அந்த ஞாயிற்றுக்கிழமை சுந்தரம்பிள்ளைக்கு விடுமுறை நாள். வீட்டில் மனைவி , பிள்ளைகளுடன் ஒன்றாக இருக்க கிடைத்த அந்த நாளை ஓவட்ரைம் செய்வதற்கு ஒப்புக்கொண்டதால் வேலைக்கு வந்தது மட்டுமல்லாது விடுமுறையில் இருந்த சாமையும் துணைக்காக இழுத்து வந்ததான். அன்று விசேடமான வேலை நாள். பெண் பூனைகளை மட்டும் கருத்தடை ஆபிரேசன் செய்வதற்கு வேதனத்துக்கு அப்பால் விசேடபோனசாக பணம் கிடைக்கும் என்பதால் அன்று வேலை செய்ய ஒப்புக்கொண்டிருந்தான். சொந்தமாக வீடு வங்கியதால் ஏற்பட்டுள்ள பெரிய வங்கிக்கடனில் இந்த பணம் சிறு துளியாக உதவும் என்ற சிந்தனையில் ஒப்புக்கொண்ட வேலையிது. மற்றைய நாட்களைப் போல் காலை வந்து இரவுவரை வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.
இருபது பெண் பூனைகளும் ஒரு ஆண் பூனையும் கருத்தடை ஆபரேசன் செய்ய வேண்டி இருந்தது. அதை செய்து முடித்தால் எப்போதும் வீடு செல்லலாம். ஓவ்வொரு பூனைக்கும் இவ்வளவு பணம் என்பதுதான்.
அந்த இருபத்தியொரு பூனைகள், பூனைப்பகுதியில் தயாராக இருந்தன. சாம் அனுபவம் உள்ள நேர்சானதால் மயக்க மருந்தைக் கொடுத்து ஒவ்வொன்றின் வயிற்றுப்பக்கத்தை சவரம் செய்து சுத்தப்படுத்தி தயாராக மேசைக்கு கொண்டுவந்து கிடத்தியதும் சுந்தரம்பிள்ளைக்கு இடை நிறுத்தாமல் ஆபிரேசனை விரைவாக செய்ய முடிந்தது. மூன்றுமணி நேரத்தில் பதினைந்து பூனைகளைக் கருத்தடை செய்து விட்ட போது மதியம் ஒரு மணியாகிவிட்டது.இன்னும் ஆறு பூனைகளையும் ஒருமணித்தியாலத்தில் செய்தால் இரண்டு மணிக்கு முடித்து விட்டு வீடு செல்லலாம் எனக் கணக்கு போட்டிருந்த சுந்தரம்பிள்ளையிடம் சாம் வந்து ‘நாங்கள் சாப்பாட்டுக்குப் போய் வருவோம்’என்ற போது சுந்தரம்பிள்ளைக்கு அது சம்மதமாக இருக்கவில்லை.
‘சாம் இன்று விடுமுறை நாள். காலநிலையும் நன்றாக இருக்கிறது. வீட்டுக்கு போனால் பிள்ளைகளை சொப்பிங் சென்ரருக்கு கொண்டு சொல்ல வேண்டும். அவர்களை அங்கு கூட்டி செல்வதாக வாக்குறுதி அளித்து விட்டு வந்தனான்.’
‘அது பரவாயில்லை. சாப்பிட்டு வந்து சீக்கிரம் வேலையை முடித்து விடலாம்’
‘என்ன அவசரம் ? அவ்வளவு பசிக்கிறதா?
‘இங்கே வா’ என கையில் பிடித்து பூனை வாட்டிற்கு அழைத்து சென்று ‘இந்தப் பூனைகளை இடையில் நிறுத்தி அவற்றை ஆபிரேசன் செய்ய மனமில்லை. இவற்றை பிரித்தெடுக்கும் பாவத்தை நான் எப்படி செய்ய முடியும்?’
கறுத்த கால்மேசு போட்டது போன்ற இரண்டு கருமையான கால்களுடன் சற்று வெண்பழுப்பு நிறமான அழகிய ஆண் சயாமிய பூனை தனது தலையை திருப்பி நீலநிறகண்களால் கூட்டுக்கு வெளியே பார்த்தபடி அதே சயாமிய இன பெண் பூனையை புணர்ந்து கொண்டிருந்தன. அதனது நீளமான உடல் அசைவுகளை ஏற்றபடி பெண்பூனை மெய் மறந்திருந்தது. அந்தச் சிறிய கூட்டில் புறச்சூழலை பொருட்படுத்தாது அவை உறவு கொள்ளும்போது பெண்பூனை மெதுவாக முனகியடி, கண்ணை மூடியபடி இருந்தது. ஆண் பூனை இதுதான் கடைசிச் சந்தர்ப்பம் என நினைத்து அவசரமாகக் காரியத்தில் இறங்கியிருந்தது.
ஐம்பது வயதான மோறின் சிரித்தபடி சிறிது தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு நின்றார். இதைப் பார்த்த சாமின் கண்களில் பரிதாப உணர்வு இருந்தது. பெண்கள் சம்பந்தமாக தொடர்ச்சியாக, நகைச்சுவையாகப் பேசும் சாமிடம் இப்படி பூனைகளிடம் அனுதாபத்தை காட்டும் மனநிலையை சுந்தரம்பிள்ளை எதிர்பார்க்கவில்லை.
“யார் இவற்றை ஒன்றாக கூட்டிலடைத்தது?’ என்றான் சுந்தரம்பிள்ளை.
