மீள்பிரசுரம்: “பலஸ்தீன மக்கள் போராட்டத்திலிருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” சாந்தி சச்சிதானந்தம்:-
- சாந்தி சச்சிதானந்தம் எழுதிய “பலஸ்தீன மக்கள் போராட்டத்திலிருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” -என்னுமிக் கட்டுரை அவரது பிறந்தாள் (ஆகஸ்ட் 14) மற்றும் நினைவுநாள் (ஆகஸ்ட் 27) கருதி மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. - பதிவுகள் - -
இஸ்ரேல் பாலஸ்தீனியப் பிரச்சினையை எவ்வளவு வாசித்தாலும் நேரில் பார்த்து அறிந்து கொண்டாலும் அதனை விளங்குவது மிகக் கடினம். உண்மையில் நேரில் பார்த்தால் இன்னும் குழப்பம்தான் ஏற்படும். நாங்கள் ஒரு குழுவினர் இஸ்ரேலுக்குச் செல்வதற்கு விசாவுக்கு விண்ணப்பம் கொடுத்தபோது எங்கள் குழுவில் ஒருவர் “ பாலஸ்தீனத்தைப் பார்க்கப் போகின்றேன்” என தனது விண்ணப்பத்தில் எழுதியதால் எங்கள் எல்லோருக்கும் விசா மறுக்கப்பட்டது. பாலஸ்தீனம் என்பது வேறு நாடு என்கின்ற பொருள்படக் கூறிவிட்டோமாம். இதற்கு, பாலஸ்தீனிய தேசிய அதிகாரசபையானது 1994ல் பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்திற்கும் இல்ரேல் அரசாங்கத்திற்குமிடையிலான ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையின் பேரில் ஓர் இடைக்கால நிர்வாக அதிகாரமாக உருவாக்கப்பட்டது. அது ஐந்து வருடங்களுக்கு என விதிக்கப்பட்டிருந்தாலும் வேறு உடன்படிக்கைகள் இல்லாத இடத்தில் 2013ல் உத்தியோகபூர்வமாக பாலஸ்தீனிய அரசு என அது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதன் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் இருக்கின்றது. இதற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் பார்வையாளர் அந்தஸ்து கொடுத்து வைத்திருக்கின்றது. இந்த நிலையில,; பாலஸ்தீனம் என்று வேறாகக் கூறி விட்டோமென்று எங்களைத் தண்டித்தனர் இஸ்ரேலிய அதிகாரிகள். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு கடைசியாக இஸ்ரேலுக்கு சென்று பார்த்தால்….அதென்ன ஒரு நாடா? பாலஸ்தீனியர்கள் வாழும் மேற்குக் கரை, காஸா நகரங்களைச் சுற்றி மைல்கணக்காக நீளும் இருபதடி உயரச் சுவர்! பாலஸ்தீனியர்கள் சுதந்திரமாக நடமாட முடியாது. அவர்களுக்குப் பயந்து யூதர்கள் வாழும் ஜெருசலேமைச் சுற்றியும் சுவர். நாம் மேற்குக் கரைக்குப் போகப் போகின்றோம் என்றவுடன் எங்களுடன் இருந்த இஸ்ரேலிய நண்பர்கள் தமக்கு அங்கு பாதுகாப்பு இல்லாததால் அங்கு செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது எனக் கழன்று கொண்டார்கள். இதுதான் அவர்களுடைய ஒற்றை நாடா? ஏன் எப்படி என்று ஒரே குழப்பம்தான்.