எகிப்திய காசா பெரிய பிரமிட்டைக் கட்டுவதற்கு 90000 தொழிலாளர்களுக்கு, இருபது வருடங்கள் எடுத்தது. இயந்திரங்களினதோ ,மிருகங்களினதோ உதவியற்ற நிலையில் மனிதர்களினது சக்தியை மட்டுமே பாவித்து உருவாக்கப்பட்ட மகத்தான ஒரு சாதனையை சில மணி நேரத்தில் பார்த்து விட்டு மரியற் ஹொட்டலுக்குச் சென்று இழுத்து போர்த்து தூங்கி விடுவது என்பது என்னைப் போன்ற சுற்றுலா பிரயாணிகளுக்கு இக்காலத்தில் எவ்வளவு எளிதான காரியமாகி விட்டது. குறைந்த பட்சமாக இதைக் கட்டிய காலத்தில் நடந்தவற்றை நினைத்து பார்ப்பதுதான் அக்கால மனிதர்களால் கட்டப்பட்ட இந்த முதல் உலக அதிசயத்திற்கு நான் செலுத்தும் காணிக்கையாகும். எத்தனை மனிதர்களது உடல், மன உழைப்பை உள்வாங்கி 5000 வருடங்களாக வானத்தை நோக்கி நிமிர்ந்து நிற்கிறது? வரலாற்று ஆசிரியர் ஹோரொடொட்ஸ்ன் கூற்றுப்படி ஒவ்வொரு வருடத்திலும், அதனைக் கட்டியவர்கள் மூன்று மாதங்கள் மட்டுமே அந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். மிகுதி ஒன்பது மாதங்களும் அவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. வருடத்தில் மூன்று மாதங்கள் நைல் நதியில் நீரோட்டம் குறைவதனால் விவசாயத்தில் ஈடுபடமுடியாது. அடிமைகளைக் அழைத்துவந்து கொடுமைப்படுத்தித்தான் பிரமிட்டுகள் கட்டப்பட்டன என்று ஏற்கனவே பரப்பப்பட்டிருந்த எண்ணத்தை இந்த வரலாற்றுத் தகவல் அடியோடு சிதற வைத்து விட்டது. கட்டப்பட்ட பிரமிட்டில் அரசனது உடல் வைக்கப்படுவதுடன் சமாதிபோல் மூடப்படுவதில்லை. தொடர்ச்சியாக பூசைகள் வழிபாடுகள் மத குருமார்களால் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்சிகளின் அதன் பின்பு அரசனது மனைவி மற்றும் நெருங்கிய உறவினர்கள் உடனிருப்பார்கள். பிற்காலத்தில் உறவினர்கள் இறக்கும் போது அவர்கள் மம்மியாக்கப்பட்டு இங்கு எடுத்து வரப்பட்டு வைக்கப்படுவார்கள். அந்த மம்மிகளுக்கு வேறாக அறைகள் உள்ளன.
பிரமிட்டின் அடிவாரத்தை ஒரு சுற்று சுற்றி வந்த போது அங்கு நின்ற சிறுவியாபாரிகளின் தொல்லையும் ஒட்டகத்தை வாடகைக்கு விடுபவரது தொடர்சியான அழைப்பும் தொடர்ந்தது. அவர்களையும் குறை சொல்லமுடியாது. உல்லாசப்பிரயாணிகளின் வருகையில்தான் அவர்கள் சீவியம் தங்கி இருக்கிறது. ஹோட்டலுக்கு வந்த பின்பு வரலாற்றுப்பதிவுகளை புரட்டிய போது புள்ளி விபரங்கள் திகைக்க வைத்தன.
13.5 ஏக்கர் விஸ்தீரணத்தில் அடிப்பகுதி அமைந்திருக்கிறது இந்த பிரமிட் 2.5 மில்லியன் கற்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. ஓவ்வொரு கல்லின் சராசரியான நிறை 2.5 தொன். இப்படி அமைந்த இந்த பிரமிட்டை கட்டியதற்கான வரைபடம் இதுவரையும் எவரிடமும் சிக்கவில்லை.