பூனைகள் இரண்டும் ஒரே வீட்டில் வளர்வதால் ஒரே கூட்டில் வைக்கச் சொல்லி உரிமையாளர் எங்களிடம் கேட்டுக்கொண்டார் என பூனை வாட்டில் வேலை செய்யும் மோறின் விளக்கம் தந்தார்.
பெண் பூனைகளைப் புணர்வு காலத்தில ஆபரேசன் செய்யும் போது அதிக இரத்தப் போக்கு ஏற்படும் என்ற கவலை சுந்தரம்பிள்ளையைப் பற்றிக்கொண்டது.
சாமின் மனத்தில் அந்த இரு பூனைகளுக்கும் இடையூறு இருக்கக் கூடாது என்பதில் கருத்தாக இருந்தான்.
‘சாம் உன்போல மத்தியதரைக் கடல்பகுதி நாடுகளில் இருந்து வருபவாகள்; எல்லாம் இப்படி இந்த விடயத்தில் கரிசனையாக இருக்கிறீர்கள்? இத்தாலி, கிரிஸ் போன்ற நாடுகளில் இருந்து வந்த ஆண்கள், தங்களது ஆண்நாய்களுக்கு கருத்தடை ஆபரேசன் செய்யமாட்டார்கள். ஆனால் பெண்ணாயாக இருந்தால் பரவாயில்லை என்பார்கள்’
‘என்னை அப்படியாக நினைத்து விடாதே . கடைசியாக அந்தப் பூனைகளுக்கு கிடைக்கும் புணர்வுச் சந்தர்ப்பத்தைக் கெடுத்து உடனே ஆபரேசன் செய்வது எப்படி?
‘சரி சாப்பாட்டுக்குப் போவோம். உனது ஆசையை ஏன் கெடுப்பான்?’
சாமுடன் சாப்பாட்டுக்கு வெளியே வந்த போது ஜோன் சேர்ந்து கொண்டான்.
‘ஜோன் உனக்கு எப்பொழுது கல்யாணம்? சாம் அவனது தோள்களை அழுத்தியபடி.
‘அடுத்த ஞாயிற்றுகிழமை பேண்ரீகலி தேவாலயத்தில் வைத்திருக்கிறோம்’
‘மிஷேலைப் பார்த்தால் தேவாலயம் போகிறவரா தெரியவில்லை.’
மிஷேலின் தாய் இறக்கும்போது மகளிடம் தேவாலயத்தில் திருமணத்தை நடத்த வேண்டுமென வாக்குறுதியை கேட்டு பெற்றுக் கொண்டாள். எனது பக் நைட் வருகிற வெள்ளிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இருவரும் வரமுடியுமா?
நாங்கள் என்ன செய்ய வேண்டும்? சுந்தரம்பிள்ளை அந்த விடயத்தில் எதுவும புரியாததால் ஆச்சரியத்துடன்.
‘நீங்கள் ஒன்றும் செய்யத் தேவையில்லை. தேவையான அளவு மது இருக்கும்.
உடைகளைக் கழட்டி ஆடுவதற்கு ஒரு பெண்ணை ஒழுங்கு பண்ணியாகிவிட்டது.’
பக் நைட் பற்றிய விடயம் புரியாத போதிலும் சுந்தரம்பிள்ளை சாமுடன் செல்ல சம்மதித்தான்.
காரில் விக்ரோரியா பரேட் என்ற அந்தத் சாலை இரண்டாக மத்தியில் மரங்களால் பிரிக்கப்பட்டிருந்தது இரண்டு பக்கமும் பூங்காக்கள், கட்டிடங்கள் என ஒன்றின் பின் ஒன்றாக அமைந்திருந்த அந்த தெரு நகரத்தின் முக்கியமான தெருவாகும். நகரத்தின் மத்தியபகுதியூடாக செல்ல விரும்பாமல் தென்பகுதியில் இருந்து வடபகுதிக்கு செல்பவர்கள் அதிலும் ஏர்போட் செல்பவர்கள் பாவிப்பதால் எப்பொழுதும் வாகனங்கள் நிறைந்த சாலை. அந்த சாலை வழியாக மெல்பேண் கிரிக்கட் கிளப் பக்கம் சென்ற போது வழக்கத்துக்கு மாறாக அந்தத் தெரு அமைதியாக இருந்தது. கிழமை நாட்களில் சாலை எங்கும் கார்கள் நிறைந்து மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு மேலானதால் புட்போல் தொடங்கிவிட்டதால் விக்டோரிய மாநிலத்தின் இயக்கம் குறைந்து விட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் மனிதர்கள் அந்த மைதானத்துக்குள் குவிந்துவிட்டதால் வீதிகள் மெல்பேன் நகரம் துாக்கமாத்திரையை விழுங்கியது போன்ற அமைதியான ஒரு தோற்றத்தை கொடுத்தது. மைதானத்துக்குள் செல்லாதவர்கள் வீடுகளில் தொலைக்காட்சி முன்பாக இருப்பார்கள்.
