவை எல்லாம் உன்னிடம் இருக்கின்றன. இன்னும் உன்னை என் தங்கைகளுக்கு மட்டுமல்ல, அவர்கள் சொல்லிச் சொல்லி அம்மாவுக்குக் கூடப் பிடித்திருக்கிறது. நீ என் மனைவியாக வேண்டும். அது தான் நான் கேட்க விரும்பியது. உண்மையில் நான் உன்னை எண்ணி எண்ணி மனம் புண்படாத நாலே இல்லை. இதுவரை ஸ்ரீதருடன் நீ நெருங்கிப் பழகியதால் என் மனத்தை அடக்கிக் கொண்டிருந்தேன். இன்று பாதை திறந்ததால் கேட்டு விட்டேன். நீ எச்சிற்படுத்தப்படவில்லை என்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. என் கேள்விக்கு என்ன பதில் சொல்லுகிறாய், பத்மா?" என்றாள் கமலநாதன்.

பத்மா அவன் கன்னங்களைத் தன் கரங்களால் தடவியவண்ணமே " நான் உங்களைத்தான் கட்டுவேன். ஸ்ரீதரைக் கட்ட மாட்டேன்" என்றாள். இதைக் கேட்ட கமலநாதனுக்கு முழு உலகமுமே தன்னை வாழுத்துவது போன்ற, உணர்ச்சி ஏற்பட்டது. வானத்தில் மலர்ந்திருந்த நள்ளிரவு நட்சத்திரப் பூக்கள் எல்லாம் தன்னை வாழ்த்தித் தேவர்கள் அள்ளி வீசிய மல்லிகை மலர்கள் போல் தோன்றின அவனுக்கு. அந்த ஆனந்தத்தில் அவளை ஆசை தீர அணைத்துக் கொண்டான் அவன்.

அவர்கள் கொள்ளுப்பிட்டிலிருந்து மீண்டும் நடன விருந்துக்குப் போன பொது இரண்டு மணியாகிவிட்டது. நடனமோ இன்னும் முற்றுப் பெற வில்லை. விடியும் வரை ஆட முடிவு செய்து நடனக்காரர்கள் இன்னும் ஆடிக் கொண்டிருந்தார்கள். பத்மாவும் கமலநாதனும் அவர்களுடன் சேர்ந்து தாமும் ஆடினார்கள். விமலாவும் லோகாவும் தூக்கம் தாங்காமல் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

பத்மாவைப் பொறுத்த வரையில் அவள் பிரச்சினை முற்றாகத் தீர்ந்து விட்டது. மழை நீராட்டன்று ‘கால்பேசி’ல் ஸ்ரீதர் மூட்டிய தீ கொள்ளுப்பிட்டியில் ஜாம் மரத்தின் கீழே அவளது புதிய காதலன் கமலநாதனால் அணைக்கப்பட்டுவிட்டது. வாழ்க்கையை அவள் கண்டுவிட்டாள். அதன் கோணத்தை மட்டும் காட்டியவன் ஸ்ரீதர். இன்னும் அதன் முழுமையையும் காட்டி வாழ்க்கைக்குத் திருப்தி ஊட்டியவன் கமலநாதன். இனி அவன் தான் எல்லாம். வாழ்க்கைப் பிரயாணத்தில் அவனே அவள் துணைவன். இன்னும் ஸ்ரீதரின் மூன்று வார பிரிவால் ஏற்பட்ட அங்கலாய்ப்பும் தீர்ந்துவிட்டது. தான் கை விடப்பட்டு விடுவேனோ என்ற அச்சமும் பறந்து போயிற்று. எல்லாம் திட்ட வட்டமாக முடிவு செய்யப்பட்டுவிட்டன. திருமணத்துக்கு நாள் வைக்க வேண்டியதுதான் பாக்கி. இன்னும் நாளையிலிருந்து தனிமை நோயும் பறந்தது. கமல நாதனை ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது சந்தித்து உல்லாசமாக இருக்க ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இவ்வுலகில் ஒரு சிலரால் தீர்க்கப்படாத பிரச்சினைகளை வைத்துக் கொண்டு மனச் சஞ்சலப்பட முடியாது "ஸ்ரீதர் இனி என் வாழ்க்கையில் குறுக்கிடாவிட்டால் அது போன்ற நன்மை வேறில்லை" என்றும் தீர்மானித்தாள் அவள்.

இச்சம்பவம் கொழும்பில் நடந்த அடுத்த நாட் காலை யாழ்ப்பாணத்தில் "அமராவதி" வளவில் ஸ்ரீதர் தன் அறையிலிருந்து தாயாரை உச்சக் குரலில் கூவி அழைத்துக் கொண்டிருந்தான். "அம்மா அம்மா எனக்கொன்றுமே தெரியவில்லை. கண் பார்வை அடியோடு மங்கிவிட்டது. நான் குருடாகி விட்டேன் அம்மா. என்ன செய்வேன்? எல்லாம் இருளாகத் தெரிகின்றதே" என்று அலறினான் அவன்.

அவனது கூக்குரலைக் கேட்டு, தாயார் பாக்கியம் மட்டும் அங்கு வரவில்லை. சிவநேசர், வேலைக்காரி தெய்வானை, கிளாக்கர் நன்னித்தம்பி, வீட்டைக் கூட்டிச் சுத்திகரித்துக் கொண்டிருந்த ஆள் வேலைகாரர் இருவர் ஆகிய எல்லோரும் ஓடி வந்தார்கள். பாக்கியம் தன் தலையைக் கைகளாலடித்துக் கொண்டு, "ஐயோ நான் என்ன செய்வேன்?" என்று கதறினாள். தெய்வானை அவளைத் தாங்கிப் பிடித்தாள்.

மோகனாவோ என்ன நடந்துக் கொண்டிருக்கிறதென்று தெரியாமல் "ஸ்ரீதர் ஸ்ரீதர்" என்று தன் அன்பு எஜமானனைக் கூவி அழைத்தது.


19-ம் அத்தியாயம்: குருடன் ஸ்ரீதர்!

தொடர்நாவல்: மனக்கண் (19) - அறிஞர் அ.ந.கந்தசாமி -"உலகம் என்ன நிறம்" என்று யாராவது இன்னொருவரைக் கேட்டால் அது ஒரு விசித்திரமான கேள்வியாகவே இருக்கும். அது வானவில்லின் ஏழு வர்ணங்களையும், அவற்றின் எண்ணற்ற கலவைகளையும் கொண்டது என்று தான் யாரும் பதில் சொல்லியிருப்பர். பிறவிக் குருடனாயிருந்தால் "நிறமா? நிறமென்றால் என்ன? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?" என்று பதிலளித்திருப்பான். ஆனால் ஸ்ரீதரின் நிலை வேறு. அவன் நல்ல பார்வையுடன் பிறந்து, நல்ல பார்வையுடன் வளர்ந்து, காட்சிப் புலனின் திறனால் சித்திரக் கலைஞனாகி இரவும் பகலும் வண்ணங்களைப் பற்றிய எண்ணங்களில் தன் மனதை முற்றிலும் பறி கொடுத்து வாழ்ந்தவன். அப்படிப்பட்டவனுக்குக் கட்புலன் போனதும் ஒரே ஒரு நிறத்தைத்தான் அவன் காணக்கூடியதாயிருந்தது. குருடனாலும் காணக் கூடிய அந்நிறம் கறுப்பு நிறம்தான். ஆனால் கறுப்பென்பது ஒரு நிறம்தானா? எல்லோரும் அதை நிறமென்றே நினைத்துக் கொண்டாலும், கறுப்பு உண்மையில் ஒரு நிறமல்ல; நிறமெதுவுமற்ற வர்ண வெறுமையே கறுப்பு என்பர் விஷயம் தெரிந்தவர்கள்.

ஸ்ரீதர் ஓர் இருட்டுலகத்திலே புகுந்துவிட்டான். விடியாத நிரந்தர இரவொன்று அவனைச் சூழ்ந்தது. அந்தக் கரிய உலகத்திலே வாழ்க்கையின் சகலத்தையுமே இழந்துவிட்டது. போல் அவன் இருதயம் இரத்தக் கண்ணீர் பெருக்க ஆரம்பித்தது. பலமான ஓர் ஆயுதத்தினால் தலையில் மோதினால் மூளையில் ஒரு ஸ்தம்பித நிலைமை ஏற்படுமல்லவா? ஆரம்பத்தில் இருட்டின் மூட்டம் அப்படிப்பட்ட நிலையைத்தான் அவனுக்கு ஏற்படுத்தியது. பல தினங்களாக நீடித்த ஸ்தம்பித நிலைமை சிறிது சிறிதாகத் தளர்சியடைய ஏறக்குறையப் பத்து நாட்கள் வரை ஆகிவிட்டன. இப்பத்து நாட்களும் அவன் அதிகம் பேசக் கூட வில்லை. அம்மாவை எங்கும் அகலவிடாது அவள் கையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு கட்டிலிலோ ஒரு ஒரு சாய்மணை நாற்காலிலோ உட்கார்ந்திருப்பான். "அம்மா நீ எங்கும் போய்விடாதே. கண்ணற்ற நான் நீயும் போய்விட்டால் என்ன செய்வேன்? நீதான் என் கண், அம்மா, சில பெண்களுக்கும் அம்மாக்கண்ணு என்று பெயர் இருக்கிறதல்லவா? அப்பெயர் உனக்கு நல்ல பொருத்தம். நீ என் அம்மாக் கண்ணு" என்று தாயின் தோள்களைப் பற்றிக் கொண்டு குழந்தை போல் ஏதேதோ பேசினான். தாய்க்கோ பேய் பிடித்தது போன்ற நிலை, எந்நேரமும் அவனுக்குப் பக்கத்திலேயே இருந்ததால் சரியாகத் தலை வாரிக் கொள்வது கூட இல்லை. அவன் கேட்கும் கேள்விகள் சில அவள் அடிவயிற்றை எரிய வைத்தன. "அம்மா நான் ஏன் இந்த உலகத்தில் பிறந்தேன்? நீ ஏன் என்னைப் பெற்றாய்? அப்பாவைத் திருபதிப்படுத்த என்னால் அமுதாவைக் கல்யாணம் கட்ட முடியவில்லை. நான் திருப்தியடையப் பத்மாவைக் கட்ட முடியவில்லை. யாருக்கும் திருப்தியற்ற வாழ்வு. எனக்கும் இன்பமில்லை, அப்பாவுக்கும் இன்பமில்லை. உனக்கும் கூடத்தான். இவற்றை எல்லாம் பார்த்து நீ எவ்வளவு வேதனைப் படுவாய் என்று எனக்குத் தெரியும். போதாததற்கு கண்ணும் போய்விட்டது. அம்மா என் கண்கள் மீளுமா?" என்று கேட்டான் அவன். பாக்கியம், "ஸ்ரீதர், உன் கண்ணுக்கொன்றுமில்லை. சீக்கிரமே சுகமாகிவிடும் என்று டாகடர் கூறுகிறார்" என்று பதிலளிப்பாள். மகனின் கேள்விகளுக்கு இப்படிப் பொய்யான பதில்களைக் கூறும் போதெல்லாம் அவள் கண்களில் நீர் வழியும். அழுவாள். ஆனால் அது அவன் காதுகளில் வீழ்ந்து விடக் கூடாதென்று சப்தம் போடாது பல்லைக் கடித்துக் கொண்டு மெளனமாக அழுவாள். இருந்தாலும் எப்பொழுதும் தாயோடு நெருங்கி உட்கார்ந்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதருக்கு அவள் அழுகை சில சமயங்களில் தெரியவே செய்தது. அப்படிப்பட்ட நேரங்களில் அவள் கண்களைத் தன் கைகளால் தடவிவிட்டு, "அம்மா, ஏன் அழுகிறாய். அழாதே." என்று சொல்லிக் குழந்தையின் தலையைத் தடவுவது போல் அம்மாவின் தலையைத் தடவி, தேறுதல் கூறுவான் அவன். அந்த நேரங்களில் "ஐயோ மகனே" என்று தன்னை அறியாமலே கதறி விடுவாள் தாய்.

"அம்மா, நீ ஏன் என்னைப் பெற்றாய்" என்ற கேள்விக்குப் பாக்கியம் "எங்கள் குலம் விளக்கமடைய உன்னைப் பெற்றேன். உன்னை எந்த நேரமும் என் பக்கத்தில் வைத்து விளையாடப் பெற்றேன். நீ என்னோடேயே எந் நேரமும் இரு ஸ்ரீதர்." என்ற உணர்ச்சிவசமாய் உரைப்பாள்.

"இல்லை, என்னைப் போன்றவர்கள் இவ்வுலகில் பிறந்திருக்கவே கூடாது" என்பான் ஸ்ரீதர்.

ஒரு நாள் "அம்மா, இவ்வுலகில் பணம் இன்பம் தரும் பொருள் என்று சொல்கிறார்களே, அது முழுப் பொய். எனக்குப் பணத்துக்கு ஒரு குறைவுமில்லையே. இருந்தும், வாழ்க்கையில் நான் கண்ட இன்பம் என்ன? அப்பாதானே இந்த இலங்கையிலேயே பெரிய பணக்காரராம் - அப்படியானால் அவரின் ஒரே வாரிசான நான் தானே இந்த நாட்டின் ஆளப் போகிற பெரிய பணக்காரப் பிள்ளை? இருந்தும் நான் விரும்பிய பெண்னை என்னால் மணம் முடிக்க முடியவில்லையே. இப்பொழுது கண்ணும் போய்விட்டது. எனது பணத்தால் இவற்றைத் தடுக்க முடியவில்லை. நான் இப்படிப் பெரிய பணக்கார வீட்டில் பிறக்காமல் பத்மாவைப் போல் ஓர் ஏழை வாத்தியார் வீட்டில் பிறந்திருந்தால் எப்போதோ அவளைக் கல்யாணம் செய்து சந்தோஷமாயிருந்திருப்பேன். இல்லையா அம்மா? மறு பிறப்புப் பற்றிச் சொல்லுகிறார்களல்லவா - அப்படி ஒன்றிருந்தால் நிச்சயம் நான் என் மறு பிறப்பில் ஓர் ஏழை வீட்டில்தான் பிறக்க விரும்புவேன். எங்கள் பெரிய மாளிகையை விட ஏழைகளின் குடிசைகளில்தான் இன்பம் அதிகம். அவர்கள் எங்களைப் போல் போலி அந்தஸ்துக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே நாசமாக்கிக் கொண்டு கஷ்டப்படுவதில்லை. ஆனால் ஒன்று அம்மா. நான் எங்கே பிறந்தாலும் நீதான் என் அம்மாவாக இருக்க வேண்டும். நீ இன்று கூட அப்பாவைப் போல அந்தஸ்து அந்தஸ்து என்று சாகவில்லை. ஆனால் அப்பா கூட பணக்காரராகப் பிறந்ததால் தான் இப்படி இருக்கிறார். ஏழையாகப் பிறந்தால் சரியாகப் போய்விடுவார். அவர் மீது கூட எனக்கு வெறுப்பில்லை. என் மீது அவருக்கு இருக்கும் அன்பைச் சொல்ல முடியாது. என்னம்மா, அப்பாவுக்கு என் மீது அன்புதானே" என்றான்.

பாக்கியம் "அதில் சந்தேகமா? உனக்காக அவர் தன் உயிரையும் கொடுப்பாரடா" என்றாள்.

ஸ்ரீதர் "அவர்தான் என்ன செய்வார்? பணக்காரன் ஏழை என்று பார்க்கும் உலகத்தில் இந்த அந்தஸ்து என்ற பிரச்சினை இருக்கத்தான் இருக்கும். ஆனால் இவ்வுலகில் எல்லோருமே பணக்காரராகவோ ஏழைகளாகவோ இருந்துவிட்டால் பிரச்சினை ஒழிந்துவிடும். பண விஷயத்தில் எல்லோருமே சமமாக இருக்க வேண்டுமென்று சுரேஷ் சொல்லுவான். அவன் அறிவாளி. அவன் சொல்வது சரி போலத்தான் தெரிகிறது" என்றான்.

சில சமயம் குருடனின் அந்தகார உலகைப் பற்றியும் அவன் பேசுவான். "அம்மா மோகனா அழகான கிளி. பளபளக்கும் பஞ்ச வர்ணங்களோடும் அது எவ்வளவு அழகாயிருக்கிறது. ஆனால் இப்பொழுது எனக்கு அதன் வர்ணங்களால் பயனேயில்லை. மோகனா இப்பொழுது எனக்கு ஓர் ஒலியாகிவிட்டது. ஏன், நீயும் கூட அப்படித்தான். உனது சிவந்த கன்னங்களில் ஒரு சுழி இருக்கிறதல்லவா? சுரேஷ் கூட அது மிகவும் அழகாயிருப்பதாகச் சொல்லியிருக்கிறான். ஆனால் அதனால் எனக்கு ஒரு பிரயோசனமுமேயில்லை. மோகனாவைப் போல நீயும் எனக்கு ஒலிதான். மனதுக்கு ஆறுதல் தரும் இன்ப ஒலி. ஆனால் நீ சமீபத்தில் வந்திருக்கும்போது உன்னுடலில் இருந்தும் உன் கூந்தல் தைலத்திலிருக்கும் மணமும் வீசுகிறது. அதனால் நீ ஒலியோடு மணமுமாகிவிட்டாய். ஆமம்மா எனக்கு உலகமே ஒலியாகவும் மணமாகவும்தான் தெரிகிறது." என்பான்.

சில சமயம் அந்தகர்களைப் பற்றிய பெரும் கவிஞர்களின் கவிதைகள் அவன் நினவுக்கு வரும். அவற்றை அம்மாவுக்குச் சொல்லிக் காட்டுவான். முக்கியமாக இடையிலே குருடாகிய ஆங்கிலக் கவிஞர் மில்டனின் கவிதைகளை அவன் அடிக்கடி சொல்ல ஆரம்பித்தான்.

ஆண்டுதோறும் பருவங்கள்
அழையாதிங்கே ஓடி வரும்
ஈண்டிவ்விதமாம் மாற்றங்கள்

பகலுமில்லை இரவுமிலை
படுவான் எழுவான் காட்சியிலை
திகழும் மலரின் அழகில்லை
தெரியும் வசந்தக் காட்சியிலை

ஆடு மாடு மந்தைகளில்
அழகும் காணேன் - மனிதர்களின்
பீடு மிக்க முகங்காணேன்
பெருகும் இருளில்
வீற்றிருந்தேன்.

அறிவுப் புலனின் கதவொன்று
அடியோ டடைத்து முடிற்றே!
துருவிப் பார்க்கும் என் கண்கள்
தூர்ந்தே பார்வை மறந்தனவே.

சில சமயங்களில் அவன் அம்மாவிடம் இது பகலா இரவா? என்று கேட்பான். கேட்டுவிட்டு

"நண்பகலின் பேரொளியில்
நானிருட்டில் வாழுகிறேன்
சூரியனை ராகுவிங்கு
சூழ்ந்ததுவே ஆனால் அச்
சூரியர்க்கு மீட்சியுண்டு
சுடர் விழிக்கோ மீட்சியிலை
நித்தியமாம் கிரகணமென்
நேத்திரத்தைப் பிடித்ததுவே"

என்று பாடுவான்.

ஸ்ரீதர் கண்கள் மங்கிவிட்ட போதிலும் அதிலிருந்த நோவும் வலியும் டாக்டர் நெல்சனின் சிகிச்சையின் கீழ் இப்பொழுது முற்றாக மறைந்துவிட்டன. ஆகவே அவன் தான் ஒரு குருடன் என்பதை முற்றாகத் தன் மனதிலே ஏற்றுக் கொண்டு, தன்னை உலகின் பிரசித்தி பெற்ற குருடர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவானான். "துரியோதனனுடைய தந்தை திருதராஷ்டிரன் ஒரு குருடன். மாளவ தேசத்துச் சத்தியவானின் தந்தை ஒரு குருடன். தேபேஸ் மன்னன் ஈடிப்பஸ் ஒரு குருடன். ஏன், எங்கள் யாழ்ப்பாணக் குடா நாட்டைப் பரிசாகப் பெற்ற யாழ்ப்பாடிகூடக் குருடனென்றுதானே சொல்கிறார்கள். ஆங்கிலப் பெரும் கவிஞன் மிலடன் ஒரு குருடன். அசோக மன்னனின் ஒரு மைந்தன் கூடக் குருடனாம்." இப்படி ஏதேதோ சொல்லிக் கொண்டே போனான் அவன். சில வேளைகளில் "அம்மா, இனி என்னைப் பார்ப்பவர்கள், 'அதோ ஸ்ரீதர் போகிறான்' என்று சொல்ல மாட்டார்கள். 'குருடன் போகிறான்' என்று தான் சொல்வார்கள்" என்று கூறிச் சிரித்தான். நோவுகள் மறையச் சிரிப்புச் சிறிது சிறிதாக மீண்டது. பகடிப் பேச்சுகளும் மீள ஆரம்பித்தன. ஆனால் நான் முழுவதும் சிரிக்கும் அவனது முன்னைய போக்கு மீளவில்லை. இடையிடையே வேதனையுடன் சேர்ந்து வெளிப்பட்டன இப்புதிய வேடிக்கைப் பேச்சுகள்.

பொழுது போவதற்குப் புத்தகங்கள் படிக்க முடியாத நிலை. சித்திரம் தீட்ட முடியாத நிலை. நாடகம் நடிக்க முடியாத நிலை. சினிமா பார்க்க முடியாத நிலை. கவலையின்றித் தனியே ஊர் சுற்ற முடியாத நிலை. இந்நிலையில் புதிய பொழுது போக்குடன் தேவைப்பட்டன. இசைத்தட்டுகளும் வானொலி நிகழ்ச்சிகளும் அதற்குதவின. சிவநேசர் பட்டணத்துக்குப் போகும் போதெல்லாம் புதிய இசைத்தட்டுகளைத் தேடி வாங்கி வருவார். அவன் அறைக்குள் போய் "ரேடியோகிராமில்" தாமே இசைத்தட்டைக் கழுவி, ஊசியையும் அதன் மீது வைத்துவிடுவார் அவர். "அப்பாவா, நல்ல பாட்டு" என்பான் அவன். சிவநேசர் ஒன்றும் பேசமாட்டார். கண்கள் கலங்க வெளியே போவார். அதிமனிதர் அவ்வேளைகளில் சாதாரண மனிதராகிவிடுவார்.

ஒரு நாள் தந்தை சிவநேசரிடம் ஸ்ரீதர் "அப்பா என் கண்களுக்குச் சந்திர சிகிச்சை செய்தாலென்னா? சில பேருக்குச் சந்திர சிகிச்சையால் பார்வை மீண்டதாக நான் கேள்விப் பட்டிருக்கிறேன்."