அப்படியானால் வரைபடங்கள் இல்லாமல் கட்டுப்பட்டவையா?
ஏன் வேறு எந்த பிரமிட்டுக்கும் வரைபடம் இல்லை?
எகிப்தியர்களின் இந்த பிரமிட் சம்பந்தமாக பலதரப்பட்ட அபிப்பிராயங்கள் உள்ளன. எப்படி இவ்வளவு உயரத்திற்கு கற்கள் கொண்டு செல்லப்பட்டன என்பது புரியாத புதிராக உள்ளது. ராம்ப் (Ramp)) எனப்படும் சாய்வான மேடைமூலம் கொண்டு செல்லப்படடிருக்கலாம் என்பதும் உத்தேசமான கணிப்பு. ஹேரொடொட்ஸ்ன் கூற்றுப்படி 90000 பேர் சேர்ந்து கட்டியது இந்த பிரமிட். இதனைக் கட்டிய அரசன் குவு (Khufu) 22 வருடங்கள் மட்டுமே அரசாண்டான். அரியணையில் இருந்த காலத்தில் அந்தக்கட்டிட வேலைகள் முடிக்கப்பட்டிருக்கவேண்டும்.
கட்டிடவேலைக்கான சுண்ணாம்புக்கற்கள், அதன் சுற்றாடல் பிரதேசங்களில் அகழ்ந்து உடைக்கப்பட்டு எடுத்து வரப்பட்டதாகவும், கருங்கற்கள் 800 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அஸ்வான் பிரதேசத்தில் இருந்து நைல் நதியில் மிதவைகள் மூலம் கொண்டுவரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கல்லுடைத்தலுக்கு இரும்பு இல்லாத காலம். மரக்கட்டைகளால் அடித்து வெடிப்பை பாறைகளில் ஏந்படுத்தியபின் அந்த வெடிப்புகளில் நீரை ஊற்றி பிளந்தார்களாம். எண்ணிப் பார்ப்பதற்கே கடினமாக இருக்கிறது அல்லவா?
இப்படியான பிரமிட்டுகளை கட்டி தங்களது சடலங்களை வைப்பதற்கு எகிப்தியர்களை தூண்டியது என்ன? காலத்தை வென்று தங்கள் சமாதிகள் நிலைத்து நிற்கவேண்டும் என்பதா? அல்லது வருங்கால சந்ததியினர் இந்த சமாதிகளை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமா?
மனிதனது காரியங்களின் காரணங்களின் மூலத்தை ஆராயும் போது அனைத்தும் சுயநலத்தில்தான் சென்று முடியும். இந்த மாதிரியான பிரமிட்டு அமைப்பில் ஏன் தங்களது சமாதிகளை கட்டினார்கள் என்பதற்கு விளக்கத்தை தேடும் போது, இறந்த அரசன் தனது உடலோடு எழுந்து வானத்துக்கு போகிறான், அதற்கு இந்த அமைப்பு உதவுகிறது என்ற கருத்தியலையே பலரும் முன் வைக்கிறார்கள். மேலும் பிரமிட்டுகளின் வெளிப்பக்கங்கள் பளிங்கு கற்களால் மூடப்பட்டு இருந்ததால் சூரிய, சந்திர வெளிச்சத்தில் அவை ஒளிரும். இந்த பிரமிட் வடிவம், வானத்திற்கும் மண்ணுக்கும் தொடர்பாக உள்ளதால் மறைந்த அரசனது ஆவி , பூத உடலுடன் மேலே சொர்க்கத்திற்கு போக முடிகிறது என்றும் நம்பினார்கள். இந்த நம்பிக்கை மத்திய கிழக்கு நாடுகளில் பிற்காலத்தில் பரவியிருந்தது.
கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருக்கும் பீட்டரின் வேதாகமத்தில்( Non Canonical Gospel) இல் ஒரு தகவல் யேசு கல்லறையில் இருந்து இரண்டு தேவ தூதர்கள் சகிதம் தமது உடலோடு வானத்தை தொடும் உயரத்தில் வெளியேறுகிறார். “அப்போது இறந்தவர்களுக்கு பிரசங்கம் செய்தாயா?’’ என்று ஒரு குரல் கேட்கிறது. “ஆம்” என சொல்லியபடி யேசு வருவதையும், இதை பலர் பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. கிரேக்க இதிகாசங்களில் இறந்தவர்களுக்கும், வாழ்பவர்களுக்கும் பேச்சுவார்த்தைகள் – சந்திப்புகள் நடப்பதாக ஹோமர் சொல்லுகிறார்.
இப்படியான நம்பிக்கைகள் இருந்ததாலேயே அக்காலத்து அரசர்களின் மம்மிகள் அவர்கள் பாவித்த பொருட்களுடன் சமாதிகளில் வைக்கப்பட்டன. மேலும் இந்த நம்பிக்கைகள் மத்தியதரைக்கடலை அண்டிய நாடுகளில் பரவுவதற்கு நான் நின்ற எகிப்தின் தலைநகரான மெம்பிஸ் அதற்குத் தொடக்கப்புள்ளியாக இருக்கவேண்டும்.
பெரிய பிரமிட்டுக்கு சமீபத்தில் 1954இல் படகு ஒன்று கல்லால் அமைந்த குழியில் புதைக்கப்பட்டிருந்தது அகழ்வாராச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் படகு செடர் மரத்தால் ஆனது. 1200 துண்டுகளாலான அந்த 150 அடி நீளமான அந்தப் படகை மீழ் உருவாக்கம் செய்ய 14 வருடங்கள் சென்றன. அந்தப் படகு இருந்த இ்டத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை.நீரில் செலுத்துவதற்கான பாய்மரம் இருந்ததற்கான அடையாளம் இல்லை. நைல் நதியில் குபு மன்னனது உடலை இழுத்துவரவோ அல்லது இந்தப் படகு இறந்த அரசன் வானத்தில் பயணம் செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கலாம் என எகிப்திய ஆராச்சியாளர்கள் நினைக்கிறார்கள்.
எகிப்தின் வரலாற்றுக்கு முன்பான விடயங்களை பார்த்தோம். அவர்களது நாகரீகம் நைல்நதிக் கரையோரத்தில் எப்படி உருவாகியது என்பதையும், அந்த நாகரீகம் விவசாயத்தை மட்டும் கொண்டது என்பதையும் புரிந்து கொண்டோம். அரசு உருவாகிய பின்பு விவசாயத்தில் உருவாகிய உபரியான விவசாயப் பொருட்களைக் கொண்டுதான் இவ்வளவு பெரிய பிரமிட்கள் நகரங்கள் உருவாகி இருக்க வேண்டும். பல சரித்திர ஆசிரியர்களின் கூற்றுப்படி அலெக்சாண்டரின் படையெடுப்பு நடந்த கி.மு நாலாம் நூற்றாண்டு காலத்தின்பின்புதான் நாணயப் புழக்கம் ஏற்பட்டு இருக்க வேண்டும். இப்படியாக சோளப்பயிர், காய்கறி கால்நடைகள் மற்றும் மீன் உட்பட பல விவசாயப் பொருட்களை கூலியாக கொடுத்து, மக்களை வேலைக்கு வைத்து இந்த கட்டிடவேலையை தொடர்ந்திருக்க வேண்டும். அதாவது இக்காலத்தில் நடக்கும் பொது வேலைத்திட்டங்கள் போன்று, இப்படியான பெரிய திட்டங்களை அக்காலத்தில் நடத்தியதன் காரணம் என்ன? விவசாயம் செய்ய முடியாத காலத்தில் மக்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பதற்கே அவ்வாற நடந்தாக எம்மை எண்ண வைக்கிறது.