சில வருடங்கள் வரையும் ஞாயிற்று கிழமைகளில் புட்போலை நடத்த கிறீஸ்த்துவ தேவாலயங்கள் எதிர்த்தன. அவர்களைக் கருத்தில் எடுத்து கிறீஸ்த்தவ தேவாலயங்களில் காலை வழிபாடுகள் முடிந்ததும் புட்போல் என்ற மதத்தில் மக்கள் ஒருங்கிணைவதற்கு வசதியாக என நண்பகலுக்கு மேல் விளையாட்டு தொடங்கும். புட்போல் இங்கு வேறு மதத்தவர்களை மட்டுமல்ல பல நாடுகளில் இருந்து வந்தவர்களையும் இணைக்கிறது. முதல்பரம்பரையினர் புட்போலை புரிந்து கொள்ள சிறிது தடுமாறினாலும் இரண்டாவது தலைமுறையினரை வசீகரித்து உள்வாங்கி விடுகிறது. ஒரு அவுஸ்திரேலியனோடு சில நேரம் பேசுவதற்கு புட்போலை பற்றிக் குறைந்த பட்சமாகவாவது தெரிந்திருக்க வேண்டும்.
இரண்டாவது இடத்தில்தான் கிரிக்கட் விளையாட்டு உள்ளது.
‘இன்று நான் புட்போல் விளையாட்டுக்கு போய் இருக்க வேண்டும். எனது அணியான எசன்டன் இன்று விளையாடுகிறது.’
‘ஜோன் புட்போல் பந்தாட்டத்தை பற்றி எங்களுக்கு தெரியது.
கால்பந்தாட்டத்தையோ அல்லது பெண்களை பற்றியோ பேசினால் கேட்க நன்றாக இருக்கும் என்றான் சாம் அதே நிலையில்தான் சுந்தரம்பிள்ளையும் ஆனால் சுந்தரம்பிள்ளையும் ஜோனும் கிரிக்கட்டைப் பற்றிப் பேசும்போது, சாம் அமைதியாகி விடுவான்.
அவுஸ்திரேலியாவுக்கு மட்டுமே உரிய இந்த புட்போல் எனும் உதைபந்தாட்டம், ஆரம்பத்தில் ஆதிவசிகள் கங்காரு தோலுக்குள் புல்லை திணித்து விட்டு அதை கால்களால் உதைத்து ஆடியது. இப்பொழுது வளர்ச்சியடைந்து அவுஸ்திரேலிய ரூல் புட்போலாக மாறிவிட்டது. இதே வேளையில் மற்ற நாடுகளில் விளையாடப்படும் கால்பந்து சொக்கர் என்ற பேரில் வெளிநாட்டில் இருந்து வந்த வந்தேறு குடிகளால் விளையாடப்படுகிறது.
மூவரும் மெல்பேண் கிரிக்கட் கிளப் அருகாமையில் உள்ள மதுச்சாலையில் விக்டோரிய பிற்றர் என்ற அவுஸ்திரேலியாவுக்கே சொந்தமான நாக்கில் துவர்ப்பைக் கொடுக்கும் பியரை அருந்தி விட்டு பை எனப்படும் அவுஸ்திரேலிய கேக்கைத் தின்றார்கள். இந்த பியரும் பையும் வைத்தியசாலை அருகில் கிடைக்காது என்பதில்லை. வார இறுதி நாட்களில் இந்த மதுசாலையில் மேலாடையற்ற பெண்கள் பரிசாரகர்களாக இருப்பதுதான் வேலை இடத்தில் இருந்து நாலு கிலோமீட்டரில் காரில் வந்ததன் இரகசியமாகும்.
ஷரனது பிரச்சனை இப்பொழுது கலிபோனியாவில் பற்றிய தீயை அணைத்து விட்டு வந்த அவுஸ்திரேலிய ஹீரோவான கிரிஸ்றியனை எப்படி எதிர் கொள்வது என்பதே. அவன் வீட்டுக்கு வந்து ஒரு வாரமாகிவிட்டது. அந்த வாரத்தில் சில நாட்கள் அவனுக்கு இரவு வேலை. ஒரு நாள் இரவில் அவளுக்கு வேலையாகிவிட்டது. மிஞ்சியுள்ள நாட்களில் வீட்டுக்குத் தாமதமாக வந்து படுக்கையில் படுத்து விடுவான். இருவரும் தங்கள் உடல்கள் ஒருவருடன் படாமல் ,கால்கள் கைகள் முட்டாமல் கவனமாக பார்த்துக் கொண்டார்கள். ஒரே படுக்கையில் இரு சிறைகளை இருவருக்கும் அமைத்துக் கொண்டு படுக்கும் போது வெவ்வேறு பக்கம் திரும்பிப் படுத்தாலும் அவன் நித்திரை கொள்ளவில்லை என்பது ஷரனுக்கு தெரியும். ஒரு நாள் இரவு, நடு இரவில் கட்டில் ஆடுவதால் விழித்துப் பார்த்த போது அடுத்த பக்கம் திரும்பி கரமைத்துனம் போட்டதையும் தெரிந்துகொண்டு தனது கண்ணை இறுகமூடி போர்வையால் போர்த்துப் படுத்துக்கொண்டாள்.
பாஸ்ரட் நான் பக்கத்தில் படுத்திருக்கும் போது என்னை உதாசீனம் செய்து தனது காமத்தை தீர்த்துகொள்கிறானே. இது என்னை அவமானபடுத்துவதற்காக செய்கிறான். இந்த நேரத்த்தில் நிட்சயமாக என்னை நினைக்கமாட்டான். யாராவது தன்னோடு வேலை செய்யும் வேசைகளைத்தான் நினைத்துக் கொண்டிருப்பான். இவனது செயலுக்கு இவனைக் கொன்று போட்டாலும் எனது கோபம் குறையாது என ஆத்திரத்தில் மனத்தில் குமுறிபடி இருந்தவள், சிறிது நேரத்தில் சாந்தமடைந்ததும் தன்னை சுயவிசாரணைக்கு உடபடுத்தினாள்.