சிவநேசர் அதற்கு "உனது கண்னில் ஏற்பட்டுள்ள நோய் நரம்புகளோடு சம்பந்தமானதாம். சந்திர சிகிச்சை உயிருக்கே ஆபத்து உண்டாக்கலாமென்று டாக்டர் நெல்சன் கூறுகிறார். இந்த நோய் மிகவும் அரிதாகவே ஏற்படுமாம். ஆகவே சந்திர சிகிச்சை செய்ய அவர் அஞ்சுகிறார் ஸ்ரீதர்" என்றார்.

"மேல் நாடுகளில் இதற்குச் சிகிச்சை இருக்கக் கூடுமல்லவா?" என்றான் ஸ்ரீதர்.

"அங்கும் இந்த நிலைதானாம். சந்திர சிகிச்சை பற்றி உத்தரவாதம் கொடுக்க முடியாதென்கிறார். சில சமயம் உயிருக்கே ஆபத்து விளையலாம் என்று அவர் தெளிவாகக் கூறும்போது நாம் எப்படி அதற்குச் சம்மதிக்க முடியும்?" என்றார் சிவநேசர்.

"அப்படியானால் குருடனாயிருக்க வேண்டுமென்பது தான் என் தலை விதி போலும்." என்று பெருமூச்சு விட்டான் ஸ்ரீதர்.

ஒரு நாள் ஸ்ரீதர் அம்மாவிடம் குருடர் பாடசாலையில் குருடர்களுக்குப் புத்தகம் வாசிக்கச் சொல்லிக் கொடுப்பது பற்றிப் பேசினான். " நானும் அதைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். பிரெயில் முறை என்று அதற்குப் பெயராம். லூயி பிரெயில் என்ற பிரெஞ்சுக்காரர் கண்டுபிடித்த முறை. குருடர்களுக்கு அறிவுக் கண்ணைக் கொடுத்தவர் அவர். நானும் அதைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்." என்றான் அவன்.

அவன் இவ்வாறு சொல்லி நாலைந்து நாட்களிலேயே கொழும்புக்குச் சென்று ஒரு பிரெயில் வாத்தியாரை அம்ர்த்திவிட்டார் சிவநேசர். சீக்கிரமே பிரெயிலைக் கற்றுப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினான் அவன். கொழும்பில் குருடர் செவிடர் பாடசாலை முகாமைக்காரரோடு, ஏற்பாடு செய்து பிரெயிலில் வெளியிடப்பட்ட பல நாவல்களையும் நாடகங்களையும் கவிதை நூல்களையும் கூட மகனுக்குப் பெற்றுத் தந்தார் சிவநேசர். அவர்கள் செய்த இவ்வுதவிக்குத் தமது பதிலாகக் குருடர் செவிடர் பாடசாலைக்கு ரூபா இருபத்தையாயிரம் நன்கொடை வழங்கவும் அவர் தவறவில்லை.

இவை இப்படிப் போய்க் கொண்டிருக்க, தன் காதலி பத்மா விஷயமாக ஸ்ரீதரின் மன நிலை எப்படியிருந்தது? சூரை மரத்தடியில் நாடகத்துக்கு மறுதினம் தந்தையாருடன் அவன் செய்து கொண்ட ஒப்பந்தப் பிரகாரம் பத்மாவைச் சிவநேசரே அனுமதித்தாலன்றித் தான் மணப்பதில்லை என்று அவன் ஒப்புக் கொண்டிருந்தானல்லவா? சிவநேசரையும் பாக்கியத்தையும் பொறுத்தவரையில் இது அவர்களின் அன்பு மகன் செய்த பெரும் தியாகமாகவே அவர்களுக்குப் பட்டது. ஆனால் ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் இத்தகைய ஒப்பந்தத்திற்குத் தான் வந்தமை உண்மையில் தான் பத்மாவுக்குச் செய்த மன்னிக்க முடியாத துரோகமாகவே பட்டது. "என்னுடைய இன்பத்தைத் துறப்பதற்கு எனக்கு உரிமை இருக்கலாம். அவ்வாறு என் இன்பத்தை நானே துறப்பதைத் தியாகம் என்று கூடக் கொண்டாடலாம்தான். ஆனால் இன்னொருவர் இன்பத்தை, பத்மாவின் இன்பத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்ய எனக்கு என்ன உரிமை இருக்கிறது? நம்பியிருந்தவளை நட்டாற்றில் விட்டுவிட்டேனே. தந்தை மீது கொண்ட அன்பாலும் என் உள்ளத்தின் மிருதுத் தன்மையாலுமல்லவா நான் அவ்வாறு நடந்து கொண்டேன். மிருதுத்தன்மை. இல்லவே இல்லை. இதுதான் கோழைத்தனமென்பது, ஐயோ, நான் எவ்வளவு கொடியவன். பொறுப்பற்றவன். ஒரு பெண்னைக் காதலித்து இல்லாத நம்பிக்கை எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்துப் பின்னர் மெல்ல நழுவி விட்டேனே! பெரிய மோசமல்லவா இது. அப்பாவை விட்டு என்னால் வாழ முடியாது. அம்மாவின் அன்பில்லாமல் என்னால் இவ்வுலகில் இருக்க முடியாது, என்பதால் அந்தோ பத்மாவைப் பரிதவிக்க விட்டுவிட்டேன். நான் பொய்ப்பெயர் கூறி ஆள்மாறாட்டம் செய்து பத்மாவிடம் அகப்பட்டுக் கொண்டபோது, "என்னை மோசம் செய்யத் தானே இந்த நாடகம்" என்று அவள் என் மீது குற்றஞ் சாட்ட நான் எவ்வளவு யோக்கியன் போல அதிக ஆத்திரத்துடன் அதற்குப் பதிலளித்தேன். ஆனால் நான் யோக்கியன்தானா? என் போல் பரம அயோக்கியன் யாரிருக்கிறான்?" என்று தன்னைத்தானே கடிந்து கொண்டான் அவன்.

இந்த எண்ணங்கள் அவன் மனதை அழுத்திக் கொண்டிருந்த போதுதான் அவன் கண் நோய் கடுமையாக ஆரம்பித்தது. ஒரு நாள் பத்மாவுக்குக் கடிதம் எழுதலாமா என்று கூட அவன் யோசித்தான். காகிதத்தையும் பேனாவையும் கூட எடுத்து வைத்துக் கொண்டான். ஆனால் என்ன எழுதுவது? தன் துரோகத்தை எவ்வாறு அவளிடம் சொல்லுவது? இவ்வாறு நினைத்துக் கொண்டதும் காகிதம் எழுதும் யோசனையைக் கை விட்டான். கட்டிலில் படுத்துக் கொண்டழுதான். அழுவதை விட என்ன செய்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை.

ஆனால் பத்மாவின் நினைவென்னவோ அவன் உள்ளத்திலிருந்து மறைவதாயில்லை. அது தினந்தோறும் உள்ளத்தில் வளர்ந்து கொண்டே போவது போல் தோன்றியது. பத்மா பத்மா என்று ஸ்மரித்துக் கொண்டே அவன் காலம் கழிந்தது. மோகனாவை ஒரு நாள் கூட்டுக்கு வெளியே எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு அதற்கு "பத்மா பத்மா" என்று கூப்பிடக் கற்றுக் கொடுத்தான். அதுவும் சீக்கிரமே பத்மா என்று கூவப் பழகிவிட்டது.

இவ்வாறு காலம் போய்க் கொண்டிருந்த போது தான் அவன் கருவிழிகளை இருட்படலம் முற்றாகக் கெளவி அவனைக் குருடனாக்கியது. குருடாகிய ஆரம்பத்தில் மனம் சிறிது காலத்துக்கு வேறு திசைகளில் சஞ்சரித்ததாயினும் குருட்டு வாழ்க்கை நிரந்தரமாகிவிட்டது என்றதும், இனி என்ன செய்வது என்ற நினைப்பில் மனதில் ஓர் அமைதி பிறக்கவே செய்தது. அந்த அமைதியிலே மீண்டும் பத்மாவின் நினைவலைகள் கடல் அலை போல் தோன்றி மோத ஆரம்பித்தன.

ஸ்ரீதருக்குக் கண் குருடான செய்தி நன்னித்தம்பிக் கிளாக்கர் மூலமும், பண்டிதர் சின்னைய பாரதி மூலமும், வேலைக்காரர்கள் டிரைவர் மூலமும் அக்கம் பக்கங்களில் ஓரளவு பாவவே செய்திருந்தது. இது விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்த பல்கலைக்கழக மாணவி தங்கமணியின் காதுக்கும் எட்டியது.

நன்னித்தம்பியின் மகள் சுசீலா தங்கமணியோடு உள்ளூர் அரசாங்கப் பாடசாலையில் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவள். நன்னித்தம்பிவீட்டு வாசல் வழியாகத் தங்கமணி போய்க் கொண்டிருந்த போது தற்செயலாகச் சுசீலாவைப் பார்த்தாள். இருவரும் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள். அப்பொழுது சிநேகிதிகள் நாவில் நடமாடிய ஊர் வம்பில் ஸ்ரீதரும் இடம் பெற்றான்.

"பாவம், அந்தச் சிவநேசரின் மகன் ஸ்ரீதர் இருக்கிறார்களல்லவா? அவருக்கு இரண்டு கண்களும் பொட்டையாகிவிட்டன." என்றாள் சுசீலா.

தங்கமணி "என்ன உண்மையாகவா?" என்று கேட்டு விவரங்கள் யாவையும் தெரிந்து கொண்டாள். அடுத்த வாரம் விடுமுறை முடிந்ததும் இச்செய்தி பல்கலைக்கழகத்து மூலை முடுக்கெல்லாம் பாவியது. பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், மாணவிகள் எல்லோரும் அது பற்றிப் பேசிக்கொண்டார்கள். "அவன் குருட்டு மன்னன் ஈடிப்பஸ் பாகத்தில் நடித்துக் கடைசியில் தானே குருடாகி விட்டான்." என்றான் ஒரு மாணவன்.

தங்கமணி இச்செய்தியைப் பத்மாவுக்குக் கூறிவிட வேண்டுமென்று துடிதுடித்தாள். ஆனால் என்ன காரணமோ விடுமுறை முடிந்து வகுப்புகள் தொடங்கி இரண்டு மூன்று தினங்களாகியும் பத்மா, தங்கமணி கண்னில் பட வில்லை. கடைசியில் அவள் சற்றும் எதிர்பாராத சூழலில் பத்மாவைப் பிடித்தாள் தங்கமணி. ரெஜினாவும் அவளும் கொழும்பு மெயின் வீதியில் துணி வாங்கப் போன சமயத்தில் அவர்கள் முன்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. அதில் கமலநாதன் இருந்தான். அதன் பின் சீட்டில் பத்மா ஷிப்ட் என்னும் நாகரிகக் கவுன் அணிந்து கறுப்புக் கண்ணாடியுடன் பறங்கிப் பெண் போல் காட்சியளித்தாள். அவள் தலையில் வண்ணப் பூக்களிட்ட ஒரு "ஸ்கார்ப்." கமலநாதனிடம் ஏதோ கூறிச் சிரித்துக் கொண்டு இறங்கிய அவளைத் தங்கமணி வழி மறித்தாள்.

"பத்மா! ஆளை அடையாளமே காணவில்லை. இந்த உடை உனக்குப் பிரமாதம்." என்றாள் தங்கமணி.

"அப்படியா" என்று புன்னகை செய்தாள் பத்மா.

தங்கமணி "உன்னிடம் நான் ஒரு விஷயம் தனியே பேச வேண்டும். இங்கே வா" என்று பத்மாவை நடைபாதையின் ஓர் ஓரத்துக்கு அழைத்துச் சென்றாள்.

"நான் ஊரிலிருந்து இவ்வாரம் தான் வந்தேன். ஸ்ரீதருக்குப் பயங்கரமான கண் நோய். இரண்டு கண்களும் பொட்டையாகிவிட்டன. ஒன்றுமே தெரியாதாம். முழுக் குருடனாகிவிட்டார். என்ன வைத்தியம் செய்தாலும் சுகப்படாதென்று டாக்டர் சொல்லிவிட்டாராம்."

"என்ன?" என்று திடுக்கிட்டாள் பத்மா. தங்கமணி "அதற்கென்ன பத்மா? நீதான் புது ஆள் பிடித்து விட்டாயே. யார் இந்த புதிய மச்சான்?" என்று கேலியாகப் பேசினாள் தங்கமணி.

பத்மா பதிலளிக்கவில்லை. "அப்படியானால் அதுதான் அவர் எனக்குக் கடிதம் எழுதவில்லை போலும்" என்று தனக்குள் தானே கூறிக் கொண்டாள் அவள்.

பின்னர் கமலநாதனுடன் அவள் சில சாமான்கள் வாங்க ஒரு கடைக்குள் புகுந்தாள். தங்கமணியும் ரெஜினாவை அழைத்துக் கொண்டு துணி வாங்கப் போனாள்.

வழியில் ரெஜினா "உன் தோழி பத்மாவைப் போன முறை பார்த்தபோது சேலை அணிந்திருந்தாள். இப்பொழுது உடையை மாற்றிக் கொண்டு விடாள். அவள் அணிந்திருக்கும் ஷிப்ட் அவளுக்கு அழகாயிருக்கிறது." என்றாள்.

தங்கமணி வெடுக்கென்று "ஆமாம். ஆனால் ஆவள் உடையை மட்டுமா மாற்றியிருக்கிறாள்? மாப்பிள்ளையையும் அல்லவா மாற்றி விட்டாள்" என்றாள்.

கடையிற் சாமான்களை வாங்கியபின் கமலநாதனின் பின்னே மோட்டர் சைக்கிளில் உட்கார்ந்து போய்க் கொண்டிருந்த பத்மா சிந்தனையில் முழ்கியிருந்தாள். "நல்ல வேளை! எத்தகைய பெரிய விபத்தில் நான் சிக்குதற்கிருந்தேன். ஸ்ரீதர் என்னை ஏற்கனவே மணம் முடித்திருந்தானானால் நான் இப்பொழுது ஒரு குருடனில் மனைவியாகி இருப்பேனல்லவா? அந்தச் சுந்தரேஸ்வரர்தான் என்னைக் காப்பாற்றினார். எவ்வளவுதான் பணமும் நடிப்பும் அழகும் இருந்தாலும் குருடனின் மனைவியாகக் காலந்தள்ளுவது இலேசா என்ன?" என்று சிந்தித்த அவள் கமலநாதன் தனக்குக் கிடைத்தது அதிர்ஷ்டமே என்று தனக்குள் தானே கூறிக் கொண்டு அவனது முதுகைத் தன் கரங்களோல் அன்போடு தடவி விட்டுக் கொண்டாள்.

ஸ்ரீதரிடமிருந்து பத்மா தனது மனதைக் கமலநாதன் பால் மாற்றிக் கொண்டது தந்தை பரமானந்தருக்கு இன்னும் தெரியாது. அதை எவ்வாறு கூறுவதென்று தயங்கிக் கொண்டிருந்த அவளுக்கு ஸ்ரீதர் குருடனாகிவிட்டது ஒரு நல்ல செய்தி போலவே தோன்றியது. "ஸ்ரீதர் குருடனாகிவிட்டான். இந் நிலையில் பத்மா அவனை எப்படிக் கட்டுவது? கமலநாதன் அவளைத் திருமணம் செய்ய விரும்புகிறான். செய்து கொடுத்து விட்டால் என்ன? என்று அன்னம்மாக்காவை அப்பாவிடம் பேசும்படி தூண்டிக் காரியத்தைச் சாதித்துவிடலாம். எல்லாம் நல்லதுக்குத்தான்." என்றது பத்மாவின் உள்ளம்.

பத்மாவும் கமலநாதனும் பரமானந்தருக்குத் தெரியாமல் தான் நெருங்கிப் பழகி வந்தனர். பத்மா பல்கலைக்கழகத்துக்குப் போகும் வழியில் அல்லது வரும் வழியில் தான் அவர்கள் சந்தித்துக் கொள்வது வழக்கம். அன்றும் அவ்வாறுதான் அவர்கள் சந்தித்துக் கொண்டனர். மோட்டார் சைக்கிள் சவாரி பத்மாவுக்கு இப்பொழுது சர்வ சகஜமாகிவிட்டது. அதற்குச் செளகரியமாகவே வெளியில் போகும் போது கூட அவள் கவுன் அணியும் வழக்கத்தை மேற்கொண்டாள். முதலில் சற்று தயக்கத்தோடுதான் அவள் இப்பழக்கத்தை மேற்கொண்டாள். பரமானந்தரைப் பொறுத்த வரையில் தம் மகள் நீச்சலுடைப் போட்டியில் கூடப் பங்குபற்றி விட்டதால், இப்பொழுது அவள் என்ன உடையை அணிந்தாலும், அவர் அதைப் பற்றி இலட்சியம் செய்வதில்லை. மேலும் இந்த உடைகள் எல்லாமே நீச்சல் ராணிக்கு இலவசமாகக் கிடைத்த பரிசுகள். எனவே பத்மா தன்னிஷ்டம் போல் அவற்றை அணிந்து மகிழட்டும் என்று அவர் விட்டு விட்டார். இன்னும் அக்கம்பக்கத்திலுள்ள பெரிய இடத்துப் பெண்கள் பலரும் இவற்றை அணிந்து கொள்வதைத் தமது மூக்குக் கண்ணாடிக் கூடாக அவர் பல தடவை பார்த்திருக்கிறார். இந் நிலையில் அவற்றை அணியக் கூடாதென்று கூறுவது சுத்தக் கர்நாடகம் என்பது அவர் நினைப்பு. பத்மா இவ்வாறு புது மோஸ்தர் உடைகளை அணிவதைப் பற்றி அடுத்த வீட்டு அன்னம்மாக்க மட்டும் ஒரு நாள் ஏதோ கூறினாள். அதற்கு "போங்க அன்னமாக்கா. இன்று எல்லாப் பெண்களும் தான் இப்படி உடுத்துகிறார்கள். நான் மட்டும் இப்படி உடுத்தினால் என்னவாம். நீஙக கூட என் வயசாயிருந்தால் கட்டாயம் இப்படி உடுத்த விரும்புவீர்கள். ஏன் இந்த உடை எனக்கு அழகாயில்லையா?" என்றாள். "அழகுக்குக் குறைச்சலில்லை. அடக்கம் தான் குறைவாயிருக்கிறது." என்றாள் அன்னம்மாக்கா. "அது பரவாயில்லை" என்றாள் பத்மா.

பத்மாவும் கமலநாதனும் வழியில் பலதையும் பேசிக் கொண்டார்கள். கமலநாதன் "பத்மா, எப்போது எங்கள் கல்யாணம்?" என்று கேட்டான். "சீக்கிரமே ஏற்பாடு செய்கிறேன். பாருங்கள்" என்றாள் பத்மா.

ஸ்ரீதர் கண்கள் குருடானது பற்றி சுழிபுரம் கந்தப்பசேகரர் பங்களாவிலும் பேச்சடிப்பட்டது. யாழ்ப்பாணம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற புற்றுநோய்ச் சங்க ஆண்டு விழாவுக்குப் போயிருந்த போது அங்கு வந்திருந்த டாக்டர் நெல்சன் இச்செய்தியை அதிகார் அம்பலவாணரிடம் கூறியிருந்தார். அவரே இச்செய்தியைக் கந்தப்பசேகரர் பங்களாவுக்கு எடுத்து வந்தவர். இப்படிப்பட்ட செய்திகளைத் தாங்கிச் செல்வதில் அதிகார் அம்பலவாணருக்கு எப்பொழுதுமே மிகவும் மகிழ்ச்சி.

"மிஸ்டர் கந்தப்பசேகரர்! உங்கள் மகள் அதிர்ஷ்டசாலி. தப்பி விட்டாள்." என்றார் அவர்.

"என்ன விஷயம்? தெளிவாக சொல்லுங்கள்." என்றார் கந்தப்பசேகரர்.

"அதாவது ஸ்ரீதருக்கு இரண்டு கண்களும் சந்திர சிகிச்சை முடியாத அளவுக்குப் பொட்டையாகிவிட்டனவாம். நல்ல வேளை! நீங்கள் விரும்பியபடி திருமணம் சிறிது நாட்களுக்கு முன்னர் நடந்திருக்குமானால் உங்கள் மகள் இப்பொழுது குருடன் மனைவியாகியிருப்பாளல்லவா? உங்கள் நல்ல மனது காரணமாகவே கடவுள் அப்படிப்பட்ட சோதனையை உங்களுக்கு ஏற்படுத்தவில்லை." என்றார் அதிகார் அம்பலவாணர்.

கந்தப்பசேகரர் அதை அப்படியே ஒப்புக் கொண்டார். டாக்டர் அமுதா கூட தன்னை ஸ்ரீதருக்கு வாழ்க்கைப்படாது காப்பாற்றியது நல்லூர்க் கந்தன் தான் என்று நம்பினாள். "இல்லாவிட்டால் நான் குருடன் மனைவியாகியிருப்பேனே" என்று கூறிக் கொண்டாள் அவள்.

ஸ்ரீதரின் கண்களைப் பற்றிப் பேசப்பட்ட மற்றோரிடம் கிளாக்கர் நன்னித்தம்பி வீடு. தினசரி வீடு போய்க் கை கால் அலம்பிச் சாப்பிட்டு முடித்ததும் மனைவி செல்லம்மாவிடமும் மகள் சுசீலாவிடமும் சிறிது நேரம் வெற்றிலை போட்டுப் பேசிக் கொண்டிருப்பது அவரது வழக்கம். ஸ்ரீதர் தன் பார்வையை முற்றாக இழந்து விட்ட அன்று இரவு நன்னித்தம்பி அத்துக்கச் செய்தியை மனைவிக்கும் மகளுக்கும் மிக உணர்ச்சியோடு சொன்னார்.

"பாவம் சிவநேசர் மகன். மிகவும் நல்லவன். தகப்பனை விட மேலான குணம். அவரிடம் அகங்காரமும் மிடுக்கும் உண்டு. ஸ்ரீதரிடம் அவையுமில்லை. குழந்தை உள்ளம் படைத்த அவனுக்கு இப்படி நேர்ந்ததே" என்று சோகத்தோடு சொன்னார் அவர். சுசீலா தந்தை கூறிய விவரங்களைக் கேட்டுத் திகைத்தாள். "யாருக்கு கண் போய் விட்டதென்று சொன்னீர்கள்? ஸ்ரீதருக்கா? பாவம், அன்று உங்கள் கந்தோரில் என்னோடு பேசியபோது அவர் கண்கள் நன்றாகத்தானே இருந்தன? மிகவும் அழகான கண்கள் என்று கூட நினத்தேன். பாவம், நல்ல குணம். வேடிக்கையாய்ப் பேசினாரல்லவா அப்பா? அவருக்கா கண்கள் போய்விட்டன?" என்று கேட்டாள் அவள்.