குறிப்பிட்ட அக்காலத்தில் ஒட்டகம்,குதிரைகள் இருக்கவில்லை. அத்துடன் இரும்பும் பாவனையில் இல்லாத காலம்.அதுமட்டுமல்ல எகிப்தில் நல்ல மரங்களும் கிடையாது. அக்காலத்து லெபனானில் இருந்துதான் மரங்கள் கொண்டுவரப்படவேண்டும். இந்தத் தகவல்கள் மேலும் பிரமிக்கவைக்கிறது
ஒரே காலத்திலோ அல்லது சற்று பின்னாலோ மற்றைய பகுதிகளிலும் இப்படியான விவசாய நாகரீகம் உருவாகியது. முக்கியமாக மொசப்பத்தேமியா என்ற பபிலோன் மற்றும் ஆசியா மைனர் எனப்படும் துருக்கி போன்ற நாடுகளில் இப்படியாக கட்டிடங்கள் ஏன் இருக்கவில்லை?
இதற்கான காரணங்களை ஆராய்வதற்கு அக்கால எகிப்தியர்களின் பழக்க வழக்கங்கள் எண்ணங்கள் என்பன பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு அவர்களால் விட்டுச் செல்லப்பட்ட ஸ்தலங்கள், பிரமிட்டுகள், சமாதிகளில் அவர்கள் எழுதியதையும், வரைந்த ஓவியங்கள் மற்றும் சுவடுகளையும் வைத்து விஞ்ஞானத்தின் துணை கொண்டு மீள் உருவாக்கம் செய்வது அவசியமாகிறது. இதைத்தான் பெரும்பாலான எகிப்திய ஆய்வாளர்கள் தற்பொழுது செய்து வருகிறார்கள்.
இவர்கள் மூலமாக வரும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு முன்பாக அக்காலத்தில் அதாவது கி.மு 5ஆம் நூற்றண்டில் எகிப்த்தில் வந்து தங்கி அவர்களைப் பற்றி எழுதிய உலகத்தின் முதலாவது வெளிநாட்டு ஊடகவியலாளர் எனவும் முதலாவது சரித்திர ஆசிரியர் எனவும் சொல்லப்படும்; ஹேரொடொடஸ் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம். அவர் சொல்வதை தற்காலத்தில் எல்லோரும் முற்றாக ஏற்றுக்கொள்ளாவிடினும் நிச்சயமாக எம்போன்றவர்களுக்கு சுதந்திரமான சாட்சியாக தென்படுகிறார். ஓவ்வொரு எகிப்திய ஆராய்ச்சியாளரும் இவரைக் கடந்துதான் செல்லவேண்டும். அவர் அக்காலத்தில்தான் பார்த்த கிரேக்கர்களுடன் எகிப்தியர்களை ஒப்பிடுகிறார். அக்காலத்தில் உலகத்தின் தலைசிறந்த நாகரீகம் கொண்ட நாடாக கிரேக்கம் விளங்குவதுடன், பதினைந்து வீதம் படித்தவர்கள் கொண்ட நகரமாக ஏதென்ஸ் விளங்குகிறது. இப்படிப்பட்ட இடத்தில் இருந்து வரும் ஹெரொடோடஸ் கூறும் விடயங்கள் எவராலும் புறந்தள்ள முடியாது. ((Herododus: An Account of Egypt).
அவரின் கூற்றுகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து பார்ப்போம்.
