- எழுத்தாளர் சங்கரநாராணன் http://hemingwaytamil.blogspot.com என்னும் வலைப்பதிவினை உருவாக்கி அதில் ஹெமிங்வேயின் புகழ் மிக்க நாவல்களிலொன்றான 'The Old Man And The Sea' என்னும் நாவலை 'பெரியவர் மற்றும் கடல்' என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கின்றார். அவற்றை மேற்படி வலைப்பதிவில் பகுதி பகுதியாக வெளியீட்டும் வருகின்றார். அவற்றை நன்றியுடன் 'பதிவுகள்' இணைய இதழில் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள் -
ஹெமிங்வே 1899ல் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் ஓக் பார்க் என்ற ஊரில் பிறந்தார். 1917ல் கன்சாஸ் சிடி ஸ்டார் இதழில் எழுத ஆரம்பித்தார். முதல் உலகப் போரில் அவர் ஆம்புலன்ஸ் ஓட்டியாக இணைந்து கொண்டார். என்றாலும் காயம்பட்டு வீடு திரும்ப நேர்ந்தது. 1921 முதல் அவர் பாரிஸ் நகரத்தில் வாழ ஆரம்பித்தார். 1923ல் அரது முதல் முதல் புத்தகம் ‘மூன்று கதைகளும் பத்து கவிதைகளும்’ பாரிசில் வெளியானது. அடுத்ததாக அவரது சிறுகதைத் தொகுதி ‘நம் காலத்தில்’ 1925ல் அமெரிக்காவில் வெளியானது. 1926ல் வெளியான அவரது புத்தகம் ‘சூரியனும் உதிக்கிறான்’ வெளியானபோது அவர் ‘கடந்த தலைமுறை’யின் குரலாக அடையாளம் காணப் பட்டார். 1930 களில் அவர் கீ வெஸ்டிலும், பிறகு கியூபாவிலும் வசித்தார். என்றாலும் ஸ்பெய்ன், ஃப்ளாரிடா, இத்தாலி, ஆபிரிகா என பயணங்கள் செய்தார். அந்த அனுபவங்களில் எருதுபொருதுதல், வேட்டை என்று அவர் கதைகள் எழுதலானார். ஸ்பானிய உள்நாட்டுப் போரில் நிருபராக இருந்ததில், போர்ப் பின்னணியில் அவரால் ‘யாரை நோக்கி மணியோசை?’ என்கிற அருமையான நாவலைத் தர முடிந்தது. பெரியவர் மற்றும் கடல் என்கிற இந்த நாவல் 1951ல் எழுதப்பட்டு, 1953 ல் புலிட்சர் விருது இதற்கு அறிவிக்கப் பட்டது. 1954ல் ‘இனி வேண்டாம் ஆயுதங்கள்’ என்ற அவரது நாவல் நோபல் பரிசு வென்றது. 1961ல் ஹேமிங்வே தற்கொலை செய்துகொண்டார்.
மீளவும் நான் ஹெமிங்வேயிடம் வந்திருக்கிறேன். இடையே ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றைக்கும் ‘ஓல்ட் மேன் அன்ட் தி சீ’ ஒரு பிரமிப்பளிக்கிற கதை. ஒரு தளத்தில் அது மனிதன் ஒருவனுக்கும் ஒரு மீனுக்கும் நடக்கிற கதை. இன்னொரு விதத்தில் பார்த்தால் அது மனிதனுக்கும் இயற்கைக்குமான ஊடாட்டம். வேறொரு கோணத்தில், கால காலமான மானுடத்தின் பண்பாட்டையும், வீரத்தையும், இருத்தல் சார்ந்த சவால்களின் முன் மானுடத்தின் பராக்கிரமத்தையும் விவரித்துச் செல்வதாய் அமைகிறது. இது வெளியான காலத்தின் ஆவணமாகவும், அந்த வாழ்க்கை அதன் சூழல் அதில் தனி மனிதப் பங்களிப்பு எனவும் இதை அறிய முடியும். குழுக்களாகவோ, அமைப்புகளாகவோ அல்லாமல் ஒரு தனி மனிதனின் இயக்கம், செயல்பாடு அக்கால அஎமரிக்க வாழ்க்கை இது.
இதில் வரும் கிழவனின் துணிச்சலையும், இயல்பான தினவையும் ஹெமிங்வே கொண்டாடுகிறார்.
ஹெமிங்வேயின் உலகம் வேறு. என் உலகம் வேறு. இந்தக் கதையின் கிழவன், அந்த சாண்டியாகோ அல்ல நான். இன்றைய வாழ்க்கை ஒழுங்குகளை வைத்துச் சொல்கையில், ஹெமிங்வே பரத்திக் காட்டுகிற இந்தக் கிழவன் வாழ்ந்த வாழ்க்கை நமக்கு முற்றிலும் அந்நியமானது தான்.
என்றாலும் ஹெமிங்வேயின் வீர்யமான கதைகூறு திறன், நான் என்னை அறியாமல் சாண்டியாகோ பக்கம் நிற்கிறேன். அவனை வியப்புடன் நோக்குகிறேன். அவனுக்கு மீறிய நெருக்கடிகளில் அவன் அடையும் இழப்புகள் எனக்கு வலிக்கின்றன. தன் காலத்தில் மனிதன் தனது இருத்தலுக்காகவே கூட இயற்கையோடு போராட வேண்டி யிருந்தது, என்பதை ஹெமிங்வே சுட்டிக் காட்டிப் பதிவு செய்கிறார். தலையசைத்து ஆமோதிக்கவும், அந்த நாட்களை நினைவு கூரவும் ஹெமிங்வே வழி வகை செய்கிறார். சிறப்பாக, தனி மனிதன் எத்தனை மகத்தானவன், என்பதை, அவனது அபாரத் துணச்சலை, திறமையை, கலாரசனையை, பிரச்னைகளில் தாக்கு பிடிக்கிற ஆத்ம வலிமையை எல்லாம் அவர் இந்த நாவலில் உணர வைக்கிறார்.
மொழிபெயர்ப்பு தனிக் கலை. என் வாசகத் தளத்தை அது பரத்தி விரிக்கிறது. அகலப்படுத்தி ஆழப்படுத்துகிறது. வாசகனாக நான் அதிர்ஷ்டம் செய்தவனாகிறேன். ஹெமிங்வே என் ஆசான். உலக இலக்கியத்துக்கே அவர் நெறியாளர். அவரது இந்த நாவலுக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. 'ஓல்ட் மேன் அன்ட் தி ஸீ' நாவலை நான் ஆங்கிலத்தில் தான் வாசித்தேன். பிரமிப்பாய் இருந்தது. ஓர் எழுத்தின் உச்சபட்ச சாத்தியங்களை அது எனக்குக் கற்பித்தது. தனியே ஒரு கிழவன். அவனது அசாத்திய தன்னம்பிக்கை. அவன் மாத்திரமே பிரம்மாண்டமான கடலில். கூட அவனிடம் சிக்கிய பெரிய மீன். அதனுடன் அவனது போராட்டம். யார் ஜெயிக்கப் போகிறாரகள்?... என்கிற முடிச்சு. ஆ, மனிதன் மகத்தானவன் என்ற முத்தாய்ப்பு. எத்தனை வசிகரமான கரு. என்ன வசிகரமான நடை. வாழ்க்கை மீதான பிரியம். சவால்களின் தேடல். சாதனைத் தினவு. கிழவன் மறறும் மீன். தவிர கடல். இதில் கிழவன் தனக்குத் தானே பேசிக் கொள்கிற உத்தி அற்புதமானது. முழு கதையையும் இந்த உத்தியில் ஹெமிங்வே சிரமம் இல்லாமல் கூறிச் செல்ல முடிகிறது... இந்த உத்திதான் அந்த வயதில், என் எழுத்தின் மொட்டுப் பருவத்தில் என்னைக் கிறங்க வைத்தது. ஹெமிங்வே என் ஆசான்.
நான் அடிப்படையில் எழுத்தாளன். புனைவுக்காரன். மொழிபெயர்ப்பு என் வேலை அல்ல. அது எனக்கு உவப்பாகாது, என நான் நினைத்திருந்தேன். நான் வாசித்த நிறைய மொழிபெயர்ப்பு நூல்கள் எளிமையாய் இல்லை. வாசிக்கும் தரத்தில் இல்லை. மூல நூலை நான் தற்செயலாக வாசித்திருந்தால், அதன் மொழிபெயர்ப்பின் விவரப் பிழைகளும், நடைத் தடங்கல்களும், விடுபடல்களும், இன்ன பிற அபத்தங்களும என் கண்ணில் தூசி போல உறுத்தின. வெகு துயரமான கணங்கள் அவை. திரிந்த பால். வாய்க்கு ருசிக்காது. ஆனால் நான் தற்செயலாக கவனித்தேன். தி. ஜானகிராமன், க.நா.சுப்ரமணியம் போன்றவர்கள் மொழிபெயர்ப்பைப் பொறுப்பாய்க் கையில் எடுத்துச் செயல்பட்டிருக்கிறார்கள். எழுதக் கிடைக்கிற நேரத்தை தங்கள் படைப்புகளுக்காக அல்லாமல், மொழிபெயெர்ப்புக்கு என இப்படி அவர்கள் செலவு செய்திருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் அனுபவித்த படைப்பை மொழிபெயர்ப்பாக தாம்தான் செய்ய முடியும் என்கிற மாதிரி எதோ உணர்ச்சி உந்தப் பட்டிருக்க வேண்டும். யாம் பெற்றேம் இன்பம். பெறுக வையகம். ஒரு படைப்பு உருவாவதைப் போலவே மொழிபெயர்ப்பும் ஒரு 'கிரியேடிவிடி', புனைவுத்திறன் வேண்டிநிற்கிற விஷயம் என அவர்கள் கண்டுகொண்டார்கள்.