அதற்கு நன்னித்தம்பியர் "ஆம் சுசீலா அவனுக்குத்தான் கண்கள் போய்விட்டன. எல்லாம் அவரவர் தலைவிதி. அதை யாரால் அழித்தெழுத முடியும்." என்றார்.

நன்னித்தம்பியர் மனைவி செல்லம்மாவோ, ஸ்ரீதர் சிறு குழந்தையாயிருக்கும் போது அவனைத் தன் மடியில் தூக்கி வைத்து விளையாடியவள். அதை நினைவுப்படுத்திப் பேசினாள் அவள். "உங்களுடன் நான் அமராவதி வளவு விசேஷங்களுக்கு வரும்பொழுதெல்லாம் ஸ்ரீதரைத் தூக்கி வைத்து விளையாடியிருக்கிறேன். மிகவும் அழகாயிருப்பான். என்னை மாமி என்று கூப்பிடுவாள். பாவம் அவனுக்கு இப்படி வந்ததே" என்று வருந்தினாள்.

இவை நடந்து சற்றேறக் குறைய ஒரு மாதங் கழிந்த பின்னர் பாக்கியத்தின் வேண்டுகோளுக்கிணங்க சின்னைய பாரதியின் முயற்சியால் அமராவதி வளவுக் கோவிலில் ஸ்ரீதரின் பெயரில் விசேஷ பூசைகள் சில தொடங்கப்பட்டன. அவனது சாதகத்தைப் பார்த்த பிரபல சோதிடர் ஒருவர் சில குறிப்பிட்ட தெய்வங்களுக்கு ஒரு மாத காலம் பூசை செய்து நவக்கிரக சாந்தியும் செய்தால் ஸ்ரீதர் நாளடைவில் தன் கண் பார்வையைப் பெற இடமிருக்கிறது என்று கூறியிருந்தார். அதன்படி ஏராளமான பணச் செலவில் பூசைகள் ஆரம்பமாயின.

பூசையின் ஆரம்ப தினத்துக்குத் தந்தை சிவநேசர், தாய் பாக்கியம் ஆகியவர்களைத் தவிர சின்னைய பாரதியும் மனைவியும் கிளாக்கர் நன்னித்தம்பியர், அவர் மனைவி செல்லம்மா, மகள் சுசீலா ஆகியோரும் வந்திருந்தனர். நாதசுரம் வேணு தனது மேளக் கோஷ்டியுடன் வந்திருந்தான். இவர்களைத் தவிர அமராவதி வேலையாட்கள் எல்லோரும் கோவிலில் கூடியிருந்தார்கள். அர்ச்சகர் பஞ்சநாத ஐயர் பூசைகளை வழக்கம் போல் நடத்தி வைத்தார். பண்டிதர் சின்னைய பாரதியும் பிராமணராதலால் பூசைகளில் பஞ்சநாத ஐயருக்குத் துணை புரிந்தார்.

ஸ்ரீதர் பட்டுடுத்துப் பொட்டிட்டு மிகக் கம்பீரமாகவே விளங்கினானென்றாலும் தாய் பாக்கியம் அவனைத் தன் கரங்களால் வழிகாட்டி அழைத்து வந்த காட்சி மிகப் பரிதாபமாகவே இருந்தது. வழக்கத்தில் ஏறுபோல் நடக்கும் அவன் அன்று படிகளில் தட்டுத் தடுமாறி ஏறிய காட்சியைக் கண்டு எல்லோருமே கலங்கிவிட்டார்கள். சுசீலாவின் கண்களில் கண்ணீர் துளித்து விட்டது. சிவநேசரும் தன் கண்களைத் தன் சால்வையால் துடைத்துவிட்டுக் கொண்டார். பூசை செய்ய வந்த ஐயரின் கண்கள் கூடக் கலங்கின.

ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னர் தன்னோடு சிரித்து உரையாடிய ஸ்ரீதருக்கு இப்படித் திடீரெனக் கண் போய்விட்டதை நினைத்ததும் சுசீலா மனம் கலங்கி விட்டது. ஐயோ, பாவம், ஓர் இளைஞனுக்கு அவன் திருமணம் செய்ய வேண்டிய நேரத்தில் இப்படியும் நேரலாமா என்று வருத்தப்பட்டாள் அவள்.

அன்றிரவு பூசை முடியும் போது பத்து மணியாகிவிட்டது. மாரிகாலம், கடும் இருள். நன்னித்தம்பியரும் செல்லம்மாவும் சுசீலாவும் அமராவதி வளவிலிருந்து அரை மைல் தூரத்திலிருந்த தங்கள் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். நன்னித்தம்பியர் டோர்ச் லைட்டை அடித்துக் கொண்டு முன்னால் போனார். மனைவியும் மகளும் பின்னால் சென்று கொண்டிருந்தனர். முழு அமைதியுடன் விளங்க வேண்டிய அவ்விரவை வயல்களிலிருந்த தவளைகள் தம் சுருதியால் விண் கூவ வைத்திருந்தன. நன்னித்தம்பியர் எப்போதுமே ஏதாவது பேசிக் கொண்டிருப்பவர். ஸ்ரீதரைப் பற்றியும் சிவநேசரைப் பற்றியும் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். மனைவி செல்லம்மா அவரை ஆமோதித்துப் பேசிக் கொண்டு வந்தாள்.

நன்னித்தம்பியரின் ஒரு வழக்கம் என்னவென்றால் அவர் பேசுவதற்குப் போதிய எதிரொலி இருக்கிறதா என்று அவதானித்துக் கொள்வதாகும். கூட வருபவர்கள் போதிய ஆமோதிப்பு வசனங்கள் கூறாவிட்டால் அவரால் அதைச் சகிக்கவே முடியாது. இது விஷயத்தில் செல்லம்மா சாடிக்கேற்ற மூடி. அவர் ஒன்று பேசினால், அவள் ஒன்பது பேசி ஆமோதிக்கத் தவறுவதில்லை. இன்றும் அவள் பேசிக் கொண்டே வந்தாள். என்றாலும் சுசீலா ஒன்றுமே பேசாது மெளனமாயிருந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே திடீரென "சுசீலா எங்கே? ஏன் பேசாமல் வருகிறாய்?" என்று கூறிக் கொண்டே தமது டோர்ச் லைட்டை அவளது முகத்துக்கு நேராகப் பிடித்தார் அவர். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அப்படியே திகைக்க வைத்துவிட்டது. சுசீலா தன் மேல் உதட்டைக் கீழ்ப் பற்களால் கடித்துக் கொண்டிருந்தாள். கண்களிலிருந்து கண்ணீர் கன்னத்தில் ரேகையிட்டு ஓடிக் கொண்டிருந்தது. "என்ன சுசீலா ஏன் அழுகிறாய்?" என்றார் நன்னித்தம்பியர். அவள் அதைக் கேட்டுத் திடுக்கிட்டுவிட்டாள் என்றாலும் சமாளித்துக் கொண்டு தலையை ஆட்டி "ஒன்றுமில்லை" என்றாள்.

செல்லம்மாவும் மகளின் முகத்தைப் பார்த்தாள். "பாவம் அந்த ஸ்ரீதரின் குருட்டுத் தோற்றத்தைக் கண்டு அதற்கு இரங்கி அழுகிறாள். வேறென்ன. சுசீலாவுக்கு மிகவும் இளகிய மனசு. அவள் எப்பொழுதும் இப்படித்தான் எடுத்ததற்கெல்லாம் அழுது விடுகிறாள். அவளை நாம் இங்கே அழைத்து வந்திருக்கக் கூடாது. எங்கள் வீட்டுக் கோழி செத்ததற்குக் கூட இரண்டு நாள் அழுதவளல்லவா அவள்?" என்றாள்.

நன்னித்தம்பியர் "ஆனால் கோழியின் மீது சுசீலாவுக்கு மட்டும் தான் பிரியம் என்று எண்ணி விடாதே செல்லம்மா. எனக்கும் கோழி என்றால் பிரியம்தான். அதுவும் சூப்பு வைச்சால் அதிகம் பிரியம்." என்றார்.

சுசீலாவுக்கு இதைக் கேட்டதும் சிரிப்பு வந்து விட்டது. தன் அழுகையையும் மீறிச் சிரித்துவிட்டாள் அவள். "அழுத பிள்ளை சிரிக்குது" என்றார் நன்னித்தம்பியர். வேடிக்கையாக, "பார் அப்பாவை. யார் அழுதது? நான் அழவில்லை" என்றாள் சுசீலா.


20-ம் அத்தியாயம்: மோகனாவின் ஓலம்!

அரச குமாரன் போல் விளங்கிய அவனை ஆசையோடு பார்த்த சிவநேசரை மோகனாவின் பேச்சு நிலை குலைய வைத்தது. அது ‘பத்மா பத்மா’ என்று கூவியது. அக் கூவல் வெறும் மூன்றெழுத்து வார்த்தைகளாகத் தொனிக்கவில்லை அவருக்கு. ஏக்கத்திலும் தாபத்திலும் தோய்ந்தெடுத்த சொற்களாக, ஒரு காதலனின் இதயக் குமுறலிலே பொங்கி எழுந்த வார்த்தைகளாக வெளி வந்தன அவை.வேதனையில் வீழ்ந்திருந்த ஒருவன் விகடப் பேச்சுப் பேசினால், பேசுபவனுக்கு அது விகடமாக இருந்தாலும் கேட்பவர்களுக்கு அது சாதாரண வேதனையிலும் பார்க்க அதிக வேதனையையே உண்டு பண்ணும். ஸ்ரீதரின் பகடிப் பேச்சுகள் யாவும் அத்தகைய உணர்ச்சிகளையே பாக்கியத்துக்கு உண்டு பண்னின. இன்னும் பிள்ளை அனுபவிக்கும் துன்பம் தாய்க்கும் தந்தைக்கும் கொடுக்கும் வேதனை, அப்பிள்ளை தான் அனுபவிக்கும் துன்பத்திலும் பார்க்க அதிகமாகவே இருக்கிறது. இயற்கையின் நெறியாலும் சமுதாயக் கூட்டுறவாலும் ஏற்படும் இப்பிள்ளைப் பாசத்தோடு ஒப்பிடக் கூடிய பேருணர்ச்சி இவ்வுலகில் வேறில்லை என்றே கூற வேண்டும். மக்கட் பேறு மதிக்கவொண்ணாத பேறாக இருப்பதினாலேயே தாய் தந்தையருக்குத் தம் பிள்ளைகள் மீது இத்தகைய பாசம் ஏற்படுகிறது. அதனால் தான் திருவள்ளுவர் கூட\

"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற"

என்றார். (அறிவுள்ள பிள்ளைகளைப் பெறுவது போன்ற வேறு பேறு இவ்வுலகில் இல்லை.) ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் அவன் அறிவறிந்த மகன் என்பதில் ஐயமில்லை. அது மட்டுமல்ல, சில வகைகளில் தந்தை சிவநேசரிலும் பார்க்கச் சிறந்தவன் என்றும் பெயரெடுத்து வந்து கொண்டிருந்தவன் அவன்.

"தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது"

என்றும் வள்ளுவர் கூறியிருக்கிறார். (தம்மிலும் பார்க்கத் தம் மக்கள் அறிவுடையவராய் விளங்குதல் எவர்க்கும் இனிக்கும் ஒன்றாம்.) சிவநேசரும் தம் மகன் தம்மிலும் பார்க்கப் போற்றப்படுபவனாக வளர்ந்து வருவதை அறிந்து ஆனந்தம் கொண்டிருந்தவர். அப்படிப்பட்ட செல்லப்பிள்ளை, அதுவும் குலம் விளக்க வந்த ஒரே குருத்து கண்ணற்ற கபோதியாகி விட்டால் பெற்றோர்களால் அதை எவ்வாறு தாங்க முடியும்?

ஸ்ரீதர் அன்று காலை பத்து மணியளவில் காலை ஆகாரமருந்தி விட்டுத் தாயாருடன் வீட்டின் முன்னாலிருந்த பெரிய வேப்பமரத்தின் கீழிருந்த சிமெந்து ஆசனத்தில் உட்கார்ந்திருந்தான். கண் குருடாகிய பின் அவனுக்கு ஏற்பட்ட சந்தேகங்களில் ஒன்று "தன் கண்ணின் அழகு கெட்டுவிட்டதா?" என்பதாகும். ஸ்ரீதருக்குத் தன்னை எல்லோரும் கட்டழகன் என்றும், முக்கியமாகக் கண்ணழகன் என்றும் மெச்சுவது நன்கு தெரியும். அத்துடன், பத்மா முதல் முதலாக அவனோடு பம்பலபிட்டி "எஸ்கிமோ" ஐஸ்கிறீம் பார்லருக்குச் சென்று ஐஸ்கிறீம் அருந்திய அன்று " நான் உங்களை உங்களது அழகிய கண்களுக்காகவே காதலிக்கிறேன்" என்று கூறிய வார்த்தைகள் இன்னும் அவன் காதில் வீணா கானம் போல் ஒலித்துக் கொண்டிருந்தன. "இப்படி பலராலும் போற்றப்பட்ட நீண்ட என் குறுகுறுத்த விழிகள் இன்று ஒளியிழந்து விளங்குகின்றனவோ?" என்று ஐயப்பட்ட அவன் அதற்காக விசனிக்கவும் செய்தான். இளமையும் கலையுணர்ச்சியும் அழகின்பால் அளவில்லாத ஆர்வமும் கொண்ட ஒரு யுவனுக்கு இயற்கையாக ஏற்படும் விசனம்தானே அது? உண்மையில் ஒளியிழந்த தன் கண்களை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்று கூட அவன் எண்ணினான். அதனால் முன்னர் பகலில் அதுவும் வெயில் நாளில் வெளியில் போகும் போது மட்டும் தான் அணியும் குளிர்ச்சிக் கண்ணாடியை இரவு பகல் என்று பாராது எந்நேரமும் அணியும் பழக்கத்தை அவன் மேற்கொண்டான். அது மட்டுமல்ல, அழகாக உடுத்திக் கொள்ளுவதையும் அவன் விடவில்லை. சிறுவயதிலிருந்தே அது அவனுக்கு இரண்டாவது இயற்கையாகிவிட்டது. ஆகவே, காலையில் அவன் குளித்த முடித்ததும் தாய் பாக்கியம் அவனுக்கு வேண்டிய காற்சட்டையையும் புஷ் ஷெர்ட்டையும் அவனுக்குக் கொண்டு வரச் செல்லும் போது "அம்மா, பெரிய நீலப் பூவிட்ட அந்த வெள்ளை புஷ் கோட்டையும் அந்தக் கறுப்புக் காற்சட்டையையும் கொண்டு வா" என்று திட்டவட்டமாகத் தனக்கு வேண்டிய உடைகளைப் பற்ரி விவரமாகக் கூறுவான்.

அவன் அணிந்து கொண்டு வந்ததும் "அம்மா நான் சொன்ன சட்டைகளைத்தானே கொண்டு வந்தாய்? குருடனென்றாலும் எனக்கு வண்ணச் சட்டைதான் வேண்டும்" என்பான் சிரித்துக் கொண்டு.

பின் "அம்மா, நீ நீலக் காற்சட்டை என்று சொல்லி சிவப்புச் சட்டையைக் கொண்டு வந்தாலும் நான் என்ன செய்வது அம்மா?" என்று கேட்பான்.

"சீ, ஸ்ரீதர் அப்படிச் செய்வேனா நான்? நீ சொல்லும் சட்டையை எப்படியும் தேடிக் கொண்டு வருவேன்" என்பாள் தாய்.

"அப்படி நீ வேறு நிறச் சட்டையைக் கொண்டு வந்தாலும் என்ன நட்டம்? எனக்குத்தான் கண் தெரியாதே. உனக்குத்தான் நட்டம். உன் பிள்ளை அழகில்லாமல் இருப்பான். பார்ப்பவர்கள் சிரிப்பார்கள். அவர்களுக்காகத் தான் நான் சட்டை உடுத்த வேண்டியிருக்கிறது." என்பான் ஸ்ரீதர்.

"என் பிள்ளை அழகில்லாமலிருப்பானா? அவனைப் போல் அழகானவன் இவ்வுலகிலேயே இல்லை ஸ்ரீதர்" என்பாள் தாய்.

"அழகிருந்தென்ன? உன் பிள்ளை குருடன்தானே" என்பான் ஸ்ரீதர். அவன் அப்படிக் கூறும் வேளைகளிலே தன் கைகளால் அவன் வாயைப் பொத்துவாள் பாக்கியம். "இப்படி எல்லாம் பேசாதே" என்று மன்றாடுவாள்.

இன்று காலையும் ஸ்ரீதர் அழகான காற்சட்டையும் புஷ் ஷேர்ட்டுமணிந்து கம்பீரமாகவே விளங்கினான். வேப்ப மர நிழலில் கொட்டும் வேப்பம் பூக்களின் மணத்தையும் வீசு தென்றலின் குளுமையும் அனுபவித்துக் கொண்டு தாயோடு பேசிக் கொண்டிருந்தான் அவன். சற்றுத் தொலைவில் எங்கோ ஒரு மரத்தில் குயில் ஒன்று மறைந்திருந்து கூகூவென்று கூவிக் கொண்டிருந்தது. சண்பகப் பட்சி ஒன்றும் இடையிடையே தன் குரலை எழுப்பியது.

ஸ்ரீதர் பாக்கியத்திடம் "அம்மா, உன் மீது எனக்குக் கோபம். நான் குருடனாகி விட்டேனென்று எனக்கு நீ ஒரு கோல் வாங்கிக் கொடுக்கவில்லையே. எப்போது வாங்கிக் கொடுப்பாய்?" என்றான் விளையாட்டாக.

பாக்கியம் "உனக்குக் கோல் வேண்டியதில்லை. நான் பக்கத்திலிருக்கும்போது கோல் எதற்கு? நானே உன்னை விரும்பிய இடத்துக்கு அழைத்துச் செல்வேன்," என்றாள்.

ஸ்ரீதர் "போ அம்மா. எனக்குக் கோல் வேண்டும். நீ கோல் வாங்கப் பணம் செலவாகும் என்று பார்க்கிறாய்! எனக்குப் பணம் கொடுக்காமலே கோல் வாங்கத் தெரியும் கொழும்பிலே ஒரு தர்ம ஸ்தாபனம் குருடர்களுக்கு இலவசமாக வெள்ளைக் கோல்களை வழங்குகிறது. அவர்களுக்குக் கடிதம் எழுதிப் போட்டால் இனாமாகவே கோலொன்றை அனுப்பி வைக்கிறார்கள். அவர்களுக்கும் புண்ணியம். எங்களுக்கும் பணம் மிச்சம்." என்று கூறினான்.

பாக்கியம் ஸ்ரீதரிடம் "ஸ்ரீதர் நீ எந்த நேரமும் உன் கண்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. வேறு விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும்." என்று கூறினாள்.

"ஆனால் நான் என்ன செய்ய, அம்மா? எனக்கென்னவோ என் கண்களைப் பற்றிய நினைவு தானே எந்த நேரமும் வந்து கொண்டிருக்கிறது" என்றான் ஸ்ரீதர்.

அதற்குத் தாய் "நீ பயப்பட வேண்டாம் ஸ்ரீதர். சின்னைய பாரதி உன் சாதகத்தைப் பார்த்து உன் கன்கள் நிச்சயம் உனக்கு மீண்டே தீரும் என்று சொல்லியிருகிறார். அத்துடன் கோவிலிலே பூசைகள், நவக்கிரக சாந்தி முதலியனவும் செய்து வருகிறோமல்லவா? என் குஞ்சுக்கு மாவிட்ட புரத்தான் கண்ணைத் தந்தே தீருவான். அஞ்சாமலிரு. எல்லாம் சரியாய் விடும்." என்றாள்.

"எனக்கென்னவோ இவற்றில் நம்பிக்கையே இல்லை. இருந்தாலும் நீ ஏற்பாடு செய்யும் பூசைகளில் நான் கலந்து கொள்வது உனக்காகத்தான் அம்மா. நான் பூசைகளுக்கு வராவிட்டால் நீ கவலைப்படுவாய் அல்லவா அம்மா?" என்றான் ஸ்ரீதர்.

இவ்வாறு சிறிது நேரம் பேசியிருந்த பின்னர், ஸ்ரீதர் வானொலியில் இசைத்தட்டு சங்கீதம் கேட்கச் சென்றான். அவனை அவன் அறையில் தன் கைகளால் அணைத்துச் சென்று விட்டு விட்டு, சிவநேசர் அறைக்குள் சென்றாள் பாக்கியம்.

அறையும் புகும் பொழுதே "என்னால் இதைத் தாங்க முடியாது. நான் செத்துப் போகிறேன்" என்று கதறினாள் பாக்கியம்.

சிவநேசர் நிமிர்ந்து பார்த்து விட்டு, "என்னாலும் தாங்க முடியாதுதான். ஆனால் நாம் என்ன செய்வது? பொறுத்துக் கொள்ளப் பழக வேண்டியதுதான்." என்றார்.

பாக்கியம் "பெற்ற மகன் கண்ணிமைக்காமல் பரிதவிக்க நான் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கிறேனே. எவ்வளவு கல் நெஞ்சு எனக்கு? இது அடுக்குமா? என் கண்ணிரண்டையும் பிய்த்தெறியப் போகிறேன். எனக்கு வேண்டாம் இக் கண்கள்." என்று உணர்ச்சிகரமாய்க் கதறினாள். கண்களிரண்டையும் தன் இரு கரங்களால் பிடுங்கப் போனாள் அவள்.

சிவநேசர் எழுந்து அவள் கைகளைத் தன் இரு கரங்களால் தடுத்து "பாக்கியம், உனக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா? நீயும் குருடாகிவிட்டால் அவனைப் பார்ப்பதார்? அவனுக்கு வழி காட்டுவதார்? அவனுக்காக நாங்களிருவரும் பல்லைக் கடித்துக் கொண்டாவது வாழத்தான் வேண்டும்?" என்றார். அதைக் கேட்ட பாக்கியம் கண்ணீர் சிந்தினாளென்றாலும் சிறிது நேரத்தில் அடங்கிவிட்டாள்.

அதன் பின் தம்பதிகளிருவரும் சிறிது பேசாதிருந்தனர். கொஞ்சம் கழித்து, பாக்கியம் பேசினாள்.

"பார்த்தீர்களா? கந்தப்பசேகரர் அமுதா விஷயத்தில் முன்னர் எவ்வளவு நாட்டமாக இருந்தார்? ஸ்ரீதர் கண்ணிழந்ததும் எல்லாவற்றையும் விட்டு விட்டார். குருட்டுப் பிள்ளைக்கு என்ன கல்யாணம் என்பது அவர்கள் எண்ணம் போலும். இவற்றை நினைத்தால் வயிறெரிகிறது." என்றாள்.

சிவநேசர் எப்பதிலும் பேசவில்லை. அவர் உள்ளம் பதில் கூற முடியாத அளவுக்கு நொந்து போயிருந்தது. ஸ்ரீதரின் கண்ணிழப்பு அவன் எதிர்காலத்தையே முற்றாக நாசமாக்கிவிட்டதே என்று கவலை அடைந்தார் அவர்.

இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருக்க, கொழும்பு ‘கிஷ்கிந்தா’வுக்கு ஸ்ரீதர் பெயருக்கு வந்திருந்த கடிதமொன்றை கிளாக்கர் நன்னித்தம்பி சிவநேசர் அறைக்கு எடுத்து வந்தார். "தம்பிக்கு வந்துள்ள கடிதம். யாராவது அவருக்கு வாசித்துக் காட்ட வேண்டும். அதுதான் அவரிடம் கொடுக்காமல் இங்கு கொண்டு வந்தேன்" என்றார் அவர்.

சிவநேசர் அதற்கு "பாக்கியம் அவனுக்கு வரும் கடிதங்களை நாங்கள் வாசிப்பது நல்லதல்ல. அவற்றில் எழுதப்பட்டுள்ள விஷயங்களில் சில சம்பவங்களை நாங்கள் அறிவது அவனுக்குப் பிடிக்காமலும் இருக்கலாம். நன்னித்தம்பியே அவற்றை வாசித்துக் காட்டட்டும். இவ்விஷயங்களில் அப்பா அம்மாவுக்கு முன் வெட்கப்படுவது போல் பிள்ளைகள் மற்றவர்கள் முன் வெட்கப்படுவதில்லை" என்றார்.

பாக்கியம் "கடிதம் எங்கிருந்து வந்திருக்கிறது?" என்று கேட்டான். "இங்கிலாந்திலிருந்து டாக்டர் சுரேஷ் எழுதியிருக்கிறார்" என்றார் நன்னித்தம்பி.

"ஓ! சுரேஷா? ஸ்ரீதர் மிகவும் சந்தோஷப்படுவான். நேற்றுக் கூட சுரேஷைப் பற்றி ஞாபகமூட்டினான். நன்னித்தம்பி உடனே போய் வாசித்துக் காட்டு" என்றாள் பாக்கியம்.

யாழ்ப்பாணம் வந்து பிறகு ஒரு நாளாவது ஸ்ரீதர் சுரேஷைப் பற்றிச் சிந்திக்காமல் கழிந்ததில்லை. சுரேஷ் சீமை சேர்ந்து இரண்டு மூன்று தினங்களின் பின்னர் தான் சுகமே அங்கு சேர்ந்ததாக ஒரு கடிதம் "அமராவதி" விலாசத்துக்கு அனுப்பியிருந்தான். தனக்குப் படிப்பு வேலை அதிகமாயிருப்பதால் அடிக்கடி கடிதம் எழுத முடியாதென்றும் எதிர்காலத்தில் ‘கிஷ்கிந்தா’ விலாசத்துக்கே தான் கடிதங்களை எழுத எண்ணியிருப்பதாகவும் அதில் அவன் கூறியிருந்தான். அதன் பின் எழுதிய முதலாவது கடிதம் தான் இன்று வந்திருந்த கடிதம்.

நன்னித்தம்பி ஸ்ரீதர் அறைக்குச் சென்று கடிதத்தை வாசித்துக் காட்டினார். சுகஷேமங்களைப் பற்றியும், தனது படிப்பைப் பற்றியும், தன்கேற்பட்ட சில வேடிக்கையான அனுபவங்களைப் பற்றியும் எழுதியிருந்த சுரேஷ் "ஸ்ரீதர், எப்பொழுது உன் திருமணம். வர முடியாவிட்டாலும். வாழ்த்தனுப்புவதற்கு எதிர்நோக்கியிருக்கிறேன். அம்மாவுக்கு, அப்பாவுக்கு, பத்மாவுக்கு எல்லோருக்கும் என் அன்பைச் சொல்லு" என்று முடித்திருந்தான்.

கடிதத்தைக் கேட்டு முடிந்ததும் ஸ்ரீதர் பெருமூச்சு விட்டான். "நான் கண் நோயுற்றிருக்கும் இந்நேரத்தில் சுரேஷ் பக்கத்திலிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? நன்னித்தம்பி காகிதம் கொண்டு வருகிறாயா. நான் என் கைப்பட சுரேசுக்குப் பதிலெழுத வேண்டும். நீ பக்கத்திலிருந்து உதவினால் என்னால் எழுத முடியும்." என்றான் ஸ்ரீதர்.

பெரிய எழுத்துகளில் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் ஏறக்குறைய அரை அங்குல இடைவெளிவிட்டு அவன் எழுதிய கடிதத்தில், தன் கண்கள் பார்வை இழந்தவை, டாக்டர் நெல்சன் அது பற்றிக் கூறிய குறிப்புகள், தந்தையாரும் தானும் தனது திருமணம் பற்றிச் செய்து கொண்ட ஒப்பந்தம், தான் பிரெயில் கற்று வருவது முதலியவற்றைப் பற்றி விரிவாக எழுதினான் ஸ்ரீதர். முடிவில் "சுரேஷ், கண்ணற்றவன் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பது எவராலும் அறிந்து கொள்ள முடியாது. ஒரு நாள் முழுவதும் உன்னை முற்றாக ஒரு துணியால் கட்டி விட்டு வாழ்ந்து பார். இருளிலே பயங்கரமான இருள் கண்ணில்லாதவன் இருள். சிறையில் கொடியது இருட் சிறை. அழகின் அனுபவம் குருடனுக்கில்லை. நேரம் போகாது நடந்து திரிதல் முடியாது. ஒரு கருஞ் சுவருக்கு முன்னர் எப்பொழுதும் உட்கார்ந்திருத்தல் போன்ற நிலை. அதுவும் மூடிய கண் இனி எப்போதும் ஒளியில் திறக்காது என்று தெரிந்தபின் ஏற்படும் மன ஏக்கத்தை எப்படிச் சொல்வது? சில சமயங்களில் எல்லாவற்றையும் பிய்த்தெறிய வேண்டும் போன்ற சினம் ஏற்படுகிறது. இந்நிலையில் சங்கீதம் எனக்குத் துணை புரிகிறது. இசைத் தட்டுகளைக் கேட்டு மகிழ்கிறேன். அவைகள் எனக்குச் சிறிது சாந்தியைத் தருகின்றன. சுரேஷ், நான் ஏன் இவ்வுலகில் பிறந்தேன்? பணக்காரனாகப் பிறந்ததால் அவனுக்கென்ன குறை என்பார்கள். நான் கண்ட இன்பமென்ன சுரேஷ்? உன் நட்பு வேண்டுமானால் ஓர் இன்பமென்று சொல்லலாம். அம்மாவின் அன்பையும், என்னதான் இருந்தாலும் அப்பாவும் என்னை நேசிக்கவே செய்கிறார் - அவர் அன்பையும் இன்பமென்று சொல்லலாம். பத்மாவின் அன்பு? அதுதான் இப்பொழுது எட்டாததாகிவிட்டதே. என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது. இது உனக்கு எவ்வளவு கவலையைத் தருமென்று எனக்குத் தெரியும். கவலைப்படாதே. கவலைப்படுவதால் பலனில்லை" என்று எழுதி "உன் உயிருக்குயிரான நண்பன் ஸ்ரீதர்" என்று கை ஒப்பமிட்டான் அவன்.

ஸ்ரீதரின் இக் கடிதத்திற்கு ஒரு வாரத்திலேயே சுரேஷின் விமானத் தபால் மூலம் வந்துவிட்டது. அதில் அவன் ஸ்ரீதரின் கண்ணிழப்பால் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைக் கூறினாள். "ஸ்ரீதர், கவலைப்படாதே, நான் டாக்டர் நெல்சனுக்கு உன் கண் நோய் பற்றிய விவரங்களை எழுதும்படி கேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறேன். சுரேஷ் டாக்டராகியிருப்பது உனக்கு நல்லதென்று நினைத்துக் கொள். நான் கண் டாக்டரல்லாவிட்டாலும் இங்கு பெரிய வைத்தியப் பேராசிரியர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர்களிடையே சிறந்த கண் டாக்டர்களும் இருக்கிறார்கள். உன் நோய் பற்றி அவர்களுடன் கலந்து பேசுவேன். உனது கண் பார்வையை நீ மீண்டும் பெறுவதற்கு என்னாலான முயற்சிகளை எப்பொழுதும் செய்து கொண்டேயிருப்பேன்." என்று எழுதியிருந்தான் அவன். முடிவில், "ஸ்ரீதர், நீ நாடகப் பிரியனல்லவா? நீ கேட்டு மகிழ்வதற்காக பெர்னாட் ஷா போன்ற நல்ல நாடகாசிரியர்களின் ஒலிப்பதிவு செய்யப்பட்ட சில நாடகங்களை உனக்கு வாங்கி அனுப்பியுள்ளேன். இவை இலங்கையில் கிடையா. ரேடியோ கிராமில் இவற்றைப் போட்டுக் கேட்கும்போது சுரேஷை நினைப்பாயல்லவா? ஸ்ரீதரின் அன்பை மதிப்பது போல் சுரேஷ் வேறெதையும் இவ்வுலகில் மதிப்பதில்லை. உன் அன்புதான் எனக்கு உலகிலேயே மிகச் சிறந்தது. வாழ்க்கையைத் தைரியமாக எதிர்கொள். கண் பார்வையைப் பொறுத்தவரையில் கலங்காதே. இன்றுள்ள நிலையில் வைத்திய சாஸ்திரம் உன் கண் பார்வை மீள்வது கடினமென்று தீர்ப்பளிக்கலாம். ஆனால் தினசரி விஞ்ஞானம் முன்னேறி வரும் உலகில் நாளையோ, நாளை மறு தினமோ உன் கண் பார்வை மீள்வது இலகுவான காரியம் ஆகிவிடலாம். முன்னர் பயங்கரமான சத்திர சிகிச்சைகள் என்றூ கருதப்பட்ட பல இன்று மிக இலகுவானவை ஆகிவிட்டன. நீ இன்னும் இளைஞன். பொறுமை பலனைத் தரும். பொறு அஞ்சாதே. வெறி நிச்சயம்" என்று எழுதியிருந்தான் சுரேஷ்.

இவற்றை நன்னித் தம்பி வாசித்துக் காட்டிய போது ஸ்ரீதர் "நன்னித்தம்பி, சுரேஷைப் பற்றி என்ன நினைக்கிறாய்? நான் இவ்வீட்டின் தனிப்பிள்ளையாகப் பிறந்துவிட்டேன். எனக்கு ஒரு சகோதரன் இருந்தால் அவன் கூட இப்படி எனக்காகத் துடிதுடித்திருப்பானோ என்னவோ?" என்றான்.

நன்னித்தம்பி "உண்மைதான். சுரேஷின் கடிதம் தேறுதளிப்பதாகவே இருக்கிறது. அவர் சொல்வது போலத் தம்பிக்கும் கண் பார்வை மீண்டே தீரும். பயப்பட வேண்டாம்." என்றார்.

இவை இங்கே நடந்து கொண்டிருக்க, கொழும்பிலே பத்மா தனது வாழ்க்கைப் பாதையில் மேலும் ஓர் அடி எடுத்து கலந்து விட்டாள். இவ் விஷயத்தில் அடுத்த வீட்டு அன்னம்மாக்கா அவளுக்குப் பேருதவி செய்தாள்.

வழக்கம் போல, வாசம் வீசும் சூடான தோசைகளைச் சாப்பிட்டுக் கொண்டே அன்னம்மாவிடம் விஷயங்களை எடுத்து விளக்கினாள் பத்மா. ஸ்ரீதரின் கண்கள் குருடாகிவிட்டதை விவரமாகக் கூறி "நான், அவரைக் கட்டத்தான் வேண்டுமா?" என்று கேட்டாள் அவள்.

அதைக் கேட்ட அன்னம்மாக்கா "உனக்கென்ன பைத்தியமா? இரண்டு கண்ணும் குருடான கபோதியை யாராவது கல்யாணம் செய்வார்களா? விடு கதையை." என்றான் வெடுக்கென்று.

பத்மா அதற்கு "என்றாலும் அக்கா எனக்கு ஸ்ரீதரை நினைத்தால் பாவமாயிருக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை." என்றாள்.

அன்னம்மாக்கா "குருடனைக் கல்யாணம் கட்டினால் ஒரு நன்மை மட்டும் ஏற்படும்." என்று கூறினாள்.

"அது என்ன?"

"அவன் உன்னை அடிக்க வந்தால் இலகுவில் தப்பித்துக் கொள்ளலாம். நீ கேள்விப்பட்டதில்லையா? "குருடன் பெண்டாட்டியை அடித்த மாதிரி" என்று தமிழில் ஓர் வசனமிருக்கிறது. அதைத் தவிரக் குருடனைக் கல்யாணம் செய்வதால் வேறு நன்மை ஒன்றுமே இல்லை."

பத்மா அதைக் கேட்டுச் சிறிது நேரம் ஒன்றும் பேசாமலிருந்தாள்.

தோசைக் கல்லில் தோசை மாவைச் ‘சொய்’ என்று வார்த்துக் கொண்டே அன்னம்மா சிறிது நேரம் செல்ல மீண்டும் பேசினாள்.

"அத்துடன் நீயோ துடிதுடிப்பான பெண். வாழ்க்கையை அனுபவிக்க ஆசைப்படுபவள். ஆனால் யாருக்குத் தான் அந்த ஆசையில்லை? அப்படிப்பட்ட நீ குருடனைக் கட்டிக் கொண்டு என்ன இன்பம் காண்பாய்" என்றாள்.

"அப்படியானால் நான் என்ன செய்ய வேண்டும் அக்கா!"

"பத்மா, நீ என்னை ஏமாற்றவா பார்க்கிறாய்? எனக்கெல்லாம் தெரியும். சிங்காரவேலு சொன்னான். நீ தினசரி மோட்டார் சைக்கில் ஊர் சுற்றுகிறாயாமே, அந்த மீசைக்கார மாப்பிள்ளையைக் கட்ட வேண்டியதுதானே."

பத்மா நாணத்தால் சிறிது தலை குனிந்ததாளென்றாலும் விஷயத்தைத் தான் தன் வாயால் கூறாமல் அன்னம்மாவே கூறிவிட்டது அவளுக்குத் திருப்தியையே தந்தது. காரியத்தை இலகுவில் சாதிக்க வழி பிறந்து விட்தாக அவளுக்குத் தோன்றியது.

"அது சரி அக்கா, ஆனால் நான் என்ன செய்ய வேண்டும் ?"

" நீ ஒன்றும் செய்ய வேண்டாம். பேசாமலிரு. நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு கேள்வி - புது மாப்பிள்ளையின் பெயரென்ன? கமலநாதன் தானே?"

"ஆமக்கா, கமலநாதன் தான். விமலா-லோகாவின் அண்ணன்."

இவ்வாறு சொல்லிக் கொண்டே பத்மா அன்னம்மாவைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டாள். "அன்னம்மாக்கா, எனக்கு ஓர் அம்மாவைப் போல" என்று கூறினாள் அவள்.

அன்னம்மா சிரித்துக் கொண்டு "காரியம் முடியும் வரை எல்லோரும் இப்படித் தான் பேசுவார்கள். காரியம் முடிந்ததும் நீ யாரோ நான் யாரோ?" என்றாள்.

"சத்தியமாய் நான் அப்படிச் செய்ய மாட்டேன்." என்றாள் பத்மா.

பத்மா சொல்வதை "ஆம்" என்று ஆமோதிப்பது போல தோசைக் கல்லில் அன்னம்மாக்கா வார்த்த தோசை ‘சொய்’ என்று சப்தித்தது. இதற்கிடையில் குசுமா அங்கே வர, பேச்சு வேறு திசைக்குத் திரும்பியது.

அன்று பிற்பகல் அன்னம்மா ஸ்ரீதருக்குக் கண் குருடான செய்தியைக் கூறியதும் பத்மாவின் தந்தை பரமானந்தர் திடுக்கிட்டு விட்டார். "பாவம், நல்ல பையன். இப்படி நேர்ந்ததே" என்று பதைபதைத்த அவர் தொடர்ந்து, "ஆரம்பத்திலேயே இந்தக் கல்யாணம் நடக்குமா என்று சந்தேகிக்கவே செய்தேன். கோடீஸ்வரருக்கும் குச்சு வீட்டுக்கும் சரி வருமா என்று யோசித்தேன். நான் நினத்தது போலவே ஆகிவிட்டது." என்றார். கமலநாதனைப் பற்றிக் கூறியதும் "பத்மாவுக்கும் இஷ்டமென்றால் எனக்கும் இஷ்டம்தான். அவள் இஷ்டம் போலவே செய்துவிடலாம். ஆனால் கமலநாதன் வீட்டார் என்ன சொல்வார்களோ?" என்றார் பரமானந்தர். "அதெல்லாம் என் பொறுப்பு" என்றாள் அன்னம்மா.

இது நடந்த மறு தினம் கொழும்பு சவோய் தியேட்டரில் பல்கனி சீட்டில் தன் காதலன் கமலநாதன் தோளில் சாய்ந்து பிற்பகல் மாட்டினிக் காட்சி பார்த்துக் கொண்டிருந்த பத்மா அவன் காதில் இரகசியமாக "எங்கள் கல்யாணம் முடிந்ததும் என்னை எங்கே தேன் நிலவுக்கு அழைத்துச் செல்லப் போகிறீர்கள்?" என்று கேட்டாள்.

"தேன் நிலவா? அதுதான் கொள்ளுப்பிட்டியில் முடிந்து விட்டதே?" என்று புன்னகையோடு கூறிய கமலநாதன் "இருந்தாலும் உத்தியோக பூர்வமான தேன் நிலவு வேண்டுமானால் நூரளைக்குப் போவோம்" என்றான்.

"அது நல்லதுதான். நான் நூரளைக்கு முன் ஒரு போதும் பொனதில்லை" என்றாள் பத்மா.

திரையில் காதலர்கள் தம்மை மறந்த பரவச நிலையில் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து பத்மாவும் கமலநாதனும் தம்மை மறந்தார்கள். வார நாட்களில் மாட்டினிக் காட்சிக்கு பல்கனியில் பொதுவாக ஆட்கள் குறைவுதான். அப்படி வந்திருந்தவர்களிலும் பலர் பத்மா-கமலநாதன் போன்ற காதல் ஜோடிகளே. அவர்களும் தம்மவர்களுக்குத் தெரியாமல் இருளையும் தனிமையையும் நாடியே அங்கு வந்திருந்தனர். சம்பந்தியும் சம்பந்தியும் சத்திரத்துக்குப் போனால் ஏச்சுமில்லை பேச்சுமில்லை அல்லவா? இந்தச் சூழ்நிலை பத்மாவுக்கும் கமலநாதனுக்கும் பெருந்துணையாய் அமைந்தது. இருளிலே ஒருவருக்கொருவர் இடையூறு செய்யாமல் சல்லாபம் செய்து கொண்டிருந்த பல காதல் ஜோடிகளில் தாமும் ஒரு ஜோடியாகக் கலந்து கொண்டார்கள் அவர்கள்.


பகல் வேளைகளில் ஸ்ரீதர் ‘அமராவதி’ வளவின் பெரிய தோட்டத்தில், தாமரைத் தடாகத்துக்குப் பக்கத்தில் நிழல் மரங்களின் கீழே தன் நேரத்தைக் கழிக்கும் பழக்கத்தைச் சமீப காலமாக மேற்கொண்டிருந்தான். பாக்கியமோ ஒரு வேலைக்காரனோ அவனுக்குப் பக்கத்தில் எப்பொழுதும் இருப்பார்கள். அவள் செளகரியமாக உட்கார நாற்காலிகள், நிலத்தில் சிரிக்க ஜமுக்காளம், உண்ணுவதற்குச் சிற்றுண்டிகள். குடிப்பதற்குச் சர்பத், கோப்பி போன்ற பான வகைகள் எல்லாம் அவனுக்கங்கே தினசரி காலையில் கொண்டு போய் வைக்கப்படும். சிறிய "ரெக்கோர்ட் பிளேயர்" ஒன்றும், இசைத் தட்டுகளும் கூட அங்கே கொண்டு போய் வைக்கப்படும். ஓரொரு சமயங்களில் ஸ்ரீதர் அம்மாவைக் கொண்டு கதைப் புஸ்தகங்களை வாசிக்கச் செய்வான். அவன் சமீப காலமாக ஸ்ரீதரின் விருபத்திற்கிணங்க மகாபாரதத்தை வாசிக்க ஆரம்பித்திருந்தான்.

அம்மாவைத் தவிர இன்னொரு தோழியும் அவனுடன் அங்கு கூட இருந்து அவனுக்கு இன்பமளிப்பது வழக்கம். மோகனாதான் அது.

`ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் அவன் தன் காதலி பத்மாவை ஒரு சிறிதும் மறக்க வில்லை. தந்தையாரே மண முடிக்கச் சொன்னாலன்றித் தான் பத்மாவை மண முடிக்க மாட்டான் என்பது தானே அவன் செய்து கொண்ட ஒப்பந்தம்? யாருக்குத் தெரியும்? ஒரு வேளை தந்தையின் மனமே மாறக் கூடலாம் என்றும் அவன் சில சமயங்களில் எண்ணுவதுண்டு. அதற்காகக் காத்திருப்பது என்றும் முடிவு செய்தான் அவன். ஆனால் இப் பிரச்சினைக்குச் சுமூகமான முடிவு ஏற்பட்டாலன்றிப் பத்மாவுடன் கடிதத் தொடர்போ வேறெந்தத் தொடர்போ கொள்ளுவதில் பொருளில்லை என்றது அவனுள்ளம். ஆகவே அவன் இது விஷயத்தில் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டாலும், அவன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ‘பத்மா பத்மா’ என்றெழும்பிய நினைவலைகளை அவனால் எதிர்த்து நிற்க முடியவில்லை.

ஒரு நாள் சிவநேசர் தாமரைத் தடாகத்துக்கு அருகே ஸ்ரீதர் வழக்கமாக இருக்கும் இடத்துக்கு வந்த போது, அவன் அங்கே புற்றரையில் ஜமுக்காளத்தில் உட்கார்ந்து கொண்டு மோகனாவுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டார். பளபளக்கும் சிறகுகளுடன் விளங்கிய பஞ்சவர்ணக் கிளி அவன் திரண்ட கைகளில் வீற்றிருந்த காட்சி பார்ப்பதற்கு அழகாயிருந்தது. கறுப்புக் கண்ணாடியுடனும் பூக்களிட்ட புஷ் கோட்டுடனும் விளங்கிய ஸ்ரீதரை அப்பொழுது பார்த்த எவருமே ஒரு கண்ணற்ற கபோதி என்று எண்ணியிருக்க முடியாது. அத்தகைய கம்பீரத் தோற்றத்துடன் விளங்கினான் அவன்.