‘எகிப்தியர்கள் பல விடயங்களில் மற்றவர்களிலும் வித்தியாசமானவர்கள். இங்கே பெண்கள் சந்தைக்குச் சென்று வியாபாரம் செய்யும்போது, ஆண்கள் வீடுகளில் இருந்து ஆடை நெய்வார்கள். ஆண்கள் தலையிலும் பெண்கள் தோளிலும் சுமைகளை சுமந்து செல்வார்கள். இது மட்டுமல்ல, பெண்கள் நின்றபடியும் ஆண்கள் குந்தியிருந்தும் சிறுநீர் கழிப்பார்கள். கிரேக்கர்கள் இடது பக்கத்தில் இருந்து எழுதத் தொடங்கும்போது எகிப்தியர்கள் வலது பக்கத்தில் இருந்து தொடங்குவார்கள். சாதாரண விடயங்களை எழுத ஒருவித குறியீட்டையும் கடவுளுக்கு சொந்தமான புனித விடயங்களுக்கு வேறு குறியீட்டு எழுத்துகளையும் பாவிப்பார்கள். இவர்களது மத நம்பிக்கை அபரிமிதமானது. தாமிர பாத்திரத்தில் குடித்துவிட்டு கழுவுவதுடன் ஒவ்வொரு நாளும் சுத்தமான ஆடைகளை அணிவார்கள். ஆண்கள் சுத்தமாக இருப்பதற்காகவே கட்டாயமாக சுன்னத்து செய்து கொள்வார்கள்.’
பழைய ஏற்பாட்டில் (Genesis 18:6)ஆபிரகாமிற்கு 99 வயதில் கடவுள் சுன்னத்து செய்து வைத்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் ஆபிரகாமின் வாரிசுகளான யூதர்களும் அராபியர்களும் மதக் கடமையாக சுன்னத்தை செய்தார்கள். ஆராய்ச்சியாளர்கள் கிமு 1800 ஐ ஆபிரகாமின் வாழ்ந்த காலமாக்கினார்கள். இதற்கு முன்பாக எகிப்தில் சுன்னத் செய்யத் தொடங்கிவிட்டார்கள்
‘கோயில் குருமாரகள் ஒவ்வொரு நாளும் உடலில் இருந்து மயிரை சவரம் செய்வார்கள். இதன் மூலம் உடலில் அழுக்கு சேராமலும், பேன் போன்றவை அணுகாமல் பார்த்துக் கொள்வார்கள். இந்த குருமாரகள் லினனில் உடையுடுத்து பப்பரஸ் புல்லினாலான காலணியை அணிந்திருப்பார்கள். இரவிலிலும் பகலிலும் தங்களை குளிர்ந்த நீரில் இரு தடவை கழுவிக் கொள்வார்கள். ஓவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மதகுரு இருப்பார். சாமானியர்களின் உணவை அவர்கள் உண்ணமாட்டார்கள். அவர்களுக்கென விசேடமாகச் செய்த பிரட், மாட்டிறச்சி. வைன் போன்ற உணவுகள் கொடுக்கப்படும். இப்படியான மதகுருமாருக்கு, தலைமைக் குருவும் இருப்பார். அவர் இறந்தபின் அவரது மகன் அந்தத் தலைமைப் பொறுப்பை எடுத்துக்கொள்வான்.
காளை மாடுகளை தெய்வத்திற்கு பலி கொடுக்கும்போது மிகவும் கவனத்தோடு வாயில் இருந்து வால்வரை அவதானமாக பரிசோதித்து ஓரு கறுத்தமயிர் இருந்தாலும் நிராகரிக்கப்படும். பலிபீடத்தின் முன்பு நெருப்பை கொளுத்திவிட்டு வைனை பலிபீடத்தில் ஊற்றியபின் தெய்வங்களின் பெயரை சத்தமாக உச்சரித்தபடி கழுத்தை வெட்டுவார்கள். பசுவை பலி கொடுக்கமாட்டார்கள். அதை ஐசிஸ்(Isis)என்ற தெய்வத்தின் வடிவமாக பார்ப்பதால் புனிதமாக எண்ணுவார்கள். இறந்த பசுவை ஆற்றில் வீசுவார்கள். சில எகிப்தியர்கள் ஆட்டை பலி கொடுப்பதில்லை. ஆனால் சில இடங்களில் முக்கியமாக தீப்ஸ் என்ற புனித நகரத்தில் ஆட்டை மட்டுமே பலி கொடுப்பார்கள்
பன்றி எல்லா எகிப்தியருக்கும் அருவருக்கத்தக்க மிருகமாகிறது. மேலும் பன்றியை தொட்டால் உடுத்த உடையுடன் ஆற்றில் மூழ்கி எழுவார்கள். எனினும் சில எகிப்தியர்கள் பன்றி வளர்த்தார்கள் ஆனால் அவர்கள் கோயிலினுள்ளே செல்லமுடியாது. ஆனால் பன்றியை சந்திர கடவுளுக்கு முழுமதி நாளில் பலிகொடுப்பார்கள்
ஊர்வலங்கள் கூட்டங்களை அமைதியாகவும் பக்தியாகவும் நடத்துவார்கள் அதுவே பிற்காலத்தில் கிரேக்கர்கர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. எகிப்தியர்கள் கோயிலில் பெண்களோடு நிற்கமாட்டார்கள். வீட்டில் பெண்களுடன் கூடினால் குளித்துவிட்டே கோயிலுக்கு செல்வார்கள் ஆனால் கிரேக்கர்கள் பறவைகள், மிருகங்கள் போல் கோயில்களில் கூடுவார்கள்.