இவன் என்னை வெறுக்கிறானா?
யாரில் பிரச்சனை இருக்கிறது?
இதற்கு நானா காரணம்?
இல்லை வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறானா?.
என்னை நேசிக்கிறானோ இல்லையோ வெறுக்காமல் இருந்தால் தனது காம உணர்வை தீர்த்துக்கொள்ள என்னிடம் வந்திருப்பான். இவனை இப்படி விட முடியாது.
அடுத்த சில நிமிடங்கள் அவளைச் சோகத்தின் எல்லைக்கே இழுத்துச் சென்றன.
இப்படியான ஒரு வாழ்வு எனக்குத் தேவையா? அவளுக்குக் குலுங்கி குலுங்கி அழவேண்டும் போல் இருக்கிறது. கண்ணீர் கண்களில் இருந்து வெளியேறி தலையணியை நனைத்தது. பின்பு அழுகையை நிறுத்திவிட்டு எனது பலவீனத்தை இவனிடம் காட்டினால் அதைப் பாவித்து தனது கட்டுப்பாட்டில் என்னை வைத்திருக்க முயலுவான். அடுத்ததாக எனது வேலைக்கு வேட்டு வைத்து விடுவான். இதை ஏற்க முடியாது. எதற்கும் நாளைக்கு ஒரு முடிவு கட்டவேண்டும்.
ஆனால் இதற்கான பேச்சை எப்படி ஆரம்பிப்பது? வேறு பெண்ணோடு தொடர்பு உள்ளது என நேரடியாக சொன்னால் விவாகரத்துக்காக நான் தயாரா?. பிரிந்து வாழ நான் என்னைத் தயார் பண்ணிக் கொண்டேனா? அப்படி இல்லாமல் உனது தவறுகள்தான் என்னை இப்படியான நிலைக்கு கொண்டு வந்ததென்று விவாதித்தால் என்ன செய்வது?
அதை நம்ப முடியுமா?
கேள்விகளை கேட்பது இலகுவாக இருந்தாலும் விடை தெரியாமல் மாறும் மன உணர்வுகளுடன் படுக்கையில் தூக்கமின்றித் தவித்தாள்.
கட்டிலின் அருகே உள்ள கடிகாரத்தில் நடு இரவுக்கு சில நிமிடங்கள் மட்டுமே இருந்தது. மெதுவாக போர்வையை விலக்கி எழுந்து பாத்ரூமுக்கு சென்றுவிட்டு கூடத்திற்கு வந்து வைத்தியசாலை இலக்கத்தை எடுத்தபோது ரிவனின் குரல் கேட்டது.
‘என்ன ஷரன் இந்த நேரத்தில்’
‘நாளைக்கு வேலைக்கு வரமுடியாது. உடல் நலமில்லை’
‘இப்போது சொன்னால் யாரை அழைக்கமுடியும்?;
‘சிவா நாளை மாலை செய்வதால் காலை செய்யச் சொல்லிக் கேட்கிறேன்’
‘இது சிவாவுக்கு பதினெட்டு மணிநேர வேலையாகும். அதைச் செய்வதற்கு அவனுக்கு சந்தோசமாக இராது.
‘தயவு செய்து நீ சொல்லு. இல்லாவிடில் அவனது வீட்டிலக்கத்தை தந்தால் நான் பேசுகிறேன்“
‘நீயே பேசு’
இலக்கத்தை வாங்கி, தொலைபேசியில் சிவாவிடம் ‘தயவு செய்து இதை செய்.
இதற்காக உனக்கு பெரிய வெகுமதி தருவேன்’ என்ற அந்தக் குரலின் இனிமை, சிவாவின் நித்திரை குலைந்த சீற்றத்தை அணைத்தது.
மெதுவாக மகனின் அறைப்பக்கம் சென்று அவனது கால் பக்கம் விலகி இருந்த போர்வையை இழுத்து கால்களை முற்றாக மூடிவிட்டு படுக்கையறைக்குச் சென்ற போது கிரிஸ்ரியன் உண்மையாகவே உறங்குவதை அவனது குறட்டையில் இருந்து தெரிந்து கொண்டாள். நாளை நடக்கவிருக்கும் மோதலை எதிர்பார்த்தபடி கனத்த இதயத்தோடு மீண்டும் போர்வைக்குள் நுளைந்து கொண்டாள்.
-----
லிஸ்பனில் இருந்து மரியாவின் வரவை எதிர்பார்த்து காலோஸ் மெல்பேன் தலைமறின் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தான். இவனது அவசரத்தைப் பரிசோதிப்பதற்கு என அந்தப் பிரித்தானிய எயர் வேஸ் விமானம் ஒருமணி நேரம் தாமதமாக வருவதாக எதிரில் இருந்த விளம்பரப் பலகையில் அறிவித்தல் இருந்தது. ஒரு மணிநேரம் விமானத்திற்குக் காத்திருக்க வேண்டும் என்பது கசப்பாக இருந்தது. இன்று வைத்தியசாலையில் அவசரமாக ஒரு கூட்டம் எனக் கூறி லுயிசாவையும் பிள்ளைகளையும் உறவினர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு போகச் சொல்லி விட்டு, வைத்தியசாலையில் இருந்து ஏயர்போட்டுக்கு வந்திருந்தான். வைத்தியசாலையில் இருந்து வேகமாகக் காரைச் செலுத்திக் கொண்டு பலகாலமாகப் பிரிந்திருந்த தேவதையைக் காண வந்தபோது, கடந்து வந்த சிவப்பு விளக்குகளை திட்டியபடி வேகமாக வந்தது பிரயோசனமில்லாமல் போய்விட்டது என்ற ஏமாற்றம் கசந்தது. அவசரத்தில காரை நிறுத்திய இடத்தை நினைத்துப் பார்க்க மறந்தது நினைவுக்கு வந்தது.