அரச குமாரன் போல் விளங்கிய அவனை ஆசையோடு பார்த்த சிவநேசரை மோகனாவின் பேச்சு நிலை குலைய வைத்தது. அது ‘பத்மா பத்மா’ என்று கூவியது. அக் கூவல் வெறும் மூன்றெழுத்து வார்த்தைகளாகத் தொனிக்கவில்லை அவருக்கு. ஏக்கத்திலும் தாபத்திலும் தோய்ந்தெடுத்த சொற்களாக, ஒரு காதலனின் இதயக் குமுறலிலே பொங்கி எழுந்த வார்த்தைகளாக வெளி வந்தன அவை.

"சொல்லிக் கொடுத்தவன் தன் உணர்ச்சி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி உச்சரித்திருக்கிறான் அவ்வார்த்தையை. கிளியும் அவ்வாறே கற்றுவிட்டது’" என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. அந்த நினைவு வந்ததும் அவர் மனதில் இனந் தெரியாத ஒரு கலவரம் ஏற்பட்டது. அங்குமிங்கும் அசையாது மகனையும் கிளியையுமே பார்த்து நின்றார் அவர்.

கிளி ‘பத்மா பத்மா’ என்ற சோகக் குரல் எழுப்பியது. இடது கையில் இருந்த அதன் முதுகைத் தன் வலது கரத்தால் தடவிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.


21-ம் அத்தியாயம்: குருடனுக்குத் திருமணமா?

சிறிது நேரத்தின் பின்னால் பத்மா வெளியே வந்த போது பாக்கியம் அவளைக் கண்டு அப்படியே அசந்து போனாள். "அழகான பெண். வீட்டுக்கு அலங்காரமாயிருப்பாள். அவள் நிச்சயம் சம்மதிப்பாள்" என்று தனக்குள் தானே கூறிக் கொண்டு அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று ஆவலுடன் அவளது முகத்தைப் பார்த்தாள் அவள்.

சிவநேசர் ஆங்கில நூல்களை வாசித்தறிவதில் எவ்வளவு ஆர்வம் காட்டி வந்தாரோ, அவ்வளவு ஆர்வம் தமிழ் நூல்களையும் வட மொழி நூல்களையும் கற்பதிலும் காட்டி வந்தார். சிறு வயதில் அவரது தந்தையார், அன்று வாழ்ந்த பெரிய இடத்து மனிதரின் வழக்கப்படி தமது வாழ்க்கையையே முற்றிலும் ஆங்கிலமயமாக்கி இருந்தார். அதன் பயனாக வீட்டில் ஆங்கிலத்திலேயே எல்லோரும் பேசினார்கள். பிள்ளைகளின் படிப்பிலும் ஆங்கிலத்துக்கே இடம் தரப்பட்டது. தமிழ்க் கலாசாரத்தின் சின்னங்களான தலைப்பாகை போன்றவற்றுக்கு ‘அமராவதி’யில் என்றும் முக்கிய இடமிருந்த போதிலும் தமிழ் மொழிக்கு இரண்டாவது இடமே தரப்பட்டது. தலைப்பாகை அந்தஸ்தைத் தருவதாகவும், தமிழ் மொழி அந்தஸ்தைக் குறைப்பதாகவும் கருதப்பட்டதே இதற்குக் காரணம். தலையில் தலைப்பாகையும் வாயில் ஆங்கிலமுமே ‘ஒண்ணாந்தர’ அந்தஸ்து என்று எண்ணப்பட்டது. இந்நிலையை மாற்ற அவர்கள் குடும்பத்தில் முதல் நடவடிக்கை எடுத்துக் கொண்டவர் சிவநேசரே.

சிவநேசர் என்றும் அறிவிலே அளவில்லாத தாகங் கொண்டவர். பிளேட்டோ அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க ஞானிகளின் கருத்துகள் தொடக்கம் திருக்குறள், பகவத் கீதை வரைக்கும் அறிவுலகின் சிறந்த சிருஷ்டிகளிலெல்லாம் புகுந்து வெளி வந்தவர் அவர். ஆரம்பத்தில் கீழை நாட்டு நூல்களைக் கூட, ஏன் திருமூலரின் திருமந்திரத்தைக் கூட ஆங்கில மொழி பெயர்ப்பில் தான் கற்றார். ஆனால் நாளடைவில் இவ்வித படிப்பு அவருக்குத் திருப்தியளிக்காது போகவே, ஒரு சமயம் தென்னாட்டில் சிதம்பரத்துக்குப் போயிருந்த போது, அங்கே தாம் சந்தித்த ஒரு சிறந்த செந்தமிழ் வட மொழிப் பண்டிதரைத் தமக்கு இந்த மொழிகளைப் புகட்டுவதற்காகத் தம்முடன் கூடவே அழைத்து வந்துவிட்டார் அவர். இவ்வாறு இலங்கை வந்து சேர்ந்தவரே சின்னைய பாரதி அவர்கள்.

சின்னைய பாரதியிடம் அவர் வட மொழியையும், தமிழையும் ஒழுங்காகக் கற்றதோடு தமது குடும்ப முகாமையில் நடைபெற்ற ஒரு பாடசாலையில் அவரைத் தமிழ்ப் பண்டிதராகவும் நியமித்து விட்டார். சின்னைய பாரதியார் இலங்கை வரும் போது அவருக்கு வயது இருபத்தேழு. சிவநேசருக்கோ முப்பது வயதிருக்கும். இப்பொழுதோ இருவரும் ஐம்பத்தைந்தைத் தாண்டி விட்டார்கள். சின்னைய பாரதியார் பிள்ளை குட்டிகளுடன் ஒரு பெரிய குடும்பஸ்தராகியும் விட்டார். பாடசாலையில் கிடைக்கும் சம்பளம் போக, பாரதிக்கு சிவநேசரும் தாராளமாகப் பண உதவி செய்து வந்தார். அத்துடன் அவர் வசிப்பதற்குப் பெரிய வீடும் வளவும் கூடக் கொடுத்திருந்தார்.

சின்னைய பாரதியார் ஒவ்வொரு நாளும் இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை சிவநேசரைக் காண வருவது வழக்கம். அப்பொழுது இருவரும் நூல்களைப் பற்றியும் அறிவுப் பிரச்சினைகளைப் பற்றியும் பேசிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட பிரச்சினைகள் இல்லாத நேரங்களில் இருவரும் சிவநேசரின் பெரிய நூல் நிலைய அறையில் வெவ்வேறு இடங்களில் இருந்து நூல்களை வாசிப்பார்கள். குறிப்பெழுதுவார்கள். கட்டுரைகள் கூட எழுதுவார்கள். சின்னைய பாரதியார் சமீபகாலமாகத் திருக்குறள், பகவத் கீதை பற்றி ஓர் ஒப்பியல் ஆராய்ச்சி நூலை எழுதிக் கொண்டிருந்தார். சிவநேசரின் எண்ணத்தில், கருத்துகளைப் பொறுத்தவரையில் பாரதியர் ஒரு கர்நாடகப் பேர்வழி. இதன் காரணமாக சில சமயம் அவரது கருத்துகளை வாசித்துவிட்டு, சிவநேசர் சிரித்துவிடுவார். நமது கருத்துகளை எடுத்துரைத்துத் திருத்தங்கள் செய்ய ஆலோசனைகளைக் கூறுவார்.

ஸ்ரீதரின் கண்கள் குருடான பிறகு அவர்களின் இவ்விரவுச் சந்திப்பு சில காலம் நின்று போயிருந்தது. சிவநேசரின் மனம் ஒரு நிலையில் இல்லாததே இதற்குக் காரணம். ஆனால் காலம் செல்லச் செல்ல நிலைமை மாறியது. சிறிது சிறிதாக மீண்டும் புத்தக உலகில் மூழ்கலானார் சிவநேசர். பாரதிக்கும் அவருக்குமிடையில் பழைமை போல் உரையாடல்களும் ஆரம்பித்தன.

சிவநேசரும் பாரதியும் ஓரிரவு இவ்வாறு "அமராவதி"யின் சலவைக்கல் தளமிட்ட விறாந்தையில் உட்கார்ந்து திருமூலர் திருமந்திரத்தின் சில செய்யுட்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, மாடியில் ஸ்ரீதரின் அறையிலிருந்து மோகனாவின் தத்தை மொழி கேட்டது. இரண்டு மூன்று தினங்களின் முன்னர் காலை வேளையில் தோட்டத்தில் கேட்ட அதே காதலின் ஏக்க மொழிகளே அவை. "பத்மா பத்மா" என்ற உள்ளத்தை உருக்கும் ஓலம்.

சிவநேசர் அதைக் கேட்டதும் நிலை குலைந்து போனார். "திருமந்திரத்தை" ஒரு பக்கம் மூடி வைத்து விட்டுச் சிறிது நேரம் கிளியின் கூவலை மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் அவர். எங்கும் பேரமைதி சூழ்திருந்த இரவிலே "பத்மா பத்மா" என்று கிளியோசை பலமாக ஒலித்தது. சின்னைய பாரதியும் கையில் வைத்திருந்த புத்தகத்தை மடியில் குப்புற வைத்துவிட்டு சிவநேசரின் கலவரமடைந்த முகத்தை நோக்கினார்.

"பாரதி. மோகனாவின் ஓலத்தைக் கேட்டாயா? அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?" என்றார் சிவநேசர்.

"நினைப்பதற்கு என்ன இருக்கிறது? பத்மா என்ற வார்த்தையை மிகவும் தெளிவகவும் உரமாகவும் கிளி மிழற்றுகிறது" என்றார் பாரதி.

"அவ்வளவுதானா நீ கவனித்தது? அதில் தோய்ந்துள்ள உணர்ச்சி உன் உள்ளத்தைத் தொடவில்லையா?" என்றார் சிவநேசர்.

இதற்கிடையில் மீண்டும் மோகனா "பத்மா பத்மா" என்று கதறியது.

பாரதி திடுக்கிட்டுப் போனார். ஆம். சிவநேசர் கூறியது உண்மைதான். இருளையும் அமைதியையும் பீறிவந்த அந்த ஒளியிலே கிளி தன் உள்ளத்தின் சோகத்தையும் ஏக்கத்தையும் பத்மா மீது தான் கொண்ட பரிவையும் கலந்து விட்டிருந்தது போன்ற ஓர் உணர்வு அவருக்கு ஏற்பட்டது. அது சாதாரண கிளிப் பேச்சாகத் தோன்றவில்லை. ஓர் மனித இதயத்தின் காதற் குமுறலிலே பிறந்த ஏக்கப் பாட்டாகக் கேட்டது பத்மா என்ற அச்சொல்.

"ஆம் ஐயா. நீங்கள் சொன்னது முற்றிலும் சரி. உள்ளத்தை ஈர்க்கும் உணர்ச்சிக் குமுறலாக ஒலிக்கிறது மோகனாவின் குரல். அது பிரிவு நோயினால் வாடும் ஒரு தலைவனின் குரல் போல் ஒலிக்கிறது எனக்கு. சங்க காலத்துப் புலவர் ஒருவர் இதைக் கேட்டிருந்தால் இதை வைத்து ஓர் அகத்துறைச் செய்யுளையே பாடி விட்டிருப்பார்."

"பாரதி, கிளி செய்யும் ஓசையானாலும் இது கிளியின் குரலல்ல. ஒரு காதலனின் குரல்தான் அது. என் மகன் ஸ்ரீதரின் குரல்" என்றார் சிவநேசர்.

"ஸ்ரீதரின் குரலா? ஓ! இப்பொழுது ஞாபகம் வருகிறது. அம்மா ஒரு சமயம் சொன்னார். ஸ்ரீதர் கொழும்பில் ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும் நீங்கள் அதைத் தடுத்துவிட்டதாகவும் அந்தப் பெண்தான் பத்மாவா?"

"ஆம். அவளை நினைத்து ஸ்ரீதர் தனிமையில் எழுப்பும் குரலைக் கிளி அப்படியே பயின்று ஒப்புவிக்கிறது. அதனால் தான் அதனைக் கிளியோசை என்னாது காதலனின் குரல் என்று நான் குறிப்பிட்டேன். பாரதி, இந்தக் குரலை நான் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் ஒரு தடவை கேட்டேன். இப்பொழுது இரண்டாம் முறையாகக் கேட்கிறேன். இக்கிளியோசை ஸ்ரீதரின் நெஞ்சைத் திறந்து காட்டுவது போல் வேறு எதுவும் காட்ட வில்லை. மோகனா தன் ஆசை எஜமானனுக்காகப் பரிந்து பேசுவதற்கு இந்த உபாயத்தை அனுஷ்டிக்கிறது. ஆம், நான் தீர்மானித்து விட்டேன். ஸ்ரீதர் இஷ்டம் போல் பத்மாவை மணக்க நான் அனுமதிக்கப் போகிறேன். ஸ்ரீதரின் உள்ளம் இப்படி ஏங்கிக் கொண்டிருப்பதை என்னால் தாங்கிக் கொண்டிருக்க முடியாது."

"ஐயாவின் முடிவை நான் வரவேற்கிறேன். மனம் போல் மாங்கல்யம் அமைய வேண்டுமென்பார்கள். காதலுக்கு எதிரான நாம் ஒரு போதும் தடை விதிக்கக் கூடாது. ஆனால் இவை உங்களுக்கு எடுத்துரைக்க நான் அஞ்சினேன். உங்களைப் போன்ற எல்லாம் தெரிந்தவருக்குப் புது ஆலோசனைகள் அவசியமில்லை. நீங்களே சரியான முடிவுக்கு வந்துவிட்டீர்கள்"

சிவநேசர் சின்னைய பாரதியிடம் பத்மா விஷயமாகக் கொழும்பு போவதற்கு ஒரு நல்ல நாள் பார்க்கும்படி உத்தரவிட்டார். அடுத்த நாட் காலை நல்ல நேரம் பார்த்துக் கொண்டு வருவதாகக் கூறி விடை பெற்றுச் சென்றார் பாரதி.

இதன் பின் விஷயங்கள் மிக விரைவாக முன்னேறின. பாக்கியத்திடம் தமது புதிய முடிவைப் பற்றிக் கூறிய சிவநேசர் "ஸ்ரீதர் எங்கள் குடும்பத்தின் ஒரே குருத்து. அவன் எப்படியும் திருமணம் செய்தேயாக வேண்டும். ஸ்ரீதரின் கண் பார்வை கெட்டதும் கந்தப்பசேகரர் அவனைக் கை விட்டுவிட்டார். ஆகவே எங்களுக்கும் வேறு வழியில்லை. அத்துடன் அவனுக்கும் இஷ்டமான இடமிது. பேசிப் பார்ப்போம்." என்றார்.

பாக்கியத்துக்கு ஒரே ஆனந்தம். இது விஷயம் நிறைவேறினால் ஸ்ரீதரின் சிரித்த முகத்தைப் பார்க்க முடியுமே என்பது அவளது எண்ணம். "அப்படியானால் இன்னும் இரண்டு மூன்று நாட்களிலேயே கொழும்பு போய்க் காரியங்களை முடிப்போம்" என்றாள் அவள்.

ஆனால் சிவநேசர் திடீரென்று "பத்மா என்ற அந்தப் பெண் ஸ்ரீதர் கண் பார்வை இழந்தவள் என்றறிந்த பிறகும் அவனை மணமுடிக்கச் சம்மதிப்பாளா? எங்கள் முயற்சி வீண் முயற்சி ஆகுமோ தெரியவில்லையே" என்றார்.

பாக்கியம் "ஸ்ரீதர் கூறுவதன் படி பத்மா அற்புதமான பெண். அவனை உண்மையாக நேசிப்பவள். அப்படிப்பட்ட பெண் தன் காதலன் கண் பார்வையை இழந்ததற்காக அவனை வெறுத்தொதுக்க மாட்டாள். உண்மையில் இப்படிப்பட்ட துர் அதிர்ஷ்டம் அவனுக்கு நேர்ந்ததே என்று அனுதாபமும் சேர்ந்து முன்னிலும் பார்க்க அதிக அன்பு காடுவாள்" என்றாள்.

முதலில் பாக்கியத்தால் சிவநேசரின் மன மாற்றத்தை நம்பவே முடியவில்லை. மலையை அசைத்தாலும் அசைக்கலாம், தன் கணவனின் மனதை ஒரு போதும் அசைக்க முடியாது என்பதே அவள் சிவநேசருடன் நடத்தி வந்த நீண்ட கால இல்லற வாழ்க்கையின் அனுபவம். ஆனால் அசையாத மலை கூட பூகம்பத்தால் நிலம் கொந்தளிக்கும் போது தன் இடம் பெயரத் தானே செய்கிறது? சிவநேசர் மனமும் மோகனாவின் ஓலம் ஏற்படுத்திய புயலிலே அசையத் தொடங்கிவிட்டது. அதை அவரே பாக்கியத்துக்கு விளக்கியும் விட்டார்.

"பாக்கியம், நீ மோகனா "பத்மா" என்று கூச்சலிட்டதைக் கேட்டிருக்கிறாயா? ஸ்ரீதர் கிளிக்கு அந்த வார்த்தையைப் பேசப் பழக்கி வைத்திருக்கிறான். அதைக் கேட்க, என்னால் சகிக்க முடியவில்லை. இதற்கு ஒரு முடிவு வேண்டும். அந்தக் கிளிப் பேச்சுத்தான் என் மனத்தை மாற்றி விட்டது" என்றார் அவர்.

பாக்கியம் இந்தச் சுப செய்தியை ஸ்ரீதரிடம் சொல்ல அவன் படுக்கை அறைக்கு ஓடோடிச் சென்றாள். ஆனால் அங்கே அவள் கண்ட காட்சி அவளைத் திகைக்க வைத்தது. ஸ்ரீதர் கட்டிலிலே தலையணைக்கு மேல் தலையணையாக அடுக்கி வைத்து, அதில் சாய்ந்து கொண்டிருந்தாள். சோகத்தின் உருவாய்க் காணப்பட்ட அவன் படுக்கப் போவதற்காகக் கறுப்புக் கண்னாடியைக் கழற்றி விட்டிருந்ததால் கண்ணீர் தாரை தாரையாகப் பெருகிக் கொண்டிருப்பதைக் கண்டு துடி துடித்தாள் அவள்.

"ஸ்ரீதர், என்ன இது? எதற்காக அழுகிறாய்?" என்றாள் பாக்கியம்.

"எதற்காகவா? எனக்கா அழுவதற்குக் காரணமில்லை. கண்ணிழந்ததற்காக அழலாம். இப்பொழுது பத்மாவுக்காக அழுது கொண்டிருக்கிறேன். அம்மா, குருட்டுக் கண்களால் பார்க்க முடியாதிருக்கலாம். ஆனால் அவற்றால் அழ முடியும். என் கண்களால் அந்த உபயோகமாவது எனக்கிருக்கிறதே. அது போதும்." என்றான் ஸ்ரீதர்.

பாக்கியம் கண் கலங்கி நின்றாள். "ஸ்ரீதர், இனி மேல் நீ அழ வேண்டியதில்லை. உன் பத்மா உனக்குக் கிடைக்கப் போகிறாள். அப்பா மனம் மாறிவிட்டார். அதைச் சொல்லத்தான் இங்கே ஓடோடி வந்தேன்" என்றாள்.

ஸ்ரீதர் "உண்மையாகவா?" என்றான்.

"ஆம். எல்லாம் உன் மோகனா செய்த வேலை. அது பத்மா பத்மா என்று கூவுவதைக் கேட்ட அவரது அசையாத மனம் கூட அசைந்துவிட்டது. நாளை அல்லது மறு தினம் பத்மாவைப் பெண் பார்க்க நாங்கள் இருவரும் கொழும்பு போகிறோம் ஸ்ரீதர்," என்றாள் பாக்கியம்.

"இல்லை அம்மா, அது மோகனாவின் வேலையல்ல. மோகனாவின் பேச்சு அவரது மனதைத் தொட்டிருக்கலாம். ஆனால் கொட்டாஞ்சேனை மாரியம்மனுக்கு என்னுள்ளத்தில் இரகசியமாக நான் நேர்த்திக் கடன் வைத்திருக்கிறேன். அப்பா மனம் மாற வேண்டும். பத்மாவை நான் அடைய வேண்டுமென்று கேட்டிருந்தேன். அது பலித்து விட்டது. அம்மா, பத்மாவின் வீடும் கொட்டாஞ்சேனையில் தான். அங்கு போகும் வழியில் மாரியம்மனுக்கு என் பெயரால் தேங்காய் உடைக்க மறக்காதே." என்றான்.

பின் தாயும் மகனும் வேறு பல விஷயங்களைப் பற்றிப் பேசினார்கள். மோகனாவைக் கூண்டுக்கு வெளியே எடுத்துக் கட்டிலில் வைத்துக் கொஞ்சி விளையாடினான் ஸ்ரீதர். அதற்குத் தன் கையாலேயே பாலும் பழமும் ஊட்டி மகிழ்ந்தான் அவள். "பத்மா வரட்டும். மோகனாவுகுப் புதிய கூடொன்று செய்விக்க வேண்டும். வெள்ளிக் கூடு. அதில் மோகனா உட்கார்ந்து ஊஞ்சலாட வெள்ளி வளையமொன்றும் தொங்க விட வேண்டும்," என்று கூறினான் அவன்.

பாக்கியம், "ஸ்ரீதர், பத்மாவுக்கு உன் கண் பார்வை போனது தெரியுமோ என்னவோ? அது தெரிந்தாள் என்ன சொல்வாளோ?" என்றாள்.

அதற்கு ஸ்ரீதர், "என்னம்மா நீ அப்படிச் சொல்கிறாய்? உனக்குப் பத்மாவைப் பற்றித் தெரியாததால் இப்படிப் பேசுகிறாய். அவள் என்னை உண்மையாக நேசிப்பவள். ஒரு போதும் அவள் என்னை நிராகரிக்க மாட்டள். தன் கணவன் நோயாளி என்பதற்காக நளாயினி அவனை நிராகரித்தாளா?? பத்மாவும் அப்படிப்பட்டவள் தான்" என்றான்.

அவன் நம்பிக்கை வீண் போவது நூற்றுக்கு நூறு நிறைவேறித் தன் குலம் தழைக்க வேண்டுமென்று மாவிட்டபுரம் முருகனை வேண்டிக் கொண்டாள் பாக்கியம்.

ஸ்ரீதர், "அம்மா, எனக்குக் கண் தெரியாவிட்டாலும், இருளிலே கூட, உன் உருவம் அப்படியே தெரிகிறது. அப்பாவின் உருவம், பத்மாவின் உருவம் யாவும் தெரிகின்றன. பிறவிக் குருடனுக்கு இவை கூடத் தெரியாதல்லவா? நான் இப்படிப்பட்ட காட்சிகளை மனதிலே இடையிடையே கற்பனை செய்து கொள்ளுகிறேன். அது எனக்கு நல்ல பொழுது போக்காயிருக்கிறது." என்றான்.