பூனைகள் இறந்தால் அந்த வீட்டில் உள்ளவர்கள் தங்கள் புருவங்களை சவரம் செய்வார்கள். நாய் இறந்தால் தலையையும் உடல் மயிரையும் சவரம் செய்வார்கள். இறந்த நாய்களை தங்களது வீட்டுவளவுகளில் புதைப்பதும் இறந்த பூனைகளை விசேடமான மைதானத்தில் என்பாமிங் செய்து புதைப்பார்கள். எகிப்தியர்கள் சகல நோய்களும் உணவால் ஏற்பட்டதாக நினைப்பதால் மாதத்தில் மூன்று நாட்கள் பேதி மருந்து எடுத்து குடலை சுத்தப்படுத்துவார்கள் சோளத்தில் பிரட் செய்தல், பார்லியில் வைன் செய்தல் அவர்களின் வழக்கம். மீனை காயவைத்தோ வினிகரில் ஊறவைத்தோ உண்பார்கள் குயில்(Quails), வாத்து (duck)போன்றவற்றையும் உண்பார்கள். இளையவர்கள் பாதையில் பெரியவர்களைக்கண்டால் விலகியும் சிரம் தாழ்த்தியும் செல்வார்கள். கால்வரையும் லினன் உடையை உடுத்துவார்கள். கம்பளி உடைகளை உடுத்தினாலும் அதை அணிந்து கொண்டு கோயிலுக்குச்செல்ல மாட்டார்கள். மேலும் கம்பளியுடன் சடலங்கள் புதைப்பதும் தடைசெய்யப்பட்டுளளது. எகிப்தியர்கள் ஒவ்வொரு மாதத்தையும் நாளையும் ஒவ்வொரு தெய்வத்திற்கு அர்ப்பணம் செய்திருப்பதால, அந்த நாளில் பிறந்தவன் எப்பொழுது இறப்பான் எனக்கணிப்பார்கள். இந்த மரபுகளைத்தான் கிரேக்கர் தங்கள் நாட்டிற்கு எடுத்துச் சென்றார்கள். வருடங்கள் நாட்களைப் போல் கலையையும் ஒவ்வொரு தெய்வத்திற்கு அர்பணித்திருந்தார்கள். வைத்தியர்கள் ,எகிப்தில் ஒவ்வொரு நோய்க்கும் வைத்தியர்கள் ஒருவராக இருப்பார்கள். தலைக்கு பல்லுக்கு, இரைப்பைக்கு என்று வைத்தியர்களாக இருந்தார்கள்.
இப்படியாக சில விடயங்கள் மூலம் பண்டைய எகிப்தியர்களை புரிந்து கொள்ள முயலும்போது இறந்தவர்களின் பூதவுடலை பாதுகாப்பதும், அவர்களுக்காக இப்படி கல்லறைகளைக் கட்டுவதற்கும் அடிபடையான சிந்தனை எங்கிருந்து வந்தது?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.