அண்மையில் பதிவுகள் இணையத்தளத்தில், 'கூவாமல் கூவும் கோகிலம்' என்ற தலைப்பில், 'குயில்' என்ற பெயரில் எழுதியுள்ள படைப்பாளர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தப்பதிவு எனக்கு சற்று ஆச்சரியத்தை தந்தது. அவர் ஒரு சிறந்த எழுத்தாளராகவும் தமிழ் ஆர்வலராகவும் இருக்கவேண்டும் என நினைக்கிறேன். அதனால் தனது மனதில் பட்டதை பதிவு செய்திருக்கிறார். அந்தப்பதிவின் தலைப்பு ‘ஹார்வார்ட் பல்கலைக்களகத் தமிழ் இருக்கையும், மொழி வளர்ப்பும்’ என்பதாகும். இந்தப்பதிவின்மூலம் எனக்குள் எழுந்த கேள்வி இவர் பிறநாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழுக்கான இருக்கைகள் அவசியமற்றது என சொல்லவருகிறாரா என்பது தான்.
இந்தப் பதிவைப்பார்க்கும்போது எனக்கு மகாகவி பாரதியாரின் “தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற கவி வரிகள்தான் நினைவிற்கு வருகிறது. மகாகவி மட்டுமல்ல இன்னும் பலர் தமிழை உலகம் பூராகவும் கொண்டு செல்லவேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள். அதை பல்வேறு வழிகளில் கொண்டு சேர்த்துமிருகிறார்கள். தமிழ் மக்களின் தாயகங்களைப் பொறுத்தவரை பல்கலைக்கழகங்ளில் தமிழின் இருப்பு என்பதையும் தாண்டி தமிழ் மொழி மூலமான தனியான பல்கலைக்கழகங்களே இருக்கின்றன. அவை தமிழ் மொழியின் வளர்ச்சியில் மிகச்சிறப்பான பங்களிப்பை எப்போதும் தொடர்ச்சியாக மேற்கொண்டே வருகின்றன. இவை எப்போதும் இதே போன்று இயங்கிக்கொண்டே இருக்கக்கூடிய பலம் பெற்றவை. அவற்றின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு அவை சார்ந்திருக்கும் அரசுகள் முன்னுரிமையளித்து தங்கள் பங்களிப்பை வழங்கிவருவதோடு கொடையாளர்களும் தங்கள் பங்களிப்பை செய்துகொண்டுதான் இருக்கின்றன.
எனக்கு கிடைக்காவிட்டால் அது வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற மனப்பக்குவம் சிலரிடம் இருப்பது அனேகமாக நாங்கள் பல சந்தர்ப்பங்களில் கண்கூடாகக் காண்கின்ற ஒருவிடயம் தான். நான் மேலே குறிப்பிட்டது போல தனது கருத்தைப் பதிவிட்டவரினுடைய கருத்தும் இது போலதான் எனக்கு படுகிறது. ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் இருப்புக்கு ஏன் நிதி வழங்கவேண்டும் அதைப்பார்க்க மதுரைத் திட்டம் அல்லது அதுபோல இங்கு இயங்கிக்கொண்டு இருக்கும் அமைப்புக்களுக்கு கொடுத்தல் சிறந்தது என்றவாறு இருக்கிறது. மதுரைத் திட்டம் ஒரு மிகச்சிறந்த திட்டம் அது தனது பணியை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறது. அந்த திட்டத்தின் மூலம் ஏதோ ஒரு வகையில் பயனடைந்தவர்களுள் நானும் ஒருவன். அதேபோலத்தான் நூலகம் திட்டமும் ஒரு மிகச்சிறந்த திட்டம் எமது வரலாற்று ஆவணங்கள் பலவற்றை தேடிப் பாதுகாப்பதில் ஈடுபடும் இந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் மூலம் என் போன்ற பலர் நன்மையடைந்து வருகின்றார்கள். ஆகவே இவை போன்ற தமிழை காப்பதிலும் வளர்ப்பதிலும் தங்கள் பங்களிப்பை வழங்கிவரும் நிறுவனங்களின் வளர்ச்சியில் அனைத்துலக தமிழ் மக்களும் ஏதோ ஒரு வகையில் தங்கள் பங்களிப்பை செய்து மென்மேலும் இவைபோன்ற நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. இதே போன்றதொரு கோரிக்கையை மேற்படி பதிவாளரும் வைத்திருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும். அத்தோடு அதற்குமப்பால் சென்று அதற்கான உதவிகளை பெற்றுக்கொடுக்கும்பொருட்டான ஆக்கபூர்வமான ஏதாவது ஒரு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் அது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என நான் கருதுகிறேன்.
புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் நம்மவர்களில் பலர் தாம் வாழும் நாடுகளில் தமிழை வளர்க்கப்பாடுபடுவது அவசியமான ஒன்று. இதனை நாம் அனைவரும் வரவேற்பதோடு அதற்கான ஆக்கபூர்வமான பங்களிப்பையும் வழங்கவேண்டும். பல்கலைக்கழகங்களில் தமிழ் இருப்பு என்பதற்கும் அப்பால் சென்று பல்கலைக்கழகங்களை அமைக்க முன்வருவது இன்னும் தமிழ் வளர்பிற்கு பலம் சேர்க்கும். ஆகவே பாரதி தொடர்ந்து கூறியதைப்போல் “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை. என்பதை இங்கு நானும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதே பாடலில் பாரதி தொடர்ந்து ‘திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணங்கச் செய்தல் வேண்டும்’ என்றும் ‘சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்’ என்றும் குறிப்பிடுகின்றார். வெளிநாட்டோர் தாம் வாழும் பிரதேசத்திலிருந்து இன்னொரு நாட்டிற்குச் சென்று திறமான புலமை தமிழில் இருக்கிறது என்பதை தேடிக் கண்டு பிடிப்பதைக்காட்டிலும் அவரவர் நாட்டிலே தமிழ் இருக்கைகள் உருவாக அதனூடே அவற்றை கற்றறிந்து அதை வணங்கச் செய்வதே நாம் செய்யக்கூடிய மிகச்சிறந்த செயற்பாடாகும்.
அவுஸ்திரேலியா, ஜேர்மன், பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, கனடா, அமெரிக்கா, டென்மார்க் மற்றும் நோர்வே போன்ற பல்வேறு நாடுகளுக்கு தமிழ் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து சென்று பல சிரமங்களுக்கு மத்தியில் தங்கள் வாழ்க்கையை ஸ்திரப்படுத்தி வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கின்ற பிரதேசங்களிலேயே தங்கள் மொழியாகிய தமிழ் மொழிசார்ந்த புலமையை வளர்த்துக்கொள்வதற்கு தேவையான ஆக்கபூர்வமான முனைப்புக்களை செய்வதே சிறப்பானதும் அவர்களுக்கு வசதியானதுமாகும். மொழி சார்ந்த புலமையை வளர்கவேண்டுமென்பதற்காக இன்னொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நிலைமை மாறவேண்டும். ஆங்கிலத்தில் கற்கவேண்டுமென ஒருவர் விரும்பினால் அதனை அவரது நாட்டில் இருந்தே கற்ககூடிய நிலைமைக்கு ஆங்கிலமொழி அனேகமான நாடுகளில் விதைக்கப்பட்டும் வளர்க்கப்பட்டும் விட்டது. ஆனால் முன்தோன்றிய மூத்த தமிழ் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த தமிழ் மொழி இன்னமும் தனது தாயகப்பிரதேசம் தவிர்ந்த ஏனைய நாடுகளில் ஆங்கிலத்தின் அளவுக்கு விதைக்கப் படவோ வளர்க்கப்படவோவில்லை என்றுதான் கூறவேண்டும். ஆகவே அதனை செய்ய முனைப்புக்காட்டும் ஒவ்வொருவரையும் வாழ்த்துவதோடு ஆதரவையும் வழங்கவேண்டியது எமது தலையாய கடமை.