பாக்கியம் ஸ்ரீதரின் காலம் மாறி வருகிறதென்றும், பத்மாவுடன் அவள் பார்வையும் சீக்கிரம் திரும்பிவிடும் என்றும் ஆறுதல் கூறினான். "ஆம் அம்மா, காலம் மாறி வருகிறதென்று தான் எனக்கும் தெரிகிறது. இல்லாவிட்டால் அப்பாவின் மனம் மாறியிருக்குமா?" என்றான்.

அதன் பின் பாக்கியத்தைத் தன்னுடனே இருந்து பேசிக் கொண்டிருக்க வேண்டுமென்று வற்புறுத்தினான் ஸ்ரீதர். "முடியாது. அப்பாவிடம் போய்க் கொழும்புப் பிரயாணத்தைப் பற்றிப் பேசவேண்டும். நீ படுத்துத் தூங்கடா. பெண்டாட்டியைப் பற்றி நினைத்துக் கொண்டு தூங்கு." என்றாள் பாக்கியம், அவனை உற்சாகப்படுத்துவதற்காக.

ஸ்ரீதர் "போம்மா, நீ என்னைப் பரிகாசம் செய்கிறாய். நான் உன்னுடன் கோபம்" என்றான்.

அதன் பின் பாக்கியம் அறையை விட்டுப் போய்விட, ஸ்ரீதர் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டு ஆடினான், பாடினான், குதூகலித்தான். சிறிது நேரம் வானொலியில் இசை கேட்டான். அதன் பின் பத்மாவும் தானுமாகக் கொழும்பிலே மிருக வனத்திலும், கல்கிசைக் கடற்கரையிலும், கால்பேசிலும், ஐஸ்கிறீம் பார்லரிலும் சேர்ந்து கழித்த நேரத்தை எல்லாம் நினைவுபடுத்திக் கொண்டான். "தனக்கு நல்ல காலம் வந்துவிட்டது. அதனால் தான் பத்மா கிடைக்கிறாள்" என்றெண்ணிய அவள் "தானாகவே மங்கிய கண் மீண்டும் தானாகவே ஒளி பெற்று விடலாம்." என்று கூட எண்ணினான். அந்த எண்ணத்தில் தன் விழிகளை உருட்டி உருட்டிப் பார்த்தான் அவன். கண் இமைகளை மூடிக் கொண்டு "ஒளியே வா, ஒளியே வா" என்று சொல்லியவண்ணம் தன் கண்களைத் தன் விரல்களால் தடவி விட்டான் அவன். உலகில் எத்தனையோ அதிசயங்கள் நடப்பதாகக் கூறிக் கொள்ளுகிறார்கள். மாரியம்மா, என் கண்களென்னும் கதவைச் சற்றே திறந்துவிட மாட்டாயா? பத்மாவைப் பார்க்க எனக்கு என் கண்களைத் தர மாட்டாயா?" என்றெல்லாம் தனக்குள்ளே ஏதேதோ பேசிக் கொண்டான் அவன்.

"ஆண்டவனே, நான் காலையில் நித்திரை விட்டெழுந்து என் கண்களை விரிக்கும் போது அங்கே இருள் திரை தோன்றக் கூடாது. சூரியனின் ஒளியும் வீட்டின் சுவர்களும் மோகனாவின் வர்ணச் சிறகுகளின் அழகும் என் கண்களுக்குத் தெரிய வேண்டும். எனக்கு அருள் புரிவாய் கடவுளே" என்றூ சொல்லிக் கொண்டே படுக்கையில் படுத்தான் அவன்.

இவை நடந்து மூன்று தினங்கள் கழித்து கொழும்பு ஹோர்ட்டன் பிளேஸ் ‘கிஷ்கிந்தா’விலிருந்து சிவநேசரும் பாக்கியமும் கொட்டாஞ்சேனை கொலீஜ் ரோட் 48/12ம் இலக்க வீட்டை நோகித் தமது பிளிமத் காரில் புறப்பட்டார்கள். சின்னையபாரதி குறித்துக் கொடுத்திருந்த நல்ல நேரத்தில் கார் கொட்டாஞ்சேனையை நோக்கிப் புறப்பட்டது. கார்¢ல் சிவநேசரையும் பாக்கியத்தையும் டிரைவரையும் தவிர, கிளாக்கர் நன்னித்தம்பியும் இருந்தார். அவர் டிரைவருக்குப் பக்கத்திலிருக்க, சிவநேசரும் பாக்கியமும் பின்னாசனத்திலிருந்தார்கள். சிவநேசர் வெள்ளை தலைப்பாகையணிந்து மிகக் கம்பீரமாக விளங்கினார். பாக்கியம் வைர நகையும், தங்க நகையும் பட்டும் பீதாம்பரமுமாகக் காட்சியளித்தாள்.

கொலீஜ் ரோட்டுக்குத் திரும்பும் இடத்துக்குச் சமீபமாக மாரியம்மன் கோவில் வந்ததும், பாக்கியம் காரை நிறுத்தும்படி செய்து ஸ்ரீதர் கேட்டுக் கொண்ட பிரகாரம் தேங்காய் உடைத்தாள். "அம்மனே, மாரியம்மா, ஸ்ரீதரின் எண்ணமெல்லாம் வெற்றிகரமாக நிறைவேற வேண்டும்" என்று அவள் மாரியம்மனை வேண்டிக் கொண்டாள். அத்துடன் உண்டியலில் பத்து ரூபா நோட்டொன்றை இட்டாள்.

சிவநேசர் தம் வருகை பற்றி பத்மாவுக்கோ பரமானந்தருக்கோ முன்னறிவிப்பு கொடுக்கவில்லை. திடீரெனப் போயிறங்கி எல்லாவற்றையும் விரைவில் பேசி முடிவெடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு மீண்டு ஸ்ரீதரின் திருமணத்தைத் தாமதமின்றி முடித்துவிட வேண்டுமென்பது அவரது எண்னம். அதன்படி அவரது பிளிமத் கார் பத்மா வீட்டுக்கு முன்னால் போய் நின்றதும் வீட்டினுள்ளேயிருந்து அவரை பார்த்த பத்மா திகைத்துவிட்டாள். முதலில் ஸ்ரீதர் தான் வந்த்¢ருக்க வேண்டுமென்று எண்ணினாள் அவள். கமலநாதன் விஷயமாக அவள் வெகு தூரம் போய்விட்டதால் ஸ்ரீதரைச் சந்திருப்பதற்கு அவள் விரும்பவில்லை. இதனால் அவள் மனம் அதிக குழப்பமும் கலவரமுமடைந்தது. ஆனால் அந்தக் குழப்ப நேரத்தில் அவளுக்குக் கை கொடுத்துதவ நல்ல வேளையாக அடுத்த வீட்டு அன்னமாக்கா சமீபத்திலேயே இருந்தாள். அன்னமாக்கா காலையில் பலகார விற்பனையை முடித்துக் கொண்டு பத்மாவுடன் அரட்டையடிப்பதற்கு அங்கு வந்திருந்தாள்.

அன்னமாவின் அரட்டையெல்லாம் எப்பொழுதும் பத்மாவின் கல்யாண விஷயம் பற்றியதுதான். விதவையான அவளுக்குப் பத்மாவின் காதல் விவகாரங்களைப் பற்றிப் பேசுவதில் ஒரு திருப்தி. காலையில் அவள் பத்மாவிடம் கேட்ட முதற் கேள்வி "கல்யாணத்துக்கு இன்னும் நாள் குறிக்கவில்லையா?" என்பதுதான். இரண்டு மூன்று தினங்களின் முன்னர் அவள் கமலநாதனின் தாயாரைச் சந்தித்திருந்தாள். அப்பொழுது கமலநாதனின் தாயார் அன்னமாவிடம் தன் மகன் பத்மாவைத் திருமணம் செய்வதில் தனக்குத் திருப்தியே என்று கூறியிருந்தாள். அதை எடுத்துக் கூறி, "மாமிக்கு மருமகளை நன்கு பிடித்துப் போயிருக்கிறது." என்று சொன்னாள் அன்னம்மா.

இப்படி அவர்கள் பல கதையும் பேசிக் கொண்டிருந்த போது தான் சிவநேசரும் பாக்கியமும் அங்கு வந்து இறங்கினார்கள். தந்தை பரமானந்தர் வெளிப்புறத்தில் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார். கார் சத்தத்தைக் கேட்டதும் அவர் பத்திரிகை வாசிப்பதை நிறுத்தி இத்தகைய பென்னம் பெரிய காரில் தம் வீட்டுக்கு வந்திருப்பது யார் என்று தமது மூக்குக் கன்னாடிக் கூடாகப் பார்த்தார்.

பத்மாவோ அன்னம்மாக்காவைக் கிள்ளி, "அன்னம்மாக்கா, இது ஸ்ரீதரின் கார். நான் உள்ளேயிருக்கிறேன். நீ போய் என்ன விஷயம் என்று பார்த்து வா. கமலநாதனோடு இவ்வளவு தூரம் போன பிறகு ஸ்ரீதரைக் காண நான் விரும்பவில்லை. எனக்கென்னவோ போலிருக்கிறது" என்றாள்.

அன்னம்மாவும் "சரி பார்த்து வருகிறேன்." என்று வெளியே வந்தாள். பத்மாவோ வசதியான ஓர் இடத்தைத் தெரிந்தெடுத்து வந்தவர்களை யாருமறியாமல் கவனித்துக் கொண்டிருந்தாள்.

சிவநேசர் காரை விட்டிறங்கி கதவண்டை வந்து "பரமானந்தர் வீடு இது தானா" என்று கேட்டார். "ஆம்" என்று கூறிக் கொண்டே தம் இருக்கையை விட்டெழுந்து பரமானந்தர் கிளாக்கர் நன்னித்தம்பி "அமராவதி வளவு ஸ்ரீதர் தம்பியின் அப்பா சிவநேசப் பிரபு உங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார்" என்றார்.

"ஓ வாருங்கள்" என்று அவரை வரவேற்ற பரமானந்தர் சிவநேசரும் பக்கியமும் அமர்வதற்கு நாற்காலிகளைக் காட்டினார். அதன்பின் உபசாரப் பேச்சுகள் பரிமாறி முடித்ததும் சிவ நேசர் விஷயத்துக்கு நேரே வந்துவிட்டார்.

"என் மகன் ஸ்ரீதருக்கு உங்கள் மகள் பத்மாவைத் திருமணம் செய்து தரும்படி கேட்பதற்காகவே வந்திருக்கிறோம்." என்றார் சிவநேசர்.

பரமானந்தருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. "அந்த எண்ணம் எனக்கும் இருக்கத்தான் இருந்தது. ஆனால் ஸ்ரீதர் மூன்று நான்கு மாதமாக இங்கு வரவுமில்லை. கடிதம் எழுதவுமில்லை. அதனால் நிலைமையில் குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டது?" என்றார் அவர்.

சிவநேசர் "என்ன குழப்பம்?" என்றார்.

"ஸ்ரீதரை எதிர்பார்க்க முடியாது என்று போனதும், பத்மாவுக்கு வேறு திருமணத்துக்கு இங்கு ஒழுக்கு செய்து விட்டோம்," என்றார் பரமானந்தர்.

"ஆனால் திருமணம் இன்னும் நடக்கவில்லையே?"

"இல்லை."

"அப்படியானால் அந்தத் திருமணத்தை நிறுத்திவிட்டு ஸ்ரீதர் - பத்மா திருமணத்தை நடத்த முடியாதா?"

"அது மிகவும் சிரமமான காரியமல்லவா? வாக்குறுதிகளை எப்படி மீறுவது?"

சிவநேசருக்கு இவ்வார்த்தைகள் ஏமாற்றத்தை அளித்தனவென்றாலும் சமாளித்துக் கொண்டு, "என் ஒரே மகன் ஸ்ரீதர். அவன் பத்மாவைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்வதில்லை என்று பிடிவாதமாயிருக்கிறான். ஆகவே கட்டாயம் நீங்கள் என் கோரிக்கையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்" என்றார்.

"எனக்குச் சம்மதம்தான். ஆனால் பத்மா என்ன சொல்லுகிறாளோ?" என்றார் பரமானந்தர்.

"கூப்பிட்டுக் கேளுங்கள். கட்டாயம் அவள் ஒப்புக் கொள்வாள். ஸ்ரீதரை அவள் ஒருபோதும் நிராகரிக்க மாட்டாள் என்றாள் பாக்கியம்.

"சரி கூப்பிட்டுக் கேட்போம். அன்னம்மா, பத்மாவைக் கொஞ்சம் வரச் சொல்." என்றார் பரமானந்தர். அன்னம்மா பத்மாவை அழைக்க உள்ளே சென்றாள்.

அன்னம்மா "என்ன விஷயம்?" என்றாள் பத்மா.

அன்னம்மா விஷயத்தை விளக்கினாள்.

"நான் என்ன செய்ய? எனக்கொன்றும் விளங்கவில்லை"

"விளங்குவதற்கு என்ன இருக்கிறது? குருடனைக் கட்டப் போகிறாயா? உன்னைப் போல் சகல வகையிலும் சிறந்த ஒரு பெண்ணை யாராவது ஒரு குருடனுக்குக் கொடுப்பார்களா? பணமிருக்கிறது என்ற திமிரிலே பெண் கேட்டு வந்திருக்கிறார்கள்."

"அப்போது நான் என்ன சொல்ல?"

"என்ன சொல்வதா? முடியாது என்று சொல்லிவிடு."

சிறிது நேரத்தின் பின்னால் பத்மா வெளியே வந்த போது பாக்கியம் அவளைக் கண்டு அப்படியே அசந்து போனாள். "அழகான பெண். வீட்டுக்கு அலங்காரமாயிருப்பாள். அவள் நிச்சயம் சம்மதிப்பாள்" என்று தனக்குள் தானே கூறிக் கொண்டு அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று ஆவலுடன் அவளது முகத்தைப் பார்த்தாள் அவள்.

பரமானந்தர் பத்மாவைப் பார்த்து "உன்னை ஸ்ரீதருக்குக் கல்யாணம் பேசி வந்திருக்கிறார்கள். உன் விருப்பமென்ன?" என்று கேட்டார்.

பத்மா சிறிது நேரம் பேசாதிருந்துவிட்டு, பின்னர் பாக்கியத்தைப் பார்த்து "அவருக்கு இரு கண்களும் பொட்டையாகி விட்டன என்கிறார்களே. அது உண்மையா?" என்று கேட்டாள்.

இந்தக் கேள்வி சிவநேசரையும் பாக்கியத்தையும் திடுக்கிட வைத்துவிட்டது. பாக்கியம் அதை ஒருவாறு சமாளித்துக் கொண்டு, "ஆம் உண்மை தான்" என்றாள். அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை.

"அப்படியானால் நீங்கள் குருட்டுப் பிள்ளைக்குப் பெண் கேட்க வந்திருக்கிறீர்கள். கண்ணில்லாதவரைக் கட்டிக் கொண்டு கஷ்டப்பட என்னால் முடியாது" என்றாள் பத்மா.

பத்மா கூறிய இவ்வார்த்தைகள் சிவநேசரையும் பாக்கியத்தையும் மட்டுமல்ல, பரமானந்தரைக் கூடத் திகைக்க வைத்து விட்டது.

"பத்மா, நீ அப்படிப் பேசக் கூடாது. ஸ்ரீதர் முன்னர் நல்ல கண்களோடு தானே இருந்தான்? அந்த நேரத்தில் நீ அவளைக் கல்யாணம் செய்திருந்து பின்னர் அவன் கண்கள் பொட்டையாயிருந்தால் நீ என்ன செய்திருப்பாய்?" என்றார் பரமானந்தர்.

"அவ்விதம் நடவாமல் கடவுள் என்னைக் காப்பாற்றிவிட்டார். அப்படிக் காப்பாற்றப்பட்ட பின்னரும் நாமாகவே போய்க் கஷ்டத்தில் மாட்டுவதா?" என்றாள் பத்மா.

இதற்கிடையில் அங்கு நின்று கொண்டிருந்த அன்னம்மாவும் பேசினாள். "தங்கச்சி சொல்வது சரிதானே? கண் தெரியாத மாப்பிள்ளையோடு காலம் கழிப்பது இலேசான காரியமா? இக் கல்யாணம் சரி வராது. இந்தப் பேச்சை இவ்வளவோடு விட்டுவிடுவதே நல்லது" என்றாள்.

சிவநேசருக்கு அதன்மேலும் அங்கிருக்கப் பிடிக்கவில்லை. "சரி வருகிறோம்." என்று கிளம்பிவிட்டார் அவர். பாக்கியமும் எழுந்தாள். கிளாக்கர் நன்னித்தம்பியும் எழுந்து விட்டார்.

கார் ‘கிஷ்கிந்தா’வை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சிவநேசர் முகத்தில் என்றுமில்லாத கவலை மட்டுமல்ல. கோபமும் பொங்கிக் கொண்டிருந்தது. பாக்கியமோ கலங்கிப் போயிருந்த தன் கண்களைத் தன் சேலையால் துடைத்துக் கொண்டிருந்தாள்.

பொங்கி வரும் அழுகைக்கிடையே "நான் என்ன செய்வேன்? ஸ்ரீதருக்கு என்ன சொல்லப் போகிறேன்?" என்றாள் அவள்.

கிளாக்கர் நன்னித்தம்பியோ, "தம்பிக்கு இந்தச் செய்தியைச் சொல்லக் கூடாது. இதை அவரால் தாங்க முடியாது" என்றார்.

அன்று ‘கிஷ்கிந்தா’வைச் சூழ்ந்த இருள் மிகவும் பயங்கரமாயிருந்தது. "அடுத்து என்ன செய்வது?" என்ற பிரச்சினைக்கு முடிவு காண முடியாது சிவநேசரும் பாக்கியமும் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார்கள்


22-ம் அத்தியாயம் : பலாத்காரத் திட்டங்கள்

சிவநேசர் நிலாமுற்றத்தில் அவரை வரவேற்றார். "வா நல்லையா. உட்கார்." என்று அங்கிருந்த நாற்காலி ஒன்றை அவர் சுட்டிக் காட்டினார். நல்லையா சிவநேசருக்கும், பாக்கியத்துக்கும் தனது பார்வையாலும் புன்னகையாலும் அஞ்சலி செலுத்திக்கொண்டே நாற்காலியில் உட்கார்ந்தார். வேலைக்கார சுப்பையா பாக்கியத்தின் உத்தரவுப்படி விஸ்கி ட்ரேயுடன் கூடிய தள்ளு வண்டியை அவர் முன் கொண்டு வந்து நிறுத்தினான். நல்லையா விஸ்கியை வார்த்துக்கொள்ளாமல், சோடாவை மட்டும் ஒரு கிளாசில் ஊற்றி அதில் ஒரு மிடறை அருந்தினார். அதைக் கண்ட பாக்கியம், "என்ன நல்லையா, வெறும் சோடாவைக் குடிக்கிறாய்?" என்று கேட்டாள். "இல்லை. நான் சமீப காலமாகக் குடிப்பதைக் குறைத்துக் கொண்டு வருகிறேன்." என்று பதிலளித்தார் நல்லையா.பத்மா ஸ்ரீதரைத் தான் மணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதும், சிவநேசருக்கு வந்த ஆத்திரத்தை அளவிட்டுச் சொல முடியாது. தன் வாழ்நாளிலே, எதிலுமே தோல்வி பெறாத அவர் இந்த விஷயத்தில் இப்பெண்ணிடம் இப்படிப்பட்ட பேச்சைக் கேட்க வேண்டி வந்ததே, தன் மகனைத் தன் முன்னாலேயே குருட்டுப் பிள்ளை என்று கூறினாளே இக்குமரி - அவளை விட்டு வைப்பதா என்ற அளவுக்கு அவரது கோபம் ஆவேசங் கொண்ட கடுஞ் சினமாகக் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது. "வருவது வரட்டும். பலாத்காரமாக அவளைத் தூக்கி வந்து ஸ்ரீதருக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்." என்ற எல்லைக்குக் கூட அவரது எண்ணங்கள் சென்றுவிட்டன. உண்மைதான். அவர் நினைத்தால் அதுவும் அவரால் செய்ய முடியாத ஒன்றல்ல. கொழும்பு நகரில் அப்பிரதேசத்தில்தான் இலங்கையில் மகா பயங்கரமான காடையர்களும் அகில இலங்கை ரெளடித் தலைவர்களும், கஞ்சா வியாபாரிகளும் கள்ளக்கடத்தல் பேர்வழிகளும், சாராயக்குதச் சொந்தக்காரர்களும் இருந்தார்கள். இவர்கள் எல்லோருக்கும் சிவநேசர் என்றால் எப்போதுமே அளவுக்கு மீறிய மதிப்பு. இதற்குக் காரணம் அவர்களில் முக்கியமான ஒரு சிலருக்கு மிக எக்கச்சக்கமான நேரங்களில் சிவநேசர் பல உதவிகளைச் செய்திருந்ததேயாகும். அவர்களைப் பார்த்துச் சிவநேசர் தம் சுண்டு விரலை அசைத்தால் போதும். அவர்கள் உடனே நாட்டையே அசைத்துவிடுவார்கள். அத்தகைய செல்வாக்கு அவருக்கு அவர்களிடையே இருந்து வந்தது. மேலும் இத்தகைய கோஷ்டிகளைக் கட்டியாள்வதற்கும், இது போன்ற வேலைகளைச் செய்து முடிப்பதற்கும் வேண்டிய பணத்தைப் பற்றிய கவலையும், சிவநேசருக்கு இல்லை. இன்னும் என்றுமே பணத்தைத் தண்ணீர் போல் அள்ளி வீசிச் செலவிடுவதற்கும் அவர் பின்னிற்பவரல்லர். எனவே, பலாத்காரத்தைக் கட்டவிழ்த்து விட்டுக் காரியங்களைச் சாதிப்பது அவருக்கு இலகுவான காரியமே.

