புத்தர் உகுத்த கண்ணீர்!
முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி மறைந்த புத்த துறவியின் உடலைத்தகனம் செய்திருப்பது நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கச் சூழலைச் சிதைக்கும் ஒரு நிகழ்வு. எழுபதுகளில், எண்பதுகளில் தமிழ் இளைஞர்கள், தமிழ் மக்கள் இலங்கையின் சட்டங்கள் தம்மைப் பாதுகாக்கவில்லை. பாரபட்சத்துடன் தம்மை அணுகுகின்றன என்று எண்ணினார்கள். இனக்கலவரங்கள், ஆயுதப்படைகளின் அடக்குமுறைகள் அவர்களை ஆயுதமேந்த வைத்தன. விளைவு நீண்ட யுத்தம். இன்று யுத்தம் மெளனிக்கப்பட்டு ஆண்டுகள் பத்தைக் கடந்த நிலையில் தமிழ்ப்பகுதிக்குள் தன் ஆதரவாளர்களுடன் நுழைந்த புத்த மதத்துறவிகள் நீதி மன்ற உத்தரவையும் மதிக்காமல் இறந்த புத்த பிக்குவின் உடலைத்தகனம் செய்திருக்கின்றார்கள். காவல் துறை பார்த்துக்கொண்டிருக்கின்றது.
இதற்கெதிராக நீதிமன்றத்தை நாடி நடந்தவற்றுக்கு நீதி கிடைக்க வேண்டும். சட்டத்தை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவல் துறையினர் உட்பட. இலங்கையின் சட்டமானது அனைவரையும் பாரபட்சமில்லாமல் நடத்துகின்றது என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.
நடந்தவற்றுக்கு நீதி கிடைக்காவிட்டால் இன்றுள்ள இளம் சமுதாயம் மீண்டும் போராடத்தொடங்கும் சூழல் உருவாகும். அடுத்தமுறை இனவெறிபிடித்த புத்தபிக்குகள் இவ்விதம் தமிழ்ப்பகுதிகளில் வெறியாட்டம் ஆடுகையில் அவர்கள் தாக்கப்படும் சூழல் உருவாகலாம். பதிலுக்கு அவர்களுக்கு ஆதரவாகப் படையினர் தமிழர்களைத் தாக்கலாம். தென்னிலங்கையில் இனக்கலவரங்கள் தொடங்கலாம். மீண்டுமொருமுறை இலங்கை போர்ச்சூழலுக்குள் தள்ளப்படலாம். இவ்விதமான சூழலுக்குள் நாடு மீண்டும் தள்ளப்படும் சூழலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற சட்டமீறல்கள் ஏற்படுத்தியுள்ளன. இதனால் நாட்டுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை அனைவரும் உணர வேண்டும். இவ்விதமான அபாயச் சூழல் ஏற்படாமலிருக்க நடந்தவற்றுக்கு இலங்கையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நிரூபிக்கப்பட வேண்டும். சட்டத்தை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இனவாதம் பேசிச் செயற்படும் புத்தமதத்துறவிகள் புத்த மதத்துக்குக் களங்கம் விளைவிக்கின்றார்கள். புத்தரின் கோட்பாடுகளுக்குக் களங்கம் விளைவிக்கின்றார்கள். இவர்களால் நாட்டில் இனங்களுக்கிடையில் ஏற்பட வேண்டிய நல்லிணக்கம் தடைபடுகின்றது. இலங்கையின் அனைத்தின மக்களும் , இன, மத, மொழி பேதமின்றி நடந்த சட்ட மீறலைக் கண்டிக்க வேண்டும். அதற்கு நீதி கிடைக்கப்போராட வேண்டும்.