கட்டுரைகள், கதைகள், கவிதைகள், நேர்காணல்கள் போன்றவற்றை எழுதுவதும் சில தலைப்புகளில் ஆய்வுகளை றே;கொண்டு ஆய்வு அறிக்கைகளை எழுதுவதும் இவற்றையெல்லாம் இணையத்தளங்களிலோ அல்லது அச்சுப்பதப்புகளாகவோ வெளியிடுவதுடன் தமிழ் வளர்ச்சியை தமிழ் பரம்பலை மட்டுப்படுத்திவிட முடியாது. அதற்கும் அப்பால் பல்வேறு விடயங்களில் நாம் முனைப்புக்காட்டவேண்டியிருப்பதோடு அவைசார்ந்த செயற்பாடுகளிலும் ஈடுபடவேண்டியிருக்கிறது. ஏற்கனவே நடந்துகொண்டிருக்கின்ற பணிகளில் எந்த தடையும் இன்றி அவை நடந்துகொண்டே இருக்கும். ஆகவே அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் யோசித்து திட்டமிட்டு அவற்றையும் நடைமுறைப்படுத்த வேண்டும். மதுரைத்திட்டம் என்பது சில வருடங்களுக்குமுன் இவ்வாறு புதிதாக யோசிக்கப்பட்டதால் தான் இன்று அது சிறப்பான பணியை மேற்கொண்டுவருகிறது. அதேபோல் நூலகம் திட்டம் என்பதும் புத்துருவாக்க யோசனை என்ற முறையில் சிந்திக்க முற்பட்டவர்களால் தான் அது உருவாகி இன்று சிறப்பாக செயற்பட்டுவருகிறது. இதன் மூலம் அழிந்துவிடக்கூடிய நிலையில் இருக்கக்கூடிய பல்வேறு நூல்கள் ஆவணங்கள் போன்றவை பாதுகாக்கக்கூடியதாக அமைந்துள்ளது. இதேபோல் மேலும் பல சிறப்பான திட்டங்கள் இன்று செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அவையும் மிகச்சிறப்பாக தங்கள் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆகவே ஹவாட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்காக பங்களிப்பு செய்து அதன் உருவாக்கத்திற்காக உழைத்தவர்களை குறை கூறுவதை தவிர்த்து அந்த செய்பாட்டை செய்தமைக்காக எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதே பொருத்தமாக இருக்கும். இந்த பதிவை வழங்கியவரின் ஆதங்கம் ஏதா ஒரு விதத்தில் கவனத்திற்கெடுக்கப்படவேண்டியதாக இருக்கும் பட்சத்தில் அந்த இருக்கைக்காக தங்கள் பங்களிப்பைச் செய்தவர்களுக்கூடாக அந்த இருக்கையின் மூலம் சாதித்தவை என்ன என்பதை சிலவருடங்கள் சென்றபின்னர் கேட்டுத் தெரிந்து கொண்டால் போதுமானது. பங்களிப்பு செய்தவர்கள் கேட்பதற்கு உரிமையுடயவர் அதே வேளை பார்வையாளர்களாக தூரத்தே இருந்து விமர்சனம் செய்பவர்கள் அதற்கு போதுமான தகுதியுடையவர்களாக நான் கருதவில்லை.
ஆகவே தயைகூர்ந்து தமிழ்வளர்ச்சிக்காய் யாராவது செய்யும் எந்தவகையான பங்களிப்பையும் நாம் ஊக்கப்படுத்துவதில் முனைப்புக்காட்ட முயற்சிப்பதை வழக்கமாககொள்வோம். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்பதை மனதில் கொண்டு எந்த நாட்டில் வேண்டுமானாலும் எந்தவகையில் வேண்டுமானாலும் ‘தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்ய’ யார் முன்வந்தாலும் அவர்களுக்கு ஊக்கமளிப்பதை எமது சிறந்த பண்பாககொள்வோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.