பத்மா ஸ்ரீதரை நிராகரித்த அன்று மாலை "கிஷ்கிந்தா"வின் மாடியிலிருந்த நிலா முற்றத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக விஸ்கியை அருந்திக் கொண்டிருந்த சிவநேசர் மனதில் இப்படிப்பட்ட பலாத்கார எண்ணங்கள் பேய் நடம் புரிந்து கொண்டிருந்தன. ஒருவரிடமும் ஒன்றும் பேசாமல் விஸ்கி மேல் விஸ்கியாகக் குடித்துக் கொண்டிருந்த அவரது முகம் நிமிஷத்துக்கு நிமிஷம் பயங்கரமாக மாறிக் கொண்டிருந்ததை அவதானித்த பாக்கியம் பயந்து போய்விட்டாள். என்ன விபரீதம் நடக்கப் போகிறதோ என்ற அச்சம் அவளைப் பீடித்தது. எரிமலை வாய் திறந்து தீக்குழம்பைக் கக்க ஆரம்பித்ததும், அதைப் பார்த்தவர்கள் பூகம்பம் அதிக தொலைவிலில்லை என்று அதனை எதிர்பார்த்திருப்பது போல், சிவநேசரின் போக்கைப் பார்த்து ஏதோ அநர்த்தம் சீக்கிரமே விளையப் போகிறது என்று அதனை எதிபார்த்திருந்தாள் பாக்கியம். அவ்வித எதிர்பார்ப்பின் காரணமாகக் கணவனிலும், குடும்பத்தின் எதிர்காலத்திலும் எப்பொழுதும் அக்கறை கொண்டவளாகிய அவள் அவ்வித விளைவுகள் ஏற்பட்டால், அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றியும் தன் புலனைச் செலுத்தினாள். பத்மா ஸ்ரீதரை இவ்வாறு கைவிட்டாளே என்பதால் சிவநேசருக்கு ஏற்பட்ட அதே வேதனை அவளுக்கும் ஏற்படத்தான் செய்தது. ஆனால் அவ்வேதனையால் சிவநேசரின் உள்ளத்தில் பிறந்ததோ, உலகத்தையே சர்வ நாசமாக்கும் சூறாவளி. ஆனால் பாக்கியத்தின் மனதில் ஏற்பட்ட எதிரொலியே வேறு. உள்ளம் சாம்பி, இரத்தக் கண்ணீர் வடித்தாள் அவள்.

விநாடிக்கு விநாடி பலாத்கார எண்ணங்கள் வலுப் பெறப் பெற்ற சிவநேசர் படிப்படியாகத் தீர்க்கமான முடிவுகளைச் செய்து கொண்டிருந்தார். பரசுராமர், துர்வாசர், விஸ்வாமித்திரர் என்ற மகாமுனிவர்களின் கோபம் போல அவர் சினமும் அத்துமீறிவிடவே அவர் மனமும் ரெளத்திரகாரமான கொந்தளிப்பு நிலையை அடைந்தது. சர்வாங்கார காலத்து மகாருத்திரன்போல் கொதிப்படைந்த கண்ணோடு பற்களை நறநறவென்று அவர் கடித்துக் கொண்டிருந்ததைப் பாக்கியம் பார்த்தும் பாராதவள் போல் கவனித்துக் கொண்டிருந்தாள்.

படிப்பாளியாகிய சிவநேசருக்கு எந்த நிலையிலும் தாம் படித்தறிந்த விஷயங்கள் ஞாபகம் வராமல் இருப்பதில்லை. பத்மாவைப் பலாத்காரமாகத் தூக்கி வந்து ஸ்ரீதருக்குத் திருமணம் செய்து வைத்து விடுவோமா என்று நினைத்த அவருக்கு, அர்த்தசாஸ்திரத்தில் கெளடில்யன் கூறியுள்ள எழுவகைத் திருமணங்களும் ஞாபகம் வந்தன. இவற்றில் ஒன்று இராட்சத திருமணம். பலாத்காரமாக ஒரு பெண்ணைக் கடத்திச் சென்று திருமணம் செய்யும் இதனைக் கூடக் கெளடில்யன் ஒப்புக் கொள்ளுகிறான். இத்திருமணத்தின் முடிவாகச் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் திருப்தி ஏற்படுமாயின் அது அங்கீகரிக்கத்தக்கதே என்பது அவரது தீர்ப்பு. உண்மையில் பல இடங்களில் கூட பலாத்காரத் திருமணங்கள் கூட நல்ல இல்லற வாழ்வுக்கு அடிப்படியாவதை நாம் காணத்தானே செய்கிறோம்.

கோபத்தில் துடிதுடித்த சிவநேசருக்குக் கொலைக்கார எண்ணங்கள் கூடத் தோன்றின. "கொட்டாஞ்சேனை கொலீஜ் ரோட் முழுவதையும் பிய்த்தெறிந்துவிடுவோமா? பத்மாவையும் பரமானந்தரையும் சுட்டுச் சாம்பாலாக்கி உள்ளங்கையில் வைத்து ஊதிவிடுவோமா?" என்று கூட யோசித்தார் அவர். இந்த யோசனையில் திடீரென " நன்னித்தம்பி இங்கே வா." என்று சப்தமிட்டார் சிவநேசர்.

நன்னித்தம்பி ஓடோடி வந்தார். சிவநேசர் அவரிடம் "கொச்சிக்கடை கஞ்சா நல்லையாவை டெலிபோனில் எடு. ‘மூன்றைஸ்’ கிளப்பில் ஆளைப் பிடிக்கலாம்." என்றார். நன்னித்தம்பியும் "சரி" என்று டெலிபோனுக்கு ஓடினார்.

‘மூன்றைஸ்’ கிளபில் டெலிபோன் அலறியது.

"யாரது? நானிங்கே நல்லையா பேசுகிறேன்."

"இங்கே பேசுவது சிவநேசர். உடனே உன்னை நான் காண வேண்டும்."

"சிவநேசரா? எங்கே இருந்து பேசுகிறீர்கள் ஐயா? எங்கே வர வேண்டும்."

"ஹோர்ட்டன் பிளேஸ் ‘கிஷ்கிந்தா’வில் இருந்து பேசுகிறேன். உடனே புறப்பட்டு வா."

"சரி ஐயா."

இந்தச் சம்பாஷணை நடந்து முக்கால் மணி நேரத்தில் மணிக்கு அறுபது மைல் வேகத்தில் வந்த பெரிய கார் ஒன்று ‘கிஷ்கிந்தா’ வளவுக்குள் வந்து நிற்க, அதிலிருந்து வாட்டசாட்டாமான ஓர் ஆள் பங்களாவுக்குள் நுழைந்தார் அந்த வாட்டசாட்டமான ஆள்தான் கஞ்சா நல்லையா.

கஞ்சா நல்லையா எப்பொழுதும் விலை உயர்ந்த பட்டுச் சட்டையும் வேட்டியுமே அணிந்திருப்பார். அவர் கைவிரல்களில், இடது கையில் இரண்டு மோதிரங்களும் வலது கையில் ஒரு மோதிரமுமாக மூன்று மோதிரங்கள் ஒளி வீசிக் கொண்டிருந்தன. தங்கப் பட்டியிட்ட கைக்கடிகாரம் மணிக்கட்டை அலங்கரிக்க, கழுத்தில் பெரிய சங்கிலி ஒன்றும் வடம் போல் ஊசலாடிக் கொண்டிருந்தது.

சிவநேசர் நிலாமுற்றத்தில் அவரை வரவேற்றார். "வா நல்லையா. உட்கார்." என்று அங்கிருந்த நாற்காலி ஒன்றை அவர் சுட்டிக் காட்டினார். நல்லையா சிவநேசருக்கும், பாக்கியத்துக்கும் தனது பார்வையாலும் புன்னகையாலும் அஞ்சலி செலுத்திக்கொண்டே நாற்காலியில் உட்கார்ந்தார். வேலைக்கார சுப்பையா பாக்கியத்தின் உத்தரவுப்படி விஸ்கி ட்ரேயுடன் கூடிய தள்ளு வண்டியை அவர் முன் கொண்டு வந்து நிறுத்தினான். நல்லையா விஸ்கியை வார்த்துக்கொள்ளாமல், சோடாவை மட்டும் ஒரு கிளாசில் ஊற்றி அதில் ஒரு மிடறை அருந்தினார். அதைக் கண்ட பாக்கியம், "என்ன நல்லையா, வெறும் சோடாவைக் குடிக்கிறாய்?" என்று கேட்டாள். "இல்லை. நான் சமீப காலமாகக் குடிப்பதைக் குறைத்துக் கொண்டு வருகிறேன்." என்று பதிலளித்தார் நல்லையா.

கஞ்சா நல்லையா என்ற பெயரைக் கேட்டதும் கொழும்பு முழுவதுமே அலறுமாயினும், தடை செய்யப்பட்ட கஞ்சா வர்த்தகத்தைச் செய்து இலட்சாதிபதியாக விளங்கினார் என்பதைத் தவிர அவர் மீது வேறு எவ்வித குற்றத்தையும் இலகுவில் சுமத்திவிட முடியாது. நல்லையா உண்மையாக எல்லா வகையிலும் நல்லையாவாக இருக்க விரும்பிய ஒருவர் தான். ஆனால் நியாயமான முறையில் தன் திறனுக்கேற்ற ஒரு தொழிலைச் செய்ய அவர் தமது இளமைக் காலத்தில் முயன்ற போது அவருக்கேற்பட்டது பெரிய ஏமாற்றமே. வாழ்க்கையின் ஆரம்பத்தில் இது விஷயத்தில் தோல்விக்கு மேற் தோல்வி பெற்ற அவர், வேறு வழியில்லாமல் சந்தர்ப்ப சூழல்களின் காரணமாகக் கஞ்சாத் தொழிலில் ஒரு சில்லறைப் பேர்வழியாகச் சிக்கினார். ஆனால் இன்றோ அத் தொழிலில் இலங்கையின் மாபெரும் தலைவர்களில் ஒருவராக மலர்ந்துவிட்டார். இன்று அவரமைத்த கஞ்சா வர்த்தகம், கிளப்புகள் என்ற வலைப்பின்னலிலே பல நூற்றுக்கணக்கானவர்கள் சம்பந்தப்பட்டிருந்ததோடு, தம் குடும்பத்தினரின் தேவைகளுக்கும் ஏராளமானவர்கள் அவரை நம்பியிருந்தார்கள். இந்நிலையில் அவருக்கு இச்சட்ட விரோதத் தொழிலில் இருந்து மீட்சியே இல்லாது போய்விட்டதென்றாலும், தமக்கு இத்தொழிலில் கிடைத்து வந்த பெரும் பணத்தில் ஒரு பகுதியை அவர் ஏழைகளுக்கு உனவளிப்பதற்கு எப்பொழுதும் செலவிட்டு வந்தார். பரிமாறிய ஏழைகளின் முகத்தில் பூக்கும் நன்றிப் புன்னகையைப் பார்ப்பதில் அவருக்கு அளவில்லாத திருப்தி. இது தவிர, ஆண்டு தோறும் சுந்தரேஸ்வரர் கோவில் திருவிழாவொன்றும் பெரும் பணச் செலவிலே அவர் செய்து வந்தார்.

நல்லையாவின் இப்போக்கெல்லாம் நன்கு தெரிந்ததனாலே பாக்கியத்துக்கு அவர் மீது கஞ்சாக்காரராச்சே என்ற வெறுப்பு இல்லை. அத்துடன் முன்னொரு சமயம் நல்லையா வழக்கொன்றில் மாட்டிக் கொண்ட போது சிவநேசர் தன் முழுச் செல்வாக்கையும் உபயோகித்து அவரை அதிலிருந்து காப்பாற்றியிருந்தார். அப்போது நல்லையா சொன்ன ஒரு வசனம் இன்னும் அவள் காதில் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது. " நான் கடவுளை மறந்தாலும் மறப்பேன். உங்களை மறக்க மாட்டேன். நான் உயிருடன் இருக்கும் வரை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அடிமை. என்னாலான எந்த உதவியையும் எப்பொழுதும் செய்வேன்" இவ்வாறு சொல்லி நல்லையா சிவநேசரைத் தன் இருகரங்களாலும் வணங்கி ஐம்பதினாயிரம் ரூபா கொண்ட ஒரு நோட்டுக் கட்டை அவரிடம் கொடுத்ததையும் சிவநேசர் அதை வாங்க மறுத்ததையும் ஞாபகப்படுத்திக் கொண்டாள் அவள். "என்ன நல்லையா, சிவநேசர் பணத்துக்காக எதையும் செய்வார் என்று நீ நினைத்தாயா என்ன? பணத்தை எடுத்துக் கொள்" என்று சிவநேசர் சொன்னதும், நல்லையா உணர்ச்சி மேலிட்டுக் கண் கலங்கியதையும், "அப்படியானால் நீங்கள் செய்த நன்றிக்கு நான் என்ன செய்வது? நான் ஏதாவது செய்ய இடமளிக்க வேண்டும்" என்று அவர் கூறியதும் அவளுக்கு நினைவு வந்தன. அதற்குச் சிவநேசர் சிரித்து, "எனக்கு ஒரு கட்டுக் கஞ்சா கொண்டு வா" என்று விளையாட்டாகக் கூற, அன்று பிற்பகலே ஒரு கட்டுக்குப் பதில் பல கஞ்சா கட்டுகளை நல்லையா கொண்டு வந்ததும் அவள் மனத்திரையில் பளிச்சிட்டன.

சிவநேசரும் நல்லையாவும் உரையாடத் தொடங்கியதும் பாக்கியம் அவர்கள் பேசுவதற்குத் தான் தடையாக இருக்கக் கூடாது என்று மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்று விட்டாள். அங்கு தனக்குத் தெரிந்த அளவுக்கு ஸ்ரீதர் பிரச்சினை சம்பந்தமாக எடுத்துக் கொள்ளப் பட வேண்டிய அடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றித் தன் மூளையைக் குழப்பலானாள்.

சிவநேசர் நல்லையாவிடம் ஸ்ரீதரின் காதல் விவகாரம் பற்றியும் அது இப்போது அடைந்துவிட்ட இக்கட்டான நிலை பற்றியும் குறிப்பிட்டார். தான் முதலில் இத்திருமணத்தை எதிர்த்தது, ஸ்ரீதர் தன் கண் பார்வையை இழந்தது முதலிய சகல விவரங்களையும் ஆதியோடந்தமாய் கூறிய அவர், முடிவில் "நல்லையா என்ன ஆனாலும் பரவாயில்லை. பத்மாவைக் கடத்திச் சென்றேனும் ஸ்ரீதருக்கு அவளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும். வருவது வரட்டும். எல்லாவற்றையும் என்னால் சமாளிக்க முடியும்" என்றார்.

நல்லையா சிறிது நேரம் மெளனமாயிருந்து விட்டு, "நீங்கள் சொல்லும் பெண்ணை எனக்கு நன்றாகத் தெரியும். ஸ்ரீதர் தம்பியின் காரில் அப்பெண் போய் வருவதை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ பொழுதுபோக்குக்காக அவர் அப்பெண்ணைப் பிடித்துச் சுற்றித் திரிகிறாரென்று நான் எண்ணினேனேயல்லாமல், இவ்வளவு தூரம் அப்பெண் மீது அவருக்குக் காதல் ஏற்பட்டிருந்தது என்று எனக்குத் தெரியாது. அப்பெண்ணுடன் போகும் பொழுது கூட என்னைக் கண்டால், தம்பி தன் கையால் அடையாளம் காட்டிச் சிரித்து விட்டுப் போவது வழக்கம்" என்றார்.

"நல்லையா, ஸ்ரீதர் என் ஒரே மகன். அவன் பிள்ளையும் குட்டியுமாக வாழ்வதை நான் பார்க்க வேண்டும். அதற்கேற்ற திட்டத்தை உடனே நீ தீட்டு. கோடு, போலீஸ் ஒன்றைப் பற்றியும் யோசியாதே. எல்லாவற்றுக்கும் நானிருக்கிறேன். என்ன சொல்கிறாய்?" என்றார் சிவநேசர்.

"சொல்வதற்கென்ன இருக்கிறது? உங்கள் கட்டளை இது. செய்து முடிப்பது என் வேலை. நீங்கள் எனக்குச் செய்த உதவிகளுக்கு இப்போதாவது பதில் உபகாரம் செய்ய எனக்குச் சந்தர்ப்பமளிக்கிறீர்களே, அது எனக்குப் பெரிய வாய்ப்பல்லவா?" என்றார் நல்லையா.

அதைக் கேட்ட சிவநேசர் தம் ஆசனத்தை விட்டெழுந்து நல்லையாவின் சமீபம் சென்றார். அவர் தோள்களைத் தன் கரங்களால் தொட்டு "நல்லையா, பணச் செலவை பற்றி யோசிக்காதே. எவ்வளவு வேண்டுமானாலும் நான் செலவிடத் தயார். உடனே தொடங்கு வேலையை. இரண்டு மூன்று தினங்களில் எல்லாம் முடிய வேண்டும்." என்றார்.

நல்லையா, "சரி" என்று தலையை அசைத்துச் சிறிது நேரம் மெளனமாயிருந்துவிட்டு, "ஆனால் ஒரு விஷயம், இப்பெண் ஒழுங்கான ஒரு பெண்ணல்ல. சமீப காலமாக ஒரு மீசைக்கார வாலிபனுடன் மோட்டார் சைக்கிளில் அவள் சுற்றித் திரிவதை நான் கண்டிருக்கிறேன். இருவரையும் ஆள் வைத்து ஒரே அமத்தாக அமத்தி அவனை விரட்டிவிட்டு அப்பெண்ணை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வந்து விடுவேன். ஆனால் ஒழுக்கம் என்ற விஷயத்தில் ஒரு சல்லி பெறாத ஒரு பெண்ணுக்காக இப்படிப்பட்ட பெரிய காரியங்களை நாம் செய்யத்தான் வேண்டுமா?" என்று கேட்டார்.

நல்லையாவின் இப்பேச்சைக் கேட்டு சிவநேசர் திகைப்படைந்து விட்டார். "நீ சொல்வது உண்மைதானா? பத்மா கண்டவர்களுடனும் ஊர் சுற்றும் பெண்ணா? அப்படியானால் என் ஸ்ரீதர் எவ்வளவு ஏமாற்றப்பட்டு விட்டான்? அவனோ பத்மா மகா உத்தமி என்று நினைக்கிறான். அவள் பெரிய ஏமாற்றுக்காரியாகவல்லவா இருக்கிறாள்" என்றார்.

நல்லையா "ஐயா எதற்கும் கொஞ்சம் பொறுங்கள். நாளைக் காலை ஆட்களை ஏற்பாடு செய்து கொண்டு வருகிறேன். அப்போது நீங்கள் என்ன உத்தரவு போடுகிறீர்களோ அதை நான் இரவுக்கு முன் முடித்துவிடுகிறேன். உங்களுக்காக மட்டுமல்ல. தம்பி ஸ்ரீதருக்காகவும் நான் இதைச் செய்ய வேண்டும். உங்களோடு பழகியது போல் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லையென்றாலும் அவரது சிரித்த முகத்துக்காக எதையும் செய்யலாம். உண்மையில் அவர் கண் பார்வை இழந்து விட்டாரென்ற செய்தியை என்னால் தாங்க முடியவில்லை ஐயா." என்றார்.

போகும் வழியில் பாக்கியம் நல்லையாவை வழிமறித்து "ஐயாவின் திட்டமென்ன?" என்று கேட்டாள். நல்லையா விவரத்தைக் கூறியதும், "அவர் கோப வெறியில் சொல்வதை அப்படியே செல்வதற்கு நீ கிளம்பி விடாதே. நல்லையா" என்றாள் பாக்கியம்.

"நான் அப்படிச் செய்வேனா அம்மா? உங்கள் குடும்பம் எங்கள் குடும்பம் போல் சாதாரணமான குடும்பமா என்ன? நாங்கள் எந்த இழிவையும் இகழ்ச்சியையும் தாங்கிக் கொள்வோம். உங்கள் குடும்பமோ பரம்பரைப் புகழும் செல்வாக்கும் வாய்ந்த குடும்பம். ஆகவே கீழ்த்தரமான செய்கைகளினாலே அம்மதிப்புக்குப் பங்கம் விளைவிக்க நான் ஒரு போதும் ஒருப்பட மாட்டேன். ஆனால் ஐயா சொன்னதற்கெல்லாம் "ஆமாம்" சொல்லிவிட்டுத்தான் போகிறேன். ஏனெனில் அவரை எதிர்த்துப் பேச யாராலும் முடியாது. ஆனால் நாளைக் காலை அவராகவே மனம் மாறிவிடுவார் என்று நினைக்கிறேன்," என்று சொல்லிப் பத்மா ஒரு புதிய காதலனுடன் மோட்டார் சைக்கிள் சவாரி போவதைப் பற்றியும் பாக்கியத்துக்குக் கூறினார் நல்லையா. "இப்படிப்பட்ட பெண் ஸ்ரீதர் தம்பியின் மனைவியாவதை நான் விரும்பவே இல்லை." என்றார் அவர்.

"நிச்சயம் இப்படிப்பட்ட பெண் எங்கள் வீட்டுக்கு வேண்டாம்." என்றாள் பாக்கியமும்.


கொழும்பில் இவை நடந்து கொண்டிருக்க "அமராவதி"யில் ஸ்ரீதர் நித்திரையில்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். அவன் இம்முறை யாழ்ப்பாணத்துக்கு வந்த பிறகு தாய் பாக்கியத்தைப் பிரித்து தனியாக இருந்த இரண்டாவது இரவு இது. முதல் இரவு நேற்றைய இரவாகும். நேற்று மத்தியானம் கழித்தே சிவ நேசரும் பாக்கியமும் கொழும்புக்குப் புறப்பட்டனர். புறப்படு முன்னர் பாக்கியம் ஸ்ரீதரைக் கட்டி முத்தமிட்டு "நாளை பகல் நாங்கள் பத்மா வீட்டுக்குப் போகிறோம். நாளை மறு தினம் அல்லது அடுத்து நாள் திரும்பி விடுவோம். அது வரைக்கும் தனியாக இருக்க வேண்டுமென்று கவலைப்படாதே. தெய்வானை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வாள். உனக்கு விருப்பமான முறையிற் சமைத்துத் தருவாள். வேண்டியதை அவளிடமோ மற்ற வேலைக்காரர்களிடமோ கேட்டுப் பெற்றுக் கொள். ரேடியோகிராமுடன் போதிய அளவு இசைத்தட்டுகள் வைத்திருக்கிறேன். இஷ்டப்படி போட்டுக் கேட்டுக் கொள். பேச கற்துனைக்குச் சின்னைய பாரதியையும் பிள்ளைகளையும் வரச் சொல்லியிருக்கிறேன். அவர்களுடன் விளையாடிக் கொண்டிரு. ‘ரேடியோ’வும் இருக்கிறது. இவை தவிர உன்னோடு எந்நேரமும் விளையாட மோகனாதான் இருக்கிறாளே" என்று கூறினாள்.

ஸ்ரீதர் பதிலுக்கு "அதெல்லாமிருக்கட்டுமம்மா, நாளை இரவு தவறாமல் எனக்கு ‘கிஷ்கிந்தா’விலிருந்து டெலிபோன் பன்ண வேண்டும். மறந்து விடக் கூடாது" என்றான்.

அந்த ஏற்பாட்டின்படி இரவு ஆறு மணியிலிருந்தே டெலிபோன் செய்தியை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தான் அவன். சின்னைய பாரதியின் குழந்தைகள் அங்குமிங்கும் பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டுமிருந்தார்கள். இடையிடையே ஸ்ரீதரிடம் கும்பலாக வந்து ஏதாவது கேலிப் பேச்சுப் பேசிச் சென்றார்கள். ஸ்ரீதர் அவர்களில் மிகவும் சிறியவளான இலட்சுமியை மடி மீது தூக்கி வைத்து அவளுக்குப் பாட்டுப் பாடிக் காட்டினான். தனக்கும் அப்படி ஒரு குறுகுறுத்த குழந்தை இருந்தால் எவ்வளவு நல்லது என்று எண்ணிய அவன் அதன் உச்சியை ஆசையோடு முத்தமிட்டான்.