மரியா எப்படி இருப்பாள்? பதினைந்து வருடங்கள் பெரிய இடைவெளியல்லவா? உறையவைத்த வெண்ணையாக இருந்தவள் இப்பொழுது உருகி இருப்பாளா?
விமானத்தின் தாமதம் எவரது சக்திக்கும் அப்பாற்பட்டது என்ற நினைப்பு மரியாவின் நினைப்புடன் வந்ததும் மனம் சிறிது அமைதியடைந்தது.
மெல்பேன் ஏயர்போட்டில் சுங்கப் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு வெளியே வருபவர்கள் உள்ளிருந்து வந்து, இரண்டு பக்கத்தால் பிரிந்து வரலாம். இரண்டு பக்கத்தையும் பார்ப்பதற்காக நடுப்பகுதியில் அரைமணித்தியாலம் காத்திருந்தான். அந்தப் பகுதியில் இருந்து இரு பக்கத்தால் வருபவர்களையும் பார்க்க முடிந்ததால் எப்பொழுதும் அந்த இடம் கூட்டமாக இருந்தது.
வாசல் அருகில் உள்ள தடுப்புக் கம்பியைப் பிடித்துக் கொண்டிருந்த காலோசின் கால்கள் இரண்டும் மாறி மாறி ஆடியது. உணர்வுகளில் வசப்படும் போது காலை ஆட்டிக்கொண்டு நிற்பதும் இருப்பதும் காலோசின் இயல்பு. அங்கு நிற்கும் அரைமணியில் அவன் காலையாட்டிக் கொண்டு நிற்பதை அந்தக் கூட்டத்தில் குறைந்தது ஐந்து பேராவது திரும்பிப் பார்த்தார்கள். அதில் ஆண்களின் உதடுகளில் மெதுவான புன்னகை தெரிந்தது. சுற்றி நின்றவர்களை சட்டை செய்யும் நிலையில் காலோஸ் இருக்கவில்லை. முகத்தில் சுருக்கமும் கண்களில் குறும்பும் தளும்ப ஒரு எழுபத்தைந்து வயதான அவுஸ்திரேலியர் மிகவும் நிதானமாக சில நிடங்கள் உற்றுப் பார்த்துவிட்டு தோளில் தட்டி ‘நண்பரே நீர் உமது காதலிககாக காத்திருக்கிறீர் போல இருக்கிறது. உமது முகத்தில் மகிழ்ச்சி நிறைந்து கண்கள் மலர்ந்து இருப்பதுடன் உமது கால்கள் நடனமாடுகிறது. மனைவிக்காக காத்திருப்பவனது முகத்தில் அளவு கடந்த சோகம் முகத்தில் மட்டுமல்ல கால்களிலும் தெரியும்’ எனக்கூறி பெரிதாக சிரித்தபோது பலர் திரும்பி பார்த்தார்கள்
‘நீங்கள் சரியாகத்தான் சொன்னீர்கள். எனது முகத்தில் அந்த விடயம் எழுதி இருக்கிறதா?“ எனச் சங்கடமான சிரிப்பை உதிர்த்தபடி அவருடைய கையைக் குலுக்கினான்.
‘உமது கால்களும் முகமும் கண்ணாடி போன்றவை. பல கதைகளைப் பேசுகின்றன.
‘எனது முகத்தில் என்ன வேறு தெரிகிறது?’
‘காதலிக்காக மட்டுமல்ல இன்றைய இரவுக்காகவும் காத்திருக்கிறீர். எனது கால்கள் எவ்வளவு அமைதியாக மனைவிக்காக காத்திருப்பதை தெரியவில்லையா.’ எனக் கூறி தனது கால்களை தடவியபடி மீண்டும் சிரித்தபோது ‘டாட் வாயை மூடுங்கள்.
உங்களது ஜோக்குகளை எங்கும் சொல்லி விடுவீர்கள்’என பக்கத்தில் நின்ற முப்பது வயதான மகள் கண்டித்தாள்.
அதைபற்றிக் கவலைப்படாத அந்த மனிதர் ‘ஆத்தரயிற்றிஸ் உள்ள எனது காலை ஆட்டினால் விழுந்து விடுவேன்“ என்றார்.
‘இப்ப உண்மையை சொல்கிறீர்கள் டாட்’
அப்பொழுது அந்த எலக்ரோனிக் விளம்பரப்பலகையில் பிரித்தானிய எயவேஸ் விமானம் வந்து இறங்கியதாக தகவல் வந்தது.
‘நான் ரொயிலட் பக்கம் போக வேண்டும். பிளேன் இப்பதான் தரை இறங்கி இருக்கிறது. குறைந்தது ஒரு மணித்தியாலம் சுங்க சோதனைகளை முடித்து வர எடுக்கும்.
‘பேசியதற்கு நன்றி குட் லக்’; எனக் கூறி நக்கலான சிரிப்பை முகத்தில் தவழ விட்டார் அந்த எழுபது வயதான மனிதர்.
‘பிளடி ஓல்ட் பாஸ்ரட்’ எனத் தனக்குள் கூறிவிட்டு கன்ரீன் பக்கம் சென்றான் காலோஸ்.