மொழிபெயர்ப்பு என்பது 'டென்னிஸ் இரட்டையர் ஆட்டம்'. இதைப் பலமுறை நான அனுபவித்திருக்கிறேன். இராமானுசராய் பகிரங்கப் படுத்தினின் வாசிப்பு அனுபவம் என்பது ஆகாவென்று அமைகிறது. மொழிபெயர்க்கையில் அவன் மூல எழுத்தாளனோடு இன்னும் நெருங்கி அமர்கிறான். மகா அனுபவம் அது. தன் பார்வை தீட்சண்யத்தை அந்த மொழிபெயர்ப்புப் புனைவாளன் இன்னும் தீர்க்கமாக்கிக் கொள்ள வாய்க்கிறது. இந்துவாகப் பிறந்தால் சாவதற்குள் காசி போய்வர வேண்டும், என்கிறாப் போல, ஒரு ருசிகொண்ட எழுத்தாளன் மொழிபெயர்ப்பதில் தானாகவே ஆர்வப் படுவான், என்றே எனக்குத் தோன்றுகிறது. தோன்றியது. நான் அப்படித்தான் இதோ இந்த நூலுக்குள் வந்தேன்.
*
ஹெமிங்வேயின் இந்த நாவலுக்கு, கடலும் கிழவனும், கிழவனும் கடலும், என பல மொழிபெயர்ப்புகள் தமிழிலேயே கிடைக்கின்றன. ஆயின் தலைப்பிலேயே அதன் வீர்யம் இன்னும் பொலிவு பெற வேண்டும் என்று இருக்கிறது எனக்கு. ஆங்கிலப் படங்கள், கடல் சார்ந்த திரைப்படங்கள் பார்க்கிற போது, கப்பலின் தலைவனை, அவன் எவ்வளவு இளையவனாய் இருந்தாலும் கூட, மரியாதையாய் எல்லாரும் 'ஓல்ட் மேன்' என்று அழைப்பதை கவனிக்க முடியும். 'ஓல்ட் மேன்' என்பது ஒரு மங்கல வழக்கு. ஆங்கிலேய ஆட்சியில் கூட இளம் வயது நீதிபதிகளை, தீர்ப்பு வழங்கும் போது, தலையில் வெண்நரை முடியாலான 'விக்' வைத்துக் கொண்டு பதவியாற்றியதைப் பார்த்திருக்கலாம். வெகுகாலமாய் நட்புடன் இருக்கிற ஒரு நண்பனைக் கூட, வயதுக்கு சம்பந்தம் இல்லாமல், “எங்கே உன்னோட ஒல்ட் மேன்?” எனக் கேட்பதைப் பார்க்கிறோம்.
கடலை நன்கு அறிந்தவன் இந்த நாவலின் கதாநாயகன். அவனை உயர்த்திப் பிடிக்கிற அளவிலேயே ஹெமிங்வே அவனை 'ஓல்ட் மேன்' என்று குறிப்பிடுகிறார். அந்த அளவில் கடலும் கிழவனும், அல்லது கிழவனும் கடலும் என்கிற தலைப்புகள் எனக்கு உவப்பாய், போதுமானதாய், ஒட்டுறவாய் இல்லை. பெரியவர் மற்றும் கடல், இதுவே எனது தேர்வு. 'மற்றும்' என்பது 'அன்ட்' என்கிற அளவில் ஒரு எறிவேகத்துடன் அமைதல் பொருத்தம், என நினைக்கிறேன். தவிரவும் பகிர முக்கியமாய் சேதி ஒன்று உண்டு. மூல நூல் கிடைக்கப் பெற்றவர்கள், அதையே நுகர்க. மொழிபெயர்ப்பை நோக்கி இடம் மாற வேண்டாம். என்னதான் தர்க்கம் செய்தாலும், மொழிபெயர்ப்பு என்பது 'ரெண்டாம் டிகாஷன்' தான். நன்றி.
எஸ். சங்கரநாராயணன்
91 9789987842
நாவல்: பெரியவர் மற்றும் கடல் (The Old Man AnD The Sea)
- எர்னெஸ்ட் ஹெமிங்வே | தமிழில் எஸ். சங்கரநாராயணன் -
அத்தியாயம் ஒன்று!
கல்ஃப் வளைகுடாப் பக்கம் தன்னந் தனியனாய் மீன் பிடிக்கப் போகிறான் அந்தக் கிழவன். கூட உதவி கிடையாது. கடந்த எண்பத்தி நாலு நாட்களாக அவனும் தினசரி கடலுக்குள் தனியே போகிறான். ஒத்த மீன் சிக்கவில்லை அவனுக்கு. முதல் நாப்பது நாட்கள் வரை உதவிக்கு என்று அவன்கூட பையன் ஒருத்தன் வந்தான். அவனை அவனது அப்பாஅம்மா. கூடப்போக வேண்டாம். என்று நிப்பாட்டி விட்டார்கள். இனி கிழவனுக்கு நல்லது எதும் நடக்க வாய்ப்பே இல்லை. நல்ல காலம்
அவனிடம் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டது. கிழவன் பூட்ட கேஸ், என அதைரியப் படுத்தி விட்டார்கள்.
அதனால் பையன் வேறு படகுக்காரரனிடம் உதவியாளாய்ப் போனான். முதல் வாரமே அவர்களுக்குக் கிடைத்தன மூணு அருமையான மீன்கள்!
தினசரி வெறும் படகுடன் தாத்தா கரை திரும்புகிறதைப் பார்க்க பையனுக்கு வருத்தமாய் இருந்தது. தாத்தா கரை திரும்ப இவன் ஓடிப்போய் அவருக்கு ஒத்தாசை செய்தான். வலைச் சுருளையோ, குத்தீட்டியையோ கயிற்றுக் கண்டையோ பாய்மரத்தையோ கிழவனின் படகில் இருந்து வாங்கி கரையில் சேர்த்தான். கிழவனின் பாய்மரம் அரதப் பழசு. கந்தல் கோலம். மாவு அடைக்கிற சாக்குப் பைகளால் அங்கங்கே ஒட்டு போடப்பட்டிருந்தது. கந்தல் கிழசலாய் இருந்தது அது. வெற்றிக் களிப்பில் எக்களிக்குமே கொடி, அது இல்லை இது. இது முடிவேயில்லாத தோல்வியின் துவண்ட படபடப்பு.
தாத்தா வற்றி உலர்ந்த உடம்புக்காரன். ஒடிசலான எலும்பு தேகம். அவன் பின்கழுத்தே மடிந்து வரிவரியாய்ச் சுருங்கிக் கிடந்தது. கடலின் உப்புத் தண்ணியில் பட்டுத் தெறித்த வெக்கையில் அவன் கன்னங்களில் பாளம் பாளமாய்ப் பள்ள பாதாளம்.
தளர்ந்த சருமம். கன்னம் தாண்டி முகமெங்கும் உழவு கண்ட வரிகள். கைகள் முறுக்கேறி தழும்பேறிக் கிடந்தன. கனமான பெரிய மீன்களை வடக்கயிறு கொண்டு படகுக்குள் இழுத்துப் போட்டு வெற்றி கண்ட கைகள் அவை. ஆனால் அவை எல்லாமே பழையவை. அது ஒரு காலம். அதில் புதிய தழும்பு எதுவும் இல்லை. மீன் அற்ற மணல் பெருவெளியின் குழிகளாகத் தெரிந்தன அந்தத் தழும்புகள் இப்போது.
தாத்தா எல்லா அளவிலும் கழண்டாச்சி. ஆனால், அந்தக் கண்கள்... சமுத்திரத்தின் அதே நிறமாய்க் கிடந்தன அவை. தோல்வி பயமே இல்லாத கண்கள். நம்பிக்கையும் உற்சாகமும் இன்னும் இருந்தன அவற்றில்.தாத்தாவும் பையனும் படகைக் கரையில் ஒதுக்கிவிட்டு மேட்டு மணலில் ஏறி வந்தார்கள். “சாண்டியாகோ?” பையன் தாத்தாவிடம் பேச ஆரம்பித்தான். “என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு. நாம சேர்ந்தே போகலாம். நானும் உங்ககூட நாளைக்கு வரலாம்னு இருக்கேன்.”
அவருதான் அவனுக்கு மீன் பிடிக்கிறதைச் சொல்லித் தந்தவர். தாத்தாவிடம் அவனுக்குப் பிரியம் இருந்தது.
“வேணா” என்றான் கிழவன். ”நீ இப்ப போறியே, ராசியான படகு அது. அங்கியே வேலையைப் பாருடா.”
“ராசியாவது ஒண்ணாவது. எய்யா உங்களுக்கு ஞாபகம் இருக்குதா? எப்பிடி ஒரு எம்பத்தேழு நாளு நாம தொடர்ச்சியா கடலுக்குப் போனம். ஒரு குஞ்சு சிக்கல. அப்பறமா ஒரு மூணு வாரம், எப்பிடி? பெரிய பெரிய மீனா அள்ளிறலையா. சில நேரம் சிலருக்கு ராசி. அவ்ளதான்.”
“ஆமாமா. நல்லா ஞாபகம் இருக்கு. ஞாபகம் இல்லாம என்ன?” என்றான் கிழவன். “எனக்குத் தெரியுண்டா. என்மேல அவநம்பிக்கை மாதிரி ஆயிப்போயி, அதுனால நீ என் கூடவர்றதை நிறுத்தல்ல. எனக்கு அது தெரியும்.”
“ச். எங்க அப்பா... அவர்தான் போக வேணான்னுட்டாரு. நான் சின்னப் பையன் தானே. அப்பா சொன்னால் கேட்டுக்கணும் இல்லே? அவர் சொன்னபடிதானே நான் செய்யணும்?”
“தெரியுது. தெரியுது” என்றான் கிழவன். “நான் அதையெல்லாம் வித்தியாசமா எடுத்துக்கல்ல.”
“அவரு... அந்தாளுக்கு நம்பிக்கையே கிடையாது!” என்றான் பையன்.
“அவருக்கு இல்லை தான்...” என்றான் கிழவன். “ஆனால் நமக்கு... நமக்கு இருக்கில்லே? இருக்கா இல்லியா சொல்லு.”
“நல்லாவே இருக்கு!” என்றான் பையன். “எய்யா பீர் குடிக்கறீங்களா? விடுதி மாடிக்குப் போயி தாக சாந்தி பண்ணிக்கிட்டு, அப்பறமா இந்த சாமாஞ் ஜெட்டையெல்லாம் எடுத்துக்கிட்டு வீட்டுக்குக் கிளம்பலாம்.“
“சரி” என்றான் கிழவன். “நாம ஒண்ணுக்குள்ள ஒண்ணு. எல்லாரும் மீனவர்கள். நமக்குள்ள என்ன?”
விடுதி மொட்டைமாடியில் போய் அமர்ந்தார்கள். கிழவனைச் சுத்திவர நிறைய மீனவர்கள். எல்லாரும் கிழவனை நக்கலடித்தார்கள். ஆனால் அவன் கோபப்படவில்லை. இன்னும் சில பேர், வயசானவர்கள், தாத்தாவைப் பார்த்து அவர்களுக்கு வருத்தமாய் இருந்தது. என்றாலும் யாரும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
காத்து பத்தியும், நீர்ச் சுழிப்புகளைப் பத்தியும் கடல் ஆழம் பத்தியும் அதில் படகை எப்படி லாவகமாய்ச் செலுத்த வேண்டி வந்தது என்பது பத்தியும் சாவகாசமான குரலில் வார்த்தையாடினார்கள். பரவாயில்லை இன்னிக்கு வெயில். காத்துங் கூட ஒரே சீராத்தானே இருந்தது... என்கிற மாதிரி அந்த நாளைப் பத்திய பேச்சாக அது இருந்தது.
அந்த நாளின் பெரும் இரை பிடித்த மீன்காரர்கள், அவர்களும் அங்கே இருந்தார்கள். அவற்றைக் கீறிக் கூறுபோட்டு அறுத்து நீளமான இரண்டு பலகைகளில் அவற்றைப் போட்டார்கள். அதை இருபக்கமுமாகப் பிடித்துத் தூக்கவே சிரமமாய் இருந்தது. தள்ளாடியபடியே அவற்றை எடுத்துப் போக வேண்டியிருந்தது.
மீன் கூடம், இரைக்கு எடுத்துச் செல்கிற மீன்களை கெடாமல் வைத்திருக்கும் ஸ்தலம் வரை அதைக் கொண்டு போய் வைத்துக்கொண்டு அவர்கள் காத்திருக்க வேண்டும். ஐஸ் லாரி வரும். வந்து இந்த மீன்களை ஹவானா சந்தைக்கு எடுத்துப் போகும். சுறா கிடைத்தவர்கள் அவற்றை சுறா தொழிற்சாலைக்கு அனுப்புவார்கள். அது வளைகுடாவின் இன்னொரு வாடையில் இருக்கிறது. அங்கே சுறாக்களை பெரிய கூடத்தில் கொக்கிகளில் தூக்கி தொங்கவிட்டு, அதன் ஈரலை அப்புறப் படுத்தி, செதிள்களை நறுக்கியெறிந்து, தோலை உரிப்பார்கள். சதையைத் துண்டங்களாக வகிர்ந்து அடுத்து உப்புக் கண்டம் போடுவார்கள்.
காத்து கிழக்குப் பக்கமாகப் புறப்பட்டு வரும் சமயங்களில் அந்தத் தொழிற்சாலையில் இருந்து ஒரு வீச்சம் காற்றுடன கிளம்பி வளைய வருவது உண்டு. கடற்கரை வளாகத்தில் இன்றைக்கு வாடை அத்தனை உக்கிரமாக இல்லை. இன்றைய காத்து வடபுலத்தில் சுழற்றி யடங்குகிறது. கரைப்பக்கம் விடுதியின் மொட்டைமாடி வெதுவெதுப்பான இதமான சூழலாக இருந்தது-
•
“சாண்டியாகோ?” என அழைத்தான் பையன்.
“ம்” என்றான் கிழவன். அவன் கையில் குவளை. அவன் நினைவோ பல வருஷம் முன்னால் எதையோ அளைந்து கொண்டிருந்தது.
“நான் போயி உமக்கு தூண்டில் இரைக்கு சார்தைன் மீன் பிடிச்சிக்கிட்டு வந்து தரட்டுமா?”
“அதெல்லா வேணாம். நீ போ. போயி கழிப் பந்தாட்டம் (பேஸ் பால்) விளையாடு. எனக்குத் தெம்பு இருக்குடா. நானே துடுப்பு வலிப்பேன். ரோஜெலியோ வலை போடுவான்.”
“எனக்கும் உங்க கூட வரணும்னு தான் இருக்கு. அட கூட வர முடியாட்டியும் வேற எதுனாச்சும் உதவி செய்யலாம்னு பார்க்கறேன்.”
“இந்தா. பீர் வாங்கிக் குடுத்தியே. அப்பறமென்ன?” என்றான் கிழவன். “நீ ஆளு நல்லா வளர்ந்துட்டேடா இப்ப. பெரியாளாட்டம் தெரியுது உன்னைப் பார்க்க.”
“என்னை நீங்க முதல் முதல்ல படகுல கூட்டிட்டுப் போனீங்களே, அப்ப எனக்கு என்ன வயசு தாத்தா?”
“அஞ்சு. ஒரு மீனை அப்படியே பச்சையா படகுக்குள்ள நான் இழுத்தேனா, அது பண்ணிய அளப்பறையில் படகே சின்னா பின்னாமாயிருமா இருந்தது. அன்னிக்கு நீயே செத்துருக்கணும். உனக்கு ஞாபகம் இருக்கா அது?”
“ம். ம். அந்த வால் படகில் சப்பு சப்புனு அறைஞ்சி அடிச்ச சத்தம். நாம உட்காருவமே அந்தப் பலகையே உடைஞ்சிட்டது அதன் அறைல. என்ன இரைச்சல் போட்டுது. நீங்க தடிய எடுத்து அதை மொத்து மொத்துனு மொத்தின சத்தம். ஒரு மரத்தை வெட்டுறாப் போல இருந்தது அது. என் மேல எல்லாம் சிதறிச்சே மீனோட இரத்தம். அந்த வாசனை. எனக்குப் பிடிச்சிருந்தது தாத்தா.”
“இங்க பாரு. நிசம்மாவே எல்லாம் உனக்கே ஞாபகத்தில் இருக்கா. அல்லது நடந்ததை நான் பிற்பாடு எப்பவாவது உனக்குச் சொல்லியிருக்கேனா?”
“நாம முதல் முதல்ல ஒண்ணா போனம் இல்லியா? அதுலயிருந்து எல்லாமே ஒண்ணு விடாம எனக்கு ஞாபகம் இருக்கு.”
சூரிய தகதகப்புக்குப் பழகிய நம்பிக்கை சுடர் விடும் பிரியமான கண்களால் கிழவன் அவனைப் பார்த்தான்.
“நீ மட்டும் என் பிள்ளையா இருந்தால், உன்னைக் கூடஅழைச்சிக்கிட்டு கடலுக்குள் போயி நம்ம விதி என்ன, ராசி என்னன்னு ஒரு கை பார்க்கலாம்டா” என்றான் கிழவன். “ஆனால் நீ என் பிள்ளை இல்லை. உங்க அப்பா அம்மா பிள்ளை நீ. அத்தோட இப்ப நீ போய் வர்ற படகும் நல்லா வாரிக் கொடுக்குது.”
“நாளைக்கு... உங்களுக்கு நான் சார்தைன் பிடிச்சித் தர்றேன். சரியா? தூண்டில் இரைகள் நாலு பெட்டி வேணும்னால் எங்க வாங்கணும், எனக்கு இடமும் தெரியும்” என்றான் பையன்.
“இன்னிக்கு என்கிட்ட மிச்சம் இருக்கிற இரை, அதை உப்புல போட்டு பதப்படுத்தி நாளைக்கு வெச்சிக்குவேன்” என்றான் கிழவன்.
“நாலு புது பெட்டி உங்களுக்கு நான் வாங்கித் தர்றேன் தாத்தா...”
“ம். ஒண்ணே ஒண்ணு. அது போதும்” என்றான் கிழவன். அவனது தெம்பும் தன்னம்பிக்கையும் சிறிதும் தளரவேயில்லை. குளிர்ந்த காற்று மெல்ல உயர்ந்து நடமாடியது. அது அவனது நம்பிக்கையை இன்னுமாய் உசுப்பி மேலெழுப்புவதாய் இருந்தது.
“இருக்கட்டும். நான் ரெண்டு வாங்கித் தர்றேனே...”
“சரி ரெண்டு” என கிழவன் சம்மதித்தான். “ஏய் திருட்டு கிருட்டு சமாச்சாரம் வேணாம்.”
“நான் திருடவும் செய்வேன்” என்றான் பையன். ”ஆனால் இதை... இந்தா, நான் துட்டு குடுத்து வாங்கியது இது.”
“நன்றி” என அந்தப் பைகளை வாங்கிக் கொண்டான் கிழவன். லேசாய் ஒரு அவமானம் உள்ளே எட்டிப் பார்த்ததா? ரொம்ப அதைப் பற்றி அவன் அலட்டிக்க முடியவில்லை. பையனிடம் அதை வாங்கிக் கொள்வதில் ஒண்ணும் குறைஞ்சி விடவில்லை
அவன், என்றுதான் பட்டது. தன் மானத்துக்கு அதில் பெரிய பாதிப்பு இல்லை எனவே நினைத்தான்.
“இந்தக் காத்தோட்டம்... இதே மாதிரியே இருந்தால் நாளைய நாள் சௌகர்யமாய் இருக்கும்” என்றான் கிழவன்.
•
“நாளைக்கு எந்தப் பக்கமாப் போறீங்க தாத்தா?” என்று கேட்டான் பையன்.
“காத்து அடிக்க ஆரம்பிக்கு முன்னால ரொம்ப தூரம் கடலுக்கு உள்ள போயிறணும்னு பார்க்கறேன். வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடியே கிளம்பிற வேண்டிதான்.”
“எங்க ஆளுங்களையும் உங்க கூட அத்தனை தூரம் வரச் சொல்ல முடியுமா பார்க்கறேன். ஒருவேளை வசமான பெரிய மீனா உனக்கு மாட்டினால் நாங்களும் உதவிக்கு வரலாம் இல்லியா?”
“உங்க ஆளு அத்தனை தூரம் எல்லாம் உள்ளாற வர இஷ்டப்பட மாட்டான்.”
“அந்த அண்ணன் வராது. ஆனால் அவரைவிட எனக்கு கண் நல்லா இருக்கு. ரொம்ப தூரத்தில் பறவை எதாவது வேட்டைக்குத் தயாராகுதான்னு என்னால பார்த்து, டால்ஃபின் எதாவது கிடைக்குதான்னு நான்தான் அவரை அழைச்சிக்கிட்டுப் போவேன்.
அதுமாதிரி எதாவது டிரிக் பண்ணி அவரை இழுத்துக்கிட்டு வந்திருவேன் தாத்தா!”
“என்னாச்சி? அவன் கண்ணு அவ்வளவு மோசமாவா இருக்கு?”
“அண்ணன் கண்ணு கிட்டத்தட்ட பொட்டையாயிட்டது தாத்தா.”
“ஆச்சர்யமா இருக்கு எனக்கு” என்றான் கிழவன். ஆமை வேட்டைக்குப் போனால் தான் இப்படி சீக்கிரமே கண்ணைக் காவு வாங்கிரும்.”
“அப்பிடியா தாத்தா. ஆனா நீங்க, மஸகிடோ கரை வரை போயி ஆமை பிடிச்சிருக்கிங்களே? எத்தனை வருஷமா பிடிச்சீங்க நீங்க? இப்பவும் உங்க கண்ணு நல்லாதானே இருக்கு தாத்தா?”
“நானா? நான் ஒரு விசித்திரப் பிறவி. என் கதை தனிக்கதை.”
“அதெல்லாம் சரி தாத்தா. இப்பவுங் கூட ஒரு வசம்மான பெரிய்ய மீன்ஞ் உங்களாண்ட சிக்கிட்டால்... அதைக் கையாள, படகில் தூக்கிப்போட உங்களுக்கு தெம்பு இருக்குதா?”
“இருக்குன்னு தான் தோணுதுடா. தவிர... அதுக்கெல்லாம் நெறைய 'நேக்' இருக்குது!”
“கிளம்பலாம். இந்த சாமானெல்லாம் வீட்டுக்குக் கொண்டு போகணும்” என்றான் பையன். “வலைகளை வீசி சார்தைன் மீனுங்க பிடிக்கப் போகணும்.”
•
இருவருமாய் படகின் துடுப்புகளை எடுத்துப் போட்டார்கள். பாய்மரத்தைத் தோளில் சார்த்திக் கொண்டான் கிழவன். சாமான்களைப் பையன் எடுத்துக் கொண்டான். வலைச்சுருள். முட்கள். கொக்கிகள். குத்தீட்டி. படகின் தள மறைப்பில் மீன் இரையும், கழிகள் சிலவும் இருந்தன. பிடித்த பெரிய மீனை படகிலேயே பக்கவாட்டில் கட்டி எடுத்து வருவார்கள். அவைகள் திமிறினால் கழிகளால் அதை அடக்குவார்கள்.
கிழவனின் சாமான்களை யாரும் திருடிப்போக மாட்டார்கள். என்றாலும் இந்த வலைச் சுருள், பாய்மரம எல்லாத்தையும் இங்கேயே பனியில் நனைய விட்டுப் போவது சரி வராது. சாமான் கெட்டுப் போகும். தவிரவும், நாமளே சாமானை, இந்த பாய்மரத்தையும், குத்தீட்டியையும் நாலு பேர் பார்க்கிறாப் போல படகிலேயே விட்டுப் போவது, திருடனை வெத்தலை பாக்கு வெச்சி அழைப்பதா ஆயிரும், என அவன் நினைத்தான்.
•
கிழவனின் ஜாகை நோக்கி தெருவில் நடந்தார்கள். வீட்டின் கதவு திறந்தே கிடந்தது. உள்ளே போனார்கள். கிழவன் பாய்மரத்தை, அதில் போர்த்திய துணியோடு சுவரில் சாய்த்து வைத்தான். பக்கத்திலேயே துடுப்பையும் பெட்டியையும் பையன் வைத்தான். பாய்மரம் அதுவே ஒரு அறையின் முழு நீளத்தில் மொத்த இடத்தையும் அடைக்கிறதாய் இருந்தது. பெரிய பாய்மரம். சின்ன அறை.
குடில் கூந்தற் பனை என்கிற உறுதியான கானோ இனப் படல்களால் கட்டமைக்கப் பட்டிருந்தது. .அந்த அறையில் படுக்கை ஒன்று. மேசை ஒன்று. ஒரு நாற்காலி. ஒதுக்கமாய் சமையலுக்கு. அழுக்காய்க் கிடந்தது அது. கரியில் எதும் சமைக்கலாம் என அடுப்பு ஒன்றும் இருந்தது.
புழுதி படிந்த பனைமடல் சுவர்களில் இரு வண்ணப்படங்கள். புனித திருஇருதய இயேசு. மற்றும் கோப்ரே நகரத்துப் புனிதவதி மரியாள். கிழவனின் மனைவிக்கு பக்தி அதிகம். அங்கே அவர்மனைவியின் ஒரு பழைய வண்ணந் தீட்டிய படம் கூட இருந்தது. இப்போது அதைப் பெரியவர் எடுத்துவிட்டார். அவர்மனைவி இப்போது இல்லை. மனைவி இல்லாமல் அந்தப் படம் இப்போது அவருக்கு பெருந் தனிமையை உணர வைத்தது. படத்தை எடுத்து, தோய்த்து மடித்துவைத்த தனது சட்டையின்
அடியில் துணியடுக்கில் மறைத்து வைத்துவிட்டார் அவர்.
“சாப்பாடு... ராத்திரிப் பாடு எப்பிடி தாத்தா?” என்றான் பையன்.
“ஒரு பானை அளவு மஞ்ச அரிசிச் சோறு. கூட மீன். நீயும் சாப்பிடறியா?”
“இல்ல வேணாம். நான் சாப்பிட எங்க வீட்டுக்குப் போயிருவேன். அடுப்பு கிடுப்பு ஏத்தித் தரட்டுமா?”
“இல்ல. அப்பறமா பாத்துக்கலாம். நானே சூடு பண்ணிக்குவேன். இல்லாட்டி அப்பிடியே குளுந்த சோறு சாப்ட்டுக்குவேன்.”
“கிளம்பறேன். வீச்சு வலை... நான் எடுத்துக்கவா?”
“ம்.”
வீட்டில் வலை கிடையாது. இருந்த வலையை ஒருநாள் விற்றுவிட்டார்கள். அந்த நாள் பையனுக்கு நினைவு இருக்கிறது. என்றாலும் தினப்படி இது ஒரு நாடகம். இது மாத்திரமா நாடகம்? வீட்டில் பானை இல்லை. அரிசி கிடையாது. சோறு? மீன்?
எதுவும் இல்லை. அதுவும் பையன் அறிவான்.
“எண்பத்தி ஐந்து. ராசியான எண் அப்பா” என்றான் கிழவன். “நாளைக்கு ஆயிரம் பவுண்டு உள்ள ஒரு வகையான மீன்... சிக்கினா உனக்கு எப்பிடி இருக்கும்டா?”
“வீச்சு வலைய எடுத்துக்கறேன் தாத்தா. நான் சார்தைன் பிடிக்கப் போவேன். வாசப்பக்கமா, வெயில் கதகதப்புக்கு வந்து உக்கார்றீங்களா?”
“ம். நேத்திய செய்தித்தாள் இருக்கு. கழிப் பந்தாட்டம் பத்தி எதுனா வாசிப்பம்.”
பையன் யோசித்தான். நேத்திய செய்தித்தாள். அதுவே உண்மையா கப்சாவா அவன் அறியான். ஆனால் கிழவன் படுக்கையின் அடியில் இருந்து தாளை எடுத்து வந்தான்.
“போடகா சந்தை இல்லே? அங்க பெரிகாவைப் பார்த்தேன். அவன்தான் செய்தித்தாளைத் தந்தான்” என்று விளக்கினான் கிழவன்.
“கடலில் சார்தைன் பிடித்துக் கொண்டுவருவேன். உங்க பங்கையும் என் பங்கையும் ஐஸில் போட்டுத் தனியே எடுத்து வைக்கிறேன். நாம காலைல அதைப் பங்கு போட்டுக்கலாம் தாத்தா. நான் திரும்பி வருவேன்ல? அப்ப எனக்கு கழிப் பந்து பத்தி
எல்லாம் சொல்லணும்.”
“யாங்க்கீ, பெரிய ஆளுங்கடா. அவங்க தோற்க வாய்ப்பே இல்லை.”
“ஆனால் எனக்கு என்னன்னா... க்ளீவ்லேண்ட் இந்தியர்கள், அவங்க கூட இல்லே மோத வேண்டியிருக்குது?”
“யாங்க்கீ மேல நம்பிக்கை வையடா மகனே. டிமேகியோ! ராட்சஸன்டா அவன். அவன் இருக்கற வரை காத்து நம்ம பக்கம்தான்.”
“எனக்கு ரெண்டு குழு மேல ஒரு இது. ஒண்ணு ட்ராயிட் புலிகள். இன்னொண்ணு, அதான் சொன்னேனே? க்ளீவ்லேண்டு.”
“ஏ பாவி சும்மா பயந்து சாகாதே? அப்பறம் சின்சினாட்டி சிவப்பு, சிகாகோ வெள்ளைன்னு எல்லாத்தையும் பார்த்து அரள ஆரம்பிச்சிருவே!”
“சரி தாத்தா. நீங்க பேப்பர் வாசிஙக. எல்லாம் நான் திரும்பி வரும்போது சொல்லுங்க. வரட்டா?”
“ஏ நாளைக்கு எண்பத்தி ஐந்தாவது நாள்! ஒரு லாட்டரி டிக்கெட், கூட்டு எண் எண்பத்தி ஐந்து வர்றாப்போல பாத்து வாங்குவமா? என்ன சொல்றே?”
“வாங்கலாம். ஆனா தாத்தா...” என்றான் பையன். “எண்பத்தி ஏழு? எண்பத்தி ஏழாம் நாளில் உங்களுக்கு ஒரு பெரிய விஷயம் நடக்கல்லியா?”
“திருப்பியும் ரெண்டாந் தரம் அது நடக்காது. நம்ம எண்பத்தி ஐந்து வர்றாப் போல ஒரு பரிசுச்சீட்டு வாங்கலாமா? ஒண்ணு நீ முயற்சி பண்ணிப் பாரேன்?”
“அப்படி ஒரு சீட்டை கேட்டு வரவழைக்கலாம்.”
“ஒரே சீட்டு. ரெண்டரை டாலர் விலை. அதை வாங்க துட்டு வேணுமே? நாம யாராண்ட கடன் கேட்கலாம்?”
“ச். அது பாத்துக்கலாம். நான் யார்கிட்டயாவது ரெண்டரை டாலர், கடன் கேட்டால் தருவாங்க...”
“நானே கூட யார் கிட்டயாவது கேட்டுப் பார்க்கலாம். கடன். ஆனால் கடன் வாங்காம வண்டியை ஓட்டறது நல்லது. முதல்ல கடன் வாங்குவே. அப்பறமா கடன் கேட்டுக் கெஞ்ச ஆரம்பிச்சிருவோம்.”
“உடம்பைப் பாத்துக்கங்க தாத்தா. இது என்ன மாசம்? செப்டம்பர். நினைவு இருக்கட்டும்” என்றான் பையன்.
“செப்டம்பர்ல தான் பெரிய பெரிய மீன்கள் மேலே வரும்” என்றான் கிழவன். “மே மாதமானால் எந்தக் கழுதையும் மீன் பிடிக்கலாம். அப்படி மீன் பெருகிக் கிடக்கும்.”
“நான் கிளம்பறேன் தாத்தா. சார்தைன் பிடிச்சிட்டு வரேன்...” என்றான் பையன்.
•
பையன் திரும்பி வந்தபோது, கிழவன் நாற்காலியில் அமர்ந்தவாக்கில் தூங்கிக் கொண்டிருந்தான். சூரியன் கீழே இறங்கி விட்டிருந்தது. படுக்கையில் கிடந்த ராணுவக் கம்பளியைப் பையன் எடுத்து வந்தான். நாற்காலியின் முதுகிலும், கிழவனின்
தோளிலுமாய் அதைப் பரப்பி விட்டான். என்ன மாதிரியான தோள்கள் அவை! வயதானவை என்றாலும் ஆச்சர்யகரமாக, உறுதியான முறுக்குடன் இருந்தன. அந்தக் கழுத்து, அதன் விரைப்பு இன்னும் தளராதிருந்தது.
கிழவன் உறக்கத்தில் இருந்தபோது அதில் அத்தனைக்கு சுருக்கங்களும் தெரியவில்லை. உறக்கச் சடவில் அவன் தலை முன்சரிந்து கிடந்தது. அவனது மேல்சட்டையில் நிறையக் கிழிசல்கள். அதுவே பாய்மரத் துணி போல் கிடந்தது. அந்தச் சட்டையே
சூரியன் பட்டுப் பட்டு என்னென்னவோ வண்ணங்களைக் கொண்டு தேமல் போல் தெரிந்தது.
கட்டு தளர்ந்த முதிய முகம்தான். கண்மூடிக் கிடந்த அந்த முகத்தில் உயிர் அம்சமே தெரியவில்லை. அவன் முட்டிமேல் கிடந்தது செய்தித்தாள். அவன் கை அதன் மேல் கிடந்தது. காற்றில் அந்த செய்தித்தாள் அவன் கைக்கு அடியில் படபடத்துக்
கொண்டிருந்தது. செருப்பு எதுவும் இல்லாமல் வெறுங்காலாய் இருந்தான் கிழவன்.
பையன் பெரியவரைத் தொந்தரவு செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு வெளியேறினான்.
•
சிறிது கழித்து அவன் திரும்ப வந்தான். அப்போதும் கிழவன் உறங்கிக் கொண்டிருந்தான்.
“எழுத்துங்கங்க ஐயா...” என்றபடியே கிழவனது ஒரு முட்டியில் கையால் அழுத்தினான் பையன்.
கிழவன் கண்ணைத் திறந்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து தன்னை மேலே நிகழ்காலத்துக்கு அவன் கொண்டு வர வேண்டியிருந்தது. மெல்ல ஒரு புன்னகை அவனிடம் இருந்து வந்தது.
“என்னடா? என்ன கொண்டு வந்திருக்கே?” என்று கேட்டான் கிழவன்.
“இராச் சாப்பாடு” என்றான் பையன். “வாங்க சாப்பிடலாம்.”
“ச். எனக்கு அத்தனை பசியா இல்லைடா...”
“வாங்க ஐயா. வந்து உக்காருங்க” என்றான் பையன். “சாபபிடாமல் போனால் எப்பிடி மீன் பிடிப்பீங்க? மனுசாளுக்குத் தெம்பு வேணாமா?”
“நான் பிடிச்சிருக்கேன்டா,” என்றபடி கிழவன் எழுந்து செய்தித்தாளை மடித்தான். பின் போர்வையையும் மடிக்க ஆரம்பித்தான்.
“போர்வையைப் போத்திக்கங்க. வாங்க. நான் இருக்கறவரை உங்களைப் பட்டினியா மீன் பிடிக்கப் போக விடமாட்டேன்.”
“நீ தீர்க்காயுசா இருடா. அதுக்கு உன்னையும் ஒழுங்கா நீ பாத்துக்கணும்” என்றார் பெரியவர். “என்ன இருக்கு சாப்பிட?''
“வேக வெச்ச மொச்சைக்கொட்டை. சோறு. பழ வறுவல். பால் சேர்த்து கூட்டு... எல்லாம் இருக்கு தாத்தா. வாங்க.”
•
உணவு விடுதியில் இருந்து ஒரு ரெண்டு அடுக்கு கேரியரில் பையன் வாங்கி வந்திருந்தான். சாப்பிடத் தேவையான கரண்டி, முள்கரண்டி, சிறு கத்திகள். ரெண்டு செட் கைதுடைக்கும் காகிதத்தில் இரு பொதிவுகளாக சட்டைப்பையில் தனியே
வைத்திருந்தான்.
“யார்றா இவ்வளவும் குடுத்து விட்டா?”
“மார்ட்டின். விடுதி முதலாளி தான்...”
“அவருக்கு நன்றி.”
“நான் ஏற்கனவே சொல்லிட்டு தான் வந்தேன் தாத்தா” என்றான் பையன். “நீங்க வேற தனியா நன்றின்னு சொல்லணுன்றது இல்லை.”
“ஒரு பெரிய மீனாப் பிடிச்சி அதோட வயித்து சதையை அவருக்குக் குடுப்பம்டா மகனே. “இதுக்கு முன்னாடி இப்பிடி அவரு நமக்கு சோறு குடுத்து விட்டிருக்காரா?”
“ஆமா. அப்டிதான் தோணுது தாத்தா.”
“வயத்துக் கறி இல்ல... அதைவிட பெரிசு அவருக்குச் செய்யணும்டா. நம்மளப் பத்திப் புரிஞ்சிக்கிட்டு பரிஞ்சிக்கிட்டு அவரு உபகாரம் பண்றாரு இல்லே?”
“கூட ரெண்டு பீர், அதுவும் குடுத்து விட்டிருக்காரு!”
“பீர்னா கேன்ல அடைச்சி வருது இல்லே, அது உத்தமம்.”
“ஆமா. ஆனா இவர் பாட்டில் பீர் தந்தாரு. ஹாத்வே பீர். பாட்டிலைத் திரும்பக் கொண்டுபோய்க் கொடுத்திருவேன்.”
“நல்ல பையன்டா நீ” என்றார் பெரியவர். “சாப்பிடலாமா?”
“நான்தான் உங்களைக் கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்” என்றான் பையன். “சூடு ஆறிப்போகும்னு, நீங்க வர்றவரை நான் டப்பாவைத் திறக்காமல் காத்திட்டிருக்கேன்...”
•
“இதோ. நான் வந்தாச்சி” என்றான் கிழவன். “கை கழுவிட்டு வர நாழியாயிட்டது.”
எங்க கழுவினீரு, என நினைத்தான் பையன். அதுவும் ஒரு பாவனை தான். வீட்டில் சொட்டுத் தண்ணி கிடையாது. கிராமப் பஞ்சாயத்துத் தெருக் குழாய், அது ரெண்டு தெரு தள்ளி இருக்கிறது. நாம போயி ஒரு வாளியாவது தண்ணி பிடிச்சி இங்க
தாத்தாவுக்குக் கொண்டுவந்து தரணும், என பையன் யோசித்தான்.
சோப்பு. அப்பறம் ஒரு நல்ல துண்டு. ச். இதெல்லாம் நான் முன்னமே யோசிச்சிருக்க வேணாமா? ஒரு சட்டை. மேல்கோட்டு ஒண்ணு, இந்தக் குளிர்காலத்தைத் தாக்குப் பிடிக்க... காலுக்கு எதாவது ஷூ. இன்னொரு போர்வை.
“கூட்டு ரொம்ப ருசியா இருக்குடா” என்றார் பெரியவர்.
“கழிப் பந்து... அதைப் பத்திச் சொல்லுங்க தாத்தா” என்றான் பையன்.
“அமெரிக்கன் லீக்ல, நான் சொன்னேனே, யாங்க்கீ... இருக்காங்க.” கிழவன் உற்சாகமாய் ஆரம்பித்தான்.
“யாங்க்கி, இன்னிக்குத் தோத்துட்டாங்க” என்றான் பையன்.
“அதெல்லாம் விஷயமே இல்ல. டிமேகியோ! ராட்சஸன். அவன் ஒருத்தன் இருக்கான் அங்க.”
“மீதி ஆட்களும் கூட ஆடறாங்களே தாத்தா.”
“ம். ஆடறாங்க. ஆடாம என்ன? ஆனால் அவன்... மத்தவங்களுக்கும் அவனுக்கும் பெரிய வித்தியாசம் உண்டுடா. இன்னொரு லீக்னு பார்த்தால், ப்ரூக்லின் மற்றும் ஃபிலடெல்ஃபியா. அதுல நான் ப்ரூக்லின் பக்கம். அப்பறம் டிக் சிஸ்லர். பழைய
பூங்காவில் நடந்த ஆட்டம். என்னமா டிரைவ் அடிச்சான்? அதெல்லாம் பாக்கணும்டா...” கிழவன் தன்யோசனையில் தொடர்ந்து பேசினான்.
“அது மாதிரி ஒரு வீச்சை நான் பாத்ததே இல்லை. அடின்னா அது அடி. அவன் அடிச்ச தூரத்துக்கு அடிக்க நாட்ல ஆளே கிடையாதுன்னுதான் சொல்லணும்.”
“அவன் நம்ம விடுதிப்பக்கம் வந்துபோன காலங்கள். அதெல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா தாத்தா?”
“ம். ம். அவனை என்கூட மீன் பிடிக்க அழைச்சிட்டுப் போகணும்னு எனக்கு ரொம்ப இது. ஆனால் அவன்கிட்ட கேட்க என்னமோ மாதிரி இருந்தது. உன்கிட்டச் சொல்லி அவனைக் கூப்பிடச் சொன்னேன். நீ எனக்கு மேல. உனக்கும் அவன்கிட்ட கேட்க
கூச்சம்!”
“ஆமாமா!” என்றான் பையன். “கேட்டிருக்கலாம். கேட்காமல் விட்டுட்டம். அது தப்புதான். கூப்பிட்டால் அவனும் வர மாட்டேன்னு சொல்ற ஆள் கிடையாது. நாம அழைச்சிட்டுப் போயிருந்தம்னா காலம் பூரா நினைச்சி சந்தோசப் படறாப்ல ஒரு
நினைவா அது ஆயிருக்கும்...”
“அதிரடிக்காரன் டிமேகியோவை நம்ம கூட வரானான்னு அழைச்சிப் பாக்கலாம்டா” என்றான் கிழவன். “நான் கேள்விப்பட்டேன். அவங்க அப்பா ஒரு மீனவன்னு சொல்றாங்க. அவங்க அப்பாவும் நம்மைப் போல இல்லாதப் பட்டவரா இருக்கலாம். அப்ப
அவங்க நம்மைப் புரிஞ்சுக்குவாங்க, இல்லியா?”
“அவரா? அதிரடிக்கார சிஸ்வரரின் அப்பா ஒண்ணும் ஏழை கிடையாது. அந்தாளு என் வயசா இருக்கிற போதே, பெரிய லீக் ஆட்டம் எல்லாம் விளையாட ஆரம்பிச்சாச்சி...”
“நான் ஒன் வயசா இருக்கும் போது... இல்லடா? நான் ஆபிரிக்கக் கப்பல் ஒன்றில் இருந்தேனாக்கும்? மேல் தளமே மைதானம் போல. பாய்மரத்தில் நான் இருந்தேன். ஆபிரிக்கக் கடற்கரைப் பக்கம் சாயந்தர வேளைகளில் சிங்கங்கள் உலவித் திரியும்.
நான் பாத்திருக்கேன்!” என்றான் கிழவன்.
“ஆமாமா. நீங்க சொல்லிர்க்கீங்க தாத்தா” என்றான் பையன்.
“சரி. நாம இப்ப ஆபிரிக்கா பதிப் பேசலாமா, இல்ல கழிப் பந்தாட்டம் பத்தியா?”
“விளையாட்டு பத்தியே பேசலாம் தாத்தா” என்றான் பையன். “சேம்பியன் ஜான் ஜே மெக்ரா...” ஜே என்பதை ஜோட்டா என்று குறிப்பிட்டான் பையன்.
“அந்தக் காலத்தில் அவனும் சிலப்ப நம்ம விடுதிக்கு வருவான்டா...” என்றான் கிழவன். ”முரட்டு ஆசாமி அவன். வெடுக் வெடுக்னு பேசுவான். தண்ணியப் போட்டுட்டால் எல்லாம் இன்னும் சாமியாட்டமா ஆகிப் போகும். விளையாட்டில் மாத்திரமல்ல,
ரேஸ், குதிரைப் பந்தயத்திலும் அவனுக்கு ஒரு இது. எந்தக் குதிரை எந்த ரேஸ்ல ஓடுது, எப்பவுமே அவன் சட்டைப் பையில் விவரப் பட்டியல் வைத்திருப்பான். குதிரை பெயரைச் சொல்லி தொலைபேசியிலேயே பணம் கட்டி விளையாடுவான்.”
“பந்தைக் கையாள்வதில் ஆள் சூரன்லா. எங்க அப்பா சொல்றாரு, அவன்தான் ஆட்டத்திலேயே பெஸ்ட்ன்றாரு.”
“சொல்லுவாரு, சொல்லுவாரு. அப்பல்லாம் இங்க அடிக்கடி வருவான் அவன். அதனால அப்பிடிச் சொல்றாரு!” என்றான் கிழவன். “அவரு பந்தைக் கண்டாரா ஆட்டத்தைக் கண்டாரா? துரோசர், வருஷா வருஷம் அவனும் இந்தப் பக்கம் வந்து
போனான்னு வெய்யி. உங்க அப்பா அவனையும் ஆகா இவன்தான ஒசத்தின்னுருவாரு!”
“சரி தாத்தா. நீங்க சொல்லுங்க. பந்தைக் கையாள்றதுலா நிசமான சூரன் யாரு, லூக்கா, மைக் கொனாஸ்லசா?”
“எனக்கு என்னவோ ரெண்டு பேரும் சமமாத்தான் படுதுடா.”
•
“அதேமாதிரி, மீன் பிடிக்கறதுல ஆகப் பெரிய ஆளு... அது நீங்கதான்!”
“இல்ல. என்னைவிட சூராதி சூரன்லாம் இருக்காங்க.”
“ஆகா” என்றான் பையன். “நல்ல திறமைசாலிகள் நிறையப் பேர் இருக்காங்க. சில பேர் அதில் கரை கண்டவர்கள். ஆனால், நீங்க... உங்களை மாதிரி வேற ஆள் கிடையாது. தனிக்காட்டு ராஜா நீங்க.”
“நன்றி. நீ என்னை குஷிப் படுத்தணும்னு சொல்றே, தெரியுது. பாப்பம். என் சக்திக்கு மீறிய எதும் பெரிய மீனா மாட்டி என்னைக் கவுத்தாமல் இருக்கணும்...” என்றான் கிழவன்.
“உங்க கிட்ட நீங்க சொல்றாமாதிரி பலம் இருந்திச்சின்னால், உங்க கிட்ட சிக்காத பெரிய மீன்... இருக்க முடியாது தாத்தா.”
“நான் சொல்றேன்... ஆனால் நான் நினைக்கிற அளவுக்கு எனக்கு பலம் இருக்கா, அது சந்தேகம் தான்...” என்றான் கிழவன். “ஆனால்... எனக்கு நிறைய டிரிக் தெரியும். பிரச்னைன்னு வந்திட்டால் சமாளிக்கிற யுக்திகள் தெரியும்!”
“நேரம் ஆச்சி. நீங்க படுக்கப் போகணும் தாத்தா” என்றான் பையன். “அப்பதான் காலைல புதுத் தெம்போட கடலுக்குப் போகலாம். நான் இதையெல்லாம் விடுதில திரும்பக் குடுத்திட்டுப் போறேன்.”
“இரவு வணக்கம். நான் காலைல உன்னை எழுப்பறேன்.”
“நீங்கதான் தாத்தா என்னோட அலாரம்” என்றான் பையன்.
“வயசுடா. உன் வயசுக்கு நீ அடிச்சிப் போட்டாப்ல தூங்கறே. என் வயசுக்கு சுதாரிப்பு வருது” என்றான் கிழவன். “பெரியவர்களுக்கு ஏன் சீக்கிரமே முழிப்பு வந்திருது? அதுனால என்ன? அவர்கள் நாள் இன்னும் நீளமா அமையுது. அவ்ளதான்.”
“தெரியல்ல” என்றான் பையன். “எனக்குத் தெரிஞ்ச அளவில், சின்ன புள்ளைங்க அடிச்சிப் போட்டாப்ல உலகை மறந்து தூங்கறாங்க. ரொம்ப நேரம் தூங்கறாங்க.”
“ச். யாரும் வந்து என்னை எழுப்பி விடறது, எனக்குப் பிடிக்கல்ல. எனக்கு என்னவோ அது சங்கடமா இருக்கு. எப்ப நானே எழுந்திருப்பேனோ தெரியல்ல.”
“புரியுது புரியுது” என்றார் பெரியவர்.
“நல்லா தூங்குங்க ஐயா.”
பையன் போய்விட்டான்.
•
மேசைவிளக்கு இல்லாமல் இருட்டிலேயே அவர்கள் சாப்பிட்டிருந்தார்கள். கிழவன் கால்சராயைக் கழற்றினான். இருளில் அப்படியே படுத்துக் கொண்டான். கால்சராயை செய்தித்தாளில் சுருட்டி தலையணை போல உயரம் வைத்துக் கொண்டான்.
கட்டிலின் ஸ்பிரிங்குகள் மேல் செய்தித்தாள் விரித்துக் கிடந்தது. உருண்டு போர்வையைச் சுற்றிக்கொண்டான் கிழவன்.
சிறிது நேரத்திலேயே உறங்கிப் போனான்.
அவன் சிறுவனாக இருந்த காலங்கள். ஆபிரிக்கா நினைவுகள் கனவாக உள்ளே அலைமோதின. பொன்னாய் மின்னும் கடல்மணல் துகள்கள். வெளேர் மணல் பரப்புகள் கூட இருக்கும் அங்கே. அந்தப் பளீரில் கண்ணே கூசுமே. கோபுர மணல் திட்டுக்கள்.
பழுப்பு நிறத்தில் பெரிய பெரிய மலைகள்... எல்லாம் கனவில் வந்தன.
ஒவ்வொரு நாளும் அவனுக்கு அந்தக் கடற்கரை வாசம் கனவில் வாய்க்கவே செய்கிறது. அலைகளின் உருமல்கள் கேட்கின்றன. அதனூடே நாட்டுப் படகுகள் அமிழ்ந்து ஏறி வருகின்றன. அந்தப் படகுகளில் இருந்து மக்கிய தார் வாசனை, வடக்கயிறுகளின்
கொச்சை வாடை. படகின் தளத்தில் அவன் இருக்கிற பிரமை தட்டியது அவனுக்கு. நிலத்தில் இருந்து வீசும் காலைக் குளிர்காற்று.
அவனுக்கு இன்னும் அந்த ஆபிரிக்க வாடை விலகாமல் உள்ளே கிடந்தது.
•
மனம் ஆபிரிக்கக் காட்டு நினைவுகளில் இஷ்டப்பட்டு கனவுலகில் அலைந்து திரியும். தரைக்காத்தின் சில்லிப்பான வாடை தட்டுகையில் தாத்தா விழித்துக்கொள்வார். ஆனால் இன்றைக்கு சீக்கிரமே வந்துவிட்டது ஆபிரிக்க நிலக்காற்றின் குளிர். இது
கனவு என்றும், இன்னும் விடியவில்லை, ரொம்ப சீக்கிரமே சூட்சுமம் உசுப்பப்படுகிறது என்றும் பெரியவர் உணர்ந்தார். அவர் கண்ணைத் திறக்காமல் இன்னுமாகக் கனவில் துழாவினார்.
கடலுக்குள்ளே அங்கங்கேயான வெள்ளைத் திட்டுகளை அவர் பார்த்தார். விதவிதமான கடற்கரைகளை அவர் காட்சிகளாகக் கண்டார். கானரி தீவுகளின் விதவிதமான சாலை வழிகள் தெரிந்தன.
ஆனால் கடலில் திடுதிப்பென்று புறப்படும் புயல்கள் பத்தி யெல்லாம் கனவில் அவர் காண்பது இல்லை. அவர் கனவில் பெண்களும் வருவது கிடையாது. மறக்க முடியாத பெரும் சம்பவங்களோ, மகா மீன்களோ வருவதே இல்லை. சண்டை
சச்சரவுகளோ, நீ பலசாலியா நானா, என்கிற மோதல்களோ... ம்ஹும்.
அவர் சம்சாரம் பற்றிக் கூட கனவு வருவது கிடையாது.
இப்ப இருக்கிற இடங்கள் வந்தன கனவில். கடற்கரையில் சிங்கங்கள் நடமாட்டத்தைப் பார்த்தார் கனவில். காலைப் பொழுதின் மசங்கலில் சிங்கங்கள் பூனைக் குட்டிகளாய் விளையாடி கொட்டமடித்தன. அவருக்குப் பிரியமானவை அவை. அந்தப் பையன்,
அவனைப் போல அவற்றையும் அவர் நேசித்தார். ஆனால் அவர் கனவில் சிங்கங்கள் தாம் வந்தன, பையன் வரவில்லை.
மெல்ல கண் திறந்தார்.
திறந்து கிடந்த வாசலுக்கு வெளியே நிலா வெளிச்சத்தைப் பரப்பி விட்டிருந்தது. தலைக்கு வைத்திருந்த கால்சராய்ச் சுருளைத் திரும்ப நீவிப் பிரித்தார். அணிந்து கொண்டார். ஜாகைக்கு வெளியே வந்து ஒண்ணுக்கடித்தார்.
பையனை எழுப்ப என்று தெருவுக்கு இறங்கினார். அதிகாலைக் குளிர் அவரை நடுங்க வைத்தது. குளிர் சகஜமான விஷயம் தான் அவருக்கு. படகில் போகையில் அப்படியே உடலை உதறி கதகதப்பாக்கிக் கொள்வார் அவர். அப்படியே துடுப்பு போடவும்
ஆரம்பித்து விடுவார்.
பையன் குடியிருந்த வீட்டின் கதவை மெல்ல உள்ளே தள்ளித் திறந்தார். சத்தமே வராத நடையில் உள்ளே வெறுங்காலுடன் போனார்.
முதல் அறையில் ஒரு கட்டிலில் அவன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். நிலா மெல்ல பின்வாங்கிக் கொண்டிருந்த அந்த மெல்லொளியில் அவனைத் தெளிவாக அவரால் பார்க்க முடிந்தது.
அவனது ஒரு காலை மிருதுவாகத் தொட்டு கையை அப்படியே வைத்திருந்தார். அந்த ஸ்பரிச வெதுவெதுப்பில் பையன் உறக்கம் தெளிந்து அவரைப் பார்க்கும் வரை வைத்திருந்தார். கண் விழித்துப் பார்த்தான் அவன். பெரியவர் தலையாட்டினார்.
நாற்காலியில் கிடந்த கால்சராயைப் பையன் எடுத்து படுக்கையில் அமர்ந்தபடியே மாட்டிக் கொண்டான்.
பெரியவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். பையன், அவன் பின்தொடர்ந்தான். இன்னும் உறக்கச் சடவாகவே இருந்தான். பெரியவர் அவன் தோளை அணைத்தபடியே கூட்டி வந்தார்.
சின்னப் பிள்ளை. அயர்ந்த தூக்கத்தில் இருந்தவனை எழுப்பி விட்டேன். அவருக்கு வருத்தமாய் இருந்தது. “சாரிடா” என்றார் பெரியவர்.
“-க்கும்...” என்றான் பையன். “காலைல எழுந்து வேலைக்குக் கிளம்ப வேண்டாமா? அதான் மனுசாளுக்கு அழகு.”
தெருவில் நடந்தபடி அவர்கள் கிழவனின் ஜாகைக்கு வந்தார்கள். அப்பவே தெருவில் நடமாட்டம் ஆரம்பித்திருந்தது. செருப்பு அணியாமல் சனங்கள் இங்கே அங்கே என்று அவரவர் படகின் பாய்மரங்களுடன் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
கிழவனின் குடிசையில் தூண்டில் வலைச் சுருளை அடக்கிய கூடையைப் பையன் எடுத்துக் கொண்டான். குத்தீட்டி ஆயுதங்களையும் கூடவே தூக்கிக் கொண்டான். கிழவன் தோளில் பாய்மரம், அதன் கிழிசல் கொடித் துணிச் சுருட்டல்களுடன்.
“காபி வேணுமா தாத்தா?” என்று கேட்டான் பையன்.
“இந்த கச்சடாவெல்லாம் படகில் போட்டுருவம் முதல்ல. அப்பறம் எதும் பாக்கலாம்.”
•
அந்த மீனவர்களுக்காக அதிகாலையில் கெட்டிப் பால் கேன்களில் இருந்து பால் ஊற்றி, காபி கலந்து தர சிறு பெட்டிக் கடை இருந்தது. காபி அருந்தினார்கள்.
“தாத்தா, நல்லா தூங்கினீங்களா?” என்று கேட்டான் பையன். இப்போது கொஞ்சம் சுதாரிப்பு அவனிடம் வந்திருந்தாலும் நித்ராதேவி இன்னும் முழுசாய் அவனை விடவில்லை.
“அட்டகாசமான தூக்கம்லா, மாப்ளோய்” என்றான் கிழவன். “இன்னிக்கு நல்ல தெம்பாய்த்தான் இருக்கேன்!”
“நானுந்தான்” என்றான் பையன். “ம். இப்ப நான் போயி சார்தைன் மீன்கள், உங்களுக்கும் எனக்குமா கொண்டு வரணும். மீனுக்கு இரை... புதுச் சரக்கா வாங்கிக்குவம். எங்க முதலாளி, எப்பவும் அவர்தான் தன் தூண்டிலையோ, சாமான்களையோ தானே
எடுத்துட்டு வருவார். எங்களைத் தொட விடமாட்டார்.”
“ஐயய்ய, அது சரின்னு சொல்ல மாட்டேன். அதென்ன நம்பிக்கை இல்லாமல்? அது தப்பாச்சே. நீ... என் சாமான்களை நீ உன் அஞ்சு வயசில் இருந்து, நீதான் கொண்டு வர்றே எனக்காக, இல்லியா?”
“ம். தெரியுது எனக்கு” என்றான் பையன். “தோ வந்திர்றேன். நீங்க இன்னொரு வாட்டி காபி வேணா சாப்பிடுங்க. நமக்கு இங்க கணக்கு இருக்கே...”
பையன் கிளம்பிப் போனான். பவளப் பாறைகள் நிறைந்த மணல்வெளி. வெறுங்காலுடன் போனான் பையன். குளிர் பதன இல்லம். அங்கேதான் இரைகளை பதப்படுத்தி வைத்திருப்பார்கள்.
பெரியவர் திரும்பவும் காபி ஒண்ணு வாங்கிக் கொண்டார். மெல்ல அனுபவித்து அதை நிதானமாய்க் குடித்தார். கடலுக்குள் இறங்கினால் பிறகு சாப்பிடக் கொள்ள வாய்ப்பதே இல்லை. முழு நாளையும் இந்தக் காபியோடு தான் தாக்கு பிடிக்க வேண்டும்.
இந்த ரெண்டாவது டோஸ் காபி, அதை அவர் கட்டாயம் குடித்தாக வேண்டி யிருந்தது. அதை அவர் உணர்ந்திருந்தார்.
வயசு ஆகி விட்டது. இப்பவெல்லாம் சாப்பிடுவது என்பதே அலுப்பான விஷயமாய் ஆகி யிருந்தது. மதியத்துக்கு என்று அவர் சாப்பிட எதுவும் எடுத்துப் போகிறதே இல்லை. ஒரு போத்தல் தண்ணீர். படகின் முன் தளத்தின் கோஸ்பெட்டி அடியில்
உள்ளே வைத்திருப்பார். நாள்பூராத்துக்கும் தன் தேவைகளை அந்த ஒரு போத்தல் தண்ணீரோடு முடித்துக் கொண்டார் பெரியவர்.
•
பையன் திரும்பி விட்டான். சார்தைன் மற்றும் மீன் இரைகளை ஒரு செய்தித்தாளில் பொதிந்து கொண்டு வந்திருந்தான். மெல்ல படகை நோக்கி பள்ளம் இறங்கிப் போனார்கள். மணல் வெளி. சிறிதும் பெரிதுமான பருக்கைக் கற்கள் கால்களில் உறுத்தின.
இருவரும் ஓடங்களை சற்று தூக்கி நீருக்குள் தள்ளி விட்டார்கள்.
“அதிர்ஷ்டம் கை கொடுக்கட்டும் ஐயா!”
“உனக்கும்!” என்றார் பெரியவர்.
[தொடரும்]