குழந்தை இலட்சுமி, "மாமா, எனக்கும் உங்கள் வீட்டுப் பஞ்ச வர்ணக் கிளி போல் ஒரு கிளி வேண்டும். தருவாயா?" என்று கேட்டாள்.

"அம்மா வரட்டும். கொழும்பு மிருகக்காட்சிச் சாலையிலிருந்து நல்ல பஞ்சவர்ணக் கிளி ஒன்றை உனக்கு வரவழைத்துத் தருகிறேன்.’ என்று குழந்தைக்கு வாக்குறுதி அளித்தான் அவன். இதை அவன் விலையாட்டுக்குச் சொல்லவில்லை. உண்மையாகவே பிஞ்சு மனம் மகிழ, கிளி ஒன்றை வாங்கிக் கொடுக்கத் தீர்மானித்தான் அவன்.

அதன்பின் அவர்களை விறாந்தையில் சென்று விளையாடும்படி கூறிவிட்டுக் கட்டிலில் சாய்ந்தான் ஸ்ரீதர். சின்னைய பாரதி ஏதோ பழைய வடமொழி நூலைச் சப்தமிட்டு வாசித்துக் கொண்டிருந்தார். காளிதாசன் அல்லது பசுபூதியாக இருக்க வேண்டும். அவர்களில்தான் அவருக்கு ஈடுபாடு. அவரது குரலும் குழந்தைகளின் விளையாட்டோசையும் சேர்ந்து இரவின் அமைதியைக் குலைத்தன.

இரவு எட்டு மணியாகியும் கொழும்பிலிருந்து டெலிபொன் வராமற் போகவே தானே ‘கிஷ்கிந்தா’வுக்கு ‘ட்ரங்கோல்’ எடுத்துப் பேசினான் ஸ்ரீதர். வேலைக்காரச் சுப்பையா பதிலளித்தான்.

"சுப்பையா, அம்மாவைக் கூப்பிடு" என்றான் ஸ்ரீதர்.

"அம்மா மாடியில் இல்லை. பொறுத்துக் கொள்ளுங்கள். கீழே சென்று அழைத்து வருகிறேன்." என்று ஓடினான் சுப்பையா.

பாக்கியம் ஸ்ரீதருடன் அப்போது பேச விரும்பவில்லை. அவனிடம் பத்மா விவகாரத்தை எப்படிச் சொல்வது என்று அவளால் முடிவு செய்ய முடியாதிருந்ததே அதற்குக் காரணம். உண்மையைக் கேட்டால் ஸ்ரீதரின் இதயம் வெடித்து விடும் என்று பயந்தாள் அவள். ஆகவே சுப்பையாவிடம் "ஐயாவும் அம்மாவும் இப்போதுதான் காரில் ஏறி எங்கோ போய்விட்டார்கள் என்று சொல்லு" என்று உத்தரவிட்டாள். சுப்பையாவும் அவ்வாறே செய்தான். அதைக் கேட்ட ஸ்ரீதர், "அம்மா, வந்ததும் உடனே எனக்கு டெலிபோன் பண்ணும்படி சொல்லு." என்று சுப்பையாவுக்கு ஆணையிட்டான்.

பாக்கியம் அதன்பின் கீழ் வீட்டு விறாந்தையில் நின்ற நன்னித்தம்பியிடம் டெலிபோனில் நடந்த விஷயத்தைச் சொன்னாள். "இன்று இரவு முழுக்க டெலிபோன் பண்ணாமல் இருக்க மாட்டான். அடிக்கடி டெலிபோன் பண்ணுவான். இதை எப்படிச் சமாளிப்பது? எனக்கொன்றும் தெரியவில்லையே" என்று கவலையோடு கூறினாள்.

நன்னித்தம்பியர் சிறிது நேரம் யோசித்துவிட்டு "இப்படிப்பட்ட நேரங்களில் நாம் பொய்தான் சொல்ல வேண்டும். தம்பி மீண்டும் டெலிபோன் பண்ணினால் "இன்று நாங்கள் பத்மாவைப் பார்க்கப் போனோம். ஆனால் அவள் தந்தைக்கு உடம்பு சுகமில்லாததால் அவர்கள் ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டார்கள். நாளை ஆஸ்பத்திரிக்குப் போகலாம் என்றிருக்கிறோம்" என்று கூறிவிடுவோம். அதற்கிடையில் இப்பிரச்சினையைத் தீர்க்க வேறு வழி ஏதாவது இருக்கிறதா என்று ஆலோசிப்போம். இதை விட நாம் வேறு என்ன செய்ய முடியும்," என்றார்.

பாக்கியத்துக்கும் இது நல்ல யோசனையாகவே பட்டது. ஆகவே உடனேயோ ‘ட்ரங்கோல்’ எடுத்து மகனுடன் பேசினாள் அவள். "அம்மா, நீ இல்லாமல் இங்கே இருப்பது எவ்வளவு கஷ்டமாயிருக்கிறது, தெரியுமா? நேற்று எப்படியோ கழிந்துவிட்டது. இன்று பாரதியயின் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தேன். அவருடைய கடைக்குட்டி இலட்சுமி குறு குறுத்த பெண். ஆனால் என்னதான் அவர்களோடு விளையாடினாலும் நீ இல்லாமல் இருப்பது மிகவும் கஷ்டமாயிருக்கிறது. அது சரி, அம்மா, பத்மாவை நீ பார்த்தாயா? அவளை உனக்குப் பிடித்திருக்கிறதா?" என்றாள் ஸ்ரீதர். அதற்குப் பாக்கியம் நிலைமையைச் சமாளிக்கத் தான் நன்னித்தம்பியோடு சேர்ந்து தயாரித்திருந்த பொய்யை மெல்ல அவிழ்த்துவிட்டான். ஸ்ரீதர் அதை நம்பி விட்டதால் தற்காலிகமாக - அதாவது அடுத்த நாள் வரையாவது பிரச்சினை ஒருவாறு தீர்த்து வைக்கப்பட்டது.

ஸ்ரீதர், "அம்மா, நாளை ஆஸ்பத்திரிக்குப் போய் வந்ததும் உடனே எனக்கு நீயே போன் செய்துவிடு. நான் பேசும்வரை காத்திருக்க வேண்டாம்." என்றான்.

"ஆம் ஸ்ரீதர்., அப்படியே செய்தேன்." என்றாள் பாக்கியம்.

அடுத்த நாட் காலை கஞ்சா நல்லையா எட்டு மணிக்கே வந்துவிட்டார். சிவநேசர் மேல் மாடியில் அவரை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தார். பாக்கியமோ சிவநேசர் ஆத்திரத்தில் ஏதாவது அவசர முடிவெடுத்து ஆத்திரத்தில் ஏதாவது செய்துவிடக் கூடாதென்பதற்காகத் தானும் அவர்கள் பேச்சை ஒரு புறம் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள்.

நல்லையா எதிர்பார்த்தது போல் சிவநேசர், பத்மா "ஒழுக்கமற்ற" பெண் என்பதற்காக தம் முடிவை எவ்விதத்திலும் மாற்றியதாகத் தெரியவிலை. "இக்காலத்துப் பெண் கல்யாணம் பண்ணுவதற்கு முன்னர் பலருடனும் பழகும் படியான சூழ்நிலைகள் ஏற்டத் தான் செய்கின்றன. ஆனால் கல்யாணத்துக்குப் பின்னர் எல்லாம் சரியாய்ப் போய்விடும்," என்பது பல நூல் கற்ற அவரது எண்ணம். உண்மையில் அரச குடும்பங்களில் கூட இவ்வித நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. "பிரித்தானிய இளவரசியாகிய மார்கரெட் தனது திருமணத்துக்கு முன்னர் பலருடன் பழகியதாகக் கூறப்பட்ட போதிலும், பின் ஒருவரை மணந்து வாழவில்லையா? ஆகவே பத்மாவை ஒழுக்கமற்றவள் என்று கூறுவது இவர்கள் மடமையைத்தான் காட்டுகிறது. இன்னும் ஸ்ரீதரால் பத்மா இல்லாமல் வாழ முடியாது. அவனுக்கு அவன் விரும்பும் பத்மாவை அளிக்க வேண்டும். அதுதான் எனது வேலை." என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தார் அவர்.

ஆகவே நல்லையாவை நோக்கி "நல்லையா, விஷயத்தை இன்றே முடித்துவிட வேண்டும்." என்றார் அவர்.

"எல்லாம் ரெடி. உடனே தொடங்க வேண்டியதுதான்." என்றார் நல்லையா.

"எனக்குத் தெரியும் -- நீ இதைச் செய்து முடித்துத்தான் வேறு காரியம் பார்ப்பாய் என்று. அப்போது நீ உடனே புறப்பட்டு போ. என்ன அவசரமானாலும் உடனே எனக்கறிவி. டெலிபோனில் பேசுவதை விட நேரிலே வருவதுதான் நல்லது. உன்னாலே வர முடியாவிட்டால் ஆளை அனுப்பு. எவ்வளவு சீக்கிரத்தில் அந்தப் பத்மாவைக் கொண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவில் கொண்டு வா. ஆனால் அவளை எந்த விதத்திலும் காயப்படுத்திவிடக் கூடாது. எப்படியானாலும் எனக்கு மருமகளாகப் போகிறவளல்லவா? ஆனால் எமது திட்டத்தைத் தடுக்கும் மற்றவர்களை நீ என்ன செய்தாலும் பரவாயில்லை" என்றார் சிவ நேசர்.

பாக்கியம் இடைமறித்து "இதென்ன பயங்கரத் திட்டம். நல்லையா நீ இதைச் செய்யக் கூடாது." என்றாள்.

சிவ நேசர் வெகுண்டார். "பாக்கியம், நீ வாயை மூடு. உனக்கு இந்த விஷயங்கள் தெரியா. நீ கீழே போ. இவ்விஷயங்களில் பெண்களால் ஆண்களுக்கு ஆலோசனை சொல்ல முடியாது" என்றார்.

நீட்சேயின் தத்துவக் கருத்துகளை தமது வாழக்கைத் தத்துவங்களாக ஏற்றிருந்த சிவநேசர் பெண்கள் சம்பந்தமாகவும் அந்த ஜெர்மானிய தத்துவ தரிசகரின் கருத்துகளை ஓரளவு ஏற்றுக் கொள்ளவே செய்தார். பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டுமேயல்லாது ஆலோசனை கூறும் அளவுக்கு வரக் கூடாது என்பது அவரது உள்ளத்தோடு ஒட்டியிருந்த ஒரு கருத்தாகும்.

ஆனால் பாக்கியமோ இன்று விட்டுக் கொடுப்பதில்லை என்று தீர்மானித்துவிட்டாள். இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு பெண் தன் மனதைத் திடப்படுத்தி வாதாடாவிட்டால் விஷயம் தலைக்கு மேல் போய்விடும் என்று அவள் அஞ்சினாள். மகாபாரதத்தில் திரெளபதி பல இடங்களில் இப்படித் தன் கணவர்களுடன் போரிட்டதை அவள் ஞாபகப்படுத்திக் கொண்டாள்.

"அந்தப் பெண் பத்மா இன்னொருவனுடன் கூடித் திரிகிறாளாம். நல்லையாவே சொல்லுகிறார். அப்படிப்பட்ட உதவாக்கரை பெண்ணை மருமகளாகப் பெறவா இப்படிப்பட்ட பெரிய திட்டம் போடுகிறீர்கள்? அப்பெண் என் மருமகளாக என் வீட்டில் அடி எடுத்து வைக்க நான் ஒரு போதும் விட மாட்டேன்."

"பாக்கியம், நீ கூட என்னை எதிர்த்துப் பேசத் துணிந்து விட்டாயா? வாயை மூடிக் கொண்டு பேசாமல் இரு. ஸ்ரீதருக்கு அந்தப் பெண்ணும் இல்லாவிட்டால் வேறு யார் கிடைப்பார்கள்? அவனைத்தான் எல்லோரும் குருடன் குருடன் என்று ஒதுக்குகிறார்களே."

"அதற்காக ஒழுக்கமற்ற ஒரு பெண்ணை அவனுக்குக் கட்டி வைப்பதா? அது மட்டுமல்ல, இவ்விதம் ஒரு பெண்னைப் பலாத்காரமாகக் கடத்தினால் போலீசார் சும்மா இருப்பார்களா?"

"அதைப் பற்றி நீ கவலைப்படாதே. பணத்தைச் செலவிட்டு அதைச் சமாளிப்பேன். அந்த வாத்தியாரை என்னால் சமாளிக்க முடியாது என்று நினைக்கிறாயா என்ன? அவனைக் கொன்று அவன் தலையைக் களுத்துறையிலுள்ள என் ரப்பர்த் தோட்டத்திலும், உடலைக் கிளிநொச்சியிலுள்ள என் வயலிலும் புதைத்துவிட்டால் போகிறது."

"அந்த வாத்தியார் மீது உங்களுக்கென்ன கோபம்? அவர் ஸ்ரீதருக்காகத் தானே பேசினார்? மகள்தான் மறுத்துவிட்டாள்."

"மறுத்த மகளை இப்பொழுது சம்மதிக்க வைக்கப் போகிறோம். வாத்தியார் பேசாமலிருந்தாற் சரி. யாருக்கும் கஷ்டம் வராது."

"ஆனால் இவ்வளவு பெரிய திட்டம் தீட்டும் நீங்கள் ஒன்றை யோசித்தீர்களா?"

"ஒன்றல்ல, எல்லாவற்றையுமே யோசித்துவிட்டேன். அதன் பயனாகத்தான் பத்மாவை ஸ்ரீதருக்கு எப்படியும் கட்டி வைப்பதென்று தீர்மானித்திருக்கிறேன் நான்?"

"பாவம் ஸ்ரீதர்! கண்களை இழந்து நிற்கிறான். உங்கள் திட்டத்தில் சிறிது தவறேற்பட்டாலும் அவன் ‘கோடு’ ஏற வேண்டி வரும் என்பதை யோசித்தீர்களா? பத்திரிகைகள் எல்லாம் ‘அமராவதி’ வளவைப் பற்றி அலறும். அவற்றை என்னால் ஒரு போதும் சகிக்க முடியாது. ஸ்ரீதருக்கு நஞ்சு கொடுத்து நானும் நஞ்சு குடித்துச் செத்து விடுவேன். அதன் பின் ‘அமராவதி’ மாளிகையில் நீங்கள் தனியே உட்கார்ந்து கொண்டிருங்கள். உங்களுக்கென்ன குறை? பணம்தான் நிறைய இருக்கிறதே. பணமிருந்தால் வேறொன்றும் வேண்டியதில்லையல்லவா?"

"அப்போது நீ என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?"

"ஒன்றும் செய்ய வேண்டாம். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. நடப்பது நடக்கட்டும். சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது போல் ஆகக் கூடாது."

இவ்வாறு கூறிய பாக்கியம் முன்னாளிரவு டெலிபோனில் தான் ஸ்ரீதரிடம் கூறிய பொய்த் தகவல்களைப் பற்றிக் குறிப்பிட்டாள். "இந்தப் பொய்யை வைத்துத்தான் ஸ்ரீதரைச் சில காலத்துக்குச் சமாளிக்க வேண்டும். பத்மாவின் தந்தையார் சுகமில்லாமலிருக்கும்பொழுது கல்யாணத்தை எப்படி நடத்துவது? பொறுத்திருப்போம் - என்ற முறையில் பேசி வர வேண்டியதுதான்" என்றாள்.

"ஆனால் இந்தக் கதையை எவ்வளவு காலத்துக்குக் கொண்டு போக முடியும்? எப்பொழுதோ ஒரு நாள் உண்மையைக் கூற வேண்டித்தானே வரும்?"

"கொண்டு போகக் கூடிய அளவுக்குக் கொண்டு போவோம். அதற்குப் பின்னர் கடவுள் விட்ட வழி"

நல்லையாவுக்குச் சிவநேசர் கூறிய புதிய மின்வெட்டு வேக பலாத்கார முறை சிறிதும் பிடிக்கவில்லை. எனினும், சிவநேசர் மீது கொண்ட தனிப்பட்ட மதிப்பின் காரணமாக எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்துவிட்டு முடிவாக "ஐயா, அம்மா கூறுவதையும் நாம் அலட்சியம் செய்யக் கூடாது. இன்னும் இதில் நாம் யோசிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயமும் இருக்கிறது. நீங்கள் நேற்றுத்தான் பத்மாவைப் பெண் கேட்டுப் போயிருக்கிறீர்கள். ஆகவே இன்றே பத்மா காணாமல் போய் விட்டால் உடனே உங்கள் மீதுதான் சந்தேகமேற்படும். ஆனால் ஸ்ரீதர் தம்பியைச் சிறிது காலம் நாம் சமாளித்துக் கொண்டால் ஒரு மாதமோ இரண்டு மாதமோ கழித்து எவ்வித ஐயத்துக்கும் இடமில்லாவிட்டால் பத்மாவை நாம் கிளப்பி வந்து விடலாம். அப்படிச் செய்தால் ஸ்ரீதர் தம்பியைக் கோடேறாது தடுப்பதும் இலேசாயிருக்கும்." என்றார்.

இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருக்க ‘கிஷ்கிந்தா’ வளவுக்குள் ஒரு ‘ஸ்டேஷன் வாகன்’ வந்து நின்றது. மேல் மாடியிலிருந்தபடியே அதனைப் பார்த்த கஞ்சா நல்லையா அதில் இருந்த இரு வாலிபர்களையும் மேலே வரும்படி சைகை காட்டினார். "முதலாளி மேலே வரச் சொல்லுகிறார்" என்ற படியே அவர்கள் இருவரும் மாடிப்படியில் தடதடவென்று ஏறி வந்து விட்டார்கள்.

வந்தவர்கள் சிவநேசருக்கும், பாக்கியத்துக்கும் தம் தலையைத் தாழ்த்திவிட்டு நல்லையாவின் முகத்தைப் பார்த்தார்கள். "என்ன விஷயம்?" என்றார் நல்லையா. "தனியாய்ப் பேசுவோமா" என்றான் வாலிபர்களில் ஒருவன். "இங்கு வெளியார் யாருமில்லை. ஆகவே இங்கேயே எல்லாவற்றையும் பேசலாம்" என்றார் நல்லையா.

"அந்தப் பெண்னைக் கண்டுவிட்டோம். தேர்ஸ்டன் வீதியிலுள்ள பெரிய பள்ளிக் கூடத்தில் படிக்கிறது. பள்ளிக் கூடத்தில் இருந்து வெளியேற இரண்டு கேட்டுகள் இருக்கின்றன. இரண்டு பக்கத்திலும் காவல் வைத்துவிட்டேன். வில்சனும் செபமாலையும் நிலைமையைச் சமாளித்துக் கொள்வார்கள். இன்றே அப்பெண்னை நீங்கள் சொன்ன ராகமை வீட்டுக்குக் கொண்டு போய்விடலாம், முதலாளி. குருவி தப்புவதற்கு எந்த வழியுமே இல்லை. ஐயாவுக்கு எல்லா வேலையும் சரி என்று சொல்லி விடுங்கள். எதிர்ப்பொன்றும் ஏற்படுவதற்கு இடமே இல்லை. இருந்தாலும் கை காவலாக எல்லோர் கையிலும் கைத் துப்பாக்கிகள் வைத்திருக்கிறோம். காலையில் புறப்படு முன்னர் முதலாளி சொன்னபடி மாரியம்மனுக்குக் கர்ப்பூரம் கொளுத்தினோம்." என்றான் அவர்களில் சிரித்த முகத்துடன் விளங்கிய ஸ்ரீபால என்ற இளைஞன்.

இதைக் கேட்ட நல்லையா சிவநேசர் முகத்தையும் பாக்கியத்தின் முகத்தையும் பரபரப்புடன் நோக்கினார். பாக்கியம் தலையை அசைத்தாள். "வேண்டாம் இந்த வேலை. நான் இதை ஒத்துக்கொள்ள மாட்டேன். விரும்பாத பெண்ணைப் பலாத்காரமாக அவனுக்குக் கட்டி வைப்பதை விட ஸ்ரீதர் கல்யானம் செய்யாமலே இருக்கட்டும்" என்றாள் அவள். அவளுடைய திடமான எதிர்ப்பைக் கண்டு சிவநேசரே கலங்கிவிட்டாரென்றால் நல்லையாவின் நிலையை சொல்லவா வேண்டும்?

"அம்மா சொல்வது சரி. இரண்டு வாரம் கழித்து விஷயத்தைச் செய்வோம். இப்பொழுது ஒத்தி போடுவது நல்லதுதான்" என்றார் அவர்.

"சரி" என்று தலை அசைத்தார் சிவநேசர்.

இதற்கிடையில் நன்னித்தம்பி அங்கு வந்தார். "தம்பி ஸ்ரீதர் அம்மாவை டெலிபோனில் அழைக்கிறார்." என்றார் அவர். பாக்கியம் அதைக் கேட்டதும் டெலிபோனுக்கு ஓடினாள். நல்லையா தன் கையாட்களிடம் "செபமாலையையும் வில்சனையும் கிளப்புக்குப் போகச் சொல்லுங்கள். எல்லோரையும் நான் பின்னேரம் சந்திக்கிறேன்." என்றார். வேலைக்காரச் சுப்பையா எல்லோருக்கும் கோப்பி கொண்டு வந்தான். சிவநேசரும் நல்லையாவும் கோப்பியை மெளனமாக அருந்தினார்கள். சிவநேசரைப் பொறுத்த வரையில் அவர் வாய்தான் கோப்பியை அருந்தியதே அல்லாமல் அவர் மனம் வேறெங்கோ இருந்தது. அவர் மூளையை அழுத்திக் கொண்டிருந்த திக்குத்திகாந்தரம் தெரியாத சிந்தனை என்னும் பனி மூட்டத்துள் தம்மால் ஏதாவது ஒரு நல்ல வழியைக் கண்டு பிடிக்க முடியாதா என்று அவர் உள்ளம் அலைந்து கொண்டிருந்தது.

[-  தொடரும் -]


மனக்கண் நாவலுக்கான இணைய இணைப்புகள் வருமாறு.

அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' (1 -11)  http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4758:2018-10-30-22-42-07&catid=25:2011-03-05-22-32-53&Itemid=47
அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' (12 - 22)  http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4764:-12-22&catid=25:2011-03-05-22-32-53&Itemid=47
அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' (23 - 32 & முடிவுரை)  http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4765:-23-32&catid=25:2011-03-05-22-32-53&Itemid=47


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

வ.ந.கிரிதரனின் பாடல்கள்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here