இன்று இரவு மரியா உறவினர் வீட்டுக்குச் செல்லாமல் ஹோட்டலில் தங்குவதாக ஏற்கனவே ஒழுங்கு பண்ணப்பட்டிருந்தது. நானும் வீட்டுக்கு இரவு பன்னிரண்டு மணிக்குப் பின்புதான் செல்ல முடியும். நல்லதொரு பொய்யை நம்பும்படி வீட்டில் சொல்ல வேண்டும். காலோசின் சிந்தனை இடைவேளையில் வைத்தியசாலையில் தனக்கெதிராகச் சதி செய்யும் ரீவனும் ரிமதி பாத்தோலியஸ்சும் இடைக்கிடை வந்து இனிமையான கனவுகளில் ஒரு நாள் பந்தய கிரிக்கட்டை காண்பித்துக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிகள் கடைசி ஓவர்களில் தடங்கல் போல் வந்துகொண்டிருந்தது. பதவியில் இருந்து நீக்க எதிர்பார்த்து எடுத்த அவர்களது ஒரு முயற்சி தோற்றுப் போய்விட்டது. அடுத்த முயற்சியை எடுக்காமல் விடமாட்டார்கள்.
தேநீரைக் குடித்தபடி கற்பனைக் குதிரையை ஓடவிட்டவாறு, சிறிது நேரம் கன்ரீனில் நின்றுவிட்டு மீண்டும் அதே இடத்துக்குச் சென்ற போது அங்கே பெரிய கூட்டம் நின்றது. மேலும் அந்தக் கிழவனது நக்கலை சிரித்தபடி ஏற்றாலும் ஒருவிதமான வெட்கத்தை உள்ளார ஏற்படுத்தியதால் அந்த இடத்தைத் தவிர்த்து விட்டான் பெரும்பாலனவர்கள் வலது பக்கத்தால் வருவதைப் பாரத்தபடி வலது பக்கத்தில் காத்திருந்தான்.
மரியாவோடு தெற்கு ஐரோப்பா முழுவதும் செய்த ரெயில் பயணத்தை நினைவு கூர்ந்தான். தீவிரமான கத்தோலிகரான மரியாவின் தாய் தந்தையினரிடம் லுட்ஸ் மாதாவிடம் போவதாக சொல்ல அங்கிருந்து பாசலோனா, மட்ரிட் என போய் அங்குள்ள ஹோட்டல்களில் தங்க பணம் இல்லாமல் ரெயில்வே நிலையங்களில் படுத்த வியங்கள் மனத்தில் ஈரமாக்கி கொண்டு சென்றன.
திடீரென இவ்வளவு நேரமாக வரவில்லையா என நினைத்தபடி இடது பக்கத்துக்கு சென்ற போது இடையில் ஒரு பெண்ணைப் பார்த்ததும் நெருங்கிச் சென்றான்
‘மரியா என்னைத் தெரியவில்லையா?’
‘தெரியுது. இங்கே அரைமணி நேரமாக இருக்கிறேன் எனக் குற்றசாட்டுடன் கட்டி அணைத்து இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டாள். அவளது இறுக்கமான அணைப்பு அந்த விமான நிலையத்தையே படுக்கையறையாக்கினால் என்ன என அவனை நினைக்கவைத்தது. மோகத்தில் சூழலை மறந்து அவளைவிட மறுத்தான்.
‘இது விமான நிலையம் தெரியுமா’ எனச் சிரித்தபடி மெதுவாக மரியா விலகினாள்
‘உன்னை நினைத்தபடி ஒரு மணி நேரமாக அடுத்த பக்கத்தில் காத்திருந்தேன். எல்லோரும் அந்தப் பக்கமாக வந்தார்கள்’
‘எனக்குத் தெரியாது. நான் இந்தப் பக்கமாக வந்தேன்’.
நாற்பது வயதாக இருந்தாலும் நீள் வட்டமான முகத்தில் அகலமான கருமையான விழிகள் இன்னும் ஒளி மங்காமல் அப்படியே இருந்தன. கருமையான மேல் சட்டையணிந்து அவள் அணிந்த சாயம் மங்கிய நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தாள்.
‘இத்தனை வருடத்துக்கு பிறகு சந்தித்தாலும் இவ்வளவு அழகாய் இருக்கிறாயே. உன்னை விலக்கி விட கொன்சாலஸ்க்கு எப்படி மனம் வந்தது’ என அவளது பிருஸ்டத்தில் இடது கையால் தடவியபடி அவளது கையில் இருந்த பெரிய பெட்டியை தனது வலது கையில் வாங்கினான்.
‘ஆண்கள் எல்லோரும் உன்னை மாதிரித்தானே. கொஞ்காலத்தில் மனைவிமார்கள் அலுத்து விட்டால் வேறு இளம் பெண்ணை தேடிப் போறது வழக்கமாகிவிடுகிறது. அவனது நடத்தையில் சந்தேகப்பட்டு நான்தான் கொன்சலஸை வீட்டை விட்டு போக சொன்னேன்.’
‘எப்படி பிள்ளைகள்?“
‘இருவரும் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள்“
இருவரும் நடந்தபடி பாலத்தின் மூலம் விமான நிலயத்தைக் கடந்து, கார் தரிப்பு இடத்துக்கு வந்தனர். காரை எந்த இடத்தில் நிறுத்தியது எனப் புரியாமல் சில நிமிடம் தடுமாறிய காலோஸ் அவசரத்தில் நிறுத்திய இடத்தை குறிப்பாக பார்த்துக்கொள்ள மறந்ததை நினைத்து தன்னை நொந்து கொண்டு கால்மணி; தேடிய போது ‘காலோஸ் உனக்கு வயதாகிவிட்டது’ என்றவளை ‘உன்னை நினைத்தபடி வந்ததால்தான் இது நடந்தது’ என்றபடி சிறிது தூரம் நடந்தபோது தனது காரைக் கண்டுபிடித்தான். காரை எடுத்துக்கொண்டு மெல்பேனில் உள்ள நட்சத்திர ஹோட்டேலை அடைந்த போது இரவு ஒன்பது மணியாகிவிட்டது..
‘வவ் எனது ஹனிமூனுக்கு கூட இந்தளவு பெரிய ஹோட்டேலை கொன்சாலஸ் எடுக்கவில்லை. எவ்வளவு அழகான கட்டில்? என் மேல் உனது ரசனை இன்னும் அப்படியே இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை’ எனக் கூறியபடி காலோசின் முன் உடையை கழற்றிவிட்டு ‘விமானத்தில வந்த களைப்பு போக நான் குளிக்கவேண்டும். நீ வருகிறாயா ஒன்றாக குளிப்போம்’ என்றபடி குளியலறையை நோக்கி சென்றவளைச் சிரித்தபடி பின் தொடர்ந்தான்.
----
ரிமதி பாத்தோலியஸ் வைத்தியசாலையில் காலை வாட் ரவுண்டுக்கு சென்ற போது ஒரு கருப்பு வெள்ளை நிறமான பூனை யொன்று சடலம் எனக் கிடந்தது. நெருங்கி, உற்றுப் பார்த்தபோது அதனது சுவாசம் மிகவும் மெதுவாக இருந்தது. ஆரம்பத்தில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதோ எனச் சந்தேகத்தில் நெருங்கி அதனது உதடுகளை விலக்கி முரசுகளைப் பார்த்த போது வெள்ளையாக இருந்தது.
சாகும் தறுவாயில் இருக்கிறது எனப் புரிந்து கொண்டு அதைப் பற்றிய மருத்துவ குறிப்பை தேடியபோது எந்தக் குறிப்பும் அதற்குரிய கோப்பில் இல்லை. எப்பொழுது, என்ன காரணத்தால், யாரால் அனுமதிக்கப்பட்டது? மட்டுமல்ல அத்துடன் ஏதாவது மருத்துவமும் ஏற்கனவே நடந்ததா? என்பது எழுதப்படவில்லை. அந்த வாட்டில் உள்ள ஹெதரை விசாரித்த போது “நேற்று மாலை டொக்டர் சேரத்தால் அனுமதிக்கப்பட்டது“ எனக் கூறினாள். ரிமதி அந்தப் பூனைக்கு முதல் உதவி செய்து ஒட்சிசனைக் கொடுத்தபோது அதனது முரசின் வெள்ளை நிறம் சிவப்பாக மாறியதும் சேலையினை நாளத்தினால் ஏற்றிக்கொண்டிருந்த போது அந்தப் பூனையின் உரிமையாளர் வந்தார்.
‘எப்படி எனது ஜிவ்’ என அவர் விசாரித்த போது ‘நான் இன்றுதான் பார்க்கிறேன் நிலைமை மோசமாக இருக்கிறது’ என்றான்.
‘நான் நேற்று இங்கு கொண்டு வந்த போது இந்தளவு பாரதூரமாக இருக்கவில்லை. என்ன நடந்தது?
அவரை ஏற இறங்கப் பார்த்து விட்டு ‘நான் இன்று காலைதான் உங்கள் ஜிவ்வைப் பார்த்தபடியால் தற்போது எதுவம் கூறமுடியாது. தலைமை வைத்தியர் டொக்டர் காலோஸ் சேரம்தான் நேற்றய தினம் ஜிவ்வைப் பார்த்தவர். அவர் இரண்டாம் அறையில் இருக்கிறார். அவரைப் போய் சந்திக்கவும். தற்போது நான் எதுவும் சொல்ல முடியாது. என்னால் முடிந்ததைச் செய்கிறேன்’
ரிமதியின் வார்த்தை பட்டர் துண்டுகள் போல் மிருதுவாக இருந்தது.
இரண்டாவது அறையை நோக்கிச் சென்ற உரிமையாளரைப் பார்த்து ‘ஜிவ் இன்று சுப நேரமானதால் எப்படியும் உயிர் தப்பி விடும் போல் தெரிகிறது. ஆனாலும் இன்றைக்கு காலோஸ் நேரம் நன்றாக இல்லை. மனிதன் துலைந்தது மாதிரித்தான்’ என வாய் விட்டு சொல்லிவிட்டு சிரித்தான். பக்கத்தில் நின்றபடி கேட்டுக்கொண்டிருந்த ஹெதருக்கு இந்த விடயம் நல்லதாக முடியப்போவது அல்ல எனப் புரிந்தது.
ஜிவின் உரிமையாளர் உயரமான அவஸ்திரேலியர். அந்த மனிதருக்கு பெண்களைப் போன்ற பெரிய கண்களை கொண்ட நீள்வட்டமான முகம், தற்போது ஆத்திரத்தால் காது மடல்கள்வரை சிவந்து விட்டது. முப்பத்து ஐந்து வயது மதிக்கத்தக்க அந்த மனிதர் தனது நீளமான கைகளை ஒரு வித நாட்டிய முத்திரை கலந்து நளினமாக அசைத்தபடி நடந்தார். அதற்கேற்ப இடையை இரண்டு பக்கமும் நகர்த்தி சிறிய சுழற்சியை இடுப்பில் காட்டியபடி நடந்தார். அந்த மனிதருக்கு வந்திருந்த ஆத்திரத்தில் அவரது பெரிய நீல கண்கள் சிவப்பாகியது. கண்களில் கண்ணீர் மழை பெய்து நீர் நிரம்பிய குளம் போல கண்ணீர் நிறைந்து இமைகளை மோதியபடி வெளியேறத் தயாராக இருந்தது.
இவர் போவதைப் பார்த்த ஹெதர் இந்த மனிதர் நிட்சயமாக ஹோமோசெக்சுவல் தன்மையுள்ள மனிதராகவும் இந்த பூனையை மிகவும் நெருக்கமாக நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். இவருக்கு ஏற்கனவே ரிமதி உருவேற்றி இருப்பதால் பெரிதாக பிரச்சனை வர சாத்தியம் உண்டு. காலோஸை எச்சரித்து வைப்பது நல்லது என முடிவு செய்து அந்த மனிதர் கொரிடோரால் சென்று இரண்டாவது ஆலோசனை அறையின் மூடியிருந்த கதவின் முன்பு நின்ற போது பூனைக் கூண்டுப் பகுதியில் இருந்து வெளியே வந்து மூன்றாம் அறையுள் சென்று பார்மசி ஊடாக சென்ற ஹெதர் இரண்டாம் அறையின் பின்பக்கத்தால் சென்றாள். அங்கு நாயொன்றை பரிசோதித்துக் கொண்டிருந்த காலோசின் கையில் மெதுவாக தட்டி கண்களால் பார்மசிக்குள் வரும்படி அழைத்தாள்.
சிரித்தபடி ‘எனது அதிஸ்டம் எல்லா பெண்களும் ஒரே நேரத்தில் அழைக்கிறார்கள்’ என நகைச்சுவையாக சொல்லியபடி ஹெதரை பின் தொடர்ந்து பார்மசிக்குள் சென்றான் காலோஸ். ‘உமக்கு எந்த நேரத்திலும் இடுப்புக்கு கீழேதான் சிந்தனை’ எனக்கூறி அந்தப் பூனை பற்றியும் ரிமதி பாத்தோலியஸ் சொன்னதைப் பற்றியும் கூறிவிட்டு ‘இந்த மனிதர் மிகவும் ஆத்திரத்தில் உள்ளார். அவரை அவதானமாக கையாளவேண்டும். மேலும் இந்த மனிதர் ஹோமோசெக்ஸ்வல் மனிதர் போல இருப்பதால் வார்த்தைகளை அவதானமாக பேசவேண்டும்’எனவும் எச்சரித்து விட்டுச் சென்றாள்.
‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என அவளுக்குச் சொல்லிவிட்டுத் தனது வேலையைத் தொடர்ந்த போது நோரேல் மூடியிருந்த முன்கதவைத் திறந்து, காலோஸைப் பார்க்க ஒருவர் காத்திருக்கிறார் எனச் சொல்லி விட்டுச் சென்றாள்.
வேலையை முடித்து நாயையும் உரிமையாளரையும் வெளியனுப்பிய காலோஸ், கையைக் கழுவி விட்டு வெளியே வந்து, அந்த மனிதரிடம் தன்னை அறிமுகப்படுத்தி ‘நேற்று நான் உமது பூனையை பார்த்து அன்ரிபயரிக்கும் கொடுத்தனான். ஆனால் அதை எயர்போட்டுக்கு போகும் அவசரத்தில் குறிப்பு எழுத மறந்து போனேன்.’ குரல் மன்னிப்பு கோரும் விதமாக இருந்தது.
‘நீர் ஒரு பாஸ்ரட். எனது பூனை உம்மால் இறக்கும் தறுவாயில் உள்ளது’ என கண்ணீர் வழிந்தோட கைகளை அசைத்து பறவையொன்றின் குரல்போல கிரீச்சிட்ட குரலாக அவர் வாயில் இருந்து வந்தது;.
‘எனது தவறு அதை எழுதாதது மட்டும்தான். நாகரீகமாக வார்த்தைகளைப் பாவிக்க தெரியாத உம்மோடு இதற்கு மேல் பேச நான் தயாரில்லை’ எனக் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு விலகி பூனைப் பகுதிக்கு செல்ல முயன்ற போது ‘எனக்கு பதில் சொல்லிவிட்டு போக வேண்டும்’ என அந்த மனிதர் பின் தொடர்ந்து வந்து காலோசின்; சேட்டின் காலரைப் பிடித்தார்
‘நீ ஒரு புவ்ரா. எனது சேட்டையா பிடிக்கிறாய் ’ என கூறியபடி முஷ்டியை தூக்கியபடி காலோஸ் அந்த மனிதனை நோக்கி திரும்பியபோது இப்படி ஆக்கிரோசமான எதிர்ப்பை எதிர்பார்க்காத அந்த மனிதர் பின்வாங்கினார். அந்தக் கொரிடோரில் மருந்துகளை கையில் கொண்டு வந்த சாம் ‘இந்த இடத்தில் வன்முறை வேண்டாம்’ என வந்து இருவருக்கும் இடையில் புகுந்ததால் அந்த இடத்தில உருவாக இருந்த ஒரு கைகலப்பு தவிர்க்கப்பட்டது.முறுகிய படி இருவரும் வேறுதிசைகளில் சென்றனர